அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 10 /21
சுதந்திர இந்தியாவில் நீதிப்போராட்டம் (1947 முதல் 1989 வரை)
1947ல் சுதந்திரம் அடைந்த பின்பும் இனி இந்துக்கள் நாட்டில், அதுவும் இஸ்லாமியருக்கு ஒரு தேசம் அமைத்து கொடுக்கப்பட்ட பின்பும், நாட்டில் ராமர் கோவிலுக்கு தடை இருக்காது என எண்ணிய இந்துக்களுக்கு நேருவின் இன்னொரு முகம் மிகப்பெரிய அதிர்ச்சியினை கொடுத்தது.
நேரு மொகலாய வம்சத்தில் வந்தவர் போலவே நடந்துகொண்டதும், எக்காரணம் கொண்டும் கோவில் வரக்கூடாது என அவர் விரும்புவதும் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது.
ஆனாலும் முறைப்படி போராட முடிவு செய்த இந்துக்கள் உத்திரபிரதேச அரசிடம் கோரிக்கை வைத்தார்கள், அவர்கள் சம்மதித்து அயோத்தி மாவட்ட ஆட்சியாளருக்கு அந்த கோரிக்கை அனுப்பி வைக்கபட்டது.
டெல்லியில் இருந்து உரிய பதில் இல்லை, அது காஷ்மீர் போர்க்காலம் இன்னும் சமஸ்தானங்கள் இணைப்பு காலம் என்பதால் இந்துக்களும் காத்திருந்தனர், நேரு வழக்கம்போல் அமைதி காத்தார்.
1948ல் இஸ்லாமிய வக்ஃப் வாரிய அதிகாரியின் அறிக்கை ஒன்று வெளிவந்தது. அது வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை கூட பள்ளிவாசல் பக்கம் செல்ல முடியவில்லை. தாக்குதல் நடத்துகின்றார்கள், ஆடுமாடுகளை அடைத்து வைத்துவிடுகின்றார்கள். எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. சென்றாலும் பள்ளிவாசல் கடமைகளைச் செய்யும் சூழல் இல்லை எனச் சொல்கின்றார்.
அதாவது இஸ்லாமியர் சார்பாக எந்த பெரிய கூட்டமுமில்லை, பிரச்சினை இல்லை, வருவதே ஒரு சிலர்தான் அதுவும் வெள்ளிக்கிழமை மட்டும்தான், மேலும் அயோத்தியிலேயே 15 மசூதிக்கள் இருந்தன. ஆக பிரிட்டிசார் செய்த விடாப்பிடியான நிலைப்பாட்டை, இந்த பள்ளிவாசல் இருந்தே தீரவேண்டும் எனும் நிலைபாட்டை நேருவும் தொடர்கின்றார் என்பது தெரிகின்றது.
ஆனால் நாடெல்லாமிருந்து இந்துக்கள் குவிந்தார்கள், அங்கே மேடைகட்டி ராமாயண சொற்பொழிவு செய்தார்கள், பெரும் ஞானியரும் பண்டிதரும் ராமாயண உபன்யாசம் செய்தார்கள், நாம பாராயணம் நடந்தது. ராம் சபூத்ரா (குழந்தை ராமர் இருந்த இடம்) மேடை அருகே அது நடந்தது.
இந்த கூட்டத்தைத்தான் அதாவது ராமாயண சொற்பொழிவு நடந்த, பாராயணம் நடந்த கூட்டத்தைத்தான் மதவெறியர்கள் என நேருவும் காங்கிரசாரும் சொல்லிக் கொண்டார்கள்.
இக்காலகட்டத்தில் கவனிக்கவேண்டிய விஷயம் மாமனிதர் பட்டேல்.
பட்டேல் அப்போது இரு விஷயங்களில் தீவிரமாக இருந்தார். முதலாவது சமஸ்தானங்களை ஒன்றிணைப்பது; இரண்டாவது சோம்நாத் ஆலயத்தை மீளக்கட்டுவது.
நவீன இந்தியா, ஐரோப்பிய பாணி இந்தியா எனும் கனவில் இருந்த நேருவுக்கு பட்டேல் சோம்நாத் ஆலயத்தை மறுசீரமைப்பது பிடிக்கவில்லை. சிலமுறை அதிருப்திகளை வெளிப்படுத்தினார்.
