அபிராமி ஆலயங்கள் 04 : மேல்மருத்துவகுடி ஐராவதேஸ்வரர் அபிராமி அன்னை ஆலயம்.
அபிராமி ஆலயங்கள் 04 : மேல்மருத்துவகுடி ஐராவதேஸ்வரர் அபிராமி அன்னை ஆலயம்.
அபிராமி அன்னை ஆலயங்களில் நான்காம் ஆலயமான இந்த ஆலயம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது, தேவாரம் வைப்பு தலமான இந்த ஆலயத்தின் வரலாறு இந்திரனிட்ம இருந்து தொடங்குகின்றது.
இந்திரன் பவனிவரும்போது துர்வாசர் சிவனுக்கு அர்ச்சனை செய்த மலர்மாலை ஒன்றைக் கொடுத்தார். அதை மிக ஏளனமாக பெற்றுக்கொண்ட இந்திரன் அதைத் தன் வெள்ளையானை மேல் வைத்தான், அதுவும் அலட்சியமாக அந்த மாலையினை இழுத்துப்போட்டுவிட்டு தன் போக்கில் சென்றது, இதனால் கோபமான துர்வாசர் இந்திரனின் யானைக்குச் சாபமிட்டார்.
அதன்படி அது மிகக் வெண் உருவமும் ஐஸ்வர்யமும் பலமும் இழந்தது, அதன் நிலைகண்டு பதறிய இந்திரன் துர்வாசரிடம் மன்னிப்புக் கோரினான், அவர் இந்தத் தலத்தில் வழிபடச் சொல்லி அனுப்பிவைத்தார்.
அங்கு இந்திரனும் அவன் யானை ஐராவதமும் வழிபட்டு பூஜைகள் பல செய்தனர், ஐராவதத்தின் சாபம் சிவனருளால் தீர்ந்து போனதால் அந்த ஈசன் ஐராவ ஈஸ்வரன் என்றானார், இந்திரனின் யானைக்கு அழகை திரும்ப கொடுத்த அன்னை அபிராமியாக எழுந்தருளினாள்.
இதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்கி இன்னும் பலரால் வழிபடப்பட்டு பெரும் இடம் பெற்றது.
தாரன் எனும் அசுரன் தன் சாபம் நீங்கிய இடம் என்பதால் தாராசுரம் என இதற்குப் பெயர், சந்திரன் தன் சாபம் நீங்க இங்கு வழிபட்டான், இங்குள்ள விநாயகர் அவன் சாபத்தை போக்கினார் அதன் அடையாளம் இன்றும் உண்டு.
இந்த ஆலயம் சோழமன்னர்களால் கொண்டாடப்பட்ட ஆலயம், இதனைக் கற்றளி வடிவில் உருவாக்கியவள் செம்பியன் மாதேவி, இரண்டாம் ராஜராஜ சோழனுக்கு மிகப் பிடித்தமான கோவில் இது, அவன் நிறைய திருப்பணிகள் செய்ததால் இது ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தின் அன்னை அனாதக சக்கரத்தை துலக்குவாள், இந்த ஆலயத்தின் வரம் அது. அப்படியே சந்திரன் தன் சாபம் நீங்கிய தலமும் இது.
விருச்சிக ராசி சந்திரன் பலமிழக்கும் ராசி என்பதால் இங்குச் சந்திரன் சாபம் நீங்கி பலம்பெற்றதை சொல்லும் வகையில் விநாயகரின் துதிக்கை தேள்வடிவில் செதுக்கப்பட்டு விருச்சிக விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.
இதை மனதில் கொள்ளுங்கள், அப்படியே அனாதக சக்கரம் என்றால் என்ன என்பதை அடுத்துப் பார்க்கலாம்.
நான்காம் சக்கரமான அனாகதம் காற்று தத்துவம்.
இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கினால் பிரபஞ்சத்தின் அதிர்வுகளை அலைகளை சரியாக ஈர்க்கலாம், வேதங்கள் ஒலிவடிவானவை, உலகம் ஒரு சப்தத்தில் இயங்குகின்றது என்பதால் பல உலக இயக்கங்களை பிரபஞ்ச ரகசியங்களை இந்தச் சக்கரத்தால் உணரமுடியும்.
