காளிதாசனின் மேகதூதம் : 10
ஒன்பதாம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே, என் வீட்டில் அந்த குளத்தின் கரையில் இந்திர நீல கற்கலால் அமைந்த ஒரு குன்றை காண்பாய், அது நானும் என் காதலியும் அமர்ந்து விளையாட உருவாக்கபட்டது, அந்த நீல நிறத்தில் இருக்கும் அந்த குன்றினை சுற்றி தங்க வாழைமரங்கள் அமைக்கபட்டிருக்கும்
நடுவில் நீலநிறமும் சுற்றிலும் தங்க நிறமும் கொண்டிருக்கும் அக்குன்று, கருநீல நிறமான உன்னை சுற்றி மின்னல் வெட்டும் அந்த அழகான காட்சியினை கொண்டிருக்கும், உன் அழகினை அந்த குன்றில் காண்பாய்
நானும் அவளும் அங்கே அமர்ந்திருப்போம், அந்த தங்க வாழையில் பட்டு எதிரொலிக்கும் நீல ஒளியில் அவள் மின்னும் அழகினை தேவலோகம் கூட காணமுடியாது
மேகமே, கருநில நீறத்தில் சுற்றி மின்னல் உடையவனாய் உன்னை காணும்போது எனக்கு அந்த குன்றின் நினைவு வருகின்றது, நான் இல்லாத காலத்தில் அதற்கு ஊறுவந்திருக்க கூடாது
மேகமே அந்த குன்றின் மேல் சிறிய குடில் உண்டு, அதன் கூரை குருக்கத்தி கொடியால் மூடபட்டிருக்கும், மருதாணி செடிகளையே அக்குடில் சுவர்களாக கொண்டிருக்கும்
அதன் தாழ்வாரத்தில் செந்தளிர்கள் அசைந்தாடும் சிகப்பு அசோகமரமும், பசுமையான இலைகள் ஆடும் மகிழமரமும் இருக்கும்
மேகமே, அங்கே ஒரு நம்பிக்கை உண்டு. அது அழகான இடது காலால் உதைத்தால் அசோகம் பூக்கும். அழகான பெண்ணின் வாயில் இருந்து மதுவினை ஊற்றினால் மகிழமரம் பூக்கும் என்பது
அசோகம் பூ காதலை தூண்டும், மன்மதனின் மலர்கனைகளில் அதுவும் ஒன்று. மகிழம்பூ ஒரு ஏகாந்த போதையினை கொடுத்து சொக்கவைக்கும்
பெண்ணின் இடபாகம் உணர்ச்சியால் நிறைந்ததல்லவா? அதனால் அவளின் இடதுகால் பட்டால் அம்மரம் உடனே பூக்குமாம், அப்படியே அழகான பெண்ணின் வாயின் மதுவினை தொட்டதும் மகிழமரம் மலர்ந்துவிடுமாம்
அழகான பெண்களின் கால் ஸ்பரிசத்தாலும், வாயின் சுவையாலும் அவைகளும் உணர்ச்சியால் பூத்துவிடும்,
அதனால் அவை இரண்டும் எப்போதும் பெண்கள் வருவார்கள் என விரும்பி காத்திருக்கும்
மேகமே, அந்த இருமரங்களிடையே ஒரு தங்க கம்பி இணைக்கபட்டிருக்கும், அந்த கம்பியினை தாங்க, மூங்கில் குருத்துபோல வெளிர்பச்சை ரத்தினங்களால் ஒரு பீடம் அமைக்கபட்டிருக்கும், அந்த தங்க கம்பியின் மேல் மயில் அமர ஒரு பளிங்கு கல் பலகை அமைக்கபட்டிருக்கும்
கீழே பச்சை ரத்தின பீடம் அதுதாங்கும் தங்க கம்பி அந்த கம்பிமேல் இருக்கும் பளிங்கு கல் என அந்த காட்சி அழகாய் ஜொலிக்கும்
என் காதலி வளர்க்கும் மயில் அந்த சிறுபளிங்கு பலகைமேல் அமர்ந்திருக்கும், பகலில் தோட்டமெல்லாம் சுற்றும் மயில் மாலையில் அந்த பலகைமேல் அமர்ந்திருக்கும்
அதுவும் என் காதலியும் நண்பர்கள், இருவருமே அழகிகள் அல்லவா? ஒரே சாயல் கொண்டவர்கள் அல்லவா? அதனால் இருவருமே ஒரு காரியம் செய்வார்கள்
என் காதலியின் கைகுலுங்கி அந்த வளைஓசை கேட்கும் போது அதற்கு ஏற்றபடி அந்த மயில் ஆடும், அவள் வளையோசை தாளமாக ஒலிக்க அதற்கு ஏற்றபடி அந்த மயில்தோகைவிரித்து ஆடும்
அவள் அழகா, அந்த மயில் அழகா அவள் கைவளை எழுப்பும் தாளம் அழகா என புரியாத அளவு திகைக்கும் என்னைபோலவே நீயும் குழம்பிவிடுவாய்
மேகமே, பரோபகாரியான நீ என் வீட்டின் அடையாளங்களையெல்லாம் உனக்கு சொன்னேன் இன்னொன்றையும் சொல்லி கொள்வேன். அந்த வீட்டின் தோரணவாயில் தாண்டி வாசல் அருகே இருபுறமும் சங்கநிதி பதுமநிதி ஆகிய தேவதைகளின் சிலைகள் அமைக்கபட்டிருப்பதை காண்பாய்
அந்த வீடு நான் இல்லாததால் கொஞ்சம் வாடி காணப்படும். சூரியன் இருக்கும்போது தெரியும் தாமரையின் அழகானது சூரியன் மறைந்தபின் வாடிவிடும் அல்லவா?
