காளிதாசனின் ரகுவம்சம் : 36 to 40

காளிதாசனின் ரகுவம்சம் : 36

வசந்த கால துவக்கத்தில் கர்னிகாரமரம் (கோங்குமரம்) அக்னிஜுவாலை போன்ற தன் மலர்களைப் புஷ்பித்திருந்தது, மெல்லிய இலைகொழுந்துகள் மேல் பொன்னிறத்தில் மின்னிய அப்பூக்கள் வசந்த கால லட்சுமிதேவி பூமிக்கு அருளிய பொன் நகைகள் போலிருந்தன.

அந்த கர்னிகாரமரத்தின் பொன்னிற பூக்களை விரும்பி பறித்துத் தங்கள் தலையில் மிகுந்த ஆசையுடன் பெண்கள் அணிந்து கொண்டனர்.

செழித்த மாஞ்சாடி வகை மரங்கள் அழகான மலர்களுடன் பூத்துக் குலுங்கியது, அது அம்மரத்துக்குத் திலகமாய் அமைந்தது, அம்மலர்களுக்காக அம்மரங்களின் மேல் கருமை நிறமான வண்டுகள் குவிந்தன, திலகமிட்ட முகங்களைக் கொண்ட இளம்பெண்களின் அழகை அவர்கள் கண்ணில் இட்ட மை அதிகரிப்பது போல இந்த வண்டுகள் அம்மரத்திற்கு அழகை அதிகரித்தன, இதனால் அந்த வனமே அழகாகத் திகழ்ந்தது.

இனிமையான இக்காலத்தில் மரங்களின் மேல் படர்ந்திருந்த இருவாச்சி கொடியானது அதன் மனைவிபோல் பின்னிக் கிடந்தது, அது வெண்ணிற பூக்களைக் கொண்டிருப்பது நாணத்தால் மெல்ல சிரிப்பது போலிருந்தது, அந்த இருவாச்சி பூக்களின் மணமும் வெண்ணிற பூக்களுடன் அது மரத்தின்மேல் பின்னிக் கிடக்கும் கோலமும் காண்போர் மனதைப் பரவசமாக்கின‌.

வசந்தகால அழகிற்கு அழகு சேர்க்க இளம்பெண்கள் அதிகாலை சூரியனைப் போல் சிவந்த உடை அணிந்து காதோரமாக தானிய முளைகளைச் சொருகிவைத்த கோலத்தில் அழகுறத் தோன்றினார்கள், குயில்கள் மிக இனிமையாக கூவிக்கொண்டிருந்தன‌.

அந்த அழகிய சூழலும் பெண்களின் அழகும் எங்கும் பரவிய பூக்களின் மணமும் அந்த வசந்தகாலம் கொடுக்கும் மெல்லிய மயக்கமும் மன்மதனின் சேனைகளாயின, அவை ஆண்களைப் பெண்களுக்கு அடிமைபடுத்தின, அதனால் ஆண்களெல்லாம் பெண்களைத் தவிர அந்த வசந்தகாலத்தில் வேறு எதனையும் விரும்பவில்லை.

மரங்களின் மலர்மொட்டானது மகரந்தப்பொடிகள் நிரம்பியதால் பருத்து பெரியதாய் இருந்தது, வெண்ணிறமான அந்த மலர்க்கொத்து பெண்கள் முன் நெற்றியில் அணியும் முத்துமணிச்சரம் போல் அழகானதாய் மின்னிற்று.

வசந்தகாலத்தில் பலவகை மலர்களின் மகரந்தப் பொடிகள் புதிய தாவரங்களை உருவாக்கும்படி காற்றில் எங்கும் பரவின, அந்த வெண்ணிறப்பொடிகள் அடர்த்தியாய் வானில் பறந்தபோது மன்மதனின் கொடிபோல் அசைந்தது, அது வசந்தகாலப் பெண் பூசிக்கொள்ளும் வாசனை பொடியாயிற்று, அந்த நறுமண பொடிகளைப் பின் தொடர்ந்து வண்டுகள் சென்றுகொண்டிருந்தன‌.

வசந்தகால ஊஞ்சலாட்ட விளையாட்டு மகிழ்ச்சியாக நடந்து கொண்டிருந்தது, ஆண்களும் பெண்களுமாக ஊஞ்சலாடி மகிழ்ந்தார்கள், பெண்கள் ஊஞ்சலாடுவதில் திறமையானவர்கள் என்றாலும் தான் விரும்பும் ஆண்களைத் தழுவ விருப்பம் கொண்டவர்களாய் ஊஞ்சல் கயிற்றைப் பிடிக்கத் தெரியாதவர்கள் போல் பாவனை செய்து ஆண்கள் மேல் சாய்ந்து அஞ்சுவது போல் நடித்து உள்ளூர மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இன்பமான வசந்த காலத்தில் குயில்கள் மன்மதனின் உத்தரவை பெண்களுக்குச் சொன்னது, மயில்கள் அவன் உத்தரவினைத் தோகையினை விரித்துச் சொல்லி எச்சரித்தன, இதனால் பெண்கள் வழக்கமான சச்சரவு, சண்டை, ஊடல், கோபமெல்லாம் மறந்துவிட்டு அன்பானவர்களுடன் மகிழ்ந்திருந்தனர், இக்காலம் இன்பத்துகுரியது. இந்தக் காலத்தின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ந்திருக்கவே அதனால் இப்போது தவறவிட்டு பின்பு நஷ்டமடையாதீர்கள் என மன்மதன் இட்ட உத்தரவை குயில்கள் சொல்ல பெண்கள் உடனே பணிந்தனர்.

அசுரர்களைக் கொன்று தேவர்களைக் காக்கும் விஷ்ணுவினைப் போன்ற பலமான தசரதன் அழகில் மன்மதனைப் போலவும் இருந்தான், அவன் இந்த இனிமையும் சுகங்களும் ஏகாந்தமும் கூடிய வசந்த காலத்தை தன் மனைவியருடன் இனிதே அனுபவித்து விட்டு இந்த வசந்தகாலத்தில் மக்களைத் தொல்லை செய்யும் விலங்குகளை அடக்க தன் கடமைப்படி வேட்டைக்குச் செல்ல விரும்பினான்.

வேட்டை கொடியதாயினும் ஒரு அரசன் மக்களைக் காக்க அதைச் செய்தல் அவனின் கடமையும் அரச தரமுமாகின்றது, குடிகளைக் காக்கும் பொறுப்பில் அதுவும் ஒன்று.

