அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 08 /21
ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம்…(1882 – 1947)
பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி தொடங்கப்பட்டபின் இந்தியர்களின் சுதந்திர போராட்டம், ஆயுத போராட்டம், அறவழி போராட்டம், ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பு என தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
அக்காலகட்டத்திலும் அயோத்தியில் இந்துக்களும் சீக்கியர்களும் போராடிக் கொண்டேதான் இருந்தார்கள். தேசம் முழுக்க சுதந்திரபோர் என நடந்தாலும் அயோத்தியில் அந்த வீரியம் கொஞ்சமும் குறையவில்லை.
இந்துக்களின் எழுச்சி மிகத் தீவிரமாக இருந்தது. அரச பதவிகளில் பிரிட்டிசார் வந்தபின் நவாபுகளுக்கும் இஸ்லாமியருக்கும் வருமானமும் செல்வாக்கும் அதிகாரமும் குறைந்தபின் அவர்கள் இந்துக்களை எதிர்த்து போராடும் திறனை அயோத்தியில் இழந்தார்கள்.
சம்பிரதாயத்துக்கு அந்த பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அதற்கு பிரிட்டிசாரின் ஆதரவு இருந்தது காரணம். அந்த சிக்கல் தீரக்கூடாது; அதைக் கொண்டே இங்கு கலவரமும் வெறுப்பும் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அவர்கள் திட்டம்.
இக்காலகட்டங்களில் பிரிட்டிஷார் இந்தியாவுக்கான சட்டங்களை இயற்றினார்கள். சட்டங்கள்தான் ஒரு நாட்டை இயக்கும், அவ்வகையில் மதரீதியான சட்டங்கள் முக்கியமானவை.
இந்தியா இந்துக்களின் நாடு. ஆனால் சட்டத்தில் இந்துமதத்துக்கான எந்த சலுகையும் அங்கீகாரமுமில்லை. சட்டப் பாதுகாப்பில்லா மதம் அந்நியர் ஆட்சியில் நிலைக்க முடியாது. வாழமுடியாது. பல சிக்கல்கள் வரும்.
இந்துமதத்துக்கும் அது வந்தது, இந்து ஆலயங்கள் அழிய சதிகள் தொடங்கின. மதமாற்ற குழப்பம் வந்தது. கருத்துரிமை என இந்துமதம் மிக மிக இழிவாகக் கொச்சைபடுத்தப்பட்டது.
இந்துக்களும் இந்தியர்களும் இல்லாமல் பிரிட்டிசார் இந்தியாவுக்கான சட்டம் இயற்றினால் அது அப்படித்தான் இருக்கும் ஆச்சரியமில்லை.
ஆனாலும் இந்துக்கள் சோர்ந்து விடவில்லை. ஆயிரம் வருடமாக அந்நிய ஆட்சியினை கண்டவர்களுக்கு பிரிட்டிசாரின் ஆட்சியெல்லாம் சட்டமெல்லாம் பொருட்டாக இல்லை, புலி போனால் நரி என்பது போல் எதிர்த்து போராடிக் கொண்டே இருந்தார்கள்.
1882ல் அந்த பள்ளிவாசல் களையிழந்து போயிற்று. இஸ்லாமியர்கள் அதிகமில்லை. ஓரிருவர் எப்போதாவது இருக்கும் அளவு அது பொலிவிழந்தது. ஆனால் இந்துக்கள் ராமநவமி, அனுமன் ஜெயந்தி, கார்த்திகை விழா, ராம்லீலா என ஏதோ ஒன்றைச் சொல்லிக்கொண்டு மாதம் தோறும் குவிந்து கொண்டே இருந்தார்கள்.
அப்போது அந்த பள்ளிவாசலின் பொறுப்பாளர்கள் வறுமையில் வாடினார்கள். நல்ல சம்பளமுமில்லை, பெரிய வருமானமுமில்லை என்பதால் இந்துக்களுடன் சமரசத்துக்கு வந்தார்கள்.
நிச்சயம் அயோத்தியின் சிறப்பு பாபர் அல்ல, அங்கே ராமபிரானே நாயகர். ராமாயணமே பிரதானம். வலிய திணிக்கப்பட்டு அதுவும் மொகலாயமும் நவாபும் வீழ்ந்தபின் பிரிட்டிஷாரின் பிடிவாதத்தில் இருக்கும் பள்ளிவாசலைக் காண யாரும் வரவில்லை, வர அவசியமோ தேவையோ இல்லை.
