காளிதாசனின் ரகுவம்சம் : 02

காளிதாசனின் ரகுவம்சம் : 02

அந்த திலீபன் விசாலமான மார்புடனும் அது நிறைய அன்பும் கருணையும் வீரமும் நிறைந்தவனாய் இருந்தான், பருத்த தோளும் நீண்ட கைகளையும் கொண்ட அவனின் உருவமானது ஷத்திரிய தர்மம் தன் குடிகளை காக்க சரியான உருகொண்டு வந்தாக கம்பீரமாக இருந்தது.

இவ்வவுலகில் எல்லாவற்றையும் விட சக்திமிக்கதும், எல்லாருக்கும் சவால் விட்டு புன்னனைப்பதும், ஒளியால் நிறைந்ததும், எல்லா உயிர்களையும் வாழவைப்பதும், ஞானியரின் முக்திக்கு வழிசெய்வதும், எல்லா நன்மைகளின் தொடக்கமும், யாராலும் வெல்லப்படமுடியாததும், இந்தப் பூமியினை ஆக்கிரமித்து நிற்பதுமான மேருமலையாக அவன் தனிப்பெரும் சக்தியாக அதிகாரம் செலுத்தினான்.

அவன் உருவமும் முகமும் மிகுந்த தேஜஸ் கொண்டு சிறந்திருந்தது, அந்த உயர்ந்த அழகான தோற்றம் போலவே அவனுக்குச் சிந்தையும் எண்ணமும் அழகாகவும் உயர்ந்ததாகவும் இருந்தது. அந்த உயர்ந்த சிந்தையால் அவன் சாஸ்திரமெல்லாம் கற்று நல்லறிவு அத்தனையும் நிரம்பப் பெற்றிருந்தான். அந்த அறிவினைக் கொண்டு சிறந்த அரும்காரியம் அனைத்தும் முயற்சித்தான், அவன் முயற்சி எல்லாம் பலித்ததால் உலகம் பயனடைந்தது.

அவனின் அழகான உருவம், உயர்ந்த சிந்ததனை, தூய அறிவு, ஓயாத முனைப்பு என எல்லாம் ஏற்றத் தாழ்வின்றி சரியாக அவனில் கலந்திருந்தது. இறைவனால் இரவு பகல், மழை வெயில், குளிர் வெப்பம் என எல்லாம் சரியாக கலந்து இந்தப் பூமி காக்கப்படுவது போல அவன் குடிகளைக் காத்துக் கொண்டிருந்தான்.

திலீபன் குற்றம் செய்தவர்களை தண்டிப்பதில் இரக்கம் காட்டுவதே இல்லை, அப்போது அவன் அஞ்சதக்கவன், அதே நேரம் இல்லாதவர்க்கும் வறியவர்க்கும் அப்பாவிகளுக்கும் அவன் பெரும் இரக்கம் காட்டுபவன், சான்றோர்களை அறிஞர்களை வீரர்களைக் கொண்டாடுபவன்.

அவன் பெரும் கடல்போல் இருந்தான், எந்தக் கடல் திமிங்கலம் சுறா புயல் கொந்தளிப்பு என அச்சம் கொடுக்குமோ அதே கடல்தான் முத்தும் பவளமும் இன்னும் பல செல்வமும் மழைமுகிலும் கொடுக்கும், அது போல் அவன் கொலு வீற்றிருந்தான், எல்லோருக்கும் அவன் அஞ்சத்தக்கவனாகவும் இருந்தான், அதே நேரம் வாழ்வு தருபவனாகவும் இருந்தான்.

அவன் நாட்டின் மக்களும் மனுவின் காலம் முதல் இவன் காலம் வரை முன்னோர்கள் வகுத்த பாதையில் சென்றனர், வண்டிச் சக்கரம் பாதையில் இருந்து விலகாதது போல் சரியான வழியில் நடந்து கொண்டிருந்தனர்.

திலீபன் சாஸ்திரங்களில் பெற்ற பயிற்சியினாலும், ஞானியரிடம் பெற்ற பயிற்சியினாலும் தனது திறமையினாலும் வில்லின் வலிமையினாலும் எல்லாம் சாதித்துக் கொண்டான், அவன் சக்தியற்றவர்களும் எளியவர்களுமான அரசர்களிடம் தன் பலத்தை காண்பிப்பதில்லை, எளியோர் முன் அந்தப் பலம் மிகுந்த‌ சேனைகள் அவனுக்கு வெண்கொடை போல் சாமரம் போல் ஒரு அலங்காரமாய் இருந்தன‌.

ஒரு அரசன் தன் மனதின் திட்டத்தை இரகசிய எண்ணங்களை வெளியிடக் கூடாது, அதனை வார்த்தையிலோ முகபாவங்களிலோ வெளிக்காட்டுதல் கூடாது என்பது இராஜநீதி, எவருக்கும் ஒரு அரசன் தன் மனதை வெளிக்காட்டவே கூடாது என்பது அரசியல் பாடம், திலீபன் மிகத் திறமையாக இருந்தான். ஒரு அரசனின் திட்டம் அது பலனளித்த பின்பே வெளித்தெரியவேண்டும், அந்த வித்தையில் அவன் கைதேர்ந்திருத்தான்.

அவன் தனக்கு அச்சம் தருவது என எதையும் விட்டுவைத்ததில்லை. தன் இளம் வயதிலே தர்மங்களைச் செய்தான் அதற்காகப் பொருள் சேர்த்தான், பொருளை சேர்த்தானே அன்றி அதன் மேல் ஆசை கொள்ளவில்லை. உலகின் எல்லாச் சுகங்களும் அதிகாரமும் அவனுக்கு அடிபணிந்திருந்தன, ஆனால் அவன் அதனில் பற்றுக்கொள்ளவில்லை.

