காளிதாசனின் ரகுவம்சம் : 10

காளிதாசனின் ரகுவம்சம் : 10

சுதக்ஷனைக் கர்ப்பத்தின் அறிகுறியினைப் பிறர் அறியக் கண்டாள், உலக மக்கள் கண்களுக்கு பூரண சந்திரன் விருப்பமானது போல அரண்மனை மகளிர்க்கு அவள் மகிழ்வானாள், இஷவாகு வம்சம் தொடர்கின்றது என்பதன் அறிகுறியினை அவள் கொண்டிருக்க மன்னனும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

அவள் மெலிந்த தோற்றம் கொண்டாள், பலவீனத்தால் நகைகளை சுமக்க சக்தியற்றவளாய் மங்கலம் கருதி சிலவற்றை மட்டும் சுமந்தாள், லோத்ர மலர்போல் அவள் முகம் வெளிறிற்று, விடியும் காலையின் வானத்தில் நிலவும் விண்மீன்களும் ஒளிகுன்றி போவதைப்போல் அவள் முகம் ஒளிகுறைந்து போனது.

பூமிக்கு அரசனான திலீபன் தனிமையில் அவள் வாயிலிருந்து வரும் மண்வாசனையினை முகர்ந்து மகிழ்ந்தான், மசக்கையால் அவள் மண்ணை உண்ட மனம் அவனை நெருக்கத்தில் மகிழ்வித்தது, கோடையால் வறண்ட நிலத்தில் கார்கால‌ மழைத்துளிகள் விழுந்ததும் வரும் மண்வாசனையால் குதூகலிக்கும் யானைகள் மீண்டும் மீண்டும் மண்ணை முகர்ந்து மகிழ்வதுபோல் அவன் மகிழ்ச்சி பெருகியது.

இந்திரனுக்குச் சொர்க்கம் சொந்தம் என்பதுபோல் திலீபன் மகனுக்கு இந்த மண்ணுலகமெல்லாம் சொந்தம், அதனால் அவன் ஆளப்போகும் மண்ணை அவனுக்கே காட்டும்படி மண்ணை உண்டாள் சுதக்ஷனை, ராணியாய் இருந்தும் அவள் எல்லாப் பதார்த்தங்களையும் தாண்டி மண்ணை உண்டதன் பொருள் வேறு என்ன இருக்கமுடியும்?

மகதராஜனின் மகளான சுதக்ஷனை அவளுக்கு இக்காலத்தில் விரும்பிய எல்லாம் பற்றி நாணத்தினால் தன்னிடம் சொல்லவில்லை என்பதால் அவளின் தோழியான உத்திரகோச தேச மங்கையரிடம் அவளுக்கு வேண்டியன கேட்டுச் செய்யும்படி கேட்டுக்கொண்டே இருந்தான்.

கருவுற்றிருந்த அவள் விரும்பிய அத்தனை பொருட்களும் அவளுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தன, அதெல்லாம் திலீபன் மூலம் வருவதை அவள் உணர்ந்தே இருந்தாள். மிகப்பெரிய வீரனான அவனால் சொர்க்கத்தில் இருக்கும் விஷயங்களைக் கூட கொண்டுவரமுடியும் என்பதால் அவளின் விருப்பமெல்லாம் கண்முன் வடிவாய் வந்தன‌.

கருவுற்றவுடன் மெலிந்து தோன்றிய சுதக்ஷனை கரு வளர வளர அங்கங்கள் பருத்து பொலிவாக மிக அழகாக‌த் தோன்றினாள், பருவத்தால் பழைய இலைகள் நீக்கி புதிய தளிர்களுடன் ஜொலிக்கும் கொடிபோல் அவள் தேஜஸுடன் மின்னினாள்.

நாட்கள் செல்ல செல்ல மிகப் பருத்தவையும் சிறிய கருமை நிறம் கொண்டதுமான அவளின் தனங்களின் அழகு வட்டமான அழகிய தாமரை மொட்டின் மேல் அமர்ந்திருக்கும் கருவண்டின் அழகை வென்றது.

