அபிராமி ஆலயம் 02 : இலந்துறை அபிராமி ஆலயம்.
அபிராமி ஆலயம் 02 : இலந்துறை அபிராமி ஆலயம்.
அபிராமி அன்னை ஆலயங்களில் அடுத்த ஆலயம் இலந்துறை அபிராமி ஆலயம், கும்பகோணம் திருநீலக்குடி அருகே அமைந்துள்ள இந்த ஆலயம் காலத்தால் மகா தொன்மையானது.
இலந்தை மரங்கள் நிறைந்த வனத்தில் உருவான ஆலயம் இது, அதனால் இலந்துறை என்றானது.
எவ்வளவுக்குத் தொன்மையானது என்றால் வியாச மகரிஷி வந்து வழிபட்ட இடம் இது, வியாச மகரிஷி காலம் யுகங்களைக் கடந்தது. அக்காலத்தில் மானுடரின் வாழ்வு பல்லாயிரம் வருடங்கள் இருந்தது, அந்நேரம் பாரதம் முழுக்க அந்த ரிஷிகள் சுற்றி வந்தார்கள்.
வியாசர் வட இந்தியாவில் எங்கோ வாழ்ந்தவர் அன்று. அவர் தேசம் முழுக்க ஒரு காலத்தில் வலம் வந்தவர், அப்படியான வியாச பெருமான் வழிபட்ட லிங்கம் இது.
இலந்தை மரங்கள் நிறைந்த இந்த இடத்தில் அன்று வசிஷ்டர் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார், அவரும் அவர் மனைவி வேதிகையும் தங்கி ஆஸ்ரமம் அமைத்து வழிபட்ட இடம் இது.
இந்தச் சிவலிங்கம் அவரால் அமைக்கப்பட்டது. இங்குள்ள அபிராமி அவரால் ஸ்தாபனம் செய்து வணங்கப்பட்டவள், நெடுங்காலம் இங்கு வியாசர் தங்கியிருந்து அன்னையின் அருளால் வேதங்களைத் தொகுத்து, பாரத பெரும் கதையினைத் தொகுத்து, 18 வகை புராணங்களையும் நமக்குத் தந்தார்.
வியாசர் இல்லை என்றால் இன்று இந்துக்கள் காணும் எதுவுமில்லை அந்த மகா வேத வியாசருக்கு அன்னை அருள் புரிந்த தலம் இது.
வியாசமுனிக்கும் விநாயகப்பெருமானுக்கும் உள்ள பந்தம் எல்லோரும் அறிந்தது, அதனால் வியாசர் இங்குப் பூஜையில் இருக்கும் போது அவருக்காக விநாயகப் பெருமான் உருவாக்கிய தீர்த்தம் இன்றுள்ள வியாச தீர்த்தம்.
இந்த ஆலயம் அபிராமி அன்னையின் அருளில் சுவாதிஷ்டான சக்கரத்தை துலக்கும் ஆலயம் இது.
இந்த சுவாதிஷ்டானம் என்பது அடிவயிற்றில் அமைந்துள்ளது, இது நீர் தத்துவம் கொண்ட சக்கரம் அப்படியே உடலின் நீர் சக்திகள் அதாவது சிறுநீரகம், சுக்கிலம் என நீர் சக்திகள் கொண்ட இடத்தில் இது அமைந்து கட்டுப்படுத்துகின்றது.
இந்த சக்கரம் சரியாக இருந்தால் நீர் சம்பந்தமான நோய்கள் உடலில் வராது. இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கவில்லை என்றால் சிறுநீரகச் சிக்கல் முதல் எல்லாச் சிக்கலும் உருவாகும்.
இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் உடலின் நீர் சம்பந்தமான இயக்கமெல்லாம் மிகச் சரியாக நடக்கும், அட்ரீனல் சுரப்பி இங்கேதான் உண்டு.
இது சரியில்லை என்றால் மனோரீதியாகவும் சிக்கல் வரும், இந்தச் சக்கரத்தின் வீச்சு அப்படியானது.
இச்சக்கரமே சுயத்தை அறியவைக்கும். இச்சக்கரம் ஆழ்மனதோடு தொடர்பு உடையது. பிறருடன் ஒருவர் வைத்திருக்கும் சமூக உறவு, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிதல் ஆகிய பண்புகள் சுவாதிஷ்டான சக்கரத்தின் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.
