காளிதாசன் சாகுந்தலம் : 06
(இப்போது காட்சி கொஞ்சம் மாறுகின்றது, மன்னனை தேடி படைகள் வந்துவிட்டன, அதனால் தவசிகள் குடிலை விட்டு சற்று தள்ளி முகாம் அமைத்து தன் படைகள் மற்றும் சேவகர்களோடு தங்கியிருக்கின்றான் துஷ்யந்த மஹாராஜா
அக்காலத்தில் காட்டின் மிருகங்களை கட்டுபடுத்தி மக்களை காக்கவேண்டியது அரச கடமை, இதனால் மன்னர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காட்டுக்கு செல்வார்கள், அந்த பரிவாரத்தில் சேவக பெண்கள் முதல் படைவரை எல்லாம் உண்டு
அப்படி வந்த துஷ்யந்தன் ஒரு மானை விரட்டி இந்த தவசிகள் குடிலுக்கு வந்து சகுந்தலை கண்டு சிக்கி கொண்டான்
அவனை தேடி வந்த படைகளோடு குடிலைவிட்டு தொலைவில் முகாம் அமைத்து தங்கி கொண்டான், காட்சி இதில் இருந்துதான் தொடங்குகின்றது)
அரசன் சேவகர்கள் நடுவில் இளைப்பாற, தனியே குதிரைகளோடு படுத்திருக்கும் அந்த குதிரைபாகன் மிக அலுத்து கொண்டு சொல்ல தொடங்குகின்றான்
அவனின் உடல்நிலை அவ்வளவு மோசமாயிற்று, அந்த அலுப்பிலும் கடுப்பிலும் இயலாமையிலும் சொல்ல தொடங்கினான்
“தன் அறநெறிபடி காட்டு விலங்கைகட்டு படுத்த கானகம் புகுந்டான் அறிவுக்க இந்த மன்னன், ஆனால் இனி நீண்டநாள் இங்கே தங்குவான் போலிருக்கின்றது, இவனால் நான் மிக்க சோர்வாகிவிட்டேன்
என்ன வாழ்க்கை இது? அங்கே மான் கூட்டம் இங்கே காட்டுபன்றி கூட்டம், எங்கு பார்த்தாலும் விலங்குகள்
இதனிடையே புலி உறுமல் வேறு, நான் மனிதர்களை பார்த்தே நாளாகிவிட்டது
இந்த கோடை காலத்தில் வேட்டையாட வந்த எங்களையே கதிரவன் அம்பால் வதைக்கின்றது, தண்ணீர் தேடி அலையும் மான்கூட்டம் போல இப்படி மாலை காலை மதியம் என காடெல்லாம் சுற்றுகின்றேன்
இலை தளைகள் வீழ்ந்து ஊறி அதனால் கசப்பான குட்டைகளின் நீரை குடிகின்றேன், அருவிகள் நீரோ மர இலை போல் உதிர்ந்துவிட்டது
கோடை வெப்பம் அப்படி கொடியதாய் இருக்கின்றது
இந்த வெப்பத்தில் இன்னும் கொடுமையாக நல்ல உயர்குடியில் பிறந்த நான் காட்டில் விலங்குகளின் மாமிசத்தை சுட்டு உண்ணும் உணவை பெறுகின்றேன் வேறுவழி இல்லை
அதுவும் கிடைக்கும் போதுதான் கொஞ்சம் கிடைக்கின்றது, எப்பொதும் கிடைப்பதில்லை
குதிரை மேல் ஏறிகாடெல்லாம் சுற்றி மூட்டுகளெல்லாம் குதிரையோடு உராய்ந்து வலி உயிரை எடுக்கின்றது
இரவெல்லாம் இந்த வலியாலே துடிக்கின்றேன், கொஞ்சம் கண் அரண்டால் இந்த வேடுவ கூட்டத்தின் ஆரவாரம் அந்த தூக்கத்தையும் கெடுக்கின்றது
இப்படி உணவும் தூக்கமுமில்லாமல் உடல் நோவும் துயரமுமே வளர்கின்றது, அது கொஞ்சமும் குறைவதாகவும் தெரியவில்லை
உடலை வருத்தும் கட்டிமேல் சிலந்தி வந்து அமர்ந்தால் போல இந்த மன்னனின் செயலும் பெரும்துன்பம் கொடுக்கின்றது
மானை துரத்தி வந்த மன்னர் மான் ஒன்று விரித்த காதல் வலையில் சிக்கிவிட்டான்
மன்னனுக்குரிய தகுதியெல்லாம் மறந்து காதல் யாசககம் கேட்கும் பிச்சைகாரனாய் அவள் பின் திரிகின்றான்
கவிதைக்குள் பொருள் தேடும் கல்வியாளர்போல அவளிடம் எதையோ ஆழமாக தேடிகொண்டிருக்கின்றான்
எப்படி இருந்த மன்னன் இப்படி ஆகிவிட்டான்?
