சத்ரபதி சாம்பாஜி : 03

சத்ரபதி சாம்பாஜி : 03

டெல்லியினை அடைந்த ஔரங்கசீப் செங்கோட்டையில் தன் அரச மண்டபத்தில் தன் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான். ஒவ்வொரு துறையாக விசாரித்துக் கொண்டிருந்தான். அப்போது ஜோத்பூர் அரசு செய்யும் பெரிய கலகம் பற்றியும் நாடெல்லாம் எழுந்திருக்கும் புதிய நெருக்கடி பற்றியும் அவனிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.

ஆம், அவன் ஜிசியா வரியினை மீள விதித்து மீண்டும் இந்துக்களையும், சீக்கியரையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருந்தான்.

ஜிசியா வரிகுறித்து சிவாஜி வரலாற்றில் மிக ஆழமாகப் பார்த்திருந்தாலும் இங்கும் அதனைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

(இந்த ஜிசியா வரியின் மூலம் பழைய கிறிஸ்தவர்களிடமிருந்து தொடங்கிற்று, அவர்கள் ரோமானிய ஆட்சியில் அதனைச் செய்தார்கள். அதற்குப் “புற இனத்தவர்” வரி, “ஜென்டைல் வரி” எனப் பெயர். அதாவது, கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் அரசுக்கு கூடுதலாக நிறைவரி கட்ட வேண்டும், இல்லாவிட்டால் வாழமுடியாது.

வாழ்ந்தால் எங்கள் மதத்தில் வாழவேண்டும், இல்லையேல் வரி என எல்லாவற்றையும் உறிஞ்சி வாழவிடமாட்டோம் எனும் கொடுமை அது. இதனைக் கிறிஸ்தவ போர்ச்சுகீசியர் கோவா பக்கம் முயற்சித்தார்கள், இந்த வரி இன்னும் பல உருமாற்றம் பெற்று பிரிட்டிஷ் கால வரிக்கொடுமையில் கேரளாவில் முலைவரி என்றெல்லாம் வந்தது.

ஜிசியா அப்படியான ஒரு வரி. அதாவது, கலீபாக்கள் இஸ்லாமிய பேரரசை அராபியா பக்கம் அமைக்கத் தொடங்கியபோது அங்கு யூதர்கள், கிறிஸ்தவர்கள் எனச் சிறுபான்மையினர் இருந்தார்கள், அவர்களுக்குப் பல அச்சுறுத்தல் இருந்தன‌.

அப்போது இது இஸ்லாமியருக்கான அரசு மற்ற மதத்தவர் வாழ பிறமதத்தவருக்கான வரி எனப் பெரிய வரியினைச் சொல்லி வசூலித்தார்கள். அப்போது இது சிறுபான்மையினருக்கான கூடுதல் வரி, அதன் அடிப்படை என்பது அவர்கள் இஸ்லாம் மதத்தை பரப்பும் போர்களில் ஈடுபடவேண்டாம், ஆனால் போருக்குரிய செலவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் காவலும் வாழ்வும் இல்லை என்பது.

ஆம், சிறுபான்மை சமூகம் எங்களோடு எங்கள் மதத்துக்காக போரிட வேண்டாம். ஆனால், நிறைய வரிதந்தால் போதும் எங்கள் காவலில் வாழவைப்போம் என்பது. இப்படி முதலில் தொடங்கப்பட்டாலும் பின்னாளில் அது சிறுபான்மை மதத்தவரிடம் இருக்கும் செல்வத்தைக் கறந்தெடுப்பது, தங்களுக்கென அரசும் காவலும் இல்லா மக்களுக்கு வேறுவழியில்லை அவர்கள் அதிகவரி கட்டவேண்டும் அல்லது மதம்மாறி செல்லவேண்டும் எனும் இரு வாய்ப்பை தவிர வேறேதுமில்லை என்றானது.

அப்படியான வரி பின்னாளில் இன்னும் இன்னும் அதிகரித்தது. இந்துஸ்தானில் அதனை அறிமுகப்படுத்தியவன் குதுபுதீன் ஐபக், அதனால் பெரும் எதிர்ப்பை சந்தித்த அவன் வம்சம் சரிந்தது, பின் பல சுல்தான்கள் வந்து தங்களுக்கு நெருக்கடி வரும்பொதெல்லாம் அதைச் செய்வார்கள், பின் பெரும் இந்து எதிர்ப்பில் சரிவார்கள்.

பாபர் இதை அறிவித்திருந்தான். ஆனால், அக்பர் ஜலாலுதீன் இதனை நிறுத்தியிருந்தான். அவன் நீக்கிய ஜிசியா வரியினை மீளக் கொண்டுவந்து பெரும் குழப்பத்தை 1679 தொடங்கியிருந்தான் ஔரங்கசீப், இந்துஸ்தானம் பற்றி எரியத் தொடங்கிற்று)

அப்படியே இன்னொரு பெரும் குழப்பமும் செய்திருந்தான். அது ஜோத்பூர் சமஸ்தானத்தில் செய்த குழப்பம்.

(இதுபற்றியும் சிவாஜி தொடரில் ஆழமாகப் பார்த்திருக்கின்றோம் சுருக்கத்தை இங்குக் காணலாம்.)

ஜோத்பூரின் மன்னனாகவும் அக்பர் ஜலாலுதீன் செய்த ரகசிய மதமாற்ற திருமணங்களாலும் நான்காம் தலைமுறை உறவாக வந்த அவன் ஜஸ்வந்த்சிங். மொகலாயரின் தளபதிகளில் ஒருவனாக இருந்தான், தளபதி என்பதை விட இந்துக்களை இந்துக்களின் அரசர்களைக் கொண்டே ஆளும் மொகலாயரின் தந்திரத்தில் ஒருவனாக இருந்தான்.

