காளிதாசனின் சாகுந்தலம் : 18
காளிதாசனின் சாகுந்தலம் : 18
அவன் முன்பு கொடுத்த மோதிரம் தன் கையில் இல்லாததை கண்டு திடுக்கிட்டு புலம்பலின் வாசலில் நின்று சொன்னாள் சாகுந்தலை.
“எல்லாம் போனதம்மா. உயிர் பிரியும் நேரம் உடலின் எல்லா உறுப்பும் தன் இயல்பில் இருந்து மாறுவது போல் எல்லாமே மாறிற்றே. என்ன செய்வேன்?
எல்லாம் இழந்தேன். என் வாய்மை, என் பலம், என் நம்பிக்கை, என் வாழ்வு என எல்லாம் இழந்துவிட்டேனே.
என் இருளை அகற்றும் ஒளி என நம்பிக்கொண்டிருந்த மோதிரத்தை, என் கருவுக்கான அடையாளத்தை இழந்துவிட்டேனே. இனி நான் என்ன செய்வேன், விதி எனக்கு விரோதமானால் எப்படி வாழ்வேன
கௌதமியார் அவளை அணைத்தபடி சொன்னார்.
“நாம் வரும்வழியில் வேகமான நீரோட்டம் கொண்ட ஆற்றில் நெடுநேரம் நீராடினாய், சக்கர தாவம் எனும் படித்துறையில் நீராடும் போது இழந்திருப்பாய்.
உன்னை நீ மறக்கும் போதெல்லாம் நிறைய இழக்கின்றாய் மகளே”
அவர்கள் இருவரின் தவிப்பும் நாடகம் என நினைந்து துஷ்யந்தன் சொன்னான்.
“மிகக் கூர்மையான நாவிதனின் கத்தி அவன் கை சொன்னபடியெல்லாம் அழகாக ஆடும். மகளிர் கொண்ட சூழ்ச்சிக்கேற்ப அவர்களின் அழகான உருவமும் கள்ள நடிப்பும் கைகொடுக்கும் என்பதை இப்போது காண்கின்றேன்”
நாகம் தீண்டிய மான்குட்டி போல அந்த வார்த்தை கேட்டதும் நடுங்கிப் போனாள் சாகுந்தலை. அந்த துர்பாக்கிய நிலையில் சொன்னாள்.
“மலை மேல் விழும் இடி அதன் சிகரத்தை விட்டு மலையடிவாரத்தில் இருக்கும் மலர்மேல் விழுவது போல் என் ஊழ்வினை என்மேல் பாய்ந்துவிட்டது, நான் என்ன செய்வேன்?
மலையில் வடியும் நீரை, வீணாகப் போய்விடுமோ என அஞ்சி புது மண்கொட்டி அடக்க நினைத்தல் போல் என்னால் முயன்றவரை இன்னொரு சம்பவம் சொல்வேன் கொஞ்சம் கேளுங்கள்”
துஷ்யந்தன் அலட்சியமாய் சொன்னான், “இன்னுமா நீ சொல்லி நான் கேட்க வேண்டிய நிலை இருக்கின்றது, ஆனாலும் சொல் கேட்கின்றேன்”
சாகுந்தலை பரிதவிப்புடன் சொன்னாள், “அன்றொரு நாள் புதுமல்லி பந்தலின் கீழ் தாமரை இலையால் செய்த குவளையால் நீர் அருந்த தடாகத்தில் தண்ணீர் அள்ள முயன்றீர், அப்போது நான் வளர்த்த மான்குட்டி தள்ளி நின்று உம்மைக் கண்டது.
நீர் அந்தத் தாமரை இலை குவளையில் நீர் காட்டி அந்த மான்குட்டியினை அழைத்தீர், அது புதுமனிதர் என்பதால் மிரண்டு நின்றது.
அருகில் தள்ளி நான் நின்றேன். நீர் சாடையாய் சொன்னீர் “மானே, காட்டு சாதி என்பதால் நீ நகரத்தாருடன் ஒட்ட மறுக்கின்றாய், மக்களோடு கலந்து வாழும் வகை அறிந்திலை நீ” என்றீர் மன்னா, நினைவிருக்கின்றதா?
துஷ்யந்தன் சற்று கோபமாய்ச் சொன்னான், “பெண்ணே, உன் காதல் உரைகளை நிறுத்து, பெரும்பொய்யாக புகழ்மொழியும், அதிக அன்புசெய்தல் போல் நடிப்பும் பெண்களுகே உரியது. அந்தச் சாகசத்தில்தான் காமுகர்களை அவர்கள் வளைக்கின்றார்கள், பேதைகளான அவர்களும் பிணத்தின் மேல் மாலை போல் அவர்களிடம் வீழ்கின்றார்கள்”
அவனின் குத்தும் ஊசி போன்ற வார்த்தைகளைக் கேட்டு கௌதமியார் சொன்னார், “மகா பெரிய இடத்தில் இருக்கும் மன்னரே, இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.
