சத்ரபதி சாம்பாஜி : 05

சத்ரபதி சாம்பாஜி : 05

1680 ஆம் ஆண்டு ஆனி, ஆடி மாதங்களில் கனமழை கொங்கன் மற்றும் சாஹித்திரிய மலைப்பக்கம் வழக்கம்போல் ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருந்தது. வருடத்தில் இவையெல்லாம் இந்துஸ்தானத்தின் பெருமழைக்காலங்கள். அரசுகள் சற்றே வழக்கமான பணியிலிருந்து ஓய்ந்து வெள்ளம், மீட்பு நிவாரணம் எனக் கவனம் செலுத்தும் காலங்கள்.

இந்தப் பெருமழையால் சாம்பாஜியும் ராய்காட் கோட்டையிலே முடங்க வேண்டியதாயிற்று. எனினும், வெள்ள நிலவரம், ஆற்றுநீர் நிலவரம், மக்களின் நிலை என எல்லாம் கேட்டு அறிந்து கொண்டவன் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுக் கொண்டே இருந்தான்.

இதே மழை டெல்லி ஆக்ரா பக்கமும் இருந்ததால் ஔரங்கசீப்பும் நகரமுடியவில்லை. ஆனால், ஆரவல்லி பக்கம் பெரும் மழை பெய்யாத நிலையில் அங்கு ராஜபுத்திரருக்கும், மொகலாயருக்கும் இடையேயான போர் நடந்து கொண்டே இருந்தது.

சாம்பாஜி கொடுத்த உதவியில் அவர்கள் போரைத் தொடங்கினார்கள். அதே நேரம் ஔரங்கசீப் மகா மூர்க்கமாக இந்தப் போரை முடிக்க எண்ணித் தன் முழுக்கவனத்தையும் குவிப்பது போல் தன் பலத்தைக் குவித்தான்.

அவன் அரசு காந்தகார், லாகூர், வங்கம் என விரிந்து கிடந்தது. காந்தகார் பக்கம் இருந்த கோட்டைகள் அந்த எல்லை சிந்து நதியின் வடபாகம் இன்னும் பெஷாவர் எனக் கட்டுப்படுத்தியது, இங்கே ஔரங்கசீப்பின் மகன் ஷா ஆலம் கவனித்துக் கொண்டிருந்தான்.

லாகூர் கோட்டை பஞ்சாப், காஷ்மீர் முழுக்க கட்டுப்படுத்தியது, அதன் நிர்வாகம் இன்றைய குஜராத் வரை நீண்டிருந்தது, இதனை அவனின் இன்னொரு மகன் முசாம் கவனித்துக் கொண்டிருந்தான்.

வங்கத்தில் ஔரங்கசீப்பின் தாய்மாமனும் வீரசிவாஜியால் விரல் வெட்டப்பட்டு அனுப்பப்பட்ட ஷாயிஸ்ட்டாகானுடன் இன்னொரு மகன் முகமது அக்பர் இருந்தான்.

ஔரங்கசீப்புக்கு ஐந்து மகன்கள். அதில் முகமது சுல்தான் எனும் மூத்த மகன் முன்பே இறந்துபோனான், அவனுக்கும் ஔரங்கசீப்புக்கும் பல மோதல்கள் வந்தன. அதில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவன் இறந்துபோனான்.

எஞ்சிய நால்வரில் மூவர் இப்படி நிர்வாகத்தில் இருந்தனர், கடைசி மகன் காம் பக்ஷ்( kam baksh) என்பவனுக்கு அப்போது 12 வயது என்பதால் அருகில் வைத்திருந்தான்.

இந்த மூவரும் நிர்வாகம்,போர் ஆட்சி எனப் பழக்கப்பட்டு கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய முக்கிய நிர்வாக பகுதிகளும் இவர்களிடம் இருந்தன‌.

ஔரங்கசீப்புக்கு அசாம் வீழ்ந்தபின் கிழக்கே பெரிய எதிர்ப்பு இல்லை, பர்புக்கான் எனும் மாவீரனை வீழ்த்தியபின் அங்குப் பெரிய சலசலப்பு இல்லை. ஆனால், மேற்கே ஆப்கான் எல்லை இன்னும் பல இடங்களில் எப்போதும் எதிர்ப்பும் கலவரமும் இருந்ததால் எதிரிகள் துருக்கி, உஸ்பெக் எனப் பெரிய சேனைகளில் இருந்து தாக்கும் அபாயம் இருந்ததால் வடமேற்கு எல்லையில் பெரிய காவல் செய்திருந்தான்.

தக்காணம் மற்றும் தென்னகம் முழுக்கச் சிவாஜியின் இந்துராஜ்ஜிய அரசாக இருந்ததால் ஔரங்கசீப் இப்பக்கத்தை வெறுப்புடன் நோக்கினான். ஒரு மிரட்டலுக்கு இவை எல்லாம் எங்களுடைய நிர்வாகம் என மிரட்டி சொல்லிக்கொண்டாலும் கட்டுப்பாடும் வரிவசூலும் ஆட்சியும் சிவாஜி அரசிடமே இருந்தது. ஒரு காசு வரி என ஔரங்கசீப்புக்குச் செல்லவில்லை, அது தனியான அரசாக சிவாஜியின் இந்து அரசாக ஒளிவிட்டு வலுத்திருந்தது.

இப்படியான நிலையில் தன் மூன்று மகன்களையும் ஔரங்கசீப் ராஜபுத்திரர் மேல் வலுவான சேனையாக ஏவினான். அவர்களும் மூன்று பக்கம் இருந்தும் ராஜபுத்திரர்களைத் தாக்கினார்கள்.

வடக்கே முசாம், கிழக்கே முகமது அக்பர், தெற்கே ஷா ஆலம் என மும்முனையில் இருந்து நெருக்கினார்கள், ஔரங்கபாத் எனும் தெற்கே இருந்த மொகலாயத் தளம் மீண்டும் பரபரப்பானது.

ஆனால், இதெல்லாம் துர்க்காதாஸின் வீரப்போர் முன் நிற்கமுடியவில்லை. மேவார், ஆம்பர், ஜோத்பூர், ஜெய்பூர் என எல்லா ராஜபுத்திர பகுதிகளும் பெரும் வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தன, இந்தப் பெரிய சேனைகளை எதிர்க்க சாம்பாஜி தொடர்ந்து உதவிக் கொண்டிருந்தான்.