வீரசிவாஜியினை அடக்க அவன் தெற்கே வந்த காலமும் உண்டு. அவனிடம் தோற்றவனை ஔரங்கசீப் வடக்கே காந்தகார் பக்கம் போருக்கு அனுப்பினான், அப்போது இறந்துபோனான் ஜஸ்வந்த்சிங். அவன் இறக்கும்போது அவன் இரு மனைவியர் கர்ப்பமாக இருந்தார்கள், இருவரையும் டெல்லிக்குக் கடத்திச் சென்று வீட்டுக் காவலில் வைத்திருந்தான் ஔரங்கசீப்.

அவனின் நோக்கம் எளிது. பிறக்கும் குழந்தைகளை இளமையில் இருந்தே மொகலாய அடிமைகளாக வளர்த்து பயிற்றுவித்து மொகலாய அடிமைகளாக ஆட்சியில் அமர்த்தி இந்துக்களை சமாளித்து மதமாற்றத்தை பெருக்க வேண்டும் என்பது, ஔரங்கசீப் இதில் கைதேர்ந்தவன்.

அவனுக்கு இரு குழந்தைகள் பிறந்தவுடன் ஜோத்பூர் சமஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து ஆளுக்கொன்றாய் கொடுத்து அக்குழந்தைகளை உரிய வயதுவரை மொகலாயத்திலே அடிமையாய் வளர்த்து பின் நாட்டுக்கு அனுப்புவது என்பது. வெளியே இளவரசர்களுக்குப் பயிற்சி, ராஜபாடம் போர்க்கலை என நிறைய சொன்னாலும் உள்ளார்ந்த திட்டம் இந்துப் போராட்ட உணர்வை அகற்றி மொகலாய அடிமைபுத்தியினைத் திணிப்பது.

ஆனால் ஒரு குழந்தை பிரசவத்தில் இறந்துபோனது, இன்னொரு ராணி பெற்ற குழந்தை உயிரோடு பிழைத்தது. அதனைத் தங்கள் வழக்கப்படி வளர்க்கப்பார்த்தான் ஔரங்கசீப்.

ஆனால், ஜோத்பூர் மக்களும் அரண்மனையும் விடவில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய வீரனும் விவேகமான தைரியசாலியும் போர்க்கலை அத்தனையும் கற்ற தளபதி இருந்தான், அவன் துர்ககாதாஸ் ரத்தோர்.

டெல்லி வீட்டில் இருந்த ராணியினை அந்தத் தெருவில் பாம்பாட்டி வித்தை காட்டுபவன் போல தன் குழுவினருடன் நிறைய பாம்புகளைக் கூடையில் கொண்டு சென்றவன் பாம்பாட்டி வித்தை காட்டிக் கொண்டே எல்லாப் பாம்புகளையும் வெளியில் விட்டான். அதனால் பெரும் பதற்றம் உண்டாயிற்று, மொகலாயக் காவலர்கள் பாம்புகளைத் தேடி அலைய அவனோ ராணியினையும் குழந்தையினையும் மீட்டுத் தப்பிச் சென்றான்.

ஔரங்கசீப்புக்கு, வீரசிவாஜிக்குப் பின் துர்க்காதாஸ் செய்தது பெரிய அவமானமாயிருந்தது. ஆனாலும், விடாத ஔரங்கசீப் தன் கைக்கூலி இந்தர்சிங் என்பவனே ஜோத்பூரின் மன்னன் எனச் சொல்லிக் குழப்ப ஆரம்பித்தான்.

ஜோத்பூர் மக்கள் இதை ஏற்கவில்லை. ஔரங்கசீப் சேனையினை அனுப்பினான், அங்கே பெரிய மோதல் வெடித்தது. மொகலாயப் படைகளும் ராஜபுத்திர படைகளும் பெரும் மோதலில் இறங்கின. ராணியினையும், குழந்தையினையும் மறைத்து வைத்த துர்க்காதாஸ் பெரும் போரைத் துவக்கியிருந்தான்.

தெற்கே வீரசிவாஜியின் அதே மறைந்திருந்து தாக்கும் வித்தையும் சாதுர்யமும் கொண்டு சாகசம் செய்யத் தொடங்கியிருந்தான் துர்க்காதாஸ், அவன் ஔரங்கசீப்பின் தலைவலியாக மாறிப்போயிருந்தான்.

அவனை நினைத்தபடி அப்படியே தன் ஆசனத்தில் மேல்நோக்கி பார்த்திருந்தவன் அவையினைக் கலைத்துவிட்டு அப்படியே கிடந்தான். பின், மெல்ல எழுந்து தன் மூத்த சகோதரி ஜஹனாராவினைக் காணச் சென்றான்.

அரச குடும்பத்துக்கான மாளிகையில் காவல் நிறைந்த அந்த மாளிகைக்கு அவன் சென்றபோது அமைதி நிலவிற்று, அவனைக் கண்டதும் ஜஹனாராவின் அருகில் இருந்த எல்லோரும் எழுந்து சென்றார்கள், அவர்களில் வேகமாகச் சென்றவள் நிஷா பேகம்.

அவளும் திருமணம் செய்துகொள்ளவில்லை, அவள் மனதில் வீரசிவாஜி உண்டு, அவன்மேல் காதலும் உண்டு என்பதும், எல்லாவற்றுக்கும் மேல் ஔரங்கசீப்பின் அடாவடிகள் அவளுக்குப் பிடிக்காது என்பதும் அவனுக்குத் தெரியும்.

ஆனால், அவள்மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தான், அவளை நின்று பார்த்து “என் மகளே” எனக் கைகளை விரித்தான், அவள் அவன் முகத்தையே பார்க்காமல் வேகமாகச் சென்றுவிட்டாள்.

தலையினை மேலும் கீழும் அசைத்தபடி தன் சகோதரியிடம் சென்றான், அவள் படுத்த படுக்கையாய்க் கிடந்தாள், பெரும் நோய் வயிற்றில் தாக்கியிருந்தது, எந்தச் சிகிச்சைக்கும் அது கட்டுப்படவில்லை.

அராபிய வைத்தியம், ஐரோப்பிய வைத்தியம் என உலகின் எல்லா முன்னணி மருத்துவர்களையும் பெரிய செலவில் ஔரங்கசீப் குவித்திருந்தும் அவளைக் குணமாக்க முடியவில்லை. இந்துமரபின் வைத்தியம் அவள் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.

