அனுமனும் தென்முனையும்

அனுமனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தென்முனை நினைவுக்கு வராமல் போகமுடியாது, ராமாயணமும் ராமகாதையும் அனுமனின் நினைவுகளும் தென்முனையோடு முழுக்க கலந்தவை.

ஒரு வகையில் ராமாயணத்தின் திருப்பமே அங்குதான் ஆரம்பமாகின்றது, அதற்கான சாட்சிகள் அங்கு ஏராளம் உண்டு.

உலகிலே ராமனின் குருவான விஸ்வாமித்திர மகரிஷிக்கு ஒரு ஆலயம், ஒரே ஒரு ஆலயம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பக்கம், அதாவது கூடங்குள அணுவுலை சமீபமாக விஜயபதி எனும் ஊரில் உண்டு.

அங்குதான் தாடகை அட்டகாசம் செய்தாள், அந்த இடத்தில் நடந்த விஸ்வாமித்திரரின் யாகத்துக்கு ராமனும் அனுமனும் காவலுக்கு வந்தார்கள், தாடகை வதம் அங்குதான் நடந்தது.

தென்முனை என்பது ஞானசூட்சுமமானது. கன்னியாகுமரி என்பது காசிபோல் மகா சக்திவாய்ந்த இடம், பிரபஞ்ச சக்தி கொட்டுமிடம், அங்கே முனிவர்கள் ரிஷிகள் நல்லோர் பயனடைய கூடாது நல்லது பெருக கூடாது என நின்றிருந்த துர்சக்தியான தாடகையினை ராமபிரான் அழித்துப் போட்டார்.

இன்றும் அந்த யாககுண்டம் நடந்த பெரும் சுவடு உண்டு, ஆதாரங்கள் உண்டு, அகழாய்வு செய்தால் இன்னும் ஆதாரம் கிடைக்கலாம்.

அப்படி ராமபிரானுடன் தொடர்புடைய தென்முனையில்தான் அனுமன் சீதையினை தேடி லங்காபுரி ஏகினான், அந்த சம்பவத்தின் பல சான்றுகளும் அதிகாரபூர்வ ஆதாரங்களும் இன்றும் உண்டு.

முதலாவது குரங்கணி ஆலயம் முக்கிய சான்று.

சீதை ராவணனால் கடத்தபட்டபோது, ஆகாய ரீதியாக அவளை அவன் கொண்டு சென்றபோது சீதை தன் அணிகலன்கள் ஒவ்வொன்றாய் கழற்றி போட்டபடி வந்தாள். ராமன் அதை கண்டு தன்னை தொடர்வான் என புத்திசாலிதனமாக இட்டு சென்றாள்.

இதை வால்மீகி, கம்பன் என ராமாயணத்தை நுணுக்கமாக அறிந்துபாடிய எல்லா ஞானியரும் சொன்னார்கள்.

அப்படி விழுந்த நகைகளில் ஒரு முத்துமாலை தெற்கே விழுந்தது, சீதையினை தேடி அனுமனும் வானரங்களும் அலைந்தபோது இந்த இடத்தில் கிடந்த முத்துமாலையினை கண்டுகொண்டன‌.

சில அவற்றை அணிந்துகொண்டு ஆடின, அதுதான் குரங்கு அணிந்த மாலை என பெயராகி குரங்கணி என்றாயிற்று.

(அங்கு இன்னும் முத்துமாலை அம்மன் என்றொரு ஆலயம் உண்டு, அது தொடக்கத்தில் சீதைக்கான ஆலயமாக இருந்திருக்கலாம்.)

அந்த முத்துமாலையினை கண்ட அனுமன் அது அரசவம்சத்து மாலை, ராஜகுடும்பத்து மாலை என்பதை உணர்ந்து இது சீதை சென்ற வழி என அறிகின்றான். அங்கிருந்து சுற்றி சுற்றி தேடுகின்றான் ஆனால் சீதை இல்லை.

இதனால் அவள் கடல்தாண்டி கொண்டு செல்லபட்டிருக்கலாம் என்பதை ஊகிக்கின்றான், அதன்படி அவன் கடலை தாண்ட நினைக்கின்றான் கடலுக்கு அப்பக்கம் லங்காபுரி இருப்பது அவனுக்கு தெரியும்.