இதனால் பள்ளிவாசல் பொறுப்பாளர் நிலை மோசமாயிற்று. ஆனால் இந்துக்கள் பக்கம் விழாக்கள் தொடர்ந்தன.
இதனால் அவர் பல நேரம் இந்துக்களுக்கு பள்ளிவாசலை திறந்துவிட்டார். வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதித்தார். அதற்கான கூலியினையும் லாப பங்கில் இந்துக்கள் கொடுத்தனர்.
அப்படி நிலை வந்தது.
1882ல் இந்துக்கள் பண்டிகை காலத்தில் இப்படி மசூதிக்குள் வழிபட்டு பின் வளாகத்தில் வியாபாரம் செய்துவிட்டு தனக்குரிய ரகசியப் பங்கினை தராமல் ஏமாற்றினார்கள். பிரிட்டிஷ் காவல் அதிகாரிகள் தனக்கு நியாயம் பெற்று தரவேண்டும் எனப் பள்ளிவாசல் பொறுப்பாளர் கொடுத்த புகார் ஆவணமாக உண்டு.
அது எந்த அளவு பள்ளிவாசல் பலவீனப்பட்டு இந்துக்கள் கை ஓங்கியிருந்தது என்பதையும் இஸ்லாமியர்கள் அதிலிருந்து விலகத் தொடங்கியிருந்தனர் என்பதையும் காட்டுகின்றது.
இந்நிலையில் 1885ல் ராமர்கோவில் சார்பில் பூசாரி ரகுபீர்தாஸ் என்பவர் நீதிமன்றப் படியேறினார்.
இந்துக்கள் ஆங்கிலமெல்லாம் கற்று பிரிட்டிஷாருடன் வாதிடத் தொடங்கிய காலம் அது, அப்போதும் முதல் வழக்குகள் இப்படித்தான் பதியப்பட்டன.
அப்படி பைசாபாத் நீதிமன்றத்தில் 1885ல் ரகுபீர்தாஸ் ஒரு மனுதாக்கல் செய்தார். அதன் படி பிரிட்டிசாரால் வேலியிடப்பட்டு பிரிக்கப்பட்டு இந்துக்களுக்கு கொடுக்கப்பட்ட சிறிய இடத்தில், 21 அடிக்கு 17 அடி அளவு எனும் அளவு கொண்ட சிறிய இடத்தில் வழிபாடு நடத்த கூரை வேண்டும். மழையிலும் வெயிலிலும் குளிரிலும் வழிபாடு நடத்தும்படி கூரை அமைக்க உரிமை வேண்டும்.
இது நாங்கள் அத்துமீறி கேட்கவில்லை. மொத்த இடமும் எங்களுக்கு என்றாலும் பிரிட்டிசார் சட்டப்படி இந்த சிறிய இடத்தில் வழிபாடு செய்ய உரிமை உண்டு. அங்கே கூரை அமைக்கத்தான் அனுமதி கோருகின்றோம், அப்படி அனுமதித்தால் ராமபிரான் சிலையினை வைத்து வணங்க எங்களுக்கு வழி கிடைக்கும்”
கூரை எனும் பெயரில் சிறிய கோவில் அமைக்க அவர்கள் முயன்ற முயற்சி இது.
ஆம், அதுவரை அந்த இடத்தில் கோவில் இல்லை, அயோத்தியினை சுற்றி ஏகப்பட்ட பெரிய மசூதிகள் எழும்பிய காலத்தில் இந்துக்கள் ஆங்காங்கே சிறிய சிறிய ஆலயங்களை அமைத்து வைத்தார்கள், இந்து உணர்வு மறையாமல் காக்க கட்டி வைத்தார்கள்.
ராஜா மான்சிங் அப்படி ஒன்றை தள்ளி கட்டிவைத்தானே தவிர இந்த இடத்தில் அதாவது மசூதியின் உள்ளே உள்ள இடத்தில் வழிபட உரிமை உண்டு. ஆனால் கோவில் கட்டப்படவில்லை.
அதை பிரிட்டிசார் அழகாக கொண்டு சென்றார்கள். இந்துக்கள் வரலாம் தங்கள் ஆலயம் இருந்த இடம் என வழிபடலாம். ஆனால் கட்டடம் ஏதும் கட்டக்கூடாது என உத்தரவிட்டார்கள்.
இதுதான் அந்த பிரச்சினை எப்போதும் உயிரோடு இருக்க அவர்கள் செய்த தந்திரம், ஒரு வகையில் இந்துக்களுக்கு அதுவே சாதகமாகி போனது. விடாமல் போராடினார்கள்.