எப்படிப்பட்ட எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது சுவாதிஷ்டானத்தின் கட்டுப்பாட்டில்ததான் இருக்கிறது. உணர்ச்சி, சிற்றின்பம், மகிழ்ச்சி, நெருக்கம், உள்ளுணர்ந்து அறிதல் ஆகியவையெல்லாம் இதனால் வருவதே.
உணர்வுகள் என்பது இங்கிருந்துதான் உருவாகின்றது, உணர்வுகளின் மையம் இதுதான்.
காமம் முதல் பல உணர்வுகள் இன்னும் பல்வேறு வகையான சுகங்கள் இங்கிருந்துதான் உருவாகும், அது பசியாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், இன்னும் பலவான சுகங்களாக இருக்கலாம்.
சுகத்தைத் தேடி செல்லும் வாழ்வு மானுடனுடையது. அதற்கு நிம்மதி, முழுமை எனப் பல பெயர்களைச் சொன்னாலும் அடிப்படையில் அவன் விரும்புவது ஒரு திருப்தி.
இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனதுக்கும் உடலுக்குமான ஒரு முழுத் திருப்தி கிடைக்கும், நிறைவு கிடைக்கும்.
மானுடரின் குழப்பமான சிந்தனைப்படி சக்தியினை இந்தச் சக்கரத்தில் இருந்து கீழே இறக்கினால் அது மனித நிலையில் இருந்து மிருக நிலைக்கு அழைத்துச் செல்லும்.
இந்தச் சக்கரத்துக்கு கீழ்தான் சுகங்களுக்கான இந்திரியங்கள் உண்டு, அந்தச் சுகங்களை நோக்கி சக்தியினைக் கீழே இறக்கினால் அவன் போகி.
இதுதான் இன்ப போகம். இந்தச் சக்கரத்தில் இருந்து சுக்கிலம் முதல் எல்லாவற்றையும் கீழே இறக்க இறக்க அவன் போகத்தில் வீழ்ந்து அதற்கு அடிமையாகி விலங்குபோல் வாழ்ந்து மடிவான்.
இந்தச் சக்தியினை அந்த இடத்தில் இருந்து மேலே ஏற்றிச் சென்றால் அவன் யோகி, அவன் ஞானத்தால் இறை நிலை அடைவான்.
ஒருவன் போகி என உணர்ச்சிக்கு அடிமையாகி அங்கே வீழ்ந்து கிடப்பதும், அவன் யோகியாகி ஞானம் அடைவதும் தெளிவு அடைவதும் இந்தச் சக்கர சக்தியினைப் பொறுத்தே.
இங்கு வழிபட்ட வியாசரின் உணர்வுகள் மேலோங்கி எழுந்தன, அவர் தொடர்ந்து வழிபட்டு மாபெரும் யோகி எனும் இடத்தை அடைந்தார். ஆம், உணர்வுகளை மேல்நோக்கி எழுப்பித் தரும் ஆலயம் இது.
இங்குள்ள அன்னை செவ்வாய் கிரகத்தினைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவளாக இருக்கின்றாள், அபிராமி பட்டர் தன் பாடலில் அன்னையினை மாதுளம்பூ நிறத்தவள் என்றும் செந்நிறம் கொண்டவள் என்றும் பாடுவதை அறியலாம்.
அதன் ஆழமான அர்த்தம் அவள் செவ்வாய் கிரகப் பலனைத் தருவாள் என்பது.
செவ்வாயினை ஏன் பூமி காரகன் எனச் சொல்கின்றார்கள் என்றால் இரு காரணங்களை அதன் இயல்போடு பொருத்திச் சொல்வார்கள்.
செவ்வாய் கிரகம் பூமிபோல உறுதியானது, பூமிபோல வாழவைப்பது என்பதால் அதைப் பூமிகாரகன் என்றார்கள், பூமியின் மேல் உள்ள அதிகாரத்தை ஒருவனுக்கு நிலை நிறுத்தும் கிரகம் அது.
செவ்வாய் கிரகமே நிலபுலன்களுக்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் அதிபதி.
இரண்டாவது பூமி எல்லா உயிரையும் காப்பது போல எல்லா உயிரையும் காக்கும் சக்தி, குணம் கொடுக்கும் கிரகம் செவ்வாய்
இதனாலே காவல் வீரர்கள், ராணுவம் போன்ற துறைகளில் இருப்போர் இந்தச் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றிருப்பர்.
செவ்வாய் தன்னை இழந்து மற்றவரைக் காக்கும் ஒரு தியாக வீரத்தை தருவார், தன்னலம் அதிகம் கருதாமல் பிறருக்காக பெரும் காவலைச் செய்யும் அந்த தியாக வீரகுணத்தைத் தருவார்.
