காளிதாசனின் மேகதூதம் : 12
பதினோறாம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே, நீ என் காதலி தூங்கிகொண்டிருக்கும் போது சென்றால் அவளை எழுப்பிவிடாதே, அவள் விழிக்கும் வரை அருகில் காத்திரு. காரணம் கனவில்தான் அவள் என்னை கண்டு என் கழுத்தினை அவள் தன்கொடி போன்ற கரங்களால் வளைத்து தழுவி மகிழ்ந்து கொண்டிருப்பாள், அவள் மகிழ்வாக இருக்கும் மிகச்சிறிய நேரம் அதுதான், அதனை நீ கெடுத்துவிட கூடாது அதனால் பொறுமையாக காத்திருப்பாய்.
மேகமே அவள் கண்விழிக்கும் நேரம், நீ உன் நீர்திவலைகளுடன் கூடிய குளிர்ந்த காற்றை அவள் முகத்தில் தெளிப்பாய், அந்த குளிர்காற்று காட்டு மல்லிகை மொட்டை மலரவைக்கும் அல்லவா? அப்படி அவள் முகமும் மொட்டுபோல் உன் குளிர்காற்றால் மலரும்
கண்திறப்பவள் சாரளம் அருகில் இருக்கும் உன்னை தன் அழகான விழிகளால் காண்பாள். அவள் தன்மானம் மிக்கவள், கண்டிப்பானவள், பிழை பொறுக்காதவள். அதனால் நீயும் தயங்காமல் குழம்பாமல் உன்னிடம் தவறேதும் காணாதபடி இனிய மிருதங்கம்போன்ற மெல்லிய கர்ஜனையால் அவளுடன் பேசு
ஆனால் நீ உன் மின்னலை வெளிகாட்டாதே அவள் அஞ்சிவிடுவாள்
மேகமே அவளுடன் நீ என்ன பேசவேண்டும் என்பதையும் நான் உனக்கு உரைப்பேன்
“உயிர்வாழும் கணவனை பெற்றுள்ள நங்கையே” என தொடங்கு. உயிர்வாழும் கணவன் என்பதை கேட்டவுடன் அவள் மிகுந்த நம்பிக்கை கொள்வாள், அதனால் நீ அந்த வரியினைத்தான் முதலில் சொல்ல வேண்டும்
அப்படியே சொல் “உயிர்வாழும் கணவனை பெற்றுள்ள நங்கையே, அவர் சொன்ன நற்செய்தியினை மனதில் இறுக்கமாக பெற்று உனக்கு அறிவிக்க வந்துள்ள தூதன் நான்
நான்மட்டும் இந்த தூதை சுமந்து வரவில்லை , மேகங்களின் வேலைகளில் இதுவும் ஒன்று, பிரிந்திருப்போருக்காக தூது செல்லும் நற்காரியங்களை செய்கிறோம், பொருளீட்ட தொலைதூரம் செல்லும் கணவர்கள் தங்களை பிரிந்து ஒற்றை சடையிட்டு கொண்டு காத்திருக்கும் காதலியினை விரைவில் சந்தித்து அவள் கூந்தலை அலங்கரிக்க விருப்பத்தோடு இருப்பார்கள்
ஆனால் எதிர்பாரா தாமதங்கள் இதர காரணங்களால் அவர்கள் வேலைகளில் மூழ்கியிருப்பார்கள், அவர்களுக்கு எங்கள் இடியோசை மூலம் கர்ஜித்து மழைக்காலம் நெருங்குகின்றது உங்கள் துணையிடம் செல்லும் காலம் வந்துவிட்டது என அவர்களுக்கு நினைவு படுத்துபவர்கள் நாங்கள்தான்
நாங்கள் பிரிந்திருபவர் துயரை அறிவோம், முடிந்த உதவியினை செய்வோம், அப்படிபட்ட மேகங்களில் ஒருவனான நான் உனக்கும் நல்ல செய்தி கொண்டுவந்துள்ளேன்” என சொல்
மேகமே, நீ இப்படி சொன்னதும் அவள் நிலை என்னாகும் தெரியுமா? அன்று அசோகவனத்திலே சிச்சபா மரத்தின் மேலிருந்து அனுமன் நல்ல செய்தி சொன்னதும் தலைதூக்கி பார்த்தாளே சீதை, அப்படி அவள் ஜன்னலோரம் நிற்கும் உன்னை பார்த்து மகிழ்வாள்
பிரிந்த கணவனிடமிருந்து ஒரு செய்தி கிடைப்பது பெண்களுக்கு அளப்பரிய இன்பத்தை கொடுக்கும், அது வறண்ட தொண்டைக்கு நீர் கிடைத்தது போன்ற நிறைவை கொடுக்க்கும்
அது கணவனை நேரில் சந்தித்தால் என்ன மகிழ்ச்சி தருமோ அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்த மகிழ்வில் பெரிய பங்கினை வழங்கும்
மேகமே, நான் முன்பே உன்னிடம் வேண்டியபடி, உன் பரோபகாரத்தில் மகிழ்ந்தவனாய் நான் சொன்ன செய்திகளை அவளிடம் சொல்ல க்டவாய்
“கணவனை பிரிந்திருக்கும் அபலையே, உன்னை பிரிந்து ராமகிரி மலையில் இருக்கும் உன் கணவர் மிக்க நலமாக உள்ளார், அவரை குறித்து அஞ்சவேண்டாம் , அவர் உன் நலம் அறிய ஆவல் கொண்டார்” என்பதை சொல்
மானிட வாழ்வு நொடியில் மாறுமல்லவா?, கண்மூடி திறப்பதற்குள் ஏதேதோ நடக்கும் அல்லவா? அதனால் மேகமே முதலில் நலம் விசாரிப்பதே முதன்மையானது
