காளிதாசனின் ரகுவம்சம் : 46 to 50
காளிதாசனின் ரகுவம்சம் : 46
இந்த பலமான சிவனின் வில்லை வளைப்பவர்க்கே தன் மகள் சீதையினை மணமுடித்து கொடுப்பதாக ஜனகன் அறிவித்திருந்தான், அதை யாரும் தொட்டு தூக்க கூட முடியாததால் அவன் மிக கவலையுற்றிருந்தான், அப்படியான நிலையில் ராமன் வந்து வில்லை வளைத்து ஒடித்து அவனின் துயரத்தை போக்கினான்
எல்லா மக்களின் கவலையினையும் போக்க வந்த அவதாரமான ராமபிரான் ஜனகனின் பெரும் கவலையினையும் போக்கினான்
இதனால் மகிழ்ந்த ஜனகன் விசுவாமித்திரர் முன்னிகையிலே தன் மகளான சீதையினை அக்னி சாட்சியாக ராமனுக்கு மணமுடித்து கொடுக்கபோவதாக சொல்லி மகிழ்ந்தான், அவனின் பெரும் பொக்கிஷம் ஒன்றை ராமனிடம் பாதுகாப்பாக கொடுத்துவிடும் பெரும் நிம்மதி அடைந்தான்
எல்லா அறமும் சாஸ்திரமும் தர்மமும் அறிந்த அவன் ராமன் தன் மருமகனாந்தை முறைப்படி தசதரதனிடம் தெரிவிக்கபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாய் தன் புரோகிதரை தசரதனிடம் அனுப்பி நிமி வம்சத்தவர் ஆளும் இந்த மிதிலை நகரின் சந்ததி பெருகும்படி , அது இன்னும் பெருமைபடும்படி சீதையினை தன் மருமகளாக ஏற்கும்படி கோரினான்
தசரதனும் அந்நேரம் ராமனின் திருமணம் பற்றி சிந்தித்து கொண்டிருந்தான், அப்போது அந்த புரோகிதன் கொண்டு செய்த செய்தி அவனுக்கு மிக உவப்பாய் இருந்தது, கற்பக மரம் வேண்டியதை உடனே தருவதுபோல புண்ணியம் பெற்றோரின் விருப்பங்கள் உடனே நிறைவேறுவது உலகில் ஆச்சரியமல்ல
இதனால் மகிழ்ந்த தசரதன் தன் மகனின் திருமணத்தின் பொருட்டு மிதிலை நகருக்கு பெரும் செல்வத்துடனும் பெரிய சேனையுடனும் கிளம்பினார், இந்திரனின் நண்பரும் புலன்களை அடக்கியவருமான தசரதன் அப்படி செல்லும் காட்சியானது சூரிய கிரகணத்தின் போது மறைக்கபட்ட சூரியன் போல் அதாவது சூரியனை சுற்றி பெரும் ஒளிவட்டம் தெரிந்தது போல் இருந்தது
தசரதனின் பெரும் சேனை மிதிலைக்குள் நுழையும் போது அங்கிருக்கும் மரங்களும் வீதிகளும் அல்லோலபட்டன, அவ்வளவு ஆரவாரமாக தசரதன் தன் சேனைகளுடன் நுழைந்தான் , ஆனாலும் தன் கணவன் அன்பின் மிகுதியால் இறுக்கமாக அணைக்கும்போது கட்டுபடும் பெண்களை போல மிதிலை நகரம் அவனை அன்பால் பொறுத்து கொண்டது
தசரதனும் ஜனகனும் மன்னர்களில் சிறந்தவர்கள் முன்னோர்கள் வழியான ஆச்சாரத்தை அப்படியே பின்பற்றுபவர்கள், இந்திரனும் வருணமுன் போன்ற அம்சம் கொண்ட அவர்கள் இருவரும் இணைந்து தங்கள் பிள்ளைகளின் விவாகத்தை முறையாக நடத்தினார்கள்
ராமபிரான் தான் மணமுடிக்கும் நேரம் தன் சகோதரர்களும் மணமுடிக்க வேண்டும் என கருதினார், அதனால் சீதையின் சகோதரியான ஊர்மிளையினை லட்சுமணனும் மணந்தான், அபப்டியே சிறந்த இடைகளை கொண்ட பெண்களும் குத்வஜரின் மகள்களுமான மாண்டவியினை பரதனும் சுருதகீர்த்தியினை சத்ருஹனும் மணந்தனர்
தன் மகன்களான அந்த சகோதரர்கள் நால்வரும் மணகோலத்தில் நிற்பதை கண்டு தசரதன் மகிழ்ந்தான், அவர்கள் நால்வரும் தன் ராஜ்ஜியத்தின் சாம, பேத, தான, தண்டம் எனும் நான்குவகை உபாயங்களின் வடிவினை போல் நிற்பதை கண்டு நிறைவு கொண்டான்
சீதை முதலிய அந்த நாண்கு பெண்களும் தங்களின் குலம், அறிவு, வயது என எல்லாவற்றுக்கும் ஏற்ற கணவன் கிடைத்ததாக மகிழ்ந்தார்கள், அப்படியே ராமன் முதலான நான்கு சகோதரர்களும் எல்லா வகையிலும் தங்களுக்கு ஈடான பெண்கள் மனைவியராய் வந்ததால் மகிழ்ந்தார்கள்.
