ஆதி சங்கரர்

இந்துமதம் மகா சூட்சுமனானது, அது எக்காலமும் எதிரிகளை கொண்டிருக்கும் அந்த எதிரிகள் வடிவம் எதுவோ அதற்கேற்ப தன்னில் ஒரு வடிவினை அது உருவாக்கும்

அரிஸ்டாட்டிலின் தயாரிப்பில் அலெக்ஸாண்டர் வந்தால் அது சாணக்கியனின் குப்தனை உருவாக்கும்

முகமது கோரி வந்தால் அது நாயக்க மன்னர்களை உருவாக்கும், அவுரங்கசீப் வாள் எடுத்தால் அது சிவாஜியினை உருவாக்கி வாள் கொடுக்கும்

அப்படிபட்ட இந்துமதம் தத்துவ விளக்கம் என இந்துமதத்தை சமணமும் பவுத்தமும் குழப்பிய காலங்களில், இந்த சைவ சமயம் பெரும் இருளில் இருந்த காலங்களில் வாதங்களால் அவர்களை வெல்லவும் வேதங்கள் தேவையில்லை என போதித்த அந்த மதங்களுக்கு வேதங்கள் அவசியம் என சொல்லி நிரூபிக்கவும் ஒருவரை உருவாக்கிற்று

ஆதி சங்கரர் எனும் அரும் ஞான பிறப்பு அப்படித்தான் இங்கு உதித்தார்

வேதங்களை காக்க வந்த பரசுராமர் இன்றைய கேரளபகுதியினை உருவாக்கி அங்கு காவலும் இருக்கின்றார், அந்த கேரளத்தின் திருச்சூர் பக்கம் உள்ள காலடி எனும் ஊரில்தான் அந்த அவதாரம் நிகழ்ந்தது

பாரதம் முழுக்க தன் காலடிகளால் அளந்த அந்த ஞானமகன் அங்குதான் உதித்தார், அது வாமண அவதாரத்தில் பகவான் கால்பட்ட இடம் எனும் ஐதீகம் இன்றும் உண்டு

இன்று திருச்சூர் எனவும் அன்று விருஷாசலம் என அழைக்கபட்ட ஊரில் இருக்கும் சிவாலயத்தில் பிள்ளைக்காய் தவமிருந்த சிவகுரு ஆர்யம்மாளுக்கு மகனாய் அவதரித்தார் சங்கரர்

அவரின் சிறுவயதிலே கடமை முடிந்து சிவகுரு காலமாகிவிட ஆர்யம்மாளுக்கு ஒரே ஆறுதலானார் சங்கரர், ஐந்து வயதில் அவருக்கு உபநயனமும் முடிந்தது

அவருக்கு அப்பொழுதே விஷேஷ சக்தி இருந்தது, இன்று முல்லை பெரியாறு அணையில் நிற்கும் பெரியாறு அன்று இந்த காலடி பக்கம் தள்ளி ஓடிகொண்டிருந்தது, அன்னை நீர் எடுக்க பட்ட சிரமம் கண்டு சங்கரர் பாட அந்த பெரியாறு இவர் வீட்டருகே வளைந்து வந்தது

அவர் ஒரு அவதாரம் என உணர்ந்த ஆர்யம்மாள் திகைத்தாள் காரணம் அக்குழந்தை சன்னியாச குணத்தோடு வளர்ந்தது அன்னைக்கு ஒரே மகன் என்பதால் விட மனமில்லை

சிவன் தன் நாடகத்தை அரங்கேற்றினார், பெரியாறு ஆற்றில் முதலை ஒன்று பாலசங்கரனை கடித்து இழுக்க “சிவனே என் மகனை காப்பாற்று சன்னியாசம் அனுப்புகின்றேன்” என தன்னை அறியாமல் சொன்னாள் தாய்

அந்நேரம் முதலை மறைய பாலசங்கரன் சன்னியாசம் உறுதியானது, எனினும் அன்னையின் கடைசி நிகழ்வுக்கு அவர் வரவேண்டும் என்ற விதிவிலக்கு வாங்கபட்டது