தனக்கு இன்னொரு தாயாகக் கருதிய அவள் அருகில் அமர்ந்தவன் மனமெல்லாம் வருத்தமாக ஆனால் நிறைந்த அன்பாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

“ஆலம்கீர், ஏன் கலங்குகின்றாய்? அரசகுடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மரணம் எப்போதும் வரலாம் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை அறியாதவனா நீ?

நான் மெக்கா சென்றுவந்தாயிற்று, என் கடமையெல்லாம் முடிந்தன. இனி, இறைவன் அழைக்கும் போது சென்றுவிடுவேன், நீ எப்போது மெக்கா செல்லப்போகின்றாய்?” என்றாள்.

“மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் இங்கு ஆட்சி, நிர்வாகம், போர் எனச் செய்து கொண்டிருக்கும் நான் எங்கிருந்து செல்வது” எனச் சொல்லிப் பெருமூச்சுவிட்டான் ஔரங்கசீப்.

“எல்லாச் சிக்கலையும் நீயே தேடிக்கொண்டால் பின் என்ன நடக்கும். ஆலம்கீர், நான் இப்போதும் சொல்கின்றேன். நீ ஜிசியா வரி விதித்தது பெரும் தவறு, சிறுபான்மை மேல் பெரும்பான்மை அந்த வரியினை விதித்தால் அது அனுமதிக்கப்பட்டது, அவர்களுக்கு வேறுவழியுமில்லை.

ஆனால், நீ பெரும்பான்மை இந்துசமூகத்தின்மேல் விதித்திருக்கின்றாய்? அது எப்படி இங்குள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும், நீ இந்துக்களின் வெறுப்பினைத் தொடர்ந்து சம்பாதிக்கின்றாய், காசி மதுரா கோவில்களை இடித்து அம்மக்களுக்குப் பெரும் வலி கொடுத்த நீ இப்போது இப்படியான வரியும் இட்டு அவர்களை வதைக்கின்றாய்.

ஆலம்கீர், இது இந்துக்கள் நாடு, இங்குப் பூரண இஸ்லாமியம், கொடும் இந்து வரி என அறிவித்த எல்லா சுல்தான்களும் மாண்டு போனார்கள், அழிந்தே போனார்கள். அதை நீ இன்னும் உணரவில்லை.

மொகலாயர்கள் என்பவர்கள் பெரிய ஆட்சியாளர் எனும் பிம்பம் இருந்தாலும் உண்மையில் நாம் யார் சொல்? அராபிய ஆப்கானிய கொள்ளையர்கள் இங்கு வராமல் இருக்க இந்நாட்டு மன்னர்கள் சேர்ந்து வைத்த காவல்காரர்கள் நாம்.

ஆம், நாம் இங்கு வெறும் காவல்காரர்கள், அந்தக் காவலைச் சரியாக செய்தால் வாழலாம். அவர்கள் நம்மை இங்கு அனுமதித்ததே அவர்கள் மதமும் மண்ணும் இந்துக்களாக வாழ காவல் இருக்கத்தான், அதை நாமே மீறினால் மறுநொடி விரட்டுவார்கள்.

இதில் நீ சீக்கியர்களை வேறு மிக மோசமாகப் பகைத்திருக்கின்றாய், எனக்கென்னவோ இனி நீ பெரும் கலவரங்களைச் சந்திக்கப்போகின்றாய் எனத் தெரிகின்றது. இந்த மகா சக்தியான மொகலாயம் அழிவதைக் காண நான் இருக்கமாட்டேன் என்பதே என் நிம்மதி.

ஆலம்கீர், நீ நல்ல இஸ்லாமியன் என்பதில் எனக்குப் பெருமை, குரானின் ஒவ்வொரு வரியும் உனக்குத் தெரியும். உன் ஒவ்வொரு அடியும் இஸ்லாமிய போதனைப்படியே அமையும், ஆனால் நாம் அடுத்தவர் மதத்தை மதிக்கவேண்டும் என்பது நமக்குப் போதிக்கபட்டதல்லவா?

நீ இந்துஸ்தானின் சுல்தானாக இஸ்லாமிய வளர்ச்சிக்கு அள்ளிக் கொடுக்கின்றாய், ஹஜ் உள்ளிட்ட திருப்பயணங்களுக்கு எல்லா ஏற்பாடும் செய்கின்றாய், ஆனால் இந்துக்களுக்குக் காசி எனும் கோவிலே இல்லாமல் பள்ளிவாசல் கட்டிவிட்டாய். நமக்கு மெக்கா போல் தானே அவர்களுக்குக் காசி, நமக்கு மதீனா போலத்தானே அவர்களுக்கு மதுரா.

ஆலம்கீர், இறைவன் நீதியும் கருணையுமுள்ளவன். அவன் நிச்சயம் இதற்கெல்லாம் நீதி கேட்பான், நான் உன்னால் மிகுந்த துன்பமடைகின்றேன், நீ உன் மகன்களிடம் ஆட்சியினைக் கொடுத்துவிட்டு ஹஜ் யாத்திரை செல், அவர்களிடம் இந்த வரியெல்லாம் நீக்கி இணக்கமாக ஆட்சி நடத்தச் சொல், நீ சிறிது காலம் புண்ணிய பூமி சென்றுவிட்டு வா. அப்போதுதான் இங்கு எல்லாம் சரியாகும்.

ராஜபுத்திரர் கலகம், சீக்கிய கலகம், தெற்கே சிவாஜி அமைத்து நமக்குச் சவால்விடும் பெரிய அரசு என எல்லாப் பக்கமும் நீ சேர்த்து வைத்திருக்கும் குழப்பம் கொஞ்சமல்ல, நீ தயவுசெய்து மகன்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டுச் செல். இல்லையேல் இந்துஸ்தானம் உனக்குப் பெரும் தோல்வியினை வழங்கும்” என்றாள்.

