காளிதாசனின் சாகுந்தலம் : 17
காளிதாசனின் சாகுந்தலம் : 17
“மன்னா, நீர் முன்னர் செய்த செயலில் வெறுப்புற்று இப்போது கடமை தவறி பேசுதல் சரியாகுமோ?” என்றான் சாரங்கன்.
“பொய்க்கால் ஆட்டம் ஆடுவோர், பொய்யாக ஒரு காலை காலுக்கு கீழ் கட்டிவைத்தல் போல் ஒரு பொய்யின் மேல் என்னை நிறுத்த பார்க்கின்றீர்கள்” என்றான் துஷ்யந்தன்.
“பொய் உரைக்கின்றீர், இங்குச் செருக்கும் அகங்காரமும் கொண்டு அந்த மயக்கத்தில் உண்மையினை மறந்து நன்றி இன்றி துடுக்காய்ப் பேசுவது யார் மன்னா?” என்றான் சாரங்கன்.
துஷ்யந்தன் நெற்றியில் கைவைத்து சொன்னான், “ஓ.. நான் மிகவும் இழித்து உரைக்கப்பட்டவன் ஆகிவிட்டேன்”
கௌதமியார் ஆத்திரமாகச் சொன்னாள், “சாகுந்தலை, உடலின் கை காலில் நோவு என்றால் தானாக சொல்லிடாமல் அடுத்தவர்க்கு வியர்வை போல் தெரியாது, உன் தலைமுக்காடை அகற்றுகின்றேன், நாணம் கொள்ளாதே.
உன்னை ஆண்டு அனுபவித்த கணவர் அப்பொழுதாவது உன்னை அடையாளம் காணட்டும்”
சொல்லிவிட்டு அவளின் முழு முகம் தெரியவைத்தார் கௌதமியார், சாகுந்தலை பேரழகில் மின்னினாள். தாய்மையின் சாயல் அவளிடம் தெரிந்தது.
துஷ்யந்தன் அவளின் எழில்கோலம் கண்டு சொன்னான், “குற்றமில்லாப் பேரழகு பெண் இவள், கொடி போன்ற இந்த அழகுப்பெண் தாய்மை அடைந்துள்ளாள்.
ஆனால், இவளிடம் நான் மகிழ்ச்சியாய் இருந்ததுமில்லை, மனதல் கூட இவளை மணந்ததும் இல்லையே யார் இவள்?
நான் இவளை அடைந்திருந்தால் ஏன் பிரியப்போகின்றேன்? மல்லிகையில் தேன் உண்ட வண்டு பனிகொட்டினாலும் உறைந்து மலர்மேல் கிடக்குமே தவிர அகன்று போகாதே?”
மன்னன் அவளை மறுப்பதை கண்டு கஞ்சமுனி சொல்லிக் கொண்டார் , “இந்த மன்னர் எவ்வளவு அறநெறியில் நிற்கின்றார், அவரைக் கண்டால் பெருமிதம் வருகின்றது.
ஒரு அழகு தேவதை, பேரெழில் பெருகி வலிய வந்து நிற்கும் போது நகர்ந்து செல்லும் பெருந்தன்மையும் கண்ணியமும் யாருக்கு வரும்?
ஆழகியதோர் காதல் எழில்பட்டத்தின் நூல் இவரிடம் கொடுக்கப்படும்போது, அந்தப் பட்டத்தின் முழு அதிகாரமும் கட்டுப்பாடும் இவரிடம் வரும்போது இது வேண்டாம் என விலகி செல்பவர், வரவுதனில் வைக்காமல் தள்ளி வைப்பவர் எப்படிப்பட்ட அற்புத மனிதர்?”
சாரங்கன் கடைசியாய்க் கேட்டான், “மன்னரே, நீர் இன்னும் இவளைப் பற்றி முடிவு சொல்லவில்லையே? உங்கள் தீர்மானம்தான் என்ன?”
துஷ்யந்தன் எழுந்து சொன்னான் .
“துறவியரே, என் நினைவுகள் எனும் குதிரைகளை என் வாழ்வின் அடிவானம் வரைக்கும் நானே நினைவாக ஓட்டிச்சென்று பார்த்துவிட்டேன், எல்லாத் திக்கும் என் மனதில் தேடியும் பார்த்தேன், அங்கே மிகச்சிறிய துகள் கூட தெரியும் என் மனதில் இந்த மலை இல்லவே இல்லை.