இந்தச் சக்கரம் இருதயம் மற்றும் நுரையீரலுக்கு அருகில் அமைந்திருக்கும் சக்தி மையம், சுழுமுனை நாடி இங்கிருந்துதான் உருவாகும்.
இந்தச் சக்கரம் துலங்கினால் அது எல்லையற்ற வகையில் அதன் சக்தியினை வெளிப்படுத்தும், அது பிரபஞ்சம் போல் எல்லையே இல்லாத அளவு நல்ல சக்தியினை வீசும்.
ஆம், இந்தச் சக்கர்ம துலங்கினால் அன்பு, கருணை, தெய்வீகம் என எல்லாமும் எல்லை கடந்து பரவும், நிபந்தனை அற்ற அன்பும் கருணையும் யாரையும் வசப்படுத்தும் பெரும் கருணையும் சாத்வீகமும் தெய்வீகமும் அங்கே குடியேறும்.
எல்லையற்ற மகிழ்ச்சி, நித்திய சந்தோஷம் அவர்களிடத்தில் பெருகிக் கொண்டே இருக்கும், முடிவில்லாமல் வந்து கொண்டே இருக்கும். அப்படியான மகா சக்தியினை இந்தச் சக்கரம் வழங்கும்.
பெரும் கவலை பெரும் சோகம், தீரா வேதனை என்றால் இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கவில்லை எனப் பொருள்.
எப்போதும் மகிழ்ச்சி, எல்லையற்ற அன்பு, முழுத் தெய்வீக திருநிலை என்றால் இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கி ஒளிவிசுகின்றது எனப் பொருள்.
பொதுவாக மனமகிழ்ச்சி, மனக்கவலை, மனவேதனை, மன நிறைவு என மனம் பற்றிச் சொல்வதெல்லாம் இந்தச் சக்கரத்தின் தன்மையன்றி வேறல்ல.
இந்தச் சக்கரம்தான் மனம், இந்தச் சக்கரம்தான் உடல் ஆரோக்கியம் தரும். மன நிம்மதி தரும். இன்னும் முழு அன்பும் அர்ப்பணிப்பும் நிபந்தனையற்ற கருணையும் தரும்.
இந்தப் பூமியில் எல்லோரும் கொண்டிருக்கும் ஒரு விஷயம் அச்சம், பதற்றம், பயம். இது எங்கே வரும் என்றால் மனதில் குறை இருந்தால் மனதில் நிம்மதி இல்லாமல் நிர்பந்தம் இருந்தால் வரும்.
இதைத்தான் இன்றைய மருத்துவ உலகம் மன அழுத்தம் என்கின்றது. இதுதான் பலவித நோய்களுக்குக் காரணமாக அமைகின்றது.
கவலை நிரம்பிய மனம் உடலை பாதிக்கும், இன்றைய மாரடைப்பு முதல் ஏகப்பட்ட நோய்களுக்கு மருத்துவ விஞ்ஞானம் ஆயிரம் காரணங்களைப் புரியாத மொழியில் சொன்னாலும் முதல் காரணம் பழுதடைந்த நிம்மதி, இழந்த பயம் நிறைந்த மனமே.
உதாரணமாக இக்காலகட்டத்தில் யாரும் மனம் விரும்பிய நிறைந்த வாழ்வினை வாழ்வதில்லை, அதனால் அடுத்தவர்மேல் பயம் சமுதாயம் மேல் பயம், அந்தஸ்து பயம், படிப்பு படித்த பயம் என இல்லாத ஒன்றுக்கு அஞ்சியே மனநிம்மதி இல்லாப் பணியில் சேருகின்றார்கள்.
பணம், குடும்பம், பொறுப்பு, அந்தஸ்து, அவசியம் என ஏதோ ஒன்று அவர்களை அப்படி மனதில் அச்சம் கொடுத்து பணி செய்யவைக்கின்றது, அங்கு தொழில் பயம், அதிகாரி பயம், லாப பயம், கடன் பயம் என எல்லாமே ஒருவித அச்சமான சூழலுக்குள் தள்ளுகின்றன.