இலக்கண மரபுபடி ஒரு சொல்லில் விகுதி இல்லாமல் பகுதி இல்லை, பகுதி இல்லாமல் விகுதி இல்லை என்பது போல் அத்தம்பதியர்கள் ஒருவரின்றிஒ ஒருவர் இல்லை என அன்பால் பிணைந்த்திருந்தார்கள்
அன்பும் கருணையும் நிரம்பிய தசரதன் தன் மகன்கள் நால்வருக்கும் மிதிலையில் திருமணம் செய்துவைத்தபின் அயோத்தி திரும்பினான், அவன்மேல் பெரும் மரியாதை கொண்ட ஜனகன் மூன்ரு நாள் அவனொடு பயணம் செய்து அவனை மகிழ்வாக அனுப்பி வைத்தான்
தசரதன் செல்லும் வழியில் சில அபசகுணங்களை கண்டான் மிகபெரிய எதிர்காற்று ஆற்று வெள்ளம் போல் அவனை சூழந்து அலைகழித்தது
வானில் சூரியனை சுற்றி ஒரு வட்டம் உருவானது, கருடனால் கொல்லபட்ட நாகம் தன் நாகமணியினை சுற்றி வட்டமாக சுருண்டு காவல் இருந்ததுபோல் அந்த வட்டம் வானில் எழுந்தது
வானம் அந்திபொழுதில் ரத்தத்தால் சிவப்பது போல் சிவந்திருந்தது, பெரும் கழுகுகள் வட்டமிட்டன, கழுகுகள் சிறகின் நிறமுள்ள சாம்பல் நிறமான மேகங்கள் கைம்பெண்கள் உடுத்தும் ஆடைபோல் பரவியிருந்தன
முன்பு பரசுராமர் இருபத்தோரு முறை ஷத்திரியரை கொன்று அவர்கள் ரத்ததால் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்தபோது மீண்டும் மீண்டும் ஊளையிட்ட நரிகள் , நல்ல உணவுக்காக ஊளையிட்ட நரிகள் இப்போது சூரியனுக்கு நேர் எதிராக நின்று ஊளையிட்டன
சாஸ்திர தர்மம் சகுன பலன் எல்லாம் அறிந்த தசரதன் இவற்றை கவனித்தபடியே அயோத்தி வந்தான் அவனிடம் பெரும் கலக்கம் கூடியிருந்தது, இந்த சகுனத்தின் பலன் தீயது என உணர்ந்த அவன் அதற்கான பரிகாரம் செய்ய வடிஷ்டரிடம் ஆலோசனை கேட்டான், அவரோ இவைகளால் தீமை ஏற்படாது எல்லாம் நல்லவற்றில் முடிவதாக இருக்கும் அதனால் கவலை வேண்டாம் என சொல்லி அவனின் மன கலக்கத்தை போக்கினார்
தசரதன் இதனால் ஆறுதல் அடைந்தாலும் அவன் மனம் முழுக்க தெளிவடையவில்லை அவன் இதுபற்றி சிந்திக்கும் போதே அவன் சேனைகளின் முன்னே பெரிய ஒளி தோன்றிற்று, காண்போர் கண்களை மங்க செய்யும் அவ்வொளியில் தசதரன் கண்களை செலுத்தியபோது அங்கே ஒரு உருவம் கையில் கோடரியுடன் நிற்பதை கண்டான்
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 47
உச்சிப்பொழுதில் உருவமே தெரியாதபடி உக்கிரமாய்த் தெரியும் சூரியன் மாலையில் ஒளிகுறைந்து உருவைக் காட்டுவது போல் ஒளிமிகுந்து தோன்றிய பரசுராமர் தன் உருவினை மெல்லக் காட்டினார்.
பூணூல் அணிந்த பிராமணத் தந்தையின் சாந்தமான குணமும், வில் ஏந்தும் வம்சத்தில் வந்த தாயின் ஷத்ரியரின் உக்கிரக் குணமும் கலந்த அவரின் தோற்றம் கொதிக்கும் சூரியன் சந்திரனுடன் கூடியது போல, குளிர்ந்த மணமிக்க சந்தன மரத்தை கொடிய நாகம் தழுவி நின்ற கோலமாய் இருந்தது.
அந்தப் பரசுராமன் கோபத்தினால் வரும் கொடிய மனம் கொண்டவர். அதுவரை இருந்த உலக வழக்கத்தை மீறி நின்று ஆடியவர், தந்தையின் ஆணைக்காக தன் முன் நடுங்கிய தாயினையே கொன்றவர், அவர் முதலில் இரக்கம் எனும் குணத்தை வென்றார். அதன்பின்பு இந்தப் பூமியினை அவர் மிக எளிதாக வென்றார்.
இரக்கத்தை வெல்லாதவன் வீரனாக முடியாது என்பதால் அவர் முதலில் இரக்கத்தையே இரக்கமின்றி வென்றவரானார், அதனால் இந்தப் பூமி அவருக்கு வசப்பட்டது.
அவர் வலது காதில் ஒரு ருத்திராட்சமாலை இருந்தது, அது அவரால் கொல்லப்பட்ட 21 தலைமுறை ஷத்திரியர்களை எண்ணுவதற்கு பயன்படுவது போல இருந்தது.
பரசுராமன் தன் தந்தையினை ஒரு ஷத்ரிய அரசனிடம் பறிகொடுத்தவர், அதனால் இனி ஷத்ரிய வம்சத்தையே அழிப்பேன் என ஒவ்வொரு தலைமுறையாக அழித்து 21 தலைமுறை ஷத்ரியரை அவர் அழித்துப் போட்டார், அப்படியான பரசுராமன் ஷத்திரிய குலமான தன் முன் அதுவும் சிறுவர்களான தன் மகன்கள் முன் வந்து நிற்பதைக் கண்ட தசரதர் அவரால் தன் மகன்களுக்குத் தீங்கு விளையுமோ எனப் பதறினார்.
இரத்தினம் மண்ணிலும் உண்டு நாகத்திலும் உண்டு, ஆனாலும் நாகத்திடம் இருக்கும் இரத்தினம் எப்போதும் அச்சம் தரும், நிலத்தில் கிடைக்கும் இரத்தினம் மகிழ்ச்சி தரும், அவ்வாறே ராமன் எனும் பெயர் பரசு ஏந்தியவனுக்கும் தன் மகனுக்கும் பொதுவான பெயராக இருந்தாலும் பரசு ராமன் எனும் பெயரை உணர்ந்ததும் அஞ்சினான் தசரதன்.