அழகான இப்பெண் வரம்பெற்ற கலையரசி போல் இருக்கின்றாள், ஆனாலும் தாய்மையின் அடையாளத்தைக் காண்கின்றேன்.
கருகொண்ட கருமாதை, சூல்கொண்ட திருமாதை இன்னொருவன் கையில் இடுதல் முறையோ? நானே கணவன் எனச் சொல்வதும் தகுமோ?
யாகத்துக்குப் பசுமாட்டைக் கொடுப்பார்களே தவிர, சினை பன்றிதனை தரும் வழக்கம் எங்கும் உண்டோ?”
சாகுந்தலை அவன் வார்த்தைகளைக் கேட்டு சிலையாய் நின்று சொன்னாள், “மணந்துகொண்டவர்க்குக் கூட என் பெயர் சொல்ல தெரியவில்லை என்றால் நான் என்ன சொல்வேன்? என் நியாயமான ஆசையினை இப்படிப் பழித்துவிட்டபின் இனி என்ன உண்டு?
பெரிய மழை கொட்டினாலே காய்ந்திருக்கும் பாலை நிலத்தில் தண்ணீர் தங்காது, இங்கோ சிறிய தூரல் கூட விழவில்லையே”
சாரங்கன் விடவில்லை, அவன் தன் வீட்டுப்பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியில் கொதித்துச் சொன்னான்.
“மன்னவரே, ஏற்கமாட்டேன் எனக்காக சொல்லாதீர்கள், மாமன்னர் வந்தார் எங்கள் குடிலில் தங்கினார், அங்கே விளையாடிய அன்னத்தை மெல்லிய மானை புன்னகை எனும் வலை வீசி தன் வலையில் வீழ்த்திட்டார்.
பொன்கொடுத்த அன்னத்தின் வாயை தைத்துவைத்து தன்னுடைய வாரிசை அதன் வயிற்றில் வைத்து பூட்டிவிட்டு தானாக சென்றுவிட்டார். இதுதான் உண்மை.
மன்னர் உடன்பாடு ஏதுமின்றி அவளை மணந்து கொண்டார், உயர்ந்தவர்க்கெல்லாம் சொல்தான் முக்கியம் என்பதை மறந்தும் போனீர்.
எங்கள் கன்வமுனிவரோ பெரியவர், அவர் கடல்போன்ற மனம் கொண்டவர் தாங்கள் என்றே நினைந்து மகளை ஏற்றுக்கொண்டு இங்கும் அனுப்பிவைத்தார்.
அப்படிப்பட்ட கன்வ முனிவரரை உமது சொல்லால் அவமானப்படுத்திவிட்டீர், மன்னா மடமையினை அறிவால் அகற்ற வேண்டும், மடமையினை அறிவு ஏற்றால் அதுதான் மூடத்தனம்.
மன்னா நீர் திருடவந்தீர், எங்கள் குடில் பொருளைத் திருடிவிட்டீர், இப்போது திருடிய பொருளைத் திருட்டில் பறிகொடுத்தவரிடமே வீசிவிட்டீர்.
இவளை நீர் திருடிவிட்டீர் , இப்போது இவள் திருட்டு பொருள், அதைத் திருடனிடமே தந்துவிட கன்வமுனி நினைந்துவிட்டதை மறுக்கின்றீர், திருடன் நிலையில் இருக்கின்றீர் மன்னா, கன்வர் அதை நினைந்தே இவளை உம்மிடம் தந்தார்.
எங்கள் மாமணியினை சாக்கடைக்குள் வீசுகின்றீர், ஆனால் சாக்கடை தங்கத்தை என்ன செய்யும்? மங்காத மாமணி ஒன்று குப்பையோடும் இருந்தபோதும் அது மாமணிதான், குப்பை குப்பைதான்.
அதிகாரம் கொண்ட மன்னவனே நீர் குப்பை மேடு, சாகுந்தலை மங்கா மாமணி.
சாரத்துவன் சொன்னான்.
“சாரங்கா பேசுவதை நிறுத்து, சாகுந்தலையே நாங்கள் சொல்ல விரும்புவதையெல்லாம் சொல்லிவிட்டோம். ஆனாலும், இவர்முன் அனாதைகளாக நிற்கின்றோம்.
இவர் போர் செய்யாமலே நம்மை வீழ்த்திவிட்டார், வித்தை அறிந்தவர், இனி ஆஞ்சநேயர் மலை சுமந்து வந்ததுபோல் அதிசயம் நடந்தால்தான் உண்டு”
சாகுந்தலை கண்ணீரோடு உடைந்த குரலோடு மூச்சு படபடக்க சொன்னாள்.
