சத்ரபதி சாம்பாஜி : 01
சத்ரபதி சாம்பாஜி : 01
ஹம்பிராவ் மோதி மிகுந்த குழப்பத்தில் அமர்ந்திருந்தான். சாளரத்துக்கு வெளியே அடிக்கடி வெறித்தபடி பார்த்திருந்தான். அவன் முன் தங்கை சோயுர்பாய் கண்களில் ஆசை மின்ன எதிர்பார்ப்பு மின்ன அமர்ந்திருந்தாள். ராய்காட் கோட்டையின் ஆலோசனை அறையில் அவர்கள் அப்படி எதிர் எதிரே அமர்ந்திருக்க வெளியே தாராபாயும் ராஜாராமும் இன்னும் சில அரண்மனை குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ராஜாராமுக்கு வயது பத்து, தாராபாய்க்கு வயது ஆறு. இருவருக்கும் ஏற்கனவே மணம் நிச்சயக்கப்பட்டிருந்தது, பருவவயது தாண்டியதும் அவர்கள் சேர்ந்துவாழ ஏற்பாடு செய்யப்படும். அதுவரை பெண்குழந்தை தந்தையோடுதான் இருக்க வேண்டும். தங்கையினைக் காண ஹம்பிராவ் வந்தபோது அவளையும் அழைத்து வந்திருந்தார், அவருக்கு அவள் ஒரே குழந்தை என்பதால் செல்லம் அதிகம்.
1680 மே மாதம் கோடை காலத்தின் உச்சமும் அடுத்த மழைக்காலத்தின் திறப்பு வாசலுமாக இருந்தது. அதே நேரம் அரசியலிலும் பெரும் வெப்பம் தகித்துக் கொண்டிருந்தது. 1680 ஏப்ரல் 3 ஆம் தேதி இந்துக்களின் மாவீரனும் தனிப்பெரும் அரசனும் மொகலாயர்களை எதிர்த்து இந்துராஜ்ஜியம் உருவாக்கிச் சாதித்தவருமான மாமன்னர் சத்ரபதி வீரசிவாஜி தன் 50 ஆம் வயதில் இறந்துபோன பின் அடுத்த வாரிசு யார் எனும் பெரும் கேள்வி எழுந்தது.
வீரசிவாஜி இந்துக்களுக்கு எதுவுமே இல்லாமல் பாரத கண்டம் முழுக்கப் பச்சைக்கொடி பறந்த காலங்களில் தன் 14 ஆம் வயதில் போராட வந்து பிஜப்பூர் சுல்தான், கோல்கொண்டா சுல்தான் எனப் போராடி ஒடுக்கி, அன்றைய உலகின் முதல்நிலை வல்லரசும் பெரும் இராணுவமும் கொண்டிருந்த மொகலாயத்தை அதுவும் ஔரங்கசீப்பை எதிர்த்து போராடி வலிமையான இந்துராஜ்ஜியத்தை அமைத்திருந்தார்.
அவரிடம் சுமார் 500 கோட்டைகள் இருந்தன; பல லட்சம் வீரர்கள் நேரடியாக மறைமுகமாக இருந்தார்கள்; 300க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட கப்பல்படையும் வைத்திருந்தார்; அவை இராணுவக் கப்பல் மட்டுமல்ல. செங்கடல் முதல் கடாரம் வரையான வியாபாரத்தையும் செய்தன.
பாரத கண்டத்தின் மூன்றில் இருபங்கை கட்டுப்படுத்தும் அளவு சிவாஜியின் காவிக்கொடி அரசு இருந்தது, அது அப்போது மிக பலமானதாகவும் இந்துக்களுக்கான ஒரே ஒரு வலுவான தேசமாகவும் மொகலாயத்திடம் இருந்து பாரதத்தை மீட்கும் நம்பிக்கையாகவும் இருந்தது.
காசி, மதுரா, அயோத்தி என இந்துக்களின் புனித தலத்தையெல்லாம் மீட்டுத் தருவார், இந்துஸ்தானம் முழுக்கக் காவிக்கொடி ஏற்றி மொகலாயத்தை முடித்து இந்துஸ்தானை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிவாஜியின் திடீரென ஏற்பட்ட மரணம் ஒவ்வொரு இந்துவினையும் இடிந்து போக வைத்தது.
இந்துக்களான இராஜபுத்திர அரசுகள் முதல் இந்துக் கோவில் பணியாளர் வரை ஒவ்வொருவரின் பெரும் நம்பிக்கையும், 600 ஆண்டு காலத்தில் கிடைத்த ஒரே பெரும் நம்பிக்கையான சிவாஜியின் திடீர் மறைவு அதுவும் மாபெரும் இந்து அரசை ஸ்தாபித்து இந்து ஆலயங்களையெல்லாம் மீண்டும் எழுப்பியவன் மறைவு எங்கும் பெரும் அதிர்ச்சியும் துக்கமும் ஏற்படுத்தியிருந்தது.
அதே நேரம் அடுத்தவாரிசு யார், சிவாஜி விட்டுச் சென்ற பெரும் பொறுப்பினைச் சுமந்து இந்து அரசையும் இந்துக்களையும் காக்கப் போவது யார் எனும் பெரும் எதிர்பார்ப்பும் எழுந்தது.
முதலில் இதனை எதிர்பார்த்தவன் ஔரங்கசீப். அப்போது அவன் 62 வயதினை எட்டியிருந்தான். அன்றுஉலகின் முதல்நிலை சகக்ரவர்த்தி அவனே, அவனுக்கு நிகர் எவருமில்லை. நிலம், மக்கள் தொகை, செல்வம், இராணுவம் என எல்லாவற்றிலும் அவன் அரசு மிக மிக பெரியதாக இருந்தது. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா என எல்லா நதி விளைச்சலும் கராச்சி, சூரத், கல்கத்தா என எல்லா முக்கியத் துறைமுகங்களும் அவனுக்குப் பெரும் வருமானம் கொடுத்தது.
