காளிதாசனின் சாகுந்தலம் : 28

காளிதாசனின் சாகுந்தலம் : 28

“பிள்ளையில்லாக கொடியவனாகிவிட்டேன், என்னைப் பித்ரு எனச் சொல்லி எனக்கு எள்ளும் நீரும் இறைக்க வாரிசு இல்லையே, பெரும் அன்பும் கருணையும் கொண்ட இறைவன் எனக்கென இனி ஒரு வாரிசை தருவானோ?

இந்நிலை என்றாகுமோ? இந்த கொடுங்கண்ணீரில் இருந்து மீள்வேனோ? கொடும்விதியில் பலியாகிவிடுவேனோ?

சொன்னவன் அழுதான், அவனைத் தாங்கி ஆறுதல் சொன்னாள் சாதுரிகை.

சானுமதி இதனைக் கண்டு வியந்து சொன்னாள், “என்ன இது, வியப்பின் ஏணிகளில் நான் வேகமாக ஏறிக்கொண்டிருக்கின்றேன். வியப்பின் மேல் வியப்பாக காண்கின்றேன்.

என்ன இந்த மன்னர் இப்படி கதறுகின்றார்? சாகுந்தலை வயிற்றில் வளரும் கருவின் நிலை அறியாதவரன்றோ?

இருளில் எதிருக்கும் பெரிய மலை கண்ணுக்கு தெரியாது என்பதால் மலையே இல்லை என்றாகிவிடுமா?, விளக்கினை திரை இட்டு மறைத்தால் விளக்கு இல்லை என்றாகிவிடுமா?

எங்கிருக்கின்றான் இறைவன்?, ஆகாயத்திலா நிலாவிலா இந்த மண்ணிலா இந்த கோவிலிலிலா இந்த மண்டபத்திலா தூணிலா துரும்பிலா தேடினான் இரணியன், அவன் எங்குமுள்ளான் இங்குமுள்ளான் என துடிக்கும் மனம்போல் உனக்கோர் வாரிசு உண்டு என சொல்ல என் மனம் ஏங்குகின்றது

அங்கே இந்திரனின் தாயார் சாகுந்தலைக்கு ஆறுதல் சொல்லிகொண்டிருக்கின்றார், யாகம் எனும்ம் கொடியில் பந்தம் அறுத்துவிட்டாலும் அவிர்பாகத்தை தேவர்கள் எடுத்துகொள்வார்கள், அந்த அவிர்பாக பலனை மறுபடி மக்களுக்கே தருவார்கள்

இவன் சாகுந்தலை மேல் கொண்ட பெருங்காதலை, மகனை தேடும் மகா அன்பினை என் தோழி மேனகைக்கே எடுத்துரைப்பேன்

சாளரத்தின் ஊடே வரும் காற்று மீண்டும் மீண்டும் வருதல்போல இவன் வாழ்வில் பெரும் மகிழ்ச்சியினை வரவைப்பேன், இதோ வானுலகம் ஏவுகின்றேன்”

சொன்னவள் மேல் எழும்பி சென்றாள், அதே நேரம் ஒரு அலறல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என ஒரு குரல் கேட்டது, அது துஷ்யந்தன் நண்பன் மாதவியானின் குரல்

“நான் வேதம் ஓதும் பார்ப்பனன், நியமங்களுக்கு கட்டுபட்டவன், என்னை வதைக்காதே” என திரும்ப திரும்ப அவன் அலறிகொண்டிருந்தான்

அதனை கேட்டு தன் நண்பன் மேல் தன் அரண்மனையிலே கைவைக்கும் துணிச்சல் கொண்டவன் எவன் என ஆத்திரத்தில் ஓடினான் துஷ்யந்தன், மாதவியானின் அறைக்கு முன் நின்றிருந்த வேலையாள் அமைதியாக தலைகுனிந்து நின்றான்

அவனை கண்டதும் குழம்பி கேட்டான் துஷ்யந்தன் “அவன் அலறுகின்றான், நீ இங்கே என்ன செய்கின்றாய் சேவகனே?”

சேகவன் அமைதியாய் சொன்னான் “கண்ணுக்கு தெரியா அனுமாஷ்ய சக்தி ஒன்று அவரை பாடாய்படுத்துகின்றது”

துஷ்யந்தன் பதறி சொன்னான் “தீய சக்தியா, இந்த அரண்மனையிலா? அறம் பிழைத்தோரைதோர் மேல்தானே அவற்றுக்கு அதிகாரம் உண்டு

ஓ.. சாகுந்தலைக்கு நான் செய்த பாவத்துக்காய் இங்கு தோஷம் வந்து இதுவும் வந்ததோ? , நான் செய்த பாவத்துக்கு என் நண்பன் தண்டனை அடைவதோ? , யாராயினு விடமாட்டேன், எந்த சக்தி என்றாலும் நசுக்குவேன்

சொன்னவன் வேகமாக பாய்ந்து வந்தான் மாதவியான் சொன்னான்

“நீர் நசுக்குவேன் வெட்டுவேன் என்கின்றீர், ஆனல் குட்டியானை கரும்பை ஒடிப்பது போல் இவன் என் கழுத்தை ஒடிக்கின்றான், இவனிடமிருந்து என்னை காப்பாற்றும்”

மாதவியான் அப்படி சொன்னதும் திரைக்கு பின்னால் வந்து நின்ற துஷ்யந்தன் தன்னை மறந்து உத்தரவிட்டான் , “எங்கே என் வில், எங்கே என் அம்புகள், இவன் கழுத்தை இறுக்குபவனை இப்போதே தொலைப்பேன்”

