காளிதாசனின் ரகுவம்சம் : 21 to 25
காளிதாசனின் ரகுவம்சம் : 21
ரகுவின் மகன் அஜய் சூரிய குலத்தின் மரபுப்படி எல்லாக் கலைகளிலும் தேர்ந்து வளர்ந்தான், காட்டில் முதிய யானை தடம்பற்றி நடக்கும் குட்டியானைபோல் தடம் தப்பாமல் நடந்து வளர்ந்தான், காலம் அவனை விரைவில் வாலிபனாக்கிற்று.
காதல்கொண்ட பெண் தன் காதலனை அடைய பெரும் ஆசை கொண்டிருந்தபோதும் தகப்பன் உத்தரவினை எதிர்பார்ப்பது போல ராஜலஷ்மி இஷ்வாகு வம்ச அரியணை மூலம் அவனை அடையவிரும்பிய நிலையில் ரகுவின் உத்தரவினை எதிர்பார்த்து நின்றாள்.
அந்நேரம் ஷத்திரிய வம்சத்தில் முக்கியமானவனும் விதர்ப்ப நாட்டு அரசனுமான போஜ ராஜன் தன் தங்கை இந்துமதியின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும்படி அஜய்க்கு ஓலை அனுப்பினான்.
போஜனின் சம்பந்தம் தனக்கும் தன் குலத்துக்கும் பொருத்தமானது என்பதையும் அஜய் திருமண வயதை அடைந்துவிட்டான் என்பதையும் உணர்ந்த ரகு, பெரும் சேனையுடனும் அலங்காரத்துடனும் அஜயை அங்கு அனுப்பிவைத்தான், தன் வீட்டு கன்று காளையானது என்பதை நம்மைவிட அண்டைவீட்டார் அதிகம் கவனித்திருப்பர் என்பதுபோல் அஜய் அரசுக்குரிய பருவமடைந்ததை அப்போது அவன் உணர்ந்து கொண்டான்.
அஜய் சுயம்வரத்துக்குச் செல்லும் வழியெங்கும் அரசர்கள் அவனுக்குரிய சௌகரியங்களைச் செய்தார்கள், அவனின் பிரயாண வழியெங்கும் கூடாரம் அமைத்து படுக்கை விரித்து எல்லா வசதியும் செய்து கொடுத்தார்கள், இதனால் அவன் காட்டில் பயணிப்பதாய் உணராமல் பட்டணத்துக்குள் பயணிப்பதை போல இயல்பாய் விளையாடியபடி சென்றான்.
மிக வேகமாக நகர்ந்த அவன் சேனை நர்மதைக் கரையில் ஓய்வெடுத்தது, குளிரும் ஈரமும் நிரம்பியபடி நர்த்தமால மரங்களை தழுவி வந்த நதிக்காற்று அவர்களைத் தழுவி அவர்கள் மேல் படிந்த புழுதி எல்லாம் போக்கி நல்ல ஓய்வினைக் கொடுத்தது.
அந்த நதியில் வண்டுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன, அதைவைத்தே நீருக்குள் ஒரு யானை மூழ்கியிருப்பதை அஜய் ஊகித்தான், வண்டுகள் மதஜலம் ஒழுகிய அந்த யானை நீருக்குள் மூழ்கிய இடத்தில் அந்த வாசனைக்காக வட்டமிட்டுக் கொண்டிருந்தன, அஜய் ஊகித்தபடியே கரிய குன்று நதியினின்று எழுவது போல் அந்த யானை எழும்பிற்று, அப்போது அதன் மதநீர் வழிந்த கன்னங்கள் சுத்தமானதால் வண்டுகள் தடுமாறின.
யானை எழும்பிய இடம் செந்தூர நிறமாக கலங்கிற்று, அதன் தந்தங்களில் கீறல் இருந்து நீல நிறம் தெரிந்தது, அதன் வாயில் கற்கள் கீறிய தடம் இருந்தது, இதனால் அந்த யானை நதியில் மூழ்குமுன் அருகிருந்த மலைச்சரிவின் செம்மண்ணில் தன் தந்தத்தால் மோதி விளையாடிற்று என்பதையும் அவன் அறிந்து கொண்டான்.
அப்படி எழுந்த யானை தன் துதிக்கையினை மடக்கியபடி ஆட்டியபடி வேகமாக கரையினை நோக்கி வந்தது, தடுப்புகளை உடைத்து முன்னேறும் போர்கள யானைபோல் அது கரையினை உடைத்து வந்தது, அப்போது எழுந்த பெரும் அலைகள் யானைக்கு முன் கரையினைத் தொட்டன.
நதியின் பாசிகளைக் கொத்தாக தன் மேல் கொண்ட யானை சங்கிலியினை உடைத்துவரும் அரண்மனையானைபோல் வேகமாக வந்தது, அதன் வால் உயர்ந்திருந்தது, அதன் ஆவேசத்தை காட்டிற்று.
குன்றுபோல் அசைந்துவந்த யானையின் கன்னங்களில் முன்பு வடிந்து நின்ற மதநீர், அஜய் சேனையின் யானைகளைக் கண்டதும் மீண்டும் பெருகி ஒழுகிற்று, அதன் மதம் அதிகமாயிற்று.
வானம் இடிந்ததுபோல் பிளிறிக் கொண்டும், ஏழலைபால் மரத்தின் மணம் போல் மதநீரின் மணத்தை பரப்பிக்கொண்டும் ஓடிவந்த அந்தக் காட்டுயானையினைக் கண்டு துஷ்டர்களைக் கண்டு ஒதுங்கி ஓடும் நல்லவர்களைப் போல அஜய் சேனையின் யானைகளும் குதிரைகளும் கலைந்து திசைக்கொன்றாய் ஓடின, பாகன்களின் முயற்சியெல்லாம் அங்கு வீணாயிற்று.
காட்டுயானையின் மூர்க்கத்தைக் கண்டு சேனை கலங்கிற்று, அது தேர்களை முறிக்கத் தொடங்கி மிரட்டத் தொடங்கும்போது வீரர்கள் பணிப்பெண்களை இதர பெண்களைக் காக்கப் போராடினார்கள், இதைக் கண்ட அஜய் எழுந்தான்.
ஆனால், வாழவேண்டிய அரசன் போர்க்காலம் தவிர ஒரு யானையினைக் கொல்லக் கூடாது எனும் சாஸ்திரம் இருப்பதால் அவன் அதனைத் திசை திருப்ப விரும்பி, தன் வில்லில் இருந்து ஆபத்தில்லாக் கணை ஒன்றை அதன் மதகத்தில் எறிந்து அடித்தான்.
அந்நொடி யானை மறைந்து பெரும் வெளிச்சம் உண்டாயிற்று, அஜயும் அவன் சேனையும் அதனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒளியின் நடுவில் ஒரு உருவம் தோன்றிற்று, அதன் கீர்த்தியும் அழகும் கலையும் அது கந்தர்வ உருவம் என்பதைச் சொல்லிற்று.
அஜயும் அவன் சேனையும் கந்தர்வனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அவன் தேவலோகத்தில் இருந்து பெற்ற மலர்களை அஜய்மேல் தூவிப் புன்னகைத்தான், அவன் பற்களில் இருந்து வந்த ஒளி அவன் அணிந்திருந்த முத்துமாலையின் ஒளியினை விட அழகாக இருந்தது, முத்துமாலை வாய்வரை நீண்டதோ எனும் வகையில் ஜொலித்தது, அந்தக் கந்தர்வன் பேசினான்.
