காளிதாசனின் சாகுந்தலம் : 24
காளிதாசனின் சாகுந்தலம் : 24
சாகுந்தலையினை நினைந்தழுத துஷ்யந்தனின் நிலை கண்டு சானுமதி சொன்னாள்.
“தான் உடைத்த மணிமுடியின் மணிகளை ஒருவன் தானே சேர்க்க முயல்வதில் வியப்பில்லை, அழகிய மணிமுடியினை அவன் ஏன் உடைத்தான் என்பதே வியப்பு.
அழகு மயிலொன்றை பிடித்த வேடன் அதன் இறகை எல்லாம் அது அழ அழ பிடுங்கிவிட்டு,பின் மயிலின் அழகுக்காய் ஏங்குதல் வியப்பே”
தோழன் சொன்னான், “மன்னா, தன் கணவனைத் தெய்வமென தொழுபவளை வேறு யார் தொடமுடியும் என்றீர், அது உண்மைதான் அதனால் நீர் மறுபடியும் அவளோடுக் கூடி மகிழ்வீர். எனக்குத் தோன்றுவது அதுதான்”என்றான்.
“எப்படி இனி அவளை காண்பேன்?” என்றான் துஷ்யந்தன்.
“மன்னா, தன் மகள் தன் கணவனைப் பிரிந்திருப்பதை எந்த பெற்றோர் தாங்குவர்? நிச்சயம் உமக்கோர் செய்தி வரும்” என்றான் தோழன்.
துஷ்யந்தன் அவளின் நினைவில் மூழ்கிச் சொன்னான்.
“என் காரியகையாளோடு கூடிமகிழ்ந்த காலமெல்லாம் கானல்நீரானதோ? பல பிறவிகளில் சேர்ந்துவந்த நல்வினையினை மொத்தமாக திரட்டி வந்தே இதோ உன் வினைப்பயன் என அவளை காட்டிவிட்டு விதி பறித்ததுவோ?”
கனவாகத் தெரியும் கடந்தகாலம் போல் கடந்து சென்றாள், மழைக்கால வெள்ளம் போல் ஓடி மறைந்தே போனாள்.
கறந்தபால் மீண்டும் பசுமடிக்குள் புகுமோ? இனி அவளை நான் எங்கே காண்பேன். தன்னைத் தானே கடித்து சாகும் நாகம் போல, என் மனமே தன்னைக் கொன்று என்னையும் கொல்கின்றதே நான் என்ன செய்வேன்?”
தோழன் சொன்னான், “மன்னா, இவ்வுலகில் எது நடக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அது நடக்காது, எது நடந்திட கூடாதென்று கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டோமோ அது சரியாய் நடக்கும், இது இந்த உலக வாழ்வின் விளையாட்டுக்களில் ஒன்றாகும்.
அந்த மோதிரம் மீண்டும் கைக்கு வரும் என நினைத்தீர்களா? கடும்பசியில் வாடுபவனுக்கு அமுதம் கிடைத்தல் போல கடும் துயர் உற்றகாலத்தில் அந்த மோதிரம் உமக்கு வந்ததெப்படியோ அப்படியே அவளும் வருவாள், நம்பிக்கையுடன் காத்திருப்பீர்”
தோழன் பேச பேச துயருக்குள் புதைந்து கொண்டே இருந்த துஷ்யந்தன் சொன்னான்.
“மிக மிக அரிதாகப் புதையல் போல் வந்த அந்த மோதிரமே என் தரித்திரமும் ஆயிற்றே, என் உயிர் எனும் மீனைத் துடிக்க துடிக்கக் கொழுவிக் கொண்ட தூண்டிலும் ஆனதே, என் துயரின் துடிப்பினை யார் அறிவார்?” எனச் சொன்னவன் தன் மோதிரத்தை உருட்டியபடியே சொன்னான்.
“கெண்டை மீன் போன்ற செங்கண்ணை கொண்டவளின் கரங்களில், பன்மொழி பேசும் கிளியின் சாயலைக் கொண்டவளின் கரங்களில் தஞ்சமடைந்த என் மோதிரமே ஏன் கைம்பெண் போல் இருக்கின்றாய்?
அவளைப் பிரிந்த நான் உயிரற்று இருப்பதுபோல் நீயும் இருக்கின்றாயோ?”
