காளிதாசனின் மேகதூதம் : 08
ஏழாம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே, உன்னால் அந்த மலைக்கே ஒரு அழகு ஏற்படும். வெட்டபட்ட யானை தந்தங்கள் குவிந்து கிடப்பது போன்ற அந்த வெண்ணிற மலை அது , அதன் சிகரங்கள் தந்தம் போல கூரியவை, ஆனால் நீயோ நன்கு குழைக்கபட்ட மை போல கருநீல நிறம் கொண்டவன்
நீ அந்த மலையின் சிகரங்களிலும் சமவெளிகளிலும் இறங்கும் போது வெண்ணிற நிறமுடைய பலராமர் நீலநிற பட்டாடையினை தோள்களில் இட்டு அழகுற காட்சி தருவது போல் அம்மலை விளங்கும், பலராமரின் அழகான கோலத்தை நீ அந்த மலைக்கு வழங்குவாய்
மேகமே, அந்த மலை சிவபெருமான் பார்வதியோடு வாழும் மலை. அந்த பார்வதி அஞ்சிவிடுவாள் என சிவன் தன் கழுத்திலும் கையிலும் சுற்றியிருக்கும் பாம்பு வளையல்களை கழற்றிவிட்டு அவள் கைகோர்த்து அங்கு நடைபயில்வது வழமை
அப்படி நடக்கும் போது மேடான இடங்களில் பார்வதி ஏற சிரமபடும்போது சிவன் கைகொடுத்து தூக்கிவிடுவார், நீ அந்நேரம் சென்று உன் உடலை பனிகட்டியாக இறுக்கி படிகட்டுகள் போல அமைத்து அமர்ந்துகொள், பார்வதியும் சிவனும் உன்னை மிதித்து நடந்து செல்வார்கள், அப்போது நீ மிகுந்த புண்ணியம் செய்தவனும் அவர்களை தலையில் தாங்கிய பாக்கியம் பெற்றவனுமாவாய்
மேகமே, அந்த கயிலாய மலைக்கு சிவசேவை செய்ய தேவலோக மங்கையரெல்லாம் வருவார்கள், அந்த மலையின் வெப்பம் அவர்களை தாக்கும்போது உன்னை கண்டு மகிழ்ச்சியுடன் எழுவார்கள், தங்கள் கையின் வஜ்ஜிராயுத முனை போன்ற கங்கணத்தை கொண்டு உன்னை குத்தி தாரை தாரையாக நீர் பெற விரும்புவார்கள்
இந்திரனின் வஜ்ராயுதம் இடி ஆயுதம் அல்லவா? அதைபோன்ற கூர்மையான தங்கள் கங்கண முனைகளால் உன்னை இடித்து நீரை கொட்ட வைக்கபார்ப்பார்கள், நீ அவர்களிடம் சிக்கிவிட்டால் சின்னாபின்னமாகிவிடுவாய் அதன் பின் என் காதலியினை எப்படி நீ சந்தித்து என் வேதனையினை சொல்லமுடியும்?
