காளிதாசனின் சாகுந்தலம் : 08
பாகனும் துஷ்யந்தனும் பேசிகொண்டிருக்கையில் ஏவலாள் வந்து மன்னனை வணங்கி இருமுனிவர்கள் அவனை தேடி காண வந்த செய்தியினை சொல்கின்றார்கள்
காலத்தை கடத்திடாமல் அவர்களை உடனே வரசொல் என்ற மன்னன், அவர்கள் வந்ததும் எழுந்து வரவேற்றான்
அவன் அழகையும் தோற்ற பொலிவினையும் கண்ட முனிவர் இன்னொருவரிடம் சொன்னார்
“இவர் தேஜஸ் சூரியன் போல் தகதக்கின்றது ஆனால் கண்குளிர பார்க்கும் நிலவு போல் சுடர்விடுகின்றது
தவயோகத்தில் நிறைந்து பழுத்த கணல் போன்ற மேனிகொண்ட முனிவர்க்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அதிகம், வேறுபாடு ஏதுமில்லை
இவரை கண்டு அச்சம் எழவில்லை, இவரிடம் குறைத்து சொல்ல எதுவும் குறையில்லை, இயற்கை அழகு வாய்ந்தவர் போலிருக்கின்றார்
சில துறவியர் தங்கள் யோகத்தை இழக்காமல் இல்லறத்தில் வாழ்ந்து ஜொலிப்பது போல இவர் இல்லற யோசி போலிருக்கின்றார்,
மன்டபத்தை தாங்கும் தூண்கள் போலே நாட்டு மக்களை காத்து தாங்குபவர் இவர்தான், இவர்காவலில் உள்ள நாட்டின் தேன்சிந்தும் மலர்கள் கொண்ட சோலைக்குள் தவமிருக்கும் பெரியவர்கள்தான் துறவியர்கள்
அந்த துற்வியர்கள் உலகம் வாழ் ஒரு குடிலின் கீழ் தவமிருப்பது போல இவர் வெண்கொற்ற குடையின் கீழ் அமர்ந்து உலகம் காக்க தவமிருக்கின்றார்
துறவியாக இருந்து அரசரான சிலர் உண்டு, இவரும் அவ்வரிசையோ?
தண்ணீரில் ஒட்டாத தாமரை இலை போல அரசபோகங்களில் ஒட்டாமல் தவமிருக்க்கும் அரசயோகி போலிருக்கின்றார்
பூமியில் உள்ள் ஒருவரை தேவலோகத்தில் பெருமை சொல்லி வாழ்த்திபாடுகின்றார்கள் என்றால் அது இவரைபற்றியதாக மட்டும் இருக்கமுடியும்”
அடுத்த முனிவர் சொன்னார்
“கவுதமரே, இவர் தேவலோக இந்திரனின் முழு அருளை பெற்றவர் போலிருக்கின்றார், துஷ்யந்தன் என இவரை மக்கள் சொல்கின்றார்கள்”
அடுத்த முனிவர் சொன்னார்
“முனிவ, ஒரு குடிலில் அடைபட்டாலும் கூரையின் ஒரு துவாரம் வழியே முழு வானத்தையும் காண்பது போல ஒரு காட்சியிலே அவன் அழகை கண்டீரா?
சாய்ந்த கணையமரம் போன்ற இரு தோள்கள், பார்க்க அழகான நீண்ட வண்ணம் கொண்ட இரு தோள்கள் கொண்டவர்
கடலால் சூழபட்ட இந்நாட்டை காத்து ஆளும் மன்னர் இவர்தான், அதனிலும் வியப்பு ஒன்று உண்டு
அசுரருடன் தீராபோர் கொண்டிருக்கும் இந்திரன் தன் பலமான வஜ்ஜிராயுதத்தை காட்டிலும் இவரின் வில்லை நம்பியே வாழ்கின்றான்
உயர்ந்த ஹிமாலயத்தில் இருந்து வரும் கங்கை மழைநீரை மட்டும் நம்பி வராமல் மலைமுகட்டின் பனி நீரை நம்பி வருவது போல , இந்திரனும் தேவர்களும் தங்கள் வஜ்ஜிரயுத்தை விட இவன் வில்லையே நம்பி வாழ்கின்றார்கள்
இபபடி தங்களுக்குள் பேசிகொண்ட முனிவர்கள் இருவரையும் மன்னன் வரவேற்க நெருங்கினான், அவர்கள் அவனுக்கு வாழ்த்து சொன்னார்கள்
“எண்ணியதெல்லாம் மிக எளிமையாக முடிக்கும் மன்னனே, எங்கள் தவ வலிமையும் உம்மை காப்பதாக, நலமெல்லாம் உம்மை சூழ்வதாக நம் இருவர் உறவ்ம் எந்நாளும் பொலிவதாக
என சொல்லி இனிமையான கனிகளை மன்னனுக்கு கொடுத்தார்கள்