வேட்டையில் ஓடும் பிராணிகளைக் குறிவைத்து அடிப்பது அசையும் எதிரி படையினைக் களத்தில் அடிக்கும் பயிற்சியினைக் கொடுக்கும், பிராணிகள் கொடுக்கும் எதிர்வினையால் அவைகளை அறிந்து கொள்ளவும் முடியும், திடீர் தாக்குதலைத் தவிர்க்கும் பயிற்சியும் மன்னனுக்குக் கிடைக்கும், காட்டில் ஓடுவது பதுங்குவது களைப்பைத் தாங்குவது பசியுடன் தாகத்துடன் போராடுவது உயிர் போராட்டம் நடத்துவது, முழுப் பலத்துடன் எழுவது என எல்லாப் போர் பயிற்சியினையும் மன்னனுக்கு வழங்கும்.

அது மக்களைக் காக்கும் வேட்டை மட்டுமன்று. அரசனுக்கான தனிப் பயிற்சியும் என்பதால் மந்திரிகள் ஆலோசனைப்படியே தசரதன் கானகம் செல்ல வேண்டியதாயிற்றே தவிர அவனின் சொந்த விருப்பத்தால் அன்று.

ஆண்களில் சிறந்த தசரதன் வேட்டைக்குரிய உடை அணிந்து தோளில் வில்லுடன் குதிரையின் மேல் அமர்ந்து விலங்குகள் நிறைந்த வனத்துக்குள் தன் குதிரை வீரர்களுடன் சென்றான். அக்குதிரைகள் எழுப்பிய புழுதி வானில் மண்டபம் அமைத்தது போல் பரவியிருந்தது.

வேட்டைக்குரிய விதிப்படி தசரதன் மலர்க்கொடிகளின் மாலையினால் தன் தலை கொண்டையினை மறைத்துக் கொண்டான், இலை தழைகளால் ஆன உடையினை தன் மேல் அணிந்து கொண்டான். விலங்கள் மானிடரை அடையாளம் காணாமல் இருக்க இப்படியான வேடங்களிலே மன்னர்கள் செல்வது வேட்டையின் மரபு.

அப்படி தொடுக்கப்பட்ட மலர்களாலும் இலைதழை ஆடைகளாலும் தன்னை மறைத்துக் கொண்ட தசரதன் ஓசை எழுப்பாமல் மிக மெல்ல நடக்கும் குதிரையில் அமர்ந்து சென்றான். அவனின் காதின் குண்டலம் மெல்ல அசைவது போல் குதிரையின் தலையும் அசையும் படி இரண்டும் ஒரே லயத்தில் இருப்பதை போல் அசைந்து சென்றான்.

நீதி தவறாதவனும் மக்கள் மகிழும்படி நல்லாட்சி நடத்துபவனும் அழகிய தோற்றம் கொண்டவனுமான தசரதன் வனத்துக்குள் இப்படி வரும்போது வனதேவதைகள் அவனைக் கண்டு வரவேற்க விரும்பின. ஆனால் தங்கள் உருவை மானுடர்க்குக் காட்டக் கூடாது எனும் தேவதைகளுக்கான விதிப்படி அவைகளின் உடலுடன் வராமல் செடி கொடிகளுக்குள் புகுந்து அசைந்தபடி அவனை வரவேற்று கை அசைத்தன, அசையும் வண்டுகளெல்லாம் அவைகளின் கண்ணாக இருந்தன‌.

மன்னர்களில் சிறந்த தசரதன் காட்டுக்கு வருகின்றான் என்றதும் நாய்களுடன் வேட்டையாடும் வேடர்களும், வலைவீசி காட்டு உயிர்களைப் பிடிக்கும் வேடுவர்களும் மன்னனுக்கு உதவத் தயாரானார்கள். அவர்களும் மன்னரின் குடிகள் என்பதால் மன்னனுக்கு உதவும்படி முன்பே கானகம் புகுந்திருந்தார்கள்.

நெருப்பாலும் கள்வர்களாலும் மன்னருக்கு ஆபத்து நேராதபடி பல காரியங்களை அவர்கள் செய்திருந்தார்கள், மன்னரின் போக்குவரத்துக்கான பாதைகளைத் தயார் செய்து உறுதிபடுத்தினார்கள். மன்னருக்கும் அவரைச் சார்ந்தோர்க்கும் குதிரைகளுக்குமாய் நீர் தொட்டிகள், நீர் நிறைந்த‌ பள்ளங்களை எல்லாம் தயார் செய்து வைத்தார்கள், அத்தகைய வனத்தில் தசரதன் புகுந்தான்.

அங்கே அவன் முதலில் ஒரு மான் கூட்டம் வருவதைக் கண்டான், புரட்டாசி மாதம் வானில் எழும் வானவில்லை போன்று ஜொலிக்கும் தன் வில்லை கையில் எடுத்தான், வானவில்லுக்கு மின்னல் நாண் ஏற்றுவது போல் சட்டென நாணேற்றினான்.

சிங்கம் ஒலியினைக் கேட்டவுடன் கோபத்தில் கர்ஜிப்பது போல நாணை இழுத்துப் பார்த்து எழுந்த ஓசையால் சிங்கமென வேட்டைக்குத் தயாரானான் தசரதன், அதுவரை மனக்குறை ஏதுமற்றவனாய் இருந்த அந்தத் தசரதன்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 37

தசரதன் முதலில் ஒரு மான்கூட்டத்தை கண்டான், அங்குப் பெண் மான்கள் தங்கள் குட்டிகள் அடிக்கடி விரும்பி பால் குடிப்பதால் அவற்றுக்காய் மெதுவாக நடந்தன, அவைகள் வாயில் கடிக்கப்பட்டபுற்கள் இருந்தன, ஆண் மான்கள் அந்த மந்தையின் முன் தலை நிமிர்ந்து கர்வமாய் நின்றன‌.

தன் குதிரை மேல் அமர்ந்திருந்த தசரதன் அந்த மான் கூட்டத்தைத் தொடர்ந்தான், அவன் தன் அம்பாரத் துணியில் இருந்து அம்பினை எடுத்து வில்லில் பொருத்தினான், மானிடர்களின் நடமாட்டம் அங்கு வந்ததை தங்கள் மிக விவேகத்தால் உணர்ந்த மான்கள் நான்கு பக்கமும் சிதறி ஓடின, அவற்றின் கண்கள் அச்சத்தால் மிரண்டு நீர் தழும்பி மிரட்சியாய் இருந்தது, அது நீலோர்பவ மலர்களை வனமெங்கும் இறைத்தது போல் கருநீல நிறமுடையதாக இருந்தது.