அவன் அரசியலில் கொடூரமானவன், இன்னொரு வகையில் குடும்பத்திலும் இரக்கமில்லாதவன். ஆனால், ஒரு அரசனாக எல்லாப் பரிபாலனங்களையும் சரியாகச் செய்தான். மிகச்சிறந்த நிதிவசூல், மிகத் துல்லியமான நிர்வாகம், கூர்ந்த உளவுப்படை, உலகின் மிக வலிமையான சேனை என எல்லாம் கொண்டிருந்தான், பெரிய இராஜதந்திரி, அரசியலில் பெரும் வித்தகன்.
அப்படியானவனை ஐரோப்பா முதல் சீனா வரை இருந்து வந்து வணங்கினார்கள். துருக்கி, பாரசீக, உஸ்பெக் சுல்தான்களெல்லாம் அவனுடன் நட்புபாராட்ட காத்துக் கிடந்தார்கள், இஸ்லாமியரின் மதிப்பும் பெருமையுமாக அவன் கொண்டாடப்பட்டான்.
சுருக்கமாகச் சொன்னால் உலகமே அவன் காலடியில் கிடக்கத் துடித்தது.
அப்படியான ஔரங்கசீப்பை அடக்கிப்போட்டு இந்துராஜ்ஜியம் கண்டு, இது எங்கள் பூமி, இது எங்கள் மதம் எனக் கர்ஜித்து வாளேந்தி தன் மிக மிக தைரியமான துணிச்சலாலும் தைரியத்தாலும் பவானி கொடுத்த வாளாலும் இந்துராஜ்ஜியம் அமைத்துக் காட்டிய சிவாஜி அவனுக்குப் பெரும் அவமானமாக வெளியே சொல்லமுடியாத் துயரமாக நெஞ்சில் பாய்ந்த அம்பாக இருந்தான்.
ஔரங்கசீப் எவ்வளவோ முயன்றும் அடக்கமுடியாத சிவாஜியினைக் காலம் கொண்டு சென்றதில் அவன் துள்ளி எழுந்து நிலைமையினை அவதானித்தான், கழுகு போல் கவனித்தான். அவனின் உளவுப்படைகள் முழுக்க இந்துராஜ்ஜியத்தில் நின்று வாய்ப்புத் தேடின.
இன்னொருபக்கம் சிவாஜியால் ஒடுக்கப்பட்ட பிஜப்பூர் சுல்தானியம் அவனிடம் இழந்ததைத் திரும்பப் பெறமுடியுமா என யோசிக்கத் தொடங்கியது, அப்போதைய பிஜப்பூர் ஆட்சியாளன் சித்தி மசூத் எனும் ஆப்ரிக்கன் அதைச் சிந்தித்தான்.
கோல்கொண்டா சுல்தான் சிவாஜியின் பிரதிநிதிகளாக அங்கண்ணா, மாதண்ணா எனும் இரு இந்துக்களைக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தான். அவனுக்கும் அடுத்த திட்டம் இருந்தது.
கடலில் ஜான்சிராவில் இருந்த ஆப்ரிக்க சித்திகள், கோவாவில் இருந்த போர்ச்சுகீசியர், பம்பாயில் இருந்த பிரிட்டிசார் எனக் கடல்வழி வித்தகர்களுக்கு இனி தனிக் கடல் இராஜ்ஜியம் தாங்கள் அமைத்தால் என்ன எனும் ஆசை எழுந்தது.
ஔரங்கசீப், தென்னக சுல்தான்கள், கடல்வழி ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் என எல்லோரும் இன்னும் சிலரும் இந்துராஜ்ஜியத்தில் அடுத்து என்ன நடக்கும், அதைக் கொண்டு தாங்கள் எப்படி லாபம் அடையலாம், சுமார் 30 ஆண்டுகளாக சிவாஜியால் காக்கப்பட்ட இந்த ராஜ்ஜியத்தில் அடுத்து எப்படி அடித்துக் கொண்டு செல்லலாம் எனக் காத்திருந்தார்கள்.
ஆளாளுக்குக் காத்திருந்தார்களே தவிர யாருக்கும் தாக்கும் துணிவு இல்லை, இன்னொன்று புதிய அரசன் அறிவிக்கப்படும் வரை அப்படி முயற்சிக்க கூடாது என்பது இராஜநீதி. காரணம், பழைய அரசன் இல்லை என்பது வதந்தியாக இருக்கலாம், எதையும் எளிதில் ஒரு அரசன் நம்பிவிடக் கூடாது என்பதால் தாமதங்கள் உண்டு.
அப்படி எல்லோரும் தாமதத்துடனும், ஆனால் ஆளாளுக்குப் பெரும் எதிர்பார்ப்புடனும் இருந்த நேரமது.
சிவாஜிக்கு ஆண்வாரிசுகள் இருவர். மூத்தவன் சாம்பாஜி, அப்போது பன்ஹாலா கோட்டையில் இருந்தான். இளையவன் ராஜாராம், ராய்காட் கோட்டையில் தாய் சோயுர்பாயுடன் இருந்தான்.
சிவாஜி மகாராஜாவுக்கு தனக்குப் பின் சாம்பாஜிதான் அரசனாக வேண்டும் எனும் விருப்பம் இருந்தது. ஆனால், சாம்பாஜி மேல் சில சர்ச்சைகள் இருந்ததாலும், மொகலாயருடன் சிலகாலம் அவன் கூட்டணி சேர்ந்து நின்றதாலும் சிவாஜி அரசில் அவன் மேல் சலசலப்புகள் இருந்தன.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி சிவாஜியின் இன்னொரு மனைவியான சோயுர்பாய் மகன் ராஜாராமைக் கொண்டு ஆட்சி செய்ய விரும்பினாள், அவளுக்கும் ஆதரவு இருந்தது.
சிவாஜி இருக்கும்போதே மெல்லியதாக எழும்பிய இந்தச் சிக்கல் அவன் இறந்தபின் பெரிதாக வெடித்தது. இருவர் பக்கமும் அணிகள் திரள அது இனி இந்துராஜ்ஜியத்தின் பிளவில் முடியுமா? இல்லை அந்நியர் தலையிடும்படி குழப்பத்தில் முடியுமா எனும் பதற்றம் எழுந்தது.
இந்நிலையில்தான் கடைசியாக பேசிப்பார்க்க வந்தான் ஹம்பிராவ். அவன் இந்து அரசின் பிரதான தளபதி. அவன் இல்லையேல் சேனை இல்லை எனுமளவு மிக முக்கிய தளபதி.