சுமார் 8 வயதிலே சன்னியாசம் வாங்கிய அக்குழந்தை திருஞானசம்பந்தர் போல் தன் கடமை உணர்ந்து பவுத்த சமண பிடியில் இருந்து இந்திய திருநாட்டை விடுவிக்க கிளம்பிற்று

மிக மிக எளிய வாழ்க்கை அவர் வாழ்ந்தார், பிட்சை எடுத்து உண்டார், கோவில்களின் வாசலில் உறங்கினார், அதே நேரம் தனக்கு பிச்சையிட்ட ஏழைக்கு தங்கமழை பொழியும் வண்ணம் “கனகதார ஸ்லோகம்” பாடலையும் பாடி அதிசயம் நிகழ்த்த அவர் தவறவில்லை

அவர் மெல்ல மெல்ல அடி எடுத்து வைக்க வைக்க இந்துமதம் மெல்ல தளிர்த்தது, அழிவின் விளிம்பில் இருந்த அம்மதம் மெல்ல மெல்ல மீள தொடங்கிற்று

தவமும் எழுத்தும் வாதமுமாக அவரின் பணி இனிதே நடந்தது, பகவத் கீதைக்கு மிக அழகான விளக்கம் எழுதினார்

நால்வகை வேதங்களையும் விளக்கிய அவர் , ஈசா வாஸ்ய உபநிடதம், கேன உபநிடதம்,கடோபநிடதம்
பிரச்ன உபநிடதம், முண்டக உபநிடதம், மாண்டூக்ய உபநிடதம்,ஐதரேய உபநிடதம் ,
தைத்திரீய உபநிடதம் ,பிரகதாரண்யக உபநிடதம், சாந்தோக்யம் எனும் பத்துவகை உபநிடதங்களுக்கும் விளக்கம் எழுதினார்

பிரம்ம சூத்திரம் எனும் மூல நூலுக்கும் விளக்கம் எழுதினார், இந்த மூன்றும் இந்துமதத்தின் அடிநாத நூல்கள்

இதுதவிர விஷ்ணு சஹஸ்ரநாமம் சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் என்பவையும் அவரால் எழுதபட்டது

இவை எல்லாம் ஏன் அவர் எழுதினார் மறுபடி புத்துயிர் கொடுத்தார் என்றால் அன்று புத்தம் அந்த அளவு இந்துமதத்தை அழித்து வைத்திருந்தது, இந்துக்களுக்கு என எதுவுமில்லை

ஞானமார்க்கள், யோகமார்க்கம், கர்ம மார்க்கம் என மூன்று வகையான வழிகளை இந்துமதம் போதித்தது, அதில் கர்ம மார்க்கம் ஒன்று சாமான்யர்களுக்கானது, இந்த கர்ம மார்க்கத்தை குறிவைத்துதான் கோவில் வேண்டாம், தெய்வம் வேண்டாம், வழிபாடு வேண்டாம், வேதங்கள் வழிகாட்டிகள் இன்றி இறைவனை அடையலாம் என புதுவழி சொன்னான் புத்தன்

மக்கள் எப்பொழுதும் எளிதான வழிக்கு எளிதாக தாவுவார்கள், இந்துமதம் வாழ்வியலில் பல விதிகளை வைத்திருந்தது, மானிடரின் குணங்களுக்கு ஏற்ப அது உடல்நலம், மனநலம், பிரபஞ்ச சக்தி என பல விஷயங்களை உணர்ந்து அது விதிகளை வகுத்தது

அதிகாலை எழுதல் முதல் முக்கிய தினங்களில் விரதம் இன்னும் அனுசரிக்க வேண்டிய வழிகள் என நிறைய உண்டு எல்லாமே பலன் கொடுக்க கூடியது