இந்த அச்சமும் பயமும் மிகுந்த வாழ்வு நிம்மதி தராது, அச்சத்தோடும் பயத்தோடும் செய்யும் எதுவும் சிறக்காது.
ஒரு விஷயத்தை செய்ய முதலில் அச்சற்ற மனம் வேண்டும், அச்சமற்ற மனதுடனும் மனதுக்கு மிகப் பிடித்தபடியும் மிகுந்த அன்புடனும் கருணையுடனும் ஒரு தொழிலைச் செய்யும்போது ஒரு விஷயத்தைச் செய்யும் போது அது நிச்சயம் துலங்கும்.
மனதோடு ஒன்றி மனமெல்லாம் அன்போடும் கருணையுடனும் ஒரு விஷயத்தை நேசித்து செய்யும்போது அது எது என்றாலும் துலங்கும், அது குடும்ப வாழ்வோ லௌகீக தொழில் வாழ்வோ பக்தியோ எது என்றாலும் துலங்கும்.
பயத்தோடு செய்யும் பக்தி கூட பலன் தராது, பலர் இறைவனுக்கு அஞ்சி பக்தர்களாக வருவார்களே தவிர முழு அன்போடும் முழு மனதோடும் பக்தி செய்யமாட்டார்கள், அப்படியானவர்களுக்குத் தெய்வ அனுக்கிரஹமும் எளிதில் கிடைக்காது.
ஆம், அச்சமும் பயமும் நீங்கி முழு மனதுடன் முழு அன்புடன் முழுக் கருணையுடன் ஒரு விஷயத்தை செய்யும் போது, மனதால் ஒன்றி செய்யும்போது அது முழுமையாக சிறப்பாக முடியும். பெரும் சிறப்பும் தரும், அன்போடும் கருணையோடும் அணுகப்படும் எல்லாமும் சிறக்கும்.
இதுதான் அனாகத சக்கரத்தின் தத்துவ தாத்பரியம், இது சரியாக இருந்தால் அந்த மனதுக்குத் தன் கர்மம் எது எனப் புரியும். அது எதற்கும் அஞ்சாது, அடுத்தவர்க்கு சமுதாய அந்தஸ்துக்கு நாலுபேர் என்ன பேசுவான் எனும் பேச்சுக்கு என எதற்கும் தயங்காது.
அது லாப நஷ்டம் பார்க்காது, எதையும் கணக்கிட்டு செய்யாது, மாறாக கர்மம் எதுவோ அதனைத் தன் முழுமனதோடு முழு அர்ப்பணிப்போடு செய்து பெரும் இடத்தை அடையும்.
அது படிப்பு, விஞ்ஞானம், தொழில், ஆன்மீகம் என எதுவாக இருந்தாலும் அங்கு முழுனதோடு அச்சமற்ற நிலையோடு நிறைந்த முழு மனதோடு செய்யப்படும்போது நிச்சயம் சிறப்பாகும்.
இந்த ஆலயம் அந்த வரத்தை தரும், அனாகதம் மனதுக்கான சக்கரம், இங்கே மனதுக்கான கிரகம் சந்திரன்.
இந்த ஆலயம் சந்திரனுக்கான பலம் தரும் ஆலயம், லௌகீகமாகவும் ஆன்மீகமாகவும் சந்திரனின் பலம் இங்கே எப்போதும் கொட்டும்.
காலத்தின் அதிபதி யாராக இருந்தாலும் காலத்தின் அளவை சொல்பவன் சந்திரனே, அவ்வகையில் சந்திரனை முன்னிட்டே நாள், திதி,மாதம் என எல்லாமும் நிர்ணயிக்கப்படுகின்றது.
கால பைரவராக காலத்தின் அதிபதி சிவன் என்றால் சூரியன் சிவன் அம்சம் என்றால், சந்திரன் காலத்தை அளந்து காட்டும் சக்தி தேவியின் அம்சம்.