அவன் சோயுர்பாயின் உடன்பிறந்த அண்ணன். தன் மகள் தாராபாயினை ராஜாராமுக்கு கட்டிவைத்தவன் என்பதால் உறவும் உரிமையும் அவனுக்கு அதிகம் இருந்தது.
அவன் பெரும் பிடிவாதம் காட்டும் தங்கையிடம் கடைசியாக பேசிப்பார்க்க வந்தான், அந்தச் சந்திப்பே நடந்து கொண்டிருந்தது.
“சோயுர்பாய். நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய், இது இந்துக்களுக்கான ஒரே பலமான அரசு, இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம், செய்யவேண்டிய போர்களும் மீட்கவேண்டிய காசி முதலான தலங்களும் அதிகம்.
நம் மாமன்னர் சிவாஜியின் பெரும் கனவு காசியினை மீட்க வேண்டும், மொகலாயரைச் சிந்துநதிக்கு அப்பக்கம் விரட்டவேண்டும், இத்தேசம் பரிபூரணமான இந்துதேசமாக அறிவிக்கப்பட வேண்டும், வேதமும் மதமும் வாழவேண்டும் என்பதல்லவா?
இங்கு நீ தடையாக இருக்கலாமா? மூத்தவனுக்கே அரசுரிமை என்பது நம் இதிகாசம் முதல் மரபு வகையாக வருவதல்லவா? அதனால் சாம்பாஜி மன்னராவதே சரி, நீ வழிவிடு. அதே நேரம் உரிய வகையில் ராஜாராமை அவனுக்குத் துணையாக உருவாக்க வேண்டியது என் கடமை, இருவரும் இணைந்து நிற்பதே இந்நாட்டுக்கு நல்லது” என்றான்.
அவள் விடுவதாக இல்லை “அண்ணா, நான் இதனை மன்னரிடமே சொல்லியிருக்கின்றேன், உனக்கு இருக்கும் அதே பொறுப்பு ஜீஜாபாயின் மருமகளாக எனக்கும் உண்டு.
ஆனால், சாம்பாஜி இந்த அரசுக்குப் பொருத்தமானவன் அல்ல, அவனிடம் பெரும் தீய பழக்கமும், காவி காலேஷ் போன்ற நபரின் தவறான நட்புவட்டமும் உண்டு. பெண்களைக் காக்கவேண்டியவனே ஒரு பெண்ணின் சாவுக்குக் காரணம் என்பதும், மொகலாயருடன் அவன் கூட்டு சேர்ந்து நமக்கு எதிராக வந்ததும் மறக்கக் கூடியதா? அவனிடம் நாட்டைக் கொடுத்தால் என்னாகும்?
விடமாட்டேன் அண்ணா, என்ன நடந்தாலும் என்னால் விடமுடியாது. எனக்கும் இங்கும் சில ஆதரவு உண்டு, ஆனால் தாய்மாமனாக நீ ஏன் இப்படி வீம்பு பிடிக்கின்றாய். மகாபாரத பீஷ்மரே குலம் காக்க நின்றகாட்சி உண்டல்லவா? உனக்கு உன் மருமகன் மன்னராவதில் என்னதான் சிக்கல்?”
அவன் திரும்பச் சொன்னான், “சோயுர்பாய், நான் என் சகோதரியாக உன்னை நேசிக்கின்றேன், தாய்மாமனாக ராஜாராமை நேசிக்கின்றேன். எல்லாவற்றுக்கும் மேல் ஒரு இந்துவாக இந்தச் சுதந்திர இந்துநாட்டை நேசிக்கின்றேன். அதுதான் எனக்கு உயிர், நான் அதற்காகவே வாழ்கின்றேன்.
சிவாஜி மன்னர் நமக்கு உருவாக்கித் தந்த இந்த ராஜ்ஜியம் உனக்கும் எனக்குமானது அல்ல, இது இந்துக்களுக்கானது. அங்கே இந்து மரபுப்படி மூத்தவனுக்கே அரசாட்சி, அதை என்னால் மீறமுடியாது.
நீ ஏன் சாம்பாஜியினை இன்னொருவனாக பார்க்கின்றாய், தாயில்லா அவனுக்கு நீ இன்னொரு தாயாக இருந்திருந்தால் இப்படி யோசிப்பாயா? அவனிடம் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் சரியாகிக் கொண்டே வருகின்றான், என்ன இருந்தாலும் அவன் நம் வீட்டு மகன், இந்நாட்டின் இளவரசன், அவனை நீ மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கின்றாய். உன் பொறுப்பில் இருந்து மாறாதே”
அவள் அமைதிக் காத்தாள், அவன் மீண்டும் கேட்டான், “என் உள்ளுணர்வில் ஒன்றைக் கேட்கின்றேன். அந்தச் சிவன் மேல் சாட்சியாக சொல். உன் உள்மனதில் ராஜாராமை அரசனாக்க வெறும் ஆசை மட்டுமல்ல, வேறு ஏதோ காரணமும் உண்டு சொல்”
அப்படிச் சொன்னவன் தள்ளி இருந்த பூஜை மேடையில் இருந்து கொஞ்சம் விபூதி எடுத்து வந்து அதன் சாட்சியாகக் கேட்டான்.
அவள் கொஞ்சம் கண்ணீருடன் இம்முறை சொன்னாள், “அண்ணா, அவனுக்கும் எனக்கும் அப்போது இருந்தே ஆகாது, இப்போதும் மன்னர் மரணத்தில் சில சந்தேக ரேகைகள் என்மேலும் விழுகின்றன. நீயே சொல் அண்ணா, அவர்தான் என் அரண், அவர் இருக்கும் வரைதான் எனக்கும் பலம், நான் அவருக்கு துரோகம் நினைப்பேனா?
ஆனால், எனக்கும் சாம்பாஜிக்குமான முரண்பாடு வலுத்துவிட்டது, அவன் மன்னனாகிவிட்டால் என்னையும் குழந்தையும் கொன்றுவிடுவான் அண்ணா. அதனால் அஞ்சுகின்றேன்”
ஹம்பிராவ் சொன்னான், “இல்லை அம்மா. அப்படி நடக்காது, சாம்பாஜி அவ்வளவு கொடியவன் அல்ல, என்னை மீறி எதுவும் நடக்காது, வீண் சந்தேகம் கொள்ளாதே. நான் அவனிடமிருந்து உத்திரவாதம் வாங்கித் தருகின்றேன்” என்றான்.