மன்னன் கனிவாங்கி சிரம் தாழ்த்தி ஆசிபெற்று சொன்னான் “முனிவர்களே தாங்கள் வந்த நோக்கம் அறியேன், ஆனால் என்ன கட்டளையிட்டாலும் முடித்து தர் காத்திருக்கின்றேன்”
முனிவர்கள் சொன்னார்கள்
“மன்னா, எங்கள் தவகுடிலின் தலமை துறவி கண்ணுவர் தொலைதேசம் சென்றுவிட்டார் இன்னும் வரவில்லை, நாங்கள் உலக நலனுக்காக வேள்வி ஒன்றை இயற்றியுள்ளோம்
ஆனால் பொல்லா அரக்க கூட்டம் அதை அழிக்க அதர்மம் அத்தனையும் செய்கின்றது
எங்களையும் எங்கள் குடில் பெண்களையும் மான்களையும் மலர்செடி கொடிகளையும் மன்னவரே வந்து காத்தல் வேண்டும்
சாகுந்தலை வாழும் குடிலுக்கு ஆபத்து என்றவுடன் கடலில் அடியாளம் பொங்குவது போல் அவன் மனம் பொங்கிற்று, ஆனால் கரை அதை அறியாதது போல் தன்னுள் மறைத்து கொண்டான்
மனதுக்குள் சொன்னான் “அடிகரும்பு உண்ணவா கூலி வேண்டும்” என்றவன் சொன்னான் “துறவியரே நான் உங்களோடு இருந்து உங்களுக்கு வட்டமிட்டு காவல் இருப்பேன், யாகத்தை தொடங்குங்கள்”
பாகன் சொன்னான்
“மன்னருக்கு காய்ச்சிய பாலுடன் தேன் கலந்து கிடைத்தல் போலாயிற்று”
மன்னன் தன் ஏவலார்களை அழைத்தான், வில் அம்பு வீரர்க்ள், தேர்கள் இன்னும் பலவகை ஆயுதங்களுடன் படைகளை திரள உத்தரவிட்டான்
துறவியர் சொன்னார்கள்
“உம் முன்னோரின் வழியில் அறம் காக்கும் மன்னா நீர் வாழ்க, உம் தகுதிக்கேற்ற பெருமையினை காத்து கொள்கின்றீர்
இருளை அகற்றி ஒளியேற்றி மக்களை காப்பது புரு வம்சத்து கடமை என்பதை மீண்டும் காட்டிவிட்டீர், துறவியரை காப்பதே உன் குலத்தின் விரதம் என்பதையும் சொல்லிவிட்டீர்”
துறவியர் விடைபெற்று முன்னே நடக்க அவன் பின்னே நட்ந்து வந்து அவர்களை வழியனுப்பினான்
அவர்கள் சென்றதும் புன்சிரிப்புடன் சொன்னான் “பாகனே, சாகுந்தலையினை காண விருப்பமா?”
“ஆம் மன்னா, என் மன்னன் மனம் கவர்ந்த பொன்னவளை காணா விரும்புகின்றேன், ஆனால் அவர்களோ அரக்கர்கள ஆபத்து என்றார்க்ள்
திருமகள் வாழும் தாமரையினை கொதிக்கும் எண்ணெய்க்குள் இட்டதை போல் என் மனம் சுருங்கிற்று, என் ஆசை எல்லாம் ஓட்டை பானையில் நீர் ஒழுவது போல் இல்லாமல் போயிற்று”
துஷ்யந்தன் சொன்னான் “சாகுந்தலை இருக்குமிடம் நான் இல்லாமல் இருப்பேனா? நான் இருக்கையில் உனக்கேன் அச்சம் பாகனே”
அவர்கள் பேசும் போது கரப கந்தான் என்பவன் ஒரு செய்தியோடு வந்தான் அவன் துஷ்யந்தன் தாயின் வேலைக்காரன், அவன் ராஜமாதாவின் செய்தியினை கொண்டுவந்திருந்தான்
அவனை ஏறிட்டு பார்த்தான் துஷ்யந்தன், அவன் பணிந்து சொன்னான்
“மன்னா நல்ல நாள் பார்த்து நாழிகை கணித்து நம் ராஜமாதா தொடங்கிய விரதம் இன்னும் நான்கு நாட்களில் முடிவதால் உங்களை அவசரமாக வரசொன்னார்கள், பெரும் விரதம் முடியும் நேரம் நீங்கள் அங்கிருக்க வேண்டும் என்பது அன்னை விருப்பம்”
துஷ்யந்தன் சொன்னான்
“ஒருபக்கம் அரசனாக துறவியரை காக்கும் கடமை இன்னொரு பக்கம் மகனாக அன்னைக்கு ஆற்ற வேண்டிய கடமை
இரண்டையும் செய்யவேண்டிய நான் இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும்?
நான் அரக்கர்களை அழிப்பேனா இல்லை அன்னை விருப்பம் அடைவேனா?”