தசரதன் பரசுராமனைக் கண்டதும் அவரைக் குளிரிவிக்கும் விதமாக “அர்க்யம், அர்க்யம்” எனச் சொல்லி தண்ணீர் கொண்டுவரச் சொன்னார், பரசுராமனின் பாதங்களைக் கழுவி உபசரிக்க அப்படிச் சொன்னார். ஆனாலும், தசரதனை ஒரு பொருட்டாகக் கருதாத பரசுராமன் கோபத்தால் விழிகள் பிதுங்கும் அளவு ராமனைத் தேடிச் சென்றார்.
அங்கே ராமன் அச்சமின்றி அவரை எதிர்கொண்டான், கையில் வில்லும் அதில் சொருகத் தயாரான அம்புடன் நிற்கும் தன்னைக் கண்டு அச்சமில்லாமல் போர்புரியும் தைரியத்துடன் வந்து நின்ற ராமனை நோக்கிப் பரசுராமன் சொன்னான்.
“ஓ ராமா, என் தந்தை ஜமத்கனி முனிவரைக் கொன்றதால் ஷத்ரிய குலம் மேல் எனக்குத் தீராப் பகை உண்டு, ஷத்ரியர்களை அடக்கி வைத்து அழிக்க பரசு ஏந்தியவன் நான், 21 தலைமுறையாக ஷத்ரியர்களை அடக்கி அழித்து வைத்த எனக்கு நீ தொல்லையாகின்றாய், தூங்கும் பாம்பைத் தடியால் தட்டி எழுப்பி கோபமூட்டுவது போல் உன்னுடைய பராக்கிரமத்தால் என் மனம் அடங்காக் கோபமடைகின்றது, ஷத்திரியன் உன்னால் மீண்டும் எழுச்சிப்பெறுகின்றான் எனும்போது என்னால் அமைதி கொள்ள இயலவில்லை.
ஹே ராமா, நீ இதுவரை யாராலும் வளைக்கமுடியாத சிவதனுசை ஜனகரின் தேசத்தில் வளைத்துவிட்டதை ஜனங்கள் பெருமையாக பேசிக்கொள்கின்றார்கள், நீ உடைத்தது வில்லை அன்று. மாறாக, என்னுடைய பெரும் புகழை உடைத்தாய் என்றே நான் எண்ணுகின்றேன், என்னைவிட பலசாலி எவனும் இதுவரை தோன்றியதில்லை, ஆனால் நீ அந்த வில்லை முறித்து உன்னை பலமுள்ளவன் எனக் காட்டி என்னை உனக்குத் தாழ்ந்தவனாக்கிவிட்டாய்.
அடே ராமா, இதுவரை ராமன் என்றாலே இந்தப் பரசு ராமனை மட்டுமே குறிக்கும், இப்போது அந்த வில்லை உடைத்ததால் ராமன் என்றால் பரசு ராமனா? தசரதனின் ராமனா? எனக் கேட்கும் அளவு எனக்குச் சரிக்குச் சமமாகிவிட்டாய். ஷத்ரியரை வெறுக்கும் எனக்கு ஷத்ரியனான நீ சமமாகிவிட்டாய் என்பதை விட எனக்கு என்ன அவமானம் வேண்டும்? என்னைக் குறிக்கும் சொல்லான ராமன் எனும் வார்த்தை உன்னையும் குறிப்பிடுவது அதுவும் எனக்குச் சமமாகக் குறிப்பிடப்படுவது எனக்குப் பெரும் வெட்கம் தருகின்றது, நான் அவமானப்படுகின்றேன்.
என் நிம்மதியினைக் குலைத்தவனே, அந்தச் சுப்பிரமணியனுக்குப் போட்டியாக பெரிய மலைகளையே பிளந்துப்போடும் நான் இருவரைத்தான் எனக்கான எதிரிகளாகக் கருதுகின்றேன், ஒருவன் என் தந்தையிடம் பசுவினைக் கவர்ந்து சென்ற அந்தக் கர்த்தவீரியன், இன்னொருவன் என் புகழைக் கவர்ந்து சென்றவனான நீ, அவன் செய்த அதே குற்றத்தைத்தான் நீ எனக்கு இழைத்தாய். அதனால் உன்னை இனி விடுவதில்லை.
என்னைத் தொடுவிட்டவனே, நான் பெரும் வீரன், ஷத்திரியரை கருவறுத்து அடக்கியவன். 21 தலைமுறை தோற்கடித்தவன் என்பதெல்லாம் இனி உன்னை வெல்லாதவரை பெருமை தராது, அக்னி காய்ந்த புல்லை அல்ல நீரையும் எரித்தால்தான் அதற்குப் பெருமை, வடவாக்னி ஒன்றே அத்தகைய பெருமையினைப் பெற்ற நெருப்பு, கார்த்தவீரியனைப் போல நீயும் தண்டனைக்குரியவன், அதனால் உன்னை வென்றால்தான் என் வீரம் சிறக்கும்.
அந்த வில்லை நீ பெரிதாக எண்ணாதே, ஆற்றின் வெள்ளம் கரையோர மரங்களின் வேரடி மண்ணை அடித்துச் சென்று அதனைப் பலவீனமாக்கினால் வெறும் காற்றிலே அம்மரம் வீழும், அப்படி விஷ்ணுவால் பலவீனமாகப்பட்ட வில்லை சிறு குழந்தையும் உடைக்கும். அப்படயான வில்லை உடைத்த நீ கர்வம் கொள்ளாதே.