“அண்ணா, அவன் அரச இரத்தம் அவனை என்னால் நம்பமுடியாது, ஒரு அரசன் குணம் எப்படி என்பதை நானும் அறிவேன், அவன் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டே வாழ விரும்புவான், என்ன ஆனாலும் சரி, என் மகனே அரசன் அதை நான் கைவிடமாட்டேன்” என்றாள்.
“சரி இனி அவை முடிவு செய்யட்டும், காலம் விட்டபடி நடக்கட்டும். ஆனால், என் ஆதரவு சாம்பாஜிக்கே” என்றவன் வெளிவந்து தாராபாயினை அழைத்துக் கொண்டு குதிரையேறினான்.
அவன் முகத்தின் வாட்டத்தை பார்த்து மழலையான அப்பெண் கேட்டாள், “அப்பா, அத்தையுடன் சண்டையா? எப்போதும் நீங்கள் சண்டைதான் இடுவீர்களா?”
அவன் புன்னகைத்துச் சொன்னான், “இல்லை மகளே, நான் ஒரு சேனாதிபதி அல்லவா, அதனால் நாட்டுக்காக சண்டையிட தயாராக இருக்கவேண்டும். அங்குப் பாரபட்சமே பார்க்கக் கூடாது, உன் அத்தை கைகேயி போல் ஆகிவிட்டாள், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை,” என்றான்.
“அப்பா, நான் பேசிப்பார்க்கட்டுமா? இராமாயணத்தில் பெண் குழந்தைகள் பேசாமல் இருந்ததுதான் சிக்கல்” என்றவளைச் சிரித்தபடி மார்போடு அணைத்துக் கொண்டான் ஹம்பிராவ், அச்சிறுமி இளமையிலே அவ்வளவு கூர்மையான அறிவுடன் இருந்தாள்.
நடக்கும் ஒவ்வொரு அசைவினையும் உள்வாங்கிக் கொண்டே இருந்தாள், ஹம்பிராவ் அவளுக்கு எல்லாப் பயிற்சியும் கொடுத்துப் பெரும் வீராங்கனையாக உள்ளூர உருவாக்கி வந்தான்.
இங்கு இப்படி காட்சிகள் நடக்க பன்ஹாலா கோட்டையில் கொதித்துக் கொண்டிருந்தான் சாம்பாஜி. ஜனார்த்தனம் என்பவரிடம் கொந்தளித்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அழுதேவிட்டான், அவன் மனைவி யேசுபாய் அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சிவாஜி இறந்த தகவல் அப்போதுதான் அவனை எட்டிற்று, அவன் பெரிதாக கொந்தளித்தான்; ஆடினான்; ஆர்ப்பரித்தான்; தன் வாளை உருவிச் சீறினான். பின், அப்படியே உடைந்து அமர்ந்தவன் “அப்பா….” என அலறினான், அது சாஹித்ரிய மலை முழுக்க எதிரொலித்தது.
அவன் அழுதபடி கேட்டான், “மகனாக அல்ல, மன்னர் இறந்துவிட்டார் என்பதைக் கூடவா சொல்லக் கூடாது, நான் அவ்வளவுக்குக் கொடியவனா?” எனக் கதறினான்.
“தாங்கள் அறியாதது அல்ல, மன்னர் இறந்தால் சில காலங்களுக்கு வெளியில் சொல்லக் கூடாது என்பது இராஜபாடம், அது பல சிக்கல்களை உருவாக்கும், இதனால்தான் சில வாரங்கள் அமைதிகாக்க வேண்டியதாயிற்று” எனக் குனிந்தபடியே சொன்னார் ஜனார்த்தனம்.
“கொள்ளியிட்டது யார்?” எனச் சீறினான் சாம்பாஜி.
“ராஜாராமுடன் நாங்களெல்லாம் சேர்ந்து செய்தோம்” என்றவர் முடிக்க அப்படியே நடந்தவன் கோட்டையின் சாளரம் ஓரம் நின்று சொன்னான், “எனக்குரிய கடமையினைச் செய்யக் கூட அழைக்க உங்களுக்கு மனமில்லை அல்லவா? நீங்கள் நகரலாம்” என்றவன் அப்படியே சிலையாய் நின்றான்.
பின் ஓடிவந்து கட்டிலில் வீழ்ந்தான், யேசுபாய் அவனைத் தாங்கிக் கொண்டாள். அவன் கேவி கேவி அழுதான், தாயினை அடுத்து தனக்குப் பாசமான பெண்ணிடமே ஒருவன் மனதை விட்டுக் கொட்டமுடியும், சாம்பாஜியும் கொட்டினான்.
“நிச்சயம் சொல்கின்றேன், என் அப்பா என்னைத் தள்ளிவைக்கவில்லை, அவரை நான் கடைசியாக சந்திக்கும் போதும் என்னிடம் அவர் வெறுப்புக் கொள்ளவில்லை, இந்த ராஜ்ஜியத்தின் ஆபத்தெல்லாம் நீங்கிய பின் நான் ராய்காட் கோட்டையில் மேற்கிலும், கிழக்கே செஞ்சிகோட்டையில் ராஜாராமுக்கும் பிரிக்கச் சொன்னார்.
மேற்கு கடலும் நிலமும் நான் பாதுகாக்க வேண்டும், கிழக்கே சோழமண்டல கடலும் நிலமும் அவன் காக்க வேண்டும் என்றும் தெற்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் படைகள் சென்று காசியினை மீட்டு அங்குச் செல்லும் சாலைகளெல்லாம் இருவராலும் அமைக்கப்பட வேண்டும், இந்நாட்டில் சுல்தானியம் பல இருப்பது போல இந்து ராஜ்ஜியங்கள் எல்லா இடத்திலும் பெருக வேண்டும் என்றெல்லாம் சொன்னார்.