இனியும் தாமதிக்க முடியாது எனும் நிலையில் சாம்பாஜியினை முடிசூட்டிக் கொள்ள அழுத்தங்கள் அதிகரித்தன, அவனோ கொஞ்சம் கொஞ்சம் தள்ளிப்போட்டு கொண்டே வந்தான்.

அவனிடம் நிலைமையினை எடுத்துச் சொன்னான் ஹம்பிராவ் மோதி.

‘மன்னா, இன்னும் தாங்கள் முடிசூடாமல் இருப்பது நல்லதல்ல, ராஜபுத்திரர்கள் பெரும் போரில் இருக்கும் நேரமிது, ஔரங்கசீப்பும் பெரும் பலத்தோடு பாய்கின்றான், அவன் இனி தெற்கே வந்தாலும் வரலாம், அதற்குள் நாம் முடிசூட்டி அவனை எதிர்க்க வழிதேடவேண்டும்.

மாறாக, அவன் வந்து பெரும்போரை தொடங்கிவிட்டால் நாம் அந்தப் போர்காலத்தில் முடிசூட்டுவது சிரமமானது” என்றான்.

சம்பாஜி ஆழ்ந்த யோசனையில் சொன்னான், “மாமா, நானும் யோசிக்கின்றேன், ஆனால் நிலைமை இன்னும் இங்கு முழுமையாகச் சரியாகவில்லை, இன்னும் சோயுர்பாய் கடுமைகாட்டிக் கொண்டேதான் இருக்கின்றார்.

மூத்த தளபதிகள் சிறையில் இருக்கும்போது நான் எப்படி முடிசூட்டிக் கொள்ள முடியும், நான் எல்லோர் சம்மதத்துடனும் முடிசூட்டிக் கொள்ள விரும்புகின்றேன், ஆனால் சூழல் சரியாக இல்லை.

எல்லோருக்கும் பொதுவானவரும் பெரும் மதிப்பு கொண்ட ஒருவர் வந்தால் இங்கு நிலைமை சரியாகும், அதற்கு நமது ஸ்மர்த்த ராம்தாஸரே சரி, அவர் மட்டும் வந்து எனக்கு முடிசூட்டினால் இங்கு யாரும் எதிர்க்கமுடியாது, அவர் வரும் இடத்திற்கு வரமுடியாது எனச் சொல்லவும் முடியாது.

அவரை அழைத்து வாருங்கள், அப்படியானால் நான் சம்மதிக்கின்றேன்” என்றான்.

ஹம்பிராவ் சொன்னான் “மகான்கள் நம்மைத் தேடி பெரிய காரணமில்லாமல் வரமாட்டார்கள், இப்போது நாமே அவரைச் சென்று காண வேண்டும், அழைப்போம்” என்றான். சாம்பாஜியும் ஒப்புக்கொண்டான்.

ஒரு அரசனுக்கு வெளி எதிரிகள் ஆபத்தைவிட உள்வீட்டிலும் எப்போதும் ஆபத்து இருக்கும், அதுவும் சாம்பாஜிக்கு ஆபத்து அதிகம் என்பதால் ஹம்பிராவும் , கவி கலாஷும் பெரிய காவலைச் செய்தார்கள்.

கவி கலாஷ், பிரக்யராஜ் எனும் அலகாபாத்தில் இருந்து வந்த பிராமணன், நல்ல அறிவாளி , வீரன் எல்லா இசைக்கருவியும் இசைக்கத் தெரிந்த கலைஞன். அதை மீறிப் பெரும் பாடகன், போர்க்கலை முதல் எல்லாக் கலைகளும் அவனுக்கு அத்துப்படி, அவனும் சாம்பாஜியும் மிக நெருக்கமான தோழர்கள்.

கவி கலாஷ்தான் சாம்பாஜியினைப் தவறாக நடத்துகின்றான் என்ற செய்தியினை இருவருமே புறக்கணித்து வந்தார்கள். சிவாஜி இருவர் மேலும் கண் வைத்திருந்தான், அவன் இல்லாக் காலங்களில் இருவர் நட்பும் மிக வலுவாயிற்று. துரியோதனன் கர்ணன் நட்பு போல வரலாறு கண்ட ஆழ்ந்த நட்பு இது.

அப்படியான கலாஷ் எல்லாக் காவலையும் செய்தான். சாம்பாஜியின் அறை முழுக்க காவல் இடப்பட்டது. பாம்புகள், விஷ ஜந்துக்களை ஏவி ஆபத்தை விளைவிக்கலாம் என்பது முதல் காவலர்களில் உளவாளிகளைப் புகுத்திக் குழப்பலாம் என்பது வரை எல்லாமே மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டது, தீ பற்றும் பொருட்களைக் கூட மன்னர் அருகே வைக்க அனுமதி இல்லை. ஒருவேளை அவன் அறை தீ பிடித்தாலும் தப்பி ஓட சுரங்கமெல்லாம் அவசர வழியெல்லாம் தயாராக இருந்தன‌.

மன்னனின் யானைப்பாகன், தேர்ப்பாகன், குதிரை வளர்ப்பவன் வரை கண்காணிக்கப்பட்டனர், சவரத் தொழிலாளி முதல் எல்லோருமே மிகுந்த கண்காணிப்பில் இருந்தனர், காவல் மிகப் பெரிதாக இருந்தது.

ஆனால், அதையும் மீறி 1980 ஆம் ஆண்டு ஆவணி மாதம் அங்கே பெரிய சலசலப்பு வந்தது. அது மன்னருக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கின்றது என்பது.

இது உளவுத்தகவலாக வந்ததே அன்றி யார் எப்படி வைத்தார் என்பது தெரியவில்லை.

அக்காலத்தில் மன்னர்களின் திடீர் மரணம் பல மன்னர்களுக்கு நடந்தது, மொகலாயர் பாணியில் ஒன்று உணவில் விஷம் வைத்து எதிரிகளைக் கொல்வது. இது பல வழிகளில் நடந்தது.

அரண்மனைக்குள் உளவாளிகளை அனுப்பி உணவில் வைப்பது இல்லை, விருந்து எனச் செல்லுமிடத்தில் வைப்பது இல்லை, வைத்தியர்களை வளைத்து மருந்தில் வைத்துக் கொல்வது.

