“ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்”
இக்குறள் “ஊறும் அமிர்தத்தை உண்டு உற பார்க்கில் கூறும் பிறப்பு அறுக்கலாம்” என பிரிந்து பொருள் தரும்.
யோகத்தின் உச்சியில் அதாவது துரிய சக்கரத்தில் சக்தி நிலைகொள்ளும் பொழுது அச்சக்கரம் துலங்கும் பொழுது அன்னாக்கில் அமிர்தம் ஊறும்
அந்த அமிர்தம் ஊறும் நிலையில் தன் உள் நோக்கி பார்த்தால் அதாவது தன்னுள் தன்னை தேடி ஆத்மாவினை அறிந்து அதன் ஞானதரிசனம் பெற்றால், இன்னும் அழுத்தமாக சொல்வதாக இருந்தால் ஒவ்வொரு ஆன்மாவிலும் இருக்கும் பரம்பொருளின் அம்சத்தை உணர்ந்தால் பிறப்பு வினையினை அறுக்கலாம்
இங்கு கூறு என்பது சிறிய பகுதி அல்லது கால அளவினை குறிப்பது. ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு கால அளவு கொண்டதல்லவா? அந்த காலத்தில் வாழ மறுபடி மறுபடி ஆத்மா பிறக்க வேண்டும் அல்லவா?
ஆத்மா எப்பொழுது மறுபடி மறுபடி பிறக்கும்? அதன் கர்ம வினை தீருமட்டும் பிறந்து கொண்டே இருக்கும், அந்த சுழற்சி அவலம் நடந்து கொண்டே இருக்கும்
யோகத்தில் அமிர்தம் ஊறும் நிலையில் உள்ளே உறைந்திருக்கும் இறைவனை கண்டால் அந்த பிறப்பு அறுபட்டு போகும் முக்தி கைகூடும் என்பது குறளின் பொருளாகும்
“தன்னை அறிதல்” “உள்நோக்கி பார்” என்ற யோக தத்துவங்களின்படி ஓளவை போதிக்கும் குறள் இது