அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 17 /21
ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராமபத்ராச்சாரியர் &
வழக்கறிஞர் கே. பராசரன்…
அயோத்தி ராமர் ஆலய மீட்பு வழக்கின் மிக முக்கிய சாட்சி ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராம பத்ராச்சாரியர்.
இவர்தான் பால ராமர் சார்பாக வாதிட்டவர்களில் இதிகாச , வேத வரிகளின் அடிப்படையில் வாதிட்டவர். ராமாயணத்தில் இருந்தும் இந்திய சாஸ்திர புராண நூல்களில் இருந்தும் இவர் எழுத்துவைத்த வாதம் சாட்சாத் அந்த வியாசரே களத்துக்கு வந்ததுபோல் இருந்தது
ஏற்கனவே 2003 ல் அலகாபாத் உயர்நீதி மன்ற வழக்கு விசாரணையின் போது இவர் “மதசம்பந்தமான வல்லுனர்” (Religious Matters Experts) சாட்சியாக குழந்தை ராமர் சார்பாக சாட்சி சொன்னார்.
அப்போதே வால்மீகி ராமாயணம், துளசிதாசரின் ராமசரிதமானஸ், தோஹா சதகம், ஸ்காந்த புராணம், அயோத்யா மாஹாத்ம்யம் என பல நூல்களில் இருந்தும் மேற்கோள் காட்டி ராமரின் ஜன்மஸ்தான வாதத்தை உறுதிபடுத்தினார்.
அவரின் வாழ்க்கை ஆச்சரியமானது, மிக உருக்கமானது
அவர் 1950ம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் பிறந்தவர், இயர் பெயர் கிரிதர். மிக கொடுமையாக பிறவியிலேயே பார்வை குறைவு.
அதனால் பள்ளிக்கு அனுப்பாமல் அவர் தாத்தாவே ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் சொல்லிக்கொடுத்தார். அவர் எதையும் பார்த்ததில்லை கண்களில் பார்வையில்லை, எல்லாமே கேள்வியினால் வந்த ஞானம்
ராமாயணும் மகாபாரதமும் வேதங்களும் இன்னும் எல்லாமும் தன் காதாலே கேட்டு தெரிந்து கொண்டார், எல்லாமே அவருக்கு மிக மிக சரளமாய் தெரிந்திருந்தது
அவர் கண்பார்வை இல்லாதவராக இருந்ததால் காதால் கேட்பதை தவிர ஏதும் தெரியாது, அதையும் முழுக்க முழுக்க இந்து புராணங்களிலே கழித்து வளர்ந்தவர்
மூன்று வயதிலேயே அவத் மொழியில் கவிதை சொன்னார். ” ஏகசந்த க்ராஹி” என அழைக்கபட்டார், அதாவது எதுவும் ஒருமுறை கேட்டாலே மனதில் பதிந்து விடும்.
ஐந்து வயதிலேயே பகவத்கீதை முழுவதும், எட்டு வயதில் துளசிதாசரின் ராமசரிதமானஸை மனப்பாடமாகச் சொன்னார். வேதபாடலைக்கு சென்றார். 22 மொழிகள் அறிந்தவர்.
காசியில் சம்ஸ்கிருதத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றவர் .
தன் சீடர்களை கொண்டே துளசிதாசரின் ராம சரித மானஸ், ஹனுமன் சாலிஸாவிற்கு ஹிந்தியில் உரை கூறியுள்ளார். சம்ஸ்கிருத மொழி உள்பட 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1983 ராமானந்தி சம்ப்ரதாயத்தில் சந்நியாசம் எடுத்து ராம பத்ராச்சாரியர் என சந்நியாச பெயர் பெற்றார்.
1988 ல் வாரணாசி ராமானந்தர் துளசி பீட மடாதிபதியானார். அதன்பின் ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராம பத்ராச்சாரியர் என அழைக்கப்படுகிறார்.
