காளிதாசனின் சாகுந்தலம் : 19

காளிதாசனின் சாகுந்தலம் : 19

சாரங்கவன் சொன்னான், “தன் மனம் அறிந்து பதைபதைக்க செய்த தவறு இப்படித் துயரில்தான் முடியும். காட்டில் விலங்குகளும், பறவைகளும் கண்டபொழுதில் கூடி மகிழும். ஆனால், வஞ்சத்தால் பழகாது, ஏமாற்றிச் செல்லாது, பெண்ணின் அருகிருந்து குஞ்சுகளைக் குட்டிகளை கண்போல் பார்த்திருக்கும்.

ஆனால், அறிவு எனும் கண்களால் எல்லாவற்றையும் ஆராயும் மானிடர்கள் அறிந்தே களவுமணம் செய்கின்றார்கள். அதனால், பாதிக்கபட்டால் இப்படித்தான்.

சொன்ன சொல் தவறாதவருக்கும், ஒழுக்கம் நிரம்பியவர்க்குமே களவுமணம் காலமெல்லாம் நிலைக்கும். பிறப்பிலே நல்லொழுக்கம் கொண்டவர் களவு மணம் செய்தால் அது நிலைக்கும். ஒழுக்கமில்லாதவர்க்கும் இரக்கமில்லாதவர்க்கும் பெற்றோரும் பெரியோரும் சாட்சியோடு செய்யும் திருமணமே சரியாகும்.

வழுக்குமனம் கொண்டோருடன் நம்பி தொடர்பு கொண்டால் வாழ்வே பகையாகி நெருப்பாய் மாறி சுடும், இதோ காண்கின்றோம்”

துஷ்யந்தன் வருந்திச் சொன்னான், “அருள்மிக்க துறவியரே, இப்பெண் மேல் வைக்கும் நம்பிக்கையினை நாடாளும் மன்னன் என்மேல் வைக்காமல் பேசுகின்றீர்.

கோபமுற்ற முள்ளம் பன்றி வழிமுன் வந்து தன் முட்களை அம்பாய் வீசுதல் போல என்மேல் கொடும் சொற்களை விஷமாய் வீசுகின்றீர், கருவேல மரத்தை அணைத்தவன் உடலெல்லாம் முள்குத்தி புண்ணாகி வேதனையில் வாடுவது போல் நான் மனமெல்லாம் புண்பட்டேன்”

சாரங்கவன் சொன்னான், “தலைகீழாய் பேசுகின்றீர் மன்னா, இவள் எங்கள் தவக்குடிலில் வளர்ந்தவள், கள்ளம் என்றும் வஞ்சகம் என்றும் ஏதும் அறியாதவள், களங்கமான சிந்தனை அவள் நிழலிலுமில்லை.

களங்கமில்லாதவளைக் கள்ளி என்றீர். ஆட்சிக்காக எல்லாத் தந்திரமும் நரித்தனமும் அறத்தை தாண்டிய சிந்தனையும் கற்றுக்கொண்டதுதான் அரசர் உள்ளம் என்பதை இன்று எங்களுக்கெல்லாம் வெளிப்பட்டு விட்டது.

ஆலிழை போன்ற அடிவயிற்றில் பிரம்மனைத் தாங்கி, நெஞ்சிலும் கண்களிலும் திருமாலைத் தாங்கி, நெஞ்சத்தில் சிவனைத் தாங்கி நிற்பவள் பெண். ஆம், அவள் வயிற்றினால் படைப்பு தொழில் செய்கின்றாள், மார்பினால் பாலூட்டி கண்களில் இரக்கம் கொண்டு உணவூட்டி உயிரை காக்கும் காத்தல் தொழிலை செய்கின்றாள்.

தீமையினைக் கண்டால் அதை அழிக்க துடிப்பவளும் பெண்ணே.

அப்படி மும்மூர்த்திகள் அம்சமாய் வாழும் பெண்மையினைக் கொச்சைபடுத்தினீர். நீர் குறிக்கோள் இல்லாத மன்னராய் தான் தோன்றித்தனமாய் ஆகிவிட்டீர்.

உலகத்தார் காதல் செய்யவேண்டும், அந்த அன்பான உணர்வில் கட்டப்பட்டு உயர்ந்து வாழவேண்டும், அந்த பிணைக்கப்பட்ட அன்பாலே உயர வேண்டும், எனத் தலைமுறை தலைமுறையாய் அந்தக் காதலின் பெருமையினை நல்லோர்கள் சொல்லிவந்தார்கள்.