“நான் பிரியதர்ஷன் எனும் கந்தர்வனின் மகன் பிரியவதன் என்பவனாவேன், மிகுந்த கீர்த்தியுள்ள நான் மதங்க முனிவரின் தவத்தோடு விளையாடினேன். அப்போது அவர் என்னை ஆத்திரத்தில் யானையாகும்படி சபித்தார், நான் அவரிடம் பணிந்து கெஞ்சினேன்.
பகலில் வெப்பத்தால் கொதிக்கும் நீர் அந்தியில் குளிர்வது போல் அவரும் மனம் குளிர்ந்து இஷ்வாகு வம்சத்தில் வரும் ஒருவன் உன்னை இரும்பு அம்பால் தாக்கும்போது நீ சாபம் நீங்குவாய் என எனக்கான சாபம் நீங்கும் காலத்தையும் சொன்னார். அந்த நன்னாள் இன்றே, அதை நான் உம்மால் அடையப்பெற்றேன்.
நெடுநாட்களாக நான் சுமந்த சாபத்தை இன்று நீர் உடைத்துப்போட்டு எனக்கு விடுதலை கொடுத்தீர், உமக்குப் பெரிய பிரதி உபகாரம் செய்யாவிடில் நான் கந்தவ்ர்வன் என்பதில் அர்த்தமே இல்லை.
உமக்கு நன்றிக்கடனாக நான் கந்தர்வர்களின் ஆயுதமான சம்மோகனாஸ்திரம் எனும் அஸ்திரத்தை உமக்குக் கொடுப்பேன், அதனைச் செலுத்தவம் திரும்ப எடுக்கவும் இரு மந்திரங்கள் உண்டு, அதையும் உமக்கு உரைப்பேன். இந்த அஸ்திரம் எதிரிகளை அப்படியே தூக்கத்தில் கட்டிப்போடும் வல்லமை மிக்க ஆயுதம், இது எவன் கையில் இருக்குமோ அவன் வெற்றி ஒன்றையே காண்பான்.
நீர் சூர்யகுல அரசவம்சத்தவர், அதனால் நீர் அடித்துப்போட்ட ஒருவனிடம் இருந்தே ஒன்றைப் பெற தயக்கம் காட்டுவீர் என்பதையும் நானறிவேன், நல்லோர் குணம் அது. நீர் என்னைக் கொல்லாமல் என் மேல் கருணைக் காட்டீனீர். அதனால் இதனை நீர் மறுக்காமல் ஏற்கவேண்டும், நீர் இதனை ஏற்காவிட்டால்தான் நான் மிகுந்த துயரம் கொண்டவனாவேன் என்றான்.
அரசர்களில் சிறந்தவனும் அஸ்திர ஞானம் அனைத்தும் அறிந்தவனுமான அந்த அஜய் காந்தர்வனின் அன்புக்குக் கட்டுப்பட்டான், தூய்மையான நர்மதை நதியின் நீரால் சில சம்பிரதாயங்களைச் செய்தபின் கிழக்கு நோக்கி அமர்ந்து சாபம் நீங்கிய கந்தர்வனிடமிருந்து அந்தக் கணையினை மந்திரங்களுடன் பெற்றுக்கொண்டான்.
அந்நேரமே நண்பர்களான இருவரும் அன்போடு உறவாடினர், பின் கந்தர்வன் தன் நகரமான அளகாபுரி நோக்கிச் செல்ல, அஜய் விதர்ப்ப நாட்டை நோக்கிச் சென்றான், நல்ல அரசனான போஜன் ஆள்வதால் அந்நாடு செல்வமும் அழகுமிக்கதாய் ஜொலித்தது.
அஜய் வருகின்றான் எனக் கேள்விபட்டதும் பூரண சந்திரன் வரும் பௌர்ணமி காலத்தில் கடல் அலைகள் பொங்கி சந்திரனை வரவேற்பது போல, தன் திரண்ட சேனையுடனும் பரிவாரங்களுடனும் அவனை வரவேற்க ஆர்பரித்து எதிர்க்கொண்டு சென்றான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 22
அஜய் முன் தன் வெண்கொடை, சாமரம், பட்டத்து யானை என எல்லாமும் கொண்டுவந்து அரச மரியாதையுடன் பணிந்தான் விதர்ப்ப நாட்டு மன்னன் போஜன், அவன் அஜயை மிகப் பணிந்து வரவேற்ற காட்சியானது இந்த விதர்ப்பநாட்டுக்கு அரசன் அஜயா இல்லை போஜனா எனும்படி இருந்தது.
ஆனாலும் தான் இங்கே விருந்தினன் என்பதை தன் மிகப் பெருந்தன்மையாக நாகரீகமான அணுகுமுறையில் அழகாய்க்காட்டினான்.
அஜயினை அப்படி மிக உயர்வான வகையில் வரவேற்ற போஜன் அவனுக்குரிய மாளிகைக்கு அழைத்து வந்தான், அது இரு புறமும் மங்கலமான பூரண கும்பங்கள் வைக்கப்பட்ட மாளிகையாய் இருந்தது, அதனுள் அஜய் வந்த அழகான காட்சியானது அழகில் சிறந்த மன்மதன் வாலிபபருவத்தை எட்டியதுபோல் மிகப் பூரணமாய் இருந்தது.
அவன் அந்த மாளிகையில் தங்கியிருந்தாலும் அவன் நினைவு மறுநாள் நடக்க இருந்த சுயம்வரத்திலே இருந்தது, பல நாட்டு இளவரசர்கள் கலந்துகொள்ளப் போகும் அந்தச் சுயம்வரத்தில் அவள் தனக்கு மாலையிடுவாளா இல்லையா என்ற கவலை அவனுக்குள் எழுந்தது.
அந்த இளவரசி இந்துமதி மிக்க அழகி, பெண்களுக்குள் ரத்தினம் போல் அவள் மிகுந்த தனித்துவமான அழகைக் கொண்டவள், அவளைக் பற்றிய எண்ணத்திலே அவனுக்கு நெடுநேரம் உறக்கம் வரவில்லை, கணவனின் கருத்தை அறிய விரும்பும் மனைவி தயங்கி தயங்கி அவனிடம் வருவது போல் தூக்கம் மெல்ல மெல்ல அவனிடம் வந்தது.
காலையில் அவனை அரண்மனையின் இளம் பாடகர்கள் இன்னிசைப் பாடி துயில் எழுப்பினார்கள், திருப்பள்ளி எழுச்சி பாடலைக் கேட்டபடி அவன் எழுந்திருக்கும் போது அவன் உடலின் சந்தனம் கொஞ்சமே படுக்கையில் ஒட்டியிருந்தது, அவனின் காது குண்டலங்கள் அவனின் பெரிய தோளோடு பதிந்து குண்டல தடத்தை இட்டிருந்தன, அவன் சரியாக உறங்கவில்லை என்பதை அவை காட்டின.
அந்தப் பாடகிகள் இனிமையான குரலில் அவனுக்குப் பள்ளிஎழுச்சி பாடல் பாடினார்கள்.
“ஓ அறிஞரே, இரவு சென்றுவிட்டது, காலை வந்து கொண்டிருக்கின்றது எழுந்தருள்வீராக, பிரம்ம தேவன் தன் பூலோக பாரத்தையெல்லாம் உங்கள் ராஜரீகம் எனும் வண்டியில் இந்தப் பிரம்ம முகூர்த்ததில் வைப்பதைப் பாரும். இரு காளைகள் இழுக்கும் வண்டிபோல் நீரும் உம் தகப்பனாரும் சேர்ந்து இழுக்க வேண்டிய பாரம் இது.
