காளிதாசனின் மேகதூதம் : 09
எட்டாம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே, அலகாபுரியில் இருக்கும் யட்சன பெண்கள் மிக மிக அழகானவர்கள், எவ்வளவுக்கு அழகானவர்கள் என்றால் ரம்பபை , ஊர்வசி, திலோத்தமை, மேனகை என தேவலோக பெண்களை கொண்டிருக்கும் தேவர்கள் கூட அவர்களை விட அலகாபுரி பெண்களே அழகு என இங்கு தேடிவருவார்கள்
அத்தகைய அலகாபுரி பெண்கள் கங்கையின் குளிர்ந்தகாற்றினால் இன்பமான சுகம் துய்ப்பார்கள், அந்த கரையோரம் செழித்து வளர்ந்திருக்கும் மந்த்ரா மரத்தின் இதமான நிழலில் சூரிய வெளிச்சம் உடலினை தொடாதவாறு விளையாடுவார்கள்
கங்கை கரையின் வெண்மணலில் ரத்தினங்களை மூடிய கைகளை கொண்டு ஒளித்து வைத்து பிற பெண்கள் அதை கண்டுபிடிக்கும்படி விளையாடுவார்கள், அவ்வளவுக்கு அழகு பெண்களும் நவமணிகளும் குவிந்திருக்கும் ஊர் அலகாபுரி
மேகமே, அங்கே காதலன் தன் காதலியினை மாளிகையில் ரகசியமாக சந்திக்கும் நேரம், அவள் உடை இடுப்பில் இருந்து நழுவும் போது அப்பெண் அதை பற்றி சரி செய்ய முயலுவாள், ஆனால் காதலனோ முந்திகொண்டு அதை பற்றி இழுப்பான்
அதனால் நாணம் அடையும் பெண் மானம் காக்கும் பொருட்டு விளக்கை அணைக்க முயல்வர், அப்போது வாசனை பொடிகளை தங்கள் கையால் அள்ளி அவசரமாக விளக்கினை நோக்கி எறிவார்கள். ஆனால் அந்த விளக்குகள் எண்ணையும் திரியும் கொண்ட விளக்கு என்றால் அணைந்துவிடும், அவை சாதாரண விளக்கா?
அவை ரத்தினங்கள் எப்போதும் ஜொலிக்கும்படி செய்த ரத்தின விளக்குகள், அதன்மேல் தூவும்பொடி விளக்கை அணைக்காது, அதனால் காதலி திகைத்து நாணி நிற்க காதலன் இன்னும் முன்னேற இன்பமயமான காட்சிகள் நடக்கும் அலகாபுரி அது
ஆம், அங்கு விளக்கு கூட ஜொலிக்கும் ரத்தினத்தால் செய்யபட்ட்டிருக்கும் அவ்வளவு செலவமிக்க ஊர்
மேகமே நீ காற்றினை நம்பி செல்பவன், காற்றுதான் உன்னை எங்கும் அங்குமிங்குமாக நகர்த்தி கொண்டே இருக்கும்
அலகாபுரியின் மாளிகைகள் ஏழு அடுக்கு கொண்டவை. அந்த மாளிகையின் உள் அரங்கில் மாந்தரின் இன்ப ஏக்கம் தீரகூடாத படி, அந்த ஏக்கத்தை தூண்டிகொண்டே இருக்கும்படி பல சித்திரங்கள் வரையபட்டிருக்கும், தீரா தளரா கொண்டாட்டத்துக்காய் அப்படி ஸ்ருங்கார கோல சித்திரங்கள் நிறைய உண்டு
காற்றினால் நகர்த்தபடும் நீர் நிறைந்த மேகங்கள் அந்த மாளிகைக்குள் ஈர்க்கபடும்போது அந்த மேகத்தின் நீர்திவலைகளால் அந்த சித்திரங்கள் பாதிக்கபடும், அதன் வர்ணங்கள் கலையும். அந்த அழகான ஓவியங்களை கலைத்துவிட்டோமே என கவலையுறும் மேகங்கள் என்ன செய்யும் தெரியுமா?