அவன் தன் இதயத்தை விளக்காக்கி, உணர்வினை நெய்யாக்கி, தன் பெருமூச்சினை திரியாய் ஆக்கி கண்களால் காதல் தீபமேற்றி அதை எரியசெய்து கிடக்கின்றான், அந்த விளக்கினை சுற்றும் மின்மினி போல் ஆகியும்விட்டான் இனி நான் என்ன செய்வேன்?
கண்களிடையில் அந்த காதல் தீபம் எரிய எரிய அவனுக்கு தூக்கமுமில்லை, ஆனால் காலையிலே களைப்பில்லாமல் செயலாற்றுகின்றான், காதல் அப்படி அவனை இயக்குகின்றது”
இப்படி தேர்பாகன் தனக்குள்ளே சொல்லி அலுத்துகொண்ட போது தொலைவில் தன் பரிவாரங்களுடன் வருகின்றான் துஷ்யந்தன், அவன் கையில் வில் இருக்கின்றது, கானகத்தில் இது அவசியம்
பாகன் சொல்கின்றான்
“தலையில் காட்டுபூ சூடி, கையில் வில்லேந்தி சேவக பெண்கள் சூழ வருகின்றான் மன்னன், அதோ வருவதை காண்கின்றேன்
ஆனால் ராமன் முன்னால் பரசுராமன் வில் ஒடிந்து கிடப்பது போல் என் கால்முட்டு வளைந்து கால் ஒடிந்து கிடக்கின்றதே, எப்படி எழுந்து நடப்பேன், என் கால் வலிக்கின்றதே, நொண்டுகின்றேனே…”
அங்கே அவள் நினைவிலே வாழும் துஷ்யந்தன் மனதுக்குள் சொல்லியபடி வருகின்றான்
சித்தர் நினைவெல்லாம் சிவனே இருப்பது போல் இந்த பித்தனின் மனமெல்லாம் நினவெல்லாம் அவளே இருந்தாள், அவன் சொல்லிகொண்டான்
“என் கண் போன்ற அந்த சாகுந்தலை எப்போது எனக்கு சொந்தமாவள், அதெல்லாம் எளிதில் நடக்கும் காரியமா அது?
தாளத்தின் பின்னால் தானாக செல்லும் பாடல் போல் இயல்பாகவே மனம் அவள் பின்னால் செல்வதென்ன?
அவள் அழகின் நினைவும் நீங்கா பேரழகின் ஜொலிப்பும் மனதில் பதிந்து இன்ப ஊற்றாக பெருகும் இன்பம் கொஞ்சமா?
அது இன்னும் இன்னும் பொங்கி கொண்டே இருக்கின்றதே, இன்னும் பொங்கும் என்பதையும் அறிவேன்
என் மனம் மான்போல் துள்ளி துள்ளி மகிழும் நிலை காண்கின்றேன் , தானே துள்ளி மகிழும் மான்போல என் மனமும் தன்னில் மகிழ்வதை காண்கின்றேன்
ஆனால் நான் அவளை தேடுவதை போல அவள் என்னை தேடுவாளோ?
அ.. அவள் என்னை கண்டு சென்ற காட்சி என்ன? அது எவ்வளவு சுகமானது
எங்கேயோ பார்த்தது போல் இருந்தவள் சட்டென மின்னல் போல் என்னை நோக்கி புன்னைகைத்ததும், அந்த மின்னல் பார்வையில் ஒரு ஆசை இருந்ததும் என் மனம் அறிந்ததல்லவா?
தாழம்பூவின் வடிவத்தில் இருந்தவளின் நெருஞ்சி பூ போன்ற கண்களும், மணகும் சந்தணம் பூசிய கால்களின் அசைவும் சொல்லாமல் சொன்னதை நான் அறியாதவனா?
