அபிராமி ஆலயங்கள் 01 : திருமலைராயன் பட்டணம் அபிராமி ஆலயம்.
அபிராமி ஆலயங்கள் 01 : திருமலைராயன் பட்டணம் அபிராமி ஆலயம்.
அபிராமி அன்னை ஆலயங்களில் முதல் தலம் இது. சோழநாட்டின் மிக முக்கிய ஆலயமான இவ்வாலயம் நாகப்பட்டினம் காரைக்கால் இடையே அமைந்துள்ளது, யுகங்களைக் கடந்த இந்த ஆலயம் வேத காலம் எனும் ரிஷிகள் மாபெரும் சக்தியுடன் வலம் வந்த காலத்தில் இருந்து துவங்குகின்றது.
சோழவளநாட்டின் அன்றைய வனப்பகுதியில் இந்த ஆலயம் லிங்க வழிபாடாக துவங்கிற்று, அகத்தியர் போன்ற மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்ட ஆலயம் இது.
அகத்தியர் இங்கு முதலில் தவமிருந்து இந்த லிங்கத்தையும் அம்மை அபிராமியினையும் ஸ்தாபித்து வணங்கினார், அப்படியே அவர் நவக்கிரகங்களையும் இங்கு ஸ்தாபித்து கிரக பலன்களை மாற்றும் சக்தியினை நிறுத்தினார், இங்கு எல்லாக் கிரக தோஷமும் மாறும்.
மிருகண்ட முனிவர் மானஸ்வி தம்பதியர் வழிபட்ட சிவாலயத்தில் இதுவும் ஒன்று.
தான் 16 வயதில் எமனால் பிடிக்கப்படுவோம், சிவனை சரணடைந்தால் அதிலிருந்து தப்பலாம் என்பதை முழுக்க அறிந்த மிருகண்ட முனிவரின் மகன் மார்கண்டேயன் வழிபட்ட முக்கிய தலம் இது, முதல் தலமும் இதுதான்.
இங்கு தொழுது இதர அபிராமி தேவி ஆலயங்களைத் தொழுதே அவன் திருக்கடையூரை அடைந்து எமனை வென்றான், மார்கண்டேயனின் துவக்க வழிபாடு இங்கேதான் நடந்தது.
சோழி என்றால் காவல் எனப் பொருள், காப்பு என்றும் கேடயம் என்றும், காக்கும் கவசம் என்றும் பொருள், அப்படித் தன்னை நம்பும் பக்தர்களைக் காக்கும் சிவன் சோழீஸ்வரர் என்றானார்.
இந்த ஆலயம் மெல்ல மெல்ல வளர்ந்தது. அப்பக்கம் அபிராமிக்கு முக்கிய ஆலயமுமானது. ஆனால், பின்னாளைய சமண பௌத்த காலங்களில் முழுக்க அடையாளமின்றிப் போனது என்றாலும் சோழவம்சத்தின் எழுச்சிக்குப் பின் அந்தச் சிவன் சோழீஸ்வரர் அதுவும் ராஜசோழீஸ்வரர் என்றும் அன்னை அபிராமி தேவி என்றும் மீண்டது சோழர்கள் இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணிகள் ஏராளம்.
இந்த ஆலயத்தின் மிக முக்கிய அடையாளம் சொர்ண பைரவர் சொர்ண தேவி விக்ரகம். இது காசியில் இருந்து வந்தது. ராமதேவர் எனும் மகா சித்தர் காசியில் இதனை வைத்து வழிபட்டு வந்தார், அவரிடம் முக்தி தேடி வந்த சீடருக்கு இந்த விக்ரஹங்களைக் கொடுத்தார் அந்தச் சீடர் சோழநாட்டுக்காரர்.
அவரின் கனவில் வந்த சிவன் இதனைத் தான் சொல்லும் கோவிலில் ஸ்தாபனம் செய்யும்படி தெற்கு நோக்கி அனுப்பினார், அந்த விக்ரஹங்களுடன் அவர் இப்பக்கம் வரும்போது சிவன் அவரை இக்கோவில் பக்கம் இழுத்துக் கொண்டு அந்தக் காசி சொர்ணரைவரையும், சொர்ண தேவியினையும் இங்கே ஸ்தாபிக்க வைத்தார். அந்தச் சம்பவம் சிலிர்ப்பானது.
