அகத்தியர் திருமகள் துதி – 04
அகத்தியர் திருமகள் துதி ” 04
“மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ”
இப்பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.
“மடல் கமலம் நறும் முகட்டில் அரசிருக்கும்
செந்தூர் உவர்வாய் மயிலே உன்
கடைக்கண் அருள் படைத்து அன்றோ மணிவண்ணன்
உலகெல்லாம் காவல் பூண்டான்
படைத்தன் நான் முககிழவன் பசுகுழலி
மதியனைந்த பரமன் தானும்
துடைத்தன் நின் பெரும் சீர்த்தி எம்மன்னோரால்
எடுத்து சொல்லல் மாற்றோ’
மடல் கொண்ட தாமரையின் முகட்டில் அரசியாக வீற்றிருப்பவளே, செந்தூரம் போன்ற இதழ்களைக் கொண்ட வாயினை உடைய மயிலே.
உன் கடைக்கண் அருளால் அன்றோ விஷ்ணு உலகை காக்கின்றார், பிரம்மன் உன் அருளால்தானே உலகை படைக்கின்றார். அந்த பிறைநிலவினை அணிந்த சிவனும் உன் அருளாலேதானே உலகை காக்கின்றார். அப்படியான உன் பெருமையினை என்னைப் போன்றவரால் எப்படி முழுவதுமாக வார்த்தைகளில் எடுத்துச் சொல்ல முடியும் என்பது பொருள்.
அன்னை ஆதிபராசக்தி. அவளே சிவனின் சக்தியாக நின்று உலகை அழிக்கின்றாள். அவளே பிரம்மனின் சக்தியாக நின்று உலகை படைக்கின்றாள். அவளே திருமாலின் சக்தியாக நின்று உலகை காக்கின்றாள்.
முத்தொழிலையும் செய்யும் அவள் பெருமையினை மானுடரால் எப்படி சொல்ல முடியும்? அதுவும் சொல்வதற்கு வார்த்தைகள் ஏது என்கின்றார் அகத்திய முனி.
அன்னையின் மாபெரும் ஆற்றலை எல்லாமே அவள் இயக்கம் என்பதை இப்படிப் பாடிச் சொல்கின்றார் குறுமுனி.
அபிராமி அந்தாதி பாடல் ஒன்றும் இதே கருத்தைச் சொல்லும்.
“பூத்தவளே புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே”
“பூத்தவளே புவனம் பதினான் கையும்” எனத் தொடங்கும் அபிராமி பட்டர், பூத்தல் என்றால் மலர்தல். ஒரு மலர் ஆகாயம் நோக்கி விரிவதைப் போல இந்த உலகினை அபிராமி படைத்தாள் என்கின்றார் அபிராமி பட்டர்.
உலகை படைத்தவன் பிரம்மன் அல்லவா? இதில் அன்னையின் பெயர் வருமா என்ற கேள்வி எழலாம், அக்கேள்விக்கும் பதில் உண்டு.
ஆம், பிரம்மனே படைப்புக்கு அதிபதி. ஆனால் அவனை உள்ளிருந்து சக்தியாக இயக்குபவள் யார்? நிச்சயம் அன்னை பராசக்தியின் வடிவமான கலைமகள்.
அந்த சக்தி இல்லையென்றால் பிரம்மனால் இயங்க முடியாது. அவனுக்கு உணர்வு கொடுத்து அவன் கரங்களிலும் நாவிலும் நின்று செயலாற்றுபவள் அன்னை, அந்த சக்தியின்றி பிரம்மன் இல்லை.
இதனாலே “பூத்தவளே” என அழகாகச் சொல்கின்றார் பட்டர். ஒரு செடிக்குள் இருந்து பூக்கும் பூ போல பிரம்மனுக்குள் இருந்து அன்னை வெளிப்பட்டு இந்த உலகம் படைக்கப்படுகின்றது என அழகான உவமையாகச் சொல்கின்றார்.
“புவனம் பதினான் கையும்” என்பது இரேழு உலகையும் அன்னை படைத்தாள் என்பதைச் சொல்லும் வரியாகும். இதன் முந்தைய பாடலில் “புவி ஏழையும் பூத்தவள்” என பட்டர் சொன்ன விஷயமும் கவனிக்கத்தக்கது.
அப்படியானால் புவி வேறு, புவனம் வேறா என்றால் வேறுதான். ஏழு புவிகளும் 12 உலகங்களும் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
புவி ஏழு என்று கூறக்கூடிய ஸப்ததீபங்கள் ஜம்பு, பிலக்ஷ, குந, கிரளெஞ்ச, சாக, சான்மல மற்றும் புஷ்கர எனும் ஏழு தீவுகளாகும்.
