அருள்மிகு முத்து வடுகநாத சித்தர்.
அருள்மிகு முத்து வடுகநாத சித்தர்.
வாராஹி வழிபாடு மகா சக்திமிக்கது. பலர் நினைப்பது போல் வாராஹி அந்த வராகம் எனும் பன்றிமுகம் கொண்டவள் அல்ல. அவளின் மகா சக்தியும் பலமும் தாத்பரியமும் விளக்கும்படி அவளை அந்த முகத்தில் வரைந்து மக்களுக்குப் புரியவைத்தார்கள்.
அவள் கையில் உலக்கையினையும் கொடுத்திருந்தார்கள். அது மானிட மனம் எனும் நெல்லை புடமிட்டு தூய்மையான அரிசியாகத் தருபவள், மனதின் மாசை நீக்கிப் பக்குவப்படுத்துபவள், மாயை எனும் உமியினை பிரித்தெடுப்பவள் என விளக்கினார்கள். அவளின் முகமும் அப்படி மூலச்சக்தியாக அடிநாதமாக நின்று காப்பவள், பிரச்சினையின் மூலவேர் வரை களைந்துபோடுபவள் எனக் குறிப்பால் அம்முகத்தோடு சொன்னார்கள்.
இப்படியான அன்னை வழிபாடு எக்காலமும் இங்குப் பிரசித்தி. அபிராமிபட்டர் வழிபட்டதும் ஒருவகையில் இந்த வராஹியே. அவள் போருக்கான தெய்வம் மட்டுமல்ல எல்லா வகையிலும் எல்லாமும் தரும் அற்புதமான தெய்வம்.
அவள் பெரும் காவலைத் தருவாள், அவளின் பிரதான காவல் பில்லி சூனிய ஏவல் மற்றும் துர்சக்திகளிடம் இருந்து காவல் தந்து அவற்றை அழிப்பது.
இதனாலே இராஜராஜசோழன் அவளைக் கொண்டாடித் தன் காவலாக வைத்தான். அவனால் எந்தப் படையினையும் தன் வீரத்தால் சமாளிக்க முடியும் அவனால் சமாளிக்கமுடியா விஷயம் மலையாள தேசம் இன்னும் பல தேசங்களில் இருந்து வந்த பில்லி சூனிய ஏவல் மற்றும் துர்சக்திகளின் பாதிப்பு.
கருவூர் சித்தர் அவனுக்கு வழிகாட்டியாக இருந்தார். அப்படி அவர் வழிகாட்டலில்தான் அவன் வராஹியினை வழிபட்டான். அதன் பின் அவனுக்கு அன்னையின் பெரும் அருள் கிட்டிற்று. எந்த ஏவலும் அவனை தொடவில்லை. அவன் மாபெரும் சக்கரவர்த்தியாக பெரும் அடையாளமிட்டான்.
அதனாலே அன்னைக்கு அவன் தன் சிவன்கோவிலில் தனி சந்நிதியும் அமைத்து வணங்கினான்.
அப்படிப்பட்ட வராஹிக்கு பெரும் சாட்சியாக அவனை போலவே இருந்தவர் முத்துவடுகநாத சித்தர்.
1737ல் பூவலதேவன் குமராயி எனும் சேதுபதி மன்னர்களின் வாரிசில் வந்தவர் அவர். குமராயி சேதுபதி வம்சம் பூவலதேவன் 30 கிராமம் அடங்கிய செம்பிநாட்டுக்கு அரசன், ஆனால் முத்துவடுகநாதருக்கு ஐந்து வயதான போது பூவலதேவன் மறைந்தான் .
அவனுக்கு பின் உறவினரின் அதிகாரச் சண்டை, சொத்துச்சண்டை பெரிதானது. ஐந்துவயது சிறுவனைக் கொன்றுவிட்டால் சொத்தெல்லாம் நமக்கு என சதிகார கூட்டம் திரள குழந்தையினைக் காக்க நாடோடியாய் தப்பிளாள் குமராயி.
அப்படி தப்பியவள் மதுரை பாலமேடு எனும் ஊருக்கு வந்தாள். மகனைக் காக்க தன் குல அடையாளம் மறைத்து கூலிவேலை செய்தாள் குமராயி. அப்போது ஜெகநாத பிள்ளையிடம் மாடுமேய்க்கும் வேலைக்காக அனுப்பப்பட்டார் முத்துவடுகநாதர்.