அக்காலகட்டத்தில் அந்த 14ஆம் நூற்றாண்டில் இங்கு நாயக்க மன்னர்கள் பிரதிநிதியாக திருமலைராயன் என்பவன் இருந்தான், நாயக்கர்கள் தீவிர வைஷ்ணவர்கள் என்பதால் திருமலை எனும் பெயர் அவர்களிடம் நிறைய உண்டு, அப்படி ஒரு திருமலைராயன் இப்பக்கம் ஆண்டு வந்தான்.
அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்குத் தகப்பனுக்குரிய பிரம்மஹத்தி ஒட்டிக்கொண்டு பெரும் தொல்லை கொடுத்தது, எந்த வழிபாட்டிலும் எந்தப் பூஜையிலும் அது சரியாகவில்லை.
ராம்தேவரின் சீடர் சொர்ண பைரவ விக்ரஹங்களுடன் அப்பக்கம் வந்தபோது இந்த மன்னரின் துயரத்தை அறிந்து அவர் மகளின் சாபத்தை சிவனருளால் நீக்கினார், மன்னன் திருமலைராயன் மிக மகிழ்ந்து அவருக்கு என்ன செய்யவெண்டும் என நெகிழ்ந்து கேட்டான்.
அந்தச் சிவனடியார் தனக்காக ஏதும் கேட்காமல் சிவனை நோக்கி “எம்பெருமானே, இம்மன்னன் மூலம் உம்பெருமை பெருகட்டும்” எனச் சிவனிடமே பொறுப்பை கொடுத்தார், சிவனோ “அம்மன்னனை சோழீஸ்வரர் கோவிலுக்குத் திருப்பணி செய்யச் சொல்” என உத்தரவிட்டார்.
அடியார் அவ்வண்ணமே சொல்ல, மன்னன் திருமலைராயன் உடனே அங்கு விரைந்தான். அங்கே முகாமிட்டு திருப்பணிகளைத் துவக்கினான், காசியில் இருந்து வந்த சொர்ணபைரவர் அங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டார்.
அந்தத் தலம் காவேரியில் இருந்து தள்ளியிருந்தது, மன்னன் திருலைராயன் இந்தக் கோவிலுக்காக இரு ஆறுகளையே காவேரியின் கிளைகளாக உருவாக்கினான். ஒரு ஆற்றுக்கு திருமலையாராயன் என தன் பெயரையும், இன்னொரு ஆற்றுக்கு பிறையுடையாள் என தன் மனைவி பெயரையும் இட்டான்.
இந்த இரு ஆறுகளும் இன்றும் திருமலைராயன், ஆறு பிறையுடயாள் ஆறு எனும் பெயரில் ஓடிக்கொண்டிருக்க நடுவில் இந்தத் தலம் உள்ளது, மன்னன் இக்கோவிலுக்குப் பெரும் திருப்பணி செய்து சோழீங்கேஸ்வரம் என இந்த ஊரைக் கொண்டாடினான், அதைவிடப் பெரிதாக குளம் தீர்த்தம் என வெட்டியவன் 108 கோவில்களை அப்பக்கம் இதன் துணை கோவிலாக கட்டி வைத்தான்.
இவனிடம்தான் அதிசிறந்த புலவர் காளமேகம் வந்து சேர்ந்தார், அவர் அவனைத் தன் அரண்மனை புலவனாக வைத்துக் கொண்டான், காளமேக புலவரின் எல்லாப் படைப்புக்களும் இம்மன்னனால் வந்தவை.
இம்மன்னன் அபிராமி அன்னையின் முதல் தலமான இத்தலத்தை விரும்பி வழிபட்டான், அபிராமி அவனின் விருப்ப தெய்வமானாள், அம்பிகைக்கு நகையும் சொத்தும் எழுதிவைத்து எல்லா விழாக்களும் பெரிதாக நடக்க அவன் ஏற்பாடு செய்தான்.
அபிராமி எனும் ராஜ சியாமளை அரசனை உருவாக்குபவள், அரனால் வணங்கி கொண்டாடப்படுபவள், தன்னை அண்டியோர்க்கு ராஜயோகம் தருபவள் என்பது அங்கே தெளிவாயிற்று.
அன்னை அந்தத் திருமலை ராயனை முழுக்க ஆட்கொண்டாள். அவன் அவளின் முழுப் பக்தனாகவே மாறிப்போனான், அவன் தலைநகரமான தஞ்சையினை விட்டு இந்தக் கோவில் இருக்கும் இடத்தையே திருமலைராயன் பட்டணம் என மாற்றி இதனை தேசத்தின் தலைநகராக்கி அமர்ந்து கொண்டு ஆட்சி செலுத்தினான்.
