காளிதாசனின் சாகுந்தலம் : 23

காளிதாசனின் சாகுந்தலம் : 23

விரக்தியில் இருந்த மன்னன் துஷ்யந்தனுக்கு அவனின் பணியாளனும் நண்பனுமானவன் நினைவுப்படுத்தினான். “மன்னரே, மல்லிகைப் பந்தல் ஒன்றில் நீங்களும் உங்கள் மனம்நிறை காதலியும் அமர்ந்திருப்பதைப் படமாக வரையவேண்டும் என ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னீர், ஓவியத்தில் வல்லவளான சதுரிகையாளும் தயாராகிவிட்டாள், மல்லிகைப்பந்தலும் தயாராகிவிட்டது.

நீங்கள் அதை மறந்துவிட்டீரோ?” என்றான்.

துஷ்யந்தன் கொஞ்சம் வெறுப்புடன் சிரித்துச் சொன்னான். “எல்லாம் மறந்து நான் இழந்ததெல்லாம் போதாதா, இனி எல்லாமே மறக்காத காலம்தான், நான் மறக்கவில்லை, வா செல்லலாம்” எனச் சொல்லி மெல்ல நடந்தான்.

அவர்கள் கண்ணில் படாத சானுமதி எனும் அந்தத் தேவலோகப் பெண்ணும் இவர்களைத் தொடர்ந்தாள்.

“மன்னா இதோ பாருங்கள், மிகப் பெரிய மல்லிகைப் பந்தல் கீழ் சலவைக் கல்லில் இருக்கையானது மணப்பந்தலின் படுக்கையறை போல் இருக்கின்றதன்றோ?” என்ற பணியாளன் தொடர்ந்தான்.

“மன்னா, நினைவு எனும் பொம்மலாட்டக்காரன் கையில் பல பொம்மைகள் இருந்தபோதும் அவன் கனவு எனும் உலகில் இருந்து இரு பொம்மைகளை எடுத்துத்தான் விளையாடுகின்றான், அதுவும் ஆண் பெண் என இரு பொம்மைகளைக் கொண்டு புலவர்களின் கற்பனை போல் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி ஆடுகின்றான், அதிலோர் இன்பம் கண்டுவிட்டான்.

வாருங்கள் அமருங்கள், சதுரிகையாள் வந்துவிடுவாள். வந்ததும் உங்கள் மனதின் பெண்ணை வரைவாள்” என்றான்.

சானுமதி சொல்லிக்கொண்டாள் “சாகுந்தலை படத்தை வரையபோகின்றார்களாம், நானும் கவனமமாகப் பார்ப்பேன்.

அதை ஒரு நடிகன் தான் பார்த்த நாடகத்தை மிகுந்த உணர்ச்சியுடன் உருக்கமாகக் காண்போரிடத்தில் விளக்கிச் சொல்லுதல் போல என் தோழியிடம் உரைத்திடுவேன்”

துஷ்யந்தன் சொன்னான், “நண்பனே, நான் முன்பு முத்துக்கள் போன்ற மல்லிகையால் அழகான மாலை தொடுத்திருந்தேன், ஆனால் என் விதி எனும் வலை என் மேல் வீசப்பட்டதால் என் சொற்களே குரங்கின் கையாக மாறி அந்த எழில் மாலையினை பிய்த்துப்போட்டுவிட்டன‌.

அந்த அழகான மாலையினை நினைவால் மீட்டுத் தொடுப்பதற்காகத்தான் இதனை ஏற்பாடு செய்துள்ளேன்” என்றவன் தொடர்ந்தான்.

“வழுக்கும் நிலத்தில் நடப்பவன் தன் வலக்கையில் உள்ள கைத்தடி வழுக்கும் மண்ணில் தன்னைத் தாங்கும் என நம்பிச் செல்வான், நானும் உன்னை அப்படித்தான் நம்பினேன்.

ஆனால், நீயோ வழுக்கு நிலத்தில் நடப்பவன் சறுக்கும்போது அவன் கோலும் வளைந்து கோணலாகி உதவாமல் செல்லுதல் போல் செய்துவிட்டாய், நான் இவ்வளவு வருந்தும்போதும் என் காதலி பற்றி மறந்தே போனாய்.

அந்தத் துறவியரின் குடிலில் அவளைச் சந்தித்தது முதல் நான் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனாலும் நீயும் நான் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டாயே.

ஓவியத்தில் கூண்டில் பதுங்கிய நிலையில் வரையபட்டிருக்கும் கிளி போல அப்படியே இருந்துவிட்டாயே நண்பனே.

