கி.வா. ஜ(கந்நாதன்)

தமிழக எழுத்துலகில் மாபெரும் அடையாளங்கள் கொண்ட பல இருந்தார்கள். அவர்களின் தமிழும் சுவையும் அது சொல்லப்பட்ட அழகும் அவ்வளவு சிலாகிப்பானது.

அவர்களைப் போல எழுதவும் சொல்லவும் இன்னொருவர் வரமுடியாது எனும் அளவு மேதைகள் அவர்கள். இன்று நினைத்தாலும் மனம் சிலிரிக்கும் எழுத்து அவர்களுடையது.

புதர்மண்டிக் கிடக்கும் கானகத்திலே மறைந்திருக்கும் கல்வெட்டாக அவர்களை தேடித்தான் படிக்க வேண்டியிருக்கின்றது. புதைந்து கிடக்கும் பூம்புகார் இந்து நாகரீகம் போல அவர்கள் புதைக்கப் பட்டிருக்கின்றார்கள்.

அப்படியும் சில உன்னதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள் என தேடித் தேடி ஆராய்ந்தால் மாபெரும் கோபுரம் போல விஸ்வரூபமாக நிற்பார்கள்.

இதென்ன ஒரு சுவர் நீள்கின்றது என கம்போடிய காடுகளில் தேடியபொழுது கிடைத்த பிரம்மாண்ட இந்து கோவில் அங்கோர்வாட் போல ஆச்சரியப்படுத்துவார்கள்.

ஏன் இவர்கள் மறைந்தார்கள் அல்லது மறைக்கப்பட்டார்கள் என்றால் தமிழகத்தில் 19ம் நூற்றாண்டில் நடந்த அநீதி புரியும்.

இங்கு 19ம் நூற்றாண்டில், உ.வே சுவாமிநாதய்யர் தமிழ் இலக்கியங்களையெல்லாம் அச்சுக்கு கொண்டு வந்த காலத்தில் காகிதமும் பேனாவும் வந்த காலத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

எழுத்தும் வாசிப்பும் புதுவடிவம் பெற்றன‌.

அப்பொழுது இந்துக்களின் பெருமையெல்லாம் தமிழ், தமிழன் என மடைமாற்றப்பட்டது, அப்படி ஒரு கொடுமை நடந்தது.

தமிழ் என்பது ஒரு மொழி என்பதும், அதுவும் இந்துக்களின் மொழி என்பதும், இறைவனைப் பாடவே உருவான மொழி என்பதும் மாற்றப்பட்டு முழுக்க தமிழினம், தமிழ் என்றொரு சித்தாந்தம் உருவானது.

தமிழ் என்பது இறைவனை பாடிய மொழி. அப்படி இங்கு உலவிய மொழி என்பதே மாற்றப்பட்டு, இந்துக்களின் வாழ்வியலே தமிழன் வாழ்வு, தமிழன் கலாச்சாரம் என முழுக்க திசைமாற்றப்பட்டது.

அப்பொழுதும் இலங்கையில் இருக்கும் தமிழனுக்கும் இங்கிருக்கும் தமிழின அடிப்படையில் ஒரே இனமாக ஒரே பகுதியாக அறிவிக்கபட்டதா என்றால் இல்லை. அந்த அரசியல் பிரிவெல்லாம் சரியாக இருந்தது.

மற்றபடி இங்கு தான் இந்து எனும் அடையாளம் முழுக்க தமிழ், தமிழன் என மாறிற்று.

இக்காலத்தில் எல்லா இந்து அடையாளங்களும், பிரபலங்களும், இந்து வரலாறு பேசியவர்களும் மறக்கடிக்கப் பட்டார்கள்.

சைவ சித்தாந்த கழகமும், கம்பன் கழகமும் கோலோச்சிய இடத்தில் திராவிட கழகங்கள் உருவாகி குழப்பம் விளைவித்தன‌.

ராபி சேதுபிள்ளை, வையாபுரி பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை இன்னும் பேர் பெற்ற தமிழ் மேதைகளெல்லாம் மறைக்கப்பட்டு, அண்ணாதுரையும் கருணாநிதியும் கழகத்தாரும் முன்னிலை படுத்தப்பட்டார்கள்.