ஆனால் பட்டேல் சாதாரணமானவர் அல்ல, அழிந்துகிடந்த சோம்நாத் ஆலய வாசலில் நின்று முன்பே சபதம் எடுத்தவர், அதை கட்டி தீருவேன் என சத்தியம் செய்தவர்
அப்படிபட்டவர் நேருவினை புறக்கணித்தார், சோம்நாத் ஆலயம் மக்களின் உணர்வு அதை எக்காரணம் கொண்டும் விடமாட்டோம் என பணிகளை தொடங்கினார்
குஜராத்தை சேர்ந்த பட்டேல் சரியான இந்துவாக இருந்தார், ஆனால் உத்திரபிரதேசத்தை சேர்ந்த நேருவுக்கு அந்த மனமும் எண்ணமும் இல்லை
பட்டேலை காஷ்மீர் விவகாரம், தன் மாகாணமான உபியின் அயோத்தி விவகாரம் என தள்ளி வைத்தார் நேரு. பட்டேல் சோம்நாத் ஆலயத்தை கட்டி சில மாதங்களிலே காலமாகி போனதும் துரதிருஷ்டம்.
இல்லையேல் பட்டேல் உறுதியான முடிவினை அயோத்தியில் அன்றே தந்திருப்பார்.
அந்த நேருவிடம் பேசி பிரயோசனமே இல்லை என இந்துக்கள் மனமொடிந்தனர், ராமர் ஆலயத்துக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார்கள் அது “பாரதிய ராமாயண மஹாசபா”
அந்த ராமாயண மஹாசபாவுடன் கோரக்நாத் மடம் இணைந்து போராட வந்தது, அதன் அப்போதைய மடாதிபதி மகான் மஹந்த திக்விஜய் நாத்
இவர்தான் இன்றைய உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் குருவின் குரு, இவரின் வரலாறும் பாரம்பரியமும் பெரிது.
அவர் சுதந்திரப் போராட்ட தியாகி, பிரிட்டிஷார் காலத்தில் சிறைவாசமெல்லாம் நிறைய உண்டு, வாழ்வையே நாட்டுக்காக கொடுத்தவர் அவர்.
பிரிட்டிசார் அகன்றால் எல்லா தடையும் நீங்கும் என நம்பியவர்களில் அவரும் ஒருவர்.
இந்த மடாதிபதிதான் 1949ல் டிசம்பர் 13ல் துளசிதாசரின் ராமாயணத்தை “ராம்சரித மானஸ்” என ஒன்பது நாள் ராமாயண பாராயணம் செய்துவிட்டு கோவில் கட்டுவோம் என போராட்டத்தை தொடங்கினார்.
இந்த அழைப்பு பெரும் திருப்பம் கொடுத்தது, ஏராளமானோர் களத்துக்கு வந்தார்கள். அப்படி வந்தவரில் பீஹாரை பூர்வீகமாக கொண்ட அபிராம் தாஸ் எனும் சாது முக்கியமானவர்.
இவர் 1934ம் ஆண்டே அயோத்திக்கு வந்து ஹனுமான் கத்தியில் இருந்த சரயூதாஸரின் சிஷ்யரானார், பின் அந்த சரயூதாசருக்கு பின் அவரின் மடத்தின் தலைமை மடாதிபதியானார்.
இவர் அயோத்தியில் வெகு பிரபலம், இவர் சாதுமட்டுமல்ல பெரும் விளையாட்டு வீரர். ஆஜானுபாகுவான உடல்வாகை கொண்டவர், மல்யுத்தத்தில் பெரும் வீரர்.
அவரின் உருவமும் பலமும் மல்யுத்தமும் சாட்சாத் அனுமனை நினைவுபடுத்துவது போலவே இருந்தது, அவரின் பெரும் கனவு அல்லது ஒரே கனவு அல்லது லட்சியம் ராமர் கோவிலை காண்பது.