பவுத்தம் இந்த விதிகளை உடைத்ததில் மக்கள் அங்கு ஓடினார்கள், ஆனால் விதிகள் இல்லா சாலையில் செல்வது போல பெரும் குழப்பம் நாடுமுழுக்க ஏற்பட்டது, அரசுகளை பவுத்தம் கைபற்றியது அதுவரை இந்து அரசர்கள் இருந்த பலத்தை கொல்லாமை கொண்ட பவுத்த அரசுகள் இழந்தன பெரும் குழப்பம் ஆரம்பமானது

இதில்தான் இந்துமதம் தன் ஆணிவேர் வரை இழந்தது, வழிபாடுகள் இல்லை என்பதால் கோவில்களும் சக்தி இழந்திருந்தன‌

சங்கரர் இந்த காலத்தில்தான் உழைத்தார், இந்துமத ஆணிவேரை முதலில் சீர்படுத்தினார் அது பலன் கொடுத்தது

சமண தாந்த்ரீகம் மற்றும் சில குழப்பங்களால் சக்தியற்ற சக்திபீட ஆலயங்களை அவரே துலக்கினார், ஸ்ரீசக்ர வழிபாடு அவரால் புத்துயிர் பெற்றது

கொடுங்கலூர் பகவதி முதல் கொல்லூர் மூகாம்பிகை ஆலயம், காஞ்சி காமாட்சி ஆலயம் என எல்லா ஆலயங்களிலும் சக்கரங்களை ஸ்தாபித்து அந்த ஆலயங்களை மலர செய்தார்

எப்படி அவரால் இதை செய்யமுடிந்தது என்றால் பவுத்தர்கள் மற்றும் சமணர்களுடனான வாதம்

சமணமும் பவுத்தமும் வெளியே சாந்தம் காட்டுவதால் கத்தி, வாள் என எடுக்கமாட்டார்கள், இந்துக்களின் புரிய முடியா சூட்சும பக்கங்களில் இருந்து கேள்வி கேட்டு மடக்குவார்கள்

அந்த வாதங்களில் அழகாய் ஜொலித்தார் சங்கரர், எந்த கேள்வியுமே அவருக்கு சிரமமாய் இருக்கவில்லை, எல்லா வாதங்களையும் எளிதாய் வென்றார், அவரை விரட்டவோ வீழ்த்தவோ எந்த வடிவம் எடுத்தாலும் பவுத்தரால் முடியவில்லை

இதனால் அவர்கள் தோற்ற இடங்களிலெல்லாம் ஹிந்து ஒளியினை ஏற்றினார் சங்கரர்

அவரின் அத்வைத தத்துவத்தை ஏற்றுகொள்வதை தவிர எதிராளிகளுக்கு வழியில்லை, அவரின் எல்லாமே பிரம்மம் எனும் பெரும் தத்துவத்தை புறந்தள்ள அவர்களால் முடியவில்லை

வியாசர் அவரை நேரடியாகவே வழி நடத்தினார், அதில் இன்றைய பிரக்யாராஜ் என்று முன்பு அலகாபாத் என அழைக்கபட்ட இடத்தில் இருந்த பவுத்த கோஷ்டிகளை வேரறுத்தது

அந்த காசிக்கு நிகரான தலம் பவுத்த பிடியில் இருந்தது, அங்கு வியாசரின் வழிகாட்டலில் சென்ற சங்கரர்

அங்கு குமரிபட்லர் என்பவர் வேதங்களை நிறுத்த மிக கடுமையாக பாடுபட்டதை அறிந்து அவரையும் ஆட்கொண்டார்

அதன் பின் நடந்ததுதான் மிக சிறந்த காட்சிகள்

மகிஷ்மதி என்னும் நகரில் மண்டனமிஸ்ரர் என்ற வேதவிற்பன்னர் இருந்தார் அவரிடம் சில குறைகள் இருந்தன அதைத்தான் புத்த கோஷ்டி பிடித்து வாதிட்டிருந்தது சங்கரர் அங்கு சென்றார்

மண்டன மிஸ்ரரின் வீட்டை சங்கரர் தன் சீடர்களோடு அடைந்தார் அவரது வீட்டின் கதவு மூடியிருந்தது.. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்தார் சங்கரர். பின் மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை. உபயபாரதியை நடுவராக நியமித்தனர். இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. முதலில் எவர் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே போட்டியில் தோற்றவர் என முடிவு செய்தனர்.

