காளிதாசனின் சாகுந்தலம் : 15

காளிதாசனின் சாகுந்தலம் : 15

(துர்வாசரின் சாபத்தால் துஷ்யந்தனுக்குத் சகுந்தலையினை நினைவு மட்டும் அகன்று போனது, அவளைச் சந்தித்ததோ அவளுடன் பழகியதோ எதுவுமே அவனுக்கு நினைவில் இல்லை.

தன் தலைநகரான‌ அஸ்தினாபுரத்தில் அவன் வழமையான அரசாட்சி செய்தான், சாகுந்தலையினை மட்டுமே அவன் முழுக்க மறந்திருந்தான். வேறு எல்லா வகையிலும் அவனாகவே இருந்தான்.

அப்போதுதான் அவனைக் காண கௌதமியார் சாரங்கனுடன் சாகுந்தலை வருகின்றாள்.)

துஷ்யந்தன் தன் மாளிகையில் தன் விளையாட்டு தோழனுடன் ஓய்வில் இருந்தான், அவன் அரண்மனை நடனபெண்கள் பாடல் பாட அதில் லயித்திருந்தான்.

அமிசபதிகை எனும் பெண் அற்புதமாக இசையோடு பாடத் தொடங்கினாள், அவன் தோழன் சொன்னான்.

“மன்னா, ரசனை மிக்க மனதுக்கு இசையும் பாடலும் அல்லவா மூச்சும் பேச்சும் போல் முக்கியமானது, இவை இல்லாவிடில் மனம் எதை ஆழ ரசிக்கும்…”

துஷ்யந்தன் அவனை அதட்டி அந்த இனிமையான பாடலைக் கவனிக்கச் சொன்னான், அவள் பாடிய பாடலின் உட்பொருள் இப்படி இருந்தது.

“இளமையான வண்டே, ஏன் வறியவனைப் போல் ஒவ்வொரு இடமாய் அலைகின்றாய்?

அந்த மணக்கும் மாமரத்தின் பூவிலே தேன் உண்டு மயங்கிக்கிடந்தாய், இப்போது அதை மறந்து குளிர்ந்த தாமரையில் தேனைத் தேடி புரண்டு கொண்டிருக்கின்றாய்.

மாம்பூவின் தேன் சுவையினை எப்படி மறந்தாய்? அதைவிட சுவையான தேன் இதுவோ?

தேனில் ஊறிய மாம்பழத்தை விட்டுவிட்டு இந்தத் தாமரையில் என்ன சுவை கண்டாய்?”

அந்தக் கலைசொற்களைக் கேட்டதும் சூரியனைக் கண்ட மலையின் பனி உருகுவது போல மன்னன் மனம் உருகிற்று, துஷ்யந்தன் சொல்லிக் கொண்டான்.

“ஆ.. இது என் பழைய பட்டத்து அரசி வசுமதிக்கான வரிகளோ?

எழில்நிலவு வானத்தில் தேய்வதை தடுக்கமுடியாததை போல அவள் என்னைவிட்டு மெல்ல மெல்ல பிரிந்ததை என்னால் தடுக்க இயலவில்லையே?

அவளை மாம்பூவாக உருவகித்து இவள் இன்றைய என் நிலையினை அழகாகப் பாடிவிட்டாள், வித்தைக்காரி.

நண்பனே, அவளிடம் சென்று அவளின் கவித்திறத்தை நான் பாராட்டியதாகச் சொல், அவள் கலையால் என்னைப் பழித்துவிட்டாள் என்பதைச் சொல்”

நண்பன் எழுந்தான், “துறவியே, தேவலோக அழகிகளிடம் சிக்கினால் படாதபாடுபடுவார்களாம், அப்படிக் கலைரசமிக்க மன்னனிடம் சிக்கிய என் நிலையும் ஆகிவிட்டது” என அலுத்துக் கொண்டான்.

“நாகரீகமாக நான் சொன்னதைச் சொல்” என்றான், அந்த அர்த்தம் உணர்ந்து வார்த்தைகளை அடக்கிய நண்பன் மன்னன் மனதை தெரிவிக்கச் சென்றான்.

