சத்ரபதி சாம்பாஜி : 02

சத்ரபதி சாம்பாஜி : 02

ஔரங்கசீப்பின் முன் நின்றிருந்த உசேனிடம் சொல்லத் தொடங்கினான் ஔரங்கசீப், “இப்போது அந்தக் கலகக்காரன் சிவாஜி அரசில் வாரிசு போட்டி வந்திருக்கும், அதுதானே” என்றவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

உசேனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக ரகசியமாக திரட்டப்பட்ட தகவல், அதுவும் அரண்மனை கோட்டைகள் தாண்டி மக்களிடம் கூட வராத தகவல் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்பது, அவன் பார்வையிலே அதைப் புரிந்துகொண்ட ஔரங்கசீப் சொன்னான்.

“என்ன பார்க்கின்றாய், அரசனுக்கு ஆயிரம் கண்களும் இரண்டாயிரம் காதுகளும் வேண்டும், சொல் அங்கே நிலைமை எப்படி இருக்கின்றது?

வாழ்த்து சொல்லி தொடங்கினான் உசேன்.

“ஆலம்கீர், அங்கே சாம்பாஜி தரப்பு ஒரு பக்கம், சோயுர்பாய் தரப்பு ஒரு பக்கமுமாக திரள்கின்றார்கள். சாம்பாஜிக்கு வாய்ப்பு குறைவு, தளபதிகள் ஆதரவும் குறைவுதான். ஆனால், தலைமை சேனாதிபதி ஹம்பிராவ் சாம்பாஜி பக்கம் நிற்க, பல மூத்த தளபதிகள் ராஜாராம் பக்கமே நிற்கின்றார்கள், பெரும் மோதல் வெடிக்கலாம்” என்றான்.

“இது பற்றி நான் திலியர்கானுக்கு ஓலை அனுப்பிவிட்டேன், சாம்பாஜி நம் இலக்காக இருக்க வேண்டும், அதே நேரம் சோயுர்பாய் தரப்பின் சாம்பாஜி வெறுப்பு செய்திகளை நாமும் வேகமாக பரப்பிவிட வேண்டும், அரசில் ஏற்படும் குழப்பத்தை விட மக்களிடம் ஏற்படும் குழப்பமே நல்ல பலனைத் தரும், உடனே செய்யவும்” என்றான்.

உசேன் தலையாட்டிவிட்டு விடைபெற்றான், ஆழ்ந்த யோசனையில் இருந்த ஔரங்கசீப், தலைமை தளபதியினை வரச்சொல்லி அப்போது அப்பக்கம் களத்தில் இருந்த தன் மகன் முகமது அக்பருக்கு சில தகவல்களை அனுப்பிவிட்டு டெல்லி நோக்கிச் சென்றான்.

காரணம், அவன் சகோதரி ஜஹனாரா அப்போது உடல்நிலை பாதிக்கபட்டிருந்தாள், அப்போது அவளுக்கு 67 வயது ஆகியிருந்தது, பெரும் கோபக்காரனும் யாருக்கும் அடங்காதவனுமான ஔரங்கசீப் அவளுக்கு மட்டுமே கட்டுப்படுவான், அவனுக்கு அவள் இன்னொரு தாய்போல் இருந்தாள்.

அவளின் உடல் நலக்குறைவு ஔரங்கசீப்புக்கு அச்சம் கொடுத்தது, இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓடிச் சென்று அவளைக் கவனித்துக் கொண்டிருப்பான், அவன் மனம்விட்டு பேசும் ஒரே ஒரு உறவு அவள்தான், அவன் மனமெல்லாம் அவள் ஒருத்தியே அறிவாள்.

அப்படியானவன் அவளைக் காண வேகமாக டெல்லி செங்கோட்டை நோக்கிச் சென்றான்.

அதே நேரம் பன்ஹாலா கோட்டை இந்து ராஜ்ஜியத்தில் பரபரப்பானது, தொலைவில் காவிக் கொடி பறக்க பெரும் படை வருவது தெரிந்தது, ஏதோ பெரிதாக நடக்கப் போவதாக அறிந்த கோட்டை பரபரப்பானது. சாம்பாஜி அப்போது பூஜையில் இருந்தான், அவனிடம் விஷயம் மெதுவாகச் சொல்லப்பட்டது.

அவன் அந்தப் பரபரப்பான நிமிடத்திலும் பூஜையினை முடித்து சிவனுக்கு அபிஷேகம் முடித்து நெற்றியில் திருநீறு பூசி காசி இருக்கும் திசை நோக்கி வணங்கியபடி எழுந்தான், அப்படியே யோசனையில் ஆழ்ந்தான்.

பெரும் படை அதுவும் காவிக் கொடியுடன் வருகின்றது என்றால் தன்னைக் கைது செய்து கொண்டு செல்லத்தான் வருகின்றார்கள், ஏதோ பெரிய சதி நடந்திருக்கின்றது, ஜனார்த்தனத்தை அனுப்பி தன்னை இங்கே தொடர்ந்து தங்கவைக்கும்படி செய்துவிட்டு பின்னே படையினை அனுப்புகின்றார்கள், நாம் உடனே தப்ப வேண்டும் என்றவன் மனைவி யேசுபாயுடன் சுரங்கப்பாதை நோக்கிச் சென்றான். அது யாரும் அறியாபடி ஒரு அறையின் ரகசிய திறப்பில் இருந்தது.

அங்கே அவன் யாரையும் நம்பத் தயாராக இல்லை. எங்கும் தனக்கெதிரான ஆட்கள் இருப்பார்கள் என்றே நம்பினான், அதனால் மிக ஜாக்கிரதையாக தப்ப நினைத்தவன் முதலில் யாருக்கும் சந்தேகம் வராதபடி மனைவியினை அந்த அறைக்கு அனுப்பினான், பின் தானும் ஒரு சேவகன் போல் வேடம் அணிந்து வழக்கமான சோதனை செல்லும் காவலன் போல் அந்த அறைக்குச் சென்றான்.

அரசனுக்குரிய ஆடைகள் அணிகலனெல்லாம் முத்திரை மோதிரம் உள்பட அகற்றி ஒரு முடிச்சாகக் கட்டிக் கொண்டான், அவன் மனைவியும் அப்படிச் சாதரணக் கோலமானாள்‌. சில பச்சிலைகள், விஷ முறிவு மருந்துகளை மறக்காமல் எடுத்துக் கொண்டான். காரணம், சுரங்கவழி காட்டுவழி ஆபத்தானது. அப்படியே கொஞ்சம் பணமும் தங்கமும் மட்டும் எடுத்துக் கொண்டு வேலைக்காரர் கோலத்துக்கு மாறிய இருவரும் ரகசிய சுரங்க பாதையினைத் திறந்து சென்றார்கள். யேசுபாய் முன்னெச்சரிக்கையாகத் தீப்பந்தம் எரிய எண்ணெயும் கொஞ்சம் கலயத்தில் எடுத்துக் கொண்டாள்.