10 வயது அவருக்கு அப்போது இருக்கலாம். பார்க்க தேஜஸாக ஒரு கம்பீர தோற்றமும் அரசகுல அடையாளமுகாக இருந்த அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது, ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை.
ஆச்சரியமாக கண்ணனின் வாழ்வும் இவர் வாழ்வும் பால்யத்தால் ஒன்று. அப்படித்தான் இவரும் உயிர்தப்பி வந்தவர், இங்கு மந்தையில் மாடுகளும் அவருக்கு கட்டுப்பட்டன.
அவர் மாடுகளுடன் பேசினார், அவர் சொன்ன சொல்லுக்கு மாடுகள் அடங்கின. அவர் சொன்ன இடத்தில் மேய்ந்தன, சொன்ன இடத்தில் படுத்துகொண்டன. முழுக்க அவருக்குக் கட்டுப்பட்டன, எந்த இடத்திலும் அவை எல்லை தாண்டவில்லை.
இதைக் கண்டவர்கள் ஆச்சரியபட்டார்களே தவிர அவர் யார் என்பதை அறியமுடியவில்லை. மொத்தமாக ஊரின் மாடுகள் யாவும் அவர்கட்டுப்பாட்டில் கொடுக்கபட்டன, அவரும் புன்னகைத்து ஏற்றுக்கொண்டு உரிய காலத்துக்குக் காத்திருந்தார்.
அப்போது நடந்த சம்பவம் ஒன்றுதான் அவர் யார் என்பதைக் காட்டிற்று. அன்று வயலில் ஏரில் பூட்டிய இரு மாடுகள் எழாமல் படுத்துக் கொண்டன. என்ன செய்தும் எழவே இல்லை, விவகாரம் இவரிடம் வந்தது.
அப்போது இவருக்கு 13 வயது இருக்கலாம்.
“எருதுகள் இரண்டு விழுந்ததே படுத்துராமல்
உரித்தானவன் மேழி தொட்டு உழவாமல்
அவிழ்க்கும் வரை வரச்செய் இவ்வூர்
காத்து நிற்கும் காமாட்சி அம்மே”
அவர் பாடியதும் மாடுகள் எழுந்தன. யாரும் இல்லாமலே அவை உழுதன. ஆம். கலப்பை பிடிக்க யாருமின்றி கலப்பை நிமிர்ந்து நின்றது, காளைகள் அழகாக உழுதன, உழவன் இன்றி மாடும் கலப்பையும் உழுத அதிசயம் அன்று நடந்தது.
அப்போது ஜனம் வாயடைத்து போனது. ஜெகநாத பிள்ளை வெலவெலத்துப் போனார். இந்த அதிசயத்தைச் செய்தபின் தன் போக்கில் மாடுகளைக் கவனிக்க கிளம்பினார் முத்துவடுகர்.
இவர் சாதாரணமில்லை என்பதை அறிந்த பிள்ளை அவருக்கு அடிப்படை கல்வி கொடுத்தால் இன்னும் சிறப்பு என அங்கிருந்த திண்ணை பள்ளியில் சாமிநாத செட்டி என்பவரிடம் சேர்த்துவிட்டார்.
பள்ளியில் முதல் நாள் முதல் வகுப்பு, ஆசிரியர் பாடமெடுக்குமுன் இவர் பாடினார்.
“பள்ளிகுள்ளே யான் பயில்வதென்ன
நீயடியேன் உள்ளத்துள் வாழ்ந்து வரும்போது
பிள்ளையாரே சாமிநாத செட்டி என்பானுன்
முன்னிலே காசா லெனில் பழிப்பேயாம்”
இதை கேட்டதும் செட்டி அரண்டு போனார். நேரே பிள்ளையிடம் சென்று இவனுக்கு எல்லாம் தெரிகின்றது, அதை மீண்டும் மீண்டும் நான் சொல்ல அவசியமில்லை, இவன் சாதாரணம் அல்ல என விட்டுவிட்டார்.
ஜெகநாதபிள்ளைக்கு இவரை இன்னும் வேலைகாரனாக வைக்க விருப்பவில்லை, தன் பிள்ளை போல் வீட்டில் வைத்துக் கொண்டார். அந்நேரம் ஜெகநாத பிள்ளை சகோதரன் சொக்கநாத பிள்ளைக்கு ராஜபிளவை எனும் நோய்வந்தது.