“காதல் எனும் பெரிய மலையே அவர்கண்ணுக்குத் தெரியவில்லை எனில் அந்த மலையின் மரத்து கிளையும் அதன் கனியும் எப்படித் தெரியும்?
இனி இவரிடம் என்ன சொல்லி என்னாகும்? ஒன்றும் ஆகப்போவதில்லை, துன்பமெல்லாம் இனி என்னைச் சூழும்.
பெருமரத்தின் பொந்தில் கருநாகம் இருக்குமோ எனும் அச்சமின்றி முட்டைகள் இடும் பறவைபோல் காதல் முட்டையிட்டேன், சாபம்பெற்றேன்.
அவர் மனதில் கூட என்னை மணம் செய்த செய்தி அறியாதவர் போல் உள்ளவரிடம் என் காதலைப் பற்றி சொல்ல என்ன உண்டு? அந்த அருகதையில்லாதவர் இவர் என்பதால் இனி சொல்லமாட்டேன்’
இப்படிச் சொன்னவள் சில அடி முன்னால் வந்து விரிந்த தலையுடன் கதறிச் சொன்னாள்.
“மன்னா, பௌரவர் வழி வந்த நீதிதவறாப் பெருங்குலத்தில் வந்தவனே, களங்கமில்லாக் கள்ளமில்லா என்னிடத்தில் மயக்கி பேசி வேண்டியன பெற்றுக்கொண்ட கொடியவர் நீர்.
அன்புமொழி எனும் அமுதம் தந்து என்னை இன்பநிலையில் ஆழ்த்தி வைத்தீர், கள்ள பெரும் மயக்கம் வேண்டுமென்றே நீர் கொடுத்தீர்.
விழிக்கு மை இடுவது போல் இடுகின்றேன் எனச் சொல்லி என் விழியிரண்டைக் குத்திவிட்டீர்.
என் காதல் பயிறை வளர்த்தீர், நெல்லை நீர் எடுத்துக் கொண்டு வைக்கோலை எனக்கு வீசிவிட்டீர், இப்போது பழிச்சொல்லால் என்னை வதைத்து வலுவில்லாப் பாவி என்னை வார்த்தைகளால் வதைக்கின்றீர்”
துஷ்யந்தன் அவளின் சீற்றமிக்க மொழிகளைக் கேட்டு காதைப் பொத்திக் கொண்டு சொன்னான்.
“தகாதன சொல்கின்றாய்ப் பெண்ணே, சொல்லின் வேகத்தை அறியாமல் நீ சொல்லியதைக் கேட்டு நொந்தேன். தாங்கமுடியா அழுத்தம் கொண்ட பெரும்வெள்ளம் கலங்கித்தான் செல்லும், உன் சொல்லும் அப்படியே என்னைக் கலங்கடித்தது.
பெருவெள்ளம் இருகரையினையும் உடைத்துக் கடப்பது போல் உன் எல்லை கடந்து பேசிவிட்டாய், ஆலமரமாய்த் தழைத்த என் குலபெருமையினைக் குலைத்திட்டாய்”
சாகுந்தலை விடவில்லை. கொதிக்கும் நெஞ்சுடன் சீறிச் சொன்னாள்.
“நல்லது மன்னரே, என்னை யாரோ ஒருவனுக்குக் கருவுற்றவள் என நினைத்து பேசிவிட்டீர், பாம்பின் தலைபோல ஆகிவிட்டீர். உமது சந்தேக நச்சுப்பல்லை இப்போதே நச்சுப்பை விஷத்தோடே பிடுங்கி எறிவேன்.
சொல்லக் கூடாத சொல்லை எல்லாம் சொல்லிக் களங்கம் பூசி என்னைச் சுட்டெடெரித்துப் பொசுக்கிவிட்டீர், நீர் யாரென அடையாளம் காட்டுகின்றேன், உங்கள் கயமையினை வீழ்த்துகின்றேன்”
சொன்னவள் முன்பு அவன் கொடுத்த கணையாழியினை எடுத்துக் காட்ட முயன்றாள், அதைத் தன் கைகளில் அணிந்திருந்தவள் தடவிப் பார்த்தாள். ஆனால், மோதிரம் அங்கே இல்லை.
அப்படியே வேர் அற்ற மரமாய், கரை கண்ட ஓடமாய் சரிந்து விட்டாள் சாகுந்தலை, பெரும் ஓலமிட்டாள்.
(தொடரும்..)