கையில் தீப்பந்தத்துடன் அவன் முன்னே செல்ல யேசுபாய் பின்னால் தொடர்ந்தாள். அது ஒரு இடத்தில் பல பாதைகளாகப் பிரிந்தன. அது யாரும் பின் தொடர்ந்து வந்தால் குழப்பம் ஏற்படுத்தும்படி ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்டது, உண்மையில் ஒரே ஒரு வழிதான் அருகிருக்கும் குகை ஒன்றில் முடியும்.

அந்த வழியினை அறிந்திருந்த சாம்பாஜி, சரியானபடி சென்று குகை வாசலை மனைவியோடு அடைந்தான். சுரங்கத்தில் பாம்புகள் சில விஷ ஜந்துக்கள் இருந்தன, அவற்றையெல்லாம் தீப்பந்தத்தாலும் வாளாலும் தாக்கிச் சென்ற சாம்பாஜி குகையினை அடைந்து வெளிவந்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தான்.

காரணம், சில நூறு பேரோடு நின்று கொண்டிருந்தான் ஹம்பிராவ் மோதி.

ஹம்பிராவ் போர்கள வித்தகன் எனத் தெரியும், ஆனால் இப்படியெல்லாம் தன்னைக் கணித்து வருவான் என அவன் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சுரங்கம் அவனுக்கும் தெரிந்திருக்கும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை, அரண்டே போனான், எல்லாம் முடிந்தது என நினைத்துக் கொண்டான்.

யேசுபாய் பதறினாள். முன்னால் வந்து மண்டியிட்டு ஹம்பிராவ் முகத்தை நோக்கிச் சொன்னாள், “இளவரசியாக அல்ல, இந்நாட்டின் பெண்களில் ஒருத்தியாக கேட்கின்றேன், என் தாலியினைப் பறித்துவிடாதீர்கள்”

ஹம்பிராவ் சொன்னான், “இந்து மன்னரின் தளபதிக்கு இந்நாட்டு பெண்களை வாழவைப்பதே கடமை, எம்மால் எந்தச் சிக்கலும் வராது, நாம் வந்த நோக்கம் நாட்டின் மன்னரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கே” என்றான்.

புன்னகைத்தான் சாம்பாஜி. விரக்தியில் சிரித்தபடி சொன்னான், “என்னைக் கொல்லவேண்டும் என்றால் இங்கேயே கொல்லலாம். மாறாக, அங்கே அழைத்துச் சென்று உங்கள் தங்கை சோயுர்பாய் முன்னால் கொல்லவேண்டும் அப்படித்தானே, இதற்கு ஏன் இந்த நாடகம்”

“நாடகம் அல்ல நாட்டின் அவசியம்” என்றான் ஹம்பிராவ். சத்தமாக சிரித்த சாம்பாஜி மறுபடி சொன்னான், “மருமகனை அரசனாக்க விரும்பும் தங்கை, அந்த மருமகனுக்குப் பெரும் பலமான தாய்மாமன் என அவர்களுக்குச் சாதகமாகத்தானே உங்கள் மனம் சிந்திக்கும். பின், எப்படி நீர் இங்கு வந்தீர், மொரோபந்த் போன்றவர்கள் எங்கே? அவர்கள்தான் மூத்தவர்கள் நியாயம் அறிந்தவர்கள்.

என்னை அரசனாக்க வேண்டுமென்றால் அவர்கள்தானே வரவேண்டும், நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்றான்.

ஹம்பிராவ் சுற்றிப் பார்த்தான். வீரர்கள் இருந்தார்கள், “மன்னரிடம் அதுபற்றி தனியே பேசவேண்டும்” என்றான்.

“வரமுடியாது, பெரும் படையோடு கோட்டையினை நோக்கி வந்தீர், நான் தப்பிச் செல்வேன் எனக் கணித்து யாரும் அறியாத இந்தச் சுரங்கபாதை வரை வந்திருக்கின்றீர் என்றால் உம்மிடம் திட்டம் உண்டு என்பதை ஊகிக்க முடியாதவனா நான், இப்போது என்னால் உம்மையும் இந்தப் படையும் தாண்டி வெல்லமுடியாது, நீர் விரும்புதை இங்கே செய்யலாம் இல்லையேல் நானே என்னைக் கொன்று கொள்வேனே தவிர ராய்காட்டுக்கு வந்து உம் தங்கை முன் சாகமாட்டேன், அப்படி ஒரு அவமானம் எனக்கு வேண்டாம்”

ஹம்பிராவ் பதறினான், யேசுபாய் மறுபடியும் கெஞ்சினாள், “தளபதியாரே, எங்களுக்கு இந்த அரசு வேண்டாம், கோட்டைகள் எதுவும் வேண்டாம், சுற்றி நாகங்களுடனும் நரிகளுடனும் எங்களால் வாழமுடியாது.

நாங்கள் தஞ்சாவூருக்குச் சென்றுவிடுகின்றோம், அங்கே இவர் சித்தப்பா வெங்கோஜியிடம் சென்றுவிடுகின்றோம். அது சிவாஜி மகாராஜின் சொத்து அல்ல, இவர்கள் தாத்தா ஷாஹாஜி எழுப்பிய அரசு, அங்கே தாத்தாவின் பேரனாக இவருக்கும் பாத்தியம் உண்டு.

சிவாஜி மகாராஜாவின் கோட்டைகள் சொத்துக்கள் எல்லாம் நீங்களும், உங்கள் தங்கை குடும்பமே எடுத்துக் கொள்ளட்டும், இவர் தாத்தாவின் சொத்து இவருக்குக் கிடைக்கட்டும், இந்த மகா பெரிய இந்து ராஜ்ஜியத்தில் அந்தக் காவேரி கரை சிறியது. அதில் எங்களுக்குச் சில அடி நிலம் போதும், பிடி அரிசி போதும் நாங்கள் வாழ்ந்துவிடுவோம்.

தளபதியாக உங்கள் எண்ணம் புரிகின்றது, அங்குச் சென்றால் வெங்கோஜியுடன் சேர்ந்து நாங்கள் கலகம் செய்வோம் என்றுதானே எண்ணுகின்றீர்கள், யார்மேல் ஆணையிட்டுத் தரவேண்டும் சொல்லுங்கள் தருகின்றோம், எங்களை வாழவிடுங்கள்” எனக் கெஞ்சினாள், கண்ணீர் துளிர்த்தது.

“இந்துப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க வாளேந்திய மாமன்னரின் மருமகள் அழக்கூடாதம்மா, நான் இவரிடம் கொஞ்சம் தனியே பேசவேண்டும், சிவாஜி மன்னரின் பவானி வாள் மேல் ஆணையாக என் மனதில் வஞ்சமோ துர் எண்ணமோ இல்லை, இதோ என் வாள், இதோ என் குத்தீட்டி, கத்தி எல்லாம் உன் முன் வைக்கின்றேன், அவர் என்னுடன் வரட்டும், ஆயுதமற்று நான் அவரிடம் தனியே சில அடி தள்ளி நின்று பேசுகின்றேன் என்னை நம்பலாம்” என்றான்.