அதுவும் ஐரோப்பிய மருத்துவர்கள் உலகெல்லாம் இருந்து மருந்தைக் கொண்டுவருபவர்கள், அவர்களைப் பிடித்து வளைத்து அவர்கள் மூலம் மொகலாயர் எதிரிகளைக் கொல்லும் வழக்கமும் இருந்தது.

ராஜபுத்திர மன்னன் ஜெய்சிங், ஜஸ்வந்த்சிங் என ஔரங்கசீப்பிடம் நட்புடன் இருந்தவர்களே சாகும்போது இந்தச் சலசலப்பு வந்தது, அது வீரசிவாஜியின் மரணத்திலும் வந்தது.

எவ்வளவோ காவல் இருந்தும் சாம்பாஜியினைக் கொல்ல சதி என இப்போதும் வந்தது. ஆனால், விஷயத்தை பரபரப்பாக்காமல் அமைதியாக முடிக்க விரும்பிய கலாஷ் அரண்மனை வைத்தியரை அழைத்து அவன் உடலை முழுக்கச் சோதிக்கச் சொன்னான், பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

வைத்தியர் அவனைச் சோதித்தார். விஷம் உள்ளே இல்லை என்பதை உறுதி செய்ததால் எல்லோருக்கும் நிம்மதி வந்தது‌, ஆனால் விஷம் எங்கே எப்படி வைக்கப்பட்டிருக்கின்றது என்பது தெரியவில்லை.

அன்றைய உணவுகள் சோதிக்கப்பட்டன. அவற்றிலும் விஷம் இல்லை, சமையலறை பொருட்கள் பாத்திரங்கள், பண்டங்கள், ஊறுகாய் வரை சோதித்தாலும் விஷத்தை அறியமுடியவில்லை. சமைத்த உணவை உண்ட விலங்குகள் பறவைகள் அதன்போக்கில் இருந்தன. சில கொடிய கைதிகளுக்கு அவற்றைக் கொடுத்துப்பார்த்தும் விஷம் இல்லை என்பது உறுதியானது.

சமையல்காரர்கள் பணியாளர்கள் என எல்லாச் சோதனையும் தோல்வியிலே முடிந்தன. மன்னருக்கு விஷம் வைக்கப்பட்டது உறுதி, ஆனால் கண்டறியமுடியவில்லை, பெரும் ஆபத்து நீடித்தது.

ஒருவேளை பொடிகளைப் படுக்கையில் தூவினார்களா, இல்லை குடிநீரில் பழரசத்தில் மோரில் கலந்தார்களா எனச் சோதித்ததில் எதுவுமே சிக்கவில்லை.

கலாஷுக்குத் திடீரென சாம்பாஜியின் வெற்றிலை மேல் சந்தேகம் வந்தது. அடிக்கடி தாம்பூலம் தரிப்பது அவன் வழக்கம், அவன் வைத்தியரிடம் அதைச் சோதிக்கச் சொன்னான்.

வெற்றிலை விஷம் முறிக்கும் மருந்து, அதுவும் மிளகும் சேர்த்து உண்டால் நச்சு முறியும். ஆனால், மிகக் கொடிய விஷம் தடவப்பட்டிருந்தால் அதனால் உடனடி பலன் இல்லை.

வெற்றிலையில் உள்ளே வைக்கப்படும் வாசனை பொருட்களை ஒரு குடுவையில் இட்ட வைத்தியன் சில மூலிகைச் சாறுகளை கலந்து வைத்து அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான், எல்லோர் முகத்திலும் பெரிய பரபரப்பு வந்தது.

குடுவையினைப் பார்த்துக் கொண்டே இருந்த வைத்தியனுக்கு மெல்ல வியர்த்தது, அங்கே நீலநிறமாக சாறு மாறி விஷத்தைக் காட்டிற்று.

அந்தத் தாம்பூலப் பொருள் அத்தனையினையும் காட்டில் புதைக்கும்படி அனுப்பப்பட்டது, யாருக்கும் வெளித்தெரியாதபடி இதனை வைத்துக் கொண்ட சாம்பாஜி ஹம்பிராவுக்கு மட்டும் தெரியப்படுத்தினான்.

துல்லியமான உளவுத்தகவலால் மன்னன் உயிர் காக்கப்பட்டதை அறிந்து மகிழ்ந்தாலும் அரண்மனைக்குள்ளே நடந்த இந்தச் சதி அவனை உறையவைத்தது, எல்லோரையும் போல அவனும் தங்கை மேலே சந்தேகம் கொண்டான்.

சாம்பாஜி அங்கே மறுத்துச் சொன்னான்‍, “ஆதாரமில்லாமல் நாம் யாரைக் குறை சொல்லமுடியும், மொகலாயர்களின் சதி ஊர் அறிந்தது. என் தந்தைக்கும் ஏதோ நடந்திருக்கின்றது, நான் ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன். இங்கு ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது.

இப்போது எனக்கும் அதுவைக்கப்பட்டிருக்கின்றது, அன்னை பவானியும் சிவனும் என்னைக் காத்தார்கள். இப்போது இதனை யாரும் பெரிதுபடுத்தவேண்டாம். காவலை வலுப்படுத்துங்கள்” என மட்டும் சொல்லிக்கொண்டான்.

அப்போது இருந்து கலாஷ் தான் உண்ணாமல் சாம்பாஜியினை உண்ண எதையும் அனுமதிப்பதில்லை, பல சோதனைகளைத் தாண்டி வரும் உணவும் கலாஷைத் தாண்டியே சம்பாஜியினை அடையும்.

எல்லாம் வழமையானது போல் தெரிந்தாலும் சாம்பாஜிக்குள் உள்ளே பெரும் வருத்தம் வந்தது. அரசுக்காக தன்னையே கொல்லத் துணிந்துவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அவன் உடைந்தே போனான், அவனுக்கும் சோயுர்பாய் மேல் சந்தேகம் இருந்தது. அதே நேரம் குழப்பமும் இருந்தது.

சாவது பற்றி அவன் அஞ்சவில்லை, அவ்வகையில் அவன் எப்போதும் வீரன். 17 வயதில் ஊருக்குள் அட்டகாசம் செய்த சிங்கம் ஒன்றை வேட்டையாடியவன், அதுவும் தன் கையாலே பிடித்துக் கூண்டுக்குள் அடைத்தவன், எத்தனையோ பெரும் யுத்தங்களைச் செய்தவன்.