அவனின் கொடுந்துயர் கண்ட சானுமதி, அவன் தன் மோதிரத்தோடு பேசி விரக்தியில் அழுவதைக் கண்ட சானுமதி சொன்னாள்.
“இந்த மோதிரம் இன்னொருவன் கையில் சிக்கியிருந்தால் உண்மை என்னாகியிருக்கும்?
அது தாயின் வயிற்றிலே தங்காமல் கரைந்திடும் கருபோல யாருக்கும் தெரியாமலே முடிந்திருக்கும். நல்ல வேளையாக அப்படி ஒரு துயரம் நடந்திருக்கவில்லை”
தோழன் சொன்னான், “மன்னா, மன்னனின் பணியாளனாக அல்ல ஒரு நண்பனாக கேட்கின்றேன், இந்தத் மோதிரத்தை அவளுக்கு எப்போது கொடுத்தீர், எந்தச் சூழலில் கொடுத்தீர்?, கொடுக்க என்ன அவசியம் வந்தது?”
அவன் கேட்டதும் சானுமதி காதினைக் கூர்மையாக்கிச் சொன்னாள், “ஆம், நானும் இதனை அறிந்து கொள்ள விரும்புகின்றேன், என்ன காரணத்துக்காக இவன் அவளிடம் மோதிரத்தை கொடுத்தான்”
வானம் பார்த்துக்கொண்டே மோதிரத்தை உருட்டிக்கொண்டிருந்த துஷ்யந்தன் மெல்லியப் புன்னகையுடன் சொல்லத் தொடங்கினான்.
“சொல்கின்றேன் நண்பனே, நான் கட்டிய தேன் கூட்டுக்குள் தெய்வீகக் காதல் எனும் தேனைச் சேர்த்து வைத்து கொண்டிருந்த காலமது, துளித் துளியாய் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தேன்.
முழுவதும் காதல் எனும் தேன் நிறைந்த கூடாய் என் மனம் நிறைந்த பொழுதினிலே நான் நகரம் திரும்பும் அவசியம் வந்தது.
அவள் என் பிரிவின் வலியினைத் தாளாமல் அழுதாள், மொத்த மனவலியின் வாசலும் அவள் இரு கண்களின் கண்ணீரில் தெரிந்தபடி புதைத்து வைத்தபடி முகம் வாடிச் சொன்னாள்.
என் இரு கரங்களையும் பற்றியபடி சொன்னாள்.
“எல்லா உயிரிடமும் நான் அன்பை காட்டினேன், ஆனால் என் மனதை நான் பறிகொடுத்தது உம்மிடமே.
என் நினைவு எனும் தீபத்தை உமது நெஞ்சினில் நாளும் வைத்து போற்றிக் காப்பீரா? இல்லை அந்த வெளிச்சம் அகலும்படி அது அணைந்துபோல விடுவீரா? அப்படி ஒன்று நடந்திட்டால்” எனத் தேம்பியவள் அதற்கு மேல் சொல்லமுடியாமல் கதறினாள்.
முத்துக்கள் போல் அவள் கண்ணீர் சிதறக் கண்டு நான் சொன்னேன், அவள் தலைக்கோதி சொன்னேன்.
“அப்படி ஒரு சிந்தனையே உனக்கு வேண்டாம்”, அவள் திரும்ப கேட்டாள், “அங்குச் சென்று எமக்கு அன்புமடல் எழுதுவீரா, அதில் உம் அன்பின் முத்திரை இருக்கும் அல்லவா?”
இரைமாற்ற வாய்திறக்கும் பெண் புறாபோல் அவள் ஏங்கிக் கேட்டாள், என் மனம் கனிந்து உருகிற்று.
அவளிடம் என் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்துச் சொன்னேன், என் உயிரே இதோ என் பெயர் பறித்த முத்திரை மோதிரம். அனுதினமும் நீ என் பெயரின் ஒவ்வொரு எழுத்தை மட்டும் சொல்லிவா, கடைசி எழுத்தை சொல்லும்போது தங்கத்தேர் உன்முன்னால் நிற்கும்.
அன்று நீ பௌர்ணமி நிலவாய் என் அரண்மனை மாடத்தில் எழுந்தருள்வாய், என் உடன் உறைவாய். உறவின் உயிரே என உறுதி சொன்னேன்.
ஆம். சிலநாட்களில் அவளை அழைப்பதாக சொல்லித்தான் வந்தேன், என் கடமையினைச் செய்யுமுன் வீழ்ந்தேன்.