அந்த மாளிகையின் பெண்கள் தங்கள் கூந்தலுக்கு நறுமணமிக்க புகையினை இடுவார்கள், அந்த புகையின் வேடம் தாங்கி அவை சிறிய சிறிய புகைபோல் அவசரமாக வெளியேறிவிடும்
அப்படி அழகான காட்சிகளை கொண்டது அலகாபுரி
மேகமே, அந்த ஊரின் மாளிகையின் மேல் தளத்தில் திறந்த வெளியில் அகலமான கட்டிலில் காதலிகள் தங்கள் காதலனால் நீண்டநேரம் கலந்த தளர்ச்சியில் சரிந்திருப்பர். அந்த கட்டிலின் விதானங்களில் அழகிற்காக சந்திரகாந்த மணிகள் கொண்ட மாலை கோர்க்கபட்டிருக்கும்
மேகமே, நீ அந்த மாடத்தை மறைத்து கொன்டிராமல் உடனே அகன்றுவிடு, அப்போது சந்திரன் ஒளி அந்த சந்திரகாந்த கற்கள் மேல் விழும் , அந்த பிரகாசமான ஒளியில் அந்த விஷேஷ கற்களில் நீர் கசியும், அந்த நீர்துளிகள் அந்த தளர்ச்சியுற்ற பெண்கள் மேல் விழுந்து அவர்கள் புத்துணர்ச்சிபெறுவார்கள், அவர்களின் களைப்பு நீங்கிய கோலம் கண்டு அவர்களின் காதலனும் மகிழ்ச்சியுறுவான்
மேகமே, அந்த அலகாபுரியின் செழுமையினை இன்னும் சொல்கின்றேன் கேள். அது குபேரனின் பட்டணம் அல்லவா? அதனால் ஒன்பது வகையான நிதிகளும் எப்போதும் குவிந்திருக்கும், நிதி மிகுந்தவர் வாழ்வே இன்பத்தை நாடுவது அல்லவா? அதனால் இயல்பிலே போகம் மிகுந்த அவர்கள் எப்போதும் போகத்திலே திளைத்திருப்பார்கள்
அவர்களின் போகத்துக்கு துணையாக ரம்பையும், ஊர்வசியுமே வந்து பணிவிடை செய்து மகிழ்ச்சிபடுத்துவார்கள்
அங்கே வைப்ராஜம் எனும் வனம் உண்டு அதுதான் குபேரனின் உத்யான வனம், அங்கே கின்னர்கள் குபேரன் புகழை அழகான இசையில் இனிமையான மொழியில் பாடிகொண்டே இருப்பார்கள்
அதனை அழகான பெண்கள் தழுவும்படி அமர்ந்திருக்கும் யட்சர்கள் கேட்டு மகிழ்ந்தபடியே தங்களுக்குள் பேசி சிரித்தபடியே அந்த அழகான வனத்தின் அழகை இன்னும் அழகுபடுத்தி அனுபவிப்பார்கள்
மேகமே நிதி மிகுந்த இடத்தில் கவலை இராது கொண்டாட்டம் ஒன்றே நடக்கும், அப்படி போகத்தில் திளைக்கும் யட்சர்களுக்கு இனபத்தை இன்னும் வழங்க விலைமாதர்கள் தேடி தேடி வருவார்கள்
தேன் இருக்கும் இடமெல்லாம் வண்டுவருவது போல பணமிருக்கும் இடமெல்லாம் விலைமாதர் வருவது இயல்பன்றோ?
அவர்கள் இரவெல்லாம் அங்கே சுற்றி திரிவர், அவர்கள் தாங்கள் வந்து செல்வது ரகசியம் என நினைத்தாலும் சூரியன் எழும்போது அவர்கள் சென்றுவந்த பாதையினை எல்லோரும் அறிந்து கொள்வார்கள்
மேகமே தங்களை நன்றாக மலர்களாலும் நகைகளாலும் அலங்கரித்து செல்லும் அப்பெண்கள் பின் திரும்பி வரும்போது தளர்ந்தும், அலங்காரத்தில் கவனமில்லாமலும் வருவார்கள்.
அப்படி வரும்போது அவர்களின் தலையில் உள்ள பூக்கள் வழியெங்கும் சிதறி விழும், அப்படியே கன்னம் நெற்றி காதோரம் என அவர்கள் செய்திருந்த அலங்கார தளிர்களும் அனிகலன்களும் கீழே விழும்
அவர்கள் மார்பின் மேல் அணிந்திருக்கும் முத்துமாலைகள் மணிமாலைகளும் ஆடி ஆடி அற்றுபோய் அவை வழியெங்கும் கொட்டி கிடக்கும்
அப்படியாக அவர்கள் சென்ற பாதையினை காலையில் எல்லோரும் அடையாளம் காண்பார்கள், அப்படியான காட்சிகளை கொண்டது அந்த அலகாபுரி.