ஆன்மீக சமூக சேவை செய்ய சித்ரகூடத்தில் துளசி பீட சேவா ந்யாஸ் எனத் தொடங்கியுள்ளார் . கண்பார்வையற்றோர் பள்ளிக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமேயான பல்கலைகழகம் தொடங்கியுள்ளார்,
உச்ச நீதிமன்றம் இவர் அலஹாபாத் உயர்மன்றத்தில் கூறியா சாட்சியத்தை தனது 1045 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது
இவர்தான் ராமனின் குரலாக ராமன் பிறந்த அயோத்தியின் குறிப்புகள், அடையாளங்கள், எல்லைகள், ஆறுகள், இன்னும் ஏகபட்ட குறிப்புகளை சொன்னார்
நீதிமன்றம் அதையெல்லாம் ஏற்று உறுதி செய்தபின் குறிப்பில் சேர்த்துகொண்டது
அவர் பார்வை அற்றவர் என்பதால் அவர் அயோத்தியினை நேரில் கண்டிருக்க முடியாது, அங்குள்ள எதுவும் அவருக்கு கண்ணால் தெரியாது ஆனால் வேதமும் ஞானநூல்களும் அறிந்தவர் என்பதால் அவை எல்லாம் இந்துஞானகுரல் என்பதால் இவர் குரலும் ராமனின் குரலாக கருதபட்டு ஏற்றுகொள்ளபட்டது
“கண் இல்லாமல் ராமன் என்னை அனுப்பியது குரலால் அவனுக்கு சாட்சி சொல்ல, அவ்வகையில் என் கடமையினை நான் சரியாக செய்துவிட்டேன்
ராமன் ஆலயத்தை என்னால் காணமுடியாது ஆனால் எல்லோரும் அந்த ஆலயத்தை கண்டு ராமா, ராமா என ஆர்பரிப்பதை கேட்பதைவிட எனக்கு என்ன பாக்கியம் வேண்டும்” என அவர் சொன்ன அந்த வரிகள் உருக்கமானவை
உண்மையும் அதுதான், கண் தெரிந்திருந்தால் கூட அவரின் வாதம் நின்றிருக்காது, ஆனால் கண் தெரியா நிலையிலும் வேதம் கற்று இதிகாசங்கள் கற்று அந்த வரிகளாலே ராமனின் குரலாக பதிவு செய்ததில் வாதம் நின்றது, வென்றது
முன்பு 14ம் நூற்றாண்டில் திருவரங்கநாதனின் சிலை திருப்பதி காடுகளில் இருந்து மீட்கபட்டபோது ஒரு சிக்கல் வந்தது
அதாவது அந்த சிலை காணமாலே போனதாக எண்ணி திருவரங்கத்தில் புதிய சிலை வைத்தார்கள், அதே நேரம் ஆலயம் மீட்கபட்டதை அறிந்து திருப்பதி காடுகளில் இருந்து அரங்கனை கொண்டுவந்தார்கள்
எது பழங்கால அரங்கன் சிலை என்பதை யாரும் கண்டறியமுடியவில்லை, அப்போதுதான் ஒரு சலவை தொழிலாளி வந்தான் அவனுக்கு 90 வயது ஆகியிருந்தது கண் தெரியாது
அவனுக்கு 45 வயது இருக்கும் போதுதான் துக்ளக் திருவரங்கத்தை சூறையாடினான், சிலை காடு காடாக அலைந்தது, துக்ளக் வருமுன் இவனே ஆலய துணிகளை சலவை செய்வான்
அவன் சொன்னான் , இரு சிலைகளயும் ஈரதுணியால் துடைத்து கொடுங்கள் போதும்
அப்படியே செய்தார்கள் முகந்து பார்த்தவன் சரியாக பழைய உண்மையான அரங்கனை அடையாளம் காட்டினான் அவன் சலவை தொழியாளி என்பதால் அரங்கன் சிலை மணம் அவனுக்கு அவ்வளவு பரிட்சயம்
அங்கே சலவை தொழிலாளி செய்த அதிசயத்தைத்தான் இங்கே இந்த ராம பத்ராச்சாரியர் செய்தார், ஐம்புலன்களிலும் ஊறிய அவர்கள் பக்தி அதைசெய்ய வைத்தது