அப்படி நான் இல்லாததால் அந்த வீட்டின் அழகு மங்கித்தான் காணப்படும் என் காதலி முகம் போலவே அதுவும் களையற்று இருக்கும்
இந்த அடையாளங்களை கொண்டு அந்த வீட்டை நீ சரியாக அடைவாய்
மேகமே, நீ என் வீட்டின் வளாகத்தில் இருக்கும் அந்த நீலமணி குன்றை கண்டதும் அதில் இறங்கிவிளையாட விரும்புவாய், அலையாடும் நீல கடலை கண்டு கால் வைக்காமல் போவார் உண்டோ? அப்படி நீ அந்த குன்றில் இறங்கும்போது ஒரு யானைகுட்டி அளவுக்கு உன்னை சுருக்கி கொள்வாயாக
அப்படியே உன் மிகபெரிய வெளிச்சமான மின்னலை வெட்டாமல் மின்மினி பூச்சி அளவுக்கு மெல்லிய மின்னலை மின்னி அங்கே அமர்ந்திருப்பாய்
அந்த மெல்லிய மின்மினி பூச்சியின் ஒளிபோன்ற வெளிச்சத்தில் அந்த குன்று இன்னும் அழகாக மின்னும்
மேகமே, அந்த குன்றில் இருந்து என் வீட்டை நோக்குவாயாக, அங்கே நான் சொல்லும் அடையாளங்களுடன் ஒரு பெண் இருப்பாள், அவள்தான் என் அன்புகுரிய காதலி, அழகான காதலி , கொஞ்சம் வெகுளியான காதலி
அவள் கொடி போன்ற மேனி கொண்டவள், நீலோத்பவம் எனும் தாமரைபோல் நிறம் கொண்டவள், முனை மழுங்காத சீரான அளவாக அழகாக அமைந்த பல் வரிசையினை கொண்டவள்
கனிந்த கோவை கனி போன்ற உதடுகளை கொண்டிருப்பாள்
சிறுத்த இடை கொண்டவள், உள்ளே ஆழ்ந்த நாபியினை உடையவள் , மான் போன்ற மருகும் பார்வையினை உடையவள்
அவள் பின்னலிட்ட சடை முடி ஆடும் இடமானதும், இடுப்பின் பின்பக்கமானதுமான குடங்கள் கனமாக இருப்பதால் மெல்ல நடக்கும் நடக்கும் இயல்புடையாள்
ஸ்தனங்கள் சுமை தாளாமல் மெல்ல முன்பக்கம் கொஞ்சம் வளைந்திருப்பாள்
உலகை படைக்கும் பிரம்மன் அழகான பெண்களை படைக்க விரும்பி முயன்றபோது முதன் முதலில் படைத்த பெண்போல் அவள் இருப்பாள், அப்படி ஒருத்தியினை நீ காண்பாய் , அவளே என் உயிரான காதலி என்பதை அறிந்து கொள்
மேகமே, நானும் அவளும் மிக மிக பிணைப்பான வாழ்வில் இருந்தோம் அவளை விட்டு நான் பிரிந்ததே இல்லை
இப்போது விதிவசத்தால் நான் பிரிந்துவிட்டதால் ஆண் சக்கரவாக பறவையினை பிரிந்த பெண் சக்கரவாக பறவைபோல் அவள் சோர்ந்திருப்பாள்
மேகமே அவள் வெளியே நடமாடும் என் உயிரின் வடிவம் என்பதை அறிந்துகொள்
அவள் அழகை பற்றி நான் சொன்னதெல்லாம் இப்போது அவள் என்னை பிரிந்த சோகத்தில் மாறியிருக்கலாம், நான் அவளோடு வாழ்ந்த காலத்தில் கண்ட அழகைத்தான் உன்னிடம் சொன்னேன், ஒருவேளை இப்போது இந்த பிரிவு அவளை உருகுலைத்திருக்கலாம்
அழகான தாமரை பனியால் உருகுலைந்து போவதை போல அவள் குலைந்திருக்கலாம், அதனால் அவளை வேறு யாரோ என எண்ணி நீ கடந்திவிட கூடாது, நன்றாக உறுதிசெய்துகொள் மேகமே