பௌதீக ரீதியாக சந்திர சுழற்சியாலே மழை பொழிகின்றது, பருவம் மாறுகின்றது, பூமியோடு சேர்ந்து சூரியனைச் சுற்றும் நிலவு இல்லையேல் பூமி இல்லை, அது இயங்காது.
சந்திரனின் ஈர்ப்பு விசையே பூமியில் பல மாறுதல்களைச் செய்து இயக்குகின்றது, அதுதான் பருவகாலமாகின்றது.
ஜாதகரீதியாகவும் இன்னும் பல தொடர்புகள் ரீதியாகவும் சந்திரனுக்கும் மானுட மனதுக்குமான தொடர்பு மிக மிக நெருக்கமானது. அதற்கு முன் சிவன் தலையில் சந்திரன் அமர்ந்த கதையும் அதில் இருக்கும் உண்மையினையும் காண வேண்டும்.
சந்திரனுக்கு 27 மனைவியர் அதாவ்து 27 நட்சத்திரங்களும் மனைவியர் என்பதும் ஒரு சாபத்தால் சந்திரன் பிறை நிலவாய் சிவனிடம் அடைக்கலமாகி அவரின் சிரசில் அமர்ந்து சிவன் கண்காணிப்பில் கடமையாற்றுகின்றான் என்பதும் புராணச் செய்தி.
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், 27 நட்சத்திரகாரர்களுக்கும் சந்திரன் தொடர்பு உண்டு, சந்திரன் இல்லாமல் ஜாகதகமே இல்லை.
சந்திரன் இருக்குமிடமே தாயின் ஸ்தானத்தை குறிப்பதாக ஜோதிட நுணுக்கங்கள் சொல்லும், அவ்வகையில் தாய் எனும் சக்தி அருளைப் பெற சந்திரன் அருள் அவசியம்.
தேவியின் அருளைப் பெற சந்திரன் அவசியம்.
இன்னும் சந்திரனாலே மனதின் உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுகின்றன, சந்திரனே மனதிடம் மனோபலத்துக்கான அதிபதி என்பதும் ஜோதிடம் சொல்லும் உண்மை.
சந்திரன் மனதுக்கான கிரஹம், பௌர்ணமி அமாவாசையில் கடல்மட்டம் எழுவதும் குறைவதும் கண் காணும் உண்மைகள்.
அதாவது நீரானது பௌர்ணமி அன்று பொங்குகின்றது, அப்படி நீரால் இயங்கும் உடலிலும் நீரில் மிதக்கும் மூளையிலும் சில மாறுபாடுகள் வரும்.
அதனாலே சிலருக்குப் பௌர்ணமி அன்று ஒருவித அதீத எழுச்சிகள் வரும். நிலையற்ற தன்மை வரும், அமாவாசையில் அது தலைகீழாகும்.
இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. சந்திரன் என்பதற்கான பெரும் சான்றுகள், அதனாலே ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம் முக்கியமானது.
மனம் சரியாக இருந்தாலே புத்தியும் செய்யும் தொழிலும் சரியாகும். செல்வம் வாய்க்கும், இதனாலே சந்திரன் செல்வத்துக்கும் அடையாளமான கிரஹமானார்.
திருப்பதி ஸ்தலம் சந்திரனின் தலம் என அழைக்கப்படுவது அப்படித்தான்.
சந்திரன் கால நேரத்தை அளந்து தரும் கிரஹம், உணர்ச்சிகளின் அதிபதி, இன்னும் தெளிவாகச் சொல்லபோனால் ஈர்ப்பு விசைகளைக் கட்டுப்படுத்துபவர்.
பூமியின் ஈர்ப்பு விசை எப்படிச் சந்திர கிரஹணம், அமாவாசை, பௌர்ணமியில் மாறுமோ இன்னும் வளர்பிறை தேய்பிறையில் மாறுமோ அப்படி மனம் கொள்ளும் பற்றுகளில் இருந்தும் அதனை விடுவிக்கவும் கட்டிவைக்கவுமான சக்தி சந்திரனுக்கு உண்டு.
சந்திரனின் பார்வையே ஒரு பொருளைப் பற்றவும் செய்யும், மனம் விரும்பும் ஒன்றைத் துறக்கவும் செய்யும்.