உண்மையில் இங்கு அப்பொழுதே மீடியாக்களும், மக்கள் தொடர்பு சாதனங்களும், கல்வி முறையும் யார் கைகளுக்கோ சென்றிருந்தன‌.

யார் தமிழறிஞர்கள்? யார் தமிழர்கள்? யார் தலைவர்கள்? என ஏதோ ஒரு கும்பல் திரைமறைவில் முடிவு செய்தது.

அண்ணாதுரையும் கருணாநிதியும் அவரைச் சார்ந்தவர்களும் அப்படித்தான் பிரபலமாக்கப் பட்டார்கள். அவர்களின் அசைவுகளெல்லாம் பேச்சுக்களெல்லாம் பெரிதாக்கப்பட்டு அவர்களெல்லாம் அறிவு தமிழர்களாக, தலைவர்களாக உருவெடுக்க வைக்கப்பட்டார்கள்.

அந்த சதியில் பாரதியினை விட பாரதிதாசனெல்லாம் பெரிதாக்கப்பட்ட கொடுமை எல்லாம் நடந்தது.

இந்தச் சூழலில்தான் பல ஒப்பற்ற தமிழறிஞர்களெல்லாம் மறைக்கப்பட்டார்கள். அடையாளமே இல்லாமல் ஆக்கப்பட்டார்கள். சிலர் அடையாளமே அற்றுபோனார்கள்.

இதற்கு அவர்கள் செய்த ஒரே தவறு, பிராமணனாக பிறந்திருக்க வேண்டும் அல்லது இந்துமத அபிமானியாக எழுதியிருக்க வேண்டும்.

காலம் எஸ்.எஸ். வாசன் போன்ற சிலரால் கல்கி, சாண்டில்யன் எனச் சில அடையாளங்களை உலகுக்கு கொடுத்தாலும், அவர்களும் பெரிதாக சோபிக்காதபடி கடும் வலை பின்னப்பட்டது.

இந்த காரிருளில் பல சூரியன்களே மங்கின என்றால் நட்சத்திரங்களும், நிலவும் பற்றி சொல்ல அவசியமில்லை.

அப்படி மங்கிப்போன ஒரு தமிழ்ச் சூரியனே கி.வா ஜகந்நாதன்.

கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் என்பவர் அவர். இந்த கிருஷ்ணராயபுரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. 1906ல் பிறந்தார் ஜகந்நாதன்.

அவருக்கு கல்வி இயல்பாக வந்தது. ஆனால் 10 வயதில் வந்த ஒரு வகையான முடக்குவாதம் அவரை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்தது. அதனால் தமிழ்மேல் ஆர்வம் திரும்பிற்று.

14 வயதிலே சிதம்பரம் நடராஜர் மேல் பதிகம் எழுதிய அவர், சிறுசிறு எழுத்து வேலைகள் செய்துவந்தார். பின் அவரின் அபாரமான தமிழறிவால் உ.வே. சாமிநாதய்யருக்கு உதவச் சென்றார்.

சாமிநாதய்யர் அவரை சீடனாக ஏற்றும் கொண்டார். சாமிநாதய்யாரின் பெரும் தமிழ்த் தொண்டில் ஓலைச்சுவடிகளை அச்சுக்கு ஏற்றுவதில் உறுதுணையாக இருந்தார் ஜகந்நாதன்.

காந்தமலை முருகன்கோவிலில் அவர் ஆற்றிய முதல் உரை அவரை சிறந்த பேச்சாளர் என்றும் காட்டிற்று.

தமிழை தீவிரமாக கற்ற அவர் இலக்கண, இலக்கிய, சங்ககால நூல்கள், காப்பியங்கள், பிரபந்தங்கள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். ‘வித்வான்’ தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.

குமரகுருபரரின் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசை அப்பொழுதே பெற்றார். மடங்கள் இப்படி தமிழும் சைவமும் வளர்த்த காலம் அவை. இப்பொழுது மடங்கள் அதையெல்லாம் செய்வதில்லை.