அறியாப் பதரே, அன்று சிவனும் விஷ்ணுவும் வில்லேந்தி மோதினார்கள், சிவனின் வில்லை விஷ்ணு தன் ஹூங்கார சப்தத்தால் பலவீனமாக்கினார், அந்த வில் திரிபுரம் எரித்தது. இன்னும் பல சம்ஹாரங்களுக்குப் பின் ஜனகனின் முன்னோரை அடைந்தது என்றாலும் அது பலவீனமானதே, விஷ்ணு ஏந்திய வில்லை என் முன்னோர் மூலம் நான் பெற்றேன், இதோ அந்தப் பலமான வில்.
உன்னுடன் நான் மோத வரவில்லை. அது எனக்கு இழுக்காகப்படுகின்றது, சிவனின் வில்லை உடைத்தாய் அல்லவா? இதோ அதற்குச் சமமான விஷ்ணுவின் வில், இதை நீ நாணேற்றி அம்பை வைத்து இழுத்துவிட்டாய் என்றால் உன் வீரத்தை ஒப்புக்கொள்கின்றேன். எனக்குச் சமமானவன் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் , எல்லா வீரத்தையும் சண்டையிட்டுத்தான் அறியும் அவசியமில்லை.
அதைச் செய்ய முடியவில்லை என்றால் இதோ என் கோடரி, அதைச் சரணடைந்து அபயம் தேடி உன் கைகளால் கூப்பி வணங்கு. வில்பிடித்து தழும்பேறிய உன் கை என் கோடரியிடம் சரணடையட்டும், அப்படிச் செய்தால் நான் உன்னை விட்டுவிடுவேன், உன் கையின் தழும்புகள் போரிட்டு வந்தவை அல்ல , இப்படிச் சரணடைந்து அடைக்கலமாய்க் கும்பிட்டு வந்தது என விட்டுவிடுவேன்” என்றான்.
பரசுராமன் இதைச் சொன்னதும், புன்னகையே வடிவான ராமன் அவனை நோக்கிச் சென்று கைகளை உயர்த்தினான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 48
பரசுராமன் பயங்கர தோற்றத்துடன் மிகுந்த உக்கிரத்துடன் இப்படிச் சொன்னதும் ராமன் புன்னகையுடன் கூடிய அசையும் உதடுகளுடன் அவரை நோக்கிச் சென்றான், சென்றவன் அந்தப் பரசுராமனின் வில்லை கையில் எடுத்தான்.
பரசுராமனின் வில் விஷ்ணுவுடையது, ராமபிரானோ விஷ்ணுவின் அம்சம் என்பதால் ராமன் கை நீட்டவும் அந்த வில் அவன் கையில் ஒட்டிக் கொண்டது, மழைக்காலத்தில் நீல கருமேகம் அழகான வானவில்லுடன் காட்சியளிப்பது போல் அந்த வில்லோடு ராமன் மிகுந்தப் பொலிவுடன் நின்றான்.
பலமிக்க ராமன் அந்த வில்லை எடுத்து எளிதாக நாணேற்றினான், அதைக் கண்டு அதுவரை நெருப்பைப் போல் எரிந்து கொண்டிருந்தவரும் ஷத்ரியர்களின் சத்ருவானருமான பரசுராமர் புகை மட்டுமே எஞ்சிய அணைந்துபோன நெருப்புபோல காணப்பட்டார்.
வில்லை காட்டி சவால்விட்ட பரசுராமரும், அதை எளிதாக நாணேற்றி வென்ற ராமனும் எதிர் எதிரே நின்றார்கள். அது பௌர்ணமி கால அந்திப் பொழுதில் சூரியன் ஒளிமங்கிய நிலையில் இருக்கும் போது முழுநிலவு ஒளியுடன் எழும் காட்சி போல் இருந்தது.
வில்லை வளைத்து நின்ற ராமன் சுப்பிரமணிய சுவாமிக்கு இணையானவனாக பரசுராமன் முன் நின்றான், வில்லை வளைத்து நாணேற்றியபின் இலக்கை அடிக்காமல் விடுவது வீரனுக்கு அழகல்ல என்பதால் தன் இலக்கு எது என்ற சிந்தனையுடன் வளைத்த வில்லில் அம்பினினை ஏற்றி பரசுராமனை நோக்கிச் சொன்னான்.
“நீர் என்னிடம் வீண் வம்பு செய்து கடுமையாக எதிர்த்தவர் ஆயினும் நீர் பிராமண குலத்தவர் என்பதால் ஷத்ரிய தர்மப்படி தண்டிக்காமல் விடுகின்றேன். ஆனால், இப்போது எனது பாணத்துக்கு ஒரு இலக்கு அவசியம், அந்த இலக்காக நீர் எல்லா இடங்களுக்க்கும் செல்லும் உமது சஞ்சார சக்தியினைக் கொள்ளட்டுமா, அல்லது சுவர்க்கம் செல்லவேண்டி நீர் சேர்த்த புண்ணியத்தை நோக்கி அம்பை திருப்பட்டுமா? இரண்டில் ஒன்றை நீரே சொல்லும்” என்றான்.
பரசுராமன் குளிர்ந்த நிலையில் சொன்னான், “ராமா, ஆதிபுருஷனின் அம்சமான நான் உன்னை அறியாமல் இல்லை, பூமியினை அடைந்த சாந்த சொரூப மூர்த்தியான உன்னுடைய பராக்கிரமத்தைக் காணவே உம்மை ஆத்திரமூட்டினேன்.
என் தந்தை ஒரு பிராமணன் திருப்பி அடிக்கமாட்டான் எனக் கருதி கொன்றவர்களைச் சாம்பலாக செய்தவன் நான், இருபத்தோறு தலைமுறைகள் அவர்களை அடக்கி வைத்தவன் நான், கடலையே ஒடுக்கி மனிதர் வாழும் இடமாக செய்தவனும் நான், அப்படியான நான் உன்னிடம் பெற்ற தோல்விதான் எனக்குப் பெருமை, அதைக் கருதி நான் மகிழ்கின்றேன்.