தசரதன் வில்லில் இருந்த அம்பினைத் தன் காதுவரை இழுத்து ஆண்மான் ஒன்றைக் குறிபார்த்தான், அதை அறிந்த பெண்மான் ஆண்மானை காக்கும்படி முன் வந்து நின்றது, அந்த மான்களின் காதலை புரிந்து கொண்ட தசரதன் அவற்றின் மேல் இரக்கம் கொண்டு தன் அம்பினை அதன் மேல் செலுத்தாமல் தளர்த்திக் கொண்டான்.

அதனை விடுத்து வேறு மான்களைத் தாக்க அவன் குறிவைத்த போதெல்லாம் அவற்றின் மருட்சியான கண்களைக் கண்டான். அக்கண்கள் அவனுக்குத் தன் ஆசை காதலியர் கண்களை நினைவூட்டின, இதனால் அவைகள் மேல் அம்பு செலுத்த மனமில்லாதவனாய் உயர்ந்த கைகளை வில்லோடும் அம்போடும் இறக்கிக் கொண்டான்.

அந்நேரம் காட்டுப்பன்றிகள் தசரதன் சேனையினைக் கண்டு குட்டைகளில் இருந்து எழுந்து ஓடத் துவங்கின, அவற்றின் வாய்களில் இருந்த கோரை கிழங்குகளின் முளைகள் வழியெங்கும் விழுந்து தசரதனுக்கு வழிகாட்டின, அப்படியே ஈரமான நிலத்தில் அவற்றின் காலடிச் சுவடுகள் பதிந்திருந்தன, அவற்றின் வழி தசரதன் அவைகளை விரட்டி கொண்டு சென்றான்.

ஓடிக் கொண்டிருந்த காட்டுப்பன்றிகள் மரங்களின் அருகில் வந்ததும் அவனைத் திருப்பித் தாக்கும்படி திரும்பின. வழமையாக காட்டுப் பன்றிகளின் தந்திரம் அது, ஆனால் அவை திரும்பும் போது குதிரையில் இருந்து சற்று குனிந்து வளைந்து அவன் எய்த‌ அம்புகள் அவைகளின் உடலை முன் உடலில் துளைத்து பின் உடலில் வெளியேறி மரங்களில் குத்தி நின்றது, இதை அறியாத பன்றிகள் அவனின் அம்பால் தாக்கப்பட்டதை அறியாமலே வீழ்ந்தன‌.

வனத்தின் பெரிய காட்டெருமைகள் தசரதனை நோக்கி தலையின் கொம்புகளைக் காட்டியபடி ஓடி வந்தது, அவன் இரு கொம்புகளுக்கு இடையில் தன் அம்பினை செலுத்தினான் , அந்த அம்பு காட்டு எருமையின் தலையினைப் பிளந்து வெளியேறியது, அந்த அம்பு கீழே விழுமுன் அந்த காட்டெருமைகள் வீழ்ந்தன‌.

பெரிய காண்டா மிருகங்கள் தசரதனை நோக்கி பெரிய கொம்புகளுடன் தாக்க வந்தன, தசரதன் பிறை நிலா போன்ற முனை உடைய அம்புகளால் அவற்றின் கொம்பினை மட்டும் வெட்டிப் போட்டார், பெரிய பாரமான அக்கொம்புகள் அகற்றப்பட்டதும் தலையின் பாரம் குறைந்ததை உணர்ந்த அந்தக் காண்டாமிருகங்கள் திரும்பிச் சென்றன.

எதிரிகளை க்கொல்லாமல் அவர்களின் கர்வத்தை அகற்றும் தசரதன் காண்டா மிருகங்களுக்கும் அதையே செய்து அவற்றை உயிரோடு திருப்பி அனுப்பினான், கொம்பை இழந்து பலமற்ற அவைகள் இனி எந்தப் பெரிய அபாயத்தையும் காட்டாது.

அச்சமற்ற தசரதன் இப்படி வனத்துக்குள் முன்னேறும் போது குகைகளில் இருந்த புலிகள் வெளிவந்து அவன் மேல் ஆக்ரோஷமாகப் பாய்ந்தன. அது புலிகளைப் போல் தோன்றும் பெரிய வேங்கைமர கிளைகள் முறிந்து விழுவது போலிருந்தது, தசரதனோ மிக வேகமாக அம்புகளை அவற்றின் வாய் மேல் ஏவினான், அது புலியின் வாயில் புதைந்து அதை நிரம்பின. வாயெல்லாம் அம்பு பெற்ற புலிகள், அம்புகள் நிறைந்த அம்பாரத் துணிபோல் தெரிந்தபடி அப்படியே வீழ்ந்தன‌.

அங்குப் புதர்களின் மறைவில் சிங்கங்களின் முதுகு தென்பட்டது, ஆனால் அவை வெளிவரவில்லை. தசரதன் தன் வில்லின் நாணை இழுத்து அதிரச் செய்தார், சப்தங்களைக் கேட்டால் சினம் கொண்டு எழுந்து வரும் சிங்கம் அவன் நாணின் ஒலியினைக் கேட்டுக் கோபத்தில் வெளிவந்தன, நாட்டுக்கு மட்டுமல்ல காட்டுக்கும் இனி நானே ராஜா என்பதுபோல் அவற்றின் முன் தசரதன் நின்று கொண்டிருந்தான்.

தூங்குவோரைத் தாக்கக் கூடாது எனும் கொள்கையினைக் கொண்ட தசரதன் சிம்ம வேட்டையிலும் அதைக் கடைபிடித்தான், அவற்றின் தூக்கத்தைத் தன் வில்லின் ஒலியால் கலைத்து எழுப்பினான், அதனால் எழுந்து வந்த சிம்மத்தை தன் அம்புகளால் வீழ்த்திப் போட்டான்.

சிங்கங்களுக்கும் யானைகளுக்குமான யுத்தம் தேவ அசுர சண்டைபோல் தீராப்பகையானது, சிம்மம் பாய்ந்து யானையின் தலையினைத் தன் காலால் உடைத்து பிளந்து போட்டு நிற்கும், அப்போது யானையின் தலையின் முத்துக்கள் அதன் கூரிய நகங்களின் இடுக்கில் சிக்கிக் கொள்ளும்.

