காளிதாசனின் மேகதூதம் : 01
முன்னுரை
காளிதாசனின் விக்ரமோர்வசியம் என்பதன் தமிழாக்கத்தை நாம் எழுதவில்லை. அது அரவிந்தரால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதன் தமிழ் வடிவம்.
அதுவும் இன்னொரு தளத்தில் வந்தது. படிக்க நன்றாக இருந்ததால் நாம் சில பாகங்களை இங்கே சொன்னோம்.
அது பலருக்கு புரியவில்லை என்றார்கள். சிலர் காளிதாசனின் காவியங்களை சொல்லமுடியுமா என்றார்கள்.
அவன் பெரும் கடல், எழுதிக் குவித்தவை ஏராளம். அதையெல்லாம் எழுத தனிவாழ்வு வேண்டும்.
அவனின் உவமை அழகு, அந்த உவமையில் சொல்லும் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவம் அழகு, வர்ணனை இன்னும் அழகு, காளியின் அருளினால் எல்லாம் இப்படி கலந்து எழுதியதாலே அவன் நிலைத்தான்.
நமக்கு அதிக நேரமில்லை, எழுத வேண்டியது நிரம்ப உண்டு. எனினும் காளிதாசனின் “மேக தூதம்” எனும் சிறிய காவியத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கலாம்.
ஆடிமாத மேகம் இமயமலைக்குச் செல்வதைக் கண்டு, ஆந்திரா பக்கம் ராமகிரி மலையில் இருந்து ஒரு யட்சன் எனும் குபேரனின் பணியாளன், இமயத்தில் இருக்கும் தன் காதலிக்கு விடும் தூதுதான் கதை.
தனிமையில் வாடும் அவன் தன் காதலியினை நினைந்து தன் துயரத்தையும் தான் கொண்டிருக்கும் நம்பிக்கையினையும் அந்த மேகத்திடம் சொல்லி புலம்புவதுதான் அந்த காவியம்.
அந்த கற்பனையும், உருவகமும், வர்ணனையும், அவன் கொட்டும் உணர்ச்சிகளும் ஆடிமாதச் சாரல் போல சிலிர்ப்பானது.
நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது சில பாடல்களைக் காணலாம். ஆனால் எப்போது என்பதுதான் தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் மேனகையின் அனுமதி முக்கியம். அவள் மறுத்தால் காளிதாசனுக்கே வருத்தத்தோடு கைகாட்டி விடுவதைத் தவிர வழியில்லை.
ஆனால் அவள் மறுக்க மாட்டாள். அப்படி மறுத்தால் அந்த மேகத்தை அவள் வீட்டுக்கே அனுப்பிவிட்டுப் பார்க்கலாம்.