இப்படித் தன்னையே கதி என வந்த அந்தப் பக்தனுக்கு இன்னொரு அதிசயத்தை செய்தாள் அபிராமி. அது ஆயிரங்காளியாக அவள் அங்கு வந்த வரலாறாயிற்று.
வங்கப்பகுதியினை ஆண்ட மன்னன் ஒருவன் பெரும் காளி பக்தனாய் இருந்தான், அவளுக்கு எதைப் படைத்தாலும் ஆயிரம் எனும் எண்ணிக்கையிலே படைத்தான், வெற்றிலை பாக்கு முதல் பழம் வரை எது என்றாலும் ஆயிரம் எண்ணிக்கை வைத்து வணங்கினான், அவன் பக்தி அப்படி இருந்தது.
இந்துக்கள் மரபில் ஆயிரம் என்பது ஒரு முழுமையினை குறிப்பது, இதனால் எல்லாமே அன்னைக்கு ஆயிரம் எனப் படைத்து வந்த மன்னன் பெரும் நிறைவினைக் கொண்டிருந்தான், அன்னையும் அவனையும் அவன் தேசத்தையும் நிரம்ப ஆசீர்வதித்தாள்.
அவன் தன் இறுதிகாலம் நெருங்கியபோது தனக்குப் பின் அன்னைக்கு யார் பூஜை செய்வது என அவளிடமே கேட்டான், எப்போதும் தெய்வங்கள்தான் பக்தர்களைத் தேர்ந்து கொள்ளும் என்பதால் , “மன்னா அதைப்பற்றி நீ கவலை கொள்ள வேண்டாம், நான் சொன்னபடி ஒரு ஓலை எழுதி நீர் புகாத பேழையில் என்னை வைத்து கடலில் இடு, நான் எனக்கான இடத்தை அடைகின்றேன்” என்றாள்.
அவள் உத்தரவுக்குப் பணிந்த மன்னன் அப்படியே அந்தக் காளியினை அவள் சொன்னபடி எழுதிய ஓலையுடன் பேழையில் வைத்து வங்க கடலில் இட்டான்.
அந்தப் பேழையும், மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன்பட்டிணம் வந்தது. ஆனால் யாராலும் பேழையினை எடுக்கவும் முடியவில்லை திறக்கவும் முடியவில்லை, எல்லோருக்கும் பெரும் அச்சம் ஆட்கொண்டது.
அங்கு வசித்தசெங்குந்த முதலியார் மரபான சிவநேசர் ஒருவரின் கனவில் அன்னை தோன்றி தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்துப் பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.
அந்த சிவநேசர் கனவினைக் கண்டு மன்னனிடம் சொன்னார், மன்னன் திருமலைராயனும் மகளோடும் மனைவியோடும் விரைந்து வந்தான், ஆற்றோரம் மிதந்த அப்பெட்டி சிவநேசர் கைகளில் குழந்தையாக ஒட்டிக் கொண்டது.
அவர் அந்தப் பெட்டியினை எடுத்து மெல்ல திறக்கும் போது உள்ளே அன்னையின் விக்ரஹம் இருந்தது, எல்லோரும் மெய்சிலிர்த்து பணிந்தார்கள். மன்னன் குடும்பத்தோடு வீழ்ந்து பணிந்தான். அந்தச் சிலை அருகே ஒரு ஓலை இருந்தது.
“அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்
இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்,
அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்
எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்.
ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை
திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!”
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அவளுக்கு ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை வைத்து வணங்கினால் எல்லா வளமும் ஆயிரம் மடங்கு திரும்பி வரும் என அதற்குப் பொருளும் உரைத்தார்கள்.
மன்னன் பெரும் பூஜை செய்து மேள தாளங்களுடன் அன்னையினை இந்த அபிராமி ஆலயம் கொண்டு சென்றான், ஆனால் அன்னை தனக்குத் தனியே ஒரு ஆலயம் எழுப்ப மன்னனிடம் நேரடியாகச் சொல்ல திருமலைராயன் ஆயிரம் காளி ஆலயம் எனத் தனியே ஒன்றை கட்ட தீர்மானித்தான்.
அவள் சொன்னபடியே ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை எல்லாமே ஆயிரம் எனும்படி அங்குக் காணிக்கையாக்கப்பட்டது, எல்லாமே ஆயிரம் எனும்படி மன்னன் பார்த்துக் கொண்டான்.