(இன்றைய பூமியின் கண்டங்கள் 7 என்பதும் குறிப்பிடத்தக்கது.)
புவனம் பதினான்கு யாதெனில் கீழ் ஏழு லோகங்களாகிய அதலம், விதலம், சுதலம், தாராதலம், மஹாதலம், ரசாதலம் மற்றும் பாதாளம் ஆகியவையும், மேல் ஏழு லோகங்களாகிய பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனலோகம், தபோலோகம், மஹர்லோகம் மற்றும் சத்திய லோகம் ஆகியன ஆகும்.
திருமூலரும் திருமந்திரத்தில் “தானே தலைவியென நின்ற தற்பரை” என்ற பாடலில் அன்னையே பதினான்கு உலகங்களையும் படைத்தவள் என்பார்.
புவியினையும் புவனத்தையும் படைப்பதால் அவள் “பிரம்மஹ்ரூபா” “ஸ்ருஷ்டி கர்த்ரி” (லலிதா சகஸ்ரநாமம்) என்றும் அழைக்கப்படுகின்றாள். புவியும் புவனமும் மட்டுமன்றி அதன் உயிர்களையும் அவளே ஜனிக்க வைப்பதால் “ஜனனி” என்றும் அவள் போற்றப்படுகின்றாள்.
அடுத்து ” பூத்தவண்ணம் காத்தவளே”
அன்னை படைப்புத்தொழில் மட்டும் செய்யவில்லை காக்கும் தொழிலும் செய்கின்றாள் என அடுத்து சொல்லத் தொடங்குகின்றார் பட்டர்.
ஆம், உலகை படைத்துவிட்டு அன்னை விட்டுவிடவில்லை. அவள் உலகை காக்கும் சக்தியாகவும் திகழ்கின்றாள்.
அவள் தனியாக எத்தனையோ அசுரர்களை கொடியவர்களை சம்ஹாரம் செய்திருக்கின்றாள். இன்னும் காக்கும் கடவுளென அறியப்படும் விஷ்ணுவில் உள் நின்று அவரை இயக்கி நின்று உயிர்களைக் காக்கின்றாள்.
இதனாலேதான் அவளுக்கு விஷ்ணுரூபிண்யை, கோப்த்ரி, கோவிந்த ரூபிணி என நாமங்கள் உண்டு.
“பின் கரந்தவளே” என அடுத்த வார்த்தையினைச் சொல்கின்றார் பட்டர். இதற்கு மறைத்தல் எனப் பொருள். அதாவது ஆபத்து வேளையில் ஓடிவந்து உதவத் தயாராய் இருப்பவள் எனப் பொருள்.
கோழி தன் குஞ்சுகளை ஆபத்து வந்தால் இறக்கைக்குள் வைத்து காப்பது போல, தாய் தன் குழந்தையினை மறைவாய் காப்பது போல் அன்னை லோக உயிர்களை மறைபொருளாய் அரூபியாய் நின்று காத்துக் கொண்டிருக்கின்றாள் என்கின்றார் பட்டர்.
ஒரு தாய் குழந்தையின் நலனுக்கு எதையெல்லாம் மறைத்து வைப்பாளோ அப்படி மறைத்து வைத்து உயிர்களையும் மானிடரையும் காப்பவள் அன்னை என்கின்றார் பட்டர்.
“கரந்தவளே” எனும் வார்த்தைக்கு இப்படி பொருள் உண்டு எனினும் அன்னை சிவனின் சக்தியாக இருந்து சம்ஹாரம் செய்வதிலும் அழிக்கும் சக்தியாக வீற்றிருப்பவள் என்பதும் இன்னொரு பொருள்.
அடுத்து “கறைகண்டவனுக்கு மூத்தவளே” என்கின்றார் பட்டர். கறைகண்டன் என்றால் கறை கண்ட கழுத்துடையவன் எனப்பொருள். ஆலகாலத்தை கழுத்தில் தாங்கிய சிவனுக்கு அன்னை மூத்தவள் என்கின்றார் பட்டர்.
உண்மையில் சிவனுக்கு சக்தி மூத்தவளா? அங்கேதான் ஒளிந்திருக்கின்றது ரகசியம்.
தத்துவபடி சிவமும், சக்தியும் ஒன்றேதான். அந்தப் பெரும் சக்தி சலனமற்றிருக்கும் போது சிவமாகவும், இயங்கி பிரபஞ்சம் உண்டாகும் போது சக்தியாகவும் மாறும். இந்த இரண்டு பெரும் சக்திகளும் இணைந்த நிலைதான் சிவசக்தி நிலை.