மேகமே, அந்த அலகாபுரியில் குபேரன் கற்பக மரத்தை வைத்துள்ளான், அது கேட்டதை எல்லாம் நொடியில் கொடுக்கும், அதனால் அந்த ஊர் பெண்கள் அணிகலன்களுக்காக எங்கேயும் யாரையும் தேடவேண்டிய அவசியமே இல்லை
அழகான நிறத்தில் வசீகரமான ஆடைகள், கண்களை சொக்க வைத்து பார்ப்போரை கிறங்கடித்து வீழ்த்தும் கண்களை தரும் மது, அழகான பூங்கள், விதம் விதமான நகைகள், பாதங்களில் பூசும் அழகான செம்பஞ்சு ரசம் என எல்லாமும் அதுவே தருகின்றது
மேகமே, அந்த கற்பகம மரம் பற்றி நீ அறிவாய் அல்லவா? அது பாற்கடலை கடையும் போது தோன்றியது அதோடு மந்தாரம் உள்ளிட்ட ஐந்து மரங்களும் வந்தன, இவை எல்லாமே என்ன கேட்டாலும் கொடுத்து கொண்டே இருப்பவை
யட்சர்களும் பாற்கடலை கடைய உதவியதால் குபேரனுக்கு இவை கிடைத்தன, ஆனால் கற்பக மரமே எல்லாருக்கும் எல்லாம் கொடுப்பதால் மற்ற நான்கு மரங்களை யாரும் நாடும் அவசியமில்லை. அவைகளும் கொடுக்க தொடங்கினால் அந்த ஊரின் வளம் எப்படி இருக்கும் என எண்ணிபார், செலவழிக்கும் செல்வமே தீர தீர வரும்பொது, இன்னும் பல பொக்கிஷங்கள் இப்படி உண்டு என்றால் அதன் செழுமையினை உணர்ந்து கொள்
கடல் அலைபோல் செல்வம் அலை அலையாக அடிக்கும் ஊர் அந்த அலகாபுரி
மேகமே, உன்னகு ஒன்று சொல்கின்றேன் கேள். சிவபெருமானும் குபேரனும் நண்பர்கள். அந்த சிவபெருமான் தன் துணையான பார்வதியுடன் அந்த அலகாபுரி அருகில்தான் கயிலாயத்தில் வசிக்கின்றார்
சிவபெருமானுக்கு அஞ்சி மன்மதன் அப்பக்கம் வருவதே இல்லை, முன்பே அவர் அவனை எரித்தவர் அல்லவா? அதனால் அவன் அங்கே வரமாட்டான் அவனின் வில்லும் அம்பும் அப்பக்கம் வரமுடியாது, காம கனைகளை அவனால் தொடுக்கமுடியாது
ஆனாலும் அவன் வில் செய்யவேண்டிய வேலையினை அலகாபுரி பெண்களின் வில்போன்ற புருவம் செய்கின்றது
மன்மதன் வில்லை வளைப்பது போல அவர்கள் புருவத்தை நெளிக்கும் அசைவிலே அவர்கள் கண்களில் இருந்து மன்மத பாணத்தைவிட சக்தியான பாணங்கள் பாய்ந்து யாராயினும் விழ்த்திவிடும், அதனால் மன்மதன் இல்லையென்றாலும் அப்பென்களின் வில்போன்ற புருவங்கள் அவன் வேலையினை சரியாக அங்கே செய்கின்றது
அதனால் அங்கே சிருங்கார் விளையாட்டுக்கள் தடையின்றி நடக்கும், எல்லோரும் இன்புற்று இருக்கும் அலகாபுரி அது
மேகமே, இப்படியான அலகாபுரியில் குபேரனின் வீட்டின் வடக்கு பக்கமாக என்னுடைய வீடு உண்டு. ரத்தினங்களால் இழைக்கபட்ட உயர்ந்த தோரண வாசல் கொண்ட அந்த வீட்டை தொலைவில் இருந்தே நீ காணலாம்
ஆமாம் மேகமே, குபேரன் வீட்டருகே வீடு கொண்டிருக்கும் அளவு உயர்ந்த நிலையில் இருப்பவன் நான் , விதியால் இங்கே சிக்கிவிட்டேன்
மேகமே, அந்த வீட்டின் முன்னால் மகன் போல் கருதி என் மனைவி வளர்த்த மந்தார மரம் உண்டு , அதன் கிளைகள் தாழ்ந்து பூத்திருக்கும், தரையில் நின்றபடி அதன் பூங்கொத்துக்களை தொடும் அளவு அது தாழ்ந்திருக்கும்
மேகமே என் வீட்டின் முன்பு செவ்வக வடிவில் நீராடும் குளத்தை காண்பாய், அதன் படிகற்கள் பச்சை மரகத கல்லினால் அமைக்கபட்டிருக்கும்
வைடூரிய ரத்தினங்களை காம்பாக கொண்ட பொற்றாமரைகள் அங்கே மிதந்து கொண்டிருக்கும், அவற்றுக்கு போட்டியாக அன்னங்களும் அழகுற அசைந்துகொண்டிருக்கும்
மேகமே, அன்னபறவை சுத்தமான நீரில்தானே நீந்தும்? மற்ற இடங்களில் உன் போல் மேகங்களால் கொட்டும் மழையால் நீர் கலங்கிவிடுமல்லவா? அதனால் மழையால் கலங்காத என் வீட்டு வாவியில் அன்னங்கள் நிறைந்திருக்கும், அருகிருக்கும் மானஸரஸ் ஏரிக்கு அவை சென்று வந்துகொண்டுமிருக்கும், அப்படியான அழகான வாவியினை உடையது என் இல்லம்
மிக அழகான மாடமாளிகை அதன் முன்னால் ரத்தினத்ம் இழைக்கபட்ட தோரண வாசல் அதை தாண்டினால் ஒரு மந்தார மரம், பூத்து குலுங்கும் மந்தார மரம், அதை அண்டி பச்சை மரகத கற்களை படிதுறையாக கொண்ட குளியல் குளம். அதனில் மிதக்கும் வைடுரிய காம்பு கொண்ட தங்க தாமரைகள் அதன் அருகே மிதக்கும் அன்னங்கள், அதிலிருந்து எழும்பியும் வந்து இறங்கும் அன்னங்கள் என அழகான காட்சிகளை கொண்ட அந்த இல்லம் என் வீடு என அறியக் கடவாய்”
(தொடரும்…)