ஷத்திரிய குணம் என்பது அவரின் வரம்.
செவ்வாய்தான் வீரத்துக்கு அதிபதி, செவ்வாய்தான் வைராக்கியமும் தைரியமும் தருவார், இன்னும் பல பலமும் தருபவர். அவர்தான்
தலைமை பதவி, பலருக்கு மேல் இருந்து உத்தரவிட்டு வழிநடத்தும் அதிகாரம் கொண்ட நிலையெல்லாம் செவ்வாய் அருளால்தான் வாய்க்கும்.
வாழ்வில் முக்கிய குணம் தைரியம், எல்லாச் சூழலையும் எதிர்த்து நின்று கடக்கும் தைரியமும் வீரமும் மனோபலமும் கொடுக்கும் கிரகம் இது.
எல்லாம் இருந்தும் தைரியமும் காவலும் இல்லாவிட்டால் எல்லாம் பாழாகும், எது இல்லை என்றாலும் தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எல்லாமும் கூடிவரும்.
அவ்வளவு முக்கியமான கிரஹம் இந்தச் செவ்வாய், காவலையும் பெரும் உறுதியினையும் அது வழங்கும். உறுதியும் நிலைதன்மையும் கொடுக்கும் கிரகம் அது, அந்த அருள் ஒவ்வொருக்கும் அவசியம்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு எனும் வகையில் இந்தச் செவ்வாய் கிரகம்தான் உடலின் ரத்த ஓட்டத்துக்குக் காரணகர்த்தா.
உடலின் மிக மிக முக்கியமான விஷயம் ரத்த ஓட்டம், அந்த ரத்தம் சுத்தமானதாகவும் சரியான அளவில் ஓடுபதாகவும் இருத்தல் வேண்டும், ரத்தம் கெட்டால் உடல் கெடும்.
தேக ஆரோக்கியமே இந்த ரத்த ஓட்ட சூட்சுமத்தில்தான் இருக்கின்றது, உடலை இயக்குவதே அதுதான்.
செவ்வாய் கிரகம் நிறத்தால் மட்டுமல்ல, தன் சக்தியாலும் உடலின் ரத்தத்தின் சக்தியினை நிர்ணயிக்கும்
கிரஹம், செவ்வாயின் அருளே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ரத்த துடிப்பினினைத் தரும்.
இதனாலேதான் விளையாட்டு வீரர்கள், பெரிய காவலர்களிடமெல்லாம் இந்தச் செவ்வாயின் ஆதிக்கத்தைக் காணமுடியும். உடலுக்கு இயக்கமும் மனதுக்கு தைரியமும் வீரமும் தருபவர் செவ்வாய். போர்கிரஹம் எனச் சொன்னாலும் உண்மையில் அவர் காவல் கிரஹம், வைராக்கியமும் தைரியமும் தரும் கிரஹம்.
வியாசர் அவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தார் என்றால் அவர் கொண்டிருந்த வைராக்கியம் அப்படி, இன்னும் மார்கண்டேயன் எமனை வெல்ல முடியும் என நம்பினால் அவன் கொண்டிருந்த வைராக்கியமும் அப்படி.
அதெல்லாம் இந்த அன்னை கொடுத்த வரம்.
இந்தத் தலம் சூரியனின் சக்தியினைத் தரும் தலம், இன்றும் ஒவ்வொரு சித்திரை வருடப்பிறப்பிலும் சூரிய ஒளி சிவன் மேல் இந்த ஆலயத்தில் வீழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.
சூரியனே செல்வாக்கும் பெரும் ஆதிக்கமும் தருவது, இங்கு வழிபட்டால் சூரியனின் பலமும் முழுக்கக் கிடைக்கும்.
செவ்வாய் கிரக பரிகார தலமான இவ்வாலயம் கார்த்திகை முதல் செவ்வாயில் இங்கு வியாசரால் உண்டாக்கப்பட்ட வியாசகுளத்தில் மூழ்குவோர் மைந்தனைப் பெறுதலும், இரண்டாம் செவ்வாயில் செல்வத்தையும், மூன்றாம் செவ்வாயில் ஞானத்தையும், நான்காம் செவ்வாயில் நினைத்ததை அடைதலும், ஐந்தாவது செவ்வாய் கிழமை இருப்பின் போக மோட்சங்களையும் அளிக்கவல்லது.