அப்படித் தசரதனால் வீழ்த்தப்பட்ட சிம்மங்க‌ளின் கால்களில் யானையின் மந்தக முத்துக்களும் இருந்தன, தன் படையில் பெரும் வலிமையான யானைகளின் மனம் குளிரும்படி அவற்றின் குல எதிரிகளான‌ சிம்மத்தை தசரதன் கொன்றுபோட்டான், அது தனக்கு உதவும் யானைகளுக்கு அவன் செய்யும் நன்றிக்கடன் போல் இருந்தது.

அடுத்து அங்குக் கவரிமான் கூட்டத்தைக் கண்டான் தசரதன். சிற்றரசர்களை அவன் வெல்லும்போது அவர்களைக் கொல்லாமல் அவர்கள் வெண் சாமரத்தை மட்டும் பெற்றுவரும் வழமை கொண்ட அவன் இங்கும் அந்தக் கவரி மான்களைக் கொல்லாமல் அவற்றின் அடர்ந்த சாமரம் போன்ற வாலினை மட்டும் பிறைநிலா வடிவ அம்புகளால் அறுத்துப் போட்டான், தன் பெருமையினைத் தசரதனிடம் இழந்த கவரிமான்கள் அவமானத்தால் ஓடி ஒளிந்து கொண்டன‌.

அங்கு மயில்கள் நிரம்பியிருந்தன, அவற்றை தசரதன் கண்டபோது கொல்ல விரும்பாமல் புன்னகைத்து நின்றான், காரணம் அவற்றின் நீண்ட தோகைகள் அவன் மனைவியரின் நீண்ட கூந்தலையும் அவர்களோடு அவன் கூடிய போது மோகத்தில் அவை அசைந்ததையும் நினைவூட்டின, அவற்றின் தோகைகளுக்கு இடையே இருந்த பல வண்ணங்கள் அந்த மனைவியர் கூந்தலில் சூடிய பல வண்ண பூக்களையும் நினைவூட்டின, அதனால் அவைகள் மேல் இரக்கம் கொண்டவனாய் நகர்ந்தான்.

வேகமான வேட்டையால் அவன் மேல் வியர்வை துளிர்த்தது, அவன் முகத்தில் அரும்பிய அந்த வியர்வையினை வனத்தின் குளிர்ந்த காற்று தடவி நீக்கியது. வனங்களின் மலர்களிலும் இளம் தளிரிலும் அக்காற்று கலந்து வந்ததால் இனிமையான மணம் கொண்டதாகவும் அது இருந்தது, இதனால் தசரதன் புத்துணர்ச்சி பெற்று வேட்டையினை உற்சாகமாய்த் தொடர்ந்தான்.

முதலில் தன் அரசக் கடமை என்றே மந்திரிகளின் ஆலோசனைப்படி தசரதன் வேட்டைக்கு வந்தான், ஆனால் சில விஷயங்கள் மெல்ல தொட தொட உள்ளே இழுத்துப்போட்டு ஆசையினை அதிகரித்து தொடரவைக்கும் என்பதுபோல் வேட்டையின் சுவாரஸ்யம் அவனை இன்னும் உள்ளே இழுத்துக் கொண்டது, அவன் போதும் என்ற மனமே இல்லாமல் இன்னும் இன்னும் வேண்டும் என்றபடி வேட்டையினை விருப்பமாய்த் தொடர்ந்தான்.

ராஜ்யபாரங்களை மந்திரிகளிடம் ஒப்படைத்து வந்திருப்பதால் அவன் கவலையற்று வேட்டைக்குள் இன்னும் இறங்கினான், சாமார்த்தியமான பெண் தன் சரச விளையாட்டுக்களால் சிருங்கார லீலைகளால் கணவனைத் தன் வசப்படுத்துதல் போல வேட்டையும் அவனைப் பெரிதும் வசப்படுத்திக் கொண்டது, அவன் தன் நிதானத்தை இழந்து மோக மூர்க்கமாய் அதில் வீழ்ந்துபோனான்.

தன் சேனையினை விட்டு விலகிச் சென்று பதுங்கி தனித்திருந்து வேட்டையாடும் அளவு அவன் தீவிரமானான், அவ்வாறு அவன் தனித்திருக்கும் போது பூக்களையும் மெலலிய இளம் தளிர்களையுமே படுக்கையாக்கி , இரவில் ஒளிவீசும் மலர்களைத் தீபங்களாக்கி சயனம் கொண்டான்.

அதிகாலையில் அவன் பறவைகள் ஒலியாலும், யானை கூட்டங்கள் காதை அசைத்துத் தங்கள் மேல் அடித்து எழுப்பும் சத்தத்தாலும் எழும்பினான், அரண்மனையில் பாடகர்களின் சங்கீத பள்ளியெழுச்சியில் எழுபவன் இங்கு இந்த ஒலிகளால் நித்திரை களைந்து எழுந்தான்.

எழுந்தவன் ஒரு மானைப் பின் தொடர்ந்து குதிரையில் சென்றான், அவன் வீரர்களால் அவனைப் பின் தொடரமுடியாதபடி நெடுந்தொல்லைவு சென்றான், அவன் குதிரையே வாயில் நுரை தள்ளி களைத்துப்போகும் அளவுக்குப் பயணித்தவன் ஓய்வுக்காக இறங்கினான், அது முனிவர்கள் தவம் செய்யும் தமசா நதி கரையாய் இருந்தது.

அங்கு அவன் நதியில் யானையின் மெல்லிய பிளிறல் போன்ற ஒலியினைக் கேட்டான், அங்கே யானை இருப்பதாகக் கருதி வில்லில் இருந்து அம்பை செலுத்தினான், அது சாதாரண பாணம் அன்று, அது சப்தம் வரும் இடத்தினைத் தேடிச் சென்று அடிக்கும் சக்திவாய்ந்த மந்திரபாணமாய் இருந்தது, அங்கு யானைதான் நிற்கின்றது என நினைத்து அவன் அம்பை செலுத்தினான், ஆனால் அங்கு எழுந்தது யானையின் ஒலி அன்று, குடத்தில் நீரை எழுப்பிய ஒலி என்பதை அவன் அறிந்திருந்தாதபடி விதி அவன் காதுகளை ஆட்கொண்டிருந்தது.