ஒவ்வொரு இடத்திலும் இந்துக்கள் தங்கள் உரிமையினை விட்டுக் கொடுக்காமல் போராடியது போலவே 1885ல் பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிமன்றத்திலும் நின்றார்கள்.
1885ல் அந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது, நீதிபதி சம்பந்தபட்ட இடத்துக்கே வந்தார்.
பின் தீர்ப்பு நீதிமன்றத்தில் வாசிக்கபட்டது. நீதிமன்ற தீர்ப்பு எப்படி வன்மமாக தயாரிக்கப்பட்டது என்றால் இப்படித்தான், தீர்ப்பு இதுதான்.
“இந்துமக்களே உங்கள் கஷ்டம் புரிகிறது. இங்கே ராமர் கோவில்தான் இருந்திருக்கின்றது, அதை அகற்றித்தான் பள்ளிவாசல் கட்டியிருக்கின்றார்கள். அது தவறுதான்.
ஆனால் நாங்கள் அப்போது ஆளவில்லை. இது நடந்தும் 350 ஆண்டு காலம் ஆகிவிட்டது, இந்த நீதிமன்றம் இப்போதுள்ள நிலைமைக்குத்தான் தீர்ப்பு சொல்லமுடியும். எங்களுக்கு சமூக அமைதி முக்கியம். அதனால் புதிய உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. கூரை கட்டுவதை அனுமதிக்க முடியாது.”
எவ்வளவு நுணுக்கமான சீண்டல்கள். கோவில் இருந்த இடம் அது. இந்துக்களுக்கான முழு உரிமையும் உண்டு என்பதையும் சொல்லி, அதே நேரம் இப்போது அனுமதிக்கமுடியாது எனவும் சொல்லி இந்துக்களை போராட்டத்துக்கு இழுத்து விடும் தந்திரம் அது.
இஸ்லாமியர்கள் போராடப் போவதில்லை. காரணம் பள்ளிவாசல் அவர்களுடையது. அதனால் இந்துக்களை ஒதுக்கியும் விடாமல் அதே நேரம் அவர்களுக்கு தீர்வையும் சொல்லமால் இந்து உணர்வுகளைக் கொண்டு குழப்பம் விளைவித்து பிரச்சினை தீராமல் பார்த்துக்கொண்டு இருவரையும் தன் காலடியில் வைத்திருக்கும் ஒரு வகையான அரசியல் அது.
இந்த தீர்ப்புக்குப் பின் இந்துக்கள் போராட்டம் மனதால் தீவிரமாயிற்று, தொடர்ந்து பல வழக்குகள் பதியப்பட்டன, பல குழப்பங்கள் கொந்தளிப்புகள் வந்தன.
ஆனாலும் விடுதலைப் போரை அடக்குதல், புதுப் புது பிரச்சினைகளை ஏற்படுத்துதல் என பிரிட்டிசார் தேசத்தை குழப்பிக் கொண்டிருந்த காலம் என்பதால் அயோத்தியில் பரபரப்பு ஏதுமில்லை அல்லது இந்துக்கள் வாய்ப்பினை பார்த்து கொண்டிருந்தனர்.
1855க்கு பின்பே அயோத்தியில் நிலைமை இந்துக்களுக்கு சாதகமாக இருந்தது. பள்ளிவாசலில் இஸ்லாமியர் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இந்துக்கள் ஆதிக்கம் மேலோங்கிற்று.
பிரிட்டிஷாரின் நரி தந்திரம் ஒன்றாலே பிரச்சினை நீட்டிக்கப்பட்டது. இந்துக்கள் உண்மையினை உணர்ந்து பிரிட்டிஷாரை எதிரிகளாக வரிந்து கட்டினார்கள்.
ஆனால் அப்போது இந்துக்களுக்கு அரசனோ தலைவனோ இல்லை, ஒன்றுபட்ட இந்து இனத்துக்கென யாரும் இல்லை.
இந்துக்களுக்கென ராணுவம் இல்லை என்பது விஷயமல்ல, ஒரு அமைப்பு கூட இல்லை எனும் அளவு நிலமை மோசமாக இருந்தது.
இதை உணர்ந்துதான் இனி இந்துக்களுக்கான அமைப்புக்கள் எழாமல் இந்து எழுச்சி வராமல் இந்துஸ்தானம் உரிமையினைப் பெறாது என இந்துக்கள் பலர் எழுந்தார்கள்.