இங்கு வியாசர் மட்டுமல்ல காசியபர், அகத்தியர், கன்வர், பிருகு, அத்திரி, கபிலர், மதங்கர், வியாசர், துர்வாசர், பரத்துவாசர், சதானந்தர், யாக்ஞவல்கியர், சூரியன் முதலியோரும்
ஹேஹயன், நளன் முதலிய சக்கரவர்த்திகளும் பூஜித்து முக்தி அடைந்த தலம் இது.
அபிராமி அன்னையின் இரண்டாம் தலமான இவ்வாலயம் நல்ல உணர்வுகளைத் தரும், அதை மேல்நோக்கி பெரிய காரியங்களுக்காகச் செய்யும் வலிமையும் வைராக்கியமும் தரும், இங்கு வழிபட்டால் அரும் பெரும் காரியங்களை முடிக்கும் சக்தி கிடைக்கும். செல்வாக்கும் பெரும் இடமும் கிடைக்கும்.
மூன்று அடுக்கு ராஜகோபுரம் கொண்ட இவ்வாலயத்தில் நுழைந்தால் விநாயகப் பெருமான் வீற்றிருக்கின்றார். அவர்தான் வியாசருக்குத் துணையாக இந்தத் தீர்த்தத்தை உருவாக்கியவர்.
அடுத்து வியாசர் வழிபட்ட அந்த மகா புனிதமான லிங்கம் உண்டு, அதை அடுத்துக் கோவிலின் கர்ப்பகிரங்கத்தில் சுந்தரேஸ்வரபெருமானும் அதை அடுத்த சந்நதியில் அம்பிகை அபிராமியும் அருள்பாலிக்கின்றார்கள், வியாச பெருமான் போன்றோர்க்கும் அடையாளம் உண்டு.
வியாசபெருமானின் ஆசிரமம் இப்போது புதுப்பிக்கபட்டிருக்கின்றது.
சிறிய ஆலயம் என்றாலும் பழமையும் மாபெரும் தொன்மையும் மிகுந்த ஆலயத்தில் நெய்தீபமிட்டு, தூபமிட்டு வணங்கினால் நல்ல உணர்வுகள் பெருகும், கர்மாவின் நோக்கம், பிறப்பின் அர்த்தமும் அதை நோக்கிய வைராக்கியமும் பெருகும், அது மாபெரும் இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
கும்பகோணம் பக்கம் செல்லும்போதும், திருக்கடையூர் ஆலயத்தை வழிபடும் முன்னும் இந்த ஆலயத்தை வழிபட மறவாதீர்கள்.
இந்து முன்னோர்கள் ஞானமிக்கவர்கள், அவர்கள் ஒவ்வொரு பெரிய ஆலயத்திலும் கிடைக்கும் பலனை அருகிருக்கும் ஆலயத்திலும் கிடைக்கும்படி எல்லா ஆலயங்களும் ஒருசேர வளரும் படி நல்ல கவனத்தை பெறும்படி, வழிபாடுகளும் பூஜையும் பரவலாக நடக்கும்படி ஆலயங்களை அமைத்தார்கள்.
ஒவ்வொரு பெரும் ஆலயத்துக்கும் சக்திவாய்ந்த ஆலயங்களை அதைச் சுற்றி அமைத்தார்கள், இங்கும் வழிபட்டாலே வழிபாடு முழுமை என ஒவ்வொரு தொகுதியாக அடையாளமிட்டார்கள்.
அவ்வகையில் திருக்கடையூர் அபிராமியின் அருளைப் பெற வணங்க வேண்டிய இரண்டாம் முக்கியமான ஆலயம் இது, இங்கு வணங்கினால் கர்மம் புரியும், அதைச் செய்யும் வைராக்கியமும் வலுக்கும். அது மாபெரும் நல்ல நிலை நோக்கி ஞானமும் அறிவும்கொண்ட நிலை நோக்கி உங்களை அழைக்கும்.
இந்த ஆலயம் வியாசர் வழிபட்ட ஆலயம் என்பதால் கல்வி ஞானம் இதர அறிவுகளை அள்ளித்தரும் ஆலயம் இது, திருக்கடையூர் ஆலய தொகுப்பில் முக்கியமான இரண்டாம் ஆலயமான இதனை வழிபட்டு பாருங்கள். அதுவரை கிடைக்காத நல்ல உணர்வும் பெரும் நற்சிந்தனையும் உங்களுக்குள் வைராக்கியமாக எழும், பிறப்பின் நோக்கம் அறிந்து அதை நோக்கிச் செல்வீர்கள். இது சத்தியம்.