அவன் சாஸ்திரம் மீறி அந்தப் பெரும் தவறைச் செய்ய வேட்டையின் மேல் அவன் கொண்ட மோகமும் காரணமாய் இருந்தது, மன்னர்கள் யுத்தகாலம் தவிர மற்ற காலங்களில் யானையினைக் கொல்லக் கூடாது என்பது விதி, அந்த சாஸ்திரம் அறிந்தவன் வேட்டையின் மோகத்தால் அதை மறந்து அம்பை வீசினான், அவன் வல்விதி அதைச் செய்யவைத்தது.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 38

சப்தம் நோக்கிச் செல்லும் அந்த அம்பினை ஏவிய தசரதன், “அப்பா” என அலறிய குரல் ஒன்றைக் கேட்டான். அப்போதுதான் அது யானை அல்ல மானுடன் என்பது புரிந்தது, அவன் அஞ்சியபடியே ஓடினான். அவனைப் பார்க்கமுடியாதபடி நீர்வஞ்சிகொடி மறைத்திருந்தது, அதைக் கிழித்தபடி சென்ற தசரதன் அங்குச் சிறுவன் ஒருவன் மார்பில் தன் அம்பு பாய்ந்தபடி குடத்தின் மேல் சரிந்திருப்பதைக் கண்டான்.

தசரதன் நல்லகுடியில் பிறந்தவன், எல்லா நியாய தர்மமும் அறிந்தவன், அதனால் தான் செய்தது பெரும் பாவம் என்றும் இந்தப் பழி தன் குலத்தை சாரும் என மிகவும் அஞ்சினான், தன் குதிரையில் இருந்து பதறியபடி இறங்கிய அவன் அந்தச் சிறுவனை கையில் ஏந்தி அவனைப் பற்றிக் கேட்டான். அவனோ தான் பிராமணன் அல்லாத முனியின் மகன் எனவும் கண் தெரியாப் பெற்றோரிடம் தன்னை அழைத்துச் செல்லும் படியும் பெரும் வலியுடனும் பிரியும் உயிருடனும் மெல்ல முனகினான்.

தசரதன் அவனைத் தன் கைகளில் சுமந்தபடி அவன் பெற்றோரிடம் கொண்டு சென்று அவர்கள் முன் இட்டு யானை எனத் தவறாக‌ நினைந்து தான் தவறுதலாக செய்த காரியத்தைச் சொல்லிதா தலைகுனிந்து நின்றான்.

கண்ணில்லா அத்தம்பதிகள் தங்கள் மகன் நிலை கண்டு கலங்கினர், அவன் உடலைத் தடவி தடவி அழுதனர், அங்கே தைக்கப்பட்டிருந்த அம்பினைத் தடவியவர்கள் அதைத் தசரதனையே உருவி எடுக்கச் சொன்னார்கள், தங்கள் மகனின் உடலில் இருக்கும் அம்பு தங்கள் இதயம் மேல் தைத்ததாக நினைந்து அழுது சொன்னார்கள்.

தசரதன் கலங்கியபடியே நடுங்கும் கரங்களுடன் அந்த அம்பை உருவினான், அச்சிறுவன் அக்கணமே இறந்துபோனான், தன் மகன இறந்தான் என்பதை அவன் தொங்கிப்போன தலையினை தொட்டு அறிந்த அவனின் தகப்பன் கைநிறைய மகனின் ரத்தத்தோடு தசரதனுக்கு சாபமிட்டார்.

“அரசனே, நான் இந்த முதிர்காலத்தில் என் மகனை இழந்து தவிப்பது போல் நீயும் முதிர்ந்த வயதில் இதே துன்பத்தை உன் மகனை இழந்து அடைவாய், இது நடந்தே தீரும்” என மகனின் ரத்தத்தோடு சாபமிட்டான், தன்னை மிதித்தவனை நாகம் வேகமாக சீறி கடித்து வாயின் விஷத்தினை இறக்குவதுபோல் அவன் தன் வாயால் சாபமிட்டான்.

அதனை ஏற்றுகாகொள்வது போல் மௌனமாக தலையசைத்த தசரதன் மெல்லச் சொன்னான்.

“முனிவ, நான் இன்னும் என் மகனின் முகத்தை கண்டவனில்லை, பிள்ளையற்றவன் நான். உம் சாபம் பலிக்கவேண்டுமானால் எனக்கோர் மகன் பிறக்கவேண்டும், இதனால் உமது சாபத்தால் எனக்கு அனுக்கிரகமும் அருளியுள்ளீர்கள். முனிவர் வாய்க்குப் பொய்க்காது.

எம் நாட்டில் விவசாயிகள் துரும்புகள் சிறு விறகுகள் கூட்டி நெருப்பால் எரித்து நிலத்தை முதலில் நன்றாக சுடுவர், அதன் பின் உழுது விதைகளை விதைப்பார்கள், நெருப்பால் சுடப்பட்ட நிலம் பெரும் விளைச்சலைக் கொடுக்கும். நெருப்பால் வதைபடும் நிலம் பின்னர் நல்ல விளைச்சலைக் கொடுப்பது போல் உங்களின் சாபம் எனக்கு வலிக்குப் பின் மிகுந்த‌ நன்மையே தரும்.

நான் செய்தது பெரும் குற்றம், இங்கு நான் அரசனல்ல, குற்றவாளி. எனக்குத் தீர்ப்பிடும் இடத்தில் நீங்களே இருக்கின்றீர்கள், இப்போது நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள்தான் சொல்லவேண்டும், புத்திரசோகத்தில் இருப்போர் சொல்வது எதுவாயினும் அதற்கு நான் கீழ்படிவேன்” என்றான்.

அம்முனிவரோ “உமக்கு நான் சாபம் கொடுத்தபின் அதைவிட வேறு எதுவும் நான் சொல்லவேண்டியதில்லை, நானும் என் மனைவியும் எம் மகனற்ற உலகில் இருக்கமாட்டோம் , எங்களை எம் மகனுடன் நெருப்பில் ஏற்ற உதவும்” என மட்டும் சொன்னார்.

அப்போது தசரதனைத் தேடிவந்த வீரர்கள் அங்கு வந்தனர், அவர்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது, தசரதனும் சொல்லவில்லை, முனிவர்களும் சொல்லவில்லை. தசரதன் முனிவர் வேண்டிய சிதையினைச் செய்ய வீரர்களுக்கு கட்டளையிட்டான், அவர்கள் விறகுகளைக் குவித்து சிதை செய்தார்கள், மகனை எரிக்கும் நெருப்பில் முனிவர் தன் மனைவியோடு ஏறி நெருப்பில் கரைந்தார்.

தசரதன் எரியும் நெருப்பை பார்த்துக் கொண்டே இருந்தான், அது சிதையில் மூவரையும் எரித்து முடித்தபின் அவன் நெஞ்சில் குடிகொண்டது.