அதை தீர்க்க வந்த வைத்தியனிடம் உன் வைத்தியம் சரியில்லை என முத்துவடுகநாதர் சொல்ல, உனக்கு என்ன தெரியும் என மருத்துவர் சீறினார்.
“இந்த பிளவைக்கு கூட உன்னிடம் மருந்தில்லையா” எனக் கோபமாக அந்த ராஜபிளவையினை வடுகநாதர் தொட அது மறைந்தது, அத்தோடு ஊரே அவரை சித்தர் என ஏற்றுக்கொண்டது.
இதன் பின் வடுகநாதரின் போக்கு மாறிற்று. அவர் தனக்கான குருவினைத் தேடி அலைந்தார். அழகர் மலையில் இருந்த பாலைய சுவாமிகள் இவரை இன்னும் செம்மைபடுத்தி வராஹி வழிபாட்டை செய்யச் சொல்லிக் கொடுத்தார்.
அப்போது அன்னையினை பிடித்துக் கொண்டார். அந்த ஞானநெய்யில் புனித நெருப்பு பற்றி விளக்காக ஜொலித்தது.
வராஹியின் அருள் கூடியபின் அவர் முழு சித்தவடிவம் பெற்றார். வயது ஏற ஏற அவர் முழு ஞானியானார். தியானம் யோகம் எனக் காலம் பொழுது அறியாமல் அமர்ந்திருப்பார், அது வெயில்காலமெனின் நாகம் பிரமாண்டமாய்ப் படமெடுத்து அவருக்குக் குடைபிடித்த அதிசயமும் நடந்தது.
அக்காலங்கள் என்றல்ல எக்காலமுமே தமிழகத்தில் பில்லி சூனிய தொந்தரவுகள் அதிகம். அப்படி அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் இவர் பார்வை பட்டதும் கால் பட்டதும் அகன்றன.
அப்படி முக்கியமான இடமாக சிங்கபுணரி இருந்தது. அப்பக்கம் பீதாம்பர கொள்ளையர் அட்டகாசம் மிகுந்திருந்தது. பீதாம்பரம் எனும் சொல்லுக்கு மாந்த்ரீகம் எனும் பெயரும் இருந்தது, இவர்கள் சூட்சும சக்திகளை கொண்டு கொள்ளையிடுவார்கள்.
அதாவது இவர்கள் ஒரு பார்வை பார்த்தால் யாராயிடமும் சுயநினைவு அகன்று கையில் இருப்பதை கொடுப்பார்கள். ஆடுமாடுகள் தானாகச் செல்லும் இன்னும் நம்பமுடியா வகையில் எல்லாம் கொள்ளையிட்டார்கள். மிக முக்கியமாக சிங்கம்புணரி கோவில் தெய்வத்தினை மாந்திரீக கட்டில் இட்டார்கள்.
மக்கள் இவரிடம் வந்து இந்த கொடுமைக்கு சித்தரை நாடினார்கள். சித்தர் சிங்கம்புணரி சென்று அமர்ந்து கொண்டார்.
அந்த இரவில் வந்த கொள்ளையர்கள் வழக்கம் போல் மக்களை துர்சக்தி கொண்டு வளைக்க முயன்றபோது முடியவில்லை. அவர்கள் ஏவிவிட்ட சக்திகளெல்லாம் அலறித் திரும்பின. கொள்ளையர்கள் திகைத்துப் போய் தங்கள் மந்திரவாதிகளிடம் முறையிட அவர்கள் அந்த சித்தரை அடையாளம் காட்டினார்கள்.
கோவில் முன் இருந்த சித்தரை நோக்கி கொள்ளையர் ஆவேசத்துடன் வர, சித்தரோ தன் வேட்டியின் ஓரத்தை கிழித்து அன்னை வராஹி பெயரை சொல்லி வீசினார். அது பெரும் நாகமாகி அவர்களை விரட்டிக் கொல்லத் தொடங்கிற்று. அத்தோடு கொள்ளை கூட்ட மாந்தீரிகர்கள் இருந்த இடம் தீபிடித்து எரிய அக்கொடுமை முடிந்தது.