நீ உன்னுடைய அம்பினை எனக்கு எதிராக செலுத்தும் அவசியத்தில் இருப்பதால் என் சஞ்சார சக்தியினை அழிக்காமல் என் சுவர்க்கத்துகுரிய பலனை அழிக்கலாம், காரணம் நான் சொர்க்கம் செல்ல விரும்பாமல் இங்கே சஞ்சரிக்க விரும்புகின்றேன், அதனால் அதனை அழித்துப்போடு என்றார்.
அப்படியே ராமன் கிழக்கு நோக்கி தன் அம்பினைச் செலுத்தினான், சொர்க்கம் செல்லும் அப்பாதையில் சென்ற அம்பு பரசுராமன் புண்ணியம் அனைத்தையும் அழித்துவிட்டு அவர் அப்பக்கமே செல்லாதபடி தாழ்பூட்டி நின்றது.
பரசுராமர் தன் கர்வம் அழிந்து நின்றார், அந்நேரம் ராமன் தான் வயதில் இளையவன் எனச் சொல்லி அவர் பாதம் பணிந்தான், தம்மால் வெல்லப்பட்டவர்கள் மேல் அன்பு செலுதுத்துதலே வீரனுக்கான பெருமை எனும் தர்ம்த்தை ராமன் அறிந்திருந்தான்.
பரசுராமன் சொன்னான், “ராமா, நீ ஏன் என்னிடம் மன்னிப்புக் கேட்கின்றாய், நீ நான் விரும்பாததும் எனக்கு அவசியமற்றதுமான சொர்க்கம் செல்லும் வாய்ப்பினையே அழித்தாய். அங்கு நானே உனக்கு நன்றியுடையவன், நீ உன் செய்கையால் என் தாயின் ரஜோ குணத்தில் இருந்து என் தந்தையின் சத்வ குணத்துக்கு என்னை மாற்றினாய், இப்படி நீ எனக்கு நன்மையே செய்தாய். அதனால் நீ வருந்தவேண்டிய அவசியமே இல்லை.
இதோ நான் விடைபெறுகின்றேன், தேவகாரியம் செய்யவந்தவன் நீ, உன் பணி நல்லபடியாக நடக்க வாழ்த்துகின்றேன்” என வாழ்த்திவிட்டு மறைந்தார்.
தன்னோடு மோத வந்த பரசுராமனை வென்று திருப்பி அனுப்பிய ராமனை ஓடி வந்து கட்டியணைத்தான் தசரதன், ராமன் மறுபிறப்பு எடுத்ததாக நினைந்து மீண்டும் மீண்டும் கட்டித் தழுவி மகிழ்ந்தான், காட்டுத் தீயால் பற்றி எரியும் மரம் மழைநீரால் குளிர்வது போல கொஞ்சநேரம் கடும் அச்சத்தில் இருந்த தசரதன் இப்போது நிம்மதி அடைந்து பெருமூச்சு எழுப்பினான்.
இவையெல்லாம் நடந்து முடிந்தபின் தசரதன் தன் மகன்களோடும் தன் மருமகள் சீதையோடும் கானகவழி தாண்டி அயோத்திக்குத் திரும்பினான், அங்கே அயோத்தி நகர மாந்தர்கள் அழகில் சிறந்த சீதையினைக் காண்பதற்காக ஜன்னல் ஓரம் வந்து நின்றார்கள், அப்போது அந்த ஜன்னல்கள் நீலக்குவளை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டதுபோல் அழகு பெற்றன.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 49
காலம் தன் கடமையினைச் செய்தது. தசரதனுக்கான அந்திமத்தை அறிகுறியாய்க் காட்டிற்று, பல ஆயிரம் வருடம் இவ்வுலகை ஆண்டு எல்லாச் சுகங்களையும் அனுபவித்த தசரதன் முதுமை அடைந்தான், முதுமை முக்திக்கான வாசல் என்பதையும் உணர்ந்தான்.
ஒளிகொடுக்கும் விளக்கு இரவெல்லாம் எரிந்து அதிகாலை ஜூவாலை மங்கி அணையும் போது போராடுவது போல் அவன் முதுமையால் தளர்ந்திருந்தான்.
கைகேயிடம் அச்சம் கொண்ட அவனின் கிழட்டு பருவம் அவன் நரைத்த காதோரம் வந்து உடனே ராமனை அரசனாக்கிவிடு எனச் சொன்னதை அவன் மனம் புரிந்து கொண்டது, அதனால் அவன் ராமனுக்கு முடிசூட்ட தீர்மானித்தான்.
தோட்டத்தின் சிறிய கால்வாய் எல்லா மரங்களுக்கும் நீரை கொண்டு சென்று மகிழ்வித்து வாழவைப்பதை போல ராமன் முடிசூடச் போகின்றான் எனும் செய்தி அயோத்தி நகரின் ஒவ்வொரு மக்களையும் சென்றடைந்து அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியினைக் கொடுத்தது.
எல்லோருக்கும் இனிமையான அந்தச் செய்தி கைகேயிக்கு மட்டும் துன்பத்தைக் கொடுத்தது. அவள் பெரிய தீர்மானம் எடுத்தபடி தசரதனைச் சந்தித்தாள், அவளால் பெருகிய தசரதனது துக்கத்தின் கண்ணீர் அங்கே ராமனின் அபிஷேகத்துக்காய் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எல்லாம் வெள்ளம்போல் அடித்துச் சென்றது.
பெரும் கோபம் கொண்ட அவளைத் தசரதன் அமைதிப்படுத்த முயன்றான், அவள் மனதைக் குளிர்விக்க முனைந்தான். ஆனால், இந்திரன் பொழியும் மழையால் பூமி குளிர்ந்து நாகங்கள் புற்றில் இருந்து வெளிவருவது போல் அவளிடமிருந்து இரு வரம் வேண்டும் எனும் கோரிக்கை வந்தது. முன்பு, தசரதன் தன்னிடம் சொன்ன வாக்குப்படி அவ்வரங்களை இந்நேரம் கேட்டாள்.