ஆனால், தன் உயிர் இந்த நாட்டுக்கும் மதத்துக்காவும் செல்லவெண்டும், இப்படிச் சதியில் வீணாகச் சென்றுவிடக் கூடாது என்றே அஞ்சினான்.

அவனுக்கு மனக்குழப்பம் வந்தது. ஒரு பெரியவரை சந்தித்து மனம்விட்டு பேசவேண்டும் போலிருந்தது. அவன் இராமதாஸரை சந்திக்க விரும்பினான், அவர் அப்போது சாதரா கோட்டையில் இருந்தார், அவர் உத்தரவு இல்லாமல் யாரும் அவரைக் காணமுடியாது.

சில நாட்கள் இப்படியே கழிந்தது. இராமதாஸரிடம் முடிசூட்டு விழாவுக்கு வரும்படி வைக்கப்பட்ட அழைப்பு ஆசீர்வாதமாக மட்டும் திரும்பி வந்தது.

அவர் சுகவீனமாக இருப்பதால் இப்போது யாரையும் சந்திக்க முடியவில்லை, விரைவில் அவர் மன்னருக்கு ஆசிவழங்குவார். ஆனால், முடிசூட்டுவிழாவினைத் தாமதப்படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் எனும் செய்திமட்டும் அவரின் சீடர்களால் வந்தது.

சாம்பாஜிக்கு அது பெரும் மனக்குறையாயிற்று. எனினும், துல்ஜாப்பூர் பவானி கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வரலாம் என முடிவெடுத்தான், பெரும் ஊர்வலமாக துல்ஜாப்பூர் கிளம்பினான், அவனும் யேசுபாயும் ஒரு யானையில் செல்ல முன்னால் கலாஷ் செல்ல, காவலுக்கு ஹம்பிராவ் வர பெரிய ஊர்வலமாகச் சென்றான்.

நடுவில் ஒரு யானையில் சிவாஜியின் பவானி வாள் வைக்கப்பட்டிருந்தது, அந்த வாளை பயன்படுத்த‌ சிவாஜிக்குப் பின் யாருக்கும் அனுமதியில்லை என எல்லோரும் முடிவெடுத்தார்கள். சாம்பாஜியும் ஒப்புக்கொண்டான். சிவாஜிக்கு அன்னை பவானி கொடுத்த அந்த வாள் ஒரு புண்ணிய அடையாளம் என்றானது, அதை யானையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.

ஆலய நுழைவு வாயிலில் அப்சல்கானை கொன்ற சாககத்தில் சிவாஜி கட்டிய வாசல் அருகே சாம்பாஜிக்குப் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது “ஜெய் பவானி ஜெய் மகாதேவா” என முழக்கங்கள் எழுந்தன‌.

துல்ஜாப்பூர் பவானி முன் சாம்பாஜி விழுந்து வணங்கினான், பெரும் காணிக்கை வைத்து வணங்கினான். அப்படியே சிவாஜி வாள் வைக்கப்பட்டு அருகே சாம்பாஜியும் தன் வாளை வைத்தான், அதற்குப் பூஜைகள் செய்யப்பட்டு குங்குமம் பூசப்பட்டது.

“தாயே பவானி, இந்தக் குலத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் இந்துக்களுக்கும் நல்வழிகாட்டியவள் நீ, சிவாஜி மன்னரைப் பெரும் சத்ரபதியாக உருவாக்கிவைத்தவள் நீ.

மன்னருக்குப் பின் அந்தப் பொறுப்பு என்னிடம் வந்திருக்கின்றது, இந்த இந்துராஜ்ஜியத்தைக் காக்கும் கடப்பாடு என்னுடையதல்ல, முழுக்க உன்னுடையது. என்னை எப்படி ஆளவேண்டுமோ அப்படி நீ ஆண்டுகொள், உன் உத்தரவுப்படி நான் இந்த நாட்டை ஆள்கின்றேன்.

நானும் சரித்திரம் படைக்க இந்த மண்ணில் அழியா இடம்பிடிக்க அருள் செய்வாய்” என வேண்டிக்கொண்டான். அங்கேயே நெடுநேரம் அமர்ந்திருந்தவன் கோவிலின் எல்லா வசதிகளையும் இதர விவரங்களையும் கேட்டு உறுதி செய்து கொண்டான்.

துல்ஜாப்பூர் பவானி அவர்களின் குலதெய்வம், இந்துராஜ்ஜிய வாழ்வில் அதையும் சிவாஜி வம்சத்தையும் பிரிக்கமுடியாது என்பதால் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பாட்டி ஜீஜாபாயுடன் அவன் அடிக்கடி இங்கு வந்த காலங்கள் நிழலாடின‌.

அதன்பின் தன் கொள்ளுதாத்தா மாலோஜி சமாதிக்குச் சென்று அவன் அஞ்சலி செலுத்தினான். பின் ஜீஜாபாய் நினைவிடம், சிவாஜி நினைவிடம் எனச் சென்று மரியாதை செலுத்தினான், தாத்தா ஷாஹாஜி கல்லறை பெங்களூர் பக்கம் இருந்ததால் அவனால் அங்கு அப்போது செல்ல முடியவில்லை.

அவன் முடிசூட்டு விழாவுக்குத் தயாரானான், பெரும் விமரிசையாக அவன் கொண்டாட விரும்பவில்லை. அரண்மனையில் நிலவும் இறுக்கமான சூழல் , ராஜபுத்திரர்களின் போர் எனப் பல காரணங்களால் அவன் அதைப் பெரிதாகச் செய்யவில்லை. ஆனால் செஞ்சிக் கோட்டையில் இருந்த சாந்தாஜிக்கும், தஞ்சாவூரில் இருந்த வெங்கோஜிக்கும் அழைப்பு விடுத்தான்.

வெங்கோஜி செல்லவில்லை. மாறாக, அவன் மனைவி தீபாபாயும், சாந்தாஜியும் கலந்து கொள்ள விரைந்தார்கள்.

இவர்கள் வந்துசேர சில வாரங்களாகும் என்பதால் மழைக்காலமெல்லாம் முடிந்து ஒரு நல்ல நாளாக பார்க்க அவை கூடிற்று. அவன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் என்பதால் அவனுக்குரிய சரியான காலக்கட்டம் எது என ஆராயப்பட்டது.