அந்த அழகு கால்கள் நடக்கும் போது அழகிய தொடைகள் இரண்டும் உரசி அவளிடம் அவனைவிட்டு செல்லாதே செல்லாதே என என்றதை ஏற்றுகொண்டு மெல்ல நடந்தபடி, தோழியிடம் பொய்கோபம் காட்டிகொண்டு, குழந்தை போல் மழலை பேசிகொண்டு குமரிபோல் ஜாலம் காட்டி சென்றவளின் குறிப்பை அறியாமலா இருக்கின்றேன்”
இப்படி மனதோடு பேசிவன நடந்தபடி பாகனை அடைந்தான், பாகன் படுத்தபடி சொன்னான்
“மன்னா கைகளை நீட்ட முடியவில்லை, கால்களை மடக்க முடியவில்லை அதனால் வாயினால் மட்டும் வாழ்த்துகின்றேன், என்னால் இப்போது அதுதான் முடியும் மன்னிப்பீர்”
துஷ்யந்தன் புன்னகைத்து கேட்டான்
“என்ன பாகனே, இதென்ன புது நொண்டி உடல், அந்த உடலில் இந்த திமிர்பிடிப்பு எப்படி வந்தது?, தானே வந்ததா இல்லை நீர் கதவை திறந்து விட்டீரா?”
பாகன் நொந்து சொன்னான்
“ஈட்டியால் குத்திவிட்டு ஏன் கண்ணீர் வருகின்றது என கேட்டால் எப்படி மன்னா?”
“உண்மைக்கும் உமது வார்த்தைக்கும் காத தூரம்” என்றான் துஷ்யந்தன்
“ம்ன்னா ஆற்றின் நாணல் தானாக வளையுமா இல்லை நீர் அதன்மேல் ஓடுவதால் வளையுமா?” என்றான் பாகன்
“இதென்ன கேள்வி நீர்தான் காரணம்” என்றான் துஷ்யந்தன்
“அப்படியானால் என் நிலைக்கும் நீர் காரணம்” என சொல்லி தலைகுனிந்தான் பாகன்
கொஞ்சம் ஆத்திரமான துஷ்யந்தன் கேட்டான் “என்ன உளறுகின்றீர்?”
“மன்னா, உங்கள் கடமை எல்லாம் மூட்டை கட்டி அரண்மனையில் வைத்துவிட்டு, இருள் சூழ்ந்த இக்காட்டுக்குள்ளே வேடுவனை போல் அலைகின்றீர்
உமது பின்னால் வேடனை போல் நானும் ஓடி ஓடி என் கைகால் முட்டுக்கள் எல்லாம் இரு கற்கள் உரசி தேய்வதை போல் தேய்ந்தே விட்டது, மருந்துக்கு கட்டுபடாமல் நோய் தாறுமாறாய் திரிவது போல் என் அவயங்கள் என் கட்டுபாட்டில் இல்லாமல் என்னவோ போல் அலைகின்றது
ஒரு நாள் கூட ஓய்வின்றி அலைவதால் புத்துணர்ச்சி என்னை தழுவாததால் நான் நோயுற்றுவிட்டேன், எனக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பீராக , கெஞ்சி கேட்கின்றேன்”
துஷ்யந்தன் மனதால் சொன்னான் ” ஓ.. இவனும் ஒருவகையில் பாதிக்கபட்டிருக்கின்றான், நான் கண்வரின் மகளால் பாதிக்கபட்டேன், இருள் கொண்ட சுருள் கூந்தனும் மீன் போன்ற கண்களும் கொண்டவள் மேல் நான் எண்ணங்களை சரமாக தொடுத்து களைப்பாகிவிட்டேன்
இவனோ வேட்டையால் களைப்பாகிவிட்டான், என் மனமும் இளைப்பாற விரும்புகின்றது”
சொன்னவன் தனக்குள் சொன்னான், நான் எப்படி இனி வேட்டயாடுவேன் என எண்ணியபடி சொன்னான்
“மின்னும் வெள்ளிபோன்ற வின்மீன்க்ள் போல உடலெல்லாம் புள்ளி கொண்ட இந்த மானினம் அல்லவா என் காதலிக்கு ஒளிரும் கண்களை தந்தன
வள்ளை பூ வடிவ காதிரண்டும் கொண்ட என் காதலிக்கு மருகும் பார்வையினை இந்த மானினம் அல்லவா கொடுத்தது
கள்ளம் இல்லா காதல் பார்வையினை என் தேவிக்கு அள்ளிகொடுத்த இம்மான்கள் மேல் நான் எப்படி இனி அம்பு தொடுக்க முடியும் , அதற்காக என் உயிரையே கொடுக்கலாமே”
அவன் தன் வாய்க்குள் முணங்க பாகன் சொன்னான் “மன்னா நீர் உள்ளத்தில் எதையோ வைத்து வாயினை பூட்டி பேசுகின்றீர்
காட்டில் கொடிய தேவதையை கண்டவன் அஞ்சி அழுதல் போல் நானோ நிலைகுலைந்த்திருக்கின்றேன்” என்றான்
துஷ்யந்தன் சொன்னான் “வேறு என்ன நான் சொல்லமுடியும், இனி உனக்கு ஓய்வுதந்தேன், நீ என் நண்பனுமானவன் அல்லவா?”