அவர்களில் சுவாமி விவேகானந்தர் போல் பலர் வந்தார்கள், மெல்ல மெல்ல இந்து எழுச்சி வந்தது.
ஆனால் பிரிட்டிஷார் விடுவார்களா? அவர்கள் இதைக் குழப்ப பல ரகசிய வேலைகளை செய்தார்கள். அப்படி உருவான ஒன்று முஸ்லீம் லீக்.
அதனை ஒரு நவாப் தொடங்க இந்துக்கள் இந்துமகாசபை என ஒன்றைத் தொடங்க தீவிரமாயினர்.
இப்படி நிலமை மாறிக் கொண்டிருந்தது. பெரும் எழுச்சி கிளம்பிற்று, 1900க்கும் 1920க்குமான காலங்கள் முக்கியமானவை.
திலகர் எழுச்சி, விவேகானந்தர் எழுச்சி, வ.உ.சி கப்பல், இந்திய தேசிய கொடி என எல்லாம் அப்போதுதான் உருவானது. நாடெங்கும் பெரும் எழுச்சி வந்தது.
அயோத்தி அந்த பெரும் எழுச்சியில் இனி எல்லாம் நலமாகும் என நம்பிக்கை கொண்டது, இந்த கால கட்டத்திலும் அயோத்தியில் இந்துக்கள் கூடுவதும் அந்த நிலத்தை வணங்குவதும், வெட்டவெளியில் ராமன் சிலைக்கு வழிபாடும், திடீரென மசூதிக்குள் புகுந்து கருவறையில் வழிபாடும் செய்வது வழமையாயிற்று.
ராம்லீலா, ராம நவமியெல்லாம் ராமன் பிறந்த அதாவது பள்ளிவாசலுக்குள் சென்று வழிபட்டு வரும் வழமை தொடர்ந்தது, சில நேரம் அது தடுக்கப்பட்டது. பல நேரம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.
1906ல் வங்கப்பிரிவினை நடந்து பெரும் களேபரம் ஏற்பட்டபோது அயோத்தி வழமைபோல் வழிபாடுகளுடன் இருந்தது, பெரிய பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருந்ததால் அயோத்தியில் பரபரப்பு இல்லை. ஆனால் இந்துக்கள் உரிமையினை கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
1908ல் வங்கத்தில் குதிராம் போஸ் கொல்லபட்டப்போது பெரும் கிளர்ச்சி எழுந்தது. அயோத்தியில் அந்த கிளர்ச்சி ஆங்கில அதிகார்கள் மேல் கல்வீசி தாக்குதல் எனும் அளவு வந்தது.
1911ல் இந்தியாவின் திருநெல்வேலியில் ஆங்கில கலெக்டர் ஆஷ் துரை என்பவனை வாஞ்சிநாதன் எனும் இந்தியன் சுட்டுக் கொன்றான். அது தேசமெங்கும் பெரும் எழுச்சி கொடுத்தது.
அந்நிலையில் 1912ல் இப்பக்கம் பசுவதை தொடர்பான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதன் முதலில் பிரிட்டிஷ் கலெக்டர் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்த பிரிட்டிசார் அந்த கோபத்தில் கண்மூடிதனமான தாக்குதலைத் தொடங்கினார்கள்.
அது ஒரு கட்டத்தில் மக்களுக்கும் காவலருக்குமான போராட்டமாக மாற, பிரிட்டிஷார்தான் தங்கள் கோவிலை கட்டவிடாமல் வைத்திருகின்றர்கள் என்ற இந்துக்களின் கோபம் வன்முறையாய் வெடித்தது.
அப்போது இந்துக்கள் திரண்டு காவலர்களை விரட்டிவிட்டு பள்ளிவாசலை இடிக்க முயன்றனர் , சுவர்கள் சேதாரமாயின.
ஆனால் காவல்துறை பல இடங்களில் இருந்து வந்து பள்ளிவாசலை காத்தது, அது இல்லாவிட்டால் இங்கே அரசியல் செய்ய முடியாது என்பதால் பெரும் முயற்சி எடுத்து காத்தனர்.
அந்த பள்ளிவாசல் மேலான நேரடி தாக்குதல் 1992ல் தான் நடந்தது. அதுவும் அத்வாணிதான் தொடங்கினார் என்பதெல்லாம் அரசியல் மோசடி. அது 1912லே பெரும் தாக்குதலுக்கு உள்ளானது ஆனால் பிரிட்டிசார் காத்தார்கள்.