அவன் கிருத்திகை நட்சத்திரம் என்பதால் மார்கழியில் சூரியன் எட்டாம் இடத்தில் இருப்பார், அப்போது முடி சூடுதல் நல்லதல்ல, ஒருவன் ஜாகதகத்தில் சூரியன் இருக்குமிடமே ஆட்சியினை, அதிகாரத்தைச் சொல்லும்.

இந்துக்களின் வழிபாட்டில் நவக்கிரக வழிபாடெல்லாம் பின்னால் புகுத்தப்பட்டது, அவர்களின் ஜாதக முறைப்படி எல்லாக் கிரகங்களும் சூரியன் முதல் சனிக்குள்ளான வரிசையில் அடக்கம், இதனாலே பண்டைய கோவில்களில் நவக்கிரக சந்நதி இருக்காது. மாறாக, சூரியனுக்கும் சனிக்குமான சந்நதிகள் மட்டுமே இருக்கும்.

இதனால் அவன் ஜாதகப்படி சூரியன் ஒன்பதாம் இடத்தில் இருந்து நல்ல குருபார்வை கிடைக்கும் நாள் தேவை எனச் சொல்லப்பட்டு, கிருத்திகை நட்சத்திரத்தின் முக்கியத்துவம் ஏறி நிற்கும் தைமாதத்தில் ஒரு நாள் சரியாகப் பட்டது.

அப்படிக் கணிக்கபட்ட நாள் ஜனவரி 16, 1981 என ஆங்கில நாள்காட்டி காட்டிற்று, அது “ஜியேஷ்ட புத்திர திரையோதசி” எனும் நாளாக பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டது.

அந்த நாளில் விழா என முடிவெடுத்தார்கள். காசி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள எல்லா நதிகளிலும் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது, பெரும் ஏற்பாடுகள் தயாராயின. 1001 அந்தணர்கள் பெரும் பூஜை தொடங்கினார்கள்.

சாம்பாஜி இம்மாதங்களில் மிகுந்த யோசனையில் இருந்தான். அரச பதவி எப்போதோ அவன் எதிர்பார்த்த ஒன்று. ஆனால், பதவியேற்றபின் அடுத்தடுத்து என்னென்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்தித்தபடி இருந்தான்.

ஏற்பாடுகள் தயாராயின. பட்டாபிஷேக நாள் நெருங்கிற்று. அப்போது இருந்த பெரிய எதிர்பார்ப்பு அமைச்சரவை எப்படி அமையும் என்பது. காரணம், சிவாஜி மன்னர் இருந்தவரை அஷ்ட பிரதான் எனும் எட்டு அமைச்சர்களைக் கொண்டிருந்தார், அவர்களை வைத்து திறமையாக ஆட்சி செய்த வரலாறு என்பதால் சாம்பாஜியின் அமைச்சரவை எப்படி இருக்கும் எனும் எதிர்பார்ப்பு வந்தது.

சாம்பாஜி அதில்தான் தன்னை நிரூபித்தான், மிகத் திறமையாக அந்த அமைச்சரவையினை அப்படியே தொடர்ந்தான். ஒரே ஒரு மாறுதலாக மொரோபந்த் எனும் தலைமை அமைச்சருக்குப் பதிலாக அவர் மகனையே அமைச்சராக்கினான், மொரோபந்த் அப்போது பன்ஹாலா சிறையில் இருந்ததால் அவர் மகனுக்கு வாய்ப்பு தரப்பட்டது.

அப்படியே ராமசந்திர பந்த், பாலாஜி அவாஜி, ப்ரல்ஹட் நிராஜி எனச் சிவாஜியின் அமைச்சர்கள் அப்படியே தொடர்ந்தார்கள். அமத்யா எனும் பதவிக்கான அமைச்சரவை காலியாக இருந்தது. காரணம், அது சிறையில் இருக்கும் அஞ்சய் தத்தோவின் பதவி.

இப்படி ஏழு அமைச்சர்களை அவன் முதலில் நியமித்தான், அவர்களில் 6 பேர் சிவாஜியால் நியமிக்கப்பட்டவர்கள், இவர்களுடன் அமைச்சரவையும் தயாராயிற்று.

அவன் 10 நாட்கள் விரதமிருந்தான். பழங்கள் மட்டும் உண்டு கோவில்களெல்லாம் அலைந்து திரிந்து திருநீறு பூசி முழுக்க விரதமிருந்தான். தரையில்தான் படுத்தான். ஒரு சந்நியாசி கோலம் கொண்டிருந்தான்.

ஜனவரி 16, 1681 அன்று விடிந்தது. அதிகாலை எழுந்தவன் தயாராகி யாக சாலை சென்றான். மந்திரங்கள் ஓத அமரவைக்கப்பட்டான். அவன் மேல் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின், அரசனுக்குரிய அலங்காரம் அனைத்தும் செய்யப்பட்டது.

அவன் சந்தன நிற ஆடை அணிந்திருந்தான். கழுத்தில் சிவாஜிக்குரிய முத்துமாலை உள்பட அனைத்தும் அணிவிக்கப்பட்டது. சிவாஜியின் முத்திரை மோதிரம் உள்ளிட்டவையும் அணிந்து கொண்டான். நவமணிகளால் அலங்கரிக்கப்பட்ட சுருள் தொப்பியினை அணிந்து கொண்டான், காதில் குண்டலங்கள் மின்னின‌.

மிகக் கம்பீரமாக அவன் நடந்து அரியணை நோக்கிச் சென்றான். உடன் யேசுபாய் நடந்துவந்தாள். விழாவுக்குக் கண்டிப்பாய் வரவேண்டும் எனச் சொன்னதால் சோயுர்பாயும் வாடிய முகத்துடன் வந்திருந்தாள்.

முழு வேலைகளையும் கவனித்தாலும் ஓரமாக மிக்க மகிழ்ச்சியுடன் பெருமையுடன் இளவரசன் போல் நின்றிருந்தான் கலாஷ்.

சாம்பாஜி தனக்குரிய அதே அலங்காரத்தினை தன் தம்பி ராஜராமுக்கு செய்வித்து தனக்கு முன்பாக நடக்கும்படி செய்தான், சோயுர்பாய் அதைக் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தாள்.