அவள் கைகளை இறுகப் பற்றியவன் அவள் முகத்தை நோக்கினான். மொகலாயம் எனும் பெருமைமிகு சாம்ராஜ்ஜியம், உலகின் முதல்நிலை வல்லரசும், எல்லா சுல்தான்களும் பெருமையோடு நோக்கும் அந்த ராஜ்ஜியம் விழுந்துவிடுமோ எனும் அச்சம் அவள் கண்களில் இருந்தது.

அதே நேரம் தன் தம்பி இன்னும் வாழவேண்டும் எனும் பாசமும் இருந்தது, உடலின் தளர்ச்சியினைத் தாண்டி அந்த முகம் அதைச் சொன்னதை அவனும் உணர்ந்தான்.

அவள் கைகளை இறுக்கியவன் மெல்ல அதைத் தட்டிக்கொடுத்தபடி பேசினான்.

“அக்கா, பழைய தலைமுறையில் இருந்து மாற்றி வித்தியாசமாகச் சிந்திக்கும் தலைமுறை வெல்லும், நீ பூட்டன், தாத்தா காலத்தில் நடந்ததையே யோசிக்கின்றாய், நானோ இப்போது எதெல்லாம் சாத்தியம் என யோசிக்கின்றேன், எனக்கு இந்தப் பெரும் பொறுப்பைத் தந்தவன் இறைவன், நீ சொன்னபடி நான் தூய இஸ்லாமியன். அதனால் எனக்காக இறைவன் இட்ட உத்தரவினை நான் செய்வேன். அது இந்துஸ்தானைப் பூரண இஸ்லாமிய தேசமாக்குவது.

இல்லையேல் இந்த மாபெரும் பொறுப்பினை இறைவன் என்மேல் சுமத்தியிருப்பானா? எனக்கு ஏற்ப வாய்ப்புகள் இப்படி உருவாகுமா? நான் பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க பிறந்தவன் அதை அடைந்தே தீருவேன்.

ஏன் பாபரால் இங்கு நிலைத்து ஆளமுடியவில்லை? ஏன் அவரை விரட்டினார்கள் என்பதை விட பாபர் ஏன் இவர்களுக்கு அவசியம் என அழைத்துவந்தார்கள் என்பதைப் பார் அக்கா.

இந்துஸ்தானின் நிம்மதியினைக் குலைக்கும் வழி ஆப்கானிஸ்தானில் இருந்து வருகின்றது, அங்கிருக்கும் குழுக்களைப் பார்த்தாயா. அவைகள் ஒருகாலமும் ஒரு முடிவுக்குள் வரமாட்டார்கள். காரணம், அலெக்சாண்டர், செங்கிஸ்கான், தைமூர் எனப் பல சாம்ராஜ்யங்களின் கலப்பினமாகிவிட்டார்கள். ஏகப்பட்ட குழுக்கள் உண்டு. இவர்களை முன்னிறுத்தித்தான் துருக்கி சுல்தான், பாரசீக சுல்தான், உஸ்பெக் சுல்தான் என எல்லோரும் இவர்களை வைத்தேதான் இந்தியாவினைக் கொள்ளையிட்டார்கள்.

இந்துஸ்தானை கொள்ளையில் இருந்து காக்கவே இந்துமன்னர்களுக்குக் காவல்காரர்கள் தேவைபட்டார்கள். அப்படி வந்த காவல்காரர்களும் தங்கள் அரசை ஸ்தாபிக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் தோற்க தோற்க ஆப்கானிஸ்தானில் இருந்து புதிய குழப்பம் வர வர புதிய காவலர்கள் தேவைப்பட்டார்கள்.

அபப்டி வந்தவர்கள்தான் நாம். பாபர் அப்படி ஒரு காவல்காரனாக வந்தார், அவரும் இங்கு ஒரு அரசை ஸ்தாபிக்க எண்ணினார். ஆனால், இங்குள்ள இந்து அரசர்கள் அவரைக் கட்டுப்படுத்தினர், அவருக்கும் இவர்களுக்கும் மோதல் வந்தது. பாபராலும் ஒரு அரசை ஸ்தாபிக்க முடியவில்லை. அவர்தான் இங்கு இனி ராமனை போல் நானும் காலத்துக்கும் அரசன் என அயோத்தியாவில் பள்ளிவாசலெல்லாம் கட்டினார், ஆனால் வெற்றியில்லை.

அடுத்து ஹூமாயூனும் விரட்டப்பட்டார். ஆனால், அக்பர் ஜலாலுதீன் பாரசீக மன்னன் ஆதரவில் வந்ததால் இங்கு அனுமதிக்கப்பட்டார், அவர்தான் இங்குப் பல விஷயங்களை அணுக்கமாகக் கண்டார்.

இங்கு இந்துக்களின் எதிர்ப்பு இருக்கும்வரை நாம் அரசை ஸ்தாபிக்க முடியாது, இங்கு இந்து உணர்ச்சி என்பது நெருப்பினும் பெரிது என்பதை உணர்ந்து அதில் நீருற்ற ஆரம்பித்தார். ஜிசியா வரியினை ரத்து செய்தார். ராஜபுத்திர மன்னர்கள் வீட்டு அரசிகளைத் திருமணம் செய்தார். பலமான ராஜபுத்திர வம்சம் அத்தனையும் வளைத்துப்போட்டார்.

அவர் செய்த ராஜதந்திரத்தில்தான் நமக்கொன்று என்றால் ராஜபுத்திரர்கள் ஓடிவந்தார்கள். அதைக் கொண்டே இந்துஸ்தானம் எங்கும் நாம் நிலைத்தோம், இந்துக்களை இந்துக்களை கொண்டே அடக்கினோம், மொகலாயம் உலகின் வல்லரசாக எழுந்தது.

அக்பர் கொடுத்த அடித்தளத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்பவன் நான், அவர் ஊற்றத்தொடங்கிய நெருப்பு இப்போது பெரிதும் இந்து உணர்ச்சியினை அடக்கியிருக்கின்றது, இந்துக்களுக்குச் சொல்லும்படி அரசன் யாருமில்லை, வீரசிவாஜி என ஒருவன்மட்டும் இருந்தான், இனி அவனுமில்லை.