சிவசக்தி இல்லையெனில் எதுவுமே இல்லை.
ஆக சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார்.
அடுத்து அம்பிகையினை “முகுந்தனுக்கு இளையவளே” என்கின்றார்.
முகுந்தன் என்றால் கண்ணன், அந்த திருமாலுக்கு இளையவள் அன்னை என்கின்றார் பட்டர்.
இந்த இடத்தில் குழப்பம் வரலாம். அன்னை எப்படி சிவனுக்கு மூத்தவளாக இருக்கும் நிலையில் திருமாலுக்கு இளையவள் எனும் சந்தேகம் வரலாம்.
புராணதத்துவப்படி திருமாலுக்கு மலைமகள் தங்கை எனும் நம்பிக்கை உண்டு, அந்த வகையில் சொல்கின்றார் பட்டர்.
ஏன் திருமாலுக்கு எத்தனையோ நாமம் இருக்க முகுந்தனை பட்டர் சொல்கின்றார் என்றால் முகுந்தன் என்றால் மூப்பே இல்லா தளர்வே இல்லாதவன் எனப் பொருள்.
அந்த முகுந்தனுக்கு தங்கை என்பவள் மிக இளமையானவள் முக்கால இளமையானவள் என்கின்றார் பட்டர்.
அப்படியே மூப்பே இல்லாத அன்னை தன் பக்தர்களுக்கும் மூப்பு இல்லா வரம் தரத் தகுதியானவள் என்பதை குறிப்பால் விளக்குகின்றார்.
“ஜராத்வாந்த ரவிப்ரபா” என அன்னைக்கு ஒரு பெயர் உண்டு.
இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம்.
அவளை ‘உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்னபுவானாவலி” என்று லலிதா சஹஸ்ரநாமம் போற்றுகிறது என்பது கவனிக்கதக்கது.
உந்மேஷம் என்றால் கண்களை திறத்தல், நிமிஷம் என்றால் கண்களை மூடுதல்.
அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது பொருள்.
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் செய்யும் அன்னையினை விட பெரும் தெய்வம் எங்கே உண்டு? என இப்பாடலில் கேட்கின்றார் பட்டர்.
இதைத்தான் பல புராண செய்திகளும் சொல்கின்றன.
சௌந்தர்யலஹரியில் இந்தக் கருத்து வருகிறது. சக்தி கண்ணசைத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலையும் தொடங்குவார்களாம். சக்தி மறுபடி கண்ணசைத்தால் நிறுத்துவார்களாம். அதனால் சக்தியை விடச் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்ற கருத்து அங்கே வருகின்றது.
இதைத்தான் அகத்திய முனிவரும் சொல்கின்றார்
அன்னை கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவடிவமாய் நின்று உலகை இயக்குகின்றாள் என்பதையே ஆதிசங்கரரும் தன் கனகதாரா ஸ்தோத்திரப் பாடலில் சொல்கின்றார்.
கீர்தேவதேதி கருடத்வஜ சுந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி |
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை ||
கீர் என்றால் வாக்கு, தேவதேதி என்றால் தேவதை, கருட என்றால் கருடக்
த்வஜ என்றால் கருடக்கொடியை (உடையவர்), சுந்தரீதி என்றால் சுந்தரி / அழகானவள்
சாகம்பரி என்றால் காய் கனிகளை உண்டாக்குபவள் (நில மகள்)
இதி என்றால் இவள்
சசி என்றால் நிலவை, சேகர என்றால் முடியில் (சூடியவர்). வல்லப என்றால் உயர் துணையாள்
இதி என்றால்இவள், ஸ்ருஷ்டி என்றால் படைத்தல்
ஸ்திதிப் என்றால் காத்தல், ப்ரளாய என்றால் அழித்தல், கேளிஷு என்றால் விளையாட்டாக
ஸம்ஸ்திதாயை என்றால் நிலைத்து இருப்பவள்
தஸ்யை என்றால் அவளுக்கு, நம என்றால் வணக்கம் (போற்றி) , த்ரி புவநைக என்றால் மூன்று உலகுக்கும் ஒரே குரோ என்றால் ஒரே குருவின், தருண்யை என்றால் இளம் நாயகி என பொருள்
ஆக பாடலின் பொருள் இதுதான்
“கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்
அலைமாம கள்என்றுமாய்
நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்
பெம்மானின் மலைமகளுமாய்
உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து
முடிப்பதை விளையாட்டென
செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்
நாயகியே போற்றிபோற்றி”