பாகன் சொன்னான் “மன்னா உம் நிலை திரிசங்கு சொர்க்கம் போல் ஆகிவிட்டது”
பாகனே நான் இருபக்கமும் கடமை கொண்டு திகைக்கின்றேன்
சீராக ஒரே ஆறாக ஓடும் ஆறு வழியில் பாறை பட்டு இரண்டாக பிரிதல் போலே என் மனம் பெற்றோரா? துற்விகளா என பிரிதல் கண்டேன்
இருபெரும் யானைகள் இரு பக்கம் கட்டி இழுக்க நடுவில் பிய்யும் கயிறு போல் ஆனேன் , இரண்டிலும் நான் கால்வைப்பது என்பதற்கு அவகாசமுமில்லை”
சொன்னவன் பாகன் அருகில் சென்று தோளில் கைபோட்டு சொன்னான் ” பாகனே, யாருக்கும் துன்பம் கொடுக்காத பொய் என்பது உண்மைக்கு சமம் அல்லவா?
என் அன்னைக்கு நீயும் ஒரு மகன் அல்லவா? என் தாய் வளர்த்த பிள்ளைகளில் நீயும் ஒன்று என்பதால் நீயும் அவளுக்கு மகனாகின்றாய்
அதனால் என் கடமையில் ஒன்றை முடிக்கும் உரிமை உனக்கும் உண்டு, இந்த பொல்லா அர்க்கரிட்ம் இருந்து துறவியர் குடிலை காக்கும் பொறுப்பை நான் சுமக்க, அன்னைக்கு நான் செய்யவேண்டிய கடமையினை நீ செய்வாய”
பாக சொன்னான் “மன்னா, அரக்கர்க்கு நான் அஞ்சுபவன் என்றா நினைத்துவிட்டீர், நான் உம் தேர் பாகன் அல்லவா?’
துஷ்யந்தன் சிரித்து சொன்னான் “என் குதிரைகளே அச்சம் அறியாது எனும்போது நீர் அச்சம் அடைவது எப்படி?”
“மன்னர் விருப்பம் எதுவோ நான் அப்படி இளவரசனாய் செல்வேன், மன்னரின் தம்பியாய் செல்வேன்” என்றான் பாகன்
“ஆம் நண்ப, தனியே செல்லாதே. செல்லாக்கு கொண்டவன் கூட்டமாய் செல்லுதல் வேண்டும், நீ நம் படைகளில் கொஞ்சம் எடுத்து செல், கொடியோடு செல்”
பாகன் மகிழ்ந்தே விடைபெற்றான், தேரோட்டும் ஒருவன் தேரேறும் மன்னன் போல் தன்னை நினைந்து தேரில் ஏறினான், கர்னன் போல் தன் உயிர் மன்னனுக்கு என உணர்ச்சியால் சொல்லிகொண்டான்
துஷ்யந்தனோ தன்னில் சொல்லிகொண்டான்
“இவனை நம்ப முடியாது, நீரில் மூழ்கி புதுகுடத்தில் நீர் எடுத்தால் அது தன்னில் நீர் உள்ளதை காட்ட வெளியில் ஈரமாகி கசிந்திருக்கும்
அப்படி இவன் மன்னன் எனும் பெரும் யானை சாகுந்தலை எனும் கடலில் வீழ்ந்தான் என்பதை எல்லாரிடமும் சொல்லிவிடுவான், அதை தடுத்திடல் வேண்டும்”
என்றவன் அவன் கரம் பிடித்து சொன்னான் “நண்பா, கடமை வேறு காதல் வேறு என்பதை நான் அறிவேன் என்பதை நீயும் அறிவாய்
நான் இங்கே இருப்பது அவள் மேல் கொண்ட காதலால் அல்ல, துறவியரை காக்கும் கடமை ஒன்றிற்காக என்பதையும் அறிந்துகொள்
நான் மான்கூட்டம் நடுவே மான் கன்றாய் நின்ற அப்பெண்ணை பற்றி பேசியதையெல்லாம் உண்மை என நினைத்துவிடாதே, நான் ஒரு அரசனாக எப்போதுமே அரசனாக என் கடமை பற்றி மட்டும் சிந்திப்பேன்
ஏட்டில் எழுதும் காய்கறி சமையலுக்கு எடுக்கப்ட கூடுமோ? அதை சொல்லியா தெரியவேண்டும், அரக்கர் கூட்டத்தினின்று அம்முனிவர்களை காக்க செல்கின்றேனே அன்றி, அந்த தவகுடிலின் பெண்களில் ஒருத்தியான சாகுந்தலைக்காக செல்லவில்லை
அதனால் நீ என் விளையாட்டு பொய்யினை நம்பி அங்கே ஏதும் சொல்லிவிடாதே, போ அன்னையினை கவனித்து கொள், நல்ல செய்தி அனுப்பு” என சொல்லி விடைகொடுத்தான்
பாகன் அதை ஏற்று இளவரச கோலத்தில் சென்றான், துஷ்யந்தன் சாகுந்தலை இருக்கும் குடில் நோக்கி சென்றான், அவன் ராஜ்ஜியத்தின் அளவை விட அவன் நினைவு பன்மடங்கு பெரிதாக அவன் மனதில் வளர்ந்துகொண்டே இருந்தது
(தொடரும்..)