இவர்தான் துணிந்து எழுந்தார், அந்த பாராயணம் நடந்து முடிந்த 1949 டிசம்பர் 22ம் தேதி தன்னுடன் விருந்தாவன் தாஸ் உள்ளிட்ட சிலரை சேர்த்து கொண்டு பள்ளிவாசலில் புகுந்து அங்கே முன்பு இந்துக்கள் எங்கே ராமன் ஆலய கருவறையினை வணங்கினார்களோ அங்கே ராமன் விக்ரஹத்தை வைத்துவிட்டார்.
அதுவரை வெளியில் இருந்த குழந்தை ராமர், ஒரு குடிசையில் இருந்த ராமர் உள்ளே தன்னிடத்துக்கு சென்றார்.
அயோத்தி நவாப் காலத்தில் இந்துக்கள் உள்ளே செல்ல உரிமை உண்டு, அவர்களுக்கு உரிமை இன்னும் கூடிக்கொண்டே இருந்தது, கர்ப்பகிரஹம் இருந்த இடத்தில் வழிபடும் உரிமை உண்டு.
அதை பிரிட்டிஷார்தான் தடுத்து அனுமதி மறுத்தனர், அந்த பழைய உரிமைப்படி இப்போது வெளியில் இருந்த வழிபாட்டை உள்ளே கொண்டு சென்றார் அந்த பயில்வான் சாது.
எதிர்பார்த்தபடி இஸ்லாமியரிடம் இருந்து ஒரு புகாரும் வழக்கும் வரவில்லை, யாரும் எதுவும் சொல்லவில்லை, காவல்துறை அதிகாரி ஒருவர் மட்டும் நாட்டின் சட்டதிட்டபடி ஒரு புகாரை பதிவு செய்து வைத்துகொண்டார்.
அயோத்தியும் தேசமும் அமைதியாக இருந்தது எங்குமே சலசலப்பில்லை, இது எதிர்பார்க்கபட்ட ஒன்று. என்றோ இஸ்லாமியர்கள் ராமர் பிறந்த இடத்தை விட்டுக்கொடுத்துவிட்டார்கள் என்பதால் எங்கும் சிக்கல் இல்லை.
இனி கோவில் கட்டலாம் எனும் நிலை வந்தது, உத்திரபிரதேச அப்போதைய முதல்வர் கோவிந்த் வல்லப் பந்த் என்பவர் இந்துக்களுக்கு ஆதரவாகவே இருந்தார்.
ஆனால் நேரு சீறினார், இதெல்லாம் காஷ்மீர் விஷயம், பாகிஸ்தானின் நல்லுறவில் சிக்கலை கொண்டுவரும். இதை அனுமதிக்க முடியாது சிலைகள் அகற்றபடவேண்டும் என சீறினார்.
இந்துக்கள் அதிர்ந்தார்கள், பாகிஸ்தான் நேற்று முளைத்த தேசம். அதுவும் பகை தேசம், காஷ்மீர் சிக்கல் இப்போது வந்தது. ஆனால் ஓராண்டில் வந்த பாகிஸ்தானுக்காக 450 வருட போராட்டத்தினை எப்படி ஒப்பிடமுடியும் என பெரும் கொந்தளிப்பினை காட்டினார்கள்
நேருவோ இதெல்லாம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையினை சிதைக்கும் என பிடிவாதமாக இருந்தார்
அவர் காலத்தில் ஐரோப்பிய மதமாற்றிகள் பலர் தொண்டு நிறுவனம் என தொடர்ந்தார்கள், பலர் வந்துகொண்டே இருந்தார்கள், சிறுபான்மையினரின் காவலுக்காகவே தேசம் சுதந்திரம் பெற்றதாகவும், அதற்கு இந்துமதம் அழியவேண்டும் என்பதுபோல் அவரின் நடவடிக்கைகள் இருந்தன.
ஆனால் அன்றைய உபி முதல்வர் கோவிந்த் வல்லப் பந்த் களத்தினை அறிந்தவர்; மக்களின் மனதை உணர்வை புரிந்தவர். அதனால் அதெல்லாம் முடியாது, சிலை வைக்கப்பட்டது வைக்கபட்டதுதான் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனாலும் நேருவின் மிரட்டல் தொடர்ந்தது, பைசாபாத் கலெக்டர் இருந்த கே.கே நாயர் என்பவரை அறிக்கை தர சொன்னார் கோவிந்த் வல்லப பந்த்
நாயர் தேர்ந்த சொற்களால் அறிக்கை எழுதினார்.