மண்டனமிஸ்ரர் தோற்றால் துறவறவரத்தையும், சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையையும் ஏற்க வேண்டும் என முடிவு செய்தனர். தொடர்ந்து ஏழு நாட்கள் வாதம் நடைபெற்றது. இறுதியில் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது. உபயபாரதி, மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சுரேஷ்வராச்சாரியார் என பெயர் சூட்டி சன்யாச தீட்ஷை அளித்தார்.

மண்டன மிஸ்ரர் மற்றும் உபயபாரதி ப்ரஹ்மா மற்றும் சரஸ்வதியின் அவரதாரம். மண்டனமிஸ்ரர் தோற்ற பிறகு உபயபாரதி சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அப்போது சங்கரர் வனதுர்கா மந்திரத்தை ஓதினார். அதன் மூலம் உபயபாரதி சத்யலோகம் செல்வதை தடுத்தார். நான் விரும்பும்வரை நீங்கள் பூமியிலேயே இருக்க வேண்டும் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தார்

சங்கரர் கர்நாடகாவில் உள்ள பல புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டார். அவ்வாறு ஸ்ரீவாடியில் இருக்கும்போது ஒரு அந்தணர் தன்னுடைய மூளை வளர்ச்சி இல்லாத வாய் பேச முடியாத மகனுடன் சங்கரரிடம் வந்தார். சங்கரரை வணங்கி தன் மகனை நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும் என வேண்டினார். சிறுவனை உற்று நோக்கிய சங்கரர் அவனிடம் நீ யார்? ஏன் இப்படி ஜடம் போல் இருக்கிறாய் என்றார்.

சங்கரர் கேட்டவுடன் அதுவரை ஊமையாக இருந்த சிறுவன் ஆச்சர்யம் தரும் விதமாக பேச தொடங்கினான். நான் ஜடமில்லை. நான் சித்ஸ்வரூபி என்றான். பிறகு ஆத்ம தத்வத்தை விளக்கும் விதமாக 12 ஸ்லோகங்களை இயற்றினான். இந்த ஸ்லோகங்கள் ஹஸ்தாமலகீயம் என அழைக்கப்படுகிறது. இதற்கு சங்கரர் உரை இயற்றியுள்ளார். சங்கரர் அச்சிறுவனுக்கு ஹஸ்தமாலகா என பெயர் சூட்டி தன் சீடனாக ஏற்றார்.

இதை பார்த்து வியந்த சீடர்கள் ஹஸ்தாமலகருக்கு எப்படி பாடம் கற்காமலே ஞானம் வந்தது என வினவ சங்கரர் அச்சிறுவனைப் பற்றி கூற தொடங்கினார். ஒரு முனிவர் யமுனா நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண்மணி தனது 2 வயது சிறுவனை அவரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள்.

ஆனால் அந்த குழந்தை நதியில் விழுந்து இறந்துவிட்டது. இதை பார்த்த மக்கள் அக்குழந்தையின் உடலை முனிவரிடம் கிடத்தி அழுதனர். இதை பார்த்து வருந்திய முனிவர் தன யோக சக்தியால் குழந்தையின் உடலில் புகுந்து அவனுக்கு உயிர் குடுத்தார். அச்சிறுவனே ஹஸ்தாமலகர் என என்றார் சங்கரர்.

தன் தாயின் இறுதி நாட்கள் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தார். தன் தாய்க்கு அளித்த வாக்குறுதியின் படி காலடி வந்தடைந்தார். சங்கரரை கண்ட ஆர்யாம்பாள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். சங்கரர் தன் தாயிடம் விரும்பியதை கேளுங்கள் என்றார்.