இனி எனக்குச் சவால் என யாருமில்லை. ஜெய்சிங், ஜஸ்வந்த்சிங் என எல்லோரும் இனி இல்லை, ஜோத்பூரில் எவனோ துர்க்காதாஸ் எனக் கலகம் செய்து கொண்டிருக்கின்றான், அவனை எளிதில் அடக்குவேன்.

அக்கா, இது 100 ஆண்டுகால ரகசிய திட்டம், ராஜதந்திரத்தில் ஊறிய நம் அக்பர் ஜலாலுதீன் போட்டுக் கொடுத்த திட்டம், அதன்படி நான் இங்கு மொகலாயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றேன்.

என்ன சொன்னாய்? ஜிசியா வரியினை ஏன் விதித்தேன் என்றாயா? ஒரு அரசனாக எனக்கும் கடமை உண்டு, நான் இந்துஸ்தானின் காவல்காரனல்லவா? ஆப்கானிய கொள்ளையரை அடக்கத்தானே பெரும்போர் புரிந்தேன். அது யாரை காக்க? இந்த இந்துக்களைக் காக்க அல்லவா? அவர்களிடம் வரிவாங்காமல் எப்படி?

நாட்டின் நிதிநிலை அதிகமாயிற்று, இஸ்லாமியர்கள் என்னோடு இருக்கின்றார்கள் இந்துக்கள் என்னை வெறுக்கின்றார்கள். அதனால் அவர்களுக்குக் கூடுதல் வரிவிதித்தேன். இது அரச நிர்வாகம்.

ஏன் இந்துக்கோவில்களை எல்லாம் இடிக்கின்றேன்? இந்த இந்துக்கள் அப்படி என்ன கண்டார்களோ தெரியவில்லை, கையில் இருக்கும் பணம், தங்கம் எனக் கோவிலுக்கு மட்டும் அள்ளி அள்ளி கொடுக்கின்றார்கள், ஒரு அரசன் நான் கேட்டுத் தராத நிதியினைக் கோவிலில் கொட்டுகின்றார்கள், நான் எப்படி அனுமதிப்பேன்?

கோவில் இருந்தால்தானே கொடுப்பார்கள் என இடித்துப்போட்டேன், மறுபடி அவர்கள் அப்பக்கம் வராத அளவு பள்ளிவாசல் கட்டிவைத்தேன்.

இது என் நாடு. நான் ஒருமதமாக, அவர்கள் ஒருமதமாக இருந்தால் சரிவராது, அதனால் கவனமாக யாரெல்லாம் எனக்குச் சவால் விடுவார்களோ அவர்களை இஸ்லாமியராக்கி என்னோடு வைத்துக் கொள்வேன் அல்லது அழித்துவிடுவேன். அடிமை இந்துக்களாக முடிந்தால் அவர்கள் வாழட்டும் இங்கு என்னைத் தாண்டி எதுவுமில்லை.

அக்கா, நான் ஒரு கலீபா. எனக்கு மதம் பரப்புவது கடமை, அதற்கு பெரிய சேனை வேண்டும், நிதிவேண்டும், பல வகை பலம் வேண்டும், அதற்கு இந்துக்கள் தடையாக இருந்தால் ஒழிப்பதில் எனக்குத் தாட்சண்யமில்லை.

இது இறைவனால் அனுமதிக்கப்படாமல் நடக்குமா? இந்நாட்டின் பெரும் பலம் ராஜபுத்திரர்கள், அவர்கள் வீட்டு பெண்கள் ஏன் பேகம் என மாறி நம் அரண்மனைக்கு அக்பரால் கொண்டுவரப்படவேண்டும், அந்த உறவுக்காக ராஜபுத்திரர்கள் ஏன் நமக்குக் காவல் இருக்க வேண்டும்?

இப்போது எனக்குச் சாதகமாக எல்லாம் ஏன் நடக்க வேண்டும்?

நான் ஆசீர்வதிக்கப்பட்டவன், தேர்ந்தெடுக்கப்பட்டவன், அக்பர் ஜலாலுதீன் தந்த வழியில் சரியாக நடப்பவன். அன்று நாம் பலவீனமாக இருந்தோம், உறவாடி வளைத்தோம். இன்று பலத்தோடு இருக்கின்றோம், அதனால் வாள் ஏந்தி நிற்கின்றோம்.

நான் ஆப்கானியரான பஷ்டுன், அப்ரிதி, யூசுப் எனப் பல குழுக்களை உடைத்து சிந்துநதிக்கரையோரம் அமர்த்தியிருக்கின்றேன். அவர்கள் இனி ஆப்கான் கொள்ளைக் கும்பலை உள்ளே விடாமல் காவல் இருப்பார்கள், இதனால் இனி இந்து தளபதிகள் உதவி வடக்கே எனக்கு அவசியமில்லை, நான் எதற்கு அஞ்சினேனோ அந்த அச்சம் எனக்கு இனி இல்லை.

ஏன்? அவர்கள் நம் இஸ்லாமியர்கள், ஆப்கானியர்களை ஒடுக்க இந்து தளபதிகள் அவசியம் என்றே பல்லைக் கடித்துக் கொண்டிருந்தேன். இனி அந்த அச்சமில்லை, எங்கும் இனி நமது மதம், இன்னும் சில காலங்களில் சிந்துநதி தீரம் நம் பூரண இஸ்லாமிய மயமாகிவிடும், ராஜபுத்திரர்கள் இப்போதே அங்கிருந்து விரட்டப்பட்டிருக்கின்றார்கள்.

ராஜபுத்திரர்களின் சிந்துநதி உரிமையினைப் பறித்துவிட்டேன். இனி அடுத்த கட்டமாக ஜோத்பூர், மேவார், உதய்பூர் பக்கம் அவர்களை ஒடுக்கி இஸ்லாமிய ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துவேன்.

இந்தச் சீக்கிய கூட்டத்தை விடு. அவர்களுக்கு அரசனுமில்லை படையுமில்லை, அது வெட்டி விவசாயக் கூட்டம். ஏதோ குரு என ஒருவனைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அவனைக் கொன்றதும் அஞ்சிக் கிடக்கின்றார்கள்.