கர்ப்பவதியான தன் மனைவியினைப் பொக்கிஷத்தை உள்ளே வைத்து நீலநிற ஆடைகொண்ட பூமி போலவும், நெருப்பினை உள்ளே வைத்திருக்கும் வன்னிமரத்தை போலவும், தன்னுள் நீரை மறைத்திருக்கும் சரஸ்வதி நதிபோலவும் கருதினான் திலீபன். சூரியனைப் போன்றவனும், தூய அறிவு கொண்டவனும், மாசு அணுகா நெருப்பாய் இருப்பவனுமான மகனைத் தன்னுள் கொண்டிருக்கின்றாள் அவள் எனக் கண்போல் காத்துவந்தான்.

மிகப் பெரிய ஆற்றல் கொண்ட அந்த திலீபன் மனைவியின் ஆசைக்கும் அவள் மனவோட்டத்துக்குமான வகையில் எல்லாத் திசையிலும் பரந்திருக்கும் தன் பெரும் செல்வத்தைக் கொண்டு அவளின் மகிழ்ச்சிக்காய் எல்லாச் சடங்கு சம்பிரதாயங்களையும் சரியாகச் செய்தான், யாகத்தால் மகிழும் தேவர்களைப் போல அவனின் சடங்குகளால் மகிழ்ந்தாள் சுதக்ஷனை.

அவளின் மாளிகைக்கு அவளை அவன் காணவந்தபோது அவள் மிகச் சிரம்பட்டு எழுந்தாள், அவளால் சரியாக எழமுடியவில்லை எனும் வேதனையினை அவள் கண்களில் தெரிந்த திலீபன் புன்னகைத்தான். காரணம், உலகாளும் குழந்தை திக்பாலகர்களின் அம்சம் என்பதால் அது கனமாயிருக்கும் என்பதை அவன் அறிந்தவனாயிருந்தான்.

பத்தாம் மாதம் நெருங்கும்போது மகப்பேற்றில் திறமையானவர்களும் நம்பிக்கைகுரியவர்களுமான மருத்துவச்சிகள் இன்னும் இன்னும் பரபரப்பானார்கள், திலீபனோ மழைக்காலம் நெருங்கியதும் மேகம் சூழ்ந்த வானத்தை மக்கள் ஆவலாய் எதிர்பார்ப்பது போல் நல்ல செய்திக்காய்க் காத்திருந்தான்.

இந்திராணிக்கு ஒப்பானவளான சுதக்ஷனை ஐந்து கிரகங்கள் உச்சநிலையில் இருக்கும்போது பெற்றெடுத்தாள், இவை ஐந்தும் சூரியன் இருக்குமிடத்துக்குத் தொடர்பில்லாததால் மிக்க சக்தியுடையதாய் இருந்த வேளையில் பெற்றெடுத்தாள், பிரபு சக்தி, மந்த்ர சக்தி, உத்சாஹ சக்தி எனும் மூன்று சக்திகள் ஒருசேர பெற்றவனைப் பெரும் செல்வமாகப் பெற்றாள்.

(பிரபு சக்தி என்றால் வலிமையான அரசக்குடி பிறப்பு, மந்திர சக்தி என்றால் அறிவார்ந்த மந்திரிகள் கிடைக்கும் யோகம், உத்ஸாக சக்தி என்றால் மிகுந்த மனோபலம் கொண்டு உற்சாகமாய்ச் செயலாற்றும் மனோவேகம், இந்த மூன்றும் கலந்தவனே பெரிய மன்னனாக பிரகாசிக்க முடியும்)

அக்குழந்தை பிறந்த நேரம் வானின் திசைகளெல்லாம் தெளிவாக இருந்தது, காற்று மெல்ல சுகமாக‌ வீசிற்று, யாகத்தின் அக்னி எழுந்து அவிர்பாகத்தை ஏற்றுக்கொண்டது, எல்லாச் சுபசகுனங்களும் கட்டியம் சொல்ல உலகுக்கே நன்மை விளைவிக்கும் படி அக்குழந்தை பிறந்தது.

குழந்தையின் ஒளி அது படுத்திருந்த படுக்கையினைச் சுற்றி வீசிற்று, அந்த ஒளியால் அறையில் ஏற்றப்பட்டிருந்த தீபங்கள் கூட ஓவியத்தில் இருக்கும் தீபத்தின் படங்கள் போல் பிரகாசம் குன்றிப்போயின‌.

(தொடரும்..)