மக்கள் சித்தரைக் கொண்டாடினார்கள். சித்தர் அங்கேயே தங்கிக் கொண்டார். ஆனாலும் இவர் இருந்தால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து என உணர்ந்த சில போலி மாந்த்ரீக பூசாரிகள் இவரை இரவோடு இரவாக மூட்டைக் கட்டி, ஆழ குழிவெட்டி அதில் மிளகாயும் முள்ளுமிட்டு மூடிவிட்டார்கள்.
மறுநாள் காலை சித்தர் தன் போக்கில் தன் குடிசை அருகே அமர்ந்திருந்தார். அவரைப் புதைத்தவர்கள் செத்தது போல் அமர்ந்திருக்க குதிரைமேல் வந்த ஐயனார் “அன்னை வராஹியின் மைந்தனை யாரால் கொல்லமுடியும்” எனச் சொல்லிச் சென்றார்.
அத்தோடு பகைவர்கள் அவரைப் பணிந்தார்கள். சித்தர் பெரும் சக்தியுடன் அருள்பாலிக்க தொடங்கினார்.
1833ம் ஆண்டு அவர் தன் ஸ்தூல உடலை உதறும் காலம் வருவதை அறிந்தார். தனக்கான சமாதியினை தானே உருவாக்கிவிட்டு கற்றாழை செடி நடுவே தவமியற்றினார். அப்போது ஒரு சிற்பி அவரை சிலையாக வடித்துக் கொண்டான்.
அவர் அந்தச் சிலையினை ஏற்றுக்கொண்டார், 1833ல் ஒரு ஆடிமாதம் ரோஹினி நட்சத்திரத்தில் சித்தி அடைந்தார். அவருக்கும் பகவான் கண்ணனுக்குமான தொடர்பு இப்படியும் நிரூபணமானது.
அவர் இறந்தபின் அந்தச் சிலையில் அவரின் சக்தி எல்லாம் இறங்கிற்று, இப்போதும் அந்தச் சிலைக்கு வியர்வை வடியும் அதிசயம் நடக்கும், எப்போதும் அந்தச் சிலை வியர்த்துக் கொண்டே இருக்கும்.
அவரின் சமாதி மழையில் சேதமானது, அப்போது ஒரு துளை தெரிந்தது, அதன் ஊடாக பார்த்தவர்கள் அரண்டே போயினர். ஆம். அங்கு தீபம் எரிய சித்தர் சமாதிநிலையில் இருந்தார் ஒரு மாலை கூட வாடவில்லை.
பின் அப்படியே அவரின் கோவில் கட்டப்பட்டது, அவர் வணங்கிய வராஹி சிலை அங்கே சன்னதியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. எல்லாவகை பில்லி சூனியகட்டும் தீரும் இடமாக, எல்லாப் பிசாசு கூட்டமும் மாந்தீரிக சிக்கலும் முடியும் இடமாக இந்தத் தலம் அருள்பாலிக்கின்றது.
இவர் அப்பகுதி மக்களுக்காக பள்ளி அன்றே நடத்தியதால் “வாத்தியார் ஐயா” எனவும் அழைக்கப்பட்டார்.
இவரின் மகா அற்புதம் நிறைய உண்டு. சிங்கம்புணரி பக்கம் வாழ்ந்த அதே நேரத்தில் பல ஷேத்திரங்களிலும் இருந்திருக்கின்றார், சித்தர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.
இவர் பிரபஞ்ச ரகசியம் முழுக்க அறிந்தவர் சித்தர். குரு மண்டலங்களுள் ஒன்றான வராஹி குரு மண்டலத்தில் சஞ்சாரம் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார்.
ஆதிசேஷ மண்டலம், வடுக மண்டலம், வரதராஜ மண்டலம், பிரஹதீஸ்வர மண்டலம், வராஹி மண்டலம், துஷாப்ரியா மண்டலம் போன்ற உலகங்களுக்கு சூட்சமரீதியாக அடிக்கடி சென்று வரக்கூடிய தெய்வீக சக்திகளைப் பெற்றிருந்தார்.
திருவண்ணாமலை கிரிவல மலைப் பகுதியில் ஸ்ரீ வராஹி தீர்த்தம், சுவாமி மலையில் உள்ள வரதராஜப் பெருமான் ஆலயத்தில் அருளும் ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதி, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதி ஆகிய பகுதிகளுக்கு இச்சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவுகளில் தினமும் சென்று வழிபடுவது அவரின் சித்துக்களில் ஒன்று.