அதற்கு ஆர்யாம்பாள் தனக்கு சிவலோகம் அனுப்ப வேண்டினார். சங்கரர் சிவனை நோக்கி சிவபுஜங்கம் என்ற ஸ்தோத்திரத்தால் வேண்டினார். அப்போது கையில் சூலம் முதலிய ஆயுதங்களுடன் சிவகணங்கள் தோன்றினர். சிவகணங்களை பார்த்து பயந்த ஆர்யாம்பாளின் விருப்பத்திற்கேற்ப மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தார். உடனே விஷ்ணு தூதர்கள் தோன்றி சங்கரரின் தாயாரை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சங்கரர் தன் தாய்க்கு இறுதி சடங்குகளை செய்ய ஆரம்பித்தார். அப்போது ஊரில் உள்ள அனைவரும் சந்நியாசி நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளை செய்ய கூடாது என எதிர்த்தனர். சங்கரர் தன் தாய்க்கு செய்து குடுத்த சத்தியத்தை எடுத்துக்கூறி தன் தாய்க்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை குறைவின்றி செய்தார்

பத்மபாதர் என்றொருவர் இந்துமத தூணாய் இருந்தார், அவர் சங்கரரின் சீடராய் இருந்தார் அவருக்கும் ஒரு சிக்கல் வந்தது

பத்மபாதர்க்கு தீர்த்தயாத்திரை செல்ல வேண்டும் என எண்ணம் தோன்றியது. அதற்கு குருவிடம் அனுமதி கேட்டார். சங்கரர் யாத்திரையின் சிரமங்களை எடுத்துக்கூறியும் பத்மபாதர் உறுதியாக இருந்தார். எனவே சங்கரர் அனுமதி குடுத்தார்.

அங்கிருந்து கிளம்பி பல தலங்களுக்கு சென்றுவிட்டு ஸ்ரீரங்கம் வந்துசேர்ந்த பத்மபாதர் தனது தாய்மாமன் வீட்டில் தங்கினார். அவருடைய தாய்மாமன் வேற்றுமதத்தை பின்பற்றிக்கொண்டிருந்தார். அந்த மதத்தை கண்டித்து சங்கரர் எழுதிய நூலுக்கு பத்மபாதர் அழகான உரை எழுதி இருந்தார்.

எனவே தாய்மாமன் பத்மபாதர் மேல் மிகுந்த கோவம் கொண்டிருந்தார். எனினும் அதை வெளிப்படுத்தாமல் இருந்தார். இவ்வாறு இருக்கையில் பத்மபாதர் தான் ராமேஸ்வரம் செல்ல இருப்பதாகவும், அதுவரை தான் இயற்றிய நூலை பாதுகாக்கும்படி கூறினார். இதுவே தக்க தருணம் என எண்ணிய தாய்மாமன் அந்த புத்தகம் இருந்த வீட்டிற்கே தீ வைத்து விட்டார்.

ராமேஸ்வரம் சென்று திரும்பிய பத்மபாதர் வீடு தீ பற்றி எரிந்ததில் நூல்களும் அழிந்ததை நினைத்து வருந்தினார். எனினும் மீண்டும் அந்த நூலை எழுத போவதாக கூறினார். இதை கேட்ட மாமன், பத்மபாதர் மீண்டும் அந்த புத்தகத்தை எழுதாமல் இருக்க உணவில் விஷம் வைத்து விட்டார். பத்மபாதர் உயிர் பிழைத்தாலும் புத்தி பேதலித்துவிட்டது. எனவே அவரால் மீண்டும் எழுத முடியவில்லை.

இதனால் வருந்திய பத்மபாதர் சங்கரரிடம் சென்று அனைத்தையும் கூறினார். அதை கேட்ட சங்கரர் கவலை படாதே. நீ அந்த புத்தகத்தை என்னிடம் வாசித்து காட்டியது என் நினைவில் உள்ளது. அதை நான் சொல்ல நீ எழுதிக்கொள் என்றார். இவ்வாறு தீயில் கருகி சங்கரரால் மீட்டு கொடுக்கப்பட்டதே பஞ்சபாதிகை என்னும் நூல்.