“என் கடைசி நம்பிக்கையாக சிவன் சாட்சியாக அவரை அனுப்புகின்றேன்” என்றாள். சாம்பாஜி அவளை நோக்கினான், “சென்று வாருங்கள், அன்னை பவானி இருக்கின்றாள். நம்மைக் கைவிடமாட்டாள்” என அவள் மறுபடி சொல்ல அவனோடு படை கடந்து சென்றான் சாம்பாஜி.

திடீரென அவன் திரும்பிப் பார்த்தான், யேசுபாயினைச் சுற்றி காவல் இல்லை, கைது இல்லை என்பதால் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.

பெரிய மரம் ஒன்றின் அடியில் இருந்தப் பாறையில் அமர்ந்தான் சாம்பாஜி, காட்டின் நிசப்தத்தை பறவை ஒலிகளும் காட்டு யானைகளின் பிளிறல் சத்தமும் அவ்வப்போது குலைத்தன, சலசலவென காற்று வீசிக் கொண்டிருந்தது, ஹம்பிராவ் முகத்தையே பாராமல் இருந்தான் சாம்பாஜி.

ஹம்பிராவ் பேசத் துவங்கினான், “தங்களை மன்னராக்க வேண்டும் என்பது சபையின் முடிவு, அதற்காக உங்களை ஊர்வலமாக காவலாக அழைத்துச் செல்வதுதான் என் பணி, என்னை நம்பி வாருங்கள், ஆட்சியும் மணிமுடியும் உங்களுடையது.

இந்துமகா சாம்ராஜ்ஜியத்துக்கு அரசன் இல்லையெனில் மாமன்னர் செய்த அத்தனை அரும்பணியும் வீணாகும், நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எதிரிக்கு அனுகூலம், இன்னும் நாம் மக்களுக்குச் செய்யவேண்டிய காரியம் எல்லாமும் உண்டு, மழைக்காலம் நெருங்குகின்றது, நாட்டின் ஏரி குளமெல்லாம் சீர்ப்படுத்தி கால்வாய் சீர்ப்படுத்தி இன்னும் வேண்டியன எல்லாம் செய்து தயாராக வேண்டும்.

அரசனின்றி நிர்வாகம் கெட்டால் மக்கள் கிளர்ச்சியில் இறங்குவார்கள், அது ஆபத்து. இன்னும் நம் கடற்கரை வணிகம் காவல் என எல்லாமே அரச உத்தரவுக்காய்க் காத்திருக்கின்றது.

எல்லா இடமும் அடுத்த அரசன் யார், அவன் அணுகுமுறை எப்படி இருக்கும் எனும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது, அதே நேரம் வாய்ப்புக் கிடைத்தால் தாக்க ஔரங்காபாத்தில் பெரும் படையுடன் மொகலாயம் காத்திருக்கின்றது, நமக்கு அவகாசமில்லை. தயவு செய்து கிளம்புங்கள்”

சாம்பாஜி அவனை நம்பவே இல்லை, திரும்பக் கேட்டான். “அப்படி நீங்களெல்லாம் நினைத்திருந்தால் மன்னர் இறந்தவுடனே எனக்குச் சொல்லி அனுப்பியிருப்பீர்கள், அரச பணியினை ஏற்க சொல்லியிருப்பீர்கள், ஆனால் அதையெல்லாம் செய்யாமல் அவருக்குக் கொள்ளி போடும் வாய்ப்பும் எனக்குத் தராமல்..” என்றவன் கேவி கேவி அழுதான்.

“அவர் நலமாகத்தான் இருந்தார், நான் சந்தித்தபோது கால் வலியில் இருந்தார், சங்கமங்கேஸ்வர் போரில் நமக்கு ஏற்பட்ட சேதம் பற்றி முகலாயர் தங்களின் தாக்குதல் வியூகத்தை மாற்றியது பற்றிய குழப்பத்தில்தான் இருந்தார்.

அதற்குள் எப்படி மரணம் வந்தது? அதுவும் உடனே வந்தது, எல்லோரும் சேர்ந்து அவரைக் கொன்றுவிட்டீர்கள், நான் வந்தால் கலகம் வரும் என என்னிடம் மறைத்தும் வீட்டீர்கள், இப்போது எல்லோரும் சேர்ந்து என்னை அங்கே அழைத்துச் சென்று பழைய குற்றமெல்லாம் வாசித்து என்னை கொன்றுவிட்டு ராஜாராமுக்கு முடி சூட்ட போகின்றீர்கள் அதுதானே.

இதனைக் கூட ஊகிக்க முடியாதவனா நான்? என் தந்தையிடம் விசுவாசமாக இருந்த உங்களிடம் நான் கேட்பது ஒன்றுதான். என்னைத் தஞ்சாவூருக்கு அனுப்பிவிடுங்கள், நீங்கள் அஞ்சுவது போல் இன்னொருமுறை மொகலாயரிடம் நான் சென்று சேரமாட்டேன்.

நான் இந்நாடு இந்த மக்களெல்லாம் என்னுடையது என்றே வாழ்ந்துவிட்டேன், அதற்காக என்னை நானே சிவாஜியின் வாரிசாக கருதி சில குழப்பங்களைச் செய்துவிட்டேன், இந்நாடே எனக்கு இல்லை என்றானபின் நான் ஏன் இனி மொகலாயரோடோ பிஜப்பூரிடமோ சேரப்போகின்றேன்.

அதைச் செய்யமாட்டேன், என் தந்தை உருவாக்கிய இந்த மாபெரும் இந்துராஜ்ஜியத்துக்கு என்னால் குழப்பம் வராது, பிடிவாதமும் பேராசையும் கொண்ட உங்கள் தங்கை விருப்பப்படி ராஜாராமை அரசனாக்கி ஆளுங்கள், நான் துறவறம் செல்கின்றேன்.

மூத்தவன் முடிதுறப்பது ராமாயணத்தில் மட்டுமே நடக்கவேண்டுமா என்ன? இங்கும் நடக்கட்டும். நீங்களே ஆளுங்கள். என் மனைவி உங்கள் தங்கைபோல் பேராசைக்காரி அல்ல, அவள் சீதையின் வடிவம் எனக்கு வேறு எதுவும் வேண்டாம்.

என்னால் உங்களுடன் போராட முடியாது, சாதி இனம் ரீதியாக ஷிர்க்கே என நீங்கள் பலமானவர்கள், இந்த இனத்தின் பங்களிப்பிற்காகவே அவர்கள் உதவிக்காகவே சோயுர்பாயினைப் பாட்டி ஜீஜாபாய் என் தகப்பனாருக்குக் கட்டிவைத்தார், ஷிர்க்கே மக்களின் ஆதரவும் உங்களுக்கே வரும்.