இதனாலே பற்றற்ற கோலத்துக்குச் செல்ல சந்திரன் அருள் அவசியம், இறைவனைப் பற்றி நிற்க அந்த அருள் அவசியம். அப்பர் கடல்நீரில் மிதந்தார் என்பது சிவனருளில் நடந்த ஒரு அதிசயம் மட்டும் அல்ல, அங்கும் விஞ்ஞான ரீதியாக சந்திரனின் கரங்கள் உண்டு.
பூமி எல்லாப் பொருளையும் ஈர்க்கும், ஆனால் சந்திரனின் சக்தியால் அந்த ஈர்ப்பில் மாறுபாடு காட்டமுடியும், பௌர்ணமியில் கடல் பொங்குவது அப்படித்தான்.
அப்பர் கடலில் வீசப்பட்டபோது சிவன் சந்திரனை நோக்க சந்திரன் தன் ஈர்ப்பு சக்தியால் அவரை மிதக்கவைத்தார், அந்த இடத்தில் புவியின் ஈர்ப்பு சக்தி மீறி சந்திரனின் சக்தி பெருகி நின்றதால் அவர் மிதந்தார்.
மனம் அங்கேதான் இருக்கின்றது, மனதுக்குச் சக்தி கொடுப்பவன் சந்திரன்.
யாரோ ஒரு சிலரை வைத்து பரம்பொருள் ஆடுவது அவர்களுக்கானது அல்ல, அது மக்கள் பின்பற்றி நடந்து அந்தப் பாடத்தைக் கற்று நன்மைகளை அடையவேண்டும் என்பதற்காக.
அப்படி இந்தத் தலம் சந்திரனுக்கானது, சந்திரனால் மனம் பலம் பெறும், ஜாதகத்தில் சந்திரனாலோ இல்லை இதரரீதியாக மனோபலம் குறைந்தவர்களாக இருந்தால் இங்கு வந்து மனபலம் பெற்றுச் செல்லலாம்.
இது மனோபலம் அருளும் ஆலயம்.
முன்பே பார்த்தபடி சந்திரன் என்பது தாய்ஸ்தானத்தில் இருப்பது, அதனாலே சந்திரனாலே பூமியில் மழை பெய்யும், சந்திரனாலே நேரம், திதி என எல்லாம் வகுக்கப்படும், மாதம் வரை காட்டுவது சந்திரனே.
சந்திரனே பாச உணர்ச்சிகளுக்கு அதிபதி, தாயினை விட அன்பினைக் கொட்டுவார் யாருமில்லை, சந்திரனின் அருளே மனதில் அன்பும் இரக்கமும் கருணையும் தரும்.
விருச்சிகத்தில் சந்திரன் நீசம் என்பதால் அவர்களுக்கு வரும் சந்திர பாதிப்பினைக் குறைக்க இங்கு வழிபடச் சொன்னார்கள். அதனாலே இது விருச்சிக தலமுமாயிற்று. அங்கிருக்கும் விநாயகர் தேள்வடிவ துதிக்கையுடன் விருச்சிக விநாயகருமானார்.
ஆம், இந்த ஆலயம மனதில் நிறைவு, சந்தோஷம், மகிழ்ச்சி என எல்லாமும் தந்து அன்பும் கருணையும் பெருகச் செய்து, அதனால் செய்யும் காரியத்தை மகிழ்வாய் முழுமையாய் அச்சமின்றி செய்யவைத்து, கர்மத்தைச் சரியாகச் செய்யும் வரத்தைத் தரும்.
அழகான ராஜகோபுரம கொண்ட இந்த ஆலயத்தில் ஏகப்பட்ட சிறப்புக்கள் உண்டு, கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர்.
இங்கு 12 சூரிய லிங்கங்கள் உண்டு, பொதுவாக சூரியனுக்கு 12 எனும் எண் பொருந்தும், 12 வகை ராசி கூட்டம் முதல் பல தொடர்புகள் சூரியனுக்கு உண்டு இதனால் 12 லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த மூலவர் லிங்கம் அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கமாகும், இது சில கோவில்களில் மட்டும் உண்டு.