ராஜாராமுடன் அவன் மனைவியர் ஜானகிபாய், தாராபாப் ஆகியோர் மலர்ப்பெட்டி தாங்கியபடி நடந்து சென்றனர், இசை மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.

சிவாஜியின் இரு மனைவியர் அவனை வாழ்த்தினார்கள். அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான். பெரியோர் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள், அவனும் சோயுர்பாயிடம் வலியச் சென்று ஆசீர்வாதம் பெற்றான், அவளும் சிரித்தபடி ஆசீர்வதித்தாள். பின், சட்டென அவள் முகம் மாறிற்று.

தஞ்சாவூரில் இருந்து வந்த தீபாபாய் அவனுக்குப் பெரியகோவில் பிரசாதம், இராமேஸ்வர கோவில், சிதம்பரம் கோவில் விபூதி பூசி வாழ்த்தினாள், அவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

ஹம்பிராவ், சாந்தாஜி, நட்டாஜி பால்கர் போன்ற பெரியோரிடம் ஆசிபெற்றவன் படியேறி ஆசனத்தில் காலை மடித்தபடி அமர்ந்தான், தலைமைச் செயலாளரான ராமசந்திர பந்த் அறிவித்தார்.

“நமது இந்துராஜ்யம் இன்று நமது மாமன்னர் சிவாஜிக்குப் பின் இரண்டாம் அரசரை காண்கின்றது, சாம்பாஜி மன்னர் இப்போது முடிசூட்டிக் கொண்டு சிம்மாசனத்தில் அமர்வார், இந்து சுயராஜ்ஜியத்தை வழிநடத்தி நம்மையெல்லாம் இந்துக்களாக வாழவைப்பவரும், இந்துக்களின் ஆலயங்களின் காவல்காரருமான அவருக்கு அன்னை பவானியும் வல்ல சிவனும் எல்லா வரமும் பலமும் அருளட்டும்” என்றார்.

அலங்கரிக்கப்பட்ட அம்மண்டபத்தில் சிவாஜியின் மணிமுடி வேத பண்டிதர்களால் எடுத்து வரப்பட்டு சாம்பாஜி முன் வைக்கப்பட்டு உரிய மந்திரங்கள் சொல்லப்பட்டன‌.

சாம்பாஜி எழுந்து சென்று அருகில் தங்கத்தட்டில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் பவானி வாளை தொட்டு வணங்கினான், அப்படியே ஜீஜாபாயின் சேலையினையும் தொட்டு வணங்கிக் கொண்டான்.

குனிந்து அவைகளை மீண்டும் வணங்கியவன், பின் மணிமுடி ஏற்கத் தயாரானான், அவன் உறுதிமொழி எடுத்துக் கொண்டான்.

“எனதருமை இந்து சுயராஜ்ஜிய மக்களே, நம் மாமன்னர் சிவாஜி உருவாக்கிய இந்த இந்துராஜ்ஜியத்தின் காவலனாக நான் இருந்து சத்ரபதியாக நின்று சிவாஜி மன்னர் வழியில் இந்துக்களுக்காக இந்து மதத்துக்காக வாழ்வேன் என்றும், எக்காலமும் எந்நேரமும் இந்த மதத்தைக் காக்கப் பாடுபடுவேன் என்றும், இந்து ஆலயங்களைக் காக்கும் காவலனாக நிற்பேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.

நம் மன்னர் விரும்பிய பெரும் கனவான காசியினை மீட்டு நமது சிவனுக்கு ஆலயம் கட்டும் வரை, கடைசி அந்நியனை விரட்டும் வரை என் போராட்டம் தொடரும் என்றும், இந்தப் புனிதமான பணிக்காக என் உடல் பொருள் ஆவி என அத்தனையும் அர்ப்பணிக்கிக்கின்றேன் என்றும் சிவன் சாட்சியாக உறுதி கூறுகின்றேன்”

அவன் சொல்லி முடித்ததும் “ஜெய் பவானி, ஜெய் மகாதேவா” எனும் முழக்கம் எழுந்தது, “சிவாஜி மன்னர் புகழ் வாழ்க, காசியினை மீட்போம், ஹரஹர மகாதேவா ” எனும் கோஷம் விண்ணைப் பிளந்தது.

அதன் பின் அவன் வேத பண்டிதர் முன் தன் சுருள் தொப்பியினை அகற்றிவிட்டு கொண்டை கட்டியிருந்த தலையினை மெல்லத் தாழ்த்தினான், அவனுக்கு வேத மந்திரங்கள் சொல்லிப் பண்டிதர்கள் முடி சூட்டினார்கள், அந்தச் சிவாஜியின் மணிமுடி அவனுக்குச் சூட்டப்பட்டது, மங்கல வாத்தியம் முழங்கியது. எல்லோரும் மலர் தூவினார்கள்.

மேள தாளங்கள் முழங்கின; வெளியே பீரங்கி வெடிக்கப்பட்டது; பெரும் கொண்டாட்டம் துவங்க ஆரவாரமாக மணிமுடிதலையில் இருக்க சத்ரபதியாய் அவன் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தான், இந்து ராஜ்ஜியம் தன் இரண்டாம் மன்னனை ஏற்றுக்கொண்டது.

பெரும் விருந்தும் பரிசுமாக ராய்காட் கோட்டை உற்சாகமாக கொண்டாட்டம் தொடங்கியது. கோவில்களில் பூஜைகள் அவனுக்காய் நடந்தன; ஆலய மணிகளெல்லாம் முழங்கின; யானைமேல், ஓட்டகம் மேல் இருந்து இனிப்பும் பரிகளும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டன. இந்து ராஜ்ஜியம் முழுக்கக் காவிக் கொடி பறக்க விழா நடந்தது.

பதவியேற்றதும் அவன் செய்த முதல் காரியம் சிறையில் இருந்த இருவரையும் விடுவித்து அழைத்து வரச் சொன்னது. நம்பமுடியா அந்த அதிசயத்துடன் அவர்களை விடுவித்து அழைத்துவர பன்ஹாலா கோட்டைக்கு ஆட்கள் விரைந்தார்கள்.

பெரும் இந்து சேனையின் தளபதியாக ஹம்பிராவும், உளவுப்படையாக பகர்ஜி நாயக்கும், எல்லைக் காவலராக நட்டாஜி பால்கரும் நியமிக்கப்பட்டார்கள்.