சம்பரன் எனும் அசுரன் தேவலோகத்தைக் கைப்பற்ற போர் செய்தபோது தேவர்களுக்குத் துணையாக தசரதனும் சென்றான், வீரம் கொண்ட அந்தக் கைகேயி தசரதனின் தேர் சாரதியாக துணையாகச் சென்றாள். அப்போரில் அவர் சிக்கி வீழ்ந்தபோது கைகேயி அவரைக் காத்தாள், தேரின் அச்சாணி தவறியபோது தன் கட்டை விரலை அச்சாணியாக்கி அவரைத் தாங்கிக் கொண்டாள், அப்போது அவளுக்கு இரு வரம் கேட்கும் உரிமையினைத் தசரதன் கொடுத்தான். அதை இப்போது அவள் பயன்படுத்திக் கொண்டாள்.
முதல் வரத்தின்படி ராமனை வனவாசம் அனுப்பியவள் இரண்டாம் வரத்தின்படி பரதனை அரசனாக்கினாள், ஆனால் இந்த வரங்களால் அவள் அடைந்தது விதவை நிலை என்பதைத் தவிர வேறேதுமில்லை.
உண்மையில் தனக்குப் பட்டாபிஷேகம் என்றதும் ராமன் கலங்கினான், தன்னிடம் முடியினைக் கொடுத்துவிட்டால் தந்தை அதன்பின் கானகம் சென்றுவிடுவார், அந்த வாழ்வு கடினமானது என்பது அவனுக்குத் தெரியுமென்பதால் கலங்கினான். இப்போது தனக்குக் காடு செல்ல உத்தரவு என்பதால் காட்டில் துன்பப்பட வேண்டிய நிலை இனித் தசரதனுக்கு இல்லை என்பதை நினைந்து மகிழ்ந்து, தந்தைக்குரிய கானக வாழ்வை தான் சுமந்து அவனுக்கு உதவுவதாக நிம்மதிக் கொண்டான் ராமன்.
பட்டாடை அணிந்து பவனிவரும்போது அவன் முகம் எப்படிப் புன்னகையோடு இருந்ததோ அதே புன்னகை அவன் மரவுரி உடுத்திக் கானகம் செல்லும்போதும் இருந்தது, இன்பம் துன்பம் எனும் இரு நிலையிலும் அவன் விருப்பு வெறுப்பினைக் கடந்த நிலையில் இருந்தான், அவனின் அந்த உயர்ந்த குணம் கண்டு ஜனங்கள் வியப்படைந்தனர்.
கொடுத்த வாக்கை தவறினான் தசரதன் எனும் அவப்பெயர் தந்தைக்கு வராமல் இருக்க தான் கானகம் சென்றான் ராமன். அப்படித் தந்தையின் பெயரை அவன் காத்தான், இதனால் பெரியோர்களெல்லாம் அவன் மேல் பெரும் மரியாதை கொண்டனர்.
அவன் தண்டகாரண்யம் எனும் வனத்தில் சீதையுடனும் லட்சுமணனுடனும் புகுந்தான். அந்த வனம் தண்டகன் எனும் இஷ்வாகு வம்சத்தில் வந்த மன்னனின் நாடாக முன்பு இருந்தது, சுக்கிரனின் சாபத்தால் அது காடாக இருந்தது. விந்திய மலைக்கும் கோதாவரிக்கும் இடைப்பட்ட வனமாக அது இருந்தது. மஹாராஷ்டிரத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அதனை ஜனஸ்தானம் என்பார்கள், அந்த வனத்தில் வசிக்கத் தொடங்கினான் ராமன்.
ராமன் பிரிந்ததாலும் அவனோடு லட்சுமணன் சென்றதாலும் தன் உயிரில் பாதி பிரிந்தது போல் துயருற்றான் தசரதன், இந்தப் பெரும் சாபம் குற்றமற்ற முனிவரின் மகனை தான் கொன்றதால் வந்ததென அப்போது உணர்ந்தவன் இனி இச்சாபத்தில் இருந்து விடுபட தான் உடலை துறப்பதே சரி என முடிவெடுத்துப் புத்திரச் சோகம் எனும் வாளால் தன்னை வெட்டி மாண்டான்.
தசரதன் இறந்துபோனதால் அங்கு அரசன் இல்லை, ராமனோ காட்டில் இருந்தான், பரதனும் சத்ருக்கனும் அந்நேரம் அயோத்தியில் நடந்ததை அறியாதபடி மாமனார் வீட்டில் இருந்தார்கள், இதனால் சுவை கொண்ட பண்டத்தை அள்ள வரும் எறும்பு கூட்டம் போல் பகைவர்கள் கோசலை நாட்டை அபகரிக்கத் திட்டமிட்டார்கள்.
அந்நேரம் தசரதனின் மந்திரிகள் மிகுந்த தேர்ச்சி உடைய ராஜதந்திரிகளைப் பரதனின் மாமனார் வீட்டுக்கு அனுப்பி அவனை வரவழைக்க முடிவெடுத்தார்கள், தேர்ச்சியுடைய அந்தப் பணியாளர்களும் தசரதனின் இறப்பு ராமனின் பிரிவு பற்றி எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கி வைத்து பரதனை ஒன்றுமறியாதபடி அழைத்து வந்தார்கள்.
அயோத்தி வந்த பரதன் நடந்ததை அறிந்தான், இதற்கெல்லாம் காரணம் தன் தாயும் அவளின் கனவான இந்த ராஜ்ஜியமும் என்பதை அறிந்தவன் அவளோடு அந்த அரசப் பதவியினையும் மனதார வெறுத்தான்.
