அயோத்தி ஸ்ரீ ராமன் வாழி
ராமன் பெயரால் எழுந்த பெருந்தீ
ஆறா சினமாய் இதயத்தில் வருத்தி
தீரா வலியாய் சிந்தையில் இருத்தி
போரால் மீண்டது எங்கள் அயோத்தி
ஒன்றா இரண்டா செய்த பெரும்போர்
கன்றோடு பசுவாய் கதறிய கடும்போர்
அன்னல் ராமன் ஆலயம் காக்க
ஐநூறு வருடம் நடந்த கொடும்போர்
வாளும் வேலும் ஏந்தி நின்று
நாளும் பொழுதும் போர்களம் கண்டு
நாதன் ஆலயம் மீட்பினை கொண்டு
கொடுத்த உயிர்கள் கோடி கோடி
அரசர் வந்தார் சேனைகள் வந்தார்
பெண்கள் வந்தார் குருக்களும் வந்தார்
ஆண்டிகள் கூட ஆயுதம் கொண்டு
பூண்ட போர்கோலம் காட்டிய பூமி
ஆப்கானியரும் ஆபத் தான நவாபும்
அப்போதே இந்து படைகளால் சரிய
பொல்லா மிலேச்சர் வஞ்சனைச் செய்தே
நல்லோர் போலே புகுந்தனர் ஊடே
ஆயுதமில்லை தலைவனுமில்லை தாங்கிடவோர் நாதியுமில்லை
சேனையுமில்லை செல்வமுமில்லை ஓங்கிபேச வார்த்தையுமில்லை
உரிமை இழந்தோம் உயிரையும் இழந்தோம்
உணர்வை மட்டும் விடவே இல்லை
உணவை மறந்தோம் உயிரை மறந்தோம்
ராமன் ஒன்றே நினைவாய் கொண்டோம்
எத்தனை தலைமுறை போரிட்டு செத்தோம்
எத்தனை கோடிபேர் அழுதே மாண்டோம்
சுதந்திர இந்தியா வழிவிடும் என்றே
சுதந்திர போரில் எரிந்தோம் நன்றே
தந்திர காங்கிரஸ் ஆங்கில திரிபு
என்றதும் வெடித்தது மறுபடி நெஞ்சம்
துணிந்து எழுந்தோம் துயரம் களைய
மன்றம் ஓடினோம் நியாயம் கிடைக்க
நின்றே நிறைய தவங்கள் செய்தும்
மன்றோரத்தில் மறுபடி இழுத்தனர் பகைவர்
அகழ் வாராய்ந்து வந்ததை எல்லாம்
இகழ்ந்து சொன்னது இரக்கமின் கூட்டம்
மிகை மிகையாய் பொய்களைச் சொல்லி
தகைசால் ராமனின் ஆலயம் தடுத்தார்
அன்றொரு நாளில் வனத்திடை சென்றான்
பதினான்கு ஆண்டில் மறுபடி வந்தான்
பாபர் காலத்தில் மறுபடி சென்றான்
எப்போது வருவான் என்பதை அறியோம்
நிச்சயம் வருவான் எங்கள் திருமகன்
சத்தியம் வருவான் தங்கப் பெருமகன்
என்றே கருதி மாளிகை மீட்டோம்
இனிதே வந்தான் எங்கள் குலமகன்
ராமன் வந்தான் மறுபடி வந்தான்
காலம் வந்ததும் கண்மணி வந்தான்
என்றே சொல்லி ஆடிப்பாடி
கன்றினை கண்ட பசுபோல் பாடி
எங்கள் உயிரே உயிரின் ஊற்றே
மங்கா சுடரே மாணிக்க நிலவே
பொங்கும் மனதின் ஆனந்த அலையில்
கங்கை போல கண்ணீர் கொண்டு
உன்னிடம் கேட்டோம் உண்மை சொல்வாய்
கண்ணின் மணியே கனவே வாழ்வே
மண்ணை பிரிந்து எங்கே சென்றாய்
கண்ணை இழந்த குருடராய் ஆனோம்
இனிய ராமன் பொன்வாய் திறந்தான்
கனிந்த மொழியில் இனிதே சொன்னான்
நசிந்த மாந்தரின் மகிழ்முகம் கண்டு
கசிந்த கண்ணீர் துடைத்து சொன்னான்
என்னரும் சனமே எந்தன் குலமே
உன்னைவிட்டு எங்கே செல்வேன்
அன்பினை தவிர ஏதும் இல்லா
என்மனம் கூட அறிந்தில்லை நீரோ
பரதன் போலே பாபரும் கேட்டார்
பாரதம் ஆள பாதம் பணிந்தான்
பாலை நிலத்தில் தவிப்பவன் என்றான்
அவனும் எனக்கோர் தம்பி அன்றோ
பாபர் காலம் முடிந்த பின்பு
பரங்கியர் வந்து பாதம் பிடித்து
பனிபாலை வனத்து மாந்தர் நாங்கள்
நனிவாழ்வு தேடி கடலாய் அலைந்தோம்
நல்லோர் நாதா அருள்செய் என்றனர்
பாலை நிலம்வாழ் மாந்தர் கொஞ்சம்
பனிநில மக்கள் வாழ கொஞ்சம்
நாட்களை கொடுத்தேன் தள்ளி நின்றேன்
இதிலென்ன கண்டீர் என்னரும் இனமே?
