காவேரி (ஐப்பசி) துலா ஸ்நானம்
சூரியன் துலாம் ராசிக்கு வரும் மாதம் ஐப்பசி மாதம் என்பதால் அது துலா மாதம் என்றே அழைக்கபடும்.
அந்த மாதத்தில் காவேரியில் நீராடுதல் என்பது பெரும் பலன்களைத் தரும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
ஆடிப் புதுவெள்ளம் போலவே ஐப்பசி காவேரியும் மகத்துவமானது.
காவேரி தெட்சண கங்கை அதாவது தென்னக கங்கை என அழைக்கப்படும் ஆறு. அதற்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண திருத்தரூபி, உலாபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லபை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கனபதசாவணி எனப் பல பெயர்கள் உண்டு.
புராணப்படி அது எங்கோ வேறு இடத்தில் பாய்ந்ததாகவும் அகத்தியர் மூலம் விநாயகப்பெருமானே அதனை இங்கு திருப்பிக் கொண்டு வந்ததாகவும் செய்தி உண்டு. அதாவது இப்படி ஒரு புண்ணியநதி இங்கு பாயவேண்டும் என்பது விநாயகப் பெருமானின் பெருவிருப்பம்.
அவர் அருளாலே வந்ததுதான் காவேரி.
அந்த காவேரியின் பெருமையினைச் சிவன் உமையவளுக்கு சொன்னார். அந்த மாகாமித்ய பெருமைகளை தேவ வன்மன் எனும் அரசனுக்கு சுமதிரங்கி எனும் முனிவர் சொன்னார்.
ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரன் சொன்ன காவிரி மாகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத்திரங்கி என்ற ரிஷி சொன்னார், இந்த வார்த்தைகளில் சொன்னார்.
ஒரு சமயம் பார்வதி – பரமேஸ்வரர் ஒரு நந்தவனத்தில் தங்கி இருந்தபோது, அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள் துலா (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன.
அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈஸ்வரன் உமையவளுக்கு சொன்னார், “கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும், அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும், எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும்.
இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததை தரும் சிந்தாமணியான காவிரி”.
ஆம், காவேரியின் பெருமைகள் புராணத்திலே இருக்கின்றது. அங்கு கங்கையும் யமுனையும் மட்டும்தான் சொல்லப்பட்டது என்பதெல்லாம் மடத்தனம்.
காவேரியின் பெருமையும் புராணங்களில் சொல்லப் பட்டிருக்கின்றது. அதில் ஐப்பசி துலா ஸ்நானமும் உண்டு.
இதே ஐப்பசி காவிரியில் நீராடி பலன்களையும் புண்ணியங்களையும் பெற்றவர்கள் ஏராளம். காவிரியில் துலாஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாகப் பெற்றார்.
அர்ஜுனன் துலாஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தார் என்கிறது புராணம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை அன்று கங்காதேவி காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்கிறாள் எனவும் கூறுகின்றது புராணம்.
இந்த பூவுலகில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐப்பசியில் உலகில் உள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவேரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.
அப்படியான சிறப்புக்களை கொண்ட காவேரியில் ஆடிப்பெருக்கு போல ஐப்பசி துலா ஸ்நானமும் முக்கியமான ஒன்று.
காவேரி என்றல்ல எல்லா ஆறுகளிலும் நீராடலாம்.
இந்த உலகை இயக்குவது ஒரு சக்தி, அந்த சக்தி மானிட உடலும் இந்த பூமியும் இயங்க சில சக்திகளை மழையாகப் பொழிகின்றது.
இந்த மழை எனும் சக்தி நீராக ஓடி மண்ணோடு கலந்து உணவுகளை கொடுக்கின்றது, அந்த உணவு மானிட உடலுக்கு சக்தியாகின்றது.
ஆறு என்பது அந்த பெரும் ஆதிசக்தி நீராக வந்து மானிடருக்கு சக்தி கொடுக்கும் வடிவம். குறிப்பிட்ட காலத்தில் அதன் சூட்சும பலன் அதிகம். அப்படியே புதுவெள்ளத்தில் மூலிகை தாதுக்களின் கலப்பும் அதிகம். அதனாலே புதுவெள்ளத்தில் தவறாமல் நீராடச் சொன்னார்கள் அறிவுள்ள இந்துக்கள்.
அதனால் ஆறுகளில் நீராடுதல் நாளை அவசியம். அந்த பாரம்பரியம் நாளை பின்பற்றபட்டால் நல்லது.
ஐப்பசி முழுக்க இந்த ஏற்பாடு உண்டு. அது பலனுள்ளது என்றாலும் பவுர்ணமியில் நீராடுவது சிறப்பு.