அபிராமி ஆலயங்கள் – முன்னுரை.

அபிராமி ஆலயங்கள் – முன்னுரை.

இந்த சியாமளா நவராத்திரியில் அன்னை ராஜ சியாமளா, மீனாட்சி அம்மனை வழிபடுதல் நன்று. அப்படியே அபிராமி அன்னையினை வழிபடுதலும் கூடுதல் சிறப்பு.

திருக்கடையூரில் அன்னை அபிராமி தலம் எல்லோரும் அறிந்த ஒன்று, அங்குதான் மார்கண்டேயன் எமனிடம் இருந்து சிவபெருமானால் காப்பாற்றப்பட்டான். இன்னும் மன்மதனை சிவன் எரித்துப்போட்ட மயானமும் அங்கேதான் உண்டு.

அதே திருக்கடையூரில்தான் அபிராமி பட்டர் வாழ்ந்து அன்னையே கதி எனக் கிடந்து, அதனால் சரபோஜி மன்னனால் பெரும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டு அதிலிருந்து மீளும்படி அபிராமி அந்தாதி பாடினார், அற்புதமாக அன்னை அவரைக் காப்பாற்றினாள்.

இந்தத் திருக்கடையூர் தலம் மட்டும் அபிராமி அன்னைக்கு உள்ளது அல்ல, அப்படி இன்னும் ஐந்து அபிராமி தலங்கள் உண்டு.

அவை மேல் மருத்துவக்குடி அபிராமி, பாணாபுரம் அபிராமி, கொழையூர் அபிராமி, இலந்துறைஅபிராமி, திருமலைராயன் அபிராமி என ஐந்து உண்டு, திருக்கடையூர் தலத்தோடு சேர்த்து மொத்தம் ஆறு.

இந்த ஆறு ஆலயங்களும் உடலின் ஆறு சக்கரங்களோடு தொடர்பு கொண்டவை, ஆறு சக்கரங்ளையும் துலங்க வைக்கும் தலங்கள் இந்து மரபில் ஒவ்வொரு தொகுதியாக உண்டு.

சபரிமலை ஐயப்பனுக்கான ஆறு தலங்கள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் என அந்த தொகுப்பு உண்டு, அதே தாத்பரியத்தில் அபிராமி அன்னைக்கும் ஆறு தலங்கள் உண்டு.

இந்தத் தலங்களெல்லாம் வழிபட்ட பின்பே மார்கண்டேயன் திருக்கடையூரில் அபிராமியினை வணங்கினார், சிவனருளில் எமனை வென்று நின்றான்.

யோக மார்க்கத்தில் இதனைச் சொல்லவேண்டும் என்றால் ஆறு ஆலயங்களிலும் வழிபட்ட அவனுக்கு உடலின் எல்லாச் சக்கரமும் துலங்கியிருந்தது, அந்த ஆறாம் சக்கரம் திருக்கடையூரில் துலங்கும்போது அவன் ஞானத்தின் உச்சத்தில் முழு யோகநிலை அடைந்திருதான்.

சிவனின் பாதத்தை முழுக்க சரணடைந்த அவன் அன்னையின் அருளால் முழு இறை நிலையினை எட்டியிருந்தான், இதனால் எமனால் அவனை வெல்ல முடியவில்லை.

அன்னையின் பாதம் பணிந்தோர் முழு யோக நிலைக்குச் செல்வர். அபிராமி பட்டர் அப்படித்தான் பூரண யோகநிலையில் நிறைந்திருந்தார். அங்கும் எமன் பின்வாங்கி ஓடிபோனான்.

ஆம், முழு ஞானம் என்பதும் யோகம் என்பதும் முழுச் சித்தி நிலையில் வாய்க்கும் முழு அருளை தரும், இந்த ஆறு அபிராமி ஆலயங்களும் அந்த முழு ஞானத்தை முழு நிறைவினைத் தரும்.

அந்தச் சக்கரங்கள் துலங்கப்பட்டோர் எமனுக்கு அஞ்சுவதில்லை, அதனாலே பாரதி “காலா உன்னை காலால் மிதிப்பேன்” எனக் கர்ஜித்தான்.

மார்கண்டேயன் அழியா வாழ்வை பெற்றான் என்றால் அது சரீரத்தால் அல்ல. மாறாக, எந்நாளும் திருக்கடையூர் ஆலயத்துக்கும் சிவன் அருளுக்கும் பெரும் அடையாளமானான், அப்படியே மார்கண்டேய மகரிஷியாக பெரும் ஞானபோதனைகளை அருளித் தந்தார்.

அபிராமி பட்டரும் அப்படி அழியா இடம் பிடித்தார்.

இந்த அபிராமி அன்னையின் அருள் அப்படித் தெய்வ நிலையினைத் தரும். மன்னர் முன் பெரும் செல்வாக்கைத் தரும், ஊரும் உலகும் போற்றும் பெருவாழ்வை தந்து காலத்தை வென்று வாழவைக்கும்.

அபிராமி அருளைப் பெற்றவர்க்குக் காலத்தால் அழிவில்லை. ஒரு நாளுமில்லை.

திருக்கடையூர் போலவே அந்த எஞ்சிய ஐந்து அபிராமி அன்னை ஆலயங்களும் பெரும் சிறப்புமிக்கவை, தனி வரலாறும் பெரிய சாட்சிகளும் அற்புதங்களும் கொண்டவை, அவை ஒவ்வொன்றையும் இந்த ஷியாமளா நவராத்திரி காலங்களில் காணலாம் , திருக்கடையூர் ஆலயம் எல்லோரும் அறிந்த ஒன்று என்பதாலும் நிறையமுறை பார்த்துவிட்டதாலும் மீதமுள்ள ஐந்து ஆலயங்களை இந்த நவராத்திரி கால வழிபாடாக தரிசிக்கலாம்.