உயர்ந்த காதல் மலம் போல் துர்நாற்றமெடுப்பதெல்லாம் உயர் ஒழுக்கம் இல்லாத உம்மைப் போன்றோரால்தான். உயர்ந்த காதல் அழிவதெல்லாம் பிணம்போல் வாழும் உம்மைப் போன்றோரால்தான்.

முழு முரடனாக, மடையர்களின் தலைவனாக, சுயநலத்தின் உச்சியில் நீர் பேசி காதலென்னும் கண்களைத் தீபந்தமிட்டு அவித்துவிட்டீர்.

திருஅருளும், இறையாண்மையும் உம்மை விட்டு அகன்று, வலிமை குன்றிப் பேடிபோல் நீர் அமர்ந்திருப்பதை நான் காண்கின்றேன்.

கிழவிக்கு ஒப்பனையிட்டு மையிட்டு குமரிபோல் காட்டலாம், மாற்றலாம். ஆனால், மனதால் கிழவியானவள் உள்ளம் குமரி மனமாக மாறுமோ, மாறாது. பெரும்பொய்யினை அழகு செய்து அதனை எமக்கு மொழிகின்றீர், உண்மையினைச் சுட்டு பொசுக்கி சுருக்கிவிட்டதாக நினைத்துப் பேசுகின்றீர், மனிதனுக்கான தகுதி இல்லாதவராகிவிட்டீர் நீர்”

அதைக் கேட்டு பெருமூச்சு விட்டபடி துஷ்யந்தன் கேட்டான், “துறவியே, நீர் பேசுவது மட்டுமே உண்மையாக இருக்கட்டும், நான் இவளை ஏமாற்றினேன் என நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், உள்ளம் கொதிக்கும் இவளை ஏமாற்றி எனக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்ன பலன் கிடைக்கும்? சொல்லுங்கள்” என்றான்.

சாரங்கவன் சொன்னான், “நரகத்தில் வீழ்வதன்றி வேறேன்ன பலன் உமக்கு?”

சாரத்துவன் சொன்னான், “சாரங்கா நாம் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிவிட்டோம், இனி மேலும் மேலும் பேச என்ன இருக்கின்றது?

நம் குரு என்னவெல்லாம் சொல்லச் சொன்னாரோ எல்லாம் சொல்லிவிட்டோம். அவரோ யானைக்கு சாறு நிரம்பிய கரும்பை கொடுக்கச் சொன்னால் சாறு எடுத்து பிழிந்து போட்ட சக்கையினைக் கொடுக்கின்றார். இவரிடம் என்ன பேச இனி இருக்கின்றது, தன் மேல் கெட்டபெயர் வரககூடாது என்பதிலே கவனமாய் இருப்பவரிடம் என்ன சொல்லிப் புரியவைப்பாய்? நாம் கிளம்பலாம்”
என்றவன் மன்னரைப் பார்த்துச் சொன்னான்.

“மன்னா, இதோ உங்கள் மனைவி சாகுந்தலை, இவளை இங்கே நாங்கள் விட்டுச் செல்கின்றோம். எம் குரு சொன்னது அதுதான்.

உங்கள் மனைவியினைச் சேர்த்து கொள்ளவும், தள்ளிவிடவும் உமக்கு உரிமை உண்டு. அதுவும் அரசனுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதனால் விரும்பியதைச் செய்யும். கௌதமியாரே கிளம்புங்கள்” எனச் சொல்லி நடக்க முயன்றான்.

அவர்கள் பின்னால் ஓடிச் சென்று சாகுந்தலை தலையில் அடித்துச் சொன்னாள்.

“தாய்ப்பாலில் நஞ்சு பொங்கி வந்து அது குடித்த குழந்தை துடித்திடல் போல் நான் இங்கு பெரும் வலியில் நிற்கின்றேன், மானிட பண்பே இல்லாத மனிதநேயமே இல்லாத மன்னன் என்னை கைவிட்டு விட்டான், நீங்களுமா என்னை கைவிட்டு செல்கின்றீர்கள்?”

அவள் ஓடிவர அவளின் நிலைகண்ட கௌதமியார் சொன்னார்.

“சாரங்கவா, அதோ பார். பள்ளம் நோக்கி பாயும் வெள்ளம் போல் சாகுந்தலை நம்மை நோக்கி வருகின்றாள், அவளை காக்கவேண்டிய கணவனோ ஏற்காமல் விரட்டுகின்றான், என் மகளை நான் எப்படி இந்நிலையில் விட்டுவிட்டு வருவேன்” எனச் சொல்லி சாகுந்தலை பக்கம் திரும்பினாள்.