சங்கரரின் சேவை தொடர்ந்தது, சூரியனாவது இரவில் ஓயும் அவரோ கடல் அலை போல ஓயாமல் சுற்றி கொண்டே இருந்தார்

காபாலிகர்களையும், பாஷாண்டகர்களையும் வாதம் செய்து வெற்றி கொண்டார். அங்கிருந்து கோகர்ணம் சென்று சைவ குருவான நீலகண்டரை வென்றார். அவரை அத்வைத சித்தாந்தத்தை ஏற்க வைத்தார். பிறகு துவாரகா வந்த சங்கரர் வைஷ்ணவர்களை வென்று உஜ்ஜைனி சென்றார்.

உஜ்ஜைனியில் பட்டபாஸ்கர் எனபவரை வென்றார். இதனால் ஜைனர்களால் எதிர்க்கப்பட்டாலும் அவர்களால் சங்கரரை வாதில் வெற்றி காண முடியவில்லை. பிறகு நவகுப்தர் என்ற சாக்தரை வென்றார். இதனால் கோவம் அடைந்து சங்கரருக்கு பகந்தரம் என்ற நோய் உண்டாகும்படி செய்தார். ஆனால் பத்மபாதரின் மந்திர சக்தி மூலம் அந்த நோய் சங்கரரை நீங்கி நவகுப்தரை தாக்கியது.

உஜ்ஜைனியிலிருந்து புறப்பட்டு இமயமலையை வந்தடைந்தார். அங்கு தனது குருவான கோவிந்த பகவத்பாதரின் குருவான கௌடபாதரை தரிசித்து ஆசிபெற்றார். பிறகு தன் சீடர்களுடன் கங்கை நதி கரையில் சிலகாலம் தங்கினார்.

அவர் வாழ்வில் அவர் செய்த அதிசயங்களும் செய்வித்த அதிசயங்களும் ஏராளம், நர்மதையினை கமண்டலத்தில் அடக்கியது, கங்கையில் நடந்தது என ஆச்சரியங்கள் ஏராளம், பிரபஞ்சம் அவருக்கு அந்த அற்புதத்தை செய்தது

அக்காலத்தில் இந்துமதங்கள் 6 பிரிவுகளாக ஆங்காங்கே இருந்ததும் பவுத்தருக்கு வழியாயிற்று. சைவம், வைணவம், சாக்தம் (சக்தி), காணாபத்தியம் (கணபதி), கௌமாரம் (முருகன்), சௌரம் (சூரியன்) என அக்காலத்தின் பெரும் கூட்ட இந்துக்கள் ஆறுவழிகளை கொண்டிருந்தனர்

சங்கரர் இதனை வேதங்கள் அடிப்படையில் ஒரே சன்மார்க்க நெறி என கொண்டுவந்தார், ஒரே வழியில் இந்துக்களை ஒன்றுபடுத்தினார்

சங்கரரின் மிக முக்கிய சாதனை கபாலிகள் எனப்படுவோரையும் இந்து மதத்துக்குள் கொண்டுவந்தது

இந்து மதத்தில் கபாலிகம் என்றொரு பிரிவு உண்டு, இது பார்ப்பதற்கு கையில் கபாலம் நீண்ட சடாமுடி சுடுகாட்டு சாம்பல் என்ற தோற்றம் கொண்ட காட்டுமிராண்டிகள் எனும் வகையில் இருக்கும்

ஆனால் உண்மையில் அது ஞானத்தை சொல்லும் வடிவம், வாழ்வு என்பது நிலையற்றது சுடுகாட்டில் சாம்பலாக எஞ்சபோவது , இங்கு எல்லா உறவும் உயிரும் தற்காலிக மாயை அது முடியுமிடம் சுடுகாடு அந்த சுடுகாடுதான் சிவனோடு கலக்கும் இடத்தின் வாயில் என்பதை சொல்வது