உமது தந்தை எழுந்து அதில் பாதியினைச் சுமக்கின்றார், மீதியினைச் சுமக்க நீர் எழுந்து வருவீராக.
இரவு முழுவதும் பிரகாசித்த சந்திரன் தன் ஒளி இழக்கும் காலை இது, அதை அறிந்து எழுந்து வாரும். ஓ இளவரசரே, அந்த லட்சுமியின் நிலைமையினை எண்ணிப் பாரும், அவள் இரவில் குளிரான தாமரையில் வசிக்க முடியாமல் இருக்க இடம் தேடிச் சந்திரனில் குடிகொண்டிருந்தாள், இனி அவனும் காணாமல் போகும் நேரம் உம் முகத்தைவிட்டு அவள் எங்கே குடியிருக்க முடியும்? அவளுக்கு இனி ஒரே புகலிடம் நீரன்றோ?
கணவனைக் கோபித்த பெண் பெற்றோர் வீட்டில் இருந்துகொண்டாலும் கணவனைத் தேடி ஏங்குவதுபோல அந்த லஷ்மி உம் முகத்தில் குடியேற ஆசையாய்க் காத்திருக்கின்றாள். எழுந்துவாரும்.
ஓ இளவரசரே, அந்த லஷ்மி சந்திரன் இல்லாததால் உம்முடைய முகத்தில் குடியேற காத்திருக்கும்போது தாமரைகள் மலரத் தயாராகின்றன, நீர் முந்திக்கொண்டு எழுந்து அவளை ஏற்காவிட்டால் சூரியன் வந்தவுடன் அவள் தாமரைக்குள் குடியேறிவிடுவாள் என்பதைச் சிந்தித்து கொண்டு எழுந்துவாரும்.
நீர் கண்விழித்தால் உமது கண்களில் இரு தாமரைகளைக கண்டு அவள் மகிழ்ச்சியுடன் வருவாளன்றோ?
இஷ்வாகு குலத்தவரே, காற்றுக்கு உமது மூச்சைப்போல் இனிய மணம் தானாக அமையவில்லை எனும் குறை உண்டு, அதனால் விடிகாலை பூத்த மலர்களில் இருந்து நறுமணத்தை எடுத்து நானும் மனமுடையவனானேன் என உம்முன் வந்து நின்று இனிய மணம் பரப்புவதை முகர்ந்து எழும்புவீராக.
ரகுவின் குமாரரே, வெளியில் இரவில் செந்நிற பூந்தளிரில் சிந்திய பனித்துளிகள் அழகான முத்துப்போல் உருண்டு திரண்டிருக்கின்றன, அவைகளின் மெல்லிய வெளிச்சத்தில் செந்தளிர்கள் மெல்ல பிரகாசிக்கின்றன. அவை செந்நிற உதட்டின் மேல்தெரியும் பல் அழகுக்கு ஈடாகாது என்பதைச் சொல்ல எழுந்து வாரும்.
ஓ பராக்கிரமசாலியே, யுத்தகளத்தில் நீர் புகுந்தால் உமது தந்தையின் வரவுக்குக் காத்திராமல் நீர் எதிரிகளை ஒழிப்பது போல் சூரியனின் தேரோட்டியான அருணனே தன் கதிர்களால் சூரியன் வருமுன்னே இருட்டை ஒழித்துக் கொண்டிருக்கின்றான் அதைக் காண எழுந்துவாரும்.
யானைகளின் சேனையினைக் கொண்டவரே, விடிகாலை சூரியனின் செங்கதிர்கள் பட்டு யானையின் தந்தங்கள் செந்நிறம் அடைவதை பாரும், அது செம்மண் நிறைந்த மலைச்சரிவுகளில் அவை தந்தத்தால் குத்தி விளையாடி சிவந்ததை போல் சிவந்திருப்பதை பாரும், அந்த யானைகள் தூக்கம் நீங்கி எழுந்து தங்கள் கால் சங்கிலிகள் ஒலிக்க நிற்கும் அழகைக் காண எழும்புவீராக.
தாமரை இதழொக்கும் கண்களை உடைய ராஜகுமாரரே, உமது சேனையின் குதிரைகள் உறக்கம் நீக்கி எழுந்து எதிரே இருக்கும் உப்புக்கட்டியினை நாவால் நக்கிச் சுவைப்பதை பாரும், அவற்றின் மூச்சுக்காற்றுபட்டு உப்புக்கட்டிகளின் நிறம் குன்றிப்போவதைக் காண எழுந்துவாரும்.
வெற்றிகளின் நாயகரே, உமக்கு நேற்று இரவில் இடப்பட்ட பூமாலை சுருங்கியதால் புஷ்பங்களிடையே உள்ள இடைவெளி பெரிதானதை பாரும். இரவில் பிரகாசமாக எரிந்த விளக்குகள் ஒளிக்குன்றிப்போவதைப் பாரும், காட்டில் மட்டுமல்ல வீட்டில் நீர் வளர்க்கும் கூண்டுக்கிளிகளும் நாங்கள் சொன்ன சொற்களையே சொல்வதைக் கேட்டு எழுந்துவாரும்.
இப்படி அவர்கள் இன்னிசையில் இனியமொழியில் அவனைப்பாடி எழுப்புகையில், கங்கைக் கரையின் மணல் மேட்டில் இரவில் படுத்திருக்கும் திக் கஜங்களில் ஒன்றான பலமிக்க யானை அழகிய அன்னப்பறவைகளின் ஒலி கேட்டு காலையில் எழுவது போல் மெல்ல எழும்பினான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 23
காண்போரை ஈர்க்கும் அழகான கண்களைக் கொண்ட அஜன் துயிலெழுந்து காலையில் செய்யவேண்டிய ஸ்நானம், ஜெபம், தேவபூஜை எல்லாம் முடித்தபின் அலங்காரக் கலையில் தேர்ந்தவர்களிடம் தன்னை ஒப்படைத்து மீண்டபின் மிகுந்த அழகுடையவனாய் சுயம்வர மண்டபத்தை அடைந்தான்.
அங்கே அவன் தங்கள் செல்வமும் வலிமையும் வளமையும் சொல்லும்படி மேடைகளில் மிகச் சிறந்த கலையுடனும் பொருட்களுடனும் அமர்ந்திருந்த இதர நாட்டு மன்னர்களைக் கண்டான், அவர்கள் ஆலயத்தில் தேர் ஏறிச் செல்லும் தேவலோகத்தவர் போல் அழகும் அணிகலமும் உடையவர்களாய் இருந்தார்கள்.
அந்தச் சபையில் சிங்கக்குட்டி பாறைகளின் மேல் ஏறி மலையினை அடைவது போல் கம்பீரமாகப் படியேறி தனக்குள்ள மேடையில் மிடுக்குடன் அமர்ந்தான் அஜன், பரசிவனால் எரிக்கப்பட்டு ரதியின் கண்ணீருக்காக உமையவள் பரிந்துரையால் எழுந்த மன்மதன் இவனோ, அந்த மன்மதன் உருக்கொண்டு வந்துவிட்டானோ எனும்படி மிக்க அழகானவனாக இருந்தான், அவன் தோற்றத்தையும் தேஜஸையும் கண்ட இதர அரசர்கள் இவனைக் காணும் இந்துமதி எங்கே தங்களை ஏறேடுப்பாள் என நம்பிக்கை இழந்தனர்.
