அகத்தியர் திருமகள் துதி : 01
அகத்தியர் திருமகள் துதி : 01
“மூவுலகம் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்.”
இப்பாடல் இப்படி பிரிந்து வரும்.
“மூவுலகம் இடர் இயற்றும் அடல் அவுணர்
உயிர் ஒழிய முனிவு கூர்ந்த
பூவை உறள் திருமேனி அருள் கடவுள்
அகன்ற மார்பில் பொலிந்து தோன்றி
தேவர் உலகினும் விளங்கும் புகழ் கொல்லாபுரத்தின்
இனிது சேர்ந்து உவகும்
பவை இருதாள் தொழுது பழமறை தேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்.”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
“மூவுலகம் இடர் இயற்றும் அடல் அவுணர்
உயிர் ஓழிய முனிவு கூர்ந்த”
மேலோகம், பூலோகம், பாதாள லோகம் எனும் மூவுலக்கும் துன்பம் (இடர்) கொடுத்த அசுரர்களை (அவுணர்) கடும் கோபத்தோடு (முன்னிய) வந்து அழித்தவர் திருமால் எனப் பொருள்.
அடுத்த வரி இதோ.
“பூவை உறள் திருமேனி அருள் கடவுள்
அகன்ற மார்பில் பொலிந்து தோன்றி”
பூப் போன்ற மேனி கொண்டவரும் கருணை மிக்கவருமான விஷ்ணுவின் அகன்ற மார்பில் தோன்றியவள் எனப் பொருள்.
அடுத்த வரி இப்படி வரும்.
“தேவர் உலகினும் விளங்கும் புகழ் கொல்லாபுரத்தின்
இனிது சேர்ந்து உவகும்”
வானவர் வாழும் உலகினை விடப் பெரும் வளங்களைக் கொடுக்கும் கோலாப்பூர் (கொல்லாபுரம்) ஆலயத்தில் அமர்ந்து இனிதே எல்லோருக்கும் அள்ளித்தரும் எனப் பொருள்.
அடுத்து கடைசி வரி.
“பவை இருதாள் தொழுது பழமறை தேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்.”
பழி என்ற வார்த்தைக்கு உறுதியாகச் சொல்லுதல் என்றொரு பொருள் உண்டு.
அப்படியான பெண் தெய்வத்தினை அன்னையினை வணங்கி, பழமையான வேதங்களில் தேர்ச்சி பெற்ற குறு முனிவனாகிய அகத்தியன் சொல்கின்றேன் எனப் பொருள்.
ஆக பாடலின் பொருள் இதுதான்.
“மூவுலகிலும் இன்னல் செய்யும் அசுரர்களை ஒழிக்கும் பூ போன்ற மேனி கொண்ட பெருமாளின் மார்பில் உதித்தவளே, தேவலோகத்தை விட வளமானதான கோலாப்பூரில் அமர்ந்து இனிதே அள்ளித் தருபவளே, உன் திருவடிகள் இரண்டையும் நால்வகை வேதங்களையும் கசடறக் கற்றவனான இந்த அகத்திய முனிவன் வணங்கிப் பாடுகின்றான்.”
இந்தப் பாடல் அகத்தியரின் திருமகள் துதியில் முதல் பாடல்.
ஒரு பாடலைப் பாடும்போது கடவுள் வாழ்த்து பாடுதல் மரபு. ஆனால் இங்கே நேரடியாக அன்னையினையே வாழ்த்திப் பாடித் தொடங்குகின்றார் அகத்திய மாமுனி.
பாடல் ஆழ்ந்த தத்துவத்தைச் சொல்கின்றது.
திருமால் மூவுலகினையும் காப்பவர், அசுரர்களின் அட்டகாசம் எந்த உலகில் இருந்தாலும் சென்று காப்பவர். தேவலோகம் பூலோகம் பாதாள லோகம் என எல்லா உலகுக்கும் அவரே காவல் செய்பவர்.
“பாகவத மஹாத்மியம்” அவர் பெருமைகளைச் சொல்கின்றது. அதுதான் அவர் எல்லா அசுரர்களையும் அழித்த பெருமையினைச் சொல்கின்றது.