துஷ்யந்தன் அந்தப் பாடலைக் கேட்டு இனம்புரியாக் குழப்பம் கொண்டான்.

“எந்தப் பிரிவும் என்னைப் பாதிக்காது, அரச மனம் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. காதல் வாழ்வில் எனக்குக் குறையேதும் எக்காலமுமில்லை, அந்தக் குளமும் வற்றியதில்லை, பறவைகளுக்கும் பஞ்சமில்லை.

ஆனால், இப்பாடல் என் நெஞ்சத்து ஆசை எனும் தேன் கூட்டை தீயால் பொசுக்குவது போல் அல்லவா நெஞ்சை தாக்குகின்றது?

இப்பிறவியில் நான் யாரைப் பிரிந்தும் இப்படி வலி உணர்ந்ததில்லையே? அப்படியானால் இது முற்பிறப்பின் தொடர்ச்சியோ?

பாட்டனின் முகம் பேரனுக்கு அமைவது போல இது போன ஜென்மத்திலிருந்து வருமோ? நான் என்ன செய்வேன்?

இதுவரை கேட்டறியாச் சொலொன்று மனதைத் தாக்குவதென்ன, இதுவரை காணாத ஒன்றை கண்டது போல் மனம் அன்பினால் கிளர்ந்தெழுவது என்ன? இதை என்னால் அறியமுடியவில்லை.

பிறவி எனும் ஓட்டை வழியே ஜென்ம நினைவலைகள் ஆற்றுவெள்ளம் போல் வருவது முன் ஜென்ம தொடர்ச்சியன்றி எதுவாக இருக்க முடியும்.

மனமே அமைதிகொள், மனமே கலங்காதே, இப்பிறவியில் உனக்கு அன்பானவள் யாரையும் நீர் பிரிந்து கலங்கியதில்லை. இது முன் ஜென்ம தொடர்ச்சி.. அமைதி கொள்”

அவன் தனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கஞ்சகி எனும் அவன் மூத்த சேவகன் ஒரு செய்தி சொல்ல அரசனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“ஒரு காலத்தில் வாயில் காக்கும் ஈட்டி கம்பினைத் தாங்கிக் காவலனாய் நின்றவன் நான், இன்று ஒரு கம்பு என்னைத் தாங்கும்படி முதியவனானேன், நடக்க முடியவில்லை.

மன்னனோ தன் இன்றைய கடமை முடிந்ததென ஓய்வறைக்கும் சென்றுவிட்டார், அவரைச் சொல்லி ஒன்றுமில்லை, அந்தக் கன்வ முனி அனுப்பிய சீடர்கள் இப்போதுதான் வாசலில் வந்து நிற்கின்றார்கள்.

ஒரு பெரிய மாயமந்திரவாதி ஒரு பொருள் மேல் கருப்புதுண்டை இட்டு எல்லாமே இருளாக்குவது போல இந்தப் பூமியினை இருள் எனும் போர்வையிட்டு இயற்கைதாய் மறைக்கின்றாள் என்றாலும் என்றேனும் கதிரவன் சோர்ந்ததுண்டோ?

உடல் இயங்கினாலும் உறங்கினாலும் மூச்சு நிற்பதுண்டோ?

மழைக்காலம் ஒருகண்ணும் வெயில்காலம் இன்னொரு கண்ணுமாய்ச் சுழல்கின்ற உலகைத் தாங்கும் ஆதிசேஷன் என்றேனும் சோர்ந்ததுண்டோ?

கதிரவன் போல், உயிர்காற்றுபோல், ஆதிசேஷனைப் போல் எப்போதும் தன் கடமை செய்பவனே அரசன், இங்கு யார் உறங்கினாலும் அரச நீதி உறங்காது.