காலம் வந்தது கடமை வந்தது
ஞாலம் ஆளும் கர்மம் வந்தது
மறுபடி வந்தேன் எந்தன் இல்லம்
படியேறி எழும் இனி என் தேசம்
எந்தன் ஜனமே என்னரும் இனமே
இந்து ஜனமாய் எழுந்த குலமே
இந்த பூமி என்நிலம் என்றோ?
இதை விட்டு இனி செல்வேனோ?
மாந்தரும் அவன் தாள் பணிந்தே சொன்னார்
கையினை பற்றி கண்களில் ஒத்தி
ராமா ராமா ஒருசொல் கேளாய்
அன்னலின் மனமோ கடல் போல் பெரிது
எங்கள் மனமோ கடுகினும் சிறிது
ஏதோ குழப்பம் ஏதோ கர்வம்
அன்று எமக்கு ஒற்றுமையில்லை
அன்று எமக்கு தலைவனுமில்லை
சேனையுமில்லை ஆயுதமில்லை எதுவுமில்லை அதனால் தோற்றோம்
இன்றோ ராமா அப்படி இல்லை
நன்றோர் தலைவன் எங்களுக்குண்டு
மோடி எனும் எங்கள் தலைவன்
நாடி நின்றதில் நன்மைகள் கோடி
இன்று எமக்கு சேனைகள் உண்டு
நின்று காக்கு ஆயுதம் உண்டு
இன்னொரு முறை எதிரி வந்தால்
ஜெகத்தை அழிப்போம் அயோத்தி காப்போம்
கண்ணீர் மல்க கர்வ பெருக
மழைவான் போல கண்கள் சொரிய
மக்கள் சொன்னதும் சிரித்தான் ராமன்
பொன்வாய் திறந்து பொன்மொழி சொன்னான்
இனியொரு துயரம் உங்களுக் கில்லை
தனியொரு இனமாய் அழுகையு மில்லை
இனியவன் ராமன் உங்கள் அரசன்
கனிதரும் மரமாய் உங்களை காப்பேன்
சொன்னவன் ராமன் கையினை உயர்த்தி
சின்னவன் லட்சுமணன் கூட நிறுத்தி
சீதா பிராட்டியார் இப்புறம் நிற்க
வாழ்த்தி சொன்னான் வாழிய வாழி
மன்னவன் தன்னின் அரியணை ஏற
பொன்னவன் பாதம் உள்ளே பதிய
பகீரதன் போலே கங்கைக்கு ஏங்கி
தவமிருந்த கூட்டம் எழும்பி கத்த
எங்கள் ராமா எங்கள் ராமா
ரகுவம்ச ராமா ரகுபதி ராமா
வாழி வாழி அயோத்தி வாழி
வாழிய வாழி பாரதம் வாழி
என்றே ஓங்கி ஓங்கி முழங்க
மந்திர பெரும் ஒலி மாளிகை சூழ
மங்கள இசைகள் ஓங்கி ஒலிக்க
எங்கள் ராமன் அரியணை அமர்ந்தான்
வானிடை தேவர் பூமழை பொழிய
மண்ணிடை நல்லோர் வாழ்த்துக்கள் பொழிய
ஆலய மணிகள் அவனுக்காய் ஒலிக்க
இமயம்போலே அமர்ந்தான் ராமன்
வாசலோரம் நின்றவன் அனுமன் அந்தன்
அரியணையோரம் நடந்ததை கண்டான்
இன்னும் என்ன என்ராமன் மக்களே
ஆடுவீர் பாடுவீர் என்றே சொன்னான்
பாரத தேசமிது மக்களோடு கடலும்
நீரும் மலையும் செடியும் கொடியும்
மானும் மயிலும் மந்தியும் மயிலும்
ஆடிபாடி அவனை கொண்டாட
எல்லை யோர சேனையர் எல்லாம்
தொல்லை தீர ராமன் வந்தான்
என்றே எல்லையில்லா ஆனந்தம் கொண்டே
மலையும் கடலும் அதிர மகிழ்ந்தார்
ராமன் வழிவந்த சீக்கிய குலமுதல்
பரசுராமனின் தனிபெரும் நிலமும்
சூரிய குலமாம் சோழர் மண்ணும்
ஆர்ப்பரித்து நிற்கக் காணீர்
எங்கும் மகிழ்ச்சி எங்கும் நிறைவு
பொங்கும் மகிழ்வில் வார்த்தைகள் குறைவு
தேசத்தின் ஆன்மா மீண்ட நேரம்
காலம் தந்திட்ட அற்புத பெரும் வரம்
காலம் வந்தது கருணை வந்தது
ஞாலம் திரண்டு கரசேவை தந்தது