அப்போது அக்குரல் சொன்னது

“அடேய், கழுத்தை கடித்து இரையினை கொல்லும் புலிபோல் நான் உன்னை கொல்லபோகின்றேன், அந்த துஷ்யந்தன் முடிந்தால் உன்னை காப்பாற்றட்டும்”

அந்நேரம் உள்ளே பாய்ந்தான் துஷ்யந்தன் ஆனால் மாதவியானை தவிர யாரையும் காணவில்லை

மாதவியான் சொன்னான் “இப்படித்தான் இந்த சக்தி என்னை ஆட்டுவிக்கின்றது, பூனையிடம் சிக்கிய எலிபோல் என் நிலை ஆகிவிட்டது, இனி நான் திரும்பமுடியா இடத்துக்கு செல்வேன் போலிருக்கின்றது”

ஆத்திரத்தில் கத்தினான் துஷ்யந்தன் “ஏ தீயசக்தியே, என் நண்பனை பிடித்திருக்கும் உன்னை இந்த அம்பு நான்கு துண்டமாக்கி கொல்லும்

இந்த கனை நீ அவனை இறுக பிடித்திருந்தாலும்,உன் உடல் தெரியாவிட்டாலும் பாலில் இருந்து நீரை பிரிக்கும் அன்னம் போல் உன்னை அவனிடம் இருந்து பிரித்து அழிக்கும்” என்றவன் வில்லின் நாணை வேகமாக இழுத்தான்

அவன் வாய் மந்திர உச்சாடனங்களை சொன்னது

அந்நேரம் அனுமாஷ்ய குரல் ஒலித்தது “மன்னா இந்த அம்பு அரக்கர்களை குறிவைக்க வேண்டுமே அன்றி தேவர்களில் ஒருவரான என்னை அல்ல, சான்றோர் மேல் இந்த அம்பு எப்படி பாயும்?”

அக்குரல் இந்திரனின் தூதன் தலியான், இந்திரனின் தேர்பாகன்

அதை கேட்டதும் துஷ்யந்தன் புன்னகைத்தான் ஆனால் மாதவியான் சொன்னான் “யாகத்தில் பசுவை கொன்று போடுவதை போல இவன் என்னை கொல்ல வந்திருக்கின்றான் மன்னா தாமதிக்காதீர்கள்”

அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே மாதலி உருவம் அடைந்தபடி சொன்னான் “மன்னர் வாழ்க, புதுநலன்கள் அடைந்து பெருவாழ்வு வாழ்க, எம் தலைவர் இந்திரன் சொன்ன செய்தியினை சொல்லவே இங்கு வந்தேன்” என்றவன் தொடர்ந்தான்

“மன்னா அரக்கர்குலம் பெருவெற்றி பெற்றுகொண்டிருக்க தேவர்குலம் சரிந்து கொண்டிருக்கின்றது, இனி பெருவீரன் துணையின்றி அவர்களை வெல்லமுடியாது என்பதால் உம்மிடம் உதவி கோர தேவேந்திரன் எம்மை அனுப்பினான்

இருளை அகற்றும் சூரியன் போல, களைத்து வீழ்ந்த ராமனை மலைசுமந்து வந்த காத்த அனுமன் போல எங்களை இனி நீர்தான் தெய்வமாக வந்து காக்கவேண்டும் உடனே இத்தேரில் எழுவீர்” என்றான்

துஷ்யந்தன் சொன்னான் “என்னை பெரும் இடத்தில் வைத்து அழைத்த தேவேந்திரனுக்கு நன்றி, உங்களுக்கு உதவுவது எங்கள் குலமரபுபடி கட்டாயமாகின்றது, சரி இங்கு வந்த நீர் என்னை வந்து சந்தியாமல் இவனை ஏன் அச்சுறுத்தினீர்” என்றான்

தலியன் சொன்னான் “மன்னா அதற்கான காரணத்தை உரைப்பேன், நான் வரும்வேளை நீர் ஆற்றினை பிரிந்த பீன் போல் உள‌துயரில் இருக்க கண்டேன், துயரத்தால் நீர் பிணைக்கபட்டிருந்தீர்

நிற்பவர் யார் நடப்பவர் யார் வந்தவர் யார் சென்றவர் யார் என்பது கூட தெரியா அளவு கடும் துயரில் வீழ்ந்திருந்தீர், உம் உளமெல்லாம் பெரும் துயர் ஒன்ரெ இருந்தது

சினமிருக்கும் இடம் துயர் அகலும் என்பதால் உம்மை சினமூட்டி பார்த்தேன், மன்னா விறகை காயவைத்தால் விரைந்து எரியும், கோல் கொண்டு தலையினை தட்டினால் நாகம் சீறி எழும், தூண்டபட்டால் ஒரு பொருள் வேகம் பெறும், துயரகிணற்றில் நீர் மூழ்கியிருந்தீர் உம்மை அதிலிருந்து வெளிகொண்டுவர இதனை செய்தேன்’

துஷ்யந்தன் சிரித்து சொன்னான் “இந்திரனின் அழைப்பை ஏற்று உடனே விரைகின்றேன், நான் திரும்பி வரும்வரை, இந்த அவையில் நான் இருந்து எப்படி நாட்டை வழிநடத்துவேனோ அப்படி நம் அமைச்சர்களும் நீயும் நடத்து” என மாதவியனிடம் சொல்விவிட்டு தேர் ஏறினான்

இந்திரலோகம் நோக்கி அவன் தேர் விரைந்தது, ஆச்சரியங்கள் அவனுக்காய் காத்துகொண்டிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை

(தொடரும்..)