அவன் இருந்த ஆசனம் உயர்ந்த வகையில் நவமணிகள் இழைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது, மணிகள் பலநிறத்தில் மின்னும் ஒளியுடைய அந்த ஆசனத்தில் அழகுற அமர்ந்திருந்த காட்சியில் தோகைவிரித்தாடும் மயில் மேல் அமர்ந்திருக்கும் சுப்பிரமணியசுவாமியாக அவன் தோன்றினான்.
மின்னல் ஒன்றேயாயினும் அதன் ஒளி எல்லா மேகங்கள் மேலும் விழுந்து அவையும் ஒளிர்வது போல அஜன் ஒருவனால் ஏற்பட்ட தேஜஸும் அழகின் அலையும் எல்லா மன்னர்களிடமும் பரவி அவர்களும் அழகு கொண்டார்கள். அந்த அவையே அஜனால் அழகாயிற்று.
போஜனின் சுயம்வர மண்டபத்தில் அழகான சிறந்த ஆடைகளும் அணிகளும் அணிந்த எல்லா மன்னர்களும் வீற்றிருந்த போதும் அவர்கள் நடுவில் அபூர்வமான தேவலோக கற்பக மரங்களிலும் பாரிஜாதமே சிறந்தது என்பது போல் தனித்து நின்றான்.
யானைகளின் மதநீர் வாசம் நிறைந்தது, இதனால் மலர்களில் தேனைத் தேடும் வண்டுகள் அந்த நீர்வழியும் யானை அப்பக்கம் வந்தால் மலர்களை விட்டு யானையிடம் ஓடும், அப்படி அஜன் வரும்வரை மற்ற மன்னர்களைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் கண்கள் அஜன் வந்ததும் அவர்களை விடுத்து அவனை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தன.
அங்கே கூடியிருந்த சூரிய சந்திர குல மன்னர்களின் பெருமை பாடகர்களால் வியந்து பாடப்பட்டது, அகில் கட்டைகளின் நறுமணப் புகைகள் எழுந்து மண்டபத்தின் மேலிருந்த கொடியினைத் தாண்டி எங்கும் மேகமென பரவி நின்றது.
மங்களல சங்கொலிகள் பெரிய சப்தமாக ஊதப்பட்டன. அவை தொலைவில் இருந்த மயில்களுக்கு எட்டிற்று. அவை அகில் கட்டையின் புகை வானத்தில் பரவியிருப்பதையும் இந்த ஒலியினையும் கண்டு அவை மேகத்தின் ஓசை என நினைத்து நடனமாட தொடங்கின.
வாத்தியங்கள் முழங்கின, இசைக்கருவிகள் வரவேற்பை இசைத்தன, அப்போது அழகே உருவான இந்துமதி மிகச் சிறந்த ஆடைகளையும் அவளால் அழகுபெறும் அணிகலன்களையும் அணிந்தவளாய் அந்த மண்டபத்தினுள் கால்வைத்தாள்.
தேவலோகத்தவரும் தங்கள் முன்னோரும் அதுவரை கண்டிராத அந்தப் பெரும் அழகியினைக் கண்ட மன்னர்கள் அசந்துபோனார்கள், பிரம்மனின் அற்புதமான படைப்பான அவள் அசைந்துவரக் கண்டு அவர்கள் மனம் அவர்கள் உடல்விட்டு பிரிந்து அவளோடு ஒட்டிக்கொண்டது, இதனால் ஆசனத்தில் வெறும் உடல்மட்டும் அமர்ந்திருந்தது.
அவளைப் பற்றி அதுவரை கேள்விப்பட்ட மன்னர்கள் இப்போது நேரில் கண்டவுடன் அவர்கள் மனதில் காதல் இளம் தளிர்கள் போல் துளிர்த்தது, அதை அவளிடம் எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் தவித்தனர், அரசன் முன் வரும் அந்நியநாட்டு தூதன் மொழியின்றி செய்கையினால் பலத்த மரியாதை செய்வதுபோல் தங்கள் செய்கைகளால் காதலை சொல்ல முனைந்தனர்.
ஒரு அரசன் அவளைக் கண்டு தண்டு உடையதும் அழகிய இதழ்களில் வண்டுகள் அசைவதும் மணமிக்க மகரந்தப்பொடி உடையதுமான தாமரையினைத் தன் கைகளில் பிடித்து அசைத்து சுழற்றினான், அவன் இந்தத் தாமரைபோல் நான் உன் கையில் இருப்பேன், நீ சொன்னபடி ஆடுவேன் என்பதைக் குறிப்பால் சொன்னான்
ஆனால், கைகளை வீணாக அசைப்பது ஆண்களுக்கு அவலட்சனமெனக் கருதி கடந்தாள் இந்துமதி.
இன்னொரு மன்னனோ தன் ரத்தினங்கள் மாலை தொங்கும் கழுத்தோடு தொங்கிய மலர் மாலையினை மெல்ல எடுத்து மீண்டும் தோளில் வைத்து மீண்டும் நகையுடன் சிக்கிய மாலையினை எடுப்பதுமாக அவளை நோக்கி கழுத்தை சாய்த்துப் பார்த்தான்.
சாய்ந்த தலை ஆணுக்கு அழகல்ல என அவள் கடந்து சென்றாள்.
இன்னொரு அரசன் கண்களை கீழே தாழ்த்தி தலையும் மெல்ல தாழ்த்தி, ஒளிபொருந்திய நகங்களைக் கொண்ட கால்களின் விரல்களை மெல்ல வளைத்துப் பொன்னால் செய்யப்பட்ட அந்தப் பாத பீடத்தில் கீறிக்கொண்டிருந்தான். முகம் தாழ்த்தி நிற்பதும் நாணுவதும் ஆணுக்கு அழகல்ல என அவனையும் கடந்தாள் இந்துமதி.
அடுத்த அரசன் இடது கையினை ஆசனத்தில் ஊன்றியபடி மெல்லச் சரிந்து அருகிருக்கும் நண்பனிடம் பேசுவது போல் அவளை ஓரக்கண்ணால் கண்டான், அவனின் தோற்றம் இடது தோள் உயர்ந்து வலது தோள் சரிந்தபடி இருந்தது, தராசின் கோல் போல் அவன் அணிந்திருந்த முத்துமாலையும் ஒருபக்கம் முதுகுபக்கம் சரிந்து கிடந்தது, அவன் அங்கஹீனனாக இருந்ததுபோல் இருந்ததால் அவனையும் அவள் கடந்து சென்றாள்.
இன்னொரு அரசன் தந்தத்தினால் அழகுறச் செய்யப்படுவதும் இளம் பெண்கள் காதில் அணிவதுமான வெண்ணிற அணிகலன் போன்ற வெண்ணிற தாழம்பூவினைக் கையில் ஏந்தியபடி அதன் இதழ்களைப் பிய்த்துக் கொண்டிருந்தான், மந்தியின் செயல்போல் அவன் செயல் இருந்ததால் காணாது கடந்து சென்றாள் இந்துமதி.
இன்னொரு அரசன் தாமரை போன்ற சிவந்ததும் கொடிபோன்ற ரேகைகளைக் கொண்ட கையினால், விரல்களில் அணிந்திருந்த மோதிரங்களின் ஒளியினைப் பாய்ச்சியபடி சூதாடும் காய்களை உருட்டியபடி அவளைக் கண்டான், அவள் கையில் தன் விதி இருப்பதாக அவன் குறிப்பாய்ச் சொன்னாலும் சூதாடும் வழக்கமுள்ளவன் இவன் எனக் கடந்தாள் இந்துமதி.