எப்போதும் அவரது சரீரத்தின் 72,000 நாடிகளிலும் எழுகின்ற ஸ்ரீ வராஹி விஸ்வாமித்ரக் கதிர்களின் பரிணாமத்தால் பல துர்சக்திகளும் துர்தேவதைகளும் அழிந்திருக்கின்றன.
அவர் கால்வைத்த இடத்தின் பல சதுர மைல்களுக்கு வானிலும் கண்ணிலும் அவரின் ஆற்றல் பரந்து அந்த இடமே தூய்மையாகியிருந்தது.
அவர் அறியா மந்திரமில்லை, முடித்து வைக்கா மாந்தீரிகமில்லை. எல்லாத் தீய மாந்த்ரீகமும் அவரிடம் தோற்றுஓடுங்கின.
இன்றும் இவர் திருவண்ணாமலையை கிரிவலம் கொண்டிருக்கிறார். ஐம்புலன்களைக் கொண்டு தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டு புத்தியை சீராக்குவதற்கு இவரது ஜீவாலய வழிபாடு உதவுகின்றது.
இப்பொழுதும் இவரது ஜீவசமாதியில் இருந்து எழக்கூடிய ஜீவப்பிரகாசக் கதிர்கள் அண்ட வெளியைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.
அவரின் சமாதி அங்குப் பெரும் காவலாய் அவரின் சமாதியும் சிலையும் வராஹி சன்னதியும் அற்புதம் புரிகின்றது. இன்றும் இவரின் ஜீவசமாதியில் உள்ள இவரது சிலைக்குப் பஞ்சாமிர்தம், பால், தேன், இளநீர் போன்ற பன்னிரண்டு விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்து அபிஷேக நீரை பருகியும், உணவில் சேர்த்து உண்டும் வீடுகளில் தெளித்து வந்தால் எல்லாச் சிக்கலும் தீரும்.
“முத்து வடுகம் சக்தி வடிதம்
மத்து கழகம் வித்து பிடிதம்
சத்து ஸ்படிகம் பத்து படிதம்
முத்துச் சிவசித்து புதிதம் மதிதம் வடுதம்”
இது அவருக்கான துதி. சக்தி மிக அதிகம்.
இந்த யுகத்தில் வராஹி அன்னையின் மாபெரும் பக்தனாய் நின்று பெரும் சித்துக்களைச் செய்து அன்றும் இன்றும் என்றென்றும் பில்லி சூனியம், மாய மாந்தீரிகத்தில் இருந்து மக்களைக் காத்து எல்லா வரமும் அருளிக்கொண்டிருக்கின்றார்.
வராஹி நவராத்திரி காலங்களில் அன்னை வராஹியோடு இவரை வணங்குதல் நன்று. முடிந்தவர்கள் சிங்கம்புணரியில் இருக்கும் அவரின் ஜீவசமாதிக்குச் சென்றுவந்தால் இன்னும் பலன் அதிகம்.
அங்கு செல்வதும் இன்னொரு வராஹி தலத்துக்குச் செல்வதும் ஒன்றே. காரணம், இரு இடங்களிலும் அவர் உண்டு.
இன்னொரு இடம் திருவண்ணாமலை. அங்கு ஆதிவராஹி விரத பூஜையை பக்தி மேற்கொண்டு பூஜையை நிறைவு செய்து சூரிய, சூட்சம, யோக ரீதியாக கிரிவலப் பாதையில் வலம் வந்து, ஸ்ரீ வராஹி தீர்த்தத்தில் இவரை வணங்கி நீராடினால் இவரின் சமாதியினைத் தரிசித்த பலன் கிட்டும்.
இன்றும் இரு இடங்களில் தீர்க்கமாக நின்று வராஹியின் அருளை பக்தர்க்கு தரும் சித்தர், தன்னை வராஹியின் பெயரால் அழைக்கும் மக்களுக்கெல்லாம் நல்வரம் அருளிக் காவல் இருக்கின்றார்.
இந்த வராஹி நவராத்திரி காலத்தில் இந்தச் சித்தரை, முத்துவடுகநாத சித்தரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். நிச்சயம் இதுவரை கண்டிராத மாபெரும் அதிசயம் உங்கள் வாழ்வில் அன்னை வராஹியால் நிகழும். இது சத்தியம்.