அக்கா, ராஜபுத்திரர் கலகத்தை மட்டும் ஒடுங்கிவிட்டால் வடக்கே முழுக்க நான் தனித்து நிற்பேன். மாமா ஷாயிஸ்ட்கான் வங்கத்தில் பூரண இஸ்லாமியமாக்கலில் இறங்கியிருக்கின்றார். நானும் கிழக்கு நோக்கி சென்று அவரோடு இணையும் போது இங்கே பூரண இஸ்லாமியமயமாகும்.

சிவாஜி என் எதிரி, என்மேல் விழுந்த நெருப்பு. ஆனால், அவன் தெற்கே முழுக்கக் கட்டுப்படுத்தி ஒரு அரசை ஸ்தாபித்திருக்கின்றான். அவன் ராய்காட் கோட்டையினைப் பிடித்தால் மொத்த தென்னகமும் என் காலில் விழும், அத்தோடு இந்துஸ்தானம் முழுக்க நம் பச்சைக் கொடி பறக்கும், பூரண இஸ்லாம் அமைத்தவன் எனும் பெருமையுடன் நானும் நிலைத்திருப்பேன்.

துருக்கி, பாரசீகம் என எல்லா அரசுளை விட மாபெரும் பலமும் மக்களும் கொண்ட தேசமாக நான் இந்த மண்ணை நிறுத்திவைப்பேன், வருங்காலத்தில் மாபெரும் கலீபா என நான் வரலாற்றில் நிற்பேன், இறைவன் அந்த வரத்தை எனக்கு அருளியுள்ளான்” என்றான்.

அவள் விரக்தியாய்ச் சிரித்துச் சொன்னாள், “ஆலம்கீர், இந்துக்கள் தங்கள் மதம் காக்கத்தான் ஆப்கானியரை அழைத்துவந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள இன்னும் மறுக்கின்றாய், அவர்களுக்குத் தேவை அவர்கள் மதத்தில் மண்ணில் நம்பிக்கையில் தலையிடாத காவலர்கள், அப்படி ஒரு சுல்தான் இங்கு இருக்கும் வரைதான் அவர்களும் அமைதியாக இருப்பார்கள்.

அதை மீறி அவர்கள் மதத்தைத் தொட்டுவிட்டால் அவர்களின் சுயரூபத்தைக் காண்பாய். நீ காசி மதுரா என அவர்கள் ஆலயத்தை இடித்துப் பள்ளிவாசல் கட்டுவிட்டதால் அவர்களை ஒழித்துவிட முடியாது. அது கடலினைப் பாய்போட்டு மூடுவதற்குச் சமம், ஹிமாலயத்தைக் காட்டமாட்டேன் என மக்கள் கண்களைக் கட்டுவதற்குச் சமம். அதை உன்னால் அழிக்கமுடியாது.

இந்துக்களின் அச்சம் நீயல்ல, நீ அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, அவர்களைப் பொறுத்தவரை ஆப்கானிய மிரட்டல் தொடரும் வரை ஒரு காவலன் வேண்டும், நீ ஆப்கான் எல்லையில் அமைதியினைக் கொண்டுவந்து அரணை எழுப்பிய மறுநிமிடம் நீ அவர்களுக்குத் தேவையே இல்லை, தூக்கி எறிந்துவிடுவார்கள்.

நீ செய்த அரணே உனக்கு முட்டுகட்டையுமாகும்.

ராஜபுத்திரர்களுடன் நீ தொடங்கியிருக்கும் போர் சாதாரணம் என எண்ணாதே, அவர்கள் மதம் ஒன்றைக் காக்கவே நமக்குக் கட்டுப்பட்டு நின்றார்கள், உறவுகளைக் காட்டி அவர்கள் கரங்களைக் கட்டிய காலமெல்லாம் கடந்துவிட்டது. அக்பர் அங்கு மணவுறவு கொண்டார் என்றால் மோதிபார்த்துவிட்டு முடியாமல் செய்தார், இனி உயிர்பிழைக்க அவர்கள் வீட்டுப் பெண்கள் நம்வீட்டில் இருப்பதே வழி என உணர்ந்து செய்தார்.

நீ அதனை தவறாகப் புரிந்து நடக்கின்றாய், இது ஆபத்து.

இந்துக்கள் மன்னராக உனக்குள்ள வரியினை செலுத்துகின்றார்கள். அதை இந்துவரி, இஸ்லாமிய வரி என நீ பாகுபாடு காட்டினால் இஸ்லாமிய மன்னன் தங்களுக்கு அவசியமில்லை எனப் பொங்கி எழுவார்கள், நீ இந்துஸ்தானத்தை ஒருகாலமும் இந்துக்களைப் பகைத்து வாள்முனையில் ஆளமுடியாது” என்றவள் சிவாஜி அரசைப் பற்றி விசாரித்தபடியே அவனைப் பற்றி பேசினாள்.

“இந்துஸ்தான மண்ணுக்கு அவன் தர்மம் ஒரு அடையாளம், அவன் எப்படிப்பட்ட மனிதன், அப்படிப் பொன்னுக்கும் பெண்ணுக்கும் ஆசையின்றி மண்ணுக்கும் மக்களுக்கும் மதத்துக்குமே வாழ்ந்த ஒருவனை நம் தலைமுறையில் கண்டதே பெருமை” என்றாள்.

ஔரங்கசீப் சொன்னான், “ஆம் அக்கா, அரச வம்சமே இல்லாதவன் அவ்வளவு பெரிய நாட்டை உருவாக்கி அமைத்து நம்மையும் வென்று முடிசூடி நின்றதெல்லாம் எப்படியான சாதனை, அவனை நம்வீட்டின் மருமகனாக்கி நம்மோடு வைத்துக் கொள்ளத்தான் விரும்பினேன். அது நடக்கவில்லை.

அதனால் என்ன இனி சாம்பாஜியினை நாம் வளைத்துவிடலாம்” என்றான்.