நான் இனி மோதினால் நாம் இரு அணியாக அல்ல, பல அணிகளாகப் பிரிவோம், இது இந்து சாம்ராஜ்ஜியத்துக்கு நல்லதல்ல, எனக்கு இரு வாய்ப்பில் ஒன்றைத் தாருங்கள்‌

ஒன்று என்னைத் தஞ்சைக்கு அனுப்புங்கள், இல்லை இங்கே என்னை வெட்டிப்போடுங்கள், ராய்காட் கோட்டைக்கு அழைத்துச் சென்றுமட்டும் கொன்றுவிடாதீர்கள்”

அதுவரை அமைதியாக இருந்த ஹம்பிராவ் சொன்னான், “மன்னர் என்பதைத் தாண்டி நான் பேசலமா?” என்றான், “நீதியாக பேசப்போகின்றீர்களா” என்றான் சாம்பாஜி.

“இல்லை , மருமகனுக்கு மாமனாக, நீங்களும் எனக்கு மருமகனே, நான் உங்கள் தந்தையின் வீரத்தால் அவர் இந்த நாட்டுக்கும் மண்ணுக்கும் தன்னை அர்ப்பணித்து பெரும் போரைச் செய்ததால் போராட வந்தவன், அவர் என்னை நம்பினார், பெரிய பெரிய பொறுப்பைக் கொடுத்தார், என்னைத் தலைமை தளபதியாக்கினார், என் தங்கையினைத் திருமணம் செய்து உறவுமானார்.

அவர் எனக்குத் தெய்வம், அவர் குடும்பம் எனக்குக் கோவில், அங்கு நான் எப்போதும் காவல்காரன், அந்த அரண்மனையின் நலம் ஒன்றே விரும்பும் காவல்காரன்.

சிவாஜி மன்னர் குடும்பம் என் குடும்பம் என்றானபின் நீங்களும் எனக்கு மருமகனே, என் தங்கையின் பெரும் ஆசையினை நான் அறிவேன், அவள் செய்வது முறையல்ல, இன்னொருத்தியாக இருந்தால் கொன்றே இருப்பேன். ஆனால், இது நம் வீடு அவள் உங்களுக்கும் சித்தி, அவளை நான் முடக்கினால் ராஜாராமும் தாயில்லாப் பிள்ளையாக வளர்வானே, தாயில்லாமல் வளரும் பிள்ளையின் வலி உங்களுக்குத் தெரியாதா..” என்றவன் குரல் உயர்த்திச் சொன்னான்.

“சிவனே, நான் என்ன செய்வேன், அந்த மாமணியினை உன் கண்மணியினை நீ உடனே எடுத்துக் கொண்டாய், உன் ராஜ்ஜியத்தை காக்கும் பொறுப்பை எனக்கே கொடுத்தாய்.

ஒரு பக்கம் தங்கை, ஒரு பக்கம் கடமை, இன்னொரு பக்கம் மொகலாயர், இன்னொரு பக்கம் என் படைக்குள்ளே குழப்பம், நான் என்னதான் செய்வேன்.

சிவன்மேல் ஆணை, அன்னை பவானி மேல் ஆணை, மாமன்னன் சிவாஜி மேல் ஆணை, நீங்களே இந்துதேச அரசர், என்ன சிக்கல் வந்தாலும் உங்களை அரியணை ஏற்றாமல் விடமாட்டேன், என்னை நம்புங்கள்.

மாமனாக நான் சொல்லிவிட்டேன், இனி சேவகனாக அழைக்கின்றேன்” என்றவன் மண்டியிட்டான்.

சாம்பாஜி பதறினான், “மண்டியிடும் வழக்கம் நம்மில் எங்கிருந்து வந்தது, சிங்கம் சிங்கமாக இருக்க வேண்டும்” என்றவன், “நான் உங்களை மாமா என அழைக்கலாமா” எனக் குரல் உடைந்து கேட்டான்.

“என்னைவிட உமக்கு உரிமையாய் யார் உண்டு?” என்றான் ஹம்பிராவ்.

“மாமா..” எனத் தாவி அவனை அணைத்துக் கொண்டவன் அழுதான், ஓங்கி அழுதான். என்னை எப்படி அரசாக்குவார்கள், இருபெரும் குற்றம் என்மேல் உண்டே, அதை எப்படி நான் தாண்டிவரமுடியும்” என்றவனிடம் “அதெல்லாம் விடுங்கள் மருமகனே, இனி நடப்பதை யோசிப்போம்” என்றான்.

“அல்ல, என் மனதின் வலியினை என் தந்தையிடம் கூட நான் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நாடு, போர் என நாளெல்லாம் திரிந்து மகன் மனதை அறியாமல் விட்டுவிட்டோமே என அவர் வருந்தியிருக்கக் கூடும். அதனால் நான் அவரிடமும் நிறைய விஷயம் சொல்லவில்லை.

மாமா எனக்கு எட்டு அன்னைகள், பெற்றெடுத்தவள் போக ஏழுபேர் உண்டு. பாட்டி ஜீஜாபாய் இருந்தவரை என்னை எல்லோரும் அன்போடுதான் வைத்திருந்தார்கள், பெண் சிங்கமான என் பாட்டி என்னை அவ்வளவு அன்பாக வளர்த்தாள், நான் பிறந்த நேரம் என் தந்தை அப்சல்கானைக் கொன்று பெரும் புகழ் படைத்திருந்ததால் நான் அவளுக்கு ராசியுள்ள பேரனானேன்.

அவளே அவளின் மூத்த மகன் பெயரான சாம்பாஜி எனும் பெயரை எனக்கு இட்டு வளர்த்தாள், அவளிடம் நான் ஒட்டியதோ என்னமோ மற்ற அன்னையர்க்கு என்னைக் கொஞ்சமும் பிடிக்காமல் போனது.

மாமா, என் தாயினை நான் அறிந்ததில்லை. நான் பிறந்த சில காலத்திலே அவளும் சென்றுவிட்டாள், என் பாட்டியும் என் பதின்ம வயதில் சென்றாள். என் தந்தை என்னோடு அதிகம் இருந்தவர் அல்ல, அவர் ஓயாப் போர், ஓட்டம் என ஓடிக் கொண்டே இருந்தவர். பாட்டியோடு வளர்ந்த நான் போர்க்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டேன், அரசனுக்குரிய எல்லாக் குணங்களுடன் வளர்க்கப்பட்டேன்.

என் வாழ்வு நீங்களும் அறிந்தது. அவ்வப்போது பெரும் பிரிவுகள் இளம் வயதிலே என்னைத் தாக்கும். ஜெய்சிங்கிடம் நான் பணயக் கைதியாக இருந்தேன், ஆக்ரா கோட்டையில் இருந்து தந்தையோடு அந்தப் பத்து வயதிலே தப்பி உறவுகளைப் பிரிந்து உங்கள் எல்லோரையும் பிரிந்து மதுராவில் யாரோ சிலரிடம் இருந்தேன், அப்போதெல்லாம் நான் எவ்வளவு அன்பிற்கும் பாசத்துக்கும் ஏங்கியிருப்பேன்.