மேகமே, அவளிடம் சொல் “தொலைதூரத்தில் உள்ள உன் காதலன் இங்கு வரமுடியாதபடி விதி அவன் பாதையினை அடைத்துள்ளது, அவனாக வராமல் இருப்பானா? அவன் விதி அவனை வரவிடவில்லை
அவன் பிரிந்திருந்தாலும் மனதால் உன்னை நினைந்து, மனதாலும் நினைவாலும் உன்னோடு ஒன்றிவிட முயல்கின்றான். மானசீகமாக உன்னை இறுக தழுவுகின்றான்
அவன் உடல் விரகத்தால் மெலிந்துவிட்டது, வெப்பமுற்ற அவன் உடலின் கண்கள் நீர் வகுத்து நிற்கின்றது, அவன் பெரும் வேதனை கொண்டிருக்கின்றான்
அவனைபோல் விரகத்தால் மெலிந்து வெம்மையான உடல்கொண்டு கண்களில் நீர்வடிய ஏங்கி நிற்கும் உன்னை பல வகை கற்பனைகளால் தன்னோடு ஐக்கியமாக்க தழுவுகின்றான்
அவன் உன் நினைவிலே வாழ்கின்றான், அந்நினைவில்தான் அவன் உயிர் உடலில் தங்கியிருக்கின்றது
நங்கையே, உன் நம்பிக்கையின பெற அவன் எனக்கு சொன்ன ரகசியத்தை சொல்கின்றேன், அவனுக்கு எப்போதும் உன் முகத்தோடு முகம் உரசி ஸ்பரிசித்துக் கொண்டிருக்க பெரும் விருப்பமாம். ஆனால் அதை எப்போதும் செய்யமுடியாது குறிப்பாக பலர் இருக்குமிடத்தில் செய்தால் சபலபுத்திக்காரன் காமாந்தகாரன் என பழிப்பார்கள் அல்லவா?
அதனால் பலர் இருக்கும் இடத்தில் கூட உரக்க சொல்லவேண்டிய விஷயத்தையும் உன் கன்னத்தில் உரசியபடி உன் காதோரம் ரகசியம் போல் பேசுவானாம், அது ஏதோ ரகசியம் பேசுவது போல மற்றவர் கண்ணுக்கு பட்டாலும் அவன் உன் முகத்தோடு ஸ்பரிசிக்க விரும்பினான் என்பது இருவருக்கு மட்டும்தான் தெரியுமாம்
அபலையே, அப்படி உன்னை பொதுவெளியில் கூட பிரியமனமில்லாமல் ஸ்பரிசித்து கிடந்தவன் நிலை இப்போது எவ்வளவு கொடுமை ஆயிற்று?
நீ பேசினால் கூட அவன் காதில் விழாதபடி, உன் கண்களால் காணமுடியாதபடி தொலைதூரத்தில் கிடக்கின்றான், உன்னை பிரிந்த அந்த வலியினையெல்லம் , உன் மேல் கொண்ட அன்பினையெல்லாம் சிறந்த சொற்களில் கொட்டி என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கின்றான்
அதை சொல்கின்றேன் கேள்” என சொல்லிவிட்டு நான் சொல்லும் இந்த செய்தியினை சொல்வாயாக
“என் அன்பே, நான் உன்னை காண விளைகின்றேன், பிரியங்கு கொடிகளில் உன் மேனி அழகையும், மான்களின் மருண்ட கண்களிலே உன் கண் அழகையும், மயிலின் பளபளக்கும் நீண்ட தோகையில் உன் கூந்தல் அழகையும், சந்திரனில் உன் முக பிரகாசத்தையும், நதிகளின் சிற்றலைகளில் உன் புருவ அழகையும் காண விளைகின்றேன்
ஆனால் எங்குமே உன்னை முழுமையாக காணமுடியவில்லையே , நான் என்ன செய்வேன்?”
அன்பே, என் விதி உன்னிடமிருந்து என்னை பிரித்து இங்கு இழுத்துவந்து போட்டது, ஆனால் நீ என்மேல்தான் கோபத்தில் இருப்பாய்
அதனால் பாறையில் உன் சித்திர்ம் வரைந்து உன் காலடியில் நான் மன்னிப்பு கேட்பதுபோல் வரைந்து வைத்து அமைதி கொள்ள விரும்பினேன்
ஆனால் தாதுபொடிகளால் உன் உருவத்தை வரையும்போதே என் கண்களில் நீர்குவிகின்றது, நான் மறைக்க முயன்று தொடர்ந்து வரைய விரும்பினாலும் அந்த கண்ணீர் பார்வையினை மறைக்கின்றது
அதையும் மீறி வரைய முயன்றால் சித்திரம் அழிகின்றது, என் பிரியத்துகுரியவளே என்னையும் உன்னையும் சித்திரத்தில் கூட சேர்த்துவைக்க இந்த விதிக்கு விருப்பமில்லையே, அந்த பொல்லாவிதி எப்படி நம்மை சந்தித்து சேர்ந்துவாழ விடும்?
என் அன்பே, நான் உன்னை கனவில் மட்டும் காண்கின்றேன், அப்படியே கைகளை நீட்டி உன்னை அணைத்து தழுவி இறுக்கி கலந்துவிட துடிக்கின்றேன்
ஆனால் வெறும் காற்றில் நீளும் என் கைகளையும், மகா துயரில் இருக்கும் என்னையும் கண்டு வனதேவதைகள் கண்ணீர் சிந்துகின்றான், அவை அழகிய பெரிய முத்துக்களாக மரத்தின் இலைகளில் திரண்டு பாரம் தாங்காமல் தளிர்கள் மேல் விழுந்து வடிகின்றது”
(தொடரும்..)