காளிதாசனின் ரகுவம்சம் : 05

காளிதாசனின் ரகுவம்சம் : 05

திலீபன் தொடர்ந்தான், “எனக்கு சுதக்ஷனையிடம் இருந்து எல்லா அம்சமும் நிரம்பிய மகன் பிறவாததால் செல்வமிக்க இந்தப் பூமி என்னை மகிழ்விக்கவில்லை.

என் பித்ருக்கள் நான் பிண்டம் வைத்து அவர்களை வணங்கும்போது எனக்குப் பின் தங்களுக்குப் பிண்டம் வைக்க யாருமில்லை என நான் சிரார்த்தமாக வைப்பதில் கொஞ்சம் உண்டுவிட்டு மீதியினைப் பிற்காலத்துக்காய்ச் சேர்த்து வைக்கின்றார்கள்.

எனக்குப் பின் தர்ப்பண நீர் அவர்களுக்குக் கிடைக்காது என்பதால் என் முன்னோர்கள் மிகுந்த வேதனையுடன் பெருமூச்சு விடுகின்றனர், அந்த உஷ்ணமான மூச்சால் நான் இடும் குளிர்ந்த நீரும் வெம்மையாகின்றது. ஆனாலும், அதனை அவர்கள் பருகுகின்றார்கள்.

முனிவரே, நான் தேவர்களுக்குச் செய்யவேண்டிய எல்லாக் கடமைகளையும் பரிசுத்தமாகச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், அதே நேரம் எனக்குச் சந்ததி இல்லாததால் பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய கடமை பற்றிக் கவலை கொள்கின்றேன். இப்படி ஒருபக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் கவலை எனக் கொண்டு ஒருபக்கம் ஒளியும் ஒருபக்கம் இருளும் கொண்ட லோகலோக மலை போல் ஆகிவிட்டேன்.

ஒருமனிதன் தன் பிறப்பில் தேவர்களுக்குரிய கடன்களை யாகம் மூலமும், ரிஷிகளுக்குரிய கடன்களை சாஸ்திரம் மூலமும், பித்ருன்களுக்கான கடனை சந்ததிகள் மூலமும் தீர்க்கவேண்டும். நானோ மூன்றாம் வகையில் இன்னும் தீர்க்கமுடியாக் கடனைக் கொண்டிருக்கின்றேன்.

தவமும் தானமும் மறுமையில் பலனளிக்கும் நல்ல புத்திரன் இம்மை, மறுமை என இரண்டிலும் பலனளிப்பானன்றோ?

என் காவலரான முனிவரே, நீர் ஆசையாய் நீர்விட்டு வளர்க்கும் மரம் கனிகொடுக்கவில்லை என்றால் வருந்துவீர் அல்லவா? அப்படி உம்மால் காக்கப்படும் நானும் பிள்ளைக்கனி இல்லாதது கண்டு உங்கள் மனம் வருந்துமே?

என் பித்ருக்கடனை நான் எப்படித் தீர்ப்பேன், நதிக்கரை தூணில் கட்டப்பட்ட யானை நீராட விரும்பினாலும் அந்தச் சங்கிலி அதனை விடாததைக் கண்டு வருந்துமே. அப்படி நான் இந்தத் துயரால் கட்டப்பட்டு மனம் வருந்துகின்றேன்.

எனக்குக் காவலும் பலமுமானவரே, இந்தப் பெருந்துயரில் இருந்து நான் மீள எனக்கு நீங்கள் உபாயம் சொல்ல வேண்டும், என் முன்னோர்களெல்லாம் மகிழும் படி ஒரு வழி சொல்ல வேண்டும்.

அவனின் வேண்டுதல் கேட்ட வசிஷ்டர் கண்களை மூடி தியானித்தார். மீன்களற்ற தடாகம் அமைதியாய் இருப்பது போல் பெரும் அமைதியில் மூழ்கினார். மெல்ல அதிகாலையில் இரு சூரியன் உதிப்பது போல் மெல்ல கண் திறந்து சொன்னார்.

“திலீபனே, நீ சொர்க்கத்தில் இந்திரனைச் சந்தித்துவிட்டு திரும்பும் போது அங்குக் காமதேனு நின்று கொண்டிருந்தது, அதை நீ கண்டுகொள்ளாமல் அசட்டுத்தனம் செய்தாய்.

பசுக்களை கடக்கும் போது அவை நம் வலப்பக்கமாய் இருக்கும்படி பார்த்து மரியாதை செய்து நகர்தல் வேண்டும். நீயோ அதனை உதாசீனப்படுத்தினாய், பெரிய இடத்தில் இருப்போர் சறுக்கும் ஒவ்வொரு இடமும் பெரிய பிழையாகும்.

அதனால் அந்தக் காமதேனு உனக்குச் சந்ததியின்றி போவது எனச சாபமிட்டது, அது வாயினால் சாபமிட்டபோதும் ஆகாய கங்கையின் பிரவாகப பெரும் ஒலியால் உனக்கும் உன் தேரோட்டிக்கும் காதில் விழவில்லை.

காமதேனுவினை நீ அவமதித்த காரணத்தால் உனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை, மரியாதைகுரிவர்களை அவமதிக்கும் போது அங்கே நல்ல விஷயமெல்லாம் வருவதற்குத் தடையாகிவிடும்.

நீண்ட நாட்களாக தாமதித்த யாகம் ஒன்றை வருணன் பாதாள உலகில் செய்கின்றான். அவனுக்கு வேண்டியன கொடுப்பத்ற்காக காமதேனு இப்போது பாதாள உலகில் நிற்கின்றது, அங்கே நீ செல்லமுடியாதபடி பெரும் நாகங்கள் வாயிலில் காவல் இருக்கின்றன.

ஆனால், காமதேனுவின் மகள் நந்தினி என் ஆசிரமத்தில் உண்டு. அதனை நீ வணங்கி வந்தால் விமோசனம் பெறுவாய் என்றார். அந்த நந்தினி அப்போதுதான் காட்டில் மேய்ந்துவிட்டு உள்ளே வந்தது.

அது அழகான இளந்தளிர் போல் தன்மையுடன் சிவந்த நிறமுடையது; அதன் நெற்றியில் வெள்ளை நிற முடிகள் இருந்தன; அதன் வெண்ணிற நெற்றி இளம்பிறை போல் அழகுற சரிந்திருந்தது; காண்பதற்கு சிவந்த அந்திமாலையில் பிறை சந்திரனோடு காணப்படும் வானம் போல அது அழகாக இருந்தது.

தன் கன்றைக் கண்டதும் அதன் மடி தானே பால் சுரந்தது, கொஞ்சம் வெதுவெதுப்பான அந்தப் பால் எப்படியானதெனில் யாகத்தின் முடிவில் கொடுக்கப்படும் தீர்த்த ஸ்நானத்தை விடப் பெரும் புண்ணியமானது, எல்லாப் பாவங்களையும் போக்கக் கூடியது, அப்பாலை கொண்டிருக்கும் குடம் போன்ற மடியுடன் நந்தினி வந்து கொண்டிருந்தது.

அது வரும்போதே தன் கால்குளம்பால் புழுதியினைக் கிளப்பியது, அது திலீபன் மேல் பட்டது. சாதாரண பசுவின் கால்குளம்பு புழுதியிலே பெரிய புண்ணியம் உண்டெனும் போது, தேவலோக நந்தினியின் கால் புழுதி எல்லாப் பெரும் சாபமும் போக்கும் தன்மை கொண்டதென்பதால் திலீபன் பெரிதும் மகிழ்ந்தான்.

(தொடரும்..)