சத்ரபதி சாம்பாஜி – முன்னுரை.

சத்ரபதி சாம்பாஜி – முன்னுரை.

நாயன்மார் புத்தகத்தை அடுத்து வீரசிவாஜி புத்தகம் தயாராகும். தமிழில் சிவாஜியினைப் பற்றி சுமார் இரண்டாயிரம் பக்கம் கொண்ட புத்தகம் அதுவாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது.

வீரசிவாஜியின் வாழ்வு இருபதுகோடி பக்கம் எழுதினாலும் தீராத அற்புத காவியம், அவன் வாழ்வில் அக்கால இந்தியா, ஔரங்கசீப், சீக்கியர், நாயக்க மன்னர்கள், மொகலாயரிடம் உறவாக சிக்கிய ராஜபுத்திரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஆப்கானிய எல்லை போர்கள், மொகலாயர் செய்த அத்தனை அட்டகாசங்கள், போர்ச்ச்கீசியரின் வஞ்சகங்கள் , பாமினி சுல்தான் கோஷ்டிகள், அப்சல்கான், ஆப்ரிக்க சித்திகள் என எல்லோரின் தலையீடும் உண்டு என்பதால் இவர்களை மீறித்தான் அவன் இந்துராஜ்ஜியம் கண்டான் என்பதால் அவ்வளவு சொல்லாமலும் முடியாது.

16 ஆம் நூற்றாண்டு இந்தியாவினை அந்த நூலில் சொல்லியிருக்கின்றோம், மறைக்கப்பட்ட எல்லா வரலாறும் அதில் இருக்கின்றது .

சிவாஜி எனும் அவதாரம் கொடுத்த பெரும் நெருப்பே மொகலாயத்தை சரித்தது, இல்லையேல் துருக்கி, ஆட்டோமன் சுல்தானியம் போல மொகலாயமும் 1920 வரை நீடித்திருக்கலாம் அல்லது இன்றும் அரபுலக தொடர்ச்சியாக இங்கும் சுல்தான் ஆட்சி இருந்திருக்கலாம், அப்படித்தான் அவர்கள் பலமாக இருந்தார்கள்.

அது நடந்திருந்தால் இன்று இந்தியா பரிபூரண இஸ்லாமிய நாடாக இருந்திருக்கும், சந்தேகமே இல்லை.

அவன் கொடுத்த எழுச்சியே இங்குப் பற்றி எறிந்தது, அடுத்தடுத்து அது சாம்பாஜி தாராபாய் எனப் பெரும் மிரட்டலை கொடுத்தது, அந்தப் போராட்டத்தில்தான் தோற்றுச் செத்தான் ஔரங்கசீப்

அந்தத் தாராபாயின் போராட்டம் மகத்தானது, அடுத்து அவள் கதையினை எழுதலாம் என்றால் போதிய நூல்கள் இல்லை தமிழில் அது இல்லை, ஆங்கிலத்திலும் குறைவு, இருக்கும் நூல்களும் மராத்தி இந்தியில் இருக்கின்றன சிலர் உதவியுடனேதான் இனி அவற்றைப் படிக்க முடியும். அது சிக்கலானது. ஆனால் வேறுவழியில்லை.

அதே நேரம் இந்த வீரவரலாறு சிவாஜியிடம் இருந்து நேரடியாக தாராபாயிடம் செல்லவில்லை, சாம்பாஜி சுமார் ஒன்பது வருடங்கள் மிகப்பெரிய வகையில் ஔரங்கசீப்புக்குச் சவால்விட்டான்.

தாராபாய் சிவாஜி காலத்தில் பிறந்தாள். சாம்பாஜி காலத்தில் வளர்ந்தாள். அவனுக்குப் பின் அவன் தம்பி மனைவியாக போரைத் தொடர்ந்தாள்.