இன்னொரு அரசன் தன் ஆசனத்தில் இருந்து எழவில்லை என்றாலும் ஒளிமிக்க தன் கிரீடத்தைப பிடித்து அசைத்து மீண்டும் தலையிலே வைத்துக் கொண்டான், சிலமுறை இதைத் திரும்பச் செய்தான். அதாவது, அவனின் மணிமுடி அவளுக்கு என்பதைக் குறிப்பால் சொன்னாலும் அவள் கடந்து சென்றாள்.
அவள் மைய மண்டபத்தில் வந்து கோள்கள் நடுவே சூரியன் போல் ஒளிவிட்டு நின்றாள், அந்நேரம் ஒவ்வொரு மன்னரின் வம்சத்தை அறிந்தவளும் மிகுந்த வாய்ஜாலம் மிக்கவளுமான ஸீகந்தை எனும் பெண் அதிகாரி ஒவ்வொரு மன்னனையும் இந்துமதிக்கு அறிமுகம் செய்துவைக்கத் தொடங்கினாள், மிகுந்த தைரியமாய் அவள் பேசத் துவங்கினாள்.
“இதோ மகதநாட்டு இளவரசன், இவர் தஞ்சமென வந்தோர்க்கு அடைக்கலம் தருபவர், பெருந்தன்மையானவர். தன் நல்லாட்சியால் பிரஜைகளிடம் பெரும் பெயர் பெற்றவர், பகைவரை மன்னிப்பதால் பரந்தபர் எனும் பெயரையும் பெற்ற கருணையாளர்.
எண்ணற்ற கோள்கள் வானில் இருந்தாலும் இரவு நிலவினால் மட்டுமே ஒளிபெறுகின்றது, அப்படி ஏகப்பட்ட அரசர்கள் இங்கு இருந்தாலும் இவராலே அரசகுலம் பெருமையடைகின்றது, ஒளிமிக்க நட்சதிரங்கள் நிலவுமுன் மங்குவதை போல் மற்ற மன்னர்களின் புகழ் இவர்முன் மங்கிவிடுகின்றது.
இவரால் இந்திரனின் மனைவி அலங்காரமின்றி முன் நெற்றியில் முடி கன்னங்களில் சரிய இருப்பாள். காரணம், இவர் ஓயாமல் யாகம் நடத்தி இந்திரனை அழைப்பதால் அவனைப் பிரிந்த இந்திராணி ஏக்கத்தில் அலங்காரமின்றி அப்படித் தவித்திருப்பாள், அப்படி இடைவிடாமல் யாகம் செய்யும் கடமை கொண்டவர் இவர்.
கீர்த்தியுடைய இந்த மன்னனை நீ கரம்பிடிப்பாய் என்றால் அங்கே நகர்வலம் செல்லும்போது புஷ்பபுரம் (பாடலிபுத்திரம்) பெண்களுக்கு மிக்க மகிழ்ச்சி தருவாய். ஏனெனில், நீ அவர்கள் மகிழும்படி மிக்க அழகுடையவள்” என்றாள்.
அதைக்கேட்ட இந்துமதி முகத்தில் எந்த மாற்றமும் காண்பிக்கவில்லை, சுயம்வரத்தின் மரபுப்படி அவள் கையில் இருந்த அருகம்புல் கட்டி தொங்கவிடப்பட்ட இலுப்பைபூ மாலையினை அவள் அசைக்கவில்லை. மாறாக, மகததேச இளவரசன் அந்தப் பரந்தபன் என்பவனுக்கு மரியாதையாக வணக்கம் மட்டும் சொன்னாள், அம்மாலை. கொஞ்சம் கீழே தாழ்ந்தது
மானசரோவர் ஏரியில் ஒரு தாமரையிடம் இருக்கும் அன்னத்தை மெல்லிய காற்றினால் எழும் நீரலைகள் இன்னொரு தாமரையிடம் மெதுவாக கொண்டு சேர்ப்பதுபோல் அடுத்த அரசனான அங்கதேச அரசனிடம் அவளை மெல்ல அழைத்துச் சென்றாள் ஸுகந்தை.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 24
அடுத்து அங்கதேச மன்னனிடம் இந்துமதியினை அழைத்துச் சென்றால் ஸுகந்தை சொன்னாள். “இவர் அங்கதேச மன்னர், இந்திரனின் நண்பனாக இவர் தேவலோகம் சென்றபோது அங்கிருக்கும் தேவலோகப் பெண்களே மயங்கிய அளவு மிகுந்த அழகுடையவர்.
திக் கஜங்கள் எனும் அஷ்ட யானைகள் சாபம் பெற்று பூமிக்கு வந்தபோது பாலகாய்ப்பர் போன்ற ஞானியர் அவைகளை அடக்க கஜசாஸ்திரம் போதித்தார் அல்லவா? அதைக் கசடற கற்று அந்தப் போதனைப்படி பெரிய யானைகளைப் பழக்கி வைத்திருப்பவர், இவ்வுலகில் இருந்துகொண்டே சொர்க்கத்தை அனுபவிப்பவர்.
இவர் பகைவர்களை ஒழித்தபோது அந்த மன்னர்களின் மனைவியர் கழுத்தில் கிடந்த முத்துமாலை அறுபட துயரமடைந்தனர். ஆனால், அவர்களின் கண்ணீர் துளிகள் வரிசையாக அவர்கள் கழுத்திலும் மார்பிலும் விழுந்து கோர்க்கப்பட்ட முத்துமாலை போல் தோன்றிற்று, அப்படி நூலில்லா முத்துமாலையினைக் கொடுத்த பராக்கிரமசாலி இவர்.
பொதுவாக சரஸ்வதியும், லட்சுமியும் ஒரே இடத்தில் இருக்கமாட்டார்கள், ஆனால் இவரிடத்தில் இருவரும் அறிவாகவும் செல்வமாகவும் சேர்ந்திருக்கின்றார்கள், நீ மூன்றாம் தேவியாய் அவன் அருகே அமரத் தகுதியுள்ளவள்”
ஸீகந்தை சொல்லக் கேட்டும் இந்துமதியிடம் பெரிய சலனமில்லை. அவள் அவனிடமிருந்து கண்ணைத் திருப்பி “செல்” என்றாள், அவன் அழகானவனாகவும் திறமை கொண்டவனாகவும் இருந்தும் அவள் மனம் வசீகரிக்கப்படவில்லை, இவ்வுலகில் சில விசித்திரம் உண்டு. சிலருக்கு மிகப் பிடிப்பது இன்னொருவருக்குப் பிடிப்பதில்லை. இவை காரணங்களால் விளக்கககூடியவை அல்ல, மனதால் உணரவேண்டியது.
அவள் சொன்னதும் நகர்ந்த ஸீகந்தை பகைவரால் பொறுக்கமுடியாதவனும், மிக அழகுடையவனுமான இன்னொரு மன்னனைப் புதிதாக உதயமாகும் நிலவினைச் சந்திரமதிக்குக் காட்டுவதைப் போல் காட்டினாள்.
“நீண்ட கைகளும், பரந்த மார்பும், மெல்லிய இடுப்பும் கொண்ட இவர் அவந்தி தேச மன்னர், த்வெஷ்டாவினால் சானைக்கல்லால் செதுக்கப்பட்டு மிகுந்த ஒளி குறைக்கப்பட்டு கண்கள் ஏற்கும் அளவில் மின்னும் சூரியனைப் போல் ஒளிகொண்டவராய் இருக்கின்றார்.