பெரும் சேனையும் நாட்டையும் கொண்ட பரதன் அவற்றை வேண்டாமல் தன் அண்ணன் ராமனை நோக்கிக் காட்டுக்குள் ஓடினான், முனிவர்கள் தவம் செய்யும் அந்தக் கானகதின் உயர்ந்த மரங்களிடையில் தன் பிரியத்துகுரிய அண்ணனைத் தேடி தேடி கண்களில் நீர் வழிய ஓடினான்.
சித்ரகூட மலையினைச் சார்ந்த கானகத்தில் ராமனைக் கண்ட அவன் தசரதன் மரணத்தைச் சொல்லி அழுதான், அப்படியே தசரதனுக்குப் பின் தான் முடிசூடவில்லை என்பதையும் ராமனுக்குரிய உணவைத் தான் எச்சில் செய்யவில்லை எனச் சொல்லி அவன் காலடியில் பணிந்தான்.
மூத்தவன் இருக்க இளையவன் அரசைப் பெற்றுக்கொண்டான் எனும் அவப்பெயரை தவிர்க்க பரதன் போராடினான்.
ராமனோ பரதனிடம் அன்பாய், கருணையாய் மொழிந்தான். தம்பி, உன் பாசத்துக்கு நான் கட்டுப்பட்டால் தகப்பன் சொல்லை மீறியவனாகிவிடுவேன், தந்தை இறந்தவுடன் அவன் உத்தரவைக் காற்றில் விட்டு ராஜ்ஜிய ஆசை கொண்டு வந்துவிட்டான் ராமன் எனும் அவப்பெயரை நான் விரும்பவில்லை.
தகப்பன் வார்த்தையினை எக்காலமும் காத்தான் எனும் பெருமையினையே நான் விரும்புகின்றேன், தகப்பனுக்குப் பின் மூத்த அண்ணனே ஒரு குடும்பத்தில் தகப்பன் ஸ்தானத்தை பெறுகின்றான், அதனால் நான் தகப்பன் இடத்தில் இருந்து ராஜ்ஜியத்தை உனக்குத் தருகின்றேன் இதனால் நீ பழி ஏதும் ஏற்றவனாகமாட்டாய். அதனால் அஞ்சாமல் சென்று அரியணையில் அமர்வாய், இது உன் அண்ணனின் உத்தரவு என்றான்.
அந்த உத்தரவை மீற முடியாப் பரதன் ராமனின் கால் பாதகைகளைக் கேட்டான், அரசையும் தன் உரிமையுமே தம்பிக்குக் கொடுத்த அந்த தமையனுக்கு அந்த காலணிகளா பெரிது, மாட்டுவண்டியினையே கொடுத்தவன் சாட்டையினைக் கொடுக்கவா தயங்குவான்? அதையும் அன்போடு கொடுத்தான் ராமன்.
ராமனில்லா அயோத்திக்குள் செல்லாமல் நந்திகிராமம் எனும் ஊரில் அமர்ந்த பரதன், ராமனின் பாதகைகளை அரியணையில் வைத்து வணங்கி அவற்றின் கீழ் இருந்து ஆட்சியினைக் கவனிக்கத் தொடங்கினான் , இந்த அரசு தனக்கு ராமனால் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட பொருள், அவன் வந்ததும் திருப்பித் தரவேண்டும் எனும் கவனத்துடனே அவன் ஆட்சி செய்தான்.
பரதன் தன் அண்ணன் மேல் மிகுந்த பக்தி கொண்டவன், அதனால் அண்ணன் காட்டில் வனவாசம் செய்வதுபோல் தானும் முனிவனுக்குரிய வாழ்வினை வாழ முடிவெடுத்து தவசியாய் வாழ்ந்தான். அரசபோகங்களில் அவன் மனம் செல்லவில்லை , தாய் செய்த பாவத்தை தவவழியில் போக்குவேன் என்பது போல் அவனின் கோலம் இருந்தது.
இஷ்வாகு வம்சத்தில் முதிர்ந்த வயதுடையோர் தவம் செய்வது அதிசயமல்ல, ஆனால் இளம் வயதிலே தகப்பனுக்காக ராமனும் ராமனுக்காகப் பரதனும் தவவாழ்க்கை வாழத்தொடங்கினார்கள்.
தர்மவானனான ராமனை அக்கானகம் மிகவும் கொண்டாடியது, அந்நேரம் ராமபிரான் களைப்பினால் சீதை மடியில் மர நிழலில் உறங்கும்போதும் அந்த நிழல் சுருங்கா வண்ணம் மரம் நிழல் கொடுத்தது, சூரியன் நகர்ந்தாலும் நிழல் நகராதபடி அம்மரம் அவருக்குக் காவலாய் இருந்தது.
அப்படி ராமபிரான் சீதை மடியில் உறங்கியபோது காகம் ஒன்று அவளின் கழுத்துப்பக்கம் நகத்தால் கீறிச் சென்றது, அக்காகம் இந்திரனின் மகனான ஜெயந்தனின் உருவமாக இருந்தது, காகம் ஒருவரைக் கீறுவது அபசகுனம் பின் வரும் ஆபத்தின் முன்னெச்செரிக்கை என்பதால் சீதை பதறினாள், அவளின் பதற்றம் கண்ட ராமன் அவள் மடியில் இருந்து எழுந்தான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 50
அந்தக் காகம் சீதையினை மாறி மாறி கொத்துவதைக் கண்ட ராமன் அருகிருந்த தர்ப்பைபுல்லைப் பறித்துத் தன் மந்திரத்தால் அதைப் பாணமாக மாற்றி அதை நோக்கி வீசினான். அந்தப் பாணம் தோல்வியடையாதது என்பதால் காகம் தன் ஒரு கண்ணை மட்டும் ராமனிடம் இழந்து தப்பித்தது. பறந்தது.
