காளிதாசனின் சாகுந்தலம் : 34

காளிதாசனின் சாகுந்தலம் : 34

இருபுறமும் துஷ்யந்தனையும் சாகுந்தலையும் வைத்தபடி அவர்கள் மகனை தன் மடியில் வைத்தபடி காசிபர் மேலும் சொன்னார்.

“பெரும் குலத்தில் பிறந்த துஷ்யந்தனே, அரும் குலத்தில் தோன்றிய சாகுந்தலையே, நீவீர் நீடு வாழ்வீர்.

நல் மனம், நல் கர்மத்தின் வினை, நல்விதி என மூன்றும் கலந்த உருவமாய் நீங்கள் வாழ்வீர்கள். அறம் பொருள் இன்பம் எனும் மூன்றும் முழுக்கப் பெற்ற உருவின் நிழலாய் வாழ்வீர்கள், பலர்போற்ற பார்போற்ற வாழ்வீர்கள் என் மக்காள்” என வாழ்த்தினார் காசிபர்.

அவரின் வாழ்த்துக்குப் பணிந்து துஷ்யந்தன் சொன்னான்.

“தவத்தில் பெரியவரே, உலகமெல்லாம் வாழட்டும் எனும் நல்லெண்ணம் கொண்டவரே, உங்கள் எண்ணமே வாழ்வுதரும் எனும்போது வார்த்தைகள் இன்னும் வரமன்றோ?

இவ்வுலகில் முதலில் மழைபெய்யும், இடி இடித்து முழங்கிப் பெய்யும், அதன்பின் பெரும் விளைச்சல் கொட்டும்.

அழகான மலர் முதலில் மலரும், பின் அதிலிருந்தே காய்வந்து கனியாகும், இந்த உலகம் அழியாமல் இருக்க இவை எல்லாம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும், ஒன்றில்லாமல் ஒன்று இல்லை தொடக்கக் காரியமில்லாமல் அடுத்து இல்லை.

அவ்வாறே நான் உங்களிடம் வந்து வாழ்த்துப்பெறவே எல்லாக் காரியமும் என் வாழ்வில் நடந்தது என்பதை உணர்கின்றேன் முனிவ, காரியம் முந்தியது காரணம் பின் விளங்கிற்று”

அருகில் நின்ற மாதலி சொன்னான்.

“விதியினை நிர்மாணித்த இறைவன் இந்த அருளை பெறத்தான் உங்களை வழி நடத்தியிருக்கின்றான்”

துஷ்யந்தன் தொடர்ந்தான்.

“நுண்ணுய அருந்தவமே, இந்தச் சகுந்தலையினை நான் ஊழ்பயனாய் கண்டடைந்தேன். களவு மணமும் புரிந்தேன், பின் அவளை என் முன்னே அவள் வந்தபோது, பாழான என் விதியால் நான் அவளைப் பழிசொல்லி விரட்டிவிட்டேன்.

உங்கள் குலமான கன்ம முனிக்கே நான் துரோகம் செய்தேன், இந்த மோதிரம் வந்ததால் நினைவடைந்தேன், எவ்வளவு பெரும்பாவம் செய்தோம் என நிலைகுலைந்தே போனேன்.

முனிவரே! கண்முன் யானை நின்றபோது மயக்கத்தில் கிடந்துவிட்டு யானை சென்றதும் அதன் தடம்பார்த்து வந்தது யானையா என அழுபவனைப் போல் அழவும் செய்தேன் என்போல் நிலை எவருக்கும் வாய்க்குமோ?

காசிபர் சொன்னார்.

“தவறு செய்தேன் என்கின்றாயே துஷ்யந்தா, அந்தத் தவறைச் தவறாமல் நீ செய்ததும் நல்லதற்கே என நான் சொல்லப்போவதை கேட்டு உணர்வாய்” என்றார்.

அவன் அவர் சொல் கேட்கத் தயாரானான்.

“மன்னா, இந்தச் சாகுந்தலையினை ஒரு ஓளி தூக்கிச் சென்ற செய்திமட்டும் நீ அறிவாய், அந்த ஒளி யாரென நீ இன்னும் அறியவில்லை, அந்த ஒளிவடிவமே மேனகை, இவள் அன்னையான மேனகை.

அவள் ஒளிமிக்க விசுவாமித்திரரின் தவம் கலைக்க அனுப்பப்பட்டாள், சென்றாள் தவம் கலைத்தாள். ஆனால், ஒளிமிக்க முனியிடமிருந்து இவளை வயிற்றில் பெற்றும் கொண்டாள்.