தான் பெற்ற சாபத்துக்குத் தான் ஒன்றே சாட்சியான தசரதன் யாரிடமும் எதுவும் கூறாமல் நகருக்குத் திரும்பினான், வடவாக்னி நெருப்பை தன் அடியில் கொண்ட கடல் போல் அச்சாபத்தை தனக்குள் மறைத்தபடி அவன் அரசாட்சி செய்து வந்தான்.

அந்தச் சாபம் பெற்று பதினாறாயிரம் ஆண்டுகள் வரை அவன் குழந்தையின்றி இருந்தான், இந்திரனைப் போல் ஒளிர்பவனும் குபேரன் போல் செல்வம் கொண்டவனுமான அவன் வாரிசு செல்வம் இல்லாமல் வாடிக்கிடந்தான்.

ஒவ்வொரு மனிதனும் தேவர் கடன், ரிஷிகடன், பித்ருகடன் எனும் மூவகை கடனோடு பிறக்கின்றான். தேவர்களுக்கான கடனை யாகங்களாலும் , ரிஷிகளுக்கான கடனை பணிவிடைகள் பூஜைகளாலும் தீர்க்க வேண்டும், அப்படியே பித்ரு கடன் எனும் முன்னோர் கடனை சரியாக செய்ய தனக்குப் பின் ஒரு வாரிசு அவனுக்கு வேண்டும்.

முதல் இரு கடன்களை சரியாகத் தீர்த்து வந்த தசரதன் பித்ருகடனை தீர்க்க ஒரு வாரிசு இல்லையே எனக் கலங்கி நின்றான்.

அவன் நிலை அறிந்த முனிவர் சிலர் அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள், “மன்னா, ஒரு காரியம் நடக்கவேண்டி ஒரு காரியம் தாமதிக்கும் இது நியதி, பாற்கடலுக்குள் ரத்தினங்களும் பெரும் செல்வமும் இருந்தது. ஆனால், அக்கடல் கடையப்படும் வரை அவை இருந்தது யாருக்கும் தெரியாது.

அம்மலை கடையபாபட்டும் காரியம் நடந்தபின்பே அச்செல்வங்கள் வெளி வந்த காரியமும் நடந்தது, அக்கடல் கடையப்பட வேண்டும் எனும் காரணமே அங்குக் காரியமாயிற்று.

அவ்வாறே பெரும் யாகம் ஒன்று நடக்க வேண்டும், அதன் பின்பே மன்னனுக்கு வாரிசு வரவேண்டும் என்பதும் விதிக்கப்பட்டது, பெரிய யாகத்தை மன்னன் செய்யும்படியே வாரிசு இன்னும் வெளிவராத காரியமும் தொடர்கின்றது” என்றார்கள்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 39

தசரதனுக்குப் புத்திர பாக்கியம் உண்டாக வேண்டி நல்லோர்களும் மிகுந்த அடக்கம் உடையவர்களும் தன்னலம் கருதாதவர்களுமான வசிஷ்டர் போன்ற ரிஷிகளெல்லாம் கூடி காசிபரின் பேரனானவரும், தலையில் மான் போன்ற கொம்பு உடையவருமான ரிஷிய சிருங்கர் தலைமையில் பெரும் யாகம் இயற்றினார்கள்.

கோசலை நாட்டில் இந்த யாகம் நடக்கும் போது புலஸ்திய ரிஷியின் வம்சத்தில் வந்தவனான இலங்கை வேந்தன் ராவணின் பெரிய கொடுமைகளைத் தாங்கமுடியாத தேவர்களெல்லாம் கடும் வெயிலினால் வருந்தும் வழிபோக்கர்கள் நல்ல நிழலை தரும் மரத்தடியினை அடைவது போல் விஷ்ணுவின் பாதத்தில் சரண்டைந்தார்கள்.

ராவணனால் துன்பம் ஒன்றையே பெற்ற அந்தத் தேவர்கள் பாற்கடலில் சயனிக்கும் பெருமானைப் பார்க்க சென்றபோது அவர் நித்திரை களைந்து அவர்களை எதிர்கொண்டார், இதுவே மிகப்பெரும் நல்ல சகுனமாக தேவர்களுக்குத் தோன்றியதால் அவர்கள் மகிழ்ந்தார்கள்.

சொர்க்கலோகத்தின் அந்தத் தேவர்கள் ஆதிசேஷன் மேல் அமர்ந்திருக்கும் பகவானைக் கண்டார்கள், ஆதிதேஷன் தன் பெரிய படங்களை விரித்தபடி இருந்ததால் அதன் மேலுள்ள ரத்தினங்களெல்லாம் பெரும் ஒளிவீசின, அந்த ஒளி பகவான் மேல் பட்டு அவர் இன்னும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தார்.

தாமரை பூவில் அமர்ந்திருக்கும் அன்னை மகாலட்சுமி பகவானின் பாதத்தை தன் மடியில் தாங்கியிருந்தாள், ஒருவேளை இடையில் நவரத்தின மணியாலான மேகலையினை அணிந்திருந்தால் அது பகவானின் காலை வருத்துமோ என எண்ணியவள் பட்டாடையால் அவர் பாதத்தை தாங்கியிருந்தாள்.

மலர்ந்த புது தாமரை போன்ற கண்களை உடையவரும், இளம் வெயில் போன்ற மஞ்சள் நிற ஆடை அணிந்தவருமான பகவான் வசந்த காலத்தின் அழகான பொழுதுபோல் அவர்களுக்குத் தரிசனமானார்.

பாற்கடலை கடையும் போது பெற்ற ஸ்ரீவத்சம் எனும் மருவினை நெஞ்சில் உடையவரும், எப்போதும் தன்னையே காண்பதால் தன் அழகிய திருக்கோலத்தை கண்ணில் காட்டும் அன்னை தாயாரின் கண்களைப் போல் பிரகாசமான கௌத்ஸுபம் எனும் மணியினை நெஞ்சில் கொண்ட பகவானை அவர்கள் கண்டார்கள்.

பெரும் தோள்களுடன் அங்கு அவர்களுக்குக் காட்சியளித்த பகவான் பாற்கடல் நடுவே கிளைபரப்பி நின்ற தெய்வீக பாரிஜாத மரம்போல் அமர்ந்திருந்தார், அம்மரம் போலவே கேட்கும் அத்தனை வரங்களையும் தருபவராக அவர் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

சுதர்சனம் எனும் சக்கரம், கௌமேதகி என்ற கதை, நந்தகம் எனும் வாள், சாரங்கம் எனும் வில், பாஞ்சன்யம் எனும் சங்கு ஆகிய ஐந்தும் உயிருள்ளவையாக நின்று பகவானின் புகழைப் பாடிகொண்டிருந்தன. இவைகள் ஐந்தும் அரக்கர்களின் மனைவியர் துயருற்று வாடும்படி மதுவால் சிவந்த கன்னங்கள் கலையிழந்து போகும்படி அவர்கள் கணவர்களை அழித்துப்போட்டவை எனும் வகையில் எப்போதும் மிகப் பலமானவை.