பெரும் மதயானை கூட்டத்தினை வழிநடத்தும் முதிர்யானை தானே முன்னால் நடந்து ஆபத்தைக் கடக்க வழிகாட்டும், நல்ல மேய்ச்சல் இடம் கிடைத்ததும் மந்தையெல்லாம் மேயவிட்டு அது நிழலில் ஓய்வெடுக்கும், அப்படி மன்னன் தன் மக்களின் நலமெல்லாம் கண்டுகொண்டே ஓய்வெடுக்கும் நேரமிது”
எனச் சொல்லிகொண்டவன் மன்னன் அருகில் சென்றதும் சொன்னான், “மன்னவன் முன்னவர் வழியில் வாழிவாழி.
பெண்தெய்வம் போன்ற பெண், அவரோடு அவள் அன்னை இன்னும் சில துறவியர் இமாலய‌ கன்வமுனி குடிலில் இருந்து அவரின் செய்தியுடன் வந்திருக்கின்றார்கள்.

அவர்கள் உங்களைத் தேடி வந்தவர்கள், தேடாமல் செல்வது போல் தெரியவில்லை, அதுவும் இளம் தெய்வம் போல் இருக்கும் அப்பெண் வாடிய முகத்துடனும் வாடாத அழகுடனும் நிற்பது உங்களைக் காணாமல் செல்வதில்லை எனும் உறுதியினைச் சொல்கின்றது.

கன்வர் எனும் செய்தி கேட்டதும் மன்னன் எழுந்தான்.

“தவத்தில் சிறந்த கன்வரே செய்தியுடன் சீடர்களை அனுப்பினார் என்றால் விஷயம் இருக்கவேண்டும், அந்தத் துறவியோடு சரியாகப் பேசகூடியவர் நம் புரோகிதர் சோமநாதர், அவரை வரச் சொல்லுங்கள்” என அவசரமாக எழுந்தவன், துறவியரை யாக சாலையில் சந்திப்பதே சரி எனச் சொல்லி தன் பணியாளர் தனக்கு முன் அங்கு அனுப்பி ஏற்பாடுகளைச் செய்யச்சொல்லிவிட்டு அவன் மெல்லத் தயாராகி நடக்க ஆரம்பித்தான்.

அப்போதுதான் பெரும் களைப்படைந்து ஓய்வுக்கு வந்தவன் மறுபடியும் சந்திப்பு என்றவுடன் தன் நிலையினைச் சொன்னபடி நடந்தான்.

“மன்னன் என்பவன் யார்? அவன் சுகவாசியா? உல்லாச வாழ்வு வாழ்பவனா? அல்ல, அவன் ஒரு சுமைதாங்கிக் கல், எல்லோரின் சுமையும் ஏற்றுச் சுமக்கும் ஒரு கல், எங்கிருந்தோ சுமையோடு வரும் மக்கள் அந்தச் சுமைதாங்கிக் கல்லில் சுமை இறக்கி அமைதி கொள்வர், அக்கல் எல்லாமும் சுமந்தாக வேண்டும்.

ஒவ்வொரு உயிரும் தான் விரும்பியதைப் பெற்றதும் மகிழ்ச்சி கொள்ளும் உலகிது, ஆனால் மன்னன் மட்டும் ஒவ்வொன்றிலும் துன்பத்தையே பெறுகின்றான்.

நாட்டில் மழை இல்லை என்றாலும் அவனைப் பழிப்பார்கள், எது நடந்தாலும் அவனைச் சாடுவார்கள், ஆயிரம் கண் கொண்டு விழித்திருந்து ஆட்சி செய்யும் தேவை அவனுடையது.

பல்லக்கில் மன்னன் செல்வான் என அறியாதவர் சொல்லிக்கொள்வர், மன்னனே மக்களுக்குப் பல்லக்குத் தூக்குவதை யாரறிவர்?

மன்னன் குடையிலே மக்களெல்லாம் இளைப்புறுவர், ஆனால் குடைபிடித்தே அவன் கரம் வலிப்பதை யார் அறிவர்? மக்களெல்லாம் நிம்மதியாய் இன்பம் கொள்ள பிறந்தவர்கள், மன்னன் அவர்களுக்குக் கைவலிக்க குடைபிடிக்கப் பிறந்தவன்.

