அபிராமி ஆலயங்கள் 03 : கொழையூர் அகத்தீஸ்வரர் ஆலயம்.
அபிராமி ஆலயங்கள் 03 : கொழையூர் அகத்தீஸ்வரர் ஆலயம்.
“திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே”
இப்பாடல் அப்பர் சுவாமிகளால் பாடப்பட்டது, இங்குக் கூழையூர் கூடல் தலம் எனச் சொல்லப்படும் தலமே இந்தக் கொழையூர் அகத்திஸ்வரர் ஆலயம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்திருக்கின்றது இந்த அபிராமி ஆலயம், தேவார வைப்பு தலமான இந்த ஆலயத்தின் வரலாறு அகத்திய மாமுனியிடம் இருந்து தொடங்குகின்றது.
அகத்திய பெருமான் ஸ்தாபித்து வழிபட்ட சிவலிங்கங்கள் 163, அதில் இந்தச் சிவலிங்கமும் ஒன்று. அந்த லிங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காரணம் அகத்தியமுனிவர் வாதாபி எனும் அசுரனை வதம் செய்த சம்பவம்.
அந்தப் புராணம் எல்லோரும் அறிந்தது, இவலவன் எனும் அசுரன் தன் தம்பி வாதாபி என்பவனோடு சேர்ந்து தவம் பல இயற்றி இந்திரனின் இடத்தை அடைய விரும்பினான், யாகங்களின் இந்திரனுக்குரிய அவிர்பாகத்தை தங்களுக்குத் தரும்படி மிரட்டினான். ஆனால், யாகம் செய்யும் அந்தணர்களும் ரிஷிகளும் அதற்கு மறுத்தார்கள்.
இதனால் யாகம் செய்பவர்களை ஒழிக்கவும், யாகத்தால் பலமடையும் தேவர்களை ஒடுக்கவும் ஒரு வழியினை யோசித்தார்கள், மிகக் கடுமையாக தவமிருந்து பெரிய பெரிய வரங்களை வாங்கினார்கள்.
அவர்கள் நோக்கம் யாகம் செய்வோரைக் கொல்வது. அப்படிக் கொல்வதால் அந்தணர்களைப் பழிவாங்கியது போலாகும், அவர்கள் இல்லாமல் யாகமும் தடைபடும்.
இவர்கள் யாகம் செய்யும் அந்தணர்களை நேரடியாக கொல்லாமல் மறைமுகமாக கொல்ல முனைந்தார்கள். வெளியில் இருந்து அந்தணர்களை, ரிஷிகளைத் தாக்கி கொல்லாமல் வஞ்சகமாக உள்ளே இருந்து கொல்லும் தலைகீழ் வித்தைக்குச் சென்றார்கள்.
அதாவது, ரிஷிகளோ அந்தணர்களோ சாபமிடாதபடி வெகு விரைவாக அவர்களே அறியாமல் அவர்களைக் கொல்ல ஒரு தந்திரம் செய்தார்கள்.
பெரும் வரம் பெற்ற அவர்கள் பல உருமாறவும், மாறிய உருவம் பலவாறு வெட்டப்டடவும், அப்படி வெட்டி அவித்தாலும் எரித்தாலும் மீண்டும் உடல் பாகமெல்லாம் ஒன்று சேர்ந்து அவர்கள் உடலை எடுக்கும்படியாகவும் வரம் வாங்கினார்கள்.
வல்லபனை காய்கறியாக, பழமாக இலவலவன் மாற்றுவன், அப்படி மாற்றிவைத்துவிட்டு ரிஷிகள், அந்தணர் செல்லும் வழியில் காத்திருப்பான், அவர்களைக் கண்டதும் அடியார்களாகிய உங்களை உபசரிக்கவேண்டியது எம் கடமை அதற்கே நான் காத்திருக்கின்றேன் எனச் சொல்லி அவர்களை அன்போடு அழைத்து அவர்கள் கண்முன்னே காய்கறிகளை வெட்டி சமைத்து அல்லது பழம் வெட்டி கொடுத்து உண்ண செய்து அருகில் அமர்ந்திருப்பான்.