யாரையும் குறை கூறும் தன்மை அவனிடம் இருந்ததில்லை, தன் பகைவர்களை அழிக்கும் பெரும் வல்லமை இருந்தும் அதைப் பிரயோகிக்கவில்லை, பெரும் கொடை செய்திருந்தாலும் பெருமை ஏதும் கொள்ளவில்லை, அவன் அறிவு, பலம், கொடை, கருணை என எல்லாமும் கொண்டிருந்தான். அதே நேரம் மிக நிதானம், பொறுமை , தன்னடக்கம் என எல்லாக் குணங்களும் அவனிடம் மிகுந்திருந்தன‌.

சிறு வயதிலே பெரும் வயதுக்குரிய பக்குவம் அவனிடமிருந்தது. உலக விஷயங்கள் எல்லாம் அவனுக்கு வசப்பட்டாலும் அவன் அதில் ஒட்டவில்லை, ஞான விவாதங்களில் அவன் தேர்திருந்தான், தர்மங்களில் அவன் மனம் கட்டுப்பட்டிருந்தது.

திலீபன் தன் மக்களுக்கு நல்ல நீதிபோதனை தந்து பண்படுத்தினான், அவர்களின் உணவு முதல் மருந்து வரை அவர்களுக்கு நிரம்ப கொடுத்துக் காத்து வந்தான், ஒரு தந்தை தன் குடும்பத்தை காப்பது போல தன் குடிகளை பொறுப்பாய்க் காத்து வந்தான்.

அவன் நாட்டின் மக்களுக்கெல்லாம் தாய் தந்தையர் என்பது வெறும் அடையாளத்துக்கு இருந்தார்களே அன்றி அவர்களின் கடமையெல்லாம் செய்தவன் திலீபனே.

அவன் எல்லாவற்றிலும் அறத்தை கடைபிடித்தான். ஒரு மனிதனின் இன்பங்களான தர்மம், அர்த்தம், காமம், மோஷம் எனும் நால்வகை நிலைகளான, அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கு நிலைகளிலும் சரியாக இருந்தான். அறத்தை பேணினான், பொருளை ஈட்டினான், மனைவியோடு கூடினான், முக்தி நோக்கி நடைபோட்டான்.

அவன் முறையான யாகங்களைச் செய்து இந்திரனுக்கான அவிர்பாகத்தை கொடுத்தான். அதனால் இந்திரன் நல்ல மழையினைக் கொடுத்து அவன் தேசத்தை செழிக்கச் செய்தான், இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி உதவிக்கொண்டார்கள்.

அவன் அரசில் திருட்டு என்பது பழைய குற்றங்களின் பெயராய் இருந்ததே தவிர நடைமுறையில் இல்லை. எல்லோருடைய பொருளும் பத்திரமாய் இருந்தன, அவன் இராஜ்ஜியம் திருட்டு எனும் குற்றத்தை அறிந்ததே இல்லை, இப்படி ஒரு பெரும் புகழை எந்த இராஜ்ஜியமும் பெற்றதுமில்லை, எல்லோருக்கும் எல்லாமும் இருக்குமிடத்தில் திருட்டுக்கு அவசியம் ஏது?

அவன் தனக்குப் பிடிக்காதவன் காலத்தால் அவசியம் என்றாலோ, அவனிடம் நல்ல குணம் இருந்தால் நோய்பட்டவன் கசப்பான மருந்தை பொறுத்துக்கொள்வது போல் பொறுத்துக் கொள்வான், அதே நேரம் கொடியவன் ஒருவன் திட்டமிட்டு வஞ்சத்துடன் வந்தால் பாம்பு கடித்த விரலை வெட்டுவது போல் இரக்கமின்றி வெட்டி எறிந்தும் விடுவான்.

அவன் பஞ்ச பூதங்கள் மூலமாக கொண்டு பிரம்மன் அவனைச் சிறப்பாக படைத்தது போல் அவன் தன்னில் உள்ள எல்லாமும் மக்கள் பயன்படும்படி வாழ்ந்தான், பஞ்ச பூதங்கள் இவ்வுலக நலனுக்காக இயங்குதல் போல அவனும் இரக்கம், கருணை, அன்பு என மிகுந்து உலக மக்களுக்காகவே வாழ்ந்தான்.

அவனுடைய பரந்த நாட்டுக்குக் கடலே கோட்டைச் சுவராக இருந்தது, அது அழகான எல்லையாகவும் இருந்தது. அவன் ஒரு சாசனமிட்டால் எதிர்த்துச் சொல்ல உலகில் எவருமிலர், அவன் தன் பரந்த இராஜ்ஜியத்தை சிறிய ஊர்போல் மிகத் திறமையாக நிர்வாகமும் செய்து வந்தான்.

சூரியன் உலகின் நீரை உறிஞ்சி தனக்கென எடுக்காமல் மழையாக திருப்பிக் கொடுப்பது போல அவன் மக்களிடம் பெற்ற வரியினை மக்களுக்கே கொடுத்தான். வரி வசூலை கூட பசுவிடம் இருந்து அதற்கு வலிக்காமல் பால் கறப்பதைப் போல மக்களுக்குச் சிரமம் வராதபடி மிகக் கவனமாய் வசூலித்தான்.

(தொடரும்..)