“என்ன?” எனக் கூர்ந்து கேட்டாள் ஜஹனாரா.

“அக்கா, சிவாஜியின் எதிர்பாரா மரணம் அவன் குடும்பத்தில் வாரிசு சண்டையினை ஏற்படுத்திவிட்டது.

அவன் சொன்னான், “சிவாஜி மூத்தமகன் சாம்பாஜி தரப்பும், அவன் இளைய மனைவி சோயுர்பாய் தரப்பும் அரியாசனத்துக்கு வரிந்து கட்டுகின்றன, அங்குச் சாம்பாஜிதான் அடுத்த அரசன் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆசை யாரைவிட்டது. இதனால் இளையமகனின் தாயும் மல்லுக்கு நிற்கின்றாள்.

இந்த வாய்ப்பில் நாம் ஊடுருவி சாம்பாஜியினை வளைக்கச் சொல்லியிருக்கின்றேன், அவன் நம்சார்பில் ஆட்சிக்கு வரட்டும், நம்மோடு இணக்கமாக செல்லட்டும், நல்லதுதானே. பின், மெல்ல வளைத்துவிடலாம். இல்லை, குடும்பச் சண்டையினைத் தூண்டிவிடலாம், இனி சிவாஜி ராஜ்ஜியம் என்னுடையது, அவனோடு அவன் எடுத்த சவாலும் போயிற்று”

அவள் சொன்னாள், “ஆலம்கீர் சிவாஜி என்பதை வெறும் பெயராகக் காணாதே, அது அவனால் உருவான எழுச்சி அன்று, இந்துக்களின் உளமார்ந்த எழுச்சியின் வடிவம் அவன்.

நீ சாம்பாஜியினை வளைக்கலாம் அவன் அரசினை கைப்பற்றலாம், இந்துராஜ்ஜியத்தைக் கூட அழிக்கலாம். ஆனால், அவன் ஏற்றிவைத்தது ஒவ்வொரு இந்துவின் நெஞ்சிலுமான நெருப்பு, நம்மால் முடியும் என அவன் நிரூபித்த நெருப்பு.

இதோ துர்க்காதாஸ் உனக்குத் தண்ணீர் காட்டுகின்றான் என்றால் யார் கொடுத்த பலம்? ஒவ்வொரு இந்துவும் சீக்கியனும் இன்று இவ்வளவு நம்பிக்கையாக நிற்கின்றான் என்றால் யாரால்?

அவன் ஒரு உணர்ச்சி ஆலம்கீர். நீ என்ன முயன்றாலும் அவன் கொடுத்த உணர்வை உன்னால் அழிக்கவே முடியாது, அது பெரும் நெருப்பாக எழுந்தே தீரும், இது கண்டிப்பாய் நடக்கும்” என்றாள்.

“அக்கா, நீ வீணாக அஞ்சுகின்றாய், அஞ்சுகின்றவன் சாதிக்க முடியாது, நீ எல்லாமும் காணப்போகின்றாய்” என்றான்.

“ஆலம்கீர், நீ வாள்முனையில் இந்நாட்டை வீழ்த்திப்போடலாம், ஆனால் காட்டுநெருப்பு விழுங்கியும் ஒரு மழையில் எழும் வனம்போல் இங்கு இந்துமக்கள் எழுவார்கள், இந்து எழுச்சி நொடியில் எழும்.

நீ சொன்னாய் அல்லவா? இந்துக்கள் கோவில்களுக்கே கொட்டுகின்றார்கள் என, அதை இன்னும் ஆழமாகப் பார், பொருள் உழைப்பு என எல்லாமும் இந்துக்கோவில் கொட்டும் குணத்தின் அடிமனதில் ஜென்ம ஜென்மமாக எவ்வளவு பக்தி இருந்திருக்க வேண்டும்.

இப்படி ஒரு இனத்தை நீ வேறு எங்கும் கண்டிருக்க முடியுமா சொல்? யாராவது செய்வார்களா?

இந்த மண்ணும் மக்களும் அப்படியானவர்கள், இவர்களை ஒரு காலமும் வாள்முனையில் அடக்கமுடியாது. நீ சொல்வதுபோல் மதமாற்றிப் போட்டாலும் எல்லாரையும் உன்னால் மாற்றவும் முடியாது, அவர்கள் செத்தாலும் சாவார்களே தவிர மாறமாட்டார்கள்.

இந்துஸ்தானம் இப்படி இந்துக்களுக்குச் சவாலை காண்பது முதன் முதலில் உன் வடிவில் என எண்ணாதே. நான் அதன் வரலாற்றை ஆழமாகப் படித்திருக்கின்றேன், சமணரும் பௌத்தரும் போராடித் தோற்றிருக்கின்றார்கள், இன்னும் பலர் தோற்றிருக்கின்றார்கள்.

இத்தேசம் தனக்கான எதிரியினை முதலில் அனுமதிக்கும். தோற்பதுபோல் நடித்து உள்ளே இழுத்துச் செல்லும், நுனிவரை இழுத்துச் சென்று ஒரு கட்டத்தில் திரும்ப அடிக்கும், சுற்றி சுற்றி அடிக்கும், எதிரி வீழும் வரை அடிக்கும். இதன் சூட்சுமம் அப்படி.

அலெக்ஸாண்டர் தோற்று ஓடினான், தைமூரே இங்கு ஆளமுடியாது எனப் பின்வாங்கினான், செங்கிஸ்கான் இதை அறிந்துதான் வரவே இல்லை.

இங்கு மன்னர்கள் ஆள்கின்றார்கள் என நினைத்தால் தவறு, இங்கு அதற்குமேல் பெரும் சக்தி ஒன்று உண்டு, நான் இப்போதும் சொல்கின்றேன் இந்த மண் ஆப்கானிய கொள்ளையர்களை அடக்கித் தடுக்கவே உன்னை இங்கு அனுமதித்தது, அந்தச் சூழல் இல்லாதபோது அதற்கு நீ அவசியமில்லை.