அவர் அப்போது நலமாகத்தான் இருந்தார், சங்கமங்கேஸ்வரில் அவர் எதிர்பாரா அளவு யுத்தம் கடுமையானதில் ஆலோசனையில் இருந்தாரே தவிர உடல் ரீதியாக பாதிப்பு பெரிதாக இல்லை.
அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை, அவர் சாகக் கூடியவர் அல்ல, நான் அருகிருந்தால் அப்படி விட்டிருக்க மாட்டேன்” எனக் கதறினான், அவள் அவன் தலையினைக் கோதி ஆறுதல் சொன்னாள்.
அவன் தொடர்ந்தான், “இப்போது அங்கு யார் ஆட்சி செய்கின்றார்கள்? என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை, என் சித்தியிடம் ஆட்சி சிக்கினால் நம்மைக் கொன்றுவிடுவாள், அவள் எந்த எல்லைக்கும் செல்வாள். அதற்கு முன் நாம் தப்பிச் சென்றாக வேண்டும், தஞ்சாவூருக்குச் சென்றால் சித்தப்பா வெங்கோஜி என்னைப் பார்த்துக் கொள்வார் , தீபாபாய் எனக்கு இன்னொரு தாய்.
ஆனால். செல்லமுடியுமா என்பது சந்தேகம். இந்தக் கோட்டையினைச் சுற்றி அவர்கள் ஆட்கள், நிச்சயம் நம்மை அனுமதிக்கமாட்டார்கள், இப்போது என்ன செய்வது என எனக்கும் தெரியவில்லை, எல்லாம் பவானி விட்ட வழி, நாம் இனி மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சொன்னவன் அப்படியே கண்களை மூடினான்.
அவன் கண்முன் சிவாஜியோடு அவன் வாழ்ந்த நாட்கள், பாட்டி ஜீஜாபாயோடு அவன் வாழ்ந்த நாட்கள், ஜெய்சிங்கிடம் சிவாஜி தன்னை ஒப்படைத்த காலம், ஆக்ராவில் இருந்து அவன் சிவாஜியோடு தப்பி மதுராவில் பதுங்கியிருந்த காலம் என எல்லாமும் கண்முன் வந்து வந்து போனது.
கடைசிநேர மனவருத்தமும் வந்து வந்து போனது, மிகச்சிறந்த மன்னனைத் தகப்பனாகப் பெற்ற பாக்கியசாலி நான் எனக் கண்களைத் துடைத்துக் கொண்டவன் மாறி மாறி அழுதான். சிவாஜி சிந்தனையிலே மூழ்கி அழுதுக் கிடந்தான்.
யேசுபாய் தன் வேலைகாரர்களை அழைத்துப் பெரும் படையோ இல்லை குழுவோ இங்கு வருவது தெரிந்தால் எச்சரிக்கும்படி ஆட்களைக் கோட்டைக்கு மேல் அனுப்பினாள்.
(இங்கே சிவாஜி தொடர் படித்தவர்களுக்குத் தொடர்ச்சி புரியும். சில சர்ச்சைகள் காரணமாக சாம்பாஜியினை பன்ஹாலா கோட்டையில் சிவாஜி கண்காணிப்பில் வைத்திருந்தார், அப்படியே அவர் மரிக்க சாம்பாஜி இங்கே சிக்கிக் கொண்டான்.)
அடுத்து என்னாகப் போகின்றதோ எனும் ஆழ்ந்த சிந்தனையும் குழப்பமும் அச்சமுமாக ஆலோசித்துக் கொண்டிருந்தான் சாம்பாஜி. அவனுக்கு அக்கோட்டை வாசலின் சுரங்கப்பாதை தெரியும், அது அவன் அறிந்த இரகசியம் என்பதால் அதையெல்லாம் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என யோசித்துக் கொண்டிருந்தான்.
அதே நேரம் ராய்காட் கோட்டையில் காலியான சிவாஜி சிம்மாசனத்தில் அவர் மணிமுடியும், பவானி வாளும் இருக்க எதிரே
அவை வாரிசு சண்டைக்காக கூடியிருந்தது.
சாம்பாஜிக்கு ஆதரவாக ஒரு அணி திரண்டிருந்தது. அங்கே சில அமைச்சர்களும், அரண்மனை நிர்வாகிகளும், மக்களின் பிரதிநிதிகளும் வேத விற்பன்னர்களும் இருந்தார்கள். இன்னொரு பக்கம் சோயுர்பாய் தன் ஆட்களுடன் ராஜாராமை ஆட்சிக்கு நியமிக்க வந்திருந்தாள், அவள் பக்கம் இருந்த முக்கிய பலம் மொரோபந்த் மற்றும் அஞ்சய் தத்தோ இன்னும் சிலர். இவர்களெல்லாம் இந்துராஜ்ஜியத்தின் பிரதான தளபதிகள்.
ஹம்பிராவ் எந்த அணியிலும் பங்கெடுக்காமல் தனியே அமர்ந்தான். அவனோடு பகர்ஜிநாயக் எனப் பலர் அமர்ந்திருந்தார்கள். தாராபாய் ராணிகள் கூடும் மாடத்தில் தாயோடு அமர்ந்திருந்து அவையினைக் கண்டாள்.
அவையின் மூத்தவரான விஸ்வநாத், ராம்நாத் தலைமையில் அறிவில் சிறந்த குழு நடுவர்களாக அமர்ந்திருந்தது, அவர்களில் விஸ்வநாத் பேசினார்.
“அவையோர்களே, 30 வருடத்துக்கு முன் நாம் இந்துக்களாய் எப்படி இருந்தோம் என்பதையும், இப்போதுள்ள சுதந்திரமான இந்துவாழ்வு நிலையினையும் நினைத்துப் பாருங்கள்.
அன்று மொகலாயருக்கும், பிஜப்பூர் சுல்தானுக்கும் அடிமையாய் இருந்தோம், அவர்கள் கண்களைப் பார்க்கக் கூடாது எனும் அளவு நாம் மண்டியிட்டு தரைபார்த்து வணங்கி முத்தமிடும் அவலநிலையில் இருந்தோம், வாய்பேசும் ஆடுமாடுகளாய் இருந்தோம்.