சாரங்கவன் சீறிச் சொன்னான், “சதைகொழுப்பில் மிகுந்தவளே, பெரியோர்க்குரிய மரியாதை செய்யாமல் அவர்களை பொருட்டாக கருதாமல் உனக்கான மாலையினை மகுடமாய் சூடிகொண்ட கர்வி நீ.

கர்வத்தில் உன்னைத் தொலைத்த காமுகி நீ, யாரைக் கேட்டு தகாதன அத்தனையும் செய்து இப்போது எங்களிடம் முறையிடுகின்றாய்?”

சாரங்கனை முதல் முறையாய் அவ்வளவு ஆத்திரம்பொங்க கண்ட சாகுந்தலை நடுங்கிப் போனாள், அவன் தொடர்ந்தான்.

“சாகுந்தலை நீயே சொல், அரசன் சொல்வதுபடி தவறெல்லாம் உன்னுடையது என்றால் என்ன செய்ய போகின்றாய்?

அடுப்பில் ஆக்கும்போது அது சோறு, பந்தியில் இடும்போதும் அது சோறு. ஆனால், உள்ளே சென்றபின் அதனை எப்படி சோறு எனச் சொல்லமுடியும்?

இங்கு கன்வமுனியும் என்ன சொல்லமுடியும் சொல்? அவர் ஆடுபுலி ஆட்டத்தில் சிக்கிவிட்டார், அவர் ஆடாக நிற்க விதி வேங்கையாய் ஆடுகின்றது.

எருமை சாணத்தை எடுத்து யாகசாலையினை மெழுகுவார் உண்டோ? எல்லா மூலிகையிலும் உயர்ந்தது துளசி, அதுமட்டும்தான் இரவிலும் பகலிலும் நல்ல காற்றைக் கொடுத்து கொண்டே இருக்கும், இந்த இடத்தில் துளசியாய் இருந்து அன்பை கொடுத்துக்கொண்டே இரு, அப்படி நீ இருந்தால் வணங்கதக்க நிலையினை அடைவாய்.

நீ உண்மையானவள் என்றால், இவனே உன்னை தொட்டவன் என்றால், இவனால்தான் நீ தாயானவள் என்றால் , நடந்ததெல்லாம் உண்மை என்றால் நீ இங்கேதான் இருந்தாக வேண்டும்.

அவன் பேய்போல் நின்று மிரட்டினாலும் சரி, விரட்டி அடித்தாலும் சரி, உன் அன்பாலும் பண்பாலும் அவனுக்குத் தொண்டு செய்து அவனை வென்று நில்.

போ, அவனோடு வாழு, இங்கேயே வாழு, அவனுக்கு அடிமையாக வேண்டுமானாலும் இரு, எங்களுடன் வராதே, நாங்கள் செல்கின்றோம்”

துஷ்யந்தன் மிகவும் குழம்பி தன் இயலாமையில் சொன்னான்.

“அறமிகுந்த முனிவரே, ஏன் இந்த பெண்ணை சொற்களால் வதைக்கின்றீர்கள், அந்த வான்நிலவு தன் துணையான அல்லியோடு இரவில் நெறியோடு வாழும், நெடும்புகழ் கொண்ட சூரியன் தாமரையினைத் தன் கதிர்கரத்தால் தழுவி வாழும், இது உலக வழமை.

இங்கே அறம் மிகுந்தவர்கள் பிறரின் துன்பத்தில் மகிழமாட்டார்கள் அல்லவா?

காமம் எனும் பெரும்பாம்பு தன் கொடிய விஷத்தை ஐந்து தலை கொண்டு ஐந்து புலன்களில் ஏற்றும். அந்த விஷம் ஏறியோர் அறம் மறந்து தர்மம் மறந்து பெரும் மயக்கத்தில் வீழ்வர், யார் வீடு என்றோ என்ன இடம் என்றோ பார்க்காமல் மயங்கிக் கிடப்பர்.

அப்படியான நிலை கொண்டவளை, இன்னொருவனால் கருவானவளை நான் சேர்த்து எப்படி இன்பமாய் வாழமுடியும்? அறம்கொண்ட துறவியரே முடிவு சொல்வீர்”

அதைக்கேட்டு சாரங்கன் திருப்பிச் சொன்னான், “மன்னரே, பல நினைவுகள் எனும் மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனாய் நிற்கின்றீர்.

அடுத்தடுத்து செய்த பல செயல்களால் நீர் முன்பு நடந்ததை எல்லாம் மறந்தே விட்டீர், மன்னர் எவ்வித விதியுமின்றி கற்புநிலை பல கடந்து கொடிகளுடன் விளையாடுவதால் எல்லாக் கொடியும் அவர் அறிய நியாயமில்லை.