பெரும் தொல்லை கொடுத்த அசுரர்களை திருமால்தான் ஒழித்து எல்லா உலகையும் காத்தார், அப்படியான திருமாலுடன் அன்னையினை வணங்குதல் பாக்கியங்களில் பெரும் பாக்கியம் எனத் தொடங்குகின்றார் முனிவர்.
அடுத்து “பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்ற மார்பில் பொலிந்து தோன்றி” என்கின்றார், இதுதான் அகத்திய முனிவரின் சொல்லாட்சிக்கு திறன்
இது பூ போன்ற மேனி கொண்ட விஷ்ணுவின் நெஞ்சில் இருப்பவள் என நேரடியாக பொருள் சொன்னாலும் கவித்துவமான பொருள் இரண்டு.
முதலாவது அன்னை அலர்மேல் மங்கை என அறியப்படுபவள். அவள் தாமரை மலரில் வீற்றிருப்பவள். அப்படி பத்மம் எனும் தாமரை போல் மென்மையான உடல் கொண்டவன் பத்மநாபனான பகவான்.
ஆக அன்னை மலர்மேல் இருந்தாலும், பகவான் மார்பின் மேல் இருந்தாலும் ஒன்றே என கவித்துவமாய்ச் சொல்கின்றார்.
அதில் இன்னும் அர்த்தம் பல உண்டு.
அன்னை திருமாலின் மனதில் இருப்பவள். மனம் என்றால் இயக்கம்; மனம் என்றால் சிந்தனை. திருமால் உலகை காக்கும் மகா சக்தி. அந்த பெரும் சக்தியின் பலமாய் சிந்தையாய் இயக்கமாய் இருப்பவள் அன்னை என்பதைச் சொல்லிப் பாடுகின்றார் அகத்தியர்.
“தேவர் உலகினும் விளங்கும் புகழ் கொல்லாபுர்த்தின் இனிது சேர்ந்து உவகும்” என்கின்றார்.
தேவர் உலகம் எப்படிப்பட்டது. எல்லா செல்வமும் வளமும் பொன்னும் இன்பமும் கொண்டது. கேட்டதெல்லாம் தரும் காமதேனுப் பசு, எல்லா செல்வமும் தரும் கற்பக மரம், நதியென ஓடும் அமிர்தம், எல்லா வகை இன்பம் என இன்பம் மட்டுமே கொண்டது.
அப்படியான தேவலோகத்தை விட பெரும் செல்வமும் இன்பமும் கொடுக்கக் கூடியது கொல்லாப்பூர் ஆலயம். அங்கு சொர்க்கத்தை விட எல்லா இன்பங்களும் செல்வமும் அன்னை அருளால் கிடைக்கும்.
அதைச் சொல்லி பாடும் முனிவர், கொல்லாபுரம் எனும் கோலாப்பூர் ஆலயம் எல்லா செல்வத்தையும் இன்பங்களையும் கேட்ட வரமெல்லாம் தரக்கூடியது என போதித்துப் பாடுகின்றார்.
கடைசியில் சொல்கின்றார் “பவை இருதாள் தொழுது பழமறை தேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான்.”
இந்த வரிகளை, இந்த ஆலயத்தின் பெருமைகளை, இந்த கோலாப்பூர் மகாலட்சுமியின் பெருமையினைச் சொல்பவன் யார் என்றால் அவன் சாமானியன் அல்ல.
அவன் வெறும் கவிஞனோ, பக்தனோ இல்லை மானிடரில் மேம்பட்டவனோ அல்ல.
சொல்வது நான்கு மறைகளிலும் தேர்ந்த அகத்தியன், 18 சித்தர்களுக்கும் தலைமைச் சித்தனும், சிவனோடு நேருக்கு நேர் நின்று பேசும் சக்தி கொண்டவனும், எல்லா தலைமுறையும் போற்றும் சித்த பரம்பரையின் பிதா மகனுமானவனும், யுகங்களையும் தாண்டியவனுமான அகத்தியன்.
அந்த மகா பெரிய சித்தன், எல்லா தெய்வங்களையும் நேரில் கண்டவன், அளப்பரிய முடிவில்லா சக்தி கொண்டவன். எல்லா லோகங்களிலும் தனி இடம் கொண்டவன், வேதங்களில் கரை தேர்ந்தவன், மகா ஞானி, மகா மகா யோகி.