அவள் மேலான துறவியரால் உயர்பண்பில் வளர்க்கப்பட்டு நல்ல வழியில் பயிற்றுவிக்கபட்டவள். அவள் தாமரை போல் புனிதமானவள். இகழ்ச்சிக்குரிய குணம் என்பது அவள் நிழலில் கூட இல்லை, அவளை இப்படியா பழிப்பது?”
துஷ்யந்தன் வேகமாய்ச் சொன்னான், தன் மேல் விழும் பழியினை தவிர்க்கும் கவனத்தில் சொன்னான்.
“இது எப்படி தவறு? மிகப் பெரிய சரி இதுதானம்மா.
பெண்கள் கள்ளத்தனத்தை கற்றறிய அவசியமில்லை. அது அவர்கள் கருவாய் இருக்கும் போதே அவர்களுக்குள் உருவாகின்றது. இது நல்ல குண பெண்கள் கீழான குலப் பெண்கள் என விதிவிலக்கு இல்லை. இது மானிட குலத்தில் மட்டுமல்ல விலங்குகள் இனத்திலும் பெண் உயிர்களிடம் இந்த பாசாங்கு உண்டு. மறுப்பார் உண்டோ?
இனிமையாகப் பாடும் குயில்கள் தன் முட்டையினைக் காக்கை கூட்டிலிட்டு காக்கைளிடம் வளரவைத்து, அப்படி அவை வளர்ந்தபின் தங்களோடு சேர்த்துக் கொள்ளும். பெண் குயில்களின் அந்த ஜாலம் தந்திரமானது. இப்படிப்பட்ட கள்ளமெல்லாம் பெண்களின் எல்லா வகை உயிரிலும் உண்டு, என்றும் உள்ள உண்மை இது”
அதுவரை பொறுத்து பேசிய சாகுந்தலை இந்த மொழிகள் கேட்டுக் கோடை இடிபோல் முழங்கினாள். பெண் சிம்மமாய் கொதித்தாள். அவளின் துக்கமெல்லாம் கோபமாகி கடுமொழிகளாய் மொழிந்தன.
“மிகப்பெரிய வகையில் கீழ்நிலை அடைதிட்ட நீர் உம்மை போல் எல்லோரையும் ஆழ்மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றீர், மேன்மை இழந்த தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டீர்.
கடல் சூழ்ந்த இவ்வுலகில் தெய்வமே வந்து பிறப்பது பெண்ணிடமே, வளருமிடம் பெண்ணிடமே, தாய்மையின் பெருமையினைப் பழிக்காதே மன்னா, தாழ்மொழிகள் பேசி உன் தரத்தினை தாழ்த்தி வீழாதே.
எந்த ஆணும் பெண்ணிடமே பிறக்கின்றான். அவளிடமே பாலருந்தி வளர்கின்றான். பெண்ணிடமிருந்தே பேசவும் கற்கின்றான். பெண்ணால் வாழ்வினைத் தொடங்கி பெண்ணிடம் நட்பாகி, பெண்ணோடு குடும்பமாகி அவன் வாழ்வெல்லாம் பெண்ணைச் சார்ந்தே உண்டு. பெண் இல்லையேல் என்ன உண்டு என்பதை அறியாமல் பேசுகின்றீரோ?
பெண் இன்றி ஆண் இல்லை, பெண்ணில்லா உலகம் என ஒன்று அமையுமாயின் அதுதான் நரகம் என்பதை உணர்ந்துகொள்ளும்.
என்ன சொன்னீர் குயில் கதையினைச் சொல்லி பெண்கள் வஞ்சகி என்றீர். ச்சீ மனிதனா நீர்?
தெளிவில்லாதவரே நினைத்து பாரும், ஒரு பெண்ணாக குயில் இட்ட முட்டையினை, இன்னொரு பெண்ணாகக் காகமே அடைகாக்கும். காகமே உணவூட்டி வளர்க்கும். ஆம். பெண் இனமே எவ்வயிரையும் யார் உயிரையும் தாயாய் வளர்க்கும் பெரும் கருணை கொண்டது.
பெண் காக்கைதான் குயில் குஞ்சை வளர்க்குமே அன்றி, ஆண் காக்கை வளர்த்ததாய் எங்கேனும் கேட்டதுண்டோ சொல்லும்?
அத்தனையும் காப்பதும் வளர்ப்பதும் பெண்ணே ஆவாள். ஆண்களையும் பெற்றெடுத்து வளர்ப்பதும் பெண்ணேதான் மறுப்பீரோ?