இந்த சன்னியாசிதான் ராமர்கோவிலுக்கு ராமனின் சார்பாக வாதிட்டவர்களில் வரலாற்று தகவலை சொன்னார், அதில்தான் எதிர்தரப்பின் அயோத்தி என்றொரு நகரமில்லை,ராமன் இல்லை எல்லாமே பொய் எனும் வாதம் உடைந்தது
ராமர் ஆலய மீட்பில் மறக்கவே முடியாத, சாட்சாத் வியாசரின் குரலாக ராமனின் மூச்சாக ஒலித்த அவரின் வாதம் என்றென்றும் நன்றியோடு வணங்கதக்கது
அவரைபோலவே மகா முக்கிய திருப்பத்தை கொடுத்தவர் வக்கறிஞர் கே. பரசரன்
இவரது வாழ்க்கையும் மகா ஆச்சரியமானது , அவரின் தந்தை கேசவ அய்யங்கார் அவரும் வழக்க்றிஞர் அவரின் மனைவி ஸ்ரீரங்கதை சேர்ந்தவர், அந்த ஸ்ரீரங்கத்தில் 1927ல் பராசரன் பிறந்தார்
வியாசமுனியின் தந்தை பெயரும், ராமனுஜரின் பிரதான சீடருமான பராசரனின் பெயர் அவருக்கு இடபட்டது
ராமனின் குலதெய்வமான ஸ்ரீரங்க ரங்கநாதன் ஆலய அக்ரஹாரத்தில் பிறந்த அக்குழந்தைதான் பின்னாளில் உச்சநீதிமன்றத்தில் ராமன் ஆலயத்தையும் மீட்கும் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை
அவர் தந்தைக்கு உதவியாக இருந்தார் , அப்போதேபல மொழிகள் கற்றார் முக்கியமாக வேதங்களை இதிகாசங்களை கற்றார், தந்தைக்கு தட்ட்டச்சு செய்வது சட்ட குறிப்புகளை தயாரிப்பது என அவரின் இளமைபருவமே சட்டம் சார்ந்தே இருந்தது
அவரும் வழக்கறிஞரானார் அது சுதந்திரம் பெற்ற தருணம், இந்திய சட்டங்களை அப்போதே கசடற கற்று வழக்கறிஞரானாலும் சொல்லிகொள்ளும்படி ஏதுமில்லை
இதனால் சென்னை பார்த்தசாரதி கோவிலில் சென்று அந்த கண்ணனிடம் தனக்கு வழிகாட்டும்படி அடிக்கடி வேண்டுவார்
வழக்கறிஞர் தொழிலில் வருமானமில்லை, இதனால் ஆசிரியர் வேலைக்கு செல்லலாமா இதர வேலைகக்கு செல்லலாமா என அவர் போராடிய தருணம் அவருக்கு ராமனிடம் இருந்து ஒரு தெய்வீக அழைப்பு வந்தது
சோதனை காலங்களில் இருந்தவர் அடிககடி உபன்யாசம் கேட்க தொடங்கினார், திருவல்லிக்கேணியில் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் ஸ்ரீமத் ஸ்ரீ ராமாயண உபன்யாசத்தைக் கேட்டபோது உபன்யாசர் சொன்ன “ராமன் கதையினை படித்தால் கைரேகையே மாறும்” எனும் அந்த வரி அவருக்குள் விதையாய் விழுந்தது
ராமாயணத்தினை படித்து படித்து ராமபக்தனாய் அவர் மாற மாற வாழ்வும் மாறி உயர ஆரம்பித்தது
1960க்கு பின் வேகமாக அவர் வாழ்வு மாறிற்று, மோகன் குமாரமங்கலம் போன்றோரின் தொடர்பு கிடைத்தது
நிச்சயம் இவரின் வாழ்வினை அடுத்தகட்டத்தக்கு மாற்றியவர் காஞ்சி மஹாபெரியவர் அவர்தான் அன்று சர்ச்சைகுரிய அர்ச்சகர் நியமண சட்டத்தில் வாதாட நானி பால்கிவாலாவை ஏற்பாடு செய்தார், அப்படி செய்தவர் பாரசரனையும் அவரோடு சேர்ந்து உதவ கேட்டுகொண்டார்
அந்த சந்திப்பு உருக்கமானது, “நீயும் டெல்லிக்கு போ, உனக்கும் அங்க கடமைகள் நிறைய இருக்கு” என அனுப்பியவர் காஞ்சி மகாபெரியவர்தான்
அந்த வழக்கு வென்றது இருவருமே கட்டணம் வாங்கவில்லை அதன் பின் அரச வழக்கறிஞர் பணி அவரை தேடிவந்தது