அதனால் அந்த தேவலோக மங்கைகளிடம் இருந்து தப்பிசென்றுவிட கடவாய், விடுதலை அடைந்து தப்பிவிடுவாயாக
மேகமே, அந்த கயிலாய மலை உனது நண்பன் வீடு, அந்த வீட்டில் நீ தங்கி இருந்து ஓய்வெடுப்பாயாக, தங்கநிற தாமரைகள் பூக்கும் மானச சரோவத்தின் தெளிந்த நீரை பருகி இன்பமடைவாய், களைப்பு தீர்ப்பாய்
இந்திரனின் வாகனமான ஐராவத யானை அங்குதான் நீராடவரும், நீ அந்த யானையோடு விளையாடுவாயாக, அதன் மந்தகத்தின் மேல் முகபடாம் அலங்கார துணிபோல் படர்ந்து மகிழ்ச்சிபடுத்துவாயாக
அந்த ஏரிகரையில் இருக்கும் கல்பக விருட்சங்களின் தங்கநிற தளிர்களை பட்டுதுகிலை அசைப்பது போல் மெல்ல அசைப்பாயாக, பின் உன் அழகான மின்னல் ஒளி, எதிரொலிக்கும் இன்னிசையான இடி மூலம் அந்த கயிலாய மலையின் அழகுகளை சுகமாக ரசித்து விளையாடி இன்புறுவாயாக
மேகமே, நீ விருப்பம்போல் செல்லும் வரம்பெற்றவன், அப்படி கயிலாய மலையின் மேல் வெள்ளை பட்டுதுகிலை சூழ கொண்டு அமைந்திருக்கும் அலகாபுரி பட்டணத்தை நீ எளிதாக அடையாளம் காண்பாய், பனிசூழ் மலையில் இருக்கும் அந்நகரம் காதலன் மடியில் வெண்ணிற வஸ்திரம் நெகிழ்ந்து சரிய கிடக்கும் காதலி போல் அழகானதாக தோன்றும்
அந்த அலகாபுரி ஏழு அடுக்கு மாட மாளிகைகளை கொண்டது, மேகங்களெல்லாம் ஓய்வெடுத்து செல்லும் வகையில் உயரமானது, அப்படி ஓய்வெடுக்கும் மேகங்களின் நீர்துளிகள் உருண்டை உருண்டையான நீர் திவலைகளை முத்து சரம்போல் பொழியும்
கருத்த மேகங்களை உச்சியில் கொண்டிருக்கும் அந்த மாடமாளிகை கொண்ட அந்த நகரம் இக்காட்சியில் கருத்த கூந்தல் கொண்ட பெண் தன் நெற்றியினை சென்னியினை முத்துக்களால் அலங்காரம் செய்து கொண்ட பெண்போலவே தோன்றும்
அந்த அலகாபுரியில்தான் நீ என் வீட்டை அடையாளம் கண்டு என் காதலியிடம் என் செய்தியினை சொல்லவேண்டும், அந்த அலகாபுரியின் மாளிகைகள் எப்படியானது தெரியுமா? சொல்கின்றேன் கவனமாக கேட்டுகொள்
அந்த மாளிகைகளுக்கும் உனக்கும் பல ஒற்றுமைகள் உண்டு
உன்னை போலவே அவைகளும் பிரமாண்டமானவை பெரியவை, உன்னிடம் மின்னல் உண்டு என்பதை போல அங்கும் அழகான மின்னல் கொடி போன்ற பெண்கள் உண்டு
உன்னிடம் அழகான வண்ணங்களின் தொகுப்பாக வானவில் உண்டு, அங்கே உள்புற சுவர்களில் அழகான வண்ணங்களில் சித்திரங்கள் உண்டு
உன்னிடம் கம்பீரமான இடியோசை உண்டு, அது தொலைவில் மிருதங்க ஒலிபோல் ஒலிப்பதும் உண்டு. அங்கே மாளிகைக்குள் இனிய கச்சேரிகளில் மிருதங்க ஒலி எப்போதும் உண்டு
மேகமே, பளிங்கு போன்ற உன்னுள் தூய்மையான நீர் உண்டு, அந்த மாளிகையின் பளிங்கு கோப்பைகளில் சுவையான மதுவகைகள் உண்டு
நீ உயரத்தில் இருப்பாய் அந்த மாளிகையின் மாடங்களும் உயரத்தில் இருக்கும், இப்படி உனக்கும் அந்த மாளிகைகளுக்குமான ஒப்புமைகள் மிக மிக அதிகம்
மேகமே , அந்த அலகாபுரியில் மற்ற இடங்களை போல பருவகாலங்கள் ஆறும் மாறி மாறி ஒன்றன்பின் ஒன்றாக வராது, ஒரே நேரத்தில் எல்லா பருவகாலமும் கூடிவரும் அற்புத நகர் அது
