காளிதாசனின் ரகுவம்சம் – முன்னுரை.
காளிதாசனின் ரகு வம்சம் – முன்னுரை.
அபின் போன்ற வஸ்துக்களை ஒருமுறை இழுத்துவிட்டால் விடமுடியாது, அரசியல் பதவியில் ஒருமுறை அமர்ந்துவிட்டால் அந்தப் போதையில் இருந்து வெளிவரமுடியாது என்பது போல மகாகவி காளிதாசனைப் படிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடமுடியாது, உலகின் மாபெரும் கவிஞர்களில் அவனுக்கே முதலிடம்.
மிகத் தந்திரமான பிரிட்டிஷார் அவனைக் கிழக்கின் ஷேக்ஸ்பியர் என்றார்கள், உண்மையில் ஷேக்ஸ்பியர்தான் மேற்கின் காளிதாசன் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும், இவ்வளவுக்கும் காளிதாசன் அருகில் வரக் கூட அவனுக்குத் தகுதியில்லை.
வாழ்வில் ஒரு இந்து தெரிந்திருக்க வேண்டிய விஷயம் சமஸ்கிருதம், சுவாமி விவேகானந்தர் சொன்னது போல இந்துக்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் சமஸ்கிருதம் எல்லா இந்துக்களிடமும் சேராததே. அது மட்டும் நடந்திருந்தால் தேசத்தின் ஒவ்வொரு இந்துவும் தான் ஒரு இந்து என்பதில் கர்வமும் பெருமையும் கொண்டிருப்பான், அதன் மாபெரும் தாத்பரியமெல்லாம் சமஸ்கிருதம் படித்தால் அன்றி புரியாது என்பது சரியான வார்த்தை.
சமஸ்கிருதம் முழுக்கத் தெரிந்திருந்தால் காளிதாசனை இன்னும் ஆழமாக அணு அணுவாக கம்பனைபோல் கொண்டாட முடியும், ஆனால் பலவகை சதிகளாலும் குறிப்பாக சமஸ்கிருதம் தமிழனுக்கு ஆகாது எனும் குருட்டு அரசியலாலும் அதைப் படிக்க வாய்ப்பில்லாமல் போனது.
தமிழை அறியாதவன் கழுதை காகிதம் உண்பது போல் கம்பனை படிப்பான் என்பது போல சமஸ்கிருதம் அறியாதவன் முழுக்க காளிதாசனை ரசிக்க முடியாது , அது குரங்கு மலர்மாலையினை எடுத்துப் பார்ப்பது போலாகிவிடும்.
எனினும், ஆன்றோர்கள் செய்து வைத்த மொழியாக்கம் கைகொடுக்கின்றது, முடிந்தவரை அவன் சொன்ன வர்ணனையின் ஆழத்தை அறிய முடிகின்றது, அந்த இலக்கியத்தோடு அப்படியே கரைய முடிகின்றது.
அவனின் மேகதூதம், சாகுந்தலை வரிசையில் ரகுவம்சம் படித்துக் கொண்டிருக்கின்றோம், ராமனின் கதையினை இதைவிட ஆழமாக சொன்ன நூல் வேறு எதுவுமில்லை.
வால்மீகி ராமாயணம் ஓரளவு சொல்லிற்று, கம்பன் ராமன் கதையினை மட்டும் பட்டாபிஷேகம் வரை பாடினான், இன்னும் துளசிதாசர் போன்றோரும் ராமனையே சுற்றி வந்தார்கள்.
காளிதாசன் ராமனின் முன்னோர்கள் வரிசையில் தொடங்கி ராமனின் வாரிசுகள் வரை ஆழமாக செல்கின்றான், மிகப் பெரிய இடத்தில் இருந்து அவன் வம்சத்தையே கூர்ந்து பார்த்து காவியமாகப் பாடுகின்றான்.
மகாபாரதம் போலவே ராமாயணமும் வாழ்கை தத்துவத்தை அழகாகச் சொல்லும் காவியம், மகாபாரதம் என்பது வாழ்வியல் தர்மத்தைப் போதிப்பது போல ராமாயணமும் அதையே அழகுறப் போதிக்கின்றது.
ராமாயணம் என்பது ராமன், சீதை, தசரதன், கைகேயி, பரதன், லட்சுமணன், அனுமன், ராவணன் , கும்பகர்ணன் , விபிஷ்ணன் என்பவர்கள் வாயிலாக மட்டும் நீதி போதிப்பதில்லை.
அது திலீபன், ரகு, அஜய், தசரதன் என ராமனின் முன்னோர்கள் வடிவிலும் லவன் குசன் தொடங்கி நளன் என அவனின் வம்சம் வழியிலும் பல பாத்திரங்களில் பெரும் நீதியினைப் போதிக்கின்றது, இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் போதிக்கும் நீதியும் தத்துவமும் மகாபாரதத்தின் பெரும் பாத்திரங்களுக்கு ஈடானது, அதை முழுக்கத் தந்தான் காளிதாசன்.
அவனின் படைப்புக்களில் மிகப் பெரியதும் பிரமாண்டமானதும் இது, அவனின் மகா அழகான வர்ணனையிலும் மிக நுணுக்கமான ஆழமான போதனையிலும் அது மிளிருகின்றது.
அதனை நாம் இனி அவ்வப்போது பார்க்கலாம், இதெல்லாம் ஒவ்வொரு இந்துவும் தெரிந்திருக்க வேண்டிய மிக பழமையான வாழ்வியல் தர்ம, சனாதன தர்ம போதனைகள், உலகில் எங்கும் கிடைக்காத ஞானக் கருவூலங்கள்.
இதனால் இந்த ரகுவம்சத்தில் நாம் சிறிது உலாவலாம், இது பாலகுமாரனின் மகாபாரதம் போல் நீண்டு எழுதவேண்டிய காவியம். பல பாகங்களாக வரவேண்டிய காவியம் என்றாலும் இப்போதைக்கு காளிதாசன் பாடியதனை தமிழில் மட்டும் பார்க்கலாம்.
காலம் வாய்ப்பளித்தால் பிரிதொரு நாளில் இதனை மாபெரும் நூலாக பல பாகங்கள் வரும்படி நீளமாக உரை நடையாக எழுதலாம் எனக் கருதுகின்றோம்.