மயில்களோடும் பறவைகளோடும் மான்களோடும் இவள் வளர இங்கேதான் அவளைப் பெற்றெடுத்து வளர்த்தாள். பின்பே கன்மரிடம் கொடுத்து அவள் விதிப்படி வளர்க்கச் சொன்னாள்.

ஆமை தன் குட்டிதனை தொலைவில் இருந்தே உணர்வால் வளர்ப்பது போல் இவளைத் தன் உணர்வால் நடத்தினாள் அவள் தாய்.

சாகுந்தலை கர்ப்பவதியாய்க் கலங்கி நின்றபோது மேனகை அவளை இங்குத் தூக்கி வந்தபோது நடந்ததெல்லாம் துர்வாசரின் சாபம் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்தேன். உன்மேல் பிழையில்லை துஷ்யந்தா, அவள்மேலும் பிழையில்லை.

எல்லாம் விதியால் வந்த வலி, அந்த வலியால் கண்களை இழந்தவள் இன்று மீண்டும் அதைப் பெற்றுக்கொண்டாள்.

துஷ்யந்தா! உன்மேல் குற்றமில்லை என்பதை நானும் என் காட்சியில் கண்டேன், மோதிரம் உன்னிடம் வந்தபின்பு உன் துன்பமெல்லாம் யானை மிதித்த மண்குடம் நொறுங்குதல் போல் இல்லாமல் போனதும் கண்டேன், இனி உனக்கு தீங்கேதுமில்லை. இந்திரனின் வாழ்வுக்கு குறையாமல் வாழ்வாய்”

துஷ்யந்தன் சொன்னான், “இந்தப் பழி எனும் இருளில் இருந்து வெளிவந்தேன் முனிவரே, முன்பு காரிருளில் சிக்கியிருந்தேன், இப்போது ஒளிமிக்க வழியில் நடக்கின்றேன், முழுப் பாதையும் தெரிந்து நடக்கின்றேன்”

அதைக் கேட்ட சகுந்தலை சொன்னாள் “தீவினையால் பிரிந்த நாங்கள் நல்வினையால் ஒன்றானோம், அவர் என்னை இருளுக்குள் தள்ளவில்லை, என்னை நானே மறந்த நிலையில் முனிவரின் சாபம் பெற்றுக் கொண்டேன்.

ஆனாலும், ஒளிவிளக்காய் மோதிரமும் பெற்றுக்கொண்டேன், என் உறுப்பாய் அதனைப் பாதுகாக்க வேண்டிய நான் இன்னும் இன்னும் என்னை மறந்த நிலையால் அதனை இழந்தே போனேன், காதலினால் அன்னை தந்தை எல்லாம் மறந்து எல்லாமும் மறந்த தவறின் தண்டனையாய் இந்தத் துன்பம் பெற்றேன், வேறு என்ன சொல்வேன்?”

காசிபர் சொன்னார், “சாகுந்தலையே உண்மையினை உணர்ந்து கொண்டாய், தலைவன்மேல் தவறில்லை என்பதை அறிந்தும் கொண்டாய், உன்னை மறந்து நீ முனியிடம் பெற்ற சாபத்தாலும் அவன் தன்னை மறந்து விதியினால் நின்ற கோலத்தாலும் எல்லாம் நடந்தது என்பதையும் தெரிந்து கொண்டாய்.

அழுக்கேறி கிடந்த கண்ணாடியில் ஒன்றும் தெரியவில்லை எனக் கலங்கினாய், வழுக்கும் பாதையில் நடந்து வீழ்ந்தாய். மோதிரத்தையும் இழந்திட்டாய், காலமது எல்லாம் திரும்பத்தர இனித் துடைத்திட்ட கண்ணாடியில் உன் முகம் காண்பாய், வழியில் வீழாமல் இனி நடப்பாய்”

துஷ்யந்தன் சொன்னான், “முனிவரே, நடந்ததெல்லாம் காலத்தின் விளையாட்டு என்பதை அறிந்தோம்”

காசிபர் அந்தச் சிறுவன் மேல் கைவைத்துச் சொன்னார் “மன்னா, இவனுக்குக் கொடுக்க வேண்டிய அத்தனை ஆசீர்வாதமும் கொடுத்து விட்டேன், இவனைக் குலக்கொழுந்தாய் கொண்டு உன் வம்சம் வாழ்க”

துஷ்யந்தன் சாகுந்தலையோடு பணிந்து சொன்னான், “துறவியரின் தலைவரே, இத்திருநாட்டின் தூயவாழ்வே இவன் கையில்தானே உண்டு? அறமும் தர்மமும் நிறைந்த எம் குலத்தை நிலை நிறுத்த இவனையன்றி வேறு யார்தான் உண்டு?”