அதற்கும் ஒரு வழி சொல்கின்றேன் கேள்
மேகமே, அவள் என்னை பிரிந்த சோகத்தில் அவள் நிறைய புலம்பி கண்ணீர் வடித்திருப்பாள், கண்கள் அதனால் வீங்கி இருக்கும்
அவள் அழுகையின் வெப்பமான மூச்சு பட்டு அந்த சிவந்த உதடுகூட மாறியிருக்கும், சிகை அலங்காரம் செய்யாமல் இருப்பாள் அதனால் கேசம் கலைந்து அவள் முகத்தை மூடியிருக்கும்
கவலை தோய்ந்த அந்த முகத்தை அவளின் கை தாங்கிகொண்டிருக்கும்
அழகான நிலவினை நீ மறைக்கும்போது அதன் வெளிச்சம் மங்கும் அல்லவா? அப்படி அவள் முகமும் ஒளிமங்கி இருக்கும், அந்த கோலத்திலும் அவள் இருப்பாள் அதையும் கவனத்தில் எடுத்து கொள்
இன்னும் சொல்கின்றேன் கேள்.
மேகமே, அவள் என் பிரிவினை தாங்கமாட்டாள், நான் விரைவாக வந்துசேர வேண்டி தன் இஷ்ட தெய்வத்திடம் பூஜை செய்து கொண்டிருப்பாள்
நான் அவளை பிரிந்து வாடி மெலிந்திருப்பேன், அதனால் இப்போது இப்படித்தான் இருப்பேன என என் சித்திரத்தை அவளே ஊகித்து வரைந்து கொண்டிருப்பாள்
எங்கள் வீட்டில் வளரும் மைனாவிடம் “அன்பின் சுவை அறிந்த மைனாவே, அவருக்கு நீ மிகவும் பிரியமான மைனா அல்லவோ, அவர் இல்லாத வீட்டில் அவரை தேடுகின்றாயோ?” என் தன் மனதினை போல மைனாவும் என்னை தேடும் என அதனோடு பேசிகொண்டிருப்பாள்
அந்த கோலத்திலும் நீ அவளை காணலாம், இன்னும் உனக்கு சொல்வேன்
நான் இல்லா பிரிவில் அவள் தன்னை அலங்கரிக்கமாட்டாள், நன்றாக உடுத்தமாட்டாள், அழுக்கான உடையுடன் தலைஅலங்காரமில்லாமல் நகைகள் பூட்டாமல் பூசூடாமல் இருப்பாள், அவள் ஆடையும் மாசுபடிந்திருக்கும்
அந்நிலையிலும் வீணையினை மடியில் ஏந்தி என்னை நினைந்து அவளாக இயற்றும் பாடலை உரக்க பாட முயல்வாள்
ஆனால் பாதியிலே முடியாமல் ஓ என அழுது நிறுத்துவாள். பாடலும் இசையும் மனதின் உணர்ச்சியினை கூட்டும் அல்லவா? அந்த நிலையில் அவள் உடைந்து அழுவாள்
அவளின் கண்ணீர் துளிகள் பட்டு வீணையின் தந்திகள் பாழாகும், இசை மங்க தொடங்கும். உடனே பதறுபவள் அவசரமாக அதனை துடைப்பாள், மீண்டும் தந்திகளை சரி செய்து பாட துவங்குவாள்
ஆனால் பாடலை எங்கே நிறுத்தினோம் எங்கிருந்து தொடங்கவேண்டும் என்பது அவளுக்கு மறந்துவிடும், அப்படியான குழப்பமான நிலையில் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி இப்படி சிக்கிகொள்வாள்
இப்படியான காட்சியிலும் நீ அவளை காணலாம் மேகமே. அவள் நான் சொன்ன எந்த கோலத்தில் இருந்தாலும் அவளை சரியாக அடையாளம் கண்டுகொள்”
(தொடரும்…)