ஒன்று நினைவில் கொள், ஆப்கானிய மிரட்டல் இருக்கும்வரை நாம் இவர்களுக்கு அவசியம், நம்மைத் தொலைத்துவிட்டால் துருக்கி சுல்தான் இதர சுல்தான் வருவான் என்றுதான் ராஜபுத்திரர்களும் நம்மை அனுமதித்தார்கள், நம் தேவைக்கு நாம் இங்குச் சிக்கவில்லை, அவர்கள் தேவைக்கே நம்மை சிக்கவைத்தார்கள், அதைப் புரிந்துகொள்.

நீ அவர்கள் மதத்தைத் தொட்டால் உன்னை விரட்டிவிட்டு இன்னொரு காவலனை வைக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். அது எம்மதம் என்றாலும் அவர்களுக்குச் சிக்கலே இல்லை. உன்னை வீழ்த்திப் புதிய ஐரோப்பியரை வைத்தாலும் அவர்களுக்குச் சிக்கல் இல்லை, முயற்சிப்பார்கள். இது ஆபத்தான தேசம் ஆலம்கீர், நெருப்போடு விளையாடாதே.

நான் எவ்வளவு காலம் இருப்பேனோ தெரியாது, ஆனால் ராஜபுத்திரர் சீக்கியரைப் பகைத்து, சிவாஜி அரசிலும் தலையிட்டு சிக்கலைத் தேடிக் கொள்ளாதே” என்றவள் கேட்டாள்.

“சிவாஜி வாரிசு யார் என்பதை விடு. உன் வாரிசு யார்? உனக்கும் 62 வயதாயிற்று” என்றாள்.

“ஆம், நம் வழக்கப்படி என் மகன்களில் சிறந்தவர் எவரோ அவனுக்குத்தான் பட்டம், அதனால் அவர்கள் திறமையினை நிரூபிக்கும்படி பல பொறுப்புக்களைக் கொடுத்திருக்கின்றேன், இப்போது என் பெரிய தலைவலி துர்க்காதாஸை எவன் வீழ்த்துகின்றானோ அவனே என் மகன்களில் சிறந்தவன். சாம்பாஜியினை நான் வேறுவகையில் கட்டுப்படுத்துவேன்” என்றான்.

“சாம்பாஜி” என்றதும் மீண்டும் நினைவுக்குள் சென்றாள் ஜஹனாரா, பத்துவயது சிறுவனாக அவன் ஆக்ரா கோட்டையில் சிவாஜியோடு அடைபட்டுக் கிடந்தது, தன்னோடும் நிஷாவோடும் அவன் விளையாடியது எல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தன, மனதுக்குள் வாழ்த்திக் கொண்டாள்.

அவளின் உடல்நிலை மிக மிக சீர்கெட்டிருந்ததால் சில நாட்கள் அவளுடன் தங்கியிருக்க முடிவு செய்தான் ஔரங்கசீப், அவனின் மிகப் பெரிய பலமும் ஆதரவும் நம்பிக்கையும் அன்னையுமாக அவள் இருந்தாள்.

ஔரங்கசீப் திலியர்கானிடம் இருந்து சாம்பாஜி பற்றிய தகவல் வரும் என எதிர்பார்த்திருந்தான், ஆனால் அதைவிட முக்கிய விஷயமாக துர்க்காதாஸின் மிரட்டல் இருந்தது.

அவன் பெரிய போரை ஆரவல்லி மலை ஜோத்பூர் பக்கம் தொடங்கியிருந்தான், மொகலாயச் சேனைகள் அடிவாங்கிக் கொண்டிருந்தன. ஜிசியா வரி என ஔரங்கசீப் விதித்தானே தவிர இந்துக்களிடம் வசூலிக்க முடியவில்லை, ஆத்திரமடைந்த மொகலாயச் சேனை இந்துக்கோவில்களை இடித்துத் தள்ள பெரும் போராட்டம் அப்பக்கம் வெடித்தது, துர்க்காதாஸின் வியூகங்கள் மொகலாயரைத் தடுமாற வைத்தன‌.

துர்க்காதாஸும் சிவாஜி அரசின் அடுத்தக்கட்ட நகர்வை எதிர்பார்த்தான். காரணம், இந்த இந்துப்போராட்டத்தில் அவனுக்கு உதவ சிவாஜியின் இந்து ராஜ்ஜியமே உலகின் ஒரே நம்பிக்கையாய் இருந்தது.

அவனும் சிவாஜி அரசில் என்னாகுமோ என எதிர்பாத்திருந்தான், நிலைமையினை அறிவதில் ஆவலாய் இருந்தான்.

இப்படித் துர்க்காதாஸ், ஔரங்கசீப், இன்னும் பல சுல்தான்கள், ஐரோப்பிய கோஷ்டிகளெல்லாம் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த நிலையில்தான் பெரும் ஊர்வலமாக ராய்காட் கோட்டையினை அடைந்தான் சாம்பாஜி.

அவனைச் சோயுர்பாய் சேனை மறித்தபோது ஆவேசமாக இறங்கி சென்ற ஹம்பிராவ் முன்னால் ஒரு ஈட்டி வந்து குத்தி நின்றது, அதை எறிந்தவன் மொரோபந்த்.

இனி மோதலைத் தவிர ஏதும் வழியே இல்லை, நிலைமை யுத்தத்துக்கு வந்துவிட்டது என்ற நிலையில் ஹம்பிராவ் நின்றபோது அவன் தோளை ஒரு கரம் தொட்டது, அது சாம்பாஜி.

ஹம்பிராவ் அவனை நோக்கினான், சாம்பாஜி புன்னகைத்தபடியே முன் வந்தான். “நமக்குள் யுத்தம் வேண்டாம், நான் பேசவருகின்றேன், என்னை அனுமதியுங்கள்”

ஹம்பிராவ் உள்பட அனைவரும் அதிர்ந்து போனார்கள், அரசுக்குரியவன் இவன் எனும்போது அங்கே என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது எனச் சலசலத்தார்கள்.

யுத்தத்தை எதிர்பார்த்த எதிர்தரப்புக்கு இது அதிர்ச்சியினைக் கொடுத்தது, பெரியவர் சிலