காளிதாசனின் ரகுவம்சம் : 01 கடவுள் வாழ்த்தும் அவை அறிதலும்.

காளிதாசனின் ரகு வம்சம் : 01 கடவுள் வாழ்த்தும் அவை அறிதலும்.

“சொல்லும் அதன் பொருளும் போல சேர்ந்திருக்கும் சிவனையும் பார்வதியினையும் வணங்கி இந்தக் காவியத்தினைத் துவங்குகின்றேன், இருவரும் இணைந்தே பக்தர்களுக்குப் பெரும் வரத்தை அருள்வார்கள் என்பதால் அவர்களை வாழ்த்திப் பணிகின்றேன்.

இந்தக் காவியத்தினை நான் எழுதும்போது அதன் சொல்லும் பொருளும் எல்லா மக்களையும் சென்றடையும் வரத்தை அவர்களே எனக்கு அருளட்டும். நானும் ரகுவம்ச பெருமையினை முழுக்க உணர்ந்து எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லும்படியான‌ சொல்லையும் பொருளையும் அவர்களே எனக்கு அருளட்டும்.

(உஜ்ஜைனி மகா காளியினையும் காலகாளேஸ்வரரையும் மனதார பணிந்து துவங்குகின்றான் காளிதாசன்)

சூரியனிடம் இருந்து உருவான அந்தக் கீர்த்தி மிக்க ஒளிபொருந்திய ரகுவம்சம் எங்கே? அறிவில் குறைந்த மூடனான நான் எங்கே?

ரகுவம்ச பெருமையும் மாபெரும் பாரம்பரியமும் கடல் போன்றது. பெரும் கடலை ஒரு கட்டையினைப் பிடித்துக் கடக்க முயல்வதைப் போல இந்த ரகுவம்சத்தின் பெருமையினை என் குறைந்த அறிவினால் அளந்து சொல்ல முயல்கின்றேன்.

அறிவும் ஞானமும் கவித்துவமும் இல்லாத நான், சிறந்த ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் இந்தக் காரியத்தைச் செய்ய முயல்வது மிக உயர்ந்த கிளையின் கனியினைக் குள்ளமான ஒருவன் துள்ளிப் பறிக்க முயல்வதற்குச் சமமானது, முடவன் ஒருவன் மரமேற முயல்வதற்கும் ஒப்பானது.

அதனால் இந்தப் பெரும் ஆசையில் நான் இதனை எழுத விழைவது கண்டு எல்லோரும் என்னைப் பரிகாசிப்பார்கள் என்பதையும் அறிந்தே செய்கின்றேன்.

எனக்கு முன் இருந்த வால்மீகி போன்ற ஞானியர் செய்த மாபெரும் காரியத்துக்கு நன்றி உரைக்கின்றேன். யாராலும் துளைக்கமுடியாததும், எதுகொண்டும் நுழைக்க முடியாததுமான‌ அந்த இராமாயணம் எனும் வைரமணிகளை அவர்கள் துளையிட்டு வைத்ததர்கள், அதனால் அதனை மணியாக கோர்க்கும் காரியம் எனக்கு எளிதாயிற்று, இதனால் இங்கு எனக்கு எந்தச் சிரமமுல்லை, அதனால் என் காரியத்துக்கு ஒரு சிறப்புமில்லை.

இரகுவம்சம் மன்னர்கள் பரிசுத்தமான குலத்தில் உதித்தார்கள், தர்மத்துக்கான வெற்றியினை அடையும் வரை போராடும் குணமும் அவர்களோடு உதித்தது, நிலங்களை மட்டுமல்ல கடல்களையும் ஆண்ட அவர்கள் தேவலோகத்தினைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சாஸ்திர அறிவும் வேத அறிவும் பெருமைப்பட வைப்பது, ஒரு யாகமும் குறைவுபடாதபடி முறையாய்ச் செய்து வந்தவர்கள் அவர்கள், தங்களை நம்பி வந்து ஒருவன் கேட்கும் உதவினைப் பெரிதாகக் கருதி செய்து கொடுத்தவர்கள், தீர்ப்பு சொல்வதில் எல்லா வகை நியாய தர்மமும் அலசி ஆராய்ந்தே முடிவினை உரைப்பார்கள், காலம் மாற மாற அறிவும் சிந்தையும் மாறவேண்டும் என்பதில் கருத்தாய் இருந்து அறிவை பெருக்கிக் கொண்டே இருந்தவர்கள்.

அவர்களின் இராஜதர்மம் முன்னோர் வகுத்த விதிப்படியே இருந்தது, அவர்களின் அரசத்தேர் முன்னோர் செய்த சாலைகளிலே ஓடியது. அவர்கள் தானம் செய்வதற்கே பொருள் சேர்த்து வைத்தார்கள், அதிகம் பேசினால் பொய்யும் கலந்து உதித்துவிடும் என்பதால் அளவாய் அர்த்தமாய் பேசினார்கள்.

போரிட செல்லும் போது கொள்ளையிடவோ அபகரிக்கவோ அல்லாமல் தங்கள் வலிமையினைக் காட்டும் புகழுக்கே செய்தார்கள்; பகைவரை எச்சரிக்கவே களம் புகுந்தார்கள்; வம்ச விருத்திக்காய் பெண்களோடு வாழ்ந்தார்களே தவிர இன்பம் துய்த்துக் கொண்டாடும் சிற்றின்பத்துக்காய் மட்டும் அல்ல‌.

அவர்கள் வாழ்வை திட்டமிட்டு வாழ்ந்தார்கள். பால்யவயதில் எல்லா வித்தையும் கற்பார்கள்; இளம் வயதில் செல்வாக்கோடு அரசாட்சி செய்து குடிவகை காப்பார்கள்; இராஜ்ஜியத்தை வலுக்கச செய்வார்கள்; இளமை முடியும் போது தவக்கோலம் பூண்டு காட்டுக்குச் செல்வார்கள்; முதுமை தொடும்போது யோகத்திலே வாழ்வை முடிப்பார்கள்; எங்கும் யாருக்கும் அவர்கள் சுமையாக, தடையாக இருந்ததே இல்லை.

நான் தகுந்த சொற்கள் இல்லாத வகையில் வறுமைமிக்கவன், கவித்துவ உவமைகள் ஏதுமில்லாத தரித்திரன். ஆனாலும், சூரியனைக் கண்ட அதிகாலை பறவை அதன் பெருமையினைச் சொல்லமுயல்வது போல இரகுவம்சம் மன்னர்களின் பெருமையினைக் கேள்விபட்டதால் என் மனம் இந்தக் காவியத்தை எழுதத் தூண்டுகின்றது, அந்த உற்சாகத்தால் அவர்கள் சரித்திரத்தினைக் கூறுகின்றேன்.

பொன் சுத்தமானதா இல்லை கலப்படம் மிகுந்ததா அல்லது போலியா என்பதை அனுபவமான பொற்கொல்லன் ஆராய்ந்து அறிவது போல, மூடனான நான் கூறும் இந்த இரகுவம்ச காவியத்தை அறிவில் சிறந்த கவிஞர்களும், ஆன்றோரும் ஆராய்ந்து சொல்லவேண்டும் எனவும் கோருகின்றேன், மற்றவர்களைப் போல் அல்லாமல் அவர்களே இதன் குறைகளைச் சொல்லும் தகுதியினைக் கொண்டவர்கள்.

வேத மந்திரமெல்லாம் பிரணவத்தை தொடக்கமாக கொண்டதுபோல் இந்த வம்சத்துக்குத் தொடக்கமாய் இருந்தவர் வைவஸ்தன மனு, அவர் சூரியனின் புத்திரராய் இருந்தார், உலகில் ஞானியரும் அறிவாளிகளும் மேதைகளும் மன்னர்களும் வணங்கும்படியான கீர்த்தியுடன் அவர் இருந்தார்.

அந்த மனுவுக்குப் பாற்கடலில் சந்திரன் பிறந்ததுபோல் பிறந்தவனான‌ திலீபன் எனும் சிறந்த அரசனில் இருந்து இரகுவம்ச கதையினைச் சொல்லப் போகின்றேன், சிவனும் பார்வதியும் மீண்டும் என்னை ஆசீர்வதித்து இதைப் பாட அவசியமான சொல்லையும் பொருளையும் இணைந்த அவர்களின் கரங்களால் எனக்குத் தரட்டும்”