இவரின் செல்வம் குபேர சம்பத்துக் கொண்டது, பகைவர்களை ஒடுக்குவதில் மிக வேகமானவர், போர்க்கலை ஆட்சிக்கலை என எல்லாவற்றையும் அறிந்தவர், அவர் திக்விஜயம் செல்லும் போது எழும் சேனைகளின் தூசு எதிரிகளின் தலைகீரீடத்தில் படிந்து அங்குப் பதிக்கப்பட்ட நவமணிகளை ஒளிமங்கச் செய்யும்.
இவரின் அவந்தி தேச தலைநகரே உஜ்ஜைனி, அதன் அருகில்தான் காளகாலேஸ்வரனாக சிவன் தலையில் பிறைநிலவோடு அமர்ந்திருக்கின்றார், அந்த ஒளி தேய்பிறை காலம் அமாவாசை காலத்திலும் நிலவுபோல் இங்குத் தெரியும், அந்த ஒளியில் பெண்கள் சூழ மகிழ்ந்திருப்பார், இவர் வானில் நிலவு மறைவதே இல்லை.
வாழைமரம் போன்ற தொடை கொண்டவளே, அந்த அவந்தியின் உஜ்ஜைனி அருகே சிப்ரா நதி ஓடும், அந்த நதியின் குளிர்க்காற்றும் நறுமணமும் ஒருவிதமான உற்சாக போதையினைத் தரும், அந்தச் சுகத்தில் கரைந்தபடி நிலவொளியில் இவர் வாழ்வினைக் கொண்டாடும் சுகமே தனி, அதில் பங்கு பெற விரும்புகின்றாயா?” என்றாள்.
அந்த அவந்திநாட்டு அரசன் மிகுந்த அன்புடன் சொந்தங்களை நடத்தி கடும் வெறுப்புடன் பகைவரை விரட்டுபவனாக இருந்தாலும் அவள் மனம் அல்லிமலர் சூரியனை விரும்புவதில்லை என்பதுபோல் அவனிடம் பெருவிருப்பம் கொள்ளவில்லை.
அடுத்து ஸீகந்தை தாமரை பூவின் உள்பாகம் போன்ற நிறமுள்ளவளும் நல்ல குணமுள்ளவளும், பிரம்மனின் தனிப் படைப்புமான இந்துமதியினை அனுபம் தேசத்தின் மன்னனிடம் அழைத்துச் சென்றவள் சொன்னாள்.
“யுத்தமென வந்தால் ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், 18 தீவுகளில் வெற்றிக்கம்பம் நட்டு தன் கொடியினைப் பறக்கவிட்டவனும், அரசன் எனும் சொல்லைத் தனக்கு மட்டுமான சொல்லாக கொண்டிருந்தவனுமான கர்த்தவீரியன் வம்சம் இவர்.
கர்த்தவீரியனின் சக்தியினை உலகமே அறியும், தன் ராஜ்ஜியத்தில் யாரேனும் மனதால் தீமையினை நினைத்தால் கூட அவர்கள் முன் வில்லோடும் கனையோடும் சென்று நிற்கும் வரம் கொண்டவர் அவர், அதனால் அவர் நாட்டில் மனதாலும் தீமையினை எண்ணுவார் இல்லை.
எப்படிப்பட்ட வீரன் கார்த்தவீரியன். இந்திரனையும் வென்ற இலங்கையின் ராவணனைத தன் வில்லின் நாண் கயிற்றால் அவன் மூச்சுவிடமுடியாதபடி கட்டி இழுத்து வந்து சிறையில் அடைத்து தானே மனமிறங்கி விடுவிக்கும் காலம் வரை வைத்திருந்தவர்.
அப்படிப்பட்ட வம்சத்தில் தாத்ரேயரை வழிபட்டு பெரும் வலிமை பெற்ற வம்சத்தில் வந்த இவர் பெயர் பிரதீபர். சாஸ்திரம் முழுக்க அறிந்தவர். பெரியாரைப் பணிந்து நிற்பவர். லஷ்மி தேவி நற்குணங்கள் நீங்கிய இடத்தில் இருக்கமாட்டாள், அதனால் அவளுக்கு நிலை இல்லாதவள் எனும் அவப்பெயர் உண்டு, இவரிடம் எப்போதும் நற்குணங்கள் நிலைத்து நிற்பதால் அவள் இவரோடு தங்கிவிட்டாள், அதனால் அவளுக்குரிய அவப்பெயர் நீங்கிற்று, லஷ்மிக்கு அந்த வரத்தை கொடுத்தவர் இவரே.
இவர் எங்கு யுத்தத்துக்குச சென்றாலும் அக்னி தேவனும் அவருடன் வருவான், இதனால் அவர் தோல்வி என்பதே அறியாதவர், பிரளய கால அழிவான காளராத்ரி போன்ற அழிவைத் தரும் பரசுராமனின் கோடரி கூட இவரிடம் தோற்றுப்போனது என்பதால் இவர் வீரம் தனித்துவமானது.
இவனை நீ மணந்தால் அழகிய மகிஷ்மதி நகரின் உரிமையினை அடைவாய், அந்த நகரை சுற்றியோடும் நர்மதையின் அழகினை அரண்மனை சாளரங்கள் வழியே கண்டு மகிழும் சுகமிக்க வாழ்வை அடைவாய்” என்றாள்.
பதினாறு கலைகளுடன் மேகமற்ற வானத்தில் ஒளிவிடும்போது அது மிக்க அழகானதாய் ஜொலிக்கும், ஆனாலும் தாமரை அதைக் கண்டு மகிழ்ந்து மலராது, அப்படி எந்த குறையும் இல்லாதவன் என்றாலும் இந்துமதி மனம் அவனிடம் செல்லவில்லை.
நூல்கட்டை எடுக்கும் புலவர்கள் தலைப்பினைக் கண்டு கீழே வைத்துவிட்டு அடுத்த நூலை எடுப்பது போல் அடுத்த மன்னனிடம் அவளை அழைத்துச் சென்றாள் ஸீகந்தை.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 25
அடுத்த மன்னனிடம் இந்துமதியினை அழைத்துச் சென்றாள் ஸூனந்தை.
சொர்க்கத்தில் இந்திரன் அவையில் புகழ்ந்து பாடப்படுபவனும், தன் சுத்தமான நடத்தையால் பெரும் புகழ் பெற்றவனும், தாய்வழி தந்தைவழி என இரு குலத்துக்குமே பெருமை சேர்ப்பவனுமான சூரசேனம் எனும் நாட்டின் அரசனான சுசேஷன் என்பவனிடம் இந்துமதியினை அவள் அழைத்து வந்து சொன்னாள்.
“இளவரசியே, எப்படிக் கானகத்து ஆரண்யங்களில் தவமுனிவர்கள் குடில் முன் பொல்லாச் சிங்கமும் புலியும் கரடியும் அன்பினால் கட்டப்பட்டு சாந்தமாய்ப் படுத்துக்கொள்வது போல் யார் முன் கொடிய பகைவரும் பணிந்துகிடந்தார்களோ, எவன் தன் அன்பிலும் வீரத்திலும் சிறந்திருந்தும் தன் மன அடக்கத்தினால் பெரும் புகழ் பெற்றானோ அந்த நீபன் எனும் பெருமன்னனின் வாரிசு இவர்.