கையில் வீணையில்லாத சரஸ்வதி சிலை இங்கு உண்டு, அதற்கு அபிராமி அன்னையே சரஸ்வதி எனப் பொருள்.
கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள் (மும்மூர்த்திகள்) , எட்டுகைகளுடன் (மும்மூர்த்திகரமும் அன்னையின் கரங்களும்) அர்த்தநாரீஸ்வரர் சிலை உண்டு.
இது ஈசனின் மும்மூர்த்தி வடிவத்தையும் அந்த மும்மூர்த்திகளுடன் அன்னை இணைந்திருக்கும் பெரும் தத்துவத்தையும் சொல்கின்றது, வேதங்களின் தத்துவத்தைச் சிலையாக கொண்ட பெரும் தத்துவம் இது.
குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களை இங்குக் காணலாம், குழலூதும் சிவனை இங்கு மட்டுமே காணமுடியும்.
இது ஹரியும் சிவமும் ஒன்று என்பதைப் போதிக்கின்றது.
இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதி பிரசித்தியானது, அருணகிரியார் தன் திருப்புகழில் இதனைப் பாடிப் போற்றியிருக்கின்றார்.
மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் அழகுற அருள்பாலிக்கும்.
கோயிலுக்கு இடப்புறம் அம்பாள் அபிராமி எனும் திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருளை அமுதமாய் பொழிகிறாள். அவளை நாரதர், ‘திருக்கடையூர் அபிராமியும், இவளும் ஒன்றே’ என இணையாக அரியாசனத்தில் அமர்த்தி வழிபடுகிறார், அது அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
கோயிலின் கோஷ்டங்களில் உள்ள மூர்த்திகள் அற்புதமானவை, அப்படியே அற்புதமான தட்சிணாமூர்த்தி சிலை சிலிர்க்கவைபப்து, அதனை வலம் வரும்போது தலவிருட்சமான வில்வ மரத்தைக் காணலாம்.
இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கை சிற்பம் பார்க்க உடல் சிலிர்க்கும். மகிஷனும், கொம்புகளும் புடைப்பாய் வெளியே துருத்தியிருக்க அதன் மேல் எண்கரங்களோடு நிற்கும் துர்க்கையின் சிற்ப நுணுக்கம் வியக்கத்தக்கது.
சந்திரன் இத்தலத்திற்கு வந்து சாபவிமோசனம் பெற்றதால் இத்தல தீர்த்தம் சந்திர தீர்த்தம் என்றாயிற்று.
திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்குக் காதிலுள்ள தாடங்கம் எனும் ஆபரணம் அணிந்து ‘தாடங்க பீடேஸ்வரி’ என்று சக்தியோடு விளங்குவதுபோல், இத்தல அபிராமி, ஒட்டியாண ஆபரணம் ஏற்று ‘ஒட்டியாண பீடேஸ்வரி’ என்று மகாசக்தியோடு திகழ்கிறாள்.
இதற்கு ஆழமான தத்துவமும் உண்டு , உடலின் பாகங்கள் மூன்று, தலை ஒரு பாகம், கழுத்து முதல் இடுப்பு வரை ஒரு பாகம் அதன் அடியில் மூன்றாம் பாகம்.
ஒட்டியாணம் சரியாக இடுப்பை ஒட்டி வரும், அதன் தத்துவம் இந்த அன்னை இடுப்புக்கு மேல் உள்ள பகுதிக்கு அனாகத சக்கரம் இருக்கும் பகுதிக்கு அதிபதி என்பது அதை “ஒட்டியான ஈஸ்வரி” எனச் சொன்னார்கள்.
இங்குப் பலிபீடம் அருகே நந்திக்கு ஏழு படிகள் உண்டு. இவை ஏழும் இசைபாடும் படிகட்டுகள், அப்படியே கோவிலுள் இசைபாடும் தூண்களும் உண்டு, அந்த அளவு சோழர்களால் மிக நுணுக்கமாக கட்டப்பட்ட ஆலயம் இது.