இந்துக்கள் பள்ளிவாசலை இடிக்கும் அளவு வந்துவிட்டார்கள் என்பதை அறிந்த பிரிட்டிசார் வேகமாக களத்தில் இறங்கினார்கள். ஆங்கில அதிகாரிகளின் அதாவது கலெக்டர்களின் அறிக்கைகள் பெறப்பட்டன.
அந்த அறிக்கையின் பக்கங்கள் உண்மையினைச் சொன்னது.
“இங்கு வேறு எந்த பிரச்சினையுமில்லை, பள்ளிவாசல் இருக்குமிடம் தங்கள் கடவுள் ராமன் பிறந்த இடம் என 400 ஆண்டுகளாக இந்துக்கள் போராடுகின்றார்கள், அதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.
அவர்கள் 400 ஆண்டுகளானாலும் தங்கள் போராட்டத்தை விடவில்லை, கொஞ்சமும் பின் வாங்கவில்லை.
அந்த பள்ளிவாசல் இருக்கும் வளாகம் சுமார் 60 ஏக்கரும் தங்கள் ஆலயம் எனக் கருதி வருகின்றார்கள், சுற்றி சுற்றி வந்து வணங்குவதால் அந்த தடம் கூட பாதை இறுகி கிடக்கின்றது, அதவாது அனுதினமும் அப்படி நடக்கின்றார்கள்.
அந்த பாதையினை பிரகாரம் என்கின்றார்கள், இது மசூதி சுவரின் அருகிலும் செல்கின்றது, 400 ஆண்டுகளாக இப்படி அவர்கள் நடந்ததிலே சுவரின் அருகே பள்ளம் வந்து சுவர் பலவீனமடைந்திருக்கின்றது.
உறுதியாக ஒன்றைச் சொல்கின்றேன், இம்மக்களின் பக்தியும் அர்ப்பணிப்பும் ஆழமும் அதிசயமானது. மற்றவர்களால் நேரில் காணாமல் புரிந்துகொள்ள முடியாதது, மிக வியப்பானது.
எக்காலகட்டத்திலும் அவர்கள் இதை மீட்காமல் ஓயமாட்டார்கள், இந்துக்களுக்கு அவர்கள் கோவில் கிடைக்கும் வரை அங்கு சிக்கல் தீராது”
இந்த ஆவணம் இன்றும் உண்டு.
1912ல் பள்ளிவாசல் மேலான தாக்குதல் முயற்சி நடந்து அது பிரிட்டிசாரால் தடுக்கப்பட்ட சில காலங்களில் முதல் உலகப்போர் வெடித்தது, அது முதல் உலகப்போர் என சொன்னாலும் முக்கிய காரணங்கள் பல இருந்தன.
இப்போது சுதந்திர போராட்டம் இந்திய சுதேசிகளிடமிருந்து காந்தி கைக்கு மெல்ல மெல்ல மாற்றப்பட்டது, அதுவரை உணர்ச்சியுடன் போராடிக் கொண்டிருந்த இந்தியாவினை காந்தி அஹிம்சை அது இது எனக் குழப்பத் தொடங்கினார்.
1914ல் முதல் உலகப்போர் வெடித்தது, அது முதல் உலகப்போர் என் சொல்லப்பட்டாலும் இஸ்லாமியரின் பெரும் காவலும் அரணுமாய் இருந்த துருக்கிய ஆட்டோமன் அரசை உடைத்து போடுவதாய் இருந்தது.
இக்காலம் முக்கியமானது, இந்திய வரலாறு இங்கிருந்துதான் மாறிற்று.
இந்துக்களை பொறுத்தவரை துருக்கியில் இருந்துதான் பலமும் சக்தியும் பெற்று ஆப்கானியரோ, அராபியரோ, பாரசீகரோ இங்கு வந்துகொண்டே இருந்தார்கள், அவர்களில் ஆளும் திறன் படைத்த படித்தவர்கள், வரிமுறை ஆட்சிமுறை அறிந்தவர்கள் துருக்கியராகவே இருந்தார்கள்.
துருக்கி ஆட்டோமன் பேரரசு இஸ்லாமியருக்கு அவ்வளவு பெரும் பலமாய் இருந்தது, அது அன்று பலமான அரசு, ஐரோப்பிய கிறிஸ்தவ அரசுகளால் அதனை நெருங்கக் கூட முடியவில்லை. அவர்கள் நிலவழியாக இந்தியாவுக்குச் செல்லும் பாதையினை துருக்கியில் அடைத்ததாலேயே வாஸ்கோடகாமா கப்பலேறி இந்தியா வந்தான்.
அவன் பின்னால் பிரிட்டிசார் வந்தார்கள், சுமார் 650 ஆண்டுகள் இஸ்லாமிய மக்களுக்கு பெரும் சக்தியாய் இருந்த அரசு அது, அங்கிருந்துதான் உலகெங்கும் இஸ்லாமிய படைகளும் ஆட்சியாளர்களும் வருவார்கள்.
உலகெல்லாம் இஸ்லாமியரும் அவர்கள் ஆட்சியும் பரவ துருக்கி அப்படி உதவிற்று, இதனாலே “துருக்கர்” என அவர்கள் இந்துஸ்தானில் அழைக்கபட்டு அது “துலுக்கர்” எனவும் மருவிற்று.
அந்த துருக்கி இருக்கும் பலத்தில்தான் சுல்தான்கள் ஆட்டம் போட்டார்கள், இந்துக்கள் அடங்கி இருந்தார்கள், அவுரங்கசீப் அப்படி ஆடித் தீர்க்க பின்னால் துருக்கி இருந்ததுதான் பெரும் காரணம்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட துருக்கியரை அழைத்து பிரிட்டிசாரை அகற்றி பழைய சுல்தானிய ஆட்சி வரவேண்டும் என இஸ்லாமிய நவாபுகள் கோரியது உண்டு, வாய்ப்பும் இருந்தது.
ஆனால் சீக்கியரும் ராஜபுத்திர மன்னர்களும், மராட்டியர்களும் மறுபடி துருக்கியர் வருவதை விரும்பவில்லை. அதில்தான் பிரிட்டிசார் நிலைத்தனர்.
அந்த துருக்கி பலமானது, நெப்போலியன் கூட அவர்களைத் தொட்டுப் பார்க்க அஞ்சினான்.
அப்படியான துருக்கியினை இந்தியாவில் திரட்டிய செல்வத்தோடு பலம்பெற்ற பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளைத் திரட்டி தாக்கியது.
துருக்கியின் பிடி அன்று அராபியா, ஜெருசலேம், எகிப்து என எல்லா இடத்திலும் இருந்தது.
இந்துக்கள் ஓரமாக கோபமாக நோக்கிய துருக்கியினை ஒழிப்போம் என பிரிட்டிசார் படைதிரட்டியதும் சுமார் 600 ஆண்டுகாலம் இந்தியாவின் அனைத்து குழப்பத்துக்கும் மூலவேரான அந்த துருக்கியினை ஒழிக்க இந்துவீரர்கள் திரண்டார்கள்.
அலை அலையாகத் திரண்டார்கள், இந்தப் போரின் முடிவில் உங்களுக்கு விடுதலை என பிரிட்டிசார் ஆசைகாட்ட இந்துக்கள் திரண்டார்கள்.
அப்படி சென்று பாலஸ்தீன் பக்கம் பிரிட்டிசாருக்காக போராடினார்கள், ஜெருசலேமை துருக்கியிடம் இருந்து மீட்டார்கள்.
(இன்றும் இஸ்ரேலியர் இதனை நன்றியோடு குறிப்பிடுவார்கள்.)
போர் பல ஆண்டுக்கு நடந்தது, முடிவில் துருக்கி முறியடிக்கப்பட்டது. ஆனால் இந்துக்கள் பிரிட்டிசாரோடு இணைந்து போரிட்டது இந்திய இஸ்லாமியருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் துருக்கி ஒழியக்கூடாது எனப் போராடினார்கள்.
கிலாஃபத் இயக்கம் அப்படி உருவானது, காந்தி இங்கெல்லாம் சத்தமே இல்லை.
இந்த துருக்கி உடைந்த கோபத்தில்தான் இந்தியாவிலும் இஸ்லாமியர் பல வன்முறைகளை இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தினார்கள், இந்துக்கள் பிரிட்டிசாரோடு சேர்ந்து போரிட்ட வன்மம் அது.
அப்படித்தான் கேரள மாப்பிள்ளைமார் கலவரமெல்லாம் (Moplah Riots) நடந்தது.
இந்த போர்க் காலமெல்லாம் மிகக் கடுமையனாவை. உலகமே அரண்டு போனது, அப்போர் 1918ல் வாக்கில் முடிந்தது.
போர் முடிந்து துருக்கி சுல்தான் முடிக்கப்பட்டபின் பிரிட்டிஷார் தந்திரமாகச் சிரித்தார்கள், இனி இந்தியாவுக்கு சுதந்திரமில்லை என மறுத்தார்கள்.
இந்தியர்கள் தாங்கள் ஏமாற்றப் பட்டதை நினைத்து கொதித்தார்கள், ஆனால் ஏமாற்றம் அவர்களுக்கு புதிதல்ல என்பதால் அடுத்து போராடத் தயாரானார்கள்.
முதல் உலகபோர் முடிவிலே அமெரிக்கா எழ ஆரம்பித்து பிரிட்டிஷ் கரங்கள் தடுமாறத் தொடங்கின, 1917 ரஷ்யப் புரட்சி அடுத்த மிரட்டலாக வந்தது.
இந்துக்களை ஏமாற்றிய பிரிட்டிஷார் மேல் கடும் ஆத்திரத்தில் இந்துக்கள் இருந்தார்கள். தொடர்ந்து வந்த ஜாலியன் வாலாபாக் கொலைகள், பகத்சிங் கொலை தேசத்தில் பெரும் கொந்தளிப்பினை கொடுத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில்தான் 1934ல் அயோத்தி பக்கம் ஷாஜகான்பூரில் பசுவதை தொடர்பான போராட்டம் வெடித்தது. கடைசி வரை பசுவதையினை தடுக்கும் சட்டத்தை பிரிட்டிஷார் இயற்றவே இல்லை.
அது இந்துஸ்தானின் மிகப்பெரிய போராட்டம், மாபெரும் கோரிக்கையாய் இருந்தது, சுல்தான் ஆட்சியில் கூட இந்து மக்கள் பசுக்களை வரிகட்டி காக்கும் வழி இருந்தது, பிரிட்டிஷ் ஆட்சியில் அதற்கும் வழியின்றி பசுக்கள் கொல்லப்பட்டன.
இதை எதிர்த்து இந்துக்கள் போராடினார்கள், இந்துக்களுக்கென ஒரு சட்ட அங்கீகாரமும், அவர்கள் சம்பிரதாயத்துக்கு ஒரு பாதுகாப்பும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது.
ஆனால் சட்டமேதும் இல்லை என்பதால் இந்துக்கள் அனாதைகளாயினர்.
துருக்கி போரில் ஏமாற்றம், தொடர்ந்து இந்துக்கள் மேலான துவேஷம், ஏளனம், மதமாற்றத்துக்கு துணை செல்லுதல் என பிரிட்டிசாரின் மேல் இந்துக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள்.
இஸ்லாமியரே ஒதுங்கிய பின்பும் பிரிட்டிஷார் தங்கள் ஆலயத்தை தடுப்பதையும் பள்ளிவாசலை வீம்புக்கு காப்பதையும் கண்டு பொருமினார்கள்.
ஒரு கட்டத்தில் நம் பூமியில் நாம் கோவில் கட்ட இந்த பிரிட்டிசார் ஏன் அனுமதிக்கவேண்டும்? பள்ளிவாசல் இருப்பதுதானே கோவில் கட்டத் தடை எனக் கிளம்பினார்கள்.
1934 பசுவதை போராட்டம் கலவரமாகி அந்த கலவரத்தில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது, பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆம், பள்ளிவாசல் அன்றே சிதைக்கப்பட்டது, பெரும் சேதமானது. இனி இது எங்கள் இடம் என இந்துக்கள் வளைத்துக் கொண்டார்கள்.
ஏற்கனவே துருக்கி போரில் இஸ்லாமியர் கொண்ட மனவருத்தம், இஸ்லாமியரின் தாயக அரசை பிரிட்டிஷார் சிதைத்து அழித்தனர் எனும் கோபம் என இஸ்லாமியர் இருந்த நேரம், இது கூடுதல் அதிருப்தியினை கொடுக்கும். என்றும் பள்ளிவாசல் இல்லாமல் போனால் மோதல் இல்லை, மோதல் இல்லாவிட்டால் தனக்கு ஆபத்து என்பதால் பிரிட்டிசார் சேதமடைந்த பள்ளிவாசலை சரிபடுத்த முயன்றார்கள்.
அப்போது அதவாது பள்ளிவாசல் இடிக்கப்பட்டபோது இஸ்லாமியர் அங்கிருந்து ஓடி விட்டார்கள். இனி அங்கு தங்களுக்கு வேலை இல்லை. இனி உள்ளே செல்லமுடியாது என அகன்று விட்டார்கள்.