ஆனாலும் இந்திராவின் மிசா கால கொடுமையில் இந்திரா செய்த அநியாயங்களை தற்காக்கும் நிலையில் இருப்பதை உணர்ந்து “தர்மத்தை காப்பதே என் கர்மா” என வெளியேறினார்
அந்த துணிச்சல் அவரை தமிழக மாகண அரச தலமை வழக்கறிஞராக்கியது, சோலிசிட்டர் ஜெனரெல் என அமர்ந்தார், பின் 1980களில் அட்டர்னி ஜெனரெல் எனும் பெரும் பதவி வந்தது
இதெல்லாம் ராமாயணம் படிக்க தொடங்கிய பின் வந்த உயர்வு என்பதால் அவர் ராமனை மனமார நம்பி வழிபட்டார்
காஞ்சி பெரியவரிடம் ஒருமுறை இவர் ஆசிபெற சென்றபோது “அனுமனை வணங்கு” என அவர் சொல்லிவிட சந்தண மரத்தில் ஒரு சிலை செய்து அந்த சிறிய சிலையினை தன் சட்டைபையில் வைத்தபடி வாதிடுவது அவர் வழமையாயிற்று
அதன் பின் அவர் எந்த வழக்கிலும் தோற்கவில்லை, வாதம் அவருக்கு அப்படி வந்தது
அவர் அரச வழக்குகளை தவிர எங்கும் முதலில் வாதாடியதில்லை, அநியாய வழக்கு என்றால் செல்லமாட்டார், ஒருமுறை குஜராத்தில் ஒரு அமைச்சருக்கு சிக்கல் என்றதும் தர்மம் அறிந்து அவருக்காக வாதாடி மீட்டார்
ஆனால் சல்லிகாசு வாங்கவில்லை, மந்திரி வற்புறுத்தியபோது சொன்னார், “இந்த தொகையினை ராஜிவுடன் செத்த மக்களுக்கு கொடுங்கள்”
இப்படியான அந்த உன்னத மாமனிதன் முதலில் அரசுக்கு எதிராக வாதாடிய இடம் ராமர் பால வழக்கு
ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டம் கட்டுவோம் என திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் அரசும் கைகோர்த்த காலங்களில் அவர் முதன் முதலாக அரசை எதிர்த்து வாதாடினார்
“ராமாயணம் படித்து உயர்ந்தநான் ராமர் பாலத்தை காக்காவிட்டால் அது அர்த்தமற்ற வாழ்வு’ என சொல்லி வந்து வாதாடினார்
சேது பாலம் தேசத்தின் உறவுபாலம், பெரும் அடையாள சின்னம் என அவர் வாதாடிதான் அப்பாலம் மீண்டது
ராமர்பாலத்தில் அவர் ராமன் பற்றி ராமாயணம் பற்றி வாதாடிய அந்த அற்புத காட்சிதான் கான்போரை வியக்க வைத்தது
ராமாயணத்தில் அனுமாரை பற்றி ராமர் சொல்வார், அனுமனுக்கு சொல்லின் செல்வன் என்றொரு பெயர் உண்டல்லவா? அவனின் வாதம் அவ்வளவு அழகாக இருக்குமாம் அதனால் அப்படி சொன்னார்கள்
அனுமன் வீரன் மட்டுமல்ல , சிறந்த தர்க்கவாதி அதனாலேதான் ராவணனிடம் மிக சரியான வாதங்களை செய்தான்
அந்த அனுமனை பற்றி ராமர் சொன்னார்
“ரிக் வேதத்தை கிரமப்படி அறியாவிட்டால் இவன் இப்படிப் பேசமுடியாது. யஜூர்வேதத்தைப் பூர்ணமாக அறிந்து மனத்தில் தரிக்காவிட்டால் இப்படிப் பேசமாட்டான்.
ஸாம வேதத்தின் ரஹஸ்யத்தை அறியாதவன் இப்படிப் பேசமாட்டான். இவன் சகல வியாகரணங்களையும் பூர்ணமாகப் பலமுறை கற்றிருந்திருக்கிறான் என்பது நிச்சயம்.
அவன் பேசும் வாக்கியங்களில் ஒரு பிசகான சப்தத்தைக் கேட்கமுடியவில்லை முகத்திலும், நெற்றியிலும் புருவத்திலும் மற்ற அவயங்களிலும் யாதொரு தோஷமும் பேசும்பொழுது காணப்படவில்லை.