சிறிய வயதில் ஜெய்சிங்கிடம் இருந்தபோது, மதுராவில் அனாதையாக இருந்தபோதெல்லாம் எவ்வளவு அழுதிருப்பேன், அந்தப் பால்யவயது வலியெல்லாம் எவ்வளவு கொடியது, அப்படியான என்னை அரண்மனையில் என் பாட்டிக்கு பின் யார் ஆதரித்தார்கள்?

என் சித்திகள் கண்ணுக்கெல்லாம் நான் அடுத்த அரசனாகத் தெரிந்தேன். அவர்கள் கண்ணுக்கு வாளும் செங்கோலும் அரியணையும் தெரிந்ததே தவிர இவன் நம்வீட்டு பிள்ளை எனும் அக்கறை கொஞ்சமேனும் இருந்ததா?

யாராவது என்னை அரசன் என்பதைத் தாண்டி மகன் என வேண்டாம் ஒரு மனிதன் என நடத்தினார்களா?

ராஜாராம் என் தம்பி, ஆனால் உங்கள் தங்கை அவனோடும் என்னைச் சேரவிடவில்லை. என்னை எதிரியாகவே கண்டாள். அவனுக்கு அவள் சோறு ஊட்டும்போதெல்லாம் எனக்கும் ஒரு வாய் ஊட்டமாட்டாளா? என்னையும் அருகில் வைத்துக்கொள்ளமாட்டாளா என எவ்வளவு அழுதிருப்பேன்.

பாட்டி இல்லை, எனக்குத் தாயுமில்லை, எனக்கென யார் உண்டு? நான் அன்பிற்கு ஏங்கினேன், அழுதேன் அலைந்தேன். இந்த யேசுபாயினை எனக்கு மணமுடிக்கும் போது அவளுக்கு பால்ய வயது. என்ன தெரியும் அவளுக்கு? இது அரச பலத்துக்காய் நடந்த ஏற்பாடு, ஒரு ஒப்பந்தம் மற்றபடி எனக்கென யார் உண்டு?

நான் தனித்துவிடபட்டதாக உணர்ந்தேன், அப்போதும் அரசனுக்கோ நாட்டுக்கோ துரோகம் இழைக்கவில்லை. 15 வயது முதல் ராணுவத்திலும் இருந்தேன், எத்தனையோ போரில் நான் போரிட்டதை, தளபதியாக நின்றதை நீங்களும் அறிவீர்கள்.

ஆனால், என்னைப் பற்றிய அவதூறுகள் நிறைய கிளம்பின. நான் புகையிலை பிடித்தால் கூட கஞ்சா போதைக்காரன் எனக் கதைகள் உருவாயின, உடல் வலியால் கஷாயம் அருந்தினால் கூட அது குடிவகை என்றாயிற்று, என்னைப் போதை அடிமை உருப்படாதவன் பொல்லாதவன் என ஊரெல்லாம் பரப்பியதில் மொகலாயர் இருந்தார்கள், போர்ச்சுகீசியர் இருந்தார்கள், அவர்களாவது எதிரிகள், ஆனால் அதில் உங்கள் தங்கையும் இருந்தாள்.

அதெல்லாம் உண்மை அன்று. என்மேல் விழுந்த பெரும் பழி. ஒரு பெண்ணின் சாவுக்குக் காரணமாக இருந்தேன் என்பது.

அவளை நான் ஒரு கோவில் விழாவில் கண்டேன், அற்புதமாகப் பாடினாள், மிக உருக்கமாய்ப் பிராத்திப்பாள், மானின் சாயலும் பெண்மைக்குரிய எல்லா நளினமும் அவளிடம் இருந்தது, நான் அவளை அரசனாகக் காணவில்லை, கண்டதெல்லாம் மாறுவேடத்தில்.

நான் அவளை மாறுவேடத்திலே சந்தித்து என் காதலைச் சொன்னேன். ஆம், நான் அவளை மனமார காதலித்தேன், அவளை மணம் செய்து கொள்ள அவ்வளவு துடித்தேன், நான் மன்னன் என்பது தெரிந்தால் எந்தப் பெண்ணும் விரும்புவாள், இப்பெண்ணும் விரும்பியிருப்பாள் அது என்மேல் கொண்ட அன்பு அல்ல, அரச அடையாளத்தின் மேல் கொண்ட ஆசையாக மட்டுமே இருக்க முடியும்.

அதனால் நான் அவளின் அன்பினைப் பெற்று அவள் காதலைப் பெற்றபின் வேஷம் கலைக்க முயன்றேன். கோவிலுக்குப் பூஜைக்கு வரும் அவளிடம் பூ வியாபாரி போல் நடித்தேன், அவளுக்காய்ப் பூக்களைத் தொடுத்தேன். பல வகை வகையாக அழகாக நானே தொடுத்தேன், அந்தப் பூவிலே என் காதலை தெய்வத்திடமும் அவள் கையாலே சொல்லி வந்தேன்.

ஆனால், அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை, ஏன் என்பதும் எனக்குத் தெரியவில்லை. அவள் எனக்கு உலகமானாள், நானோ அவளுக்கு அருவெருப்பான ஜந்துவானேன், அவளின் புறக்கணிப்பு எனக்கு வலியினைக் கொடுத்தது, அந்த வலியில்தான் போதையில் வீழ்ந்தேன்.

நான் நினைத்திருந்தால் வாள்முனையில் கடத்தியிருக்க முடியும், நாட்டில் எல்லாமே அரசனுக்கு என அள்ளியிருக்கமுடியும். நான் அவள் மனதை விரும்பியதால் என்னை நானாக அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்த அரசனாக அல்ல ஏழை பூக்காரனாக அவள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்பினேன்.

அவள் என்னைப் புறக்கணித்தாள், ஊரில் சொல்லி என்னைத் தண்டிக்கப்போவதாக மிரட்டினாள். அது என்னைப் பெரிதும் பாதித்தது, என் பாட்டி மட்டும் இருந்திருந்தால் அவளைப் பற்றி சொல்லியிருப்பேன், ஆனால் அப்போது யாரிடம் சொல்லமுடியும்?

அவளின் புறக்கணிப்பில் நான் பைத்தியமானேன், என் நண்பர் சிலர் என் நிலை அறிந்து அவளை மிரட்டினார்கள் , மடையர்கள் மிரட்டல் எனும்பெயரில் அவளை தூக்கிவர முயன்றிருக்கின்றார்கள், என் பெயரைச் சொல்லி நாளை கோட்டைக்கு வரவேண்டும் என எச்சரித்திருக்கின்றார்கள்.

அவள் பாவம் மிரண்டுபோனாள், ஒரு பக்கம் பூக்காரன், இன்னொரு பக்கம் சாம்பாஜியின் மிரட்டல் என அஞ்சி ஒடுங்கி செத்தே போனாள். அவள் மட்டும் பூக்காரனான என்னை அரண்மனையில் சந்தித்திருந்தால் அவள் வாழ்வும் என் வாழ்வும் மாறியிருக்கும், ஆனால் என் வல்விதி அங்கும் என்னை ஆட்டியது.