மயிலாடுதுறை பக்கம் செல்லும் போதும், திருக்கடையூர் அபிராமியினைக் காண செல்லும்போதும் இந்த ஆலயத்தைத் தவறவிடாதீர்கள், அன்னை முழு மனதுடன் முழு அன்புடனும் ஆட்சி செய்யும் தலம் இது, அந்த அன்பும் கருணையும் உங்களுக்கும் கிடைக்கும்.
எங்கே ஆணவம், உண்டோ பெரும் ஆசை உண்டோ, எங்கே அச்சம் உண்டோ, எங்கே மாய மயக்கம் உண்டோ அங்கே அன்பும் கருணையும் வராது.
ஐராவதத்துக்கும் இந்திரனுக்கும் கர்வமும் ஆணவமும் இருந்தது. அது நீங்கபெற்று அன்பு உதித்த தலம் இது, சந்திரனுக்குத் தான் அழகன் எனும் கர்வம் இருந்தது அது நீங்கப்பெற்ற ஆலயமும் இது, அதன் பின்பே சந்திரன் சாபம் நீங்கி அன்புக்கான மனதுக்கான கிரஹமானது.
இந்தத் தலம் அச்சம் நீங்கிய மனதைத் தரும், யார் என்ன செய்தாலும் சொன்னாலும் என் கர்மம் இதுவே எனும் நிறைந்த மகிழ்வான மனதைத் தரும், செய்வதை முழு அன்பாகச் செய்யும் மனதைத் தரும்.
மார்கண்டேயர் இங்கு வழிபட்டு அன்புநிறை மனம் பெற்றுச் சிவனை அண்டினார், அவர் எமனுக்கு அஞ்சி மட்டும் ஈசனை பற்றவில்லை. மாறாக, சிவம்மேல் கொண்ட அன்பால் பற்றினார். அந்த அன்புக்கே சிவன் இறங்கி வந்தார், அதன் பின் மார்கண்டேய மகரிஷி உலக மக்கள் மேல் கொண்ட அன்பால் எத்தனையோ காவியங்களை, சாஸ்திர நூல்களை, பெரும் ரகசியங்களை எழுதித் தந்தார்.
மனமே சந்திரன் என்பதும், மகிழ்ச்சியுடன் மனதில் நிறைந்த அன்புடன் செய்யப்படும் எதுவும் சிறக்கும் என்பதும், அது ஆன்மீகமாய் இருந்தால் பெரும் உச்ச நிலை கொடுக்கும் என்பதே அபிராமிபட்டரின் வாழ்வு.
அவர் அன்னையின் மேல் அவ்வளவு அன்பு கொண்டிருந்தார், அன்பான மனம் ஒன்றாலே அவர் அந்த ஆலயத்தில் தவமிருந்தார், அந்த அன்பினால் சோதனை வந்தபோதும் இதுவே கர்மா என முழு மனதோடு நிலைத்திருந்தார்.
அவரின் மனநிறைவே மனம் கொண்ட அன்பே, மனம் பொருந்திய தவவாழ்வே அமாவாசையில் நிலாவாக காட்டப்பட்டு, இந்தப் பக்தன் அனாகத சக்கரம் துலங்கி முழு அன்பால் தன் கர்மத்தை பக்தியாய்ச் செய்தவன் என அன்னையால் நிரூபிக்கப்பட்டது.
நீங்கள் பக்தராக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் அச்சமற்ற மனதுடன், முழுமையான அன்பு நிறைந்த மனதுடன், யாருக்கும் கட்டுப்படாமல் முழு அன்புடன் கருணையுடன் முழு மன அர்ப்பணிப்புடன் எதைச் செய்வீர்களோ அது முழுக்கத் துலங்கும் வரத்தை இந்த ஆலயம் வழங்கும்.
இது விருச்சிக ராசிக்கு மட்டுமல்ல எல்லா ராசிக்கும் மனபலம், மனநிறைவு, மன சாந்தி என எல்லாம் தந்து கர்மத்தைச் செய்யும் முழுப் பலமும் அன்னை அருளால் தரும் ஆலயம், சென்று பணிந்து பாருங்கள், உங்கள் மனமே அதை உணரும். இது சத்தியம்.