அவன் பேசும் வாக்கியங்கள் அதிக வேகமில்லாமலும், இருதயத்தில் தோன்றி, கழுத்தில் ஒலித்து மத்யம ஸ்வரத்தில் உச்சரிக்கப்படுகின்றன. இவனைப் கொல்ல கத்தியுடன் பாயும் சத்துருவும், கோபம் தணிந்து சாந்தம் ஏற்பட்டு இவனுக்கு வசப்படுவான்”
அந்த வாக்கியத்தை பராசரனிடம் கண்டவர்கல், ராமர் பிறந்த அயோத்தியினை மீட்க அவர்தான் சரியான நபர் என அடைக்கலாமானார்கள்
வழக்கு தொடங்கும்போது அவருக்கு வயது 92
நம்புவீர்களோ இல்லையோ, அந்த 40 நாட்கள் தொடர் வழக்கில் அவர் நோன்பு இருந்தார், காலையும் மாலையும் ராமநாபம் ஜெபித்து கொண்டிருந்தார், அந்த வயதிலும் தளராமல் வாதாட வந்தார்
“தாய், தாய்நாடு சொர்கத்தை விடப் பெரியது” என அவர் வாதத்தினை தொடங்கியபோது மன்றம் நிசப்தமாக அவரை கவனித்தது
அவர் காலில் செருப்பு அணியவில்லை
நீதிபதி அவரின் வயது குறித்து பரிவாக ஒரு நாற்காலி போட சொன்னபோது அவர் சொன்னார் “இங்கு என் ராமனும் வந்திருக்கின்றான், அவன் சார்பாகத்தான் நான் வாதாடுகின்றேன்
அவன் முன்னால் செருப்பு அணியாமல் நிற்கும் நான் எப்படி அமரமுடியும்?” என சொல்லி மறுத்தார்
பார்த்தவர் கண்களில் கண்ணீர் வந்தது
அந்த மனிதன் மிக துல்லியமாக வாதாடினான், அனுமனின் ஆவி இறங்கியது போல் அப்படி வாதம் இடியென முழங்கிற்று
பரா: – என்றால் எதிரிகள் என்று பொருள், சர: என்றால் அம்புகள். ‘பராசரா’ என்றால் எதிரிகளை தன் வாதங்களின் அம்பு மழையால் தோற்கடிக்கும் வீரர் என்பது அங்கு சரியாயிற்று
அவரின் வாதங்களில் முக்கிய வார்த்தைகள் இவை
” ராமரின் ஆத்மா அந்த இடத்தில் இருக்கிறது என்று இந்துக்கள் நம்புகிறார்கள், எனவே பகவான் ராமர் பிறந்த இடத்தில் உள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை வாழ்கிறது
கங்கை புனிதமான நதி , இமாலயம் புனிதமான மலை, காசி புனிதமான இடம் என்பதை சட்டம் வரையறை செய்யமுடியுமா? அரசாங்கம் வரையறுக்க முடியுமா?
அரசுகள் வரும் போகும், சட்டங்கள் மாறிகொண்டே இருக்கும் , ஆனால் இந்நாட்டின் தாத்பரியம் மாறாது, ஞானபெரிய நம்பிக்கை ஆத்ம நம்பிக்கை மாறாது
அயோத்தி என்பது கால காலமாக இந்துக்களின் புனிதபூமி, காசிபோல் கங்கைபோல் அந்த ராம் லல்லாவுக்கு புனித தன்மை உண்டு
அந்த புனிததன்மையினை நீதிமன்றம் கொடுக்கமுடியாது, சட்டம் கொடுக்கமுடியாது அரசுகள் கொடுக்க முடியாது, காரணம் அதை கொடுத்தவன் ராமன்
அந்த புனிததன்மையினை யாரும் மறுக்கவும் முடியாது, அதனால் இந்த நீதிமன்றம் அந்த புனித தன்மையினை அங்கீகரிக்க வேண்டும் என மட்டும் கோருகின்றேன்
என்ன ஆதாரம் வேண்டும் என்கின்றீர்கள்? ஆளாளுக்கு ராமன் உண்டா, அயோத்தி உண்டா என்பதெல்லாம் எப்படியான வாதம்? பன்னெடுங்கால பாரம்பரியம் கொண்ட ராமனுக்கு வெறும் 69 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்த நீதிமன்றம் எப்படி அயோத்தியில் அவனுக்குரியதை மறுக்கமுடியும்?
