அகத்தியர் திருமகள் துதி : 07
அகத்தியர் திருமகள் துதி : 07
” என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவன் மருவல் செய்யாள்”
” இந்தப் பாடல்களை அதாவது மேற்சொன்ன ஆறு பாடல்களையும் அகத்திய முனி பாடியபின் அன்னை மகாலட்சுமி, கோலாப்பூர் மகாலட்சுமி அவருக்கு காட்சி கொடுத்தாள். தமிழ் செய்த குறுமுனியான அகத்தியன் தன் மனைவியோடு அவளை தரையில் வீழ்ந்து வணங்கினார்.
நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த மாமுனியே, நீ எம்மை வாழ்த்திப் பாடியதால் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம், இந்தப் பாடலை யார் முறைப்படி பாடினாலும் அவர்கள் வீட்டில் இன்பத்துக்கும் நிறைவுக்கும் குறை இராது, இந்த ஏட்டை வைத்திருக்கும் வீட்டில் என் அக்கா மூதேவி நுழையமாட்டாள், இந்த பாடல் ஒலிக்குமிடம் எல்லா வளமும் ஐஸ்வர்யமும் செழிக்கும்” என்பது பொருள்.
அதிகம் விளக்கி சொல்ல அவசியமில்லா பாடல் இது. எளிதாகப் புரியும்.
அகத்திய மாமுனி விந்திய மலைதாண்டி வரும்போது கோலாப்பூருக்கு சென்று மகாலட்சுமியினை வணங்கி துதிக்கின்றார். அப்போது இந்த துதி கிடைகின்றது.
இவ்வளவுக்கும் அவர் சிவனின் உத்தரவுப்படி வந்தவர், அவரே அன்னையினை வணங்கித்தான் தன் எல்லைக்கு சென்றிருக்கின்றார்.
அதாவது இந்த மானுடர் அன்னையினை துதித்து வணங்க ஒரு துதியினை இயற்றி அதை மாந்தருக்கு கொடுக்க திருவுளம் கொண்டார், அதை அன்னை மகாலட்சுமியே வந்து ஆசீர்வதித்தார்.
அப்படி எல்லா மாந்தரும் அவள் அருள் பெற இந்த ஸ்லோகத்தை அருளினார், இதனை அதிவீர ராமபாண்டியனும் தன் நூலில் சொல்லியுள்ளார்.
“மூன்றுவடி வங்களின் உருவமாய் நிற்பவள்
மூவுலகி னிற்குந்தாயாம்
மோகன லக்ஷ்மியை மேற்சொன்னத் துதிகளால்
நிதம்புகழும் மனிதர்எவரும்
சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறார்
செல்வமெல் லாம்பெறுகிறார்
ஜெகமிதில் மேம்பட்ட குணமெலாம் கைவர
பாக்கியம் பலபெறுகிறார் “
என ஆதிசங்கரர் தன் கனகதார ஸ்தோத்திரத்தில் இந்த உத்திரவாதமே அருள்கின்றார்.
அதையே சித்தன் பாரதியும் பாடினான்.
“நண்ணிய தேவிதனை – எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.
வெற்றி கொள் படையினிலும் -பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் – நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை – நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்த்திடுவோம்
கற்றபல் கலைகளெல்லாம் – அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.”
மகாலஷ்மி அஷ்டகம் சொல்கின்றது.
“ஸ்ரீதேவி சென்றடையும் பாக்கியவான் புவியினில்
செல்வங்களை பெற்று வெற்றி நீள் ஆயுள்
மகிழ்வு புகழுடன் சுகவாழ்வு வாழ்ந்து
மரணமில்லா பெரும்பேற்றை எளிதில் அடைகிறான்.
எல்லாநலன்களும் திருமகளே என்றறிந்து
மந்திரங்கள் வேள்விகள் இடையின்றிச் செய்பவர்
அம்ருதாவை அடைந்து அவளருளால் வாழ்வில்
மக்கள் கால்நடை மிகு செல்வம் சேரவாழ்வர்.”
இதைத்தான் அபிராமிபட்டர் தன் ” அபிராமி அந்தாதி ” பாடலில் சொல்கின்றார்,
“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”
அன்னை “தாடங்க யுகலீபூத தபனோடுப மண்டலா” என்பது சஹஸ்ரநாமம் சொல்லும் வரி. அதாவது சூர்யனையும் சந்திரனையும் இரு தோடாக அணிந்திருப்பவள் எனப் பொருள்
அவள் “கநத்கனக தாடங்கா” என்கின்றது, ஜொலிக்கும் பொற்காதணிகளை அணிந்தவள் என்கின்றது.