அந்த கபாலிகள் உலக வழக்கில் அருவருப்பான காரியங்களை செய்வதாக சொன்னாலும் எல்லாமே ஞான குறியீடு

உணவுக்கு அடிமையாகமாட்டார்கள் சுடுகாட்டில் மண்டை ஒட்டில் உண்பார்கள் அது உணவின் ஆசையினை அறுப்பது, தங்களுக்கென நிரந்த வசிப்பிடம் கொண்டிருக்கமாட்டார்கள் அது மண்ணாசையினை வெறுப்பது, இன்னும் பெண்ணாசை புகழாசை உடலாசை என எல்லா ஆசையும் தீர வெறுத்து சிவனே தஞ்சமென வாழ்பவர்கள்

அவர்களை புரிந்துகொள்ளா புத்தமும் சமணமும் காட்டுமிராண்டிகள் என ஒதுக்கிவைத்தன‌

சங்கரர் அவர்களை வாதில் வென்றார், அவர்களையும் ஞான அடையாளமாக இந்துமதத்தில் இணைத்தார்

நாடெல்லாம் சங்கரர் இந்து ஞான ஒளியினை ஏற்றிவைத்தார், அவர் செய்யா அற்புதமில்லை செல்லாத இடமில்லை

கன்னடபக்கம் தவளைக்கு பாம்பு குடைபிடித்த அதிசயம் கண்டு அந்த இடத்தில் சிருங்கேரிசாரதா மடத்தை நிறுவினார்

வடக்கே ஜோஷி மடம் மேற்கே துவாரகா மடம் கிழக்கே கோவர்த்தன மடம் என பாரத கண்டம் முழுக்க 4 முக்கிய மடங்களை நிறுவினார்

சங்கரரின் தீர்க்கதரிசனம் எவ்வளவு வலுவானது என்றால் இன்றும் இந்த மடங்கள் இந்தியாவுக்குள்தான் உண்டு, அந்நாளைய இந்தியாவான பாகிஸ்தானிலோ வங்கதேசத்திலோ அவர் மடம் அமைக்கவில்லை

இன்றும் புல்லரிக்க வைக்க கூடிய தீர்க்கதரிசனம் இது, எவ்வளவு அழகாக அவர் எதிர்காலத்தை கணித்திருக்கின்றார் என்பது ஆச்சரிய படவைக்கும் விஷயம், அதுதான் முழு பிரபஞ்ச ஞானம்

4 வகை வேதங்களுக்காக இந்த நான்கு மடங்களையும் நிறுவி 4 முக்கிய சீடர்களை அதன் தலைவரும் ஆக்கினார்

பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர் எனும் நான்கு சீடர்கள் இம்மடங்களுக்கு தலைவர்களும் ஆனார்கள்

இந்து எழுச்சியினை இந்த மடங்கள்தான் செய்தன, இவை பரப்பிய கிளை மடங்கள் இன்றளவும் இந்துமதத்தை தாங்கி நிற்கின்றன‌

இந்துமதம் எனும் பெரும் ஜோதி பவுத்த காலத்துக்கு பின் மொகலாய காலத்திலும் பின் வெள்ளையன் காலத்திலும் அணையாமல் எரிகின்றதென்றால் இன்றும் பிரகாசமாக எரிந்து ஒளிகொடுக்கின்றது என்றால் சங்கரர்தான் காரணம்

கால்நடையாக பாரதம் முழுக்க நடந்து மகா முக்கிய கடமைகளை செய்த அவருக்கு வியாசரின் தரிசனம் கிடைத்தது , வியாசரின் வேதங்களை அவரே காத்தார் என்பதால் வியாசர் வந்து அவரை வாழ்த்தினார்