பாகன் மகிழ்வோடு சொன்னான் “மன்னா நீர் வாழ்க”
“நான் இன்னும் முடிக்கவில்லை விரைவில் ஓய்வெடுத்து திரும்பி வா, உன்னிடம் சொல்ல செய்திகள் உண்டும் இனி நடக்கம் போகும் இன்பமான நிகழ்வில் நீ எனக்கு துணை இருக்கவேண்டும்”
“ஏன் மன்னா கொழுக்கட்டை தரபோகின்றீரா?” என்றான் பாகன்
(அதாவது ஓய்வெடுத்தாலும் பின் வேட்டைக்குத்தானே அழைப்பீர், கொழுக்கட்டை போன்ற நல்ல உணவையா தருவீர் என பகடி செய்தான்)
“நீ இளைப்பாறு பின்னர் சொல்கின்றேன்” என அவன் சொன்னபோது ஒரு பணியாள் வந்தான்
“என்ன?” என வினவினான் துஷ்யந்தன், தளபதி வந்திருக்கும் செய்தி சொல்லபட்டது, வரசொல்லி உத்தரவிட்டான் துஷ்யந்தன். வந்து பணிந்து வாழ்த்தி பேச தொடங்கினான் சேனை தலைவன்
“மன்னா, வேட்டை என்பது உயிர்கொல்லும் தீமைதான், ஆனால் மக்களை காக்க அது மன்னனுக்கு அறமாகின்றது, அதை ஒரு யாகம் போல் மன்னன் செய்தல் வேண்டும்
யானைகளின் உடலை பிழிந்து எடுத்த பலமும் சிங்கத்தின் வீரத்தை வலிமையுடன் ஊட்டிய வீரமும் கொண்டது மன்னரின் உடல்
இந்த உடலில் வில்லின் நாணை இழுத்து இழுத்து விட்டதால் உரமேறிய உடல், உடும்பின் தோற்றத்தில் இறுகிய உடலின் வியப்பு விலாவரை தெரியும், எந்த பகையும் எந்த வெயிலும் எந்த சவாலையும் தாங்கும் உடல் கட்டை கொண்டவர் நீங்கள்
மன்னரே, வெற்றி வந்து உங்களை சூழட்டும், உம் பெருமை வளரட்டும். மன்னரின் உத்தரவுபடி தவசிகள் குடிலை காக்க உத்தரவிட்டேன், தொல்லை தரும் விலங்கு கூட்டத்தை வளைத்து விட்டோம், எல்லாம் தயார் எனும்போது மன்னர் மனம் ஏன் தயங்குகின்றது?”
துஷ்யந்தன் சொன்னான்
“தளபதியாரே மாதவியன் எனும் ஞானி வேட்டையினை பழிப்பதை கேள்விபட்டதில் இருந்து சிந்திக்கின்றேன்”
தளபதி சற்று வேகமாகசொன்னான்
“மன்னரே நீர் எம் நண்பருமாதலால் உரிமையில் சொல்வேன், உங்கள் சிந்தனைக்கு குறுக்கீடுவராமல் சொல்வேன்
உளுத்து வலுவிழ்ந்த மரத்தூண் போன்ற அந்த வலுவில்லா முதியவன் சொன்னதை கேட்கலாமா, அவன் குழப்பமும் அச்சமும் கொண்டவனாய் அன்றோ இருக்கின்றான்?
மன்னா நீர் உறுதியானவர், வயிற்றின் அடிபாகம் தொங்காதபடி கட்டைபோல் உடல் கொண்டவர், இந்த உடல் எவ்வளவு பெரிய வேட்டைக்கும் ஈடுகொடுக்கும்
நீர் வேட்டையாடு அழகு எப்படியானது, புலி ஒன்று காட்டை திகைக்கவைக்கும் காட்சி அல்லவா?
வேகமாய் செல்லும் விலங்கினை கூட அம்பால் அடிப்பீர், அந்த அம்பு இசைக்கு தப்பா தாளம் போல இசைக்கு சுரம் போல இசைவில்லுக்கு தாளம்போல் தப்பாமல் சென்று தாக்கும்
இப்படியான பெரும் புகழை கொண்டவரல்லவா நீங்கள், அந்த புகழ்தானே அரண்மனை பாடலாகவும் மக்களின் வாழ்த்தாகவும் உண்டு, அதனை சொல்ல இன்னொரு மொழி அல்லவா வேண்டும்?