காசிபர் அவனை இன்னும் வாழ்த்தினார்.

“அறமும் தர்மமும் துலங்க, பொருளும் செழுமையும் ஓங்க, இன்பமும் மகிழ்வும் சூழ அரசனின் அரசனாக இவன் வாழ்வான்.

புதுவிதி இவன் செய்வான் உலகை சரிசெய்வான், உனக்குப் பின் உன்னைவிட பெரும் கீர்த்தியுடன் அவன் ஆள்வான்.

கடல்மேலும் நிலம்மேலும் ஆதிக்கம் செலுத்தி வான் ஊர்தி ஏறி வானிலும் அவன் ஆள்வான், ஏழு கடல் ஏழுவானம் ஈரேழு உலகமெல்லாம் இவன் ஆள்வான், வடபுலமும் தென்புலமும் இவனால் ஒன்றாகும். அந்தப் புலமே பாரதம் என இவன் பெயரோடு எக்காலமும் நிலைத்திருக்கும்” என்றார்.

துஷ்யந்தன் அதைக் கேட்டு மிக மகிழ்ந்து “பெரும் முனிவரே, இந்த வனத்தின் இதர முனிகளும் உம் மாணவர்களும் இவனை முழு மனதோடு ஆசீர்வதிக்கட்டும்” என்றான்.

சாகுந்தலை முழு நிறைவோடு சொன்னாள், “என் தந்தை கன்ம முனிவர்க்கு இதையெல்லாம் தெரிவித்தால் அவரும் மகிழ்வாரன்றோ?”

காசிபர் புன்னகைத்தார், “அவர் தன் மனக்கண்ணால் இதையெல்லாம் பார்க்காமல் இருப்பார் என்றா எண்ணுகின்றாய் சாகுந்தலையே?”

துஷ்யந்தன் சொன்னான், “அவர் எல்லாம் அறிந்தவர், அதனால்தான் இப்படி நல்முடிவு வருமென்று முன்பே என்னைச் சிதைக்காமல் விட்டுவைத்தார், அவர்மட்டும் ஒரு சாபம் இட்டிருந்தால் இங்கு நான் நிற்பதேது, இந்த வாழ்வும் ஏது?”

காசிபர் சொன்னார், “கன்ம முனி என்ன எல்லோரும் அறியும் வண்ணம் இந்த நற்செய்தியினை உலகெல்லாம் சொல்வோம்” என்றவர் தன் மாணவனை அழைத்துச் சொன்னார்.

“நீ வான்வழி ஏகிச் செல், நான் சொன்னதெல்லாம் சொல்.

இவர்கள் வாழ்வினை ஆட்டுவித்த சாபமெல்லாம் தீர்ந்தது எனச் சொல், தீமையெல்லாம் அழிந்தது என்பதைச் சொல்.

துஷ்யந்தன் நினைவடைந்தான். சாகுந்தலையினைத் தன் தலைமனையாய் ஏற்றுக்கொண்டான் என்பதைச் சொல், தன் மகன் பரதனுக்குப் பட்டமியற்றபோகின்றார் என்பதையும் சொல்.

இதனைப் பெரும் வாழ்த்தோடு நானே சொன்னேன் என எல்லோருக்கும் வானமேறி சொல்” என்றார், அவன் ஆகட்டும் என நகர்ந்தான்.

தன் பெரும் அருளை ஆசீயை அவர்களுக்குக் கொடுத்து காசிபர் சொன்னார்.

“திருமகனே துஷ்யந்தா, அருந்தவமே சாகுந்தலை, நீங்களும் என் அன்புடைய மகன் இந்தப் பரதனும் இனி இந்திரனின் தேர் ஏறி உங்கள் இடத்துக்குச் சென்று இந்தப் பாரத திருநாட்டை காத்துவருவீர்களாக, அறமும் தர்மமும் அன்பும் ஒளியும் அங்கு நிறைந்திருப்பதாக.

இந்திரன் உன் குடிக்குப் பெரும் மழையினைத் தந்து நிற்பான், நீயும் அந்த விண்ணவர் வாழ வேள்வியெல்லாம் செய்து வரக்கடவாய்.

பாரத தேசம் தரணியில் சிறக்கட்டும், அதன் அன்பும் கருணையும் அறிவும் திருவும் எக்காலமும் உலகத்துக்கு வழிகாட்ட நிலைக்கட்டும்.

அன்பனே துஷ்யந்தா! உன் வம்சத்தால் இந்தப் பூமியே நலம்பெறட்டும்! பெரும் காவல் பெறட்டும்! பாரதம் உலகின் மகுடமென திகழட்டும்”

(காளிதாசனின் சாகுந்தலம் நிறைவடைந்தது)