“ஹிந்துக்கள் உணர்வுகளின் ஆழத்தை புரியாத ஒருவரால் தான் இதை சொல்ல முடியும். இது மிகவும் தவறு. அப்படியே நான் அகற்ற சொன்னாலும், இங்கு அயோத்தியில் ஒருவரும் அந்த இழி செயலை செய்ய முன்வரமாட்டடார்கள்”
அங்கே நிலவரம் அப்படித்தான் இருந்தது, யாரும் சிலையினை அகற்ற சொல்லவில்லை. யாரும் எதிர்க்கவுமில்லை. ஆனாலும் நேருவின் பிடிவாதம் வழக்கானது.
நாயரே கொடுத்த ஆணைதான் பின்னாளில் ராமர்கோவில் கட்ட காரணமாயிற்று , அவர் வலுவான அடிதளம் அமைத்து கொடுத்தார்.
முதலிலே விக்ரஹம் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட கூடாது, வைக்கபட்டது வைக்கப்ட்டபடி இருக்கட்டும். குரு கோரக்பூர் பீடாதிபதி மஹந்த் திக்விஜய் நாத் மட்டும் சென்று வழக்ககான பூஜை செய்யட்டும், பொது வழிபாட்டுக்கு, இந்து இஸ்லாம் என இருவருக்குமே அனுமதி இல்லை, வழக்கு முடியும் வரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது
1950ம் ஆண்டு அந்த வழக்கு இந்த நிபந்தனையுடன் தொடங்கபட்டது, நாயர் அந்த பெரும் தர்மமான ஆணையை வழங்கினார், அதை தொடர்ந்து அவருக்கு நெருக்கடிகள் அதிகரித்தன, மாறுதல் வழங்கபட்டு அவர் அலைகழிக்கபட்டார்.
வழக்கு நீண்டு கொண்டே சென்றது
ராமருக்கு அந்த கட்டடத்தின் உள்ளே கருவறையில் அந்த குரு மட்டும் பூஜை செய்து வந்தார். அது விடாமல் நடந்தது, பக்தர்கள் வெளியில் பழையபடி மேடை அமைத்து அங்கு வணங்கி கொண்டார்கள்
இந்த நிலை அடுத்த 12 வருடம் நீடித்தது, வழக்கு கிடப்பில் போடப்பட்டது போல் கிடந்தது. இந்துக்கள் எரிச்சலுடன் அமைதி காத்தார்கள், ராமனுக்கான பூஜை மட்டும் தொடர்ந்தது.
1961ல் வக்ஃப் வாரியம் முதல் முறையாக வழக்குக்குள் வந்தது. ஆனால் அப்போதும் நீதிமன்றம் எந்த சரியான பதிலும் சொல்லவில்லை.
1964ல் இந்துக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள், அதுவரை அவர்களுக்கு ஆங்காங்கே மடங்கள் உண்டு. ஆனால் நாட்டின் மடமெல்லாம் இணைந்த அமைப்பு இல்லை, இன்றுவரை இல்லை.
அப்படியே இந்துக்களுக்கான அமைப்புக்கள் இருந்தன. அதுவும் பெரிதாக பலமாக ஏதுமில்லை, இனி அயோத்திக்கு மட்டுமல்ல இந்துக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒன்றாக குரல்கொடுக்க பெரும் இயக்கம் அவசியம். இந்துக்களை, உலகம் முழுக்க இருக்கும் இந்துக்களை ஒரு அமைப்பில் திரட்டவேண்டும் என முடிவெடுத்தார்கள்.
அதன்படி கோல்வால்கர் மற்றும் தாதாசாகேப் ஆப்தே இருவரும் இணைந்து ஆட்களை திரட்டினார்கள். ஸ்வாமி சின்மயானந்தாவை உள்ளே அழைத்தனர்.
150 சாதுக்கள், மடாதிபதிகள், ஆச்சார்யர்கள், பழைய ஹிந்து சமஸ்தானங்கள், சமுதாயத்தில் முக்கியஸ்தர்கள் (நீதிபதிகள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், அரசியல்வாதிகள்) ஆகிய பலர் வந்தார்கள்.