மாலவன் தந்த முழுநிலை பலத்தில்
பகவலன் போலே தீர்ப்ப்பும் தந்தது
ஐநூறு வருடம் ஆலய கனவு
கண்ணீரோடு இன்று வந்தது நனவு
எங்கள் ராமன் எங்கள் அயோத்தி
என்றே எம்குலம் பாடுதல் காணீர்
எங்கும் மகிழ்ச்சி எங்கும் எழுச்சி
பொங்கும் கடல்போல் மக்கள் திரட்சி
அயோத்தி ராமன் எழுவதை கண்டு
ஆனந்த அழுகையின் பெருகுரல் காணீர்
பண்டி தரெல்லாம் வேதம் சொல்க
பெண்டி ரெல்லாம் ஆடி மகிழ்க
பிள்ளை குலங்கள் மலர்களை தூவுக
எல்லா இனமும் கூடி பாடுக
ஏற்றிய தீபம் நிலைபெற்று ஒளிர்க
போற்றும் நாதன் நிலைத்து நிற்க
பாசுரங்களும் பாமாலைகளும் மந்திர ஒலியும்
பாரினில் பாரதத்தை மலைபோல் நிறுத்த
வந்தான் ராமன் கண்மணி ராமன்
இனி துயரில்லை இனி பயமில்லை
தனியே ராமன் தேசம் காப்பான்
அணியான வாழ்வை அவனே தருவான்
அயோத்தி நோக்கி கைகள் குவிய
அந்த நினைவில் கண்கள் கசிய
ஒவ்வொரு மனமும் உள்ளமும் நிறைந்து
பிரார்த்திக்கும் பிரார்த்தனை நன்றாய் ஒன்றே
தலைமுறை தலைமுறை ஏங்கிய காட்சி
ரத்தத்தின் ஆறுகள் சொன்னது சாட்சி
இத்தினம் அந்த பாக்கியம் பெற்றோம்
இதைவிட மகிழ்வு ஏதும் உண்டோ
நிலைகட்டும் அயோத்தி ராமன் மாளிகை
வளரட்டும் பால ராமனின் பெரும்புகழ்
வளரட்டும் அவனோடு பாரத தேசம்
நிலைக்கட்டும் இந்த ஆனந்த தருணம்
ரத்தம் சிந்தி வாழ்வைத் தந்து
நித்தம் உணர்வை ஊட்டி நின்று
உணர்வை காத்த முன்னோர்க் கெல்லாம்
கோடி நன்றி கோடி நன்றி
வரலாறெல்லாம் அவர் பெயர் பதிக
சிறார்களெல்லாம் அதை கற்று வளர்க
இன்னொரு காலம் இடற மாட்டோம்
கண்ணின் மணிபோல் அயோத்தி காப்போம்
என்றே முழங்கி சபதம் ஏற்போம்
என்றும் காக்க முன்னால் நிற்போம்
அன்றும் இன்றும் என்றும் அயோத்தி
ராமன் பூமி என்பதை காப்போம்
பொன்னிகர் அயோத்தி காத்து தந்த
முன்னோர்க்கெல்லாம் நன்றி நன்றி
தன்னுயிர் தந்து உரிமை கொடுத்த
உத்தமர்கெல்லாம் கண்ணீர் நன்றி
இக்காலத்தில் களத்தில் நின்று காத்த
எங்கள் மோடி எங்கள் தலைவன்
தங்க மகனுக்கும் நன்றிகள் கோடி
என்றே கூடி பாரதம் பாடி
பாரத சேனை ஒன்றாய் கூடி
தேசம் மீண்ட பெருமை பாடி
ஆனந்த பெருமை கொண்டிரும் நேரம்
பாரத பெருகொடி உயர்ந்து மின்னி
வாழ்த்தும் தருணம் மாபெரும் தருணம்
வரலாற்று நிகழ்வில் நின்றிடும் பெருமிதம்
தசரதன் காலத்தில் நுழைந்திடும் காலம்
தந்தவன் ராமன் பொன்மகன் வாழி
வால்மீகி கம்பன் காளிதாசன் வரிகளை
நேரில் காணும் யோகம் கொண்டோம்
என்ன வேண்டும் இதைவிட நெஞ்சமே
கிள்ளை போலே பறப்பாய் கொஞ்சமே
வாழி வாழி ராமன் வாழி
சீதையோடு இன்புற வாழி
தேசம் ஆண்டு சீர்பட வாழி
அனுமன் துணையுடன் வாழி வாழி..
தேசம் வாழி தலைவன் வாழி
தேசம் காக்கும் காவலர் வாழி
நல்லோர் வாழி நானிலம் வாழி
பாரதம் தன் வழி செழிக்க வாழி..”