அவள் அறவோர்களுடன் வந்து என்னை என்னில் என்முன் தேடிக் கதறியபோது நான் மறதியில் இருந்த நேரம் நீயும் எங்கே சென்றுவிட்டாய், என்னைப் போல எல்லாம் மறந்தவனாகிவிட்டாய்?”

சொன்ன துஷ்யந்தனுக்கு தோழன் பதில் சொன்னான்.

“மன்னா, உலகில் ஒருவன் எதை வேண்டுமானாலும் மறப்பான், இந்தச் சதை எலும்போடு ஒட்டியது போன்ற காதல் எனும் நிலையின் கதையினை மறப்பவர்கள் உலகில் உண்டோ?

ஊழ்வினை என்பதை உளியாய் எடுத்த விதி, சதையாகம் செய்து மன்மதனிடம் கொடுத்து அந்த உயிரில் அவனைக் கொண்டு செதுக்கும் சிற்பமன்றோ காதல், உயிர் இருக்கும்வரை அதுவும் இருக்கும்.

உங்கள் உயிரில் மன்மதன் செதுக்கிய பெருங்காதல் சிற்பத்தை மறப்பேனா? ஒருகாலமுமில்லை, நீர் என்னிடம் எல்லாம் சொன்னீர், கடைசியில் எல்லாம் பொய் என்பதையும் மறவாமல் சொன்னீர்.

கடல் தன்னிடமுள்ள அரும் முத்தை கரையில் வீசிவிட்டு மறுபடியும் அலையால் எடுத்துக் கொள்வதை போல எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் எல்லாமே பொய் எனச் சொன்னபின் நான் எதை நம்புவது மன்னா?

களிமண்ணைப் போன்ற மூளை என்னுடையது, கடைசியாக எது பதிந்ததோ அந்த ஒன்றே நினைவிருக்கும், அதனால் நான் நீர் கடைசியாகச் சொன்னதை நம்பிவிட்டேன்.

மன்னா, நீர் என்னை ஏமாற்றியதாக நினைந்து கொண்டு உம்மை நீரே ஏமாற்றியிருக்கின்றீர், இதனை விதி என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?

மானுடர் என்னதான் முயன்றாலும் கடைசியில் விதிதானே வெல்லும் மன்னா”‘

அதைக் கேட்டுகொண்டிருந்த சானுமதி சொன்னாள் , “ஆம், விதிதான் வெல்லும், உண்மையில் அதுமட்டும்தான் வெல்லும்”

துஷ்யந்தன் சொன்னான், “என் அன்பு நண்பனே, நீயும் என்னை அவலத்தில் விடாதே, மிகப்பெரிய காட்டுவெள்ளத்தின் சுழல் ஒன்றில் சிக்கிக் கொண்ட பறக்கமுடியா பறவையாய்த் தவிக்கின்றேன். என் சிறகுகளை உடைத்துவிடாதே.

இந்தப் பெரும் சுழலில் போராடும் என்னை நீ காப்பாற்று, எனக்கு நல்ல மொழிகள் சொல், காயம்பட்டு கிடக்கும் எனக்கு மருந்திடுவாய்”

நண்பன் சொன்னான், “குடிகளைக் காப்பவனுக்குக் கவலை தகுந்ததா?கவலை எனும் புதைகுழிக்குள் தலைவன் ஆழ்ந்துபோவதா? இது மன்னனுக்கு அவப்பெயரையன்றோ அவருக்கு உருவாக்கித் தரும்?

அறிவாளிகள் செய்வதென்ன மன்னா? அறிவார்ந்தவர் என்பவர் யார்?

விதியால் வருவது எதுவோ அதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து வருவது வரட்டுமென எதிர்கொள்வர் அன்றோ?கவலையால் என்ன லாபம உண்டு?

இடிவிழுந்த வீடு மழையால் ஒழுகுதல் பற்றி வருந்தமுடியுமா?

துயர் என்னும் பாம்பினை அறிவு எனும் கீறி காத்து நின்று வளர்க்குமா? துயர பாம்பினை அழிப்பதுதானே அறிவுக்கீரியின் தொழில் மன்னா? அதை மறந்தீரோ?

துயரம் என்பது ஒரு உணர்ச்சி. அது அறிவு எனும் மலையினை அசைக்குமோ? மயக்கமுற்ற மக்கள்தான் துயரில் வருந்துவர், அவர்களை மலையென காக்கும் மன்னன் வருந்தமுடியுமோ?