ஒருவன் குடும்பம் பிரிந்து வெளியிடம் சென்றுவந்தால் அந்த மகிழ்விலும் ஓர் துயரம் உண்டு, சென்று வந்த ஆண்மகன் உண்டு உறங்கி தூங்க, அவனுக்காய்க் காத்திருந்த பெண் சமைத்துப் போட்டு பணிவிடை செய்து களைத்தல் போல மன்னவனும் களைத்திடுவான் இதையெல்லாம் யார் அறிவார்?” எனச் சொன்னபடியே நடந்தான்.

அப்போது அவனின் சேடிப் பெண்கள் வாழ்த்தினார்கள்.

“கதிரவன் தீக்கதிரைத் தன்மேல் தாங்கி உயிர்க்கெல்லாம் குளிர்நிழல் தரும் ஆலமரம் போல, கஷ்டமெல்லாம் தான் தாங்கி ஆபத்தெல்லாம் தான் வாங்கி தன் குடிகளைக் காக்கும் மன்னவன் வாழி வாழி.

மன்னா, நீர் ஆற்றல் கொண்டு ராஜரீகம் செய்வீர் தவறு செய்தவர்களைத் திருத்துபவர், வழக்கின் உண்மை அறிந்து நிதானமாய் நல்லதீர்ப்பு சொல்பவர்.

பொருள் இருந்தால் ஓடிவந்து சேரும் உறவு கூட்டம் போல் இல்லாமல், அருளைத் தேடிச் செல்லும் வெகுசிலர்போல் அருளாட்சி செய்பவர் நீர் வாழி வாழி”

தனக்குள்ளே நொந்தபடி வந்த துஷ்யந்தன் அந்த மொழிகளை கேட்டவுடன் சொன்னான்.

“புழுக்கமிக்க அறையிலே குளிர்தென்றல் வந்து தழுவியது போல் என் நெஞ்சம் இம்மொழிகளால் குளிர்ந்தது”

சொன்னவன் மாடத்தின் வளாகத்தில் நடந்தபோது பணியாளன் அவர் முன் பணிந்தே சொன்னான்.

“மன்னா, அதோ தரையில் அழகான யாக சாலை, சுத்தமாக அமைக்கப்பட்டு அரும் பந்தலிட்டு காத்திருக்கின்றது, அதன் முன் நிற்பவர்தான் கன்வமுனியால் அனுப்பப்பட்டவர்கள்.

மன்னன் மாடத்தில் இருந்தே அவர்களைத் தலைசரித்துப் பார்த்தான், மன்னன் தலை காவலன் தோளில் உரசும்படி சரிந்து உற்றுப்பார்த்தான்.

அப்படியே சொன்னான், ” கன்வ முனிவர் ஏன் இவர்களை நம்மிடம் செய்தியோடு அனுப்பினார்? அவர் குடிலுக்கு ஏதும் இடையூறோ?

துஷ்டசக்தி தொந்தரவோ, இல்லை பகைவரின் கொடுஞ்செயலோ, இல்லை காட்டு விலங்குகள் தொந்தரவோ?

தவசிகள் குடில் புலிகண்ட மான்போல் தவிக்கின்றதோ, இல்லை மன்னவன் என் அறியாத்தவறால் அங்குச் செழுமையின்றி வறட்சி வந்து பூ வாடி, காய் பொசுங்கி பெரும் குற்றம் ஆயிற்றோ? எச்சரிக்க வந்தனரோ? என வாய்விட்டு சொன்னான்.

அதைக் கேட்ட வேலைக்காரன் மெல்லச் சொன்னான், “மன்னா, ஒருவேளை அவர்கள் நன்றி சொல்ல வந்திருக்கலாம், வட்டிக்கடைகாரனிடம் பணம் பெற்றவர்கள் வட்டிக் கொடுக்க வருவதுபோல் நன்றிச் சொல்ல வந்திருக்கலாம்.

நன்றிக்கோர் இலக்கணமான சிலரை நன்றி சொல்லவும் முனிவர் அனுப்பியிருக்கலாம்.

மன்னன் அப்படியே கீழிறங்கி தன் ஆசனம் நோக்கி வந்தான்.

அதே நேரம் அந்த அஸ்தினாபுரத்தையும் அந்த மாளிகையினையும் பார்த்தபடி வந்த சாரங்கன் சொன்னான்.