கிட்டதட்ட 27 வயதிலே பெரும் தமிழ் அறிவுடன் 1932-ல் கலைமகள் இலக்கிய இதழில் ஆசிரியரானார். அப்பொழுது அவர் அளவு தமிழ் அறிவும், இலக்கிய அறிவும் கொண்டவர் யாருமில்லை.

அப்பொழுது தொடங்கிற்று அவரின் எழுத்துப்பணி.

சுமார் 160 புத்தகங்களை எழுதினார். அதனில் வரலாற்று நூல்கள் உண்டு. இன்னும் பல தமிழ் பக்தி இலக்கியங்கள் உண்டு.

அபிராமி அந்தாதிக்கு அருமையான உரையும், நாயன்மார்கள் கதையினை உரைநடையில் கொண்டு வந்தவர் அவரே. மிகச் சுருக்கமாக ஆனால் அழகாக எழுதியிருந்தார்.

22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமொழிகளைத் தொகுத்து தமிழ் பழமொழிகள் என வெளியிட்ட அவரின் உழைப்பு கொஞ்சமல்ல‌.

திருக்குறள், திருவெம்பாவை, திருப்புகழ், பெரியபுராணம் நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார் என்பதை விட சுமார் 20 ஆண்டுகள் தன் வாழ்வையே செலவிட்டார் என்பது சரியாக இருக்கும், அந்த அளவு நீண்ட உழைப்பு இது.

பின்னாளில் திருக்குறளுக்கு விளக்கம் எழுதிய பலர் இவரைத்தான் பின்பற்றினார்கள்.

இன்று நாம் காணும் திருபுகழின் விளக்கம் அவர் கொடுத்தது. இன்னும் பெரியபுராண விளக்கமும் அவரே கொடுத்தது.

அவரின் “வீரர் உலகம்” எனும் நாவலுக்கு சாகித்ய அக்காடமி விருதும் கொடுக்கப்பட்டது.

1932ல் தொடங்கிய அவரின் எழுத்துப் பணி அவர் காலமான 1988 வரை 56 ஆண்டுகள் நீண்டது. இந்த நீண்ட கால எழுத்தில்தான் 170 புத்தகங்களை மணியெனக் கொடுத்தார்.

அவையெல்லாம் இந்து இலக்கியங்களின் சிகரங்கள்.

ஒரு வகையில் கல்கியும், சாண்டில்யனும் கி.வா.ஜ தொடங்கி வைத்த வழியில்தான் வந்தார்கள். இன்னும் யார் யாரெல்லாமோ வந்தார்கள்.

புதிய எழுத்து உலகை அவர்தான் காட்டினார்.

கவியரசர் கண்ணதாசன் சொன்னபடி “என் எழுத்து கி.வா.ஜ காட்டிய வழி. அவரின் அந்த அழகுத்தமிழ் நடைதான் எனக்கு வழிகாட்டுகின்றது” என அவரையும் எழுத வைத்தது.

இப்படி பெரும் பிம்பமாக விளங்கிய, தமிழ் சூரியனாக, இந்து வானமாக விளங்கிய அவரை இங்கு யாருக்கும் தெரியவில்லை என்பது பெரும் சோகம்.

திராவிடத்தின் கொள்கைபடி இந்து எழுத்தாளர்கள், இந்து தமிழ் பிம்பங்களை புதைப்பது எனும் வகையில் அவரும் புதைக்கப்பட்டார்.

ஆனால் தங்கம் எப்பொழுதும் மங்குவதில்லை.

அந்த கலங்கரை விளக்கம் எவ்வளவோ பேருக்கு ஒளிகாட்டியது. அந்த கைகாட்டி எத்தனையோ பேருக்கு ஞான வெளிச்சம் கொடுத்தது.

இந்து சொற்பொழிவு, ஆன்மீக விளக்கம், சிலேடை பேச்சு, மிக மிகத் தேர்ந்த சொற்களை கொண்டு எழுதிய எழுத்து, அபாரமான இந்து ஞானம் என கொண்டு பெரும் தொண்டு செய்தவர் அவர்.

காந்தி வழியில் போராடிய வகையில் அவர் சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. கடைசிவரை கதர்தான் அணிந்தார்.