துஷ்யந்தன் சொன்னான், “என்னைத் தேடி வந்தவளை நீக்கிவிட்டேன், அவளின் வார்த்தைகளின் நீதியினைக் கொன்றே விட்டேன்.

என்னையே நம்பி, என்னில் அவளைத் தொலைத்தவளை எழில்மகளை அரும் பிறப்பை அவமரியாதை வார்த்தைகளால் புத்தியின்றி வதைத்துவிட்டேன்.

அந்தப் பஞ்சமா பாதகங்கள் என் ஐம்புலன்களிலும் புகுந்தது, இந்தப் பஞ்சமா பாதகத்தின் பிடியில்தான் அவளை இழிவாய் அழவைத்தேனா? நான் என்ன செய்வேன்?

படர பந்தலில்லாக் கொடி என அவளை நான் வீசியெறிந்த வலியோடு தன் தவக்குடில் தன்னைக் காக்கும் என அவள் அடியெடுத்து வைக்க அவர்களும் அவளைத் தடுத்து சீற அவள் மனம் எவ்வளவு கலங்கியிருக்கும் அவள் எவ்வளவு அழுதிருப்பாள்?

ஐயோ எவ்வளவு கதறியிருப்பாள்?

நீர்வழிந்த கண்ணோடு அவள் ஏக்கமாய் என்னைப் பார்த்திருப்பாள், திரும்பி திரும்பி பார்த்திருப்பாள். நீருக்குள் நீந்தும் மீன்போல் அவள் கண்மணி கண்ணீருக்குள் நீந்தியிருக்குமே.

அவள் கலங்கிச் சென்ற காட்சியினை நினைந்து நினைந்து பார்க்கின்றேன், அவளின் வேல்விழி கண் போர்முனையில் முறிந்த அம்பாய் நின்றபோதும் அந்தக் கண்ணீர் எனும் நஞ்சுடன் அது என் மேல் பாய்கின்றதே.

நெருப்பில் இட்ட இரும்பு நெருப்பின் நிறத்தை அடையும், பின் அதனை வெளியில் எடுத்தால் அதன் நிறம் மாறுமே தவிர அந்த நெருப்பு இரும்பினுள் இருக்கும், அவளின் சிவந்த கண்களின் நெருப்புப் பார்வை என் நெஞ்சம் எனும் இரும்பை உருக்கிப் போட்டது, என் நெஞ்ச்ம கொதித்துக் கொண்டிருக்கின்றது.

மன்னனின் நிலை கண்ட சானுமதி சொன்னாள், “சிறு குழந்தையின் கைப்பிடித்து இராட்டினம் போல் சுற்றி சுற்றி வந்து நின்றால் சுற்றி நிற்கும் மரம் செடி என எல்லாமும் நமக்கெதிராய் சுழல்தல்போல் தோன்றும்.

அப்படி மன்னனின் நிலைகண்டு நான் வந்த காரணம் எதிர்திசையில் சுழல்கின்றதோ, அவன் துயரம் கண்டு நான் ஏன் மகிழ்கின்றேன், அதனை விரும்புகின்றேன்?

நண்பன் சொன்னான், “மன்னா, கோழிக் குப்பையினைக் கிளறி நெல்லை அடைதல் போல் நான் என் நினைவுகளைக் கிளறி ஒன்றை அடைந்தேன், வானில் இருக்கும் யாரோ ஒரு நல்லவர்தான் அவளை எடுத்திருக்க வேண்டும், என் மனம் அதைத்தான் திரும்ப திரும்ப சொல்கின்றது”

துஷ்யந்தன் சொன்னான், “நண்பனே, கணவனைத் தெய்வம் எனத் தொழும் அவளை வேறு யாரால் தொட்டு எடுக்க முடியும்?

என் சாகுந்தலை மேனகையின் மகள் என அவள் தோழியர் முன்பே சொல்லக் கேட்டேன். மானிடரால் கைவிடப்பட்ட தன் மகளை அவளின் வானத்தின் தாய் கைப்பற்றி எடுத்துக்கொண்டாள் என்பதை உறுதியாய்ச் சொல்கின்றேன், நீ சொன்னது உண்மையன்றி வேறல்ல‌.

இரக்கமற்ற மானிடர்கள் நடுவே தன் மகளை அவள் விட்டுவைக்க விரும்பவில்லை.

மானுடர் குணம் கண்டே தேவதைகள் வெகுதொலைவில் வானத்தில் வசிக்கின்றனர், அதில் வியப்பென்ன?”

(தொடரும்..)