அவர்கள் உண்டதும் “தம்பி வாதாபி வெளியே வா” என்பான். அவர்கள் பெற்ற வரத்தின்படி வாதாபி அந்த அந்தணர்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவருவான், அந்தணர் செத்துப்போவார், இப்படி ஏகப்பட்டோரை வதைத்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
இவர்கள் அட்டகாசத்தை அறிந்த அகத்திய பெருமான் அவர்கள் இருக்குமிடம் சென்றார், அவர்கள் அகத்தியரையும் கொல்ல எண்ணினர், வாதாபி மாங்கனியாக மாறினான், இலவலவன் அதை அகத்தியருக்கு உண்ணக் கொடுத்தான், அகத்தியரும் புன்னகைத்தபடியே உண்டுவிட்டு தன் கமண்டலல்த்தில் இருந்து கொஞ்சம் நீர் எடுத்து அருந்தினார்.
இலவலவன் வழக்கம் போல் “வாதாபி வெளியே வா” என்றான். ஆனால் அகத்தியரோ “சிவாய நம” என்றபடி தன்வயிற்றைத் தடவினார், அந்த அசுரனின் பலம் அப்போது அவனைக் கைவிட்டது. அவனால் பழைய உருவுக்கு மாறமுடியவில்லை. அகத்தியரிடம் இவர்கள் வித்தை பலிக்கவில்லை, அவனை வயிற்றிலே அழித்து எரித்துப்போட்டார் அகத்தியர்.
தன் தம்பி இப்படி அகத்தியர் வயிற்றில் அகப்பட்டு இறந்ததைக் கண்டு பெரும் கோபம் கொண்டு அவரைத் தாக்க ஒரடி எடுத்து வைத்தான் இலவலவன், அகத்தியரோ தன் கண்ணில் இருந்து தீபொறிகள் எழச் செய்து அவனையும் அழித்துப் போட்டார்.
இப்படி இருவரை அவர் அழித்துப்போட்டு தேவர்களையும் யாகம் செய்வோரையும் காத்தார், ஆனால் அவர்கள் சிவபக்தர்கள் என்பதால் அகத்தியருகும் தோஷம் ஒட்டிக்கொண்டது.
அந்த தோஷத்தைப் போக்க தேரெழுந்தூரில் உள்ள வேத புரீஸ்வரர் ஆலயத்துக்கு அவர் செல்ல விரும்பினார், அப்படிச் செல்லும் வழியில் அவர் பெற்ற தோஷம் காரணமாக பெரிய இன்னலுக்கு ஆளானார், அந்த இன்னல் போக சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார், அவரின் இன்னல் தீர்ந்தது. அகத்தியரால் வழிபடப்பட்ட ஈசன் அகத்தீஸ்வரர் என்றானார்.
அகத்தியர் சிவபக்தர் மட்டுமல்ல அன்னையின் அதிதீவிர பக்தர். இதனால் தனக்கு இன்னல் போக்கி தோஷம் கழித்த அன்னைக்கு அபிராமி அன்னை எனப் பெயரிட்டு அம்மனையும் வழிபட்டார், அதிலிருந்து இந்தத் தலத்தின் வரலாறு தொடங்குகின்றது.
அகத்திய பெருமானின் தோஷம் இங்கே நீங்கிற்று, அவரின் உயிரைக் காத்த இந்த ஆலயத்தில்தான் மார்கண்டேயரும் வழிபட்டார், இன்னும் பல ரிஷிகளும் பெரும் தவசிகளும் வழிபட்டனர்.
வாதாபியினை அகத்தியர் கூழாக்கிய, தன் வயிற்றில் கூழாக்கி அழித்து வழிபட்ட தலம் என்பதால் கூழையூர் என்றாயிற்று, பின்னாளில் அது கொழையூர் என மருவிற்று.
இந்தத் தலம் மணிப்பூரகம் சக்கரத்தைத் துலக்கி தரும் சக்தி கொண்டது என்பதால் இந்த ஆலயத்துக்குக் கொழையூர் மணிப்பூரக ஆலயம் என்றே இன்னொரு பெயர் உண்டு.
இந்தச் சக்கரம் சுவாதிஷ்டான சக்கரத்தில் இருந்து ஆறு விரற்கடை உயரத்தில் அமைந்துள்ளது, இச்சக்கரம் மணிபோல் ஒளிரும் தன்மையுடையது என்பதால் இதனை மணிப்பூரகம் என்றார்கள் சித்தர்கள்.
நடுவில் சதுரம், அதைச் சுற்றி சக்கரம் என்ற வட்டம், சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை , வட்டத்தைச் சுற்றி பத்து தாமரை இதழ்கள் வடிவம் கொண்டது இது என்பது சித்தர்கள் சொன்னது.
அதை ஒரு ஸ்லோகமும் சொல்கின்றது,
“தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்”
தாயே, நீலமேக ரூபமான, மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன். அந்த மேகமானது, மணிப்பூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது. பற்பலவிதமான ரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களைத் தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது எனத் தன் சௌந்தர்ய லஹரியில் பாடுகின்றார் ஆதிசங்கரர்.
இந்த மணிப்பூரக சக்கரம்தான் மானிட சுபாவ உணர்ச்சிகளுக்கு ஆதாரமானது. அதாவது பந்தபாசம், நியாயம், அநியாயம் , சுயநலம், பொதுநலம் என எல்லா உணர்வுகளும் இங்குதான் தீர்மானிக்கப்படும்.
அதாவது, மாயைகள் இருக்குமிடம் உதித்து ஆடும் இடம் இதுதான். ஆத்மாவினைச் சிறைபிடிக்கும் உணர்ச்சிகள் வரும் இடமும் இதுதான்.
இந்த மணிப்பூரகம் சரியாக இருந்தால் மன உறுதி, விடா முயற்சி, தைரியம், புதுப்புது படைப்புச் சிந்தனைகள், புத்தாக்கச் சிந்தனைகள், எதற்கும் கலங்காத நிலை ஆகியது இங்கேதான் உதிக்கும்.
இந்தச் சக்கரத்தைச் சூரிய மையம் எனவும் அழைப்பார்கள், சூரியனுக்குரியது என்றால் அக்னி தத்துவம் என்றாகும்.
இந்தச் சக்கரம் வயிற்றில் இருப்பதை அவதானிக்கலாம், அவ்வகையில் ஒரு நெருப்புத்தான் உணவை செரிக்கவைக்கும், உணர்வுகளில் வயிறு எரிவதைச் சொல்லும். அவ்வகையில் இது வெப்பம் சார்ந்த சக்கரம்.
வயிற்றிலிருந்துதான் உணவு செரிக்கப்பட்டு சக்தி உடலெல்லாம் செல்வது என்பது உடலியல் அமைப்பு, அதேபோல இங்கிருந்துதான் நல்ல சக்திகள் உருவாகி நல்ல நாடிகள் உருவாகி சிந்தனைகளை வலுப்படுத்துகின்றன என்பது யோக சூட்சுமம்.
இதுதான் தன் கர்மத்தை தன் விதியினை நிர்ணயிக்கும் சக்கரம். இந்தச் சக்கரம் துலங்கியோர் தங்கள் கர்மத்தை உணர்வார்கள், விதியினை உணர்வார்கள்.
இந்தச் சக்கரம் துலங்கியவருக்குக் கர்மம் துலங்கும், அந்தப் பிறப்பின் நோக்கத்துக்குச் செல்லும் வழிகள் துலங்கும். அதை நோக்கி இழுத்துச் செல்லும்.
ஆழ கவனித்தால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது தொப்புள் கொடிதான் குழந்தையின் தொடர்பாகின்றது. இந்தத் தொப்புள் கொடி இருக்குமிடம்தான் இந்தச் சக்கரமும் அமையும்.