ஸ்மர்த்த ராமதாஸர் நேரடியாக வரவில்லையே தவிர தன் சீடர்களை அனுப்பி வாழ்த்து மடலும் ஆசியும் அனுப்பியிருந்தார்

“என் சீடன் சிவாஜி ஸ்தாபித்த இந்த இந்து சுயார்ஜ்ஜியத்தை ஆள்வதற்காக முடிசூடும் மன்னர் சாம்பாஜிக்கு என் வாழ்த்துகள். இந்த இந்துராஜ்ஜியம் உங்கள் வழியில் இன்னும் இன்னும் வளரவும் நிலைக்கவும் ஆஞ்சநேயர் அருள்புரியட்டும்.

இந்தப் பணி எளிமையானது இன்பமானது அல்ல என்பதால் நீங்கள் எப்போதும் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு நொடியும் மிக மிக யோசித்து முன் ஜாக்கிரதையாக வைக்க வேண்டும். இனி வரும் காலக்கட்டம் மிக முக்கியமானது என்பதால் மிகுந்த கவனமாக செயலாற்ற வேண்டும் என வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன்” என எழுதியிருந்தார்.

சாம்பாஜி வெற்றிகரமாக முடிசூடினான் என்பதை அறிந்த போர்ச்சுகீசியர், பிரிட்டிஷார், டச்சுக்காரர் என எல்லோரும் பணிந்தனர், சூரத்தில் இருந்து யூதர்களும் வந்து வாழ்த்தினர்.

இந்துக்களின் சார்பாக மலையாள மன்னர்கள், கன்னட சிற்றரசர்களும், தமிழக நாயக்கர்களும், ராமநாதபுர மன்னர்களும் வாழ்த்தும் பரிசு பொருளும் அனுப்பினார்கள். யானை தந்தத்தாலான பொருட்கள் முதல் அழகான முத்துக்கள் வரை அனுப்பப்பட்டது.

சிவாஜியால் ஒடுக்கப்பட்டு இந்துராஜ்ஜியத்தின் சிற்றரசுகளாக மாறியிருந்த பிஜப்பூர் அடில்ஷாகி சுல்தானியம், கோல்கொண்டா குதுப்ஷாஹி சுல்தானியம் போன்றவையும் பெரும் வாழ்த்து தெரிவித்து பணிந்து செய்தி அனுப்பியிருந்தன‌.

பன்ஹாலாவில் இருந்து மொரோபந்தும், அஞ்சய் டத்தோவும் வந்தார்கள். அவர்களிடம் ஆசிபெற்றான் சாம்பாஜி. இருவரும் மிரண்டு போனார்கள், அவன் அமைதியாய்ச் சொன்னான்.

“மொரோபந்த் அவர்களுக்கு வயதாகிவிட்டதால் அவர் மகன் அவர் பதவியினைத் தொடர்வார், அஞ்சய் தத்தோ அதே அமர்த்தியா பதவியில் அமரட்டும், நானோ இளையவன் நான் திறம்பட ஆட்சி செய்ய உங்கள் அனைவரின் வழிகாட்டலும் அவசியம்”

அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள், இப்போது இந்துராஜ்ஜியம் அவனின் ஒற்றை ஆளுமைக்குக் கீழ் வந்தது. இனி எதிர்த்தரப்பு என்றோ ஆட்சியில் குழப்பம் என்றோ எதுவுமில்லை. எல்லாமே உறுதியாயிற்று.

சாம்பாஜி வெற்றிகரமாக முடிசூடினான் எனக் கேள்விப்பட்ட ஔரங்கசீப் பற்களை மெல்லக் கடித்தபடி யோசனையில் அமர்ந்தான். அவனுக்கு அப்போதைய பெரிய பிரச்சினை சாம்பாஜி அன்று, ராஜபுத்திரர்கள் என்றாலும் அவன் மனதில் பல கணக்குகள் ஓடின‌.

வழக்கம்போல் இந்துராஜ்ஜியம் என ஒன்று இந்துஸ்தானில் இல்லவே இல்லை, இங்கு எல்லா அரசும் மொகலாயருக்குக் கட்டுப்பட்டது, சிவாஜி போல் அல்லாமல் சாம்பாஜி மொகலாயருடன் இணக்கமாக செயல்பட வேண்டும், அவ்வப்போது கப்பமும் கட்டவேண்டும் என ஓலை அனுப்ப உத்தரவிட்டான்.

நிச்சயம் சாம்பாஜி கப்பம் கட்டி பணியமாட்டான் எனத் தெரிந்தாலும் இந்துஸ்தானத்தில் எல்லாமே மொகலாயருக்குக் கட்டுப்பட்டது எனச் சொல்லிக்கொண்டே இருப்பது அவனின் உரிமை எனக் கருதி எழுதச் சொன்னான்.

அவனின் பெரும் கவனம் ராஜபுத்திரர் மேல் இருந்தது. எப்படியாவது ராஜபுத்திரர்களை ஒடுக்கி மொகலாயப் பலத்தை அங்கே நிறுத்துவது எனத் தன் மகன்களை அனுப்பியவன் நிலைமையினை அவதானித்தான்.

ஆனால், ராஜபுத்திரர்கள் மொகலாயருக்குப் புதியவர்கள் அல்ல. அவர்களோடே காலம் காலமாக யுத்தம் செய்தவர்கள், மொகலாயர் செய்த போர்களில் எல்லாம் உடனிருந்தவர்கள். இதனால் மொகலாய வியூகம் தாக்கும் முறை, அதன் பலம் பலவீனம் என எல்லாம் தெரியும் என்பதால் மொகலாயச் சேனையினை எளிதாகச் சமாளித்தார்கள்.

ஔரங்கசீப் பெரும் படையினைத் தன் மகன்கள் மூவரை அனுப்பியும் அங்கு நிலைமை சரியாகவில்லை. மாறாக, மொகலாயச் சேனைகள் அடிவாங்க ஆரம்பித்தன. ஔரங்கசீப் ஆத்திரத்தின் உச்சிக்குச் செல்லத் தொடங்கினான்.

இந்தப் போரை நடத்துவதில் சாம்பாஜிக்கும் பங்கு உண்டு எனக் கருதியவன் அவன் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்தான், சிவாஜியினை அன்றே அடக்காமல் விட்டதும் கொல்லாமல் விட்டதும் பெரிய தவறு என மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டான்.