அதனால் எல்லா பருவகாலத்தின் பூக்களும் அங்கு ஒரே நேரத்தில் கிடைக்கும்
அந்த ஊரின் பெண்கள் குளிர் காலத்தின் தாமரையினை தங்கள் கைகளில் அழகுக்காகவும் மனமகிழ்ச்சிக்காகவும் கொண்டிருப்பார்கள், நெற்றியில் சென்னியில் முன்பனி காலத்தில் வரும் மல்லிகையினை சரமாக சூடியிருப்பார்கள்
பனி காலத்தில் வரும் லோத்ரமலரின் வாசமிக்க மகரந்த பொடிகளை பூசியபடி அழகுற விளங்குவார்கள்
தலை உச்சியில் வசந்த காலத்தில் மலரும் மருதோன்றி மலர்களை அணிந்திருப்பர்
முதிர்வேணல் காலத்தில் மலரும் வாகை பூவினை காதுமேல் வைத்திருப்பார்கள்
மழைக்கால கதம்ப மலரை நெற்றிவகிட்டில் சுட்டியிருப்பார்கள்
இப்படி வருடம் முழுக்க எல்லா மலர்களையும் சூட்டிகொண்டு அழகுற காட்சியளிப்பார்கள்
மேகமே, அந்த அலகாபுரியின் மரங்கள் எப்போதும் பூத்துகொண்டே இருக்கும் அதனால் மலர்களில் தேன் இருந்து கொண்டே இருக்கும், அந்த தேனை பருகிய வண்டுகள் எப்போதும் இசைபாடி ரீங்காரமிட்டு கொண்டே இருக்கும்
அங்கு எல்லா காலத்திலும் தாமரை உண்டு என்பதால் அந்த தடாகம் மேல் அன்னை பறவைகள் வரிசையாக மேகலை போல் அமைந்திருக்கும்
அந்த அலகாபுரியின் மயில்கள் எப்போதும் தோகையோடு செழுமையாக இருக்கும் அவை உதிர்வதில்லை தன் நீண்ட கழுத்துக்களை அசைதது அகவியபடி அவை நடனமாடிகொண்டே இருக்கும்
அந்த அலகாபுரியில் எப்போதும் சந்திரன் இருப்பதால் இரவிலும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும், அங்கேதான் என் வீடும் அதனுள் என் அன்புக்குரிய காதலியும் உண்டு
மேகமே, அந்த அலகாபுரிதான் யட்சர்களின் தலைநகரம், குபேரன் ஆளும் நாட்டின் தலைநகரம்
அந்த யட்சர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆணந்த கண்ணீர் மட்டுமே அறிந்தவர்கள், துயர கண்ணீர் அவர்கள் ஒருகாலமும் அறியாதது
மன்மதன் கொடுக்கும் ஏக்கம் தவிர வேறு எதற்கும் அவர்கள் ஏங்கியதே இல்லை, அந்த ஏக்கத்துக்கும் உரிய வழியினை அவர்கள் செய்துவிடுவார்கள், ஆம் அவரவர்களை விரும்பியவரை சேர்த்துவைத்து விடுவார்கள்
மேகமே, அங்கு காதலர்களுக்குள் ஊடலால் செல்ல சண்டை வரும் அந்த அளவற்ற அன்பு கொடுக்கும் கோபத்தால் சிறிது பிரிந்து கூடுவார்களே தவிர வேறு காரணங்களால் சண்டையுமில்லை அவர்களுக்குள் பிரிவுமில்லை
அவர்களுக்கு முதுமையுமில்லை எக்காலமும் இளமையே
மேகமே, அப்படியான யட்சர்கள் வாழும் அலகாபுரியில் எப்படி வாழ்வை கொண்டாடுவார்கள் தெரியுமா?
முன்னிரவில் அழகான பெண்களை அருகே வைத்து கொண்டு ஸ்படிகமாக இழைக்கபட்டு வானத்து நட்சத்திரத்தின் பிம்பங்கள் பிச்சிபூ போல தெரியும் அழகான தரைகள் நிரம்பிய மேல் தளங்களில் அமர்ந்து, உன்னுடைய இடியோசையின் எதிரொலி போல அழகான மிருதங்க இசை ஒலிக்க , கல்பக விருட்சத்தின் கனிகளில் இருந்து கிடைக்கும் “ரதிபலம்” எனும் மயக்கமும் கிறக்கமும் மகிழ்வும் தரும் மதுவினை பருகியபடி மகிழ்ந்திருப்பார்கள், அபப்டி யட்சர்கள் சொர்க்கவாசிகள் போல மகிழ்வான வாழ்வை வாழும் ஊர் அந்த அலகாபுரி..”
(தொடரும்..)