வடக்கிலிருந்து அவளை தேடுகின்றான் தென்முனையில் அவள் அணிந்த அணிகலன் கிடக்கின்றது ஆனால் சீதை அங்கே இல்லை என்றால் கடல் தாண்டித்தான் இருக்கவேண்டும், ஆகாயமார்க்கமாக கடத்தபட்டதால் அதுதான் நடந்திருக்கவேண்டும் என எளிதாக உணர்கின்றான்.

அவன் அங்கிருந்து லங்காபுரி செல்ல நினைக்கின்றான், அதற்கு மகேந்திரகிரி மலைக்கு வருகின்றான்.

ராமாயணத்தின் மூலமும் அதன் பிரதிகளும் அனுமன் மகேந்திரகிரி மலையில் இருந்துதான் எம்பி குதித்து இலங்கை சென்றான் என சொல்கின்றது.

இதன் நினைவாக இன்றும் குமாரபுரம் என அந்த மலைபக்கம் உண்டு, அங்கிருந்துதான் அவன் இலங்கை செல்ல முடிவெடுத்தான்.

ஏன் மகேந்திரிர கிரிக்கு வந்தான்? அங்குதான் விஷயம் இருக்கின்றது.

ஹனுமன் வாயு புத்திரன், அது வாயு பகவானால் பிறந்தவன் என லவுகீக மொழியில் சொல்லபட்டாலும் காற்றால் என்னென்ன செய்யமுடியும் என்பதற்கு அவனே உதாரணம்.

இந்த மூச்சுகாற்றினை முறையாக பயிற்சி செய்தால் அஷ்டமா சித்துக்களை பெறலாம் என்பார்கள், அதாவது உருவம் குறுக்குதல் பெரிதாக்குதல் காற்றில் பறத்தல் மறைதல் என எட்டுவகை செயல்கள்.

அனுமன் இதில் பிரசித்தியாக இருந்தான், அவனால் இமயம் போல் பெரிதாக முடியும் துளசி இலைபோல் சுருங்கவும் முடியும், அந்த சக்தி அவனுக்கு உண்டு.

இது அனுமனுக்கு மட்டுமல்ல மூச்சு பயிற்சியில் மூழ்கி கரைகண்ட எல்லா சித்தர்களுக்கும் உண்டு. அனுமனுக்கு அது இயல்பிலே இருந்தது.

சரி, மகேந்திரகிரி மலையினை ஏன் தேர்ந்தெடுத்தான் அனுமன்?

அதற்குத்தான் இன்றும் சாட்சிகள் இயற்கையாகவும் அறிவியல் பூர்வமாகவும் உண்டு.

தென்னகத்தின் முனையில் இன்று கன்னியாகுமரி. நெல்லை எல்லையில் இருக்கும் அந்த இடம் இன்றும் காற்றின் வேகத்துக்கு பிரசித்தியானது.

இன்றும் ஆசியாவின் மிகப்பெரிய காற்றாலை பண்ணை அங்குதான் அமைந்திருக்கின்றது அந்த காற்றின் வேகம் அப்படி.

அந்த காற்றில் மிதந்தால் மிக எளிதாக அந்த காற்றே தென் இலங்கையில் கொண்டு தள்ளும்.

ஆம் இலங்கையின் வடபகுதி ராமேஸ்வரம் தாண்டி வரும், தென் பகுதி தூத்துகுடிக்கும் தெற்காகத்தான் வரும்.

மகேந்திரகிரி மலையில் இருந்து ஒரு பறவை போல் சீறிவரும் காற்றில் மிதந்தால் எளிதாக தென் இலங்கையினை அடையலாம் இது சாத்தியமே.

இதனாலேதான் அந்த அனுமன் மிக நுணுக்கமாக மகேந்திரகிரியினை தேர்ந்தெடுத்து அதில் இருந்து பறந்தான்.

அந்த காற்று அன்றும் உண்டு இன்றும் உண்டு, அதில் காற்றாலை பண்ணை மட்டுமல்ல ராக்கெட் இயக்கும் திரவ எரிபொருளும் அதில் இருந்துதான் உருவாகும், சும்மா அந்த மலையில் அது அமைக்கப்படவில்லை.

அப்படியான மலை அது.

அந்த மலைக்கு சென்ற அனுமன் தன் உடலை சுருக்கி ஒரு இலைபோல் காற்றில் ஏகினான். அந்த காற்று அவனை தென் இலங்கைக்கு எளிதாக கொண்டு சென்றது.