எல்லோருக்கும் சாம்பாஜி அப்பெண்ணைக் கொன்றுவிட்டான் என்பது செய்தியானது, அந்த ஏழை பூக்காரன் கொண்டிருந்த காதல் யாருக்கும் தெரியாமலே போனது.

என் காதல், என் ஆசை, என் ஏக்கம், என் வாழ்வு என எல்லாமே அந்த நொடி கலைந்தது. நான் எந்தச் செடியினைத் தங்கக்கூண்டு கட்டி பன்னீர் விட்டு வளர்க்க ஆசைபட்டேனோ அது என் கண்முன்னே விதியால் பிடுங்கி எறியப்பட்டது, எந்தக் கோல கிளிக்கு மணிமாளிகை வீடு கட்டி சிறகில் தங்கமிட்டு வளர்க்க ஆசை கொண்டேனோ அது செத்துக் கிடந்தது.

அதுவும் கொன்றவன் நான் எனும் பழியோடு கிடந்தது, அவள் காதல் கொடுத்த வலியினை விட அவள் பிரிவு கொடுத்த வலி அதிகம், அதையெல்லாம் தாண்டி இதைச் சொல்லி அழ யாருமில்லை. போதை எனக்குத் தாய்மடியாயிற்று, இல்லையேல் என்னால் அப்போது வாழமுடியாது, அவளின் முகமும் கண்ணும் அவளின் சிரிப்பும் என்னைப் பாடாய்ப்படுத்திக் கொன்றது.

சாகுந்தலை துஷ்யந்தனுக்குக் கிடைத்தது போல் அவளை மறக்கும் சாபமும் எனக்குக் கிடைக்கவில்லை, அதைப் போதைதான் தந்தது.

இந்த வலியினைத்தான் உங்கள் தங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினாள், ஒரு தாயாக என்னை அணைத்துத் தேற்றியிருக்க வேண்டியவள், நான் காயம்பட்டு வீழ்ந்த நேரம் முழுக்கச் சாய்க்க எண்ணினாள்.

விஷயம் என் தந்தைக்குச் சென்றது, எனக்கோ சாட்சிக்கு யாருமில்லை, அந்த ஏழை பூக்காரனுக்குத் தெய்வம் தவிர அன்று சாட்சியில்லை, இருந்த ஒரே சாட்சி அவள், அவளுமில்லை என்றால் நான் என்ன செய்வேன்?

இதனால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டேன். என் தந்தை அரச விதிகளுக்குக் கட்டுப்பட்டார். சோயுர்பாய் பெரும் துர்போதனை செய்தாள், இந்நேரம் பெரும் செய்திகள் என்னைத் தாக்கின‌.

மன்னர் பதவி ஏற்கும்போது இந்துப் பெண்களுக்குக் காவலாய் இருப்பேன் எனப் பிரமாணம் செய்திருந்தார். சிவாஜி மன்னர் குடிகளுக்கே விசுவாசமானவர் என்பதால் என்னைக் கொல்லப்போகின்றார் எனும் செய்தி வந்தது, நான் அவரைச் சந்திக்க நினைத்து செய்த காரியத்தை எல்லாம் சுற்றி இருந்தோர் முறித்துப்போட்டு பிளவினைப் பெரிதாக்கினர்.

நான் அப்போது தஞ்சாவூருக்குச் செல்லத்தான் நினைத்தேன். ஆனால், வெங்கோஜிக்கும் என் தகப்பனாருக்கும் அப்போது முறுகல் என்பதால் அதுவும் ஆபத்தாகும் என அஞ்சினேன், சோயுர்பாய் என்னென்ன விஷமம் செய்வாள் என்பதில் குழப்பமே மிஞ்சிற்று.

எனக்கு அப்போது ஒரு காவல் வேண்டும், அந்தக் காவலைத் தருவதாக திலியர்கான் சொன்னான், அவன் பிஜப்பூரை ஒழிக்கத்தான் என்னிடம் உதவி கோரினான், எக்காரணம் கொண்டும் எங்கள் நாட்டுக்கு எதிராக வரமாட்டேன் எனச் சொல்லித்தான் அவனிடம் நான் சேர்ந்தேன், அது எனக்கு நான் இட்ட காவலே தவிர இந்நாட்டுக்கு எதிரான குழப்பம் அல்ல‌.

என் தந்தையே பல இடங்களில் பிஜப்பூருடன் கூட்டு சேர்ந்தார். மொகலாய தளபதி ஜெய்சிங், ஜஸ்வந்த்சிங்குடன் உறவு பாராட்டினார். ஆபத்து காலத்தில் எதிரியுடன் கவனமாகக் கைகோர்ப்பது ராஜதந்திரத்தில் அனுமதிக்கப்பட்டது, இங்குக் காலமே எல்லாம் தீர்மானிக்கும். நம்மைக் காக்க சில தந்திர நகர்வுகளைச் செய்வது அனுமதிக்கப்பட்டது, நான் அதைத்தான் செய்தேனே அன்றி இந்த இந்து ராஜ்ஜியத்துக்குத் துரோகம் இழைக்கவில்லை.

ஆனால், சில காலங்களிலே மொகலாயரின் கொடுமைகளைக் கண்டு வெளியேறிவிட்டேன். ஆனால், அவர்களின் போர் வியூகம் எல்லாம் கற்றுவிட்டே வந்தேன், அங்கு என்னை அரசனாக்க அப்போதே முயன்றான் ஔரங்கசீப். ஜெய்சிங் காலத்து ஒப்பந்தமெல்லாம் சொல்லி ஆசைகாட்டினான். அரசுக்கு ஆசைபட்டிருந்தால் அப்போதே ஔரங்சீப்புடன் கைகோர்த்திருப்பேன், ஆனால் என் விருப்பம் அது அல்ல‌.

இந்த இரு விஷயங்களும் என்மேல் பழியாகிவிட்டன. இன்று இவைகளாலே நான் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றேன்” என்றவன் பெருமூச்சுவிட்டபபடி ஹம்பிராவினைக் கட்டி அழுதான், “மருமகனே, இனி உனக்கு நான். இருக்கின்றேன், இந்த மாமன் இருக்கும் வரை நீ எதற்கும் கலங்கக் கூடாது” என அவன் கைபிடித்து உறுதிதந்தான் ஹம்பிராவ்.

“சரி, என்னை ராய்காட் கோட்டைக்கு வா என அழைத்திருக்கலாமே, ஏன் இப்படி படையோடு வந்தீர்கள்” என்றான் சாம்பாஜி.

“நீங்கள் முடிசூடுவது எளிதில் நடக்காது மன்னா, அங்குச் சமிக்கைகள் சரியல்லை, நான் பெரும் படையோடு இங்கு வராவிட்டால் நீங்கள் வரும்போது உங்களைப் பிடித்துத் தொலைத்திருப்பார்கள்” என்றான்.

“மொரோபந்த் இருக்கும் போதா?” என்றான் சாம்பாஜி.