“இந்தக் காபீர்களான இந்துக்களெல்லாம் ஒன்று சேர்ந்தால் இந்த மகா ஆலம்கீர் வீழ்ந்துவிடுவானா? இவர்களால் அவனை வெல்லமுடியுமா? ஒரு காலமும் முடியாது.

இந்துஸ்தானை இஸ்லாமிய தேசமாக மாற்ற கடவுளால் அனுப்பப்பட்டவன் நான், என்னை எதிர்த்து வெல்லும் சக்தி இங்கு எவனுக்குமில்லை, காலமும் கடவுளும் என்னோடுதான் உண்டு. காட்டுகின்றேன் இவர்கள் அனைவரையும் அடக்கி இஸ்லாமியராக மாற்றி இந்த நாட்டில் இருந்து இந்துமதத்தை ஒழித்து அரபு ஆப்கானின் தொடர்ச்சியாக மாற்றிக் காட்டுகின்றேன், இனி இந்துக்கள் இந்துமதத்தை இமயமலையில் கூடத் தேடமுடியாதபடி செய்கின்றேன்” எனச் சொல்லி உறுமிக் கொண்டிருந்தான்.

ஔரங்கசீப்பின் மகன்கள் மூவரும் திணறிக் கொண்டிருந்தார்கள். ராஜபுத்திரர்கள் மொகலாயருடன் மோதல் என்றதும் எல்லையில் ஆப்கானிய கும்பல் மீண்டும் கலவரம் செய்ய ஆரம்பித்தது, ஔரங்கசீப் அதை அடக்க கடுமையாக உத்தரவிட்டான்.

துர்க்காதாஸ் ரத்தோர் மிகத் திறமையாக மொகலாயச் சேனைகளை அலைகழித்துக் கொண்டிருந்தான் ஒரு நாள் கூட மொகலாயச் சேனைகள் நிம்மதியாக இல்லை, அவர்கள் முகாம்கள் எரிந்தன, திடீரென அவர்கள் தாக்கப்பட்டார்கள், மின்னல் வேகத்தில் மொகலாயப் பணப்பெட்டி கொள்ளையிடப்பட்டது.

இன்னும் குதிரைகள் ஆயுதங்கள் அவ்வப்போது களவாடப்பட்டன, மொகலாயப் படைகளுக்கு உணவு குடிநீர் பாதிப்பு அடிக்கடி வந்தது, மொகலாயச் சேனைகள் துவள ஆரம்பித்தன‌.

ஆனால், ஔரங்கசீப்போ என்ன விலை கொடுத்தேனும் யுத்தம் தொடர்வதில் உறுதியாக இருந்தான். அவனுக்குத் துணையாக ஆயுதம் வெடிபொருளெல்லாம் கப்பல் கப்பலாக குவித்துப் போர்ச்சுகீசியர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.

போர்ச்சுசீசியர்களின் இந்தச் செயலை சாம்பாஜி கடுமையாகக் கருதினான். அவர்களுக்குப் பலத்த எச்சரிக்கை அனுப்பினான், தௌலத்கான் எனும் இந்துராஜ்ய கடல்படை தளபதி அனுப்பிய எச்சரிக்கையினைப் போர்ச்சுகீசியர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

போர்ச்சுகீசியருக்கும் சாம்பாஜிக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கிற்று.

சாம்பாஜியின் ஆட்சித் தொடங்கி இருநாட்களாகியிருந்தன, அவன் அவரசமாக ஹம்பிராவினை வரச்சொன்னான், அவன் வந்ததும் பூட்டிய அறைக்குள் சாம்பாஜி, கலாஷ், ஹம்பிராவ் இன்னும் பகர்ஜி நாயக்கின் ஆள் ஒருவனும் அமர்ந்திருந்தார்கள்.

சாம்பாஜி சொன்னான்,
“நாம் கடந்த ஒரு வருடமாக பெரிய தாக்குதல் எதையும் செய்யவில்லை. சிவாஜி மன்னர் கடைசியாக சங்கமங்கேஸ்வரில் மோதிவிட்டு திரும்பினார். அப்போது நமக்குச் சேதம் அதிகம். அதன்பின் மன்னர் படுக்கையில் வீழ நானும் சிறைபட பெரிய தாக்குதல் ஏதும் நாம் செய்யவில்லை.

இப்போது ஔரங்கசீப் ஜிசியா வரி விதித்திருக்கின்றான். வடக்கே பெரும் கலவரம் நடக்கின்றது. இந்நேரம் நாம் நம் வலிமையினைக் காட்டவேண்டும், இந்துராஜ்ஜியம் சிவாஜிக்குப் பின் இன்னும் இன்னும் வலிமையாக இருக்கின்றது, எங்கும் எப்படியும் நுழைந்து தாக்கும் வலிமையினைக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டவேண்டும்.

நாம் அடிக்கும் அடி ஔரங்கசீப்புக்கு மரண அடியாக அதே நேரம் இந்துக்களுக்கு உற்சாகம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

ஒரே அடி ஓங்கி ஒரு அடி அதில் மொகலாயத்துக்கு அவமானம், ராஜபுத்திரர்க்கும் இந்துக்களுக்கும் நம்பிக்கை, நாமும் ஒரு ஆண்டு இழந்ததையும் இப்போது ராஜபுத்திரர்க்கு உதவுவதால் வரும் செலவையும் ஈடுகட்ட வேண்டும்” என்றான்.

எல்லோரும் அவனைக் கண்டார்கள், “மன்னரின் திட்டம் என்ன?” எனக் கேட்டான் ஹம்பிராவ்.

சாம்பாஜி தன் திட்டத்தைச் சொல்லவும் அப்படியே சிலிர்த்துப்போனான் ஹம்பிராவ். சாம்பாஜி உரக்க சிரிக்கத் தொடங்கினான், அது தக்காணத்தில் பெரும் போருக்கான தொடக்கம் எனக் காலம் குறித்துக் கொண்டது.

அதிகமில்லை பதவி ஏற்ற வெறும் 10 நாட்களில் மொகலாயருக்குப் பெரும் அடியினைக் கொடுக்க தயரானான் சாம்பாஜி, இது ஔரங்கசீப்பே எதிர்பாராப் பெரிய அடியாக அமைந்தது.

(தொடரும்)