ஒருமுறை ஆயிரம் அடியார்களை அன்னைக்கு நியமிக்கின்றேன் என அவன் அறிவித்தான். 999 அடியார்கள் கிடைத்தார்கள், எங்குத் தேடியும் ஒரு அடியார் கிடைக்கவே இல்லை, கடைசியாக மன்னன் தானே அங்கு ஒரு அடியாராக இருக்கும்படி முடி இறக்கி வைத்து, சென்று கலந்து கொண்டான், அன்னை பெரும் சிரிப்புடன் அவனுக்குத் தரிசனமாகி ஆசிகொடுத்து மறைந்தாள்.
அந்தத் திருமலை ராயனுக்கும் அபிராமி அன்னைக்குமான பந்தம் அப்படி இருந்தது, எல்லா விழாக்களையும் அவன் அவளுக்குக் கொண்டாடினாலும் பெரும் விழா ஐந்து வருடத்துக்கு ஒருமுறை நடக்கத் தொடங்கிற்று.
அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதைப் படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில்தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறை பட்சத்தில் திங்கட்கிழமை இரவில் அம்மன் இருக்கும் பெட்டியை திறப்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் ஜல் ஜல் என்று கேட்கும்.
அதன் பின்பே பேழை திறக்கப்படும்.
ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும். மலர்ப் பாதங்களில் சிலம்பும், வளைக்கரங்களும், பட்டாடையும் நெற்றியில் திலகமோடு அழகுத் திருமுகத்துடன் காளியன்னை வீர வடிவம் கொள்கிறாள்.
மாதுளம்பூ மேனி கொண்ட அம்மனின் கம்பீரமான தோற்றத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். வீரக்கோலம் பூணுவதாலேயே வீரமாகாளி என்று அழைக்கப்படுகிறாள்.
மறுநாள் செவ்வாய்கிழமையன்று ஒவ்வொரு செங்குந்த குடும்பப் பெண்டிரும் காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானையைப் பெற்று தங்கள் இல்லத்திலிருந்து பொங்கல் பொங்குவதற்கு உண்டான பொருள் யாவும் கொண்டு வந்து மடத்தினில் பொங்கல் வைப்பார்கள். இதனிடையே அன்று மாலை ஆறு மணிக்கு அபிராமி உடனுறை ராஜசோழீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து காளியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருவார்கள். மாலைகள் ஆயிரம், கனிகள் ஆயிரம், தின்பண்டங்கள் ஆயிரம், இளநீர் ஆயிரம், மஞ்சள் ஆயிரம் என எல்லாமும் ஆயிரம், திரளும் மக்களும் ஆயிரமாயிரம்.
அடுத்து புதன், வியாழக் கிழமை இரண்டு நாட்கள், இரவு பகலாக தொடர்ந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் அன்னையை தரிசித்தபடி இருப்பர். அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் விதம் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தபடி இருப்பார்கள்.
வெள்ளிக்கிழமை விடிவதற்குள் அன்னையை மீண்டும் பெட்டிக்குள் வைத்து விடுவார்கள். அடுத்த ஐந்து ஆண்டு கழித்து அன்னை வெளிவந்து நான்கு நாட்கள் இதே அற்புதத்தை கொலுசு ஒலியுடன் துவங்குவாள்.
இவ்வாறு அன்னை இன்றும் அங்கு ராஜசியாமளவாக அருள் பாலிக்கின்றாள், அங்கு வேண்டும் பக்தர்களின் வேண்டுதலை அவள் நிறைவேற்றுவதால் பக்தர்கள் அதே ஆயிரம் காணிக்கைகளை வைத்து அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்றார்கள்.
அபிராமி ஆலயத்தின் துணை ஆலயம் இந்த ஆயிரம் காளி ஆலயம்.
திருமலைராயன் பட்டணத்தின் இவ்வாலயம் மூலாதார சக்கரத்தினை துலக்கும், இந்த மூலாதாரத்தில் உறங்கிச் சுருண்டு கிடக்கும் சக்தியினை மூச்சுபயிற்சி மூலமும், ஒம் எனும் ஓரெழுத்து மந்திரம் மூலமும் துலக்கி மேலேற்றலாம்.
மூலாதாரம் என்பது என்ன என்பதை யோக சாஸ்திரம் சொல்கின்றது.
“நாபிக்கு கீழே பன்னிரெண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டீசன் குடி இருந்தானே
மூலத்திரு விரல் மேலுக்கு முன்னின்ற
பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலியுள்லெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே”
என உடலில் மூலாதார சக்கரம் இருக்கும் இடத்தை தெளிவாகச் சொல்கின்றார் திருமூலர்.