அந்த அகத்தியன் சொல்கின்றான் என்றால் அது எந்த அளவு சத்திய வார்த்தைகள்? எந்த அளவு மகா உண்மையான போதனைகள்?
ஆம், மாபெரும் சித்தனான அகத்தியன் அன்னையின் பெருமைகளைச் சொல்லி அவள் பாதம் தொட்டு வணங்கி அவளை துதிக்கத் தொடங்குகின்றான்.
இந்த பாடல் வரிகளை பாரதியும் பாடுகின்றான்.
“நாரணன் மார்பினிலே – அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்”
என அவன் தன் திருமகள் துதியில் பாடுகின்றான்.
அகத்தியனின் வரிகளை மகாலக்ஷ்மி மந்திர மாலையும் சொல்கின்றது.
“கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர்
தனில்வாழும் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே”
என கோலாப்பூர் மகாலக்ஷ்மியினை அகத்தியர் சொன்ன இன்னொரு வடிவினைச் சொல்கின்றது.
அகத்திய முனி சிவனடியார், ஆனால் சக்தியில்லையேல் சிவமில்லை என்பதை உணர்ந்தவர், அதனால் சக்தியின் ஒரு வடிவமான, தசமஹா வித்யா என பல வடிவ சக்திகளில் ஒருத்தியான அன்னை மகாலட்சுமியன் மகத்துவத்தை உணர்ந்து இங்கே அவளை போற்றி பாடுகின்றார்
அகத்திய முனியின் இந்த வரிகள்தான், இந்த தொடக்கப் பாடல்தான் ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரப் பாடலில் வரிகளாய் வருகின்றது.
பாஹ் வந்தரே மதுஜித: ச்ரித கெளஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி |
காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: ||
மது ஜித என்றால் மது என்ற அசுரனை ஜயித்த (திருமாலின்), பாஹு அந்தரே என்றால் இரு தோள்களுக்கு நடுவே (மார்பில்)
ஹரிநீலமயீ என்றால் நீலமும் மஞ்சளுமாக மின்னும், ச்ரித கெளஸ்துபே யா என்றால் கௌஸ்துப மணி
ஹாராவலி இவ என்றால் ஹாரத்தைப் (மாலையை) போல, விபாதி என்றால் மின்னும் (உன் கடைக்கண் பார்வை)
பகவதோ (அ)பி என்றால் திருமாலிடம் கூட (திருமாலுக்கே), காம ப்ரதா என்றால் ஆசையைத் தூண்டும்
கடாட்ச மாலா என்றால் (உன்) கடைக்கண் பார்வை, கல்யாணம் ஆவஹது மே என்றால்
எனக்கு கல்யாணத்தை (மங்களத்தை) தரட்டும், கமல ஆலயாயா என்றால் கமலத்தில் (தாமரையில்) வீற்றிருப்பவளே
ஆக ஸ்லோகத்தின் பொருள் இதுதான்
“எந்த கடைப்பார்வை நாரணனின் கௌஸ்துப
மார்பினில் வாழ்கின்றதோ
எந்த கடைப்பார்வை இந்திரனின் நீலமணிச்
சரமாய் ஒளிர்கின்றதோ
எந்த கடைப்பார்வை சுந்தரத் திருமாலின்
தேவைகளைத் தருகின்றதோ
அந்த கடைப்பார்வை வீசிடும் கமலமகள்
மங்களமெ னக்கருள்கவே”
ஆம், ஆதிசங்கரரின் அதே வார்த்தைகளோடு அன்னையினை வேண்டி துதிக்க தொடங்குகின்றார் அகத்திய மாமுனி. சித்தர்களின் தலைமை முனி
அகத்திய முனிதான் காலத்தால் மூத்தவர் எனும் வகையில் இந்த துதியே ஆதிசங்கருக்கு வழிகாட்டிய துதியாக அறியவும் படுகின்றது
இந்த துதியினை சொல்லி மஹாலட்சுமியினை வழிபட தொடங்குவோம், அன்னை எல்லா வளமும் நிதியும் செல்வமும் மங்கா ஆசியும் அருளட்டும்
(தொடரும்..)