கீதையினை சொன்னான் கண்ணன் என்பது நம்பிக்கை, கங்கை பரிசுத்தமான நதி என்பது நம்பிக்கை , குருஷேத்திரத்தில் யுத்தம் நடந்தது என்பது நம்பிக்கை
பன்னெடுங்காலம் இருந்துவரும் அந்த புனிதமான நம்பிக்கையில் ஒன்றுதான் ராமர் ஆலயம், ராமபிரான் நடந்து சென்ற ராமர்பாலத்தை அங்கீகரிக்கும் மன்றம் எப்படி அவர் பிறந்த இடத்தை மறுக்க முடியும்?
ராம நவமி கொண்டாட விடுமுறை கொடுப்பது அரசாங்கம், ராம்லீலா கொண்டாட விடுமுறை கொடுப்பது அரசாங்கம், அப்படியான நாட்டில் அயோத்தி ஆலயத்துக்கு மட்டும் ஆதாரம் கேட்பது விசிதிரமாக இல்லை
காலம் காலமாக ராமன் பெயரில் இதிகாசம், வழிபாடு, புராணம், கலை பாடல் என கொண்டிருக்கும் நாட்டில் அதைவிட அவனுக்கு என்ன ஆதாரம் இந்த் மன்றம் கொடுத்துவிடமுடியும்?
நேபாளத்தில் சீதை பிறந்த இடத்தில் கோவில் உண்டு, இலங்கையில் சீதை பிறந்த இடத்தில் ஆலயம் உண்டு, அங்கெல்லாம் இருப்பது போல் ஒரு ஆலயம் இங்கே எப்படி இல்லாமல் இருந்திருக்க முடியும்? அந்த ஆலயத்தைத்தான் நாங்கள் கேட்கின்றோம்
கண்ணன் பிறந்த மதுரா என ஒரு இடத்தை வணங்கும் எம் சமூகம், ராமன் பிறந்த இடத்தை எப்படிவிடும், அந்த இடத்தில் பள்ளிவாசல் வந்தாலும் போராடும், அந்த போராட்டம்தான் இங்கு வழக்கு
கோவில் இருந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டிவிட்டால் மட்டும் அது பள்ளிவாசலாகிவிடாது, கோவில் எக்காலமும் கோவில்தான் அதனை இந்த மன்றம் அங்கீகரிக்க வேண்டும்” என அவரின் வாதங்கள் அணல் பறந்தன
40 நாட்களில் அவர் வாதிட்ட தருணங்கள் எழுதினால் பக்கம் தீராது, அவ்வளவு முனைப்பாக ராமனை, அயோத்தியினை இந்திய தொன்ம நம்பிக்கை மட்டுமல்ல, நேபாளம் இலங்கை எல்லா இடத்தின் ராம தொடர்பை வாதிட்டபோது யாரிடமும் பதில் இல்லை
தன் கடைசி முக்கிய வாதம் அன்று அவர் திணறினார், குழறினார், அவருக்கு என்னாயிற்று என எல்லோருக்கும் பதைபதைப்பு உண்டாயிற்று
கையினை மேஜையில் ஊன்றியபடி தன் சட்டைபையினை தொட்டவர் “ராமா” என கத்தினார், ஆம் அந்த அனுமர் சிலையினை அவர் அன்று எடுத்துவரவில்லை
உடனே அவரின் ஊழியர்கள் அதனை ஓடி சென்று எடுத்து கொண்டுவந்தார்கள், அதை சட்டை பையில் வைத்ததும் மிக முக்கிய வாதத்தை சொன்னார்
“பாலஸ்தீன பெத்லகேமில் இயேசுவுக்கு அவர் பிறந்த இடத்தில் ஒரு ஆலயம் வந்ததே எப்படி வந்தது? எந்த ஆதாரத்தில் வந்தது, யூதரும் இஸ்லாமியரும் மோதும் தேசத்தில் கிறிஸ்துவ பிதாமகனுக்கு எப்படி ஆலயம் வந்தது?
ஆதாரத்தால் அல்ல, மத நம்பிக்கையால். கயாவில் புத்தன் ஞானம்பெற்றான் என ஒரு ஸ்தூபி உண்டல்லவா? அதன் ஆதாரம் என்ன?