(அக்காற்று பலமானது ஆடி மாதம் அக்காற்று பலமாக இன்றும் வீசும், அப்படி அன்றே தேரிகாட்டு மண்ணை அள்ளி அது கடலில் வீசும்.

அந்த மணல் துகள்கள் நல்ல நீருக்கு வாய்பிளந்து கடலில் கிடக்கும் சிப்பிகள் வாய்க்குள் செல்லும். அந்த துகள்களை சுற்றித்தான் சிப்பிக்கள் திரவம் மூலம் முத்துக்களை உருவாக்கும்.

பாண்டிய நாட்டு கடலோரம், தூத்துக்குடி கடலோரம் உலகின் சிறந்த முத்துக்கள் கிடைத்தது இப்படித்தான்)

ஆக அனுமன் இலங்கை சென்றதில் இந்துக்கள் சொன்ன யோக சூட்சுமம் உண்டு, இன்றும் இயற்கை காட்டும் விஞ்ஞான சாத்தியங்களும் உண்டு.

இதெல்லாம் மிக உறுதியான வாய்ப்பான விஷயங்கள், இன்று அங்கு வீசும் பெரும் காற்றையும் அந்த காற்று தென் இலங்கை வழியே செல்வதையும் கவனியுங்கள் அனுமன் எவ்வளவு சூட்சுமமாக அங்கே சென்றிருக்கின்றான் என்பது விளங்கும்.

ராமாயணம் ஒன்றும் கட்டுகதை அல்ல , அது முழு உண்மை என்பதை சம்பந்தபட்ட இடங்களே காட்டி சொல்லும், ராமர் பாலம் போல மகேந்திரகிரி மலையும் அதை கடக்கும் காற்றும் அனுமனின் நினைவுகளை சொல்லி கொண்டேதான் இருக்கின்றன‌.

ராமனை காக்க அவன் மருந்துமலை தூக்கி சென்றதும் நாகர்கோவில் பக்கம் இருந்துதான் என்பதும் நம்பிக்கை. அதனால் மருந்துவாழ் மலை என்றொரு மலை அப்பக்கம் இன்றும் உண்டு, அனுமன் வழிபாடும் அங்கு உண்டு.

விசுவாமித்திரர் ஆலயமும், குரங்கணி ஆலயமும் அதை இன்னும் தெளிவாக சொல்கின்றன‌.

அதை கவனித்து பார்க்கத்தான் யாருமில்லை.

தமிழகம் ராமனின் பூமியாகத்தான் இருந்திருக்கின்றது, இங்கு தனுஷ்கோடி முதல் ஏகpபட்ட அடையாளங்கள் இருந்திருக்கின்றன, அதில்தான் வில்லிபுத்தூரார் முதல் கம்பன் வரை ராமாயணம் பாடியிருக்கின்றனர்.

பிற்காலத்தில் எல்லாம் அழிந்திருக்கின்றது.

இன்றும் தென்னக சில சபை கிறிஸ்தவர்களிடம் ஒரு வழக்கம் உண்டு, எதற்கெடுத்தாலும் “இயேசுவின் ரத்தம் ஜயம்” என்பார்கள், சிலர் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.

இதை வேறு எங்கும் உலகில் பார்க்க முடியாது.

ஆம் அது “ஸ்ரீராம ஜயம்” என சொல்லிக் கொண்டிருந்த இந்துக்களிடமிருந்து மதமாற்ற கிறிஸ்தவர்கள் உருவாக்கிய ஒரு வழக்கம் அன்றி வேறல்ல.

அந்த அளவு இங்கு ராமனும் அனுமனும் தென்னகத்தில் கலந்தேதான் இருந்தார்கள், இன்றும் இருக்கின்றார்கள். வடக்கே ஒரு காலம் வந்தது போல் தெற்கேயும் ஒரு எழுச்சி வரும் அன்று இந்த புனிதமான வரலாறெல்லாம் மீட்கப்படும்.

காலம் அதை உறுதியாக செய்யும். நாமெல்லாம் அதை காணத்தான் போகின்றோம்.

ஹிமாலயம், காசி, அயோத்தி போல இந்தத் தென்னக முனையும் இந்துக்களின் ஞானபாரம்பரியமும் தொன்மையும் கொண்டது, இந்து மதத்தின் பெரும் மூலவேர் அங்கும் உண்டு, ஒருநாள் அதனை இந்து சமூகம் அறிந்துகொள்ளும்.

“ஜய் ஸ்ரீராம்..”