“சாரத்துவா, இந்த ஊரில் மனித மாண்பின் வடிவங்கள் சிகரமாய்த் தெரிகின்றன, பெரிய குறையேதுமில்லை, யாருக்கும் குறையில்லா, கவலையில்லா நல்லாட்சி நடக்கின்றது.

ஆனாலும், குளிர்ந்த பனிபடர்ந்த‌ இமயத்தில் ஆங்காங்கே வெப்ப ஊற்று உண்டு என்பது போல சில கடுமைகளை உணர்கின்றேன்.

நம் குடிலின் பேரமைதி இங்கு இல்லை, பெரும் பழிவந்து தாளமுடியா அவலத்தில் சிக்கி மௌனமாகி கிடப்பவனைப் போல் இந்த ஊரில் ஒரு தோற்றம் தெரிகின்றது, யாராலும் அணைக்க முடியாத் தீ ஒன்று சுடுவதைப் போல் இங்கு ஏதோ தெரிகின்றது”

சாரத்துவன் சொன்னான், “அமைதி நிறைந்த காட்டைவிட்டு பரபரப்பான ஊருக்குள் வந்தவுடன் காட்சியெல்லாம் உனக்கு நலமில்லாமல் தெரிகின்றது.

எண்ணெய் தேய்த்து குளித்து சுத்தமான ஒருவனுக்கு, அடுத்து எண்ணெய் தேய்க்க செல்பவன் அழுக்காகத்தான் தெரிவான்.

அதிகாலை எழுந்து தயாராகும் ஒருவனுக்கு பொழுது விடிந்தபின்னும் உறங்குபவன் வேடிக்கையாய்த் தெரிவான். அப்படித்தான் உனக்கும் இந்த நகரம் தெரிகின்றது.

நதியிலே குளித்துவரும் யானைக் கூட்டம், இதுவே சுகமென அழுக்குநீரில் கிடக்கும் பன்றிகளைப் பார்ப்பது போல் நீ இவர்களைப் பார்க்கின்றாய்.

நீ தவக்குடிலில் பற்றற்ற வாழ்வு பயின்றவன், மற்ற மானிடர் உனக்கு அப்படி தெரிவதில் வியப்பேதுமில்லை”

சொல்லிக்கொண்டே அவர்கள் நடக்க அவர்களோடு நடந்த சாகுந்தலை அந்த மண்டபத்தில் கால் வைக்கும் போது பதறிச்சொன்னாள்.

“என்ன இது அபசகுனமாய் என் வலதுகண் துடிக்கின்றது.

வேடனின் அம்புபட்ட பறவையின் சிறகு போல, பொல்லார் கொடும் ஆட்சியில் துடிக்கும் நல்லோர் மனம் போல வேகமாய்த் துடிக்கின்றது.

ஒருபாவமும் அறியா மெல்லியப் பெண் மேல் கயவன் ஒருவன் பழிசுமத்திவிட்டு, ஏதும் பேசினால் கொல்வேன் என மிரட்டும் போது அவள் மனம் துடிப்பது போலவே என் வலக்கண் துடிக்கின்றது”

மிக அஞ்சி நடுங்கியவளைத் தன்னோடு அணைத்து கௌதமியார் சொன்னாள், “மகளே கலங்காதே, அஞ்சாதே, உன் தோளைத் தழுவிய இந்த மன்னனின் தெய்வமெல்லாம் உனக்குத் தணையிருக்கும் கலங்காதே”

அவர்கள் அடியெடுத்து வைக்கும் போது புரோகிதர் சோமநாதர் எதிர்கொண்டு வந்தார், எதுவுமே அறியாதவனாய்த் தன் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்றான் மன்னன்.

தன் எதிர்காலம் என்னாகுமோ மன்னன் என்ன சொல்வானோ, இது அவன் அரண்மனை, அவன் அதிகாரம், நாம் ஏமாந்து போவோமோ எனக் கலங்கியபடி தளர்ந்து கௌதமியார் தோள் பற்றி மான்குட்டி போல் நடந்தாள் சாகுந்தலை.

(தொடரும்..)