அப்படி வில்லாட்டாம் உலகில் காணமுடியுமோ?
இறைவனே அறம் எனும் வில்லேந்தி அதர்மம் வதைப்பதை அறிந்தவர் தாமே, ஆளபவனும் தெய்வமன்றோ அதர்மம் செய் விலங்குகளை அழிப்பதும் முறையன்றோ, இதை ஒருவன் பழித்தால் அவன் மூடனன்றோ?
பாகன் சீறி சொன்னான் “நீர் ஒரு வன்முறையினை தூண்டுகின்றீர் அய்யா, நீர் வெளியே செல்லும் அது நல்லது
மன்னரே விண்ணகம் சென்று இப்போதுதான் மண்ணுக்கு வந்து கொஞ்சம் ஓய்விலிருக்கின்றார் அவரிடம் வந்து புகழ்ந்து தூண்டிவிடுகின்றீரோ?
உமக்கு இக்காடு பிடிக்குமென்றால் இங்கே இரும், மரத்துக்கு மரம் தாவும், குதியும். ஏதோ ஒரு கிழட்டுகரடியிடம் அடிபட்டு சாவும், எம்மை ஏன் இழுக்கின்றீர்’
துஷ்யந்தன் கண்மூடினான், அங்கே சாகுந்தலை சிரித்தாள், அழகான கூந்தலை பரப்பவிட்டு தன் கண்களில் காதல் மின்ன அரும்பு பல்காட்டி சிரித்தாள், அவளை சுற்றி மானினங்கள் ஓடிகொண்டிருந்தன, மயில்கள் ஆடிகொண்டிருந்தன
துஷ்யந்தன் கண்ணை மூடியபடியே சொன்னான்
“தளபதியாரே, தவசிகள் குடில் அருகே நிலைகொண்ட நாம், வேட்டையினை தொடங்கி உயிர்வதை செய்தல் சரியன்று, அதனால் வேட்டை நிறுத்தபடும்
விலங்கினமெல்லாம் மகிழ்ந்திருக்கட்டும், எல்லா இடமும் மகிழ்ச்சி பரவட்டும்
கருமேக கூட்டம் போல் வரும் காட்டெருமைகள் தன் கொம்புகளை ஆட்டியபடி நீரில் களித்து இணையுடன்
விளையாடட்டும். அது மூச்சிழுத்து நீந்தி தன் இணையுடன் காதல் நீராட்டு செய்யட்டும்
மரவேரின் பெயர்த்தெடுத்து அழகாய் செய்தது போல் கூரிய கொம்புகளை கொண்ட காட்டு பன்றிகள் தன் இணையுடன் உராய்ந்தபடி மரநிழலின் இன்புற்றிருக்கட்டும்
மரநிழலை படுக்கையறையாய் கொண்டு இணையுடன் மான்களெல்லாம் மகிழட்டும்
காதல் வாழ்க..காதலர் வாழ்க..காதலர் இருக்குமிடம் துயரில்லை என அவை சொல்லி மகிழட்டும்
யானை தும்பிக்கை போல மூக்கை கொண்ட முள்ளம்பன்றி கூட்டமெல்லாம் , செல்லும் வழியெல்லாம் செல்லும் மனதின் காதலை கொண்டு மகிழ்ந்திருக்கட்டும்
கண்ணாடி குட்டை போன்ற கோரைபுல்லை மேய்ந்தபடி அவை களித்திருக்கட்டும்
எல்லாம் மகிழட்டும் எங்கும் இன்பம் சூழட்டும், எல்லாம் அதனதன் இணையுடன் இன்புற்றிருக்கட்டும்
மன இறுக்கம் கொண்டவரின் நெஞ்சம் போல் விரைப்பான என் வில்லின் நாணை தளர்த்திவிட்டேன், கூந்தலை அவிழ்ந்து நீராட செல்லும் மங்கையரின் கூந்தல் போல நாண்கள் தொங்கட்டும்
இணையுடன் கூடி மகிழ்ந்தபின் ஓய்ந்துகிடக்கும் துணை போல அந்த ஆயுதங்கள் ஓய்ந்து கிடக்கட்டும்
எங்கும் காதல் காதல் காதல் ஒன்றே வாழட்டும், வீசட்டும் பரவட்டும்”