பெண்களை போற்றும் ஆண்களே மேன்மையானவன். பெண்கள் அருமை தெரியாதவனும் அற்பமாய் தூற்றுபவனும் கீழானவன். உம்முடைய மோசமான சிந்தனையின் வார்த்தைகளால் எல்லா ஆண்களிலும் நீர் கீழ்மகனாய் ஆகிவிட்டீர்”
சொன்னவள் இன்னும் கொதித்து அக்னியாய் சொற்களை வீசினாள்.
“சிங்கத்தின் ஆடை அணிந்த சிறுநரி ஒன்று அறநெறி பேசி அங்குமிங்கும் அலைந்து ஏமாற்றுவதை போன்ற மறப்பேய் நீர்.
தென்நாட்டில் ஒரு மன்னன் பெருவாழ்வு வாழ்ந்திட்டன் அவன் மகனோ அற்பனாய் வாழ்ந்து தரம்கெட்டு கயவரோடு கூடி வீழ்ந்திட்டான். அப்படி வீழ்ந்திட்டாய் நீ.
மதிகெட்ட ஒருவன் எப்படி தன்னை எல்லா சமூகத்துக்கும் நீதி சொல்லும் மன்னன் எனச் சொல்லமுடியும்? அவன் எப்படி சூரிய வம்சத்து வாரிசாக வரவும் முடியும்?
மேலே புதர்பரப்பி கீழே மறைந்திருக்கும் அபாய கிணற்றைப் போன்றவனே, அதிகார மமதையினால் அக்கிரமம் செய்கின்றாய். வஞ்சகமாய் என்னை வீழ்த்தி இப்போது பழிக்கின்றாய். உருப்படாமல் போவாய் நீ”
சொன்னவள் பெண் நாகம் போல் சீறி நின்றாள், அவள் சீற்றம் கண்டு துஷ்யந்தன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
“எனவிதி ஏன் என்னை இப்படி வதைக்கின்றது?.இவளை பார்த்தால் நடிப்பவளை போல் தெரியவில்லை, நிஜமாகவே பாதிக்கபட்டவளாய் இருக்கின்றாள். ஆனால், நான் காரணமில்லையே எனக்கு இவளைப் பற்றி எந்த நினைவுமில்லையே?
இவள் கோபம் உண்மையானது, வந்திருப்பவர்களோ தவசிகள், என் மனம் உள்ளே உறுத்துகின்றது.
கனவில் நான் இம்மலரை நுகர்ந்திருந்தால் கூட, இந்த மலரை முகர்ந்திருந்தால் கூட உள்ளத்தில் பதிந்திருக்குமே. பாசிபோலாவது படர்ந்திருக்குமே அது கூட என் மனதில் இல்லா நிலையில் என்ன சொல்வேன்?
இவளின் சினம் கண்டு காமதேவன் வில்லே ஓடிந்துவிடும் போல் இருக்கின்றது, நான் குழம்புகின்றேன்”
எனத் தனக்குள் குழம்பியவன் பின் சொன்னான்.
“பெண்ணே துஷ்யந்தனான எனது நடபடிகள் நாடெங்கும் அறியப்பட்டதே அன்றி இரகசியமென ஏதுமில்லை. அதனால் சொல்கின்றேன் நீ சொல்லும்படி நான் இல்லை, என் நினைவிலுமில்லை. நான் மறதி மிக்கவனாக இருந்திருந்தால் இன்றளவும் மன்னனாக இருக்க முடியுமா சொல்? “
அக்னி சட்டி ஏந்திய பக்தை வெப்பம் தாளாமல் அதை கைவிட்டது போல் எல்லாம் முடிந்த அதிர்ச்சியில் சொன்னாள் சாகுந்தலை.
“புரு வம்சத்து மன்னர் இவர், சொன்ன சொல் தவறமாட்டார் என்றே என்னை நான் இழந்துவிட்டேன், நாவிலே வஞ்சகமும் மனதிலே கொடும் நஞ்சும் கொண்ட இவரிடம் நான் ஏமாந்துவிட்டேன்”
சொன்னவள் தலையில் அடித்து அழுது சொன்னாள்.
“இழந்துவிட்டேன். நான் என்னையே இழந்துவிட்டேன். எளிதாக இவர் கையில் அகப்பட்டுவிட்டேன். அதனால் இன்று இப்படி ஆகிவிட்டேன்.
எளிதாக கிடைத்ததால் என்னை இவர் வேசியாக்கிவிட்டார். ஒழுக்கமில்லாப் பெண்ணாக நிறுத்திவிட்டார்.
ஒழுக்கமில்லா மன்னனால், ஒழுக்கமில்லா ஆடவனால் நான் ஒழுக்கமில்லாதவளாகி விட்டேன். நான் பெற்ற சாபம் போல் கொடும்சாபம் ஏதும் உண்டோ?”
சொன்னவள் தன் தலையில் அடித்து அழுது முகத்தை மூடி அப்படியே அமர்ந்து கொண்டாள்…
(தொடரும்..)