தொப்புளுக்கு நான்கு விரல்கடை உள்ளேயும் அங்கு இருந்து 12 விரல் கடை பருமன் கீழேயும் உள்ள இடத்தில் மூலாதாரம் உள்ளது.
இந்த மூலாதாரத்தில் உறங்கி சுருண்டு கிடக்கும் சக்தியினை மூச்சுபயிற்சி மூலமும், ஒம் எனும் ஓரெழுத்து மந்திரம் மூலமும் துலக்கி மேலேற்றலாம். இந்த சக்கரம் யோகம், தியானம், முச்சுப்பயிற்சி எனத் துலங்கக் கூடியது, அப்படிக் கடும் பயிற்சிகளால் வரக்கூடிய பலன் இங்குத் தானாக கிடைக்கும், அன்னை இந்த வரத்தை அருள்வாள்.
இதுதான் ஞானத்தின் தொடக்கமாகவும் அமையும், இது சரியாக அமையாவிட்டால் அடிவயிறு சார்ந்த பிரச்சினையாகும். அப்படியே மனம்சார்ந்த பாதிப்பும் உண்டு.
இப்படியான நிலையில் உடலாலும் மனதாலும் ஒருவன் பாதிக்கபாபட்டால் அவனால் தன் கர்மாவினை உணரமுடியாது, செய்யமுடியாது, அவன் பிறப்பின் நோக்கமே பாழ்பட்டு போகும்.
இதனைத் தங்கள் யோக சக்தியால் சரிசெய்து இந்தப் பாதிப்பில் இருந்து தப்பி தாங்கள் யார் தங்கள் கர்மா எது என உணர்ந்து தெளிந்து இறைபாதையில் சென்றவர்கள் சித்தர்கள் ஞானியர்.
அந்த ஆலயம் சென்று பணிந்தால் மூலாதாரம் துலங்கும், உங்கள் கர்மா எது எனப் புரியும். உடல்சார்ந்த மனம்சார்ந்த சிக்கெல்லாம் தீரும்.
நீங்கள் யாராகவும் இருங்கள், எந்நிலையிலும் இருங்கள், உடலாலும் மனதாலும் மிக மிக மோசமான நிலையில் இருங்கள் அல்லது குழப்பமான் நிலையில் உள்ளவராக இருங்கள். இந்தச் சந்நதியில் வணங்கினால் உங்கள் மூலாதார சக்கரம் துலங்கும்,
அன்னையின் அருள் அதைத் தரும்.
அன்னையின் சந்நிதியில் விழுந்து வணங்கினால் உங்கள் உடல் தரையில் தண்டனிட்டு வணங்கினால் மூலாதாரத்தில் அந்தப் பகவானின் கருணை விழும், அங்குச் சூழ்ந்திருக்கும் பெரும் சக்தி ஈர்த்துக் குவிக்கப்பட்ட சகதி உங்கள் மூலாதார சக்கரத்தையும் தொடும்.
அந்த நொடிமுதல் உங்கள் வாழ்வு மாறும்.
அந்த ஆலயம் உங்கள் கர்மாவினை உணரவைக்கும், பிறப்பின் நோக்கத்தை அறியவைக்கும், செய்யும் காரியமெல்லாம் துலங்க வைக்கும், இன்னும் மனதளவில் நல்ல தெளிவும் செயலில் சுத்தமும் உடலில் ஆரோக்கியமும் மேம்படுத்திக் கொடுக்கும்.
அக்காலத்தில் எப்படி மக்கள் அவ்வளவு ஞானமாக வாழ்ந்தார்கள், கொடிய நோயற்று வாழ்ந்தார்கள், பெரும் பெரும் சாதனைகளை எளிதாகச் செய்து வாழ்ந்தார்கள் என்றால் இப்படித்தான் ஆலயங்களில் தெளிவடைந்தார்கள்.
ஆலயங்கள் எக்காலமும் சக்திமையங்கள், அந்த ஆலயங்கள் அந்நியப்படையெடுப்பிலும் ஆட்சியிலும் பராமரிப்பின்றி போனதே இந்தச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பெரும் காரணம்.
மறுபடி அதன் சிறப்புக்களை அறிந்து சரியான முறையான நம்பிக்கையுடன் அங்கே முன்னோர்கள் காட்டிய வழியில் பெறவேண்டிய பிரபஞ்ச சக்திகளைப் பெற்றுக்கொண்டால் வாழ்வு செழிக்கும், உடலும் நலமும் பரிபூரணமாகும்.