கங்கை அருகே ஒரு வேடன் வந்தான், சங்கரர் அவனை தள்ளி போக சொல்கின்றார். “நான் என்றால் உடலா மனமா? எது நகரவேண்டும்” என வேடன் கேட்க, வந்தது சிவன் என உணரும் சங்கரர் மகிழ்ந்து பாடியதுதான் மனீஷா பஞ்சகம்

அந்த அளவு பகவானின் அனுக்கிரஹம் அவருக்கு இருந்தது

காசிமாநகரில் அவர் செய்யாத அதிசயமில்லை போதிக்காத தத்துவமில்லை, காசி மாநகரம் தன் பழைய நிலையினை எட்ட சங்கரர் செய்த போதனைகளும் பாடல்களும் அதிசயங்களும் மகா முக்கியமானவை, அவரால் காசி மீண்டது

அக்காலத்தில் காசிக்கு அடுத்து கொண்டாடபட்ட நகரங்களில் தமிழக காஞ்சியும் ஒன்று அதுவும் சமணரிடம் வகையாக சிக்கியிருந்தது, காஞ்சிக்கு வந்த அந்த மகான் சர்வக்ஞான பீடம் என்ற நிலையத்தை ஏற்படுத்தினார்

அதை தொடர்ந்தே தமிழகத்திலும் இந்து எழுச்சி ஏற்பட்டது பவுத்தம் மறைந்தது

நாடெல்லாம் பவுத்த சமணத்தை ஓரம்கட்டி மிகபெரிய இந்து எழுச்சியினை கொடுத்து, மாபெரும் மடங்களை நிறுவி, ஒவ்வொரு ஆலயமும் துலங்க வழிசெய்து பெரும் இந்து ஜோதியினை ஏற்றிவைத்துவிட்டு கேதர்நாத்தில் அவர் சமாதியானபொழுது வயது 32

ஆம் வெறும் 32

அந்த 32 வயதிற்குள் கால்நடையாக பாரதம் முழுக்க சுற்றியதும், அழியா பெரும் நூல்களை எழுதியதும், நான்கு பெரும் மடங்களை அந்த ஆண்டி கட்டி நிர்வகித்து இந்துமதம் செழிக்க வழிசெய்ததும் சாதாரணம் அல்ல‌

அவர் வராக மூர்த்தியின் அவதாரம், மாயையில் மூழ்கிய வேதங்களை மீட்டெடுத்த அவதாரம்

வேதங்களை திரும்ப கொண்டுவந்த இரண்டாம் வியாசர்

இன்று தென்னிலங்கை, பர்மா, தாய்லாந்து, திபெத், சைனா, தாய்வான் என முழு பவுத்த பூமியாக இருந்திருக்க வேண்டிய பாரதம் ஒரு இந்துநாடாக துலங்கி நிற்கிறதென்றால் அதற்கு முழு காரணம் அந்த சங்கரர்

பால சங்கரனாக நடக்க ஆரம்பித்து ஆதிசங்கரனாக வாழ்ந்து முடித்த அந்த மகான் சங்கரர்

அந்த அவதார பெருமகனுக்கு இன்று ஜெயந்தி நாள், இந்துமதத்தை மீட்டெடுத்து நமக்கு தந்த ஞானிக்கு மாபெரும் தத்துவகுவியலை அணைகட்டி தந்த மகானுக்கு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்கு தேவையான தத்துவ மூட்டையினை எறும்புகள் போல் நாம் சுவைக்க தந்த அவதாரத்துக்கு நெஞ்சார்ந்த நன்றியும் பிரார்த்தனைகளும்

பாரத தேசத்தின் ஒவ்வொரு இந்துவும் அந்த மகானுக்கு மாபெரும் அஞ்சலிகளை மனதால் சொல்லி வணங்கி கொண்டிருக்கும் நேரமிது

நவபாரத சிற்பி வேறு பாருமல்ல, அன்றே இந்துமததை மீட்டெடுத்த அந்த சங்கரர்தான், தேசபிதா எனும் பட்டத்துக்கு மகா பொருத்தமானவரும் அவரே