“அவர் தலைமையில் தான் உங்களைப் பிடித்திருப்பார்கள், அதனால் மன்னரை ஊர்வலமாக அழைத்துவர பெரும் சேனை வேண்டுமென சொல்லி நான் பெரும் படையோடு வந்துவிட்டேன், ஆனால் அரண்மனை காவல்படையும் சில படைகளும் அங்கு உண்டு. அவைகள் எதற்கோ தயாராவதாக செய்திகள் சொல்கின்றன, என்ன ஆனாலும் உன் உயிரே போனாலும் நீங்களே மன்னர்” என்றான் ஹம்பிராவ்.

அவனைக் கட்டி தழுவிய சாம்பாஜி சொன்னான், “என் தந்தை மிகச் சிறந்த ஒருவனிடம் என்னை ஒப்படைத்துவிட்டே சென்றிருக்கின்றார், அந்தச் சிவனுக்கு நன்றி”

இருவரும் உறவாடியபடியே திரும்பினார்கள். யேசுபாயிடம் இருந்து தன் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட ஹம்பிராவ் சொன்னான், “மகளே, எனக்குத் தாராபாய் வேறு நீ வேறு அல்ல, இவர் எனக்கும் மருமகன், நான் ராஜாராமின் தாய்மாமன், நான் இருக்கும்வரை உனக்கு ஒரு குறையும் வராது”

இருவரும் அவனிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள், “அந்தக் காசிவாழ் சிவனும். அன்னை பவானியும் அவர்கள் சாட்சிகளாக உங்களைக் காக்கட்டும்” என வாழ்த்தினான் ஹம்பிராவ்.

அதே நேரம் ராய்காட் கோட்டை பரபரப்பானது, ராஜமாதாவாக மாறியிருந்த சோயுர்பாய் தன் திட்டத்தின் கடைசி நிலைக்கு வந்திருந்தாள், அதன்படி அவள் ஏழாயிரம் பேர் கொண்ட படையினைத் திரட்டினாள், அது இரு வட்டமாக இருந்தது.

முதல் வட்டத்துக்கு மொரோபந்தும், இரண்டாம் வட்டத்துக்கு அஞ்சய் தத்தோவும் தலைமை தாங்கினார்கள். இன்னும் சில தளபதிகளும் இவள் பக்கம் இருந்தார்கள், மேற்கொண்டு பெரும் படை திரட்ட கோட்டைகளுக்குத் தகவல் சென்றது, எல்லா இடத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

விஷயத்தை மோப்பம் பிடித்த திலியர்கான் பிஜப்பூரின் எல்லையில் இருந்தான், அவன் கூர்ந்த மதியுடன் தான் கடிதம் எழுதாமல் அப்போது அப்பக்கம் ஆளுநராக இருந்த ஔரங்கசீப்பின் மகன் முகமது அக்பரைக் கொண்டு கடிதம் எழுதினான்.

“எங்கள் மதிப்புமிகு சாம்பாஜி மன்னருக்கு வணக்கங்கள்.

இந்துஸ்தானத்தின் மிகச் சிறந்த மன்னர்களில் ஒருவரும், உலக மன்னர்கள்களால் மக்களால் மதிக்கபட்டவருமான சிவாஜி மன்னரின் மறைவுக்கு வருந்துகின்றோம். அவர் இந்துக்களுக்கான அரசை ஸ்தாபித்திருந்தாலும் இஸ்லாமியரைப் பண்போடு நடத்தினார், அவர் படையில் இஸ்லாமியரும் இருந்தார்கள். எந்த இஸ்லாமியருக்கும் அவர் நெருக்கடி கொடுக்கவில்லை என்பதை நாங்கள் எப்போதும் மதிக்கின்றோம். சிவாஜி மன்னரின் இழப்பு பற்றி எங்கள் அத்தை சஹனாராவும், என் சகோதரி நிஷா உன் பேகமும் தங்கள் வீட்டு இழப்பாகவே கருதி துக்கம் கொண்டாடினார்கள், அவர் எங்கள் மனதையும் வென்றவராயிருந்தார்.

இப்போது அடுத்த அரசராக நீங்கள்தான் முடிசூட வேண்டும். ஆனால், சில குழப்பங்கள் அங்கே எழுவதாக அறிகின்றோம். இன்றல்ல நேற்றல்ல ஜெய்சிங் காலத்திலே சிவாஜி மன்னர் செய்த ஒப்பந்தப்படியும், நீங்களே திலியர்கானுடன் சேர்ந்து நின்ற காலங்களின் ஒப்பந்தப்படியும் நீர் எங்கள் ஆதரவைப் பெற்றவர், அதனால் நாங்கள் உங்களைத்தான் அங்கீகரிப்போம்.

இதுபற்றி எந்த உதவி எப்போது கேட்டாலும் எங்கள் தரப்பில் இருந்து செய்துதரப்படும், நீங்கள் மன்னராகப் பதவி ஏற்கப்போவதற்கு வாழ்த்துக்கள், இறைவன் உங்களை மேலும் ஆசீர்வதிக்கட்டும், இந்துஸ்தானத்தில் புதிய மன்னரை வரவேற்பதில் மகிழ்கின்றோம்”

கடிதம் கண்டதும் அதனை ஹம்பிராவிடம் கொடுத்தான் சாம்பாஜி. அதைப் படித்து புன்னகைத்தான், “நம்மில் ஏற்பட்ட பிளவினைக் கொண்டு ராய்காட் கோட்டையில் நுழைய பார்கின்றனர் மொகலாயர்” எனச் சொன்னவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

பின், தன் தேர்ந்த அனுபவத்தில் சொன்னான், “சாம்பாஜி மொகலாயரிலும் அடுத்த வாரிசு யார் எனும் சண்டை வரலாம், அங்கு இளவரசர்கள் 20 வயதை தாண்டும்போதே இந்த மோதல் வரும், சொல்லமுடியாது இதே முகமது அக்பர் கை ஒங்கலாம். அதனால் இப்போது அவர்கள் உதவியினை நாம் ஏற்கவேண்டாம். ஆனால், அவனை விலக்கி வைக்கவும் வேண்டாம், உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி, தேவைப்பட்டால் உங்களைத் தொடர்புகொள்வோம். இப்போது இங்கு எந்தச் சிக்கலுமில்லை என்பதுபோல் ஒரு கடிதம் எழுது” எனச் சொன்னான். அப்படியே அனுப்பிவிட்டு ராய்காட் கோட்டைக்குச் செல்ல தயாரானான் சாம்பாஜி. பெரும் படை ஊர்வலமாகக் கிளம்பிற்று. முன்னால் குதிரையில் கம்பீரமாக ஹம்பிராவ் அமர்ந்து செல்ல அவனுக்கு முன்னால் காவிக் கொடி உயரப் பறந்தபடி வீரர்கள் செல்ல ஊர்வலம் தொடங்கிற்று.

பெரும் படை குதிரை, யானை, ஒட்டகம் எனக் கிளம்பிற்று. பின்னால், யானையில் அம்பாரியில் சாம்பாஜியும் யேசுபாயும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அருகில் குதிரையில் அவன் நண்பன் காவி காலேஷ் போன்றோர் காவலாக வந்து கொண்டிருந்தார்கள்.