முக்தி அடைய யோக சித்தி வேண்டும், யோகம் சித்தியாக சக்கரங்கள் துலங்க வேண்டும், அதற்கு மூல ஆதாரம் முதலில் துலங்க வேண்டும்.
அதைத் துலக்கி தரும் ஆலயம் இந்த ஆலயம், அதுதான் மார்கண்டேயர் முதல் எல்லா ஞானியருக்கும் அச்சக்கரத்தை துவக்கத் செய்தது, அபிராமி பட்டருக்கு மூல சக்கரத்தை துலங்க வைத்த ஆலயமும் அதுவே.
நாகப்பட்டினம், காரைக்கால் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை காணத் தவறாதீர்கள், திருக்கடையூர் ஆலயம் செல்லுமுன் செல்லவேண்டிய முதல் தலமும் இதுதான், அங்குச் சென்று வணங்குங்கள் அன்னை எல்லா வரங்களையும் அருளி மூலாதாரத்தையும் துலக்கித் தருவாள்.
ராஜ கோபுரத்தை கடந்தால் அங்கு உள்ளே நுழைந்ததும் விநாயகரை வணங்குகிறோம். பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி ஆகியவையும் அமைந்துள்ளன. குரு தட்சிணாமூர்த்தி, சரவண சுப்பிரமணியர், கெஜலட்சுமி, பிரம்மதேவர், துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், நவக்கிரக மூர்த்திகள், கால பைரவர் ஆகியோர் இங்கு உண்டு.
அடுத்து வசந்த மண்டபத்தின் இடதுபுறம் நர்த்தன விநாயகர். வலது புறம் சனீஸ்வரர். உள்புறம் ஸ்ரீராஜசோளீஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்மனும் அருள் புரிகிறார்கள். இவர்களுடன் நடராஜர், சிவகாமி, தியாகராஜ சுவாமி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணிய சுவாமி, பிச்சாண்டவர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களும் உண்டு, அவர்களை நம்பி வழிபட்டு நில்லுங்கள்.
இன்னும் 63 நாயன்மார் சந்நதிகளும் அவர்களுக்கான குருபூஜைகளும் இங்கு விசேஷம்.
இங்குப் பல விநாயகர் சந்நதிகளும் ஆலயத்தைச் சுற்றி உண்டு, விநாயகர் மூலாதாரத்தின் தெய்வம் என்பதால் இங்கு அவருக்கான வழிபாடுகள் அதிகம்.
அப்படியே அந்த ஆயிரம்காளி அன்னையினையும் வணங்கி ஆயிரம் காணிக்கை வைத்து வணங்கி வாருங்கள். எல்லா வேண்டுதலும் கைகூடும்.
நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் இவ்வாலயம் தரும், கண் சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் தலம், தம்பதியர் நீண்ட வாழ்வை வாழ வரம் தரும் ஆலயமும் இதுதான், இங்கும் அறுபதாம் கல்யாணங்கள் அதிகம் நடப்பதை இப்போதும் காண்பதும் வழமை.
சுந்தர பெருமான் வழிபட்டதால் இது தேவார வைப்பு தலமாயிற்று, ஆட்டுகிடா மேல் அமர்ந்து முருகப்பெருமான் போரிடும் கந்த சஷ்டி இங்கு விசேஷம்.
சிவராத்திரி அன்று அதிகாலை நடக்கும் சுவாமி ஊர்வலம் இங்கு விசேஷம், அபிராமி அன்னையின் தை மாத வழிபாடு இன்னும் மகா விசேஷம்.
அபிராமி பட்டரின் வம்சத்தில் வந்த குழந்தை ஒன்றுக்குக் கண் தெரியா நிலை வந்தபோது அவள் தன் தீர்த்த துளியால் அக்குழந்தைக்குப் பார்வை கொடுத்தாள், இது கண்பார்வை தரும் தலம்.
அன்னை ஆயிரம்காளி என்பவள் நிறைவைத் தருவாள், முழு நிம்மதி தருவாள், எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்து முழுமை தருவாள், நிம்மதி எனும் முக்தியினைத் தருவாள்.
மறக்காமல் திருமலைராயன் பட்டணம் சென்று வாருங்கள், அவள் எல்லா ஐஸ்வர்யமும் வரமும் தருவாள், ஆயிரம் மடங்கு நிம்மதியும் தருவாள். இது சத்தியம்.