ஆனால், கொடி மன்னனை அறிந்திருக்கும் என்பதை மறுக்கின்றீர்.

அவளை இன்னொருவன் மனைவி என மறுக்கின்றீர், இந்த கையறு நிலையில் பெண்கள் என்றால் மண்குடம் என்பதும் ஆண்கள் என்றால் பொற்குடம் என்பதும் தகுமோ?

இரண்டும் பொற்குடம் மன்னா, இருவரும் முக்கியம் அல்லவா? தர்மத்தின் முன்னால் இரண்டும் மலரே ஆகுமல்லவா? அறத்தை மறந்து அதிகார வெறியோடு சமூக நெறி சொல்லி அதையே வெறியாக்கி வாழ்வோர்க்கு இதெல்லாம் வெறும் நிகழ்வு மன்னா, நீர் வாழ்வது போலி வாழ்வு, பழிக்கு அஞ்சா இழிவாழ்வு”

துஷ்யந்தன் அந்த வார்த்தைகளைக் கேட்டு நொடிந்து போய்ச் சொன்னான்.

“நன்மையெது தீமையெது என்பதை அறியாதவனா நான்? நன்மைதான் உயர்ந்தது தீமை மிகத் தாழ்ந்தது என்பது கூட தெரியாத தற்குறியா நான்?

கொடும்புலி தாக்க வருகின்றது என்பதால் வேறு பாதைக்கு சென்றவன் கருங்கரடியிடம் சிக்கியது போல் நான் இங்கு சிக்கி நிற்கின்றேன்.

என்ன செய்வேன் நான்?

நான் எல்லாம் மறந்தவனாகவே இருக்கட்டும், இவளை நான் நீங்கள் சொல்வதால் ஏற்றுக்கொண்டபின் இவள் இன்னொருவன் மனைவி எனத் தெரிந்தால் நான் என்ன செய்வேன்?

அதே நேரம் என்னால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை நான் மறந்திருந்தால் இவளின் பாவத்துக்கல்லவா ஆளாவேன்.

தெய்வமே, என்னை ஏன் இப்படி நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நிறுத்தி ஊஞ்சலாட்டி ஆட்டிப்பார்க்கின்றாய், இப்படி ஒரு நிலை யாருக்கேனும் வருமா?” எனச் சொல்லி தளர்ந்து அமர்ந்தான்.

அவன் நிலைகண்டு அவனின் புரோகிதர் எழுந்து சொன்னார்.

“மன்னா கலங்காதீர், ஆன்மீக உலகில் அறம் காலத்துக்கு ஏற்றபடி மாறி நின்று பேசும்.

அது இராமன் வில்லின் நாண் போல் அசையாது ஒரே கோடாக நின்று பேசும், காலம் அதை வளைத்தால் வில்போல் வளைந்தும் நிற்கும், காலத்துக்கு ஏற்ப அது வடிவெடுக்கும்.

அழகான மேனிமேல் இடும் ஆடை போன்றது அறம். அதன் வடிவம் உருவம் மாறுமே தவிர அதன் கடமையினை அது ஒவ்வொரு வடிவில் செய்துகொண்டே இருக்கும் மன்னா.

சிறந்த கற்பு என்பது பிறர் நெஞ்சில் புகாது என்பார், அப்படி புகுந்துவிட்டால் யாரை குற்றம் சொல்ல முடியும்?

கற்பில் சிறந்த சீதையினைத் தன் நெஞ்சினால் விரும்பினான் இராவணன், அங்கே குற்றம் சீதை மீது சொல்லமுடியுமா?

இன்னொருவர் நம்மேல் குற்றம் காணமுடியாதபடி நிற்பதே கற்பன்றி வேறல்ல.

ரேணுகாவினைக் கற்பிழந்தாள் என்றுதானே ஜமதத்கினி முனிவன் அவளைக் கொல்லும் படி அவள் மகனிடமே வாள் கொடுத்தான்? அந்த கற்பரசிக்கு நடந்ததென்ன? எல்லோரும் அறிவோம்.

ஆசைமிக்க இந்திரன் முனிவன் கோலம்கொண்டு வந்து செய்த காரியத்துக்கு அகலிலையல்லவா சாபம் பெற்றாள், கல்லாய்ப் போனாள்.

ஆனால், புனிதமான இராமன் கால்பட்டு அவள் எழுந்தபோது முனிவரின் மனைவியே எனச் சொல்லாமல், “என் தாயே” என இராமபிரான் சொன்ன வகைதான் என்ன? அகலிகை பெற்ற பேறுதான் என்ன?