பெரிய யானை வழுக்குப்பாறையில் கால் வைத்து சறுக்கி நரிக்கு இரையாக வீழ்தல் போல் காலம் எனும் வழுக்குப்பாறை என் காதலை வீழ்த்த மறதி எனும் நரி அதை வேட்டையாடிய வலியினை என்ன சொல்வேன்?
அவன் நிலைகண்ட சானுமதி வருந்தி சொன்னாள்.
“குளத்தில் மீன்கள் இரண்டு காட்டும் காதல் போல் இவர்கள் காதல் கனிந்திருக்கின்றது, அன்பு மனம் இணைந்திருக்கின்றது.
ஆனால், மலைத்தேனின் கூட்டின் மேல் கொடும்நாகம் தன் விருப்பப்படி திரிந்து கொடும் விஷத்தை கொடியது போல் கொடும்விதி இவர்கள் வாழ்வினை இப்படி நஞ்சாக்கிற்ற வகைதான் என்ன?
தோழன் சொன்னான், “என்ன சொல்வேன் மன்னா, மீன்களின் வலைக்குள் அந்த மோதிரம் உண்ட மீன் வந்தது என்ன? இது ஆச்சரியம் இல்லையா?”
துஷ்யந்தன் சொன்னான், “அவள் தன் தோழி சசிதீர்த்தம் எனுமிடத்தில் அவள் நீரால் முகம் கழுவ கை தொழுது நின்றாள், குனிந்து நீரை அள்ளும் முன் வணங்கினாள், அப்போது மதுகுடித்தவன் நிலை போல வீழ்ந்தது. நீரில் விழுந்தது அந்தக் கணையாழி.
கங்கையும் பெண் அன்றோ, அவள் தெய்வத்தின் மகள் அன்றோ, இப்பெண்ணுக்கு வரும் இடர் எல்லாம் முன்பே அறிந்து மோதிரத்தை மீன் வாயில் வைத்து அடைத்திட்டாள், மீனவன் வலையிலும் சேர்த்திட்டாள்”
தோழன் சொன்னான், “எல்லாம் இறைவன் செய்கை, இயற்கையாய் இருப்பதும் இயங்குவதும் இறைவன் என்பதால் இதிலேதும் ஆச்சரியமில்லை. நல்லோர் பக்கம் அவன் எந்நாளும் உண்டு”
சானுமதி சொன்னாள், “ஓ.. இப்போதுதான் எனக்கு புரிகின்றது, அன்றே இம்மன்னர் அவளை எழில்மணம் செய்து கொண்டார், அவள் வந்து மன்றாடியபோதும் மறதிநோயால் அவளை மறந்த நிலையில் இன்னொருவன் மனைவியோ எனச் சந்தேகம் கொண்டார்.
அந்தச் சந்தேகம் அவர் மறதியின் பழி. ஆனால், அந்நிலையிலும் பேரழகியாயினும் இன்னொருவன் மனைவி எனக் கருதி அவளை மணம் செய்யாமல் விலகிநின்றார், இதவல்லவோ பேராண்மை.
இப்படிப்பட்ட உத்தமர்கள் அன்னப்பறவை போல் சுத்தமானவர்கள்.
இந்நிலை அல்லாமல் எப்படியும் வாழலாம் என்பவர்கள் வௌவ்வாலைப் போன்றவர்கள். உண்ணும் வாயாலே கழிவுகளையும் கொட்டுவார்கள், நுகரும் வாயும் மலம் கொட்டும் வாயும் அவர்களுக்கு ஒன்றே.
இவர் அன்னமன்றோ, இவராலே அன்னம் இனி நற்காதலர்க்கு அடையாளம் ஆகிவிடும்”
துஷ்யந்தன் தன் விதியினை மாற்றிவைத்து தீராத் துயர் தந்த மோதிரத்தை உருட்டியபடி சொன்னான், “நான் இந்த மோதிரம் விழுந்த நதியினை எப்படிப் பழிப்பேன், என் இன்பமும் துன்பமுமாகிவிட்ட இந்த மோதிரத்தை அல்லவா பழிப்பேன்?”
சொன்னவன் முகம் இறுகியது, பெரும் புயலுக்கு முன்னதான அமைதிபோல் அவன் முகம் மாறிற்று, தோழன் அவனை அச்சத்துடன் கூர்ந்து பார்த்தான்.
(தொடரும்..)