பகவானுக்காக ஆதிசேஷன் எனும் நாகத்திடம் தான் கொண்ட ஜென்ம பகையினை ஒழித்தவனும், இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட தழும்பை உடையவனும், கர்வம் ஒழிக்கப்பட்டு எப்போதும் கூப்பிய கைகளுடன் பகவானுக்குச் சேவகம் செய்யும் கருடனால் சுமக்கப்படும் பகவானைக் கண்டார்கள்.

யோக நித்திரை நீங்கித் தெளிவான முகத்தினைக் கொண்ட பகவானிடம் அவரின் நிம்மதியான சுகமான தூக்கம் பற்றி விசாரிக்கும் பிருகு முதனால முனிவர்களிடம் குளிர்ந்து புன்னகைக்கும் அந்தப் பகவானைக் கண்டார்கள்.

அசுரர்களை ஒழித்து தங்களைக் காக்கும் பகவானைக் கண்டு தேவர்கள் வீழ்ந்து பணிந்தார்கள், துதிக்குரியவரும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவரான பகவானைப் போற்றிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 40

“ஓ மூலப் பரம்பொருளே, யார் முதலில் உலகைப் படைத்து, அடுத்து நன்முறையில் காத்துப் பின் அதனை அழிக்கின்றாரோ யார் அந்த மூவகைப் பணியினையினையும் ஒருவராக செய்கின்றாரோ அந்தப் பகவானுக்கு வணக்கம்.

பிரம்மனாக, விஷ்ணுவாக, ருத்ரனாக விளங்கும் மூல மூர்த்திக்கு வணக்கம்.

ஓ பகவானே, நீர் சூழ்ந்த இவ்வுலகில் நீவிரும் அந்தத் தத்துவத்தையே கொண்டிருக்கின்றீர், சுத்தமான மழைநீர் இனிப்பானது, அது மண்ணில் சேரும் இடம் பொறுத்து அதன் சுவை உப்பாகவும் கசப்பாகவும் மாறும். அப்படியே உமது நிலையான குணம் சத்வ குணம் ஒன்றே, ஆனால் நீர் தொழில்நிமித்தம் குணங்களின் கலவையால் ஒவ்வொரு பெயரைப் பெறுகின்றீர்.

நீர் ரஜோ குணம் ஓங்கிய நிலையில் பிரம்மனாகின்றீர், தாம்ஸ குணம் ஓங்கிய நிலையில் ருத்ரனாகின்றீர், அடிப்படையான சத்வ குணத்தால் விஷ்ணுவாகின்றீர். அங்கு உம்மிடம் மாறுபாடு வருவதில்லை.

ஒரு நடிகன் எத்தனை வேடமிட்டாலும் அவன் அடிப்படை குணம் மாறாது என்பதுபோல் ருத்திரனாகவும் பிரம்மனாகவும் நீர் மாறினாலும் அடிப்படையான சத்வகுணத்தினை நீர் எப்போதும் கொண்டிருக்கின்றீர்.

ஓ தெய்வமே, நீர் உலகையெல்லாம் அளந்தவர், ஆனால் மற்றவர்களால் அளவிடமுடியாதவர், உமக்குத் தேவை என எதுவுமில்லை. ஆனால், எல்லோருக்கும் நீர் அவசியமானவர். நீர் எல்லாவற்றையும் வென்றவர், ஆனால் உம்மை வெல்ல எவருமில்லை, நீர் உருவமே இல்லாதவர், ஆனால் உலகின் எல்லா உருவங்களுக்கும் நீரே மூலக் காரணமாக இருக்கின்றீர்.

ஓ உயிர்களின் மூலமே, நீர் எல்லா உயிர்களின் உள்மனதிலும் வசிப்பவர், ஆனால் உம்மை அவைகளால் அறியமுடியாதது என்பதால் தொலைவிலும் இருப்பவர், மானுடன் அடைய விரும்பும் அத்தனையும் உம்மிடம் நிறைந்திருக்கின்றது, ஆனால் அதன்மேல் நீர் ஆசையற்றவர். பகவானாய் இருக்கும் நீர் நரன் எனும் மானுடராக வந்தாலும் தெய்வம் நோக்கித் தவமிருப்பவர், இரக்கம் கொண்டவர் நீர் ஆனால் யாரின் வலியும் எதுவும் உம்மைப் பாதிக்காது.

மகா தொன்மையானவர் நீரே ஆனால் கொஞ்சமும் மூப்படையாமல் இளமையுடன் இருப்பவரும் நீரே.

ஓ தேவரீர், நீர் எல்லாம் முழுமையாக அறிந்தவர். ஆனால் உம்மை முழுக்க அறிந்தவர் எவருமில்லை. இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதன் இயக்கத்துக்கும் எல்லாவற்றுக்கும் நீரே காரணம். ஆனால், உமக்கென‌ எந்த காரணங்களுமில்லை. நீர் எல்லாவற்றுக்கும் தலைவர். ஆனால், உமக்கொரு தலைவன் இல்லை, நீர் ஒருவரே காணும் காணாத எல்லா வடிவங்களையும் உடையவர்.

ஏழுவகை ஸ்வரங்களும் உப்பைத் துதிக்கின்றன, ஏழு சமுத்திரங்களின் நீரில் நீர் சயனம் கொள்பவர், அக்னி பகவான் உமக்கு வாயாக அமைந்திருபவர், அதனாலே யாகங்களால் நீர் அவிர்பாகம் பெறுகின்றீர். ஏழு உலகங்களுக்கும் ஒப்பற்ற அடைக்கலம் நீர் ஒருவரே.

ஓ ஞானபிம்பமே, தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என நான்கு பெரும் விஷயங்களையும் அறியும் அறிவு கிருதாயுகம், த்ரேதாயுகம்,த்வாரபரயுகம், கலியுகம் எனும் நான்கு யுகங்கள். பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என நான்கு சாதிகளைக் கொண்ட இவ்வுலகம் என நான்கையும் நீரே பிரம்மனாக இருந்து நான்கு முகத்தோடு படைத்தீர்.