அறம் இப்படித்தான் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் பேசும்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என வாழ்வது கற்பு, துரோகமின்றி மனமொத்து வாழ்வது கற்புநிலை வாழ்வு.

அற்பனை மணந்துவிட்டேன் என நொந்துவிடும் பெண் இன்னொருவனை நாடிச் சென்று அவனுக்கு உண்மையாய் வாழ்ந்தால் அதுவும் கற்பு வாழ்வே.

மனமொத்து வாழாமல் கடமைக்கும் உலகுக்குமாய் அன்பின்றி வாழ்தல் விபச்சாரமன்றி வேறென்ன?

மன்னா, கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் இருத்தல் வேண்டும். பெண்ணுக்கு கற்புநிலை பாடமெல்லாம் சொல்பவர்கள் ஆண்களுக்கு எந்த விதியும் வகுப்பதில்லை.

பரம்பொருள் பிள்ளைபெறும் கடமையினைப் பெண்ணுக்கு வைத்ததால் அவளையே சாடுகின்றோம். ஆண்களை விட்டுவிடுகின்றோம்.

மன்னருக்கு அந்தப்புரமுண்டு. அழகு பெண்கள் ஆயிரமுண்டு. அங்கே எல்லாச் சரசமும் உண்டு . யாரேனும் பழிப்பதுண்டோ. ஆனால், மன்னரின் பட்டத்தரசி அதையே செய்ய வழியுமுண்டோ?

இங்கு இப்பெண்ணின் நிலையினைக் காரணம் காட்டி அவளை உடனே திருப்பி அனுப்புதல் அறம் அன்று. ஆழ விசாரித்தலே சரி. மன்னா, நான் ஒரு யோசனை சொல்ல உரிமை உண்டா?” என்றார் புரோகிதர்.

“நல்வார்த்தை உம்மிடம் உண்டென்றால் அதைச் சொல்ல தயக்கமென்ன?” என்றான் துஷ்யந்தன்.

“மன்னா, நீதிதேவதை தராசு ஏந்தி உம்முன் நிற்க்கின்றாள், நியாயம் ஒருபக்கம் அநியாய‌ம் ஒருபக்கம் எனத் தட்டுகள் உண்டு, ஏதோ ஒரு பக்கம் தட்டு சரிதல் வேண்டும்.

ஆனால், இங்கே இருதட்டும் சுழல்கின்றது ஆடுகின்றது , தராசுமுள் தடுமாறுகின்றது.

அதனால் நான் ஒன்று சொல்வேன்.

மன்னா, உமக்கு நினைவு உண்டா? நீர் பெறும் ஆண்மகன் பெரும் வல்லமையோடு எழுவான், பெரும் பெரும் அரசினை அமைத்து உம் வம்சத்திலே பெயர்பெற்றவனாய் விளங்குவான், அவனால் இந்த கண்டமே மீட்சியுறும் என முனிவர்கள் பலர் உம்மை வாழ்த்தியது உண்டல்லவா?

அதனால் இப்பெண் குழந்தை பெறும் வரை என் இல்லத்தில் என் காவலில் இருக்கட்டும். அக்குழந்தை பிறந்தபின் ஜாதகம் கணிக்கலாம். அப்படி அது வல்லமை மிக்கதாக அரச ஜாதகம் கொண்டிருந்தால் இங்கு இவள் குழந்தையோடு அமரட்டும்.

இல்லை அவள் தன் குடிலுக்கே செல்லட்டும்”

துஷ்யந்தன் முகத்தை தடவி சொன்னான், “உங்கள் முடிவு அது என்றால் அப்படியே ஆகட்டும்”

குழந்தை பெற்றுத்தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா, குழந்தைக்கு காரணமானவன் அப்படி ஒரு இழிநிலையினைத் தனக்கு தந்துவிட்டானா என வெடித்த சாகுந்தலை சொன்னாள்.

“ஏ பூமிமாதா, சீதையினை நிலம்பிளந்து ஏற்றது போல் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாயா? எனக்கு இந்த வாழ்வு இன்னும் வேண்டுமா? நிலம் வெடித்து என்னை ஏற்காதா? நான் அத்தோடு புதையமாட்டேனா?

குரங்கின் கைகளிலே பூமாலை போல இந்தத் தீயவர் கைகளிலே நான் நாள்தோறும் குலைந்து சீரழிந்து போகவோ? தாயே என்னை ஏற்றுக்கொள், நிலம் பிளந்து ஏற்றுக்கொள்” எனக் கதறினாள்.

(தொடரும்..)