நமக்கென ஒன்றுமில்லை, கோவில்கள் கூடச் சரியாக இல்லை, வேதசாலைகள் என எதுவுமில்லை. நம் பெண்களுக்கும் குடிகளுக்கும் பாதுகாப்புமில்லை. நாம் எப்படி அழிந்து கிடந்தோம்?
இன்று நமக்கென ஒரு தேசமும், அரசும் உண்டு. ஏறக்குறைய நர்மதா நதி தொடங்கி தமிழக காவேரி வரை நம் அரசு நிலைத்திருக்கின்றது, அது நமது மராத்தி பெருமை அல்ல, அது இந்துக்களின் பெருமை. தமிழன், தெலுங்கன், கன்னடன், துளு என எல்லா மொழி இந்துவுக்கும் அதுதான் காவல்.
இந்துக்களையும், இந்து ஆலயங்களையும் நாமே காவல் செய்கின்றோம். இராமேஸ்வரம் ஆலயம் வரை நமது ஆட்சியில் திருப்பணிகள் நடக்கின்றன, சுல்தான்களால் அழிக்கப்பட்ட எல்லா ஆலயங்களையும் நாமே சீரமைக்கின்றோம்.
இது நம்பமுடியா அதிசயம், மொகலாயரை அசைத்துப்பார்த்து நமக்கொரு நாடு என்பது கண்முன் நடந்த அதிசயம், அந்தச் சிவனே சிவாஜி ரூபமாய் வந்து நம்மை வாழவைத்த அவசியம்.
அந்த அவதாரம் அபிமன்பு போல விரைவாக நம்மை விட்டுச் சென்றுவிட்டது, சிவன் இனியும் சிவாஜி இங்கு அவசியமில்லை எனத் தன்னோடு சேர்த்துக் கொண்டார், இனி நம்மை நாமே காப்பாற்ற வேண்டும்.
நமக்கொரு அரசன் நிச்சயமாய் வேண்டும், அதற்காக ஊருக்குள் அலைந்து திரிந்து அரசனைத் தேடமுடியாது, சிவாஜி எனும் சாமானியன் அரசனானது நம் வரம், அதை இன்னொருமுறை எதிர்பார்க்கமுடியாது.
அரச உணர்வும் கடமையும் இரத்தத்தில் வரவேண்டும், இளம் வயதில் இருந்தே நாடு அரசாட்சி காவல் என அதற்குரிய பயிற்சியும் அனுபவமும் வேண்டும். முக்கியமாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், சிவாஜி மன்னர் எதிரியும் ஏற்றுக்கொள்ளும் அளவு இராஜரீகம் செய்தவர், அவர் இடத்துக்கு அவரின் பிள்ளைகளில் ஒருவர் வருவதே சரி.
இங்கே மன்னர் தன் வாரிசை அடையாளம் காட்டிச் செல்லாததால் யார் அடுத்த மன்னர் என்பதில் இரு மகன்களும் இரு பிரிவாக நிற்கின்றனர். நாம் இங்கே நாட்டின் எதிர்காலம் இருவரின் சாதக பாதகங்களை எல்லாம் அலசி அடுத்த மன்னரைத் தேர்வு செய்யக் கூடியிருக்கின்றோம்.
நாம் சிவனை வேண்டி அன்னை பவானியினை வேண்டித் தொழுது அவையினை நடத்துவோம்” என்றான், அப்படியே சிவனையும் பவானியும் தொழுது சிவாஜியின் வீரவாளை தொழுது அவை தொடங்கிற்று.
முதலில் சோயுர்பாய் தரப்பு கோரிக்கை வைத்தது.
“அவையோர்களே, மன்னர் நம்மைவிட்டு அகன்றது பெரும் வலி, ஆனால் அதே வலியில் நின்று கொண்டிருந்தால் நாடு இயங்காது. இந்த நாட்டை பரிபாலனம் செய்யும் கடப்பாடு இந்த ராய்காட் கோட்டைக்கு உண்டு, அங்கே சிவாஜி மன்னரின் இளம் மகனான ராஜாராமுக்கும் உண்டு.
நீங்கள் அறியாதது அல்ல, குடிகாரனும் ஊதாரியும் பெண்சாபம் பெற்றவருமான மொகலாயருடனே சேர்ந்து நம்மை எதிர்க்கத் துணிந்த கொடூர குணம் கொண்ட சாம்பாஜி மன்னரானால் என்னாகும்? அவரால் பெரும் குழப்பமே நடக்கும், நாடு பாழாகும்.
தன்னலத்துக்காக சிவாஜி மன்னருக்கே இழுக்கைத் தேடியவர் நம்மை எப்படி வாழவைப்பார்? அவர் இந்த மாபெரும் இந்து ராஜ்ஜியத்தை அழித்துவிடுவார். தனக்கென ஒரு கோட்டை போதும், சில ஆட்கள் போதும் எனச் சுகபோக வாழ்க்கைக்கு வந்துவிடுவார், மொகலாயர் அவரைக் கொண்டே இங்கே ஆட்சி செய்வார்கள்.
நம் சிவாஜி மன்னரும் அவரைச் சார்ந்தோரும் அரும்பாடுபட்டு உருவாக்கிய ராஜ்ஜியத்தை, தாய் ஜீஜாபாய் உருவாக்கிய இந்த நாட்டை சாம்பாஜி பாழ்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
சிவாஜி இட்ட அவர் காவல் அப்படியே நீடிக்கட்டும். ராஜாராம் அரசானகட்டும். வடக்கே மேவார் ராஜ்ஜியம். ஜோத்பூரில் ஜஸ்வந்த்சிங்கின் ஐந்துவயது அஜய் அரசன் எனச் சொல்லி பெரியோரெல்லாம் வீரர்களெல்லாம் காவல் இருந்து நாட்டை நடத்துவது போல் நாமும் நடத்துவோம், சிவாஜி மன்னர் வழியில் நாட்டைக் காப்போம்.
இது சிவாஜியோடு இந்த அரசை ஸ்தாபித்த மொரோபந்த் போன்ற மூத்தோரின் முடிவு” எனச் சொன்னார்கள்.
அடுத்து சாம்பாஜி தரப்பில் ராமசந்திர பந்த் எழுந்து பேசினார்.