ஓ முக்தியின் வடிவமே, உம்மை உள்ளபடி உணர்ந்தால் பிறவித் துயரில் இருந்து விடுபட்டு உம்மை அடையலாம், நீர் எல்லா உயிர்களின் மனதிலும் ஒளிவடிவமாய் உண்டு, ஆனாலும் எங்கெல்லாமோ உம்மைத் தேடுகின்றார்கள், யோகியர் மனதை அடக்கி யோகம்பல செய்து ஒருமுகப்பட்ட மனதுடன் உம்மைக் காண விரும்புகின்றனர், நீர் அவர்கள் இதயத்திலே இருந்தும் அவர்களும் உம்மைத் தேடி தேடி தவமிருக்கின்றார்கள்.

ஓ பகவானே, நீர் யாராலும் புரிந்து கொள்ள முடியாதவர், உமது உண்மையான ரூபத்தை கண்டவர் எவருமில்லை, யாராலும் அது முடியாது.

நீர் பிறப்பில்லாதவர், ஆனால் உலகைக் காக்கும் பொருட்டு மச்சவாதாரம் , கூர்மம், வராஹம் எனப் பல பிறப்புக்களை உலகைக் காப்பதற்காக எடுத்தவர். எதிலும் நீர் பற்று கொண்டதில்லை ஆனாலும் பகைவர்களை வேகமாக அழித்தும் போடுபவர். எல்லாம் அறிந்திருப்பவர் ஆனால் எதுவும் அறிந்திருக்கவில்லை என்பது போல் சயனக்கோலத்திலும் இருப்பவர், உம்மை அறிந்துகொள்வது யாருக்கும் முடியாத காரியமாய் இருக்கின்றது.

ஒரு சிறிய சப்தம் கேட்டாலும் உடனே கவனத்தை விடுபவர், தவம் செய்ய ஏற்றவரல்லர் அவரிடம் மன அடக்கம் புலனடக்கம் இல்லை, ஆனால் நீரோ அவதாரமாக வந்த காலத்தில் எல்லா இன்பங்களையும் நுகர்ந்தீர். அதே நேரம் தவத்திலும் நிலைத்திருந்தீர், எதிலும் பற்று இல்லாத விருப்பம் இல்லாத நீர் மக்களைக் காக்கின்றீர்.

இவை எல்லாம் தேவரீரான உமக்கே சாத்தியம், மற்றவர்களுக்கு இது ஒருகாலமும் சாத்தியமில்லை.

ஓ அருள்கடலே. மாபெரும் கங்கை பல கிளைகளாகப் பிரிந்து ஓடினாலும் இறுதியில் கடலையே அடைவது போல் பலவகையான சாஸ்திரங்கள், மார்க்கங்கள் என்றாலும் அவைகளின் முடிவு உம்மை அடைவதாகவே உள்ளது, எல்லாமும் உம்மிலேதான் முடிகின்றது.

ஓ முக்திவடிவமே, உம்மை எப்போதும் நினைத்துத் தியானிப்போரும், பலன் கருதாமல் எல்லாச் செயல்களையும் உம்மிடம் அர்ப்பணித்து செய்வோரும், பற்றில்லா வாழ்க்கை வாழ்பவரும் பிறப்பற்ற நிலை அடைந்து வீடுபேறு அடைய நீரே காரணமாய் விளங்குகின்றீர்.

ஓ பரம்பொருளே, இவ்வுலகில் பார்த்தல், அனுமானித்தல், உவமானித்தல், ஓசை இவற்றைக் கொண்டு எல்லா விஷயங்களையும் அறியலாம். ஆனால், இவை நான்காலும் உம்மை ஒரு காலமும் அறியமுடியாது.

கண்களால் கண்டோ, அறிவால் அனுமானித்தோ, தொட்டுப் பார்த்தோ அல்லது முகர்ந்தோ, ஒசையினைக் கொண்டோ ஒரு விஷயத்தை அறியலாம். ஆனால், உம்மை அப்படியும் அறிந்துவிடமுடியாது, மானிடர்க்கு அப்பாற்பட்ட பெரும் ஞானம் உம்முடையது.

ஓ பகவானே, உம்மை மனமார நினைத்த நொடியிலே ஒருவன் பரிசுத்தமாகின்றான். உம்மை நொடிபொழுது நினைந்தாலே இவ்வளவு பலன் என்றால் உம்மை நேரடியாக கண்டு பூஜித்தால் , தொட்டு சேவகம் செய்தால் அதன் பலன் எவ்வளவு என்று கணக்கிடவும் முடியுமோ?

ஓ ஞானவடிவமே, கடலின் ரத்தினங்களை அளவிட்டு சொல்லமுடியாது, சூரியனின் கதிர்களை எண்ணி சொல்லிவிடவும் முடியாது, அப்படி மனதுக்கும் வார்த்தைக்கும் எட்டாத உமது மகா சக்தி வழிபாட்டு தோத்திரங்களுக்கு அடங்காததாய் இருக்கின்றது.

ஓ சர்வேச்வரா, நீர் எல்லாம் கொண்டிருப்பவர் அதனால் ஒன்றைத் தேடவேண்டிய அவசியம் உமக்கு இல்லை. எந்தப் பொருளையும் நீர் தேட ஒரு காரணமுமில்லை. ஆனால் நீர் அவதாரங்களை எடுப்பதும் கொடியவர்களை அழிப்பதும் தீயவர்களை தண்டிக்க மட்டுமே அன்றோ? கருணை மிகுந்த உமது செயல்களெல்லாம் பிறர் நன்மைக்கேயன்றி உமக்காக அன்று.

ஓ பூரண முழுமை கொண்டவரே, உமது பெருமையினை அளவிடமுடியாது, உமது குணங்களை கணக்கிடவும் எங்களால் முடியாது, ஆகவே உம்மைப் போற்றி முடிப்பது எமது களைப்பாலும் திறமையின்மையாலும் வார்த்தைகள் தீர்ந்துவிட்டதாலுமே அன்றி உமது ஆற்றலும் பராக்கிரமும் இவ்வளவுதான் என்பதால் அல்ல”

இப்படி தேவர்கள் விஷ்ணுவுக்குத் துதிகளும் ஸ்தோத்திரமும் உள்ளபடி செய்தனர், அது இல்லாத ஒன்றை உரைப்பதாக அல்லாமல் பகவானைப் பற்றி உள்ளவற்றை உரைக்கும் உண்மையான வார்த்தைகளாகவே ஆயிற்று.

(தொடரும்..)