அதைத்தான் நான் இங்கே சுட்டிகாட்டுகின்றேன்”
இப்படி பெரும் முழக்கங்களை மிக தெளிவாக ஆதாரங்களை அவர் அடுக்கினார் , அடுக்கிவிட்டு ராமா ராமா என்றபடி வாதத்தை முடித்தார்
அன்றே நீதிபதிகள் மனதுக்குள் தீர்ப்பை வரைந்துவிட்டனர், அவர் வாதங்களை முடித்த அன்று 92 வயதான அவருக்கு பெரும் மரியாதை செய்யபட்டது
தீர்ப்பு நாள் வந்தது, பரசாரர் எழுந்தார் ராமாநாமம் பாடினார், ராமனை தொழுதுவிட்டு வெளிவந்தார் , வாசலில் சில குரங்ககள் வந்து நின்ற்ன
அதனை கண்டு “ஜெய் ஸ்ரீராம்” என்றவர் புன்னகைத்தார், பின் நீதிமன்றம் சென்றார்
வழக்கு இந்துக்களுக்கு மட்டும் அந்த இடம்சொந்தம் என முடிவினை சொன்னது, அமைதியாக “ஜெய் ஸ்ரீராம்” என்றவர் கன்ணீர் விட்டார்
அவரை பத்திரிகையாளர் சூழ்ந்தனர், அவர் அதிகம் பேசவில்லை , தேர்ந்தெடுத்த வார்த்தைகளை சொன்னார்
“”கோயிலுடன் கூடிய ராமஜென்ம பூமி என்ற நீண்ட நாள் கனவு ராம பக்தர்களின் தூய பக்தியினால் திரும்பக் கிடைத்து இருக்கிறது”
பின் தீர்ப்பின் நகலை பெற்று அயோத்திக்கு சென்று ராமனுக்கு சமர்பித்து தன் கடமையினை செய்ததாக எழுதி வைத்தார்
அதாவது ராமனுக்கு ஒரு ஊழியன் போல தான் இருந்ததை ஒரு ஆவணமாக எழுதி ராமனிடமே அந்த அயோத்தி இடிபாட்டில் வைத்துவிட்டு விழுந்து வணங்கினார்
இன்று எல்லா ராமபக்தர்களையும் போல அவர் ராமனின் கும்பாபிஷேகத்தை காண காத்திருக்கின்றார்
96 வயதில் அவர் நடுங்கும் கரங்களுடன் ராமன் ஆலயத்தை காணா காத்திருக்கின்றார்
ஸ்ரீரங்கத்தில் பிறந்து ராம பக்தனாய் வளர்ந்து ராமர் பாலம் மீட்டு பின் அயோத்தியினையும் மீட்டு காட்டிய அவர் சாதாரண ஆத்மாவாக இருக்கவே முடியாது
காஞ்சி பெரியவருக்கு அவர் யார் என்பது தெரிந்திருந்தது நமக்கெல்லாம் அது மாபெரும் புண்ணிய ஆத்மா என்று மட்டும் தெரிகின்றது
74 வயதான ராம பத்ராச்சாரியர் எனும் அந்த சன்னியாசியும், 96 வயதான பரசரனும் ராமனுக்கு அடுத்து அங்கு வணங்க வேண்டிய மாமனிதர்கள், அவர்கள்தான் கடைசியில் முக்கிய இடத்தில் பெரும் திருப்பம் கொடுத்து ராமன் இடத்தை மீட்க துணை நின்றார்கள்
ஒருவர் வசிஷ்ட முனிவர் சாயல், இன்னொருவர் அனுமான் சாயன் என்பதை விட என்ன சொல்லி வணங்கமுடியும்?
இந்துமத அடையாளங்களும் பெரும் ஞானியரும் ரிஷிகளும் பராக்கிரசாலிகளும் ஒருகாலமும் மறைவதில்லை, ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு பெயரில் அவர்கள் நம்மோடுதான் இருக்கின்றார்கள்
அப்படி அயோத்தி தர்ம மீட்பில் நாம் கண்ட வடிவங்கள் ராம பத்ராச்சாரியரும் , பரசரன் அவர்களும் என்பதே ஒவ்வொரு இந்துவும் உணர்ந்துகொள்ளும் உண்மை
(தொடரும்..)