சந்திரனின் குளிர்ந்த ஒளி எல்லா இடமும் பரவியிருப்பதுபோல் இவரின் புகழும் ஆட்சியின் நலமும் அந்தத் தேசமெங்கும் பரவிக் கிடக்கின்றது, அரண்மனை நந்தவனத்தில் புற்களை அகற்றுவதுபோல் இவருக்கு எதிரான எவரும் முளையிலே பறித்து எடுக்கப்படுவார்கள், இவர் அரண்மனையில் பறிக்கப்படும் புற்கள் இவர் பகைவர் அரண்மனையில் செழித்து வளரும்படி அவர்கள் அரசே அழிந்துகிடக்கும். அவ்வளவு பராக்கிரமம் உடையவர் இவர்.
இவருக்கு மனைவியர் அதிகம், அவர்கள் மார்பில் மணக்கும் சந்தனம் பூசியபடி எப்போதும் இருப்பதால் இவர் அரண்மனையே சந்தனக் காடாய் மணம் வீசும், அப்படியான அரசியர் யமுனையில் நீராடுவதால் , மலையின் மகளான அந்தக் கருமை நிறமுடைய யமுனை நிறம் மாறி அது மதுராவில் கங்கையுடன் கலப்பது போன்ற நிறத்தினை இங்கேயே பெற்றுவிடும்.
கருடனுக்கு அஞ்சி ஓடிய காளியன் எனும் பெருநாகம் இவர் நாட்டில் இருக்கும் சௌபாரி முனிவரிடம் தஞ்சமடைய வந்தது. மன்னன் அனுமதிக்க முனிவரும் அதற்கு அடைக்கலம் கொடுத்துக் கருடனிடம் இருந்து காப்பாற்றினார், அதனால் இவருக்கு நன்றியுடைதான நாகம் தன் நாகரத்தினத்தை இவருக்கு அளித்தது, அதோ அந்த அழகிய நாகரத்தினம்
எல்லா உலகங்களில் சிறந்ததாய் அவர் நெஞ்சின் மேல் ஒளிர்கின்றது, விஷ்ணுவின் மார்பில் இருக்கும் கௌஸ்துப ரத்தினமே வெட்கப்பட்டு தோற்றுவிடும் ஒளிமிக்கதான அந்த நாகரத்தினத்தைப் பார்.
அவர் நெஞ்சத்தினுள் நீ இடம்பிடித்தால் இந்தப் பெருமைமிகு ரத்தினம் உன்னையும் அலங்கரிக்கும்.
இளவரசியே, இவரின் சொர்க்கம்போன்ற சோலையுடன் கூடிய மாளிகை பிருந்தாவனமாகும், அது குபேரனின் உல்லாசபுரியான சைதரதம் எனும் அழகான குளிர்ச்சியான மாளிகைக்கு எவ்விதத்திலும் குறைந்ததே அல்ல, நீ இவரை மணம் செய்தால் உன் இளமையின் அத்தனை பலன்களையும் சுகங்களையும் மலர்படுக்கையில் சுகமாய்ப் பெறுவாய்.
அந்தப் பிரசித்தியான கோவர்த்தன மலை இவர் நாட்டில்தான் உண்டு. மழைக்காலங்களில் இந்த மலையின் குகைகளில் உள்ள சிலாபுஷ்பம் எனும் மூலிகை அந்தச் சாரலில் நனைந்து எழும் பெருமணம் எல்லா உயிரையும் ஈர்க்கும், அந்த நறுமணத்தில் சொக்கிப்போகும் மயில்கள் அந்தப் பாறைகளில் நடனமாடும் இனிய காட்சியெல்லாம் நீ காண்பாய்.
மலையில் இருந்து நதி கடல்நோக்கிச் செல்லும். நதி மலைகளைக் கண்டோ, பெரிய பட்டணங்களைக் கண்டோ நின்றுவிடுவதில்லை. அது கடலைத் தேடி சென்றுகொண்டே இருப்பதை போல இந்துமதி பிரசித்தியான இந்த மன்னர்களைக் கடந்து தனக்கான ஒருவனைத் தேடியபடி நடந்தாள்.
அடுத்து அவளுக்கு கலிங்க மன்னனான ஹேமங்கனைக் காட்டினாள் ஸூனந்தை, ஒளிவீசும் கேயுரங்களை அணிந்திருந்த அவனின் வலுத்த அழகான தோள்கள் பகைவரை அடக்கி அவன் செய்த பராக்கிரமத்தின் சாட்சியாக பேசிற்று.
இவர் மகேந்திர மலைக்கும் கடலுக்கும் அதன் இடைப்பட்ட நாட்டுக்கும் அரசராவர், திக்விஜயம் செல்லும் இவர் குன்றுகளே இடம் பெயர்வது போல் பெரிய யானைப்படையுடன் செல்வார், அப்போது மதநீர் வடியும் யானைகள் மகேந்திரமலையில் கொட்டும் அருவிகளைக் கண்ணுக்குள் கொண்டுவரும்.
அவரின் கைகளைப் பார். கருத்துப்போன அடையாளம், நீண்ட அந்தக் கைகளில் இருப்பதைப் பார், அவையெல்லாம் ராஜல்ஷ்மியின் கண்ணின் மை கலந்த கண்ணீரால் வந்தது. ஆம், இவர் தன் வில்லின் நாணை இழுத்து இழுத்து எதிரிகளைச சாய்க்கும்போது வில்லின் நாண் கைகளில் உராய்ந்து வந்ததால் ஏற்பட்ட கருமை என எண்ணாதே, இவை இம்மன்னன் எதிரிகளை அழிக்கும்போது அவர்களிடம் இருந்த ராஜலஷ்மி கண்ணீரோடு இவன் கரங்களில் சரணடையும் போது அவளின் மைகொண்ட கண்களின் நீரால் வந்த கருமை என்பதைத் தெரிந்து கொள்.
இவரின் அழகான காவலான அரண்மனை சமுத்திர கரையோரம் உண்டு, அரண்மனையின் சாளரங்கள் வழியே கேட்கும் சமுத்திர ஓசையே இவரைத் துயில் எழுப்பும். அந்தச் சமுத்திரத்தின் அலையோசையில் அதிகாலை அரண்மனையில் எழுப்பப்படும் யாம இசை வெளியே கேட்காதபடி மங்கிவிடும்.
அந்தக் கடற்கரையில் பனைமரங்கள் மிகுந்துள்ளன; கடல்காற்று அந்தப் பனையோலைளில் சலசலப்பை ஏற்பத்தியபடி வீசும் ஓசை விளையாடும் குழந்தைகள் எழுப்பும் ஒலிபோன்றது. அக்காற்று லவங்கப்பட்டை விளையும் தீவுகள் வழி வருவதால் அதில் லவங்க வாசனை மிகுந்திருக்கும், அந்த லவங்கமணம் உன் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தரும்.
எவ்வளவுதான் வருந்தி முயன்றாலும் செல்வம் துரதிருஷ்டவசம் உள்ளவனிடம் சேராது. விரும்பி அழைத்தாலும் லஷ்மி தன் கடாட்சம் இல்லாதவிடம் சேரமாட்டாள். அப்படி ஹேமந்தனைப பற்றிச் சுனந்தை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இந்துமதி மனம் அவனோடு ஒட்டவில்லை, ஸூனந்தை சொன்ன வார்த்தைகள் அவளின் காதுவழி புகுந்துவெளியேறியதே அன்றி அவள் மனதைத் தொடவில்லை. அவள் மனம் ஏதும் பேசவுமில்லை.