முன்னால் சென்றாலும் தன் இறுக்கமான கண்காணிப்பால் சாம்பாஜியினை ஒவ்வொரு நொடியும் காத்தபடியே வந்தான் ஹம்பிராவ். சாம்பாஜிக்கு செல்லும் உணவு கூட பரிசோதிக்கப்பட்டது, வீரர்களிலும் துரோகிகள் இருக்கலாம் என்பதால் வீரர்கள் அவரவர் ஆயுதம் தாக்கமுடியாத தொலைவில் வைக்கபட்டனர், வாள் வீரர்கள் சற்று தள்ளி அம்பு எய்யும் வீரர்கள் அம்பு வீச்சுக்கும் அப்பால் ஈட்டி வீரர்கள் அதற்கும் அப்பால் வரும்படி கச்சிதமாக அவனைக் காத்து அழைத்து வந்து கொண்டிருந்தான் ஹம்பிராவ்.

பெரும் ஆரவாரமும் மேள தாளமும் இசைக்கப்பட்டன, “சத்ரபதி சாம்பாஜி வாழ்க, சிவாஜி மன்னரின் வாரிசு வாழ்க” என்ற பெரும் ஆர்ப்பரிப்புடன் “ஹர ஹர மகாதேவ்” “ஹரே பவானி” எனும் கோஷங்களும் விண்ணைப் பிளந்தன‌.

பெரும் படையுடன் ஹம்பிராவ் வரும் தகவலை அடுத்துச் சோயுர்பாய் தரப்பும் தீவிரமானது. “மன்னர் ராஜாராம் வாழ்க, துரோகி சாம்பாஜி ஒழிக” என அவர்களும் வரிந்து கட்டினார்கள்.

ராய்காட் கோட்டையின் பீரங்கிகளும் தயாராயின‌.

அதுவரை அந்நியரை எதிர்த்து போராடிய சிவாஜியின் சிவசேனை சோயுர்பாய் எனும் கைகேயியின் புத்திரமாசம் அறிவை மூடியதால் தங்களுக்குள் மோதத் தயாராயின‌.

அதுவரை பெரும் மொகலாயத்துக்கு எதிராக பெரும் வெற்றிகளை உலகறியப் பெற்ற சிவசேனைத் தங்களுக்குள் ரத்தம் சிந்தத் தயாரானது.

திலியர்கான் ஒருவகையில் தயாராக இருந்தான். அதாவது, சாம்பாஜி அழைத்தால் செல்லவேண்டும் அல்லாவிட்டாலும் “அமைதியினை ஏற்படுத்த” செல்லவேண்டும் எனப் படையோடு தயாரானான்.

மேற்குக் கடலில் இந்த நெருக்கடியில் இனி சிவாஜியின் கடற்படைகளும் இரண்டு பிரிவாக பிரியும், அதில் யாருக்கு உதவி மேற்குக் கடற்கரையினை அபகரிக்கலாம் எனப் போர்ச்சுகீசியர் ஆலோசனையில் இறங்கினார்கள், அவர்கள் கவர்னர் ஜெசிந்தோ டி பிகரடோ இ அப்ரியோ என்பவன் தயாரானான், அப்படியே பம்பாய் தீவில் இருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆளுநர் ஆக்சென்டென் என்பவனும் தயாரானான்.

இந்தக் குழப்பத்தில் மறுபடியும் பன்ஹாலா கோட்டையினைக் கைப்பற்றமுடியுமா எனப் பிஜப்பூர் சித்தி தயாரானான், ஜான்சிரா தீவில் இருந்து ஆப்ரிக்க கப்பல்களும் கடலோரம் அட்டகாசம் செய்ய முனைந்தன‌.

இப்படி ஆப்கானியர், ஐரோப்பியர், ஆப்ரிக்கர் என எல்லாத் தரப்பும் மீள சிவாஜி மீட்டப் பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தது. ராய்காட் கோட்டையினை சாம்பாஜி நெருங்கும் நேரம் பெரும் ரத்த ஆறு ஓடும், அத்தோடு சிவாஜி எழுப்பிய இந்த மகா இந்துராஜ்ஜியம் ஒழியும் என எல்லோரும் அஞ்சிய நேரம் சாதாரா கோட்டையில் ஒரு குரல் அனுமனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது.

அது ஸ்மார்த்த ராமதாஸரின் குரல், “என் அனுமனே, என் சீடன் சிவாஜியினால் எழுந்த இந்து ராஜ்ஜியமிது. அவன் என் பிரதிநிதியாய் எழுந்து அமைத்து ஆண்ட ராஜ்ஜியம் இது, வேதசாலைகள் பெருகி இந்து கோவிலெல்லாம் மீட்டுத் திருப்பணிகளைச் செய்யும் அரசு இது.

இந்துக்களின் ஆதரவும் நம்பிக்கையுமாய் இருக்கும் ஒரே தேசமிது, அயோத்தி மதுரா காசி என எல்லாம் இழந்தாலும் எப்படியும் மீட்டெடுப்போம் என உரக்க நம்பிக்கை சொல்லும் தீபம் இது.

இதனை அணைக்க விடலாமோ, இந்தப் புனிதவாளை உடைய விடலாமோ, என் இந்துராஜ்ஜியம் என் கண்முன் அழிவதை, இந்த ராஜ்ஜியம் என் கண்முன் சிதைவதை நான் காணமாட்டேன், என்னை எடுத்துக்கொள், என் உயிரை எடுத்துக்கொள், இந்தக் கொடுமையினை என்னால் காணமுடியாது ” என அனுமன் சிலை முன் அவர் பட்டினி கிடந்து சாகத் துணிந்தார்.

காவிக் கொடி ஏந்தியபடி சாம்பாஜியும், ராஜாராமும் பெரும் படையுடன் மோதத் தயாராகும் போது அந்தக் காவி கொடியினை சிவாஜிக்குக் கொடுத்த அவனின் குருநாதர் பட்டினி கிடந்து சாகத் துணிந்து அமர்ந்திருந்தார்.

டெல்லி சென்று கொண்டிருந்த ஔரங்கசீப் தனக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல செய்தி வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சாம்பாஜி ஊர்வலம் ராய்காட் கோட்டையினை நெருங்கியதும் முதலில் வெடித்தது எச்சரிக்கை பீரங்கி, “இங்கு ராஜாராமே அரசர், ஒழுங்காக எங்களிடம் சரணடைந்து அவரை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் துரோகம் செய்தவர்கள் பட்டியலில் சேர்ந்து சாகத் தயாராகுங்கள்” என்ற முழக்கம் சோயுர்பாயிடம் இருந்து சொல்லப்பட்டது.

அதைக் கேட்டு குதிரையில் இருந்து இறங்கினான் ஹம்பிராவ், அவன் கண்களில் பெரும் ஆத்திரம் குடிகொண்டிருந்தது.

(தொடரும்)