இதில் சீக்கியர்களும், நைரோபி, மேற்கிந்திய தீவுகள் போன்ற இடங்களில் 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்களால் அழைத்து செல்லப்பட்டோரின் இந்திய இந்துக்களின் வம்சாவழிகளும் உலகெங்கும் இருந்து இணைந்தார்கள். காரணம் அவர்களுக்கும் அங்கே இந்துக்களாக வாழ்வதில் சில சிக்கல்கள் இருந்தன
1964ம் ஆண்டு கோகுலாஷ்டமி அன்று அது தொடங்கப்பட்டது. உலகளாவிய ஹிந்துக்கள் தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்பில் இருக்க, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, ஹிந்து ஆலயங்களைக் காத்தல், கட்டாய மதமாற்ற தடுப்பு, வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினரை இந்தியாவுடன் தொடர்பில் இருக்க உதவி என பல தீர்மானங்கள் வந்தன.
இந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தும் வழக்கினை எதிர்பார்த்தது. ஆனால் 1950ல் தொடரப்பட்ட வழக்கு 1984 வரை சத்தமே இல்லாமல் நீடித்தது, ஒரு முன்னேற்றமில்லை.
வழக்கு தொடர்ந்தது. முடிவு வராத நிலையில் பொறுமையிழந்தனர் ஹிந்துக்கள், 1984 – விஸ்வ இந்து பரிஷத் (VHP) ராம ஜன்ம பூமி இயக்கம் தொடங்கியது, கர சேவை மூலம் ராமர் கோவில் கட்ட அழைப்பு விடுத்தனர்.
இந்த 34 வருட காலகட்டத்தில் அதாவது நேரு 1964ல் மறைந்தாலும் அதன்பின் வந்த சாஸ்திரி இருவருடத்துக்கு குறைவாகத்தான் பதவியில் இருந்தார், அவர் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்திகொண்டிருந்த காலத்திலே மரணித்தார்
அதன் பின் வந்த இந்திரா தந்தை நேரு போலவே அயோத்தியில் நிலைப்பாட்டை கொண்டிருந்தார், மிகப்பெரிய ஒற்றை ஆட்சியினை சக அதிகாரங்களுடன் நடத்திய காலங்களில் நீதிமன்ற அயோத்தி வழக்கு நீண்டுகொண்டே சென்றது.
கூடுதலாக சீக்கியருடன் இந்திரா முறுக, நிலைமை மோசமாகி பஞ்சாபிய பதற்றம் வந்து இந்திரா காலமும் அதோடு முடிந்தது
1986ல் ராஜிவ் காலத்தில் நீதிமன்றம் மெல்ல வாய் திறந்தது. இனி ஜன்மஸ்தானத்தை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கலாம் என நீதிமன்றம் சொன்னது, அப்போது கோரக்பூரின் அடுத்த மடாதிபதியாக இருந்த மஹந்த அவைத்யநாத் அந்த பூஜையினை முதலில் செய்தார்.
நீதிமன்றம் உத்தரவு கொடுத்தபின்னும் குழப்பம் அதிகரித்தது, 1987 ல் சயித் சகாபுதீன் தலமையில் ஒரு இஸ்லாமிய குழு பள்ளிவாசலை பூட்டவேண்டும் என போராட்டத்தை அறிவித்தது, இந்த போராட்டத்துக்கு பெருவாரி இஸ்லாமியர் வந்தனர்
இவர்களுக்கு பழைய வரலாறுகள் தெரியவில்லை, எவ்வளவுக்கு போராட்டம் நடந்து இஸ்லாமியர்களே விட்டுகொடுத்த இடம் அது என்பது தெரியவில்லை. மாறாக ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் எழுச்சி, சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான தாலிபன் பிரச்சாரம், அந்த வேகம் காஷ்மீரில் இந்தியாவில் கொடுத்திருந்த ஒரு பாதிப்பு எல்லாம் ஒரு கொந்தளிப்பினை கொடுத்தது
அப்போது இந்தியா பலஸ்தீன போராளி அராபத்துக்கு டெல்லியில் இடம் கொடுத்திருந்தது, இப்படி இந்தியா உலகெல்லாம் ஒரு இஸ்லாமிய காவல் தோற்றத்தை காட்டும்போது, ஈரானிய கோமேனி எழுச்சி என பல விஷயம் நடந்தபோது இந்திய இஸ்லாமியர் பலரும் வரலாற்றை மறந்துவிட்டு திரண்டனர்
1950லேயே முடிந்திருக்க வேண்டிய சிக்கல் நேருவினால் மீண்டும் கிளறப்பட்டு, இந்திராவினால் நெருப்பாக்கப்பட்டு, ராஜிவ் காலத்தில் உச்சமானது.