அடுத்த மன்னனிடம் அவளை அழைத்துச் சென்றாள். ஸுனந்தை சொன்னாள், ” தேவர்களைப போன்ற தோற்றம் கொண்டவனும் அவர்களுடன் உறவாடும் பாண்டிய குலத்தின் மன்னர் இவர், சிவனின் தலையில் இருக்கும் நாகத்தால் எல்லையிடபபட்டது அவன் நகரம். அதனால் அது நாகபுரம், அப்படியே சிவனின் தலையில் இருக்கும் நிலவின் மதுரத்தால் புனிதமடைந்ததால் அது மதுரா எனும் மதுராபுரி எனப் பெரும் புகழும் புண்ணியமும் கொண்ட நகரமாய் ஜொலிக்கின்றது.
கடைக்கண் சிவந்த சாகரபட்சியின் கண்களைப் பெற்ற இந்துமதியே, இந்தப் பாண்டியனின் அழகைப் பார்.
இருபுறமும் தோளில் தொங்குவதும், ஒளிமிக்க பெரிய முத்துக்களை மாலையாக கொண்ட மன்னனின் மேல் ஹரிசந்தனம் எனும் உயர்ந்த சந்தனம் பூசப்பட்ட தோற்றத்துடன் நிற்பதைப் பார், அந்தச் சந்தனம் வேறு எங்கும் கிடைக்காதது. கட்டையினைப் பிளந்தால் உள்ளே செந்நிறம் கொண்டதும் அரைத்தால் பொன்னிறமாக மின்னுவதும் அதன் பெரும் சிறப்பு, பாண்டியருகே கிடைத்த செல்வம் அது.
அந்த மணமிக்க சந்தனத்தை உடலெங்கும் பூசி மேலே முத்துமாலை ஜொலிக்க நிற்கும் மன்னன் சூரிய வெளிச்சத்தில் பொன்னிறமாக மின்னும் மேருமலை போல் ஜொலிக்கும் அழகைப் பார், அருவிகள் நிறைந்த இயமம் போல் அல்லவா அவரின் வெண்ணிற முத்துமாலையும் செந்நிற சந்தன பூச்சும் அமைந்துள்ளது.
விந்திய மலையினையே அடக்கி தன் காலால் மிதித்தவரும், கடல்நீரையே குடித்து முடித்தவருமான மாமுனி அகத்தியரின் வசிப்பிடம் இவர்கள் நாட்டின் மலையில்தான் உண்டு, அவரே வியக்கும் வண்ணம் பல யாகங்களைச் செய்பவர்கள், அகத்தியரே அடிக்கடி நலம் விசாரிக்கும் அளவு பெரிய செல்வாக்கை கொண்டவர்கள் இந்தப் பாண்டியர்கள், அவர்களின் அரசன் இவர்.
கயிலாயத்தையே அசைத்துப் பார்த்த அந்த இராவணன் தான் பகைவரை வெல்ல செல்லும்போது இந்தப் பாண்டியர்கள் தன் நாட்டை பிடித்துவிடுவார்களோ என அஞ்சி சிவனைத் தொழுது “பிரம்மசிரஸ்” எனும் அஸ்திரத்தைப் பெற்றான், அதைக் காட்டி பாண்டியரிடம் சமாதானம் செய்துவிட்டு அவன் இந்திரலோகம் நோக்கிச் சென்றானே அன்றி பாண்டியருடன் மோதத் துணியவில்லை, பாண்டிய நாட்டில் கால்வைக்கும் தைரியம் அவனுக்கில்லை, அவனால் வெற்றிக்கொள்ளமுடியா தேசம் பாண்டிய தேசம்.
இவ்வளவு சிறப்புக் கொண்ட பாண்டிய தேசத்தின் அரசனை நீ கைபிடித்தால், பூமியினைப் போலவே ரத்தினங்கள் நிறைந்ததும், அழகான ஒட்டியாணமாக பூமியினை அலங்கரிக்கும் தென் கடலுக்கு நீ அரசியுமாவாய்.
அங்கே கடல்வளம் மட்டுமல்ல பசுமையான மலைவளமும் அருவிகள் சூழ்ந்த இடமும் உண்டு. அங்கே பாக்குமரங்களை வெற்றிலை கொடிகள் சுற்றிக்கிடக்கும், சந்தன மரங்களை ஏலக்காய் கொடிகள் படர்ந்து கிடக்கும். அந்த இளம் தளிர்களான தரை உனக்கு எப்போதும் இன்ப ஏகாந்தம் ஒன்றையே மணமாய் குளிர்ச்சியாய் நலமாய் ரசனையாய் தரும்.
நன்றாக பார், இந்தப் பாண்டியர் நீலதாமரை போன்ற நிறமுடையவர். பரந்த உருவமுடையவர். நீயோ கொரோசனத்தைப போல் மெல்லிய மஞ்சளான நிறமுடையவள், மெலிந்து இருப்பவள், நீங்கள் இருவரும் சேர்ந்தால் நீலவானில் மின்னல் மின்னும் அழகைப் போன்ற காட்சியினை உலகம் காணும், வானும் மின்னலும் இணைந்து உலகை வாழவைப்பதுபோல் நீங்கள் வையகத்தை வாழவைப்பீர்கள்” என்றாள்.
ஸூனந்தை அவ்வளவு சொல்லியும் தாமரை சூரியனால் மலரும், சந்திரனால் மலராது. சந்திர ஒளி அதனை மலரச் செய்யாது என்பது போல் சந்திர குலத்தவனான பாண்டிய மன்னனும் அவள் உள்ளத்தைத் தொடாததால் அப்படியே நகர்ந்து சென்றாள்.
இப்படி ஒவ்வொரு மன்னரையும் அவள் கடந்து செல்லும்போது அவர்கள் முகம் வாடிப்போனது. இருபுறமும் வீடுகள் கொண்ட தெருவில் இரவில் தீபத்துடன் ஒரு பெண் செல்லும்போது அவள் அந்த வீட்டைக் கடக்கும்போது இருபுறமும் வீடுகள் பிரகாசமாய்த் தோன்றும், தீபத்துடன் அவள் கடந்துசென்றபின் அவ்வீடுகள் வாடி இருளடைந்துபோகும்.
அப்படி ஸூனந்தை தீபம் போன்ற இந்துமதியுடன் தன்னை நெருங்கும்போது பிரகாசிக்கும் மன்னர்களின் முகங்கள் அவள் தனக்கு மாலை இடாமல் நகர்ந்தபோது வாடி இருளடைந்து போயிற்று.
அவளை அடுத்து எதிர்கொண்டு நின்ற அஜன், இவள் தன்னையும் இப்படிக் கடந்து சென்றுவிடுவாளோ எனக் கலங்கிபடியே அவளை எதிர்கொண்டான். அவன் இதயம் வேகமாக துடித்தது, ஆனால் அந்நேரம் அவனின் வலதுதோள் துடித்து அவனுக்கு நல்ல சகுனத்தை கொடுத்ததால் அவன் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.
பல மரங்களைச சுற்றிய வண்டு மணமிக்க உயர்ந்த வகை மாமரத்தின் பூவினைக் கண்டு வந்தபின் வேறுமரம் நாடாது என்பது போல் தன் வண்டாடும் கண்களுடன் அவனைக் கண்ட இந்துமதி நகர விருப்பமின்றி அங்கேயே நின்றாள்.
அதுவரை அவள் ஸுனந்தையின் மொழிகளை மட்டும் கேட்டாள், அவனைக் கண்ட அந்நொடியில் அவளின் மனம் அவளோடு பேசிற்று.
(தொடரும்)