அவளை “ம்ருகாக்ஷீ” மானையொத்த கண்களை உடையவள்.
அவள் “அத்ரிஷ்யா” அதாவது மறைபொருளானவள், பார்வையின் புரிதலுக்கு அப்பாற்பட்டவள்.
அவள் “அவ்யக்தா” அதாவது விளங்குதலுக்கு அப்பாற்பட்டவள், புலன்களுக்கு எட்டாத நிலையில் இருப்பவள்.
அவள் “வ்யக்தா அவ்யக்த ஸ்வரூபிணீ” அதாவது புரிதலுக்கு அப்பாற்பட்டவள்.
அவள் “த்யான த்யாத்ரு த்யேய ரூபா” அதாவது தியானமாகவும், தியானிப்பவராகவும், தியானிக்கப்படும் பொருளாகவும் ஊடுருவியிருப்பவள்.
அவள் “த்யான கம்யா” அதாவது த்யானத்தின் மூலம் அடையப்படுபவள்.
அவள் “சிருஷ்டி கர்த்ரீ” அதாவது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்.
அவள் “ஆபிரம்ம கீட ஜனனீ”, பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா.
அவள் “முக்திதா” அதாவது முக்தியளிப்பவள்.
அவள் “முக்திரூபிணீ”, முக்தி வடிவானவள்.
அவள் “முக்திநிலயா”, முக்தியின் இருப்பிடமானவள்.
அவள் “சாந்த்ர கருணா”, மிகுந்த இரக்கமுள்ளவள்.
அவள் “கருணாரச சாகரா”,கருணைக் கடலாக விளங்குபவள்.
அவள் “நித்யக்லின்னா”,நாடி வரும் அன்பர்களுக்கு நித்திய கருணாசாகரமாக கடாட்சிப்பவள்.
அவள் “தயா மூர்த்தி” பரிவே வடிவானவள்.
அவள் “ராஜத்-க்ருபா”, பெருங்கருணை கொண்டவள்.
அவள் “அவ்யாஜ கருணா மூர்த்தி”, காரணமற்ற பெருங்கருணை வடிவானவள்.
அவள் “பக்த சௌபாக்ய தாயினி”, பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வளமும் அருளுபவள்.
அவள் “பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி” பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள்.
அவள் “சமஸ்த பக்த சுகதா”, அனைத்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பவள் ,சுகம் அனுக்ரஹிப்பவள்.
“கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!”
ஆம். இந்த வரிகளும் அகத்தியருக்கு அன்னை மகாலஷ்மி கொடுத்த உறுதிமொழிகளின் சாயலே.
இந்துக்கள் நிச்சயம் வழிபட வேண்டிய ஆலயங்களில் கோலாப்பூர் மகாலஷ்மி ஆலயம் முக்கியமானது, அங்கு சென்றுவழிபட்டால் வாழ்வில் தரித்திரம் அகலும், வறுமை, கடன் என எல்லாப் பிணியும் அகலும்.
ஐஸ்வர்யமும் பெரும் செல்வமும் நிம்மதியும் சூழும். வாழ்க்கை இன்பமாகும்.
அங்கு செல்ல முடியாதவர்கள் இப்படி வழிபடலாம்.
உங்கள் பூஜையில் அவளை வணங்கலாம், மலர்களிட்டு தீபம் ஏற்றி, சாம்பிராணி இட்டு முதலில் நல்ல சூழலை அறையில் கொண்டுவருதல் அவசியம்.
முதலில் விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு, பின் அகத்திய மாமுனியினை அர்ச்சித்துவிட்டு, பின் அன்னை மகாலஷ்மியினை இந்த துதி சொல்லி மும்முறை அல்லது ஐந்துமுறை அல்லது ஏழுமுறை துதித்தல் நன்று.
இதனை தினமும் செய்யலாம் காலை, மாலை செய்யலாம். வெள்ளி கிழமை செய்தல் மிக நன்று.
இதனை செய்துவர வர வீட்டில் வறுமை அகலும், துன்பம் தரித்திரமெல்லாம் ஓடிவிடும். அன்னையின் கடாட்சத்தில் எல்லாமே வளமாகும் செல்வம் திரளும்.
பின் அந்த அன்னையே உங்களை கோலாப்பூருக்கு அழைத்து, கூடுதல் வரமும் தரிசனமும் தந்து வாழ்வாங்கு வாழவைப்பாள்.
அவளை உள்ளத்தில் இருந்து இல்லத்தில் தேடுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதைத் தந்து மிக்க மகிழ்வாக வாழவைப்பாள். இது சத்தியம்.
( அகத்தியர் அருளிய திருமகள் துதி முற்றுப்பெற்றது)