ஒரு வகையில் திராவிட அண்ணாதுரையின் பண்புக்கும் சிலேடை பேச்சுக்கும் அவர்தான் முன்னோடி.

அவரின் பண்பும், பேச்சும், எழுத்துமே திராவிடத் தலைகளால் பின்பற்றப்பட்டன. அவரின் சிலேடைகள் கூட அப்படியே திராவிட கழகத்தினரால் கடன் வாங்கப்பட்டன‌.

அழகான சிலேடைகள் அவருடையது.

சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?” என்று அவரிடம் கேட்டால் சொல்வார்.

“வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்” என்பார். எல்லோரும் குழம்புவார்கள்.

சிரித்தபடி சொல்வார் “பந்தியில் போடப்படும் வாழையிலையை, உணவினை சாப்பிட்ட பின் வெறுமையான இலையினை, அந்த‌ வெற்றிலையை, அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?”

ஒரு முறை கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை. கி.வா.ஜ அவர்களைத் தலைமைத் தாங்கச் சொன்னார்கள். கி.வா.ஜ மறுத்தார். ”நீங்களே தலைவராக அமரவேண்டும்” என்றார்கள் அன்பர்கள். ”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை?” என்றார்.

உ.வே சாமிநாதய்யரும் அவரும் பேசிய சிலேடைகளே தனி.

ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார் உ.வே.சா.

அப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. நீங்கள் செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர என் தொண்டை இன்று பாராட்டும்படி இல்லை என்றார்.

ஆனாலும் பாடச் சொன்னார் சாமிநாதய்யர்.

‘என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே?’ என்று தயங்கினார் கி.வா.ஜ‌.

“அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு’ என்றார் உ.வே.சா.

ஒரு கூட்டத்தில் இம்மை – மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ சொன்னார்.

“இம்-மைக்கும் சரியில்லை, மறு-மைக்கும் சரியில்லை”

இப்படி பின்னாளைய கிருபானந்தவாரியார் முதல் எல்லோரிடமும் கி.வா.ஜ. வின் பாதிப்பு இருந்தது, பலரிடம் இந்தச் சிலேடையினைக் காணலாம்.

கி.வா.ஜ. வின் தொண்டு இத்தோடு முடிந்ததா என்றால் இல்லை. அவரின் மிகப்பெரிய தொண்டு காஞ்சி பெரியவருடனான அனுபவமும், அதனால் எழுந்த நூல்களும்.

காஞ்சி பெரியவரின் உரைகளை முதன் முதலில் புத்தகமாக்கியவர் ஜகந்நாதனே. காஞ்சி பெரியவரை மிகவும் கொண்டாடிய ஜகந்நாதன் “ஆச்சாரியரின் உபன்யாசங்கள்” எனும் நூலை எழுதினார்.

காஞ்சி பெரியவரைப் பற்றி எக்காலமும் கோவில் கல்வெட்டுப் போல் சொல்லும் நூல் அது.

மிகப்பெரிய தமிழறிஞரான கி.வா.ஜ., தான் காஞ்சி பெரியவரிடம் தமிழில் தோற்ற கதையினையும் பதிவு செய்யத் தவறவில்லை.

உ.வே சாமிநாதய்யரை போலவே காஞ்சி பெரியவருக்கும் உன்னதமான சீடனாக இருந்தார் ஜகந்நாதன். காஞ்சி பெரியவரும் அவரும் பேசிய இனிமையான சம்பவங்களை பதிவு செய்தார் இப்படி.

காஞ்சி பெரியவர் கேட்டார் “சமஸ்கிருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி எனப் பொருள். சமஸ் என்றால் செம்மையான என அர்த்தம், தமிழ் என இந்த மொழியினை ஏன் சொல்கின்றார்கள் சொல் பார்க்கலாம்?”

கி.வா.ஜ. அடக்கமாகத் தெரியாது என்றார். காரணம் குரு ஏதோ போதிக்க விரும்புவது தெரிந்து அமைதியானார்.

“பார், ழ என்பது தமிழில் மட்டும் உள்ள எழுத்து. இங்கு ழ வரும் வார்த்தை எல்லாமே இனிமையானது.