இந்த இஸ்லாமியர் போராட்டம் 1988ல் இன்னும் தீவிரமானது பாபர் பள்ளிவாசலில் கூட்டு தொழுகை செய்யவேண்டும என குரலெழுப்பினார்கள். தேதியும் குறித்தனர்.
பெரும் பதற்றம் இக்காலங்களில்தான் வந்தது
கவனிக்கவேண்டிய விஷயம் இக்காலகட்டத்தில் பாரதிய ஜனதா எனும் கட்சி தொடங்கபட்டு சில வருடங்கள்தான் ஆகியிருந்தது. இரண்டு எம்பிக்கள் மட்டுமே.
அவர்கள் இந்த விவகாரத்தினை கையில் எடுக்கவே இல்லை, ஆனால் எல்லா இந்துக்களை போல ஆதரவினை மட்டும் தெரிவித்தார்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், கோரக்பூர் மடமும் இன்னும் பல இந்துக்களும்தான் இங்கு களத்தில் இருந்தது.
இஸ்லாமியரின் கூட்டுத் தொழுகை அறிவிப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் பதில் நடவடிக்கை காட்டியது, அவர்கள் அறிவித்த தொழுகை தேதிக்கு நான்கு நாட்கள் முன் பெரும் யாகம் செய்ய கிளம்பினார்கள்.
ராம ஜன்ம பூமி முக்தி யாகம் என அதற்கு பெயர், ஏராளமான ஹிந்துக்கள் கலந்து கொண்டனர். ராணி விஜயராஜே சிந்தியா அதில் முக்கியமானவர்.
பெரும் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், யோகிகள் என பல லட்சம் பேருக்கு மேல் திரண்டனர். இந்த பெரும் எதிர்ப்பால் இஸ்லாமிய அமைப்புக்கள் பின் வாங்கின, கூட்டுதொழுகை கைவிடபட்டது.
இந்த போராட்டம் இப்படி நடக்கும் போது அதுவரை அது அரசியலாக்கபடவில்லை, எந்த கட்சியும் அதைத் தொடவில்லை அல்லது தொடுவதற்கு எந்த இந்து அபிமான கட்சியும் அன்று இல்லை.
ஜனதா தளமோ, கம்யூனிஸ்டுகளோ என்றுமே இந்துக்களை பற்றி கவலைபட்டவர்கள் அல்ல என்பதால், யாரும் அரசியலாக்கவில்லை
பாஜகவுக்கு இந்து அபிமானம் இருந்தாலும் அவர்கள் முந்திக் கொள்ளவில்லை
அந்த 1989ல் ராஜிவ்காந்தி பெரும் சிக்கலில் இருந்தார், இலங்கையில் இந்திய ராணுவ குழப்பம், போபர்ஸ் ஊழல், போபால் விஷவாயு சிக்கல் என அவர் கடுமையாக சிக்கியிருந்தார்
எதிர்கட்சிகள் அவரை முடக்கியிருந்த நேரம், அவர் அந்த அறிவிப்பினை 9ம் பாராளுமன்ற தேர்தலில் சொன்னார், அதாவது அயோத்தியில் இந்துக்களுக்கு கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பேன், ராம ராஜ்யம் தருவேன் என அயோத்தியில் தேர்தல் ப்ரச்சாரத்தை அவர் தொடங்க, விஸ்வ ஹிந்து பரிஷத் அடிக்கல் நாட்டுமளவு வந்தது.
பாஜக அந்த விவகாரத்தை கையில் எடுத்தது இதற்கு பின்னர்தான்.
(தொடரும்..)