“அவையோர்களே, நாம் இந்துக்கள், நமக்கென வழி வழி தர்மமும் குலப்பெருமையும் உண்டு, மொகலாயரில் அவர்கள் வாரிசில் யார் அடித்துபிடித்துப் பதவிக்குவரமுடியுமோ அவன் வரட்டும் , வலுத்தது வாழட்டும் என விட்டுவிடுவார்கள், அங்கே பொதுநலம் என்பது ஒரு காலமுமில்லை.
தன்னைக் காக்க இப்படி உடன் பிறந்தவர்களையே கொல்பவன் நாளை குடிகளை மக்களை எப்படிப் பாடாய்படுத்துவான் என யோசிப்பதில்லை. அவர்கள் தர்மம் அப்படி.
நாமோ மூத்தவனுக்கு முன்னுரிமை என ராமனும், தர்மனும் சொன்ன வழி வந்தவர்கள், பகவான் கண்ணனே பலராமனை மீறிச் சென்றதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
காரணம், மூத்தமகன் என்பவன் தகப்பனின் பூரண சாயல், அவன் அடுத்து பிறப்போர் அனைவரையும் கண்டு தகப்பனின் பொறுப்பிலே வளர்வான், அவனிடம் அன்பும் இரக்கமும் கருணையும் பெருகிக்கொண்டே வரும்.
குடும்பத்தின் மூத்த அனுபவம் அவனிடமே இருக்கும், இளையோர் பிறக்கும் முன்பே தகப்பனுடன் உழைப்பதும் உறவாடுதுமாக அனுபவங்களைப் பெறுபவன் அவனே, இளையோரை விட அவனுக்கு அதிக அனுபவம் என்பதால் உரிமையும் அதிகம்.
பாட்டி, தாத்தா, தகப்பன் என ஒட்டி வளரும் அவனுக்கு எல்லா வித நுணுக்கமும் அனுபவமும் அறிவும் பதிந்திருக்கும், அதனாலே நம் தர்மம் மூத்தவனுக்கு முன்னுரிமை என்றது, அதன்படி சாம்பாஜி மன்னரே அடுத்த மன்னருக்குத் தகுதியானவர்.
அவருக்கு இந்தி, மராத்தி, போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், தமிழ் எனப் பல பாஷைகள் தெரியும். அவர் சிவாஜி மன்னரோடு சிறுவயதிலே களம் வந்தவர். ஜெய்சிங்கிடம் அவர் பணயக்கைதியாக இருந்தபோதும் துணிச்சலாக இருந்தார், அப்போதே ஒரு தளபதிக்குரிய கலைகள் அனைத்தும் மாவீரன் ஜெய்சிங் அவருக்குப் போதித்தான்.
அப்படியே சிவாஜி மன்னரோடு ஆக்ரா கோட்டையில் இருந்து தப்பியவர், அவர் ஒரு சிறுபிழை செய்திருந்தாலும் மன்னர் நமக்கு இல்லை, ஒரு இருமல் இருமியிருந்தாலும் தும்மியிருந்தாலும் பழக்கூடையோடு பிடிபட்டிருப்பார்.
ஆனால், அப்போதே மிக மிக பொறுப்பாக இருந்து தப்பினார். மதுராவில், காசியில் ஒளிந்திருந்து தப்பியபோதும் ஒரு இடத்திலும் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை. அவரின் அசாத்திய குணம் அது. இளம் வயதிலே அப்படித் தன்னை நிரூபித்தவர் சாம்பாஜி.
15 வயதிலே அவர் பெரும் போர்களைச் செய்தவர், அசாத்திய வித்தைக்காரர். கடல்போரிலும் பங்கேற்றவர். சிவாஜி ராஜா எத்தனையோ முறை தொலைவில் இருந்தபோது அவர்தான் இங்குச் சரியான காவலைச் செய்தார்.
அவரின் அனுபவம் சுமார் 13 ஆண்டுக்கும் மேலானது, தார்மீக அடிப்படையிலும் அனுபவ அடிப்படையிலும் அவர்தான் மன்னராக வேண்டும், ஆட்சி அவருக்கே வரும்” எனச் சொன்னார்.
இனி அவையோர் முடிவு சொல்லும் நேரம் நெருங்கிற்று. நடுவராக இருந்தவர்கள் சிறிது அவகாசம் கேட்டு இரகசிய அறைக்குள் புகுந்தார்கள், விவாதித்தார்கள். பின், வெளிவந்து அவையில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள்.
“நம் இந்துராஜ்ஜியத்தை உருவாக்கிய மன்னர் மிக இக்கட்டான நிலையில் நம்மிடம் அரசை ஒப்படைத்துச் சென்றுவிட்டார், இது சிவபெருமான் நமக்கு வைக்கும் சோதனை, இந்துக்களுக்காய் ஒரு நாட்டை தந்தால் இந்துக்கள் எப்படிப் பாதுகாப்பார்கள் எனும் சோதனை.
நாம் நமக்குள் அடித்துக்கொள்ள தொடங்கினால் மொகலாயர்க்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமலே போய்விடும், நாமும் கொள்ளை கூட்ட கும்பல் போலாகிவிடுவோம். இங்குக் கொள்ளை அடிக்க தலைவனை நாம் தேடவில்லை, இன்னொரு நாட்டை கொள்ளையடிக்கும் தலைவன் நமக்கு அவசியமில்லை, நம்மையும் காத்து இந்துக்களையும் காக்கும் அரசன் நமக்குத் தேவை.
அந்த வழியில் நாம் இந்துக்களாகவே சிந்திக்க வேண்டும், இப்போது சிலர் சொல்வது போல் ராய்காட் கோட்டை சாம்பாஜிக்கு, செஞ்சி கோட்டை ராஜாராமுக்கு என்பது சரியாக வராது.
காரணம், அரசு இரண்டாகப் பிரிந்தால் சேனைகள் இரண்டாகும், நிர்வாகிகள் இரண்டாவார்கள், அதிகாரிகள் இரண்டாகப் பிரிவார்கள், குடிகள் இரண்டாகப் பிரியும், இன்று ஒன்றாய்ப் பலமாக நிற்கும் நாம் நமக்குள் வலிமை குன்றுவோம்.