இந்த வரலாறு ஔரங்கசீப் எனும் நீண்ட ஆயுளைக் கொண்டவனுக்கு எதிராக நடந்த யுத்தம், அதைச் சிவாஜி காலம், சாம்பாஜி காலம், தாராபாய் காலம் என்றே சொல்லமுடியும், சாம்பாஜியினை விட்டுவிட்டு சொன்னால் தொடர்ச்சியின் சங்கிலி அறுபடும். தாராபாயின் போரும் அவசியமும் முழுக்கப் புரியாது.

இதனால் சாம்பாஜி வாழ்வினைச் சிறு தொடராக எழுத முடிவு செய்தோம், சாம்பாஜி வாழ்வு மிகக் குறுகியது, சத்ரபதி சிவாஜி வரலாற்றுடனே அவனின் 23 வருட வாழ்வு கலந்தது, எஞ்சி அவன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகளே.

இந்த ஒன்பது ஆண்டுகளின் வரலாற்றினை இப்போது பார்க்கலாம், இதைப் பார்த்துவிட்டு தாராபாய் வரலாற்றுப் பக்கம் செல்லலாம்.

அம்மையார் சம்பத்லஷ்மி எம்மை நாயன்மார் எழுதவைத்தது போல சிவாஜியும் ஒரு பெண்ணின் கோரிக்கை, அவர் ராஷ்டிரிய சேவா சமிதி சார்பாகத்தான் இதனைக் கோரினார், அவர் கேட்டது சிவாஜி வாழ்வை சொல்லும் சிறிய நூல், அவரின் கோரிக்கைகாக இப்படி நாட்டின் வரலாற்றை கேட்கும் ஆவலுக்காகவே அதை எழுதத் தொடங்கினோம்.

நாயன்மாரை முடித்துவிட்டு இனி எழுத வேண்டாம் , இனி இது வேண்டாம் ஒழுங்காக ஏதும் நல்ல தொழிலுக்கு, வேறு வளர்ச்சிக்கு செல்லலாம் எனும் நிலையில் இருந்தபோது சிவாஜியின் வரலாறு மனதை உருக்குவதாக தெரிந்தது.

சிவாஜியினைத் தேட தேட அவனின் போராட்டத்தைத் தேட தேட மாபெரும் இந்தியா பிரமாண்டமாகக் கண்முன் விரிந்தது, மாபெரும் வரலாறும் தீராப்போர்களும் கொண்ட அந்த 16 ஆம் நூற்றாண்டு காலக்கட்டம் அங்கோர்வாட் கோவில் போல் பரந்து கிடந்தது.

அது ஒவ்வொன்றையும் அளந்து எழுத இருவருடமானது. புத்தகமும் பெரிதானது, ஆனால் அது காலத்துக்கும் நிற்கும் வரலாறு என்பதில் நிம்மதிக் கொள்கின்றோம்.

அடுத்து சாம்பாஜி வரலாற்றைத் தொடங்குகின்றோம், ஒவ்வொரு வியாழகிழமையும் தருவோம், முடிந்தவரை அவன் வரலாற்றை ஔரங்கசீப்பின் கொடும்காலம், ஐரோப்பிய கடல்வழி கோஷ்டிகளின் துரோக காலம் என எல்லாம் கலந்து தருவோம்.

சமீபத்தில் அவன் கதை பாலிவுட் படமாக வந்தது, ஆனால் நிஜக்கதை அதைவிட உருக்கமானது. ஒருவகையில் அவன் சாபமிக்க பிறப்பு. அன்பு, பாசம், அங்கீகாரம் என எல்லாவற்றுக்கும் ஏங்கி அதனால் திசைமாறி பின் தன்னை நிரூபிக்க கொடுஞ்சாவினை ஏற்று அந்தச் சாவிலே தன்னை நிறுத்தி வரலாற்றில் இடம்பெற்றவன் அவன்.

உருக்கமான வரலாறு அவனுடையது, அவனுக்கும் பெரும் சரித்திரம் எக்காலமும் உண்டு.