பழம், மழலை, குழல், யாழ், குழந்தை, கூழ் எனப் பல சொல்லலாம். இப்படி ழ வை தம்மில் கொண்ட மொழி தமிழ் என்றாயிருக்கலாம்” என்றார்.

“மகிழ்ச்சி” என்றார் கி.வா.ஜ‌.

“பார்த்தாயா? அதிலும் ழ உண்டு” என்றார் குரு.

அப்படியே தான் அசந்து போனதையும், காஞ்சி பெரியவரின் தமிழ் அறிவையும் சிலாகித்து எழுதினார் ஜகந்நாதன்.

தமிழகம் கண்ட தமிழறிஞர், முத்தமிழ் காவலர், முத்தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவர் காஞ்சி பெரியவர் என்பதைச் சொல்லும் ஜகந்நாதன், யாரும் பொருள் சொல்லமுடியா சம்பந்தரின் “யாமா நீ மாநீ யாமாம” என்ற பாடலுக்கு அர்த்தம் சொன்ன அழகைக் காட்டி மெய்ப்பிக்கின்றார்.

காஞ்சி பெரியவரின் உரை நடக்கும் இடமெல்லாம் கண்களில் நீர்வழிய ஜகந்நாதன் அமர்ந்திருக்கும் காட்சிகள் அடிக்கடி நடக்கும்.

காஞ்சி பெரியவரின் எல்லா உரைகளையும் தன்னால் முடிந்த அளவு உலகுக்கு கொடுத்து பெரும் சேவை செய்தவர் அவர். அதனால் ஒரு ஞானம் அவரிடம் குடிவந்தது.

தன்னிடம் அதிகம் சந்தேகம் கேட்போரை பார்த்து “இதற்கெல்லாம் ஜகந்நாதனே பதிலளிப்பார்” என பெரியவர் இவரிடம் அனுப்பி வைத்த காலமும் இருந்தது.

ஜகந்நாதனுக்கு “வாகீச‌ கலாநிதி” எனப் பட்டம் கொடுத்தது பெரியவர்தான்.

முருகப்பெருமானின் பக்தர்களுக்கு தமிழ் இயல்பாக வரும். தமிழ் என்பது முருகப்பெருமானின் வரம் என்பதை நிரூபிக்கும் வகையில் பெரும் முருக பக்தனாக நின்ற அந்த ஜகந்நாதனின் வாயில் எப்பொழுதும் “முருகா முருகா” எனும் திருநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தமிழுக்கும் இந்து மதத்துக்கும் பெரும் தொண்டாற்றி மறைந்த அந்த மகானுக்கு, உ.வே.சா சீடனுக்கு, எண்ணற்ற பக்தி நூல்களுக்கு பொருள் எழுதி நாம் படிக்க வழி செய்த உன்னதமான அறிஞனுக்கு நவம்பர் 04 நினைவு நாள்.

பெரிய புராணத்துக்கு அவர் எழுதிய உரைக்காக இரண்டாம் சேக்கிழார் எனும் விருதையே அவருக்கு வழங்கலாம்.

காஞ்சி பெரியவருக்கு, கண்ணதாசனுக்கு முன்பே பெரும் அங்கீகாரத்தை தன் எழுத்து மூலம் அவர்தான் பெற்றுக் கொடுத்தார். கலைமகள் எனும் பத்திரிகையில் அரை நூற்றாண்டுகாலம் அவர் எழுதிய ஆன்மீகம் கொடிய நாத்திக அலையிலும் தமிழகத்தில் இந்து தர்மத்தை காத்து நின்றது அவராலேயே.

ஒரு காலம் வரும். அன்று சுத்தமான இந்து தர்ம ஆட்சி தமிழகத்தில் வரும். அப்பொழுது இந்த மாமனிதனுக்கு பெரும் கோட்டம் “கி.வா.ஜ. கோட்டம்” என எழுப்பப்படும்.

அவன் வணங்கிய கந்தவேளும், காஞ்சி பெரியவரும் அந்த அங்கீகாரத்தை தன் பக்தனுக்கு ஒருநாள் நிச்சயம் வழங்குவார்கள்.