ஆனால் பிரிட்டிஷாரின் சட்டம் விடவில்லை, அவர்கள் விரைந்து வந்து வளாகத்தை கைப்பற்றி கண்ணில்பட்ட இந்துக்களை எல்லாம் கைது செய்து விசாரணை செய்து தண்டம் வசூலித்தார்கள்.
அப்படி பறிக்கப்பட்ட தொகை 85 ஆயிரம் ரூபாய் (இன்றைய மதிப்பில் பலநூறு கோடிகள்) வசூலித்து அந்த பள்ளிவாசலை சரி செய்தார்கள்.
அதுதான் 1992 வரை நீடித்தது.
பாபர் தளபதி கட்டிய சிறிய கட்டடத்தை அவுரங்கசீப் பெரிய பள்ளிவாசலாக்கினான். அதை 1934ல் இந்துக்கள் இடித்துப்போட பிரிட்டிசார் இந்துக்கள் பணத்திலே மீளக் கட்டினார்கள்.
பின் இஸ்லாமியரையும் அழைத்து வந்து தொழுகை செய்யச் சொல்லி பொறுப்பாளனையும் அமர்த்தினார்கள்.
இப்படியெல்லாம் இந்துக்கள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்பட்டு, கடைசியில் நிலத்தை மீட்கப்போய், தங்கள் வீடுகள் ஆடுமாடுகள் நிலங்களையெல்லாம் இழந்து, அந்த காசில் மறுபடியும் பள்ளிவாசல் கட்டப்பட்டு மிகுந்த வேதனைகுள்ளானபோது காந்தியும் நேருவும் அவர்கள் போக்கில் இருந்தார்கள்.
நேதாஜி போன்றோர்க்கு இதனைக் கண்டு உள்ளம் கொதித்தாலும் தொட்டால் இந்து இஸ்லாம் கலவரமாக பிரிட்டிஷார் மாற்றி விடுவார்கள் எனத் தயங்கினார்கள்.
இப்படி பள்ளிவாசல் மீள கட்டப்பட்டாலும் இந்துக்கள் ஓயவில்லை. அதே போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தார்கள்.
1940களில் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்து பிரிட்டிஷார் மறுபடி குழம்பி ஜப்பானிய படைகளுடன் நேதாஜி இந்தியாவுக்குள் வரலாம் எனும் நிலையில் எல்லாமே பதற்றமாகிவிட்ட காலத்தில் இந்துக்கள் அயோத்தியில் மறுபடி போராட ஆரம்பித்தனர்.
பிரிட்டிசார் தளரும் நேரம் பாய சரியான நேரம் என மறுபடி கிளர்ந்தெழுந்தனர், அயோத்தி முற்றுகையிடப்பட்டது.
1943ல் பள்ளிவாசல் பொறுப்பாளன் தங்கள் மேலிடத்துக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிட்டான்.
“என்னால் அங்கு செல்லமுடியவில்லை, வெள்ளிக்கிழமை மட்டும் சென்று ஏதோ சுத்தப்படுத்தி தொழுகை செய்தோம். இப்போது அதுவும் முடியவில்லை, அங்கே சென்று பள்ளிவாசலை திறக்க முடியவில்லை, திறந்தாலும் அதிக நேரம் இருக்க முடியவில்லை.
அப்படியே போராடித் தொழுகை நடத்திவிட்டு நன்றாக பூட்டிவிட்டு திரும்பி சில நாட்கள் கழித்துச் சென்று பார்த்தால் உள்ளே வைத்த பொருள் ஏதுமில்லை, குங்குமம் கொட்டிக் கிடக்கின்றது”
1942ல் இந்திய சுதந்திர போராட்டம் தீவிரமானது, நேதாஜி ஒரு பக்கம், காந்தியின் குயிட் இண்டியா எனும் பிரிட்டிஷாரே வெளியேறு எனும் போராட்டம் ஒரு பக்கம் என கிளம்பியபோது, ராமன் பிறந்த இடம் எங்களுக்கு என அங்கே பெரும் போராட்டத்தை தொடக்கினார்கள்.
இதே காலகட்டத்தில் ஜின்னா தனி பாகிஸ்தான் என குழப்பங்களைத் தொடங்கினான், பெரும் நெருப்பு எரியும், பற்றி எரியும் காலம் நெருங்கிற்று.
(தொடரும்..)