இது எப்படியான காலம் என்பதை அறிவீர்கள், எப்போது நம்மை விழுங்கலாம் என வெறிபிடித்த சிம்மமாக அலைகின்றான் ஔரங்கசீப், இன்னொரு பக்கம் எப்போது சரிவோம் பழையபடி நம்மை விழுங்கலாம் எனப் பதுங்கியிருக்கும் பிஜப்பூர், கோல்கொண்டா சுல்தானியங்கள்.
இன்னும் நாம் விழுந்தால் ஆப்ரிக்க ராஜ்ஜியம் சாத்தியம் என நினைக்கும் சித்திகள், கிறிஸ்தவ ராஜ்ஜியம் கட்ட துடிக்கும் ஐரோப்பியர்கள் என ஆபத்து அதிகம், அதனால் நாட்டைப் பிரிப்பது என்பது இந்துராஜ்ஜியத்தை ஔரங்கசீப்பிடம் கொடுப்பதற்கு சமம். அதை அனுமதிக்கமாட்டோம்.
அதே நேரம் சோயுர்பாய் சொல்வதையும் கவனத்தில் கொள்வோம், சாம்பாஜியின் சில பக்கம் கடுமையானவை என்றாலும் காலம் ஒருமனிதனை மாற்றும், அவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்தலே சரி.
அதனால் இந்துமரபுப்படி நாம் சாம்பாஜியினை அரசனாக்குவதே சரி, ஆனால் ஒரு மூத்தவர் குழுவுக்கு அவர் கட்டுப்பட்டாக வேண்டும் எனும் விதியும் அவசியம், மூத்தோர் அவையின் வழிகாட்டலில் அவர் மன்னனாகட்டும். இதைத் தவிர வேறுவழி இப்போது இல்லை” என முடித்தார்கள்.
சோயுர்பாய் தரப்பு இதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்ப்பாட்டம் செய்தது, ஒரு குடிகாரன் கையில் நாடு சிக்குவதை அனுமதிக்கமுடியாது என வாதிட்டது, சோயுர்பாய் ஆர்ப்பரிக்கத் தொடங்கினாள்.
விஸ்வநாத் திரும்ப சொன்னார், “அரசியாரே, பாலகனை அரசன் என வைத்தால் அவனைச் சுற்றி ஒருமாதிரி கூட்டம் உருவாகிவிடுவதும், நாட்டுக்கு நல்லது அல்ல அல்லவா? அனுபவமிக்க சாம்பாஜி இருக்கும் போது அனுபவமற்ற பாலகனை எப்படி வைக்க முடியும்?”
“யாரை துதிபாடும் கூட்டம் என்றீர்கள்? இவன் தாய்மாமனான ஹம்பிராவினையா?” எனக் கேட்டாள் சோயுர்பாய்
அதுவரை அமைதியாக இருந்த ஹம்பிராவ் பேசினான், “நான் இந்நாட்டின் சேனாதிபதி, எல்லையிலும் போர்களத்திலும் மட்டுமல்ல, நாட்டுக்குள் ஆபத்து வந்தாலும் களையவேண்டியது என்பணி.
இதோ இந்த அவை சாம்பாஜிதான் அடுத்த மன்னர் என உத்தரவிட்டதால் அதைச் செயல்படுத்துவதே என் பணி, நான் இப்போதே சென்று சாம்பாஜி மன்னரை அழைத்து வருவேன், உரியநாளில் அவர் முடிசூடட்டும்” என்றான்.
அவை ஏற்றுக்கொண்டது, அவன் விடை பெற்றுச் சென்றான். அவை கலைந்தது.
ஆனாலும், சோயுர்பாய் அமைதி கொள்ளவில்லை. மொரோபந்த் தலைமையில் ஒரு படை உருவானது. அது ராய்காட் கோட்டையில் சாம்பாஜியினை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்தது.
ஹம்பிராவ் மோதி சாம்பாஜியினை அழைக்க தன் படையோடு சென்ற சமயம், இங்கே இவர்கள் எல்லா ஏற்பாட்டையும் செய்தார்கள்.
மிகப்பெரிய வாரிசு சண்டையினை நோக்கி இந்து இராஜ்ஜியம் செல்வது போல் தோன்றிற்று, ஆங்காங்கே ஊடுருவியிருந்த ஒற்றர்கள் ஔரங்கசீப்புக்குத் தகவலைக் கடத்த ஓடினார்கள், தலைமை ஒற்றன் உசேன் ஆக்ரா நோக்கிச் சென்றான்.
அப்போது ஆக்ராவில் இருந்தபடி பெரும் களபேரத்தைச் செய்து கொண்டிருந்தான் ஔரங்கசீப். வரலாற்றில் அது ராஜபுத்திர கிளர்ச்சி எனச் சொல்லப்பட்டாலும் அக்பர் என்பவனால் மண உறவால் ராஜபுத்திரர் தோளில் கைபோட்ட வலுவான ராஜபுத்திரர்களிடம் உறவாடி உறவாடி பலவீனமாக்கி கடைசியில் அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய ஔரங்கசீப் வந்திருந்ததால் வந்த யுத்தம்.
தன் பூரண இந்துஸ்தான் எனும் கனவினை ராஜபுத்திரர்கள் பக்கம் அதாவது இன்றைய குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் பக்கம் அவன் திருப்பியிருந்த நேரமது.
கஜினி, கோரி காலம் தொடங்கி 600 ஆண்டுகாலம் எந்த ஆப்கானியனாலும் நேரடியாக கைப்பற்றமுடியா அந்த இடங்களைத் தான் கைப்பற்றப்போவதாகச் சொல்லிப் பெரும் குழப்பம் தொடங்கியிருந்தான், சிவாஜி இனி இல்லை என்ற உற்சாகத்தில் ராஜபுத்திரர்களோடு பெரும் போரில் இறங்கியிருந்தான்.
அவனிடம் சென்று நின்றான் உசேன், ஔரங்கசீப் தன் கழுகுகளைக் கையில் ஏந்தி தடவியபடி சிரித்தான், “சாம்பாஜி……” எனச் சொன்னபடி தன் கையில் இருந்த கழுகைப் பறக்கவிட்டான். அது தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த முயல் நோக்கி வெறியோடு பறந்தது.
(தொடரும்..)