காக்கை இப்படி ஒருவரை அடிப்பது நல்ல சகுனமல்ல என்பதை உணர்ந்த ராமன் இந்தச் சித்திரக்கூட மலை அருகில் இருப்பதால் பரதனும் இன்னும் தன்னைச் சார்ந்தோரும் அடிக்கடி தன்னைச் சந்திக்க வருவார்கள் அவர்களால் ஏதும் இடையூறு வரலாம் என எண்ணியவனாய் அங்கிருந்து வேறிடம் செல்ல முடிவெடுத்தான்.
அப்படி ராமன் சீதையோடும் லட்சுமணனோடும் அக்கானகத்தை விட்டுப் பிரிந்தபோது அங்கிருந்த மான்களெல்லாம் ராமன் தங்கள் மேல் வைத்த அன்பை எண்ணி கலங்கி அழுதன.
ராமன் ஒவ்வொரு முனிவரின் ஆசிரமாகக் கடந்து தெற்கு நோக்கிச் சென்றான், அது தட்சண்ய காலத்தில் சூரியன் தெற்கு நோக்கி நகரும் காட்சிபோல் இருந்த்து. தேஜஸ் ஒளி மிக்க ராமன் ஒவ்வொரு முனிவரின் ஆசிரமாகக் கடந்து சென்றது திருவாதிரை முதல் ஸ்வாதி வரையிலான நட்சத்திரங்களைச் சூரியன் கடந்து தெற்கு நோக்கிச் செல்வது போலவே இருந்தது.
ராமனுக்கு பின்னால் சீதை ராஜ்ய லட்சுமியாக நடந்து வந்தாள், தேசம் எனும் ராஜலட்சுமி ராமனை அடையவிடாதபடி கைகேயி தடுத்தாலும் அந்தத் தேவி ராமனைப் பின் தொடர்ந்தே வருவது போல் சீதை வந்து கொண்டிருந்தாள்.
அவர்கள் அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்தபோது மகரிஷியின் பத்தினியான அனுசூயை சீதையினை அன்புடன் வரவேற்று உபசரித்தாள், சீதைக்கு அவள் மலர் மாலை, வஸ்திரம், சந்தனக் குழம்பு என வழங்கினாள், அந்த வனத்தின் சந்தனம் மிக மிக மணமிக்கதாய் இருந்தது, அதில் கலக்கப்பட்ட கஸ்தூரி புனுகு போன்றவை இன்னும் சுகந்தமான மணத்தைக் கொடுத்தது, அது சீதைக்கு நிரந்தரமான வாசத்தைக் கொடுத்தது, வண்டுகள் அந்த வாசனை புதிய மலருடையது என எண்ணி அவளைச் சுற்றி ரீங்காரமிட்டன.
அந்திவானில் எழும் கருஞ்சிகப்பு மேகம் போன்ற நிறம் கொண்ட ராகு சந்திரனை மறைப்பது போல் ராமன் தன் வழியில் செல்லும்போது விராதன் எனும் அசுரன் ராமனை மறித்துக்கொண்டான்.
அவன் ஆவணி புரட்டாசி மாதங்களுக்கு இடையே பெய்யும் மழையினை வறட்சி புகுந்து பறித்துச் செல்வது போல ராமனுக்கும் சீதைக்கும் இடையே வந்து கொண்டிருந்த சீதையினைக் கவர்ந்தான்.
அவன் யட்சகுலத்தவன். குபேரனின் சாபத்தால் அசுரனானவன், அவன் பிரம்மனிடம் எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணமில்லை எனும்படி வரம் வாங்கியிருந்ததால் அட்டகாசம் பல செய்தான், அவன் சீதையினைக் கவர்ந்ததும் ராமன் தன் அம்புகளால் அவனைத் துளைத்தார், அதனால் அவன் சீதையினை விட்டுவிட்டு ராம லட்சுமணர்களைத் தன் தோள்மேல் தூக்கி வைத்துச் சுழற்றினான்.
அந்நேரம் ராம லட்சுமணர்கள் அவன் வலது இடது தோள்களை வெட்டிப்போட அவன் கையற்றவன் ஆனான். ஆனாலும் அவன் அழியவில்லை, அட்டகாசம் செய்தான், அவன் கால்களையும் வெட்டிய ராமன் மலைபோல் வீழ்ந்த அவனை நிலத்திலே புதைத்து வைத்தார்.
அவனுக்கு ஆயுதங்களால் மரணமில்லை ஆனால் பூமியில் இட்டு மூடினால் மரணிப்பான் என்பதால் ராமன் அப்படிச் செய்தார், அது அவனின் மூச்சு காற்றால் கானகமே கெட்டுவிடும் என எண்ணி ராமன் அவனை உயிரோடு பள்ளத்தில் இட்டு மூடியது போலிருந்தது.
இன்னும் தெற்கே வந்த ராமன் அகத்தியரை சந்தித்து ஆசிபெற்று தான் வசிக்க நல்ல இடம் ஒன்றை அடையாளம் காட்டும்படி வேண்டினான், அகத்திய பெருமான் அவனுக்குத் கோதாவரி ஆற்றுப்பக்கம் பஞ்சவடி எனும் அழகிய வனத்தைக் காட்டி வசிக்கச் சொன்னார், ராமன் அங்குத் தன் தர்மம் கெடாதபடி இனிதே சீதையுடனும் லட்சுமணனுடனும் வசிக்கத் தொடங்கினான்.
அப்போது விஸ்ரவஸ் எனும் முனிவருக்கும் கேகசி எனும் ராட்சசிக்கும் பிறந்தவளான சூர்ப்பனகை எனும் பெண் அங்கு வந்தாள். அவள் இலங்கை வேந்தன் ராவணனின் தங்கையுமானவள். ராமனின் அழகைக் கண்டு மதிமயங்கி மிகுந்த ஆசை கொண்ட அவள் வெப்பக்காலத்தில் நாகமானது குளிர்ச்சியான சந்தனமரத்தை ஆசையுடன் தழுவ விரைதல் போல ராமனை நோக்கி அடங்கா ஆசையுடன் சென்றாள்.
(தொடரும்..)