அவ்வகையில் கர்ம வினை, குலவழி கர்மம் எல்லாம் இங்கேதான் பதிவு செய்யப்படுகின்றன.
“உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை” எனத் திருமூலர் இதனைத்தான் பாடுகின்றார்.
இந்தச் சக்கரத்தைத் துலங்க வைக்கும் தலம் இவ்வாலயம், மணிப்பூரக சக்கரம் துலங்கும் போது கர்மத்தை உணர்ந்து அதைச் செய்யும் சரியான வழியும் நன்மை தீமை அறிந்த தன்மையும் உருவாகும், இச்சக்கரம் துலங்கினால் மாய தீய எண்ணமெல்லாம் ஒழிந்து தெய்வ சிந்தனை, தெய்வத்தை நோக்கிய வழியும் தேடலும் உயர்ந்து ஓங்கும்.
இப்போது அகத்தியர் வாதாபியினை வயிற்றில் அழித்த கதையினை இங்கே பொருத்திப் பாருங்கள். மணிப்பூரக தத்துவ தாத்பரியமும் அகத்தியர் வாதாபியினை அழித்த காட்சியின் ஞான நாடகமும் புரியும்.
மாயை இரு பிரிவாக இயங்குகின்றது. அது எங்கும் நிரம்பியிருந்தாலும் மானுட உடலிலும் புகுந்து மறைந்திருக்கின்றது.
உடலின் உள்ளே மனதில் இருக்கும் மாயை வெளியில் இருக்கும் மாயையுடன் தொடர்பு கொண்டு இணைய முயல்கின்றது, வாதாபி உடலுக்குள் சென்றான் என்பது உள்ளே மணிப்பூரக சக்கரத்தில் மானுட எண்ணங்களை மாயை தூண்டுகின்றது என்பதாகவும், வயிற்றை கிழித்து அவன் வெளிவந்தான் என்பது மாயை மானிட ஆத்மாவினை லௌகீகத்தில் வீழ்த்தி மாயையில் வீழ்த்தி இப்பிறப்பில் ஆத்மா முக்தி அடையாதபடி பிறப்பை அழித்துப் போடுகின்றது என்பதைச் சொல்கின்றது.
ஆத்மா தெய்வ நிலைக்குச் செல்வதைத் தடுத்து மணிப்பூரக சக்கரத்தைக் குழப்பி அதனால் மானுட சிந்தனையினைக் குழப்பி மீண்டும் மாய பிறப்பு சூழலில் தள்ளும் சோதனையினைத்தான் வாதாபி என்றார்கள், அந்த உணர்வுகளை அடக்கி ஆத்மாவினை ஞான நிலை நோக்கிச் செல்வதை அகத்தியர் வாதாபியினை அழித்தார் என்றார்கள்.
இந்த மணிப்பூரக சக்கரத்தை ஆட்டிவைக்கும் உணர்வின் பெயர் வாதாபி, அந்தச் சக்கரம் துலங்கினால் உணர்வுகளெல்லாம் அழியும், அதைத்தான் அகத்தியர் வாழ்வில் நடந்த காட்சி காட்டுகின்றது.
அகத்தியர் தன் வயிற்றிலே வாதாபியினை அழித்தார் என்பது இந்த மணிப்பூரக சக்கரம் துலங்கியதால் மாய உணர்வுகளை, தீய உணர்வுகளை அழித்துப்போட்டான், எந்த மணிபூரக சக்கரத்தில் உணர்வுகள் மாய ஆசையால் ஒருவனை அழிக்க விழையுமோ அதை எரித்தார், மணிப்பூரக சக்கரம் துலங்கியதால் அவருக்கு தீய உணர்வுகள் அவ்வளவும் செயலற்றுப் போயின என்பதைச் சொல்லும் ஞான போதனை.
சாமானியர்கள் உள்ளே மணிப்பூரக சக்கத்தினைத் துலங்கவிடாமல் செய்து அவர்கள் உணர்வை திசைமாற்றி அவர்களை அழித்துப்போடும் மாயையானது அகத்தியரிடம் செல்லுபடியாகவில்லை. மணிப்பூரக சக்கரம் முழுக்கத் துலங்கியிருந்ததால் அவர் மாயையினை எரித்துப்போட்டார் என்பது இந்தக் காட்சியின் தாத்பரியம்.
ஆம், மானிட உணர்வுகளும் ஆசைகளும் சிந்தனையுமே ஒருவனை ஆட்டிவைக்கும் இயக்கும், மானிட ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி அவனை மாய வழியில் பந்தபாச மயக்கத்தில் வீழவிடாமல் தடுத்து மேல் நோக்கி அழைத்துச் செல்லும் நல்ல சிந்தனையினை, பலத்தை, தெளிவினை இந்த மணிப்பூரக சக்கரம் தரும்.
அந்த மணிப்பூரகத்தை துலங்க வைக்கும் ஆலயம் இது.
இங்கு அகத்தியருக்கு மாயை அகன்றது. அப்படியே மார்கண்டேயன் தான் செல்லவேண்டிய இடம் திருக்கடையூர் எனச் சரியாக கர்மம் உணர்ந்தது இங்குதான், இவ்வாலயமே மார்கண்டேயனின் மணிப்பூரகத்தைத் துலக்கி அவன் செல்ல வேண்டிய இடத்துக்கு நல்வழி காட்டி அழைத்துச் சென்றது.
நீங்களும் இங்கு வணங்கினால் உங்கள் கர்மா துலங்கி நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி நல்வழியினை இந்த அன்னை காட்டித் தந்து வழிநடத்துவாள்.
இந்த ஆலயம் சிறியது. கோபுரமில்லாதது. ஆனால், மதில் சுவர் உண்டு, உள்ளே அகத்தியர் வழிபட்ட சிவன் சுயம்புவாய் தரிசனம் தருகின்றார், அன்னை அபிராமி தெற்கு நோக்கி நின்று அருள் பாலிக்கின்றாள்.
இந்தத் தலத்தின் பிதாமகர் அகத்தியருக்குத் தனிச் சந்நிதி உண்டு, அகத்தியர் இருந்தால் முருகப்பெருமானும் இருப்பார் என்பதால் அவரும் தேவியருடன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றார்.
காசி விஸ்வநாதர், அன்ன பூரணி என இருவருக்கும் தனிச் சன்னதி உண்டு, இரட்டை விநாயகர் சந்நதியும் உண்டு, கால பைரவரும் இங்கு அருள்பாலிக்கின்றார்.
இந்த ஆலயத்தினை ஒட்டி வரதராஜபெருமாள் ஆலயமும் உண்டு.
திருக்கடையூருக்கு செல்பவர்கள் இந்த ஆலயத்திலும் மறக்காமல் வணங்குங்கள், இந்த ஆலயம் உங்கள் கர்மத்தைத் துலங்க வைக்கும், நியாய தர்மத்தை அறியவைக்கும். உண்மை எது பொய் எது எனத் துலங்க வைக்கும், அகத்தியரின் மணிப்பூரக சக்கரத்தை துலக்கிய ஆலயம் உங்களுக்கும் அதே அற்புதத்தைச் செய்யும.
எங்குச் செல்வது எனத் தடுமாறி திரிந்த மார்கண்டேயனுக்குத் திருக்கடையூர் நோக்கி நல்வழி காட்டிய இந்த அன்னை உங்களுக்கும் உங்கள் கர்மப்படி எங்குச் செல்ல வேண்டுமோ அந்த இடம் நோக்கிச் செல்ல நல்வழிகாட்டி துணைவருவாள், வாழ்வின் சரியான திசை நோக்கி சரியான தர்ம வழியில் பயணிப்பீர்கள். எல்லாமே உங்களுக்கு மிக நல்லபடியாக அமையும், அன்னை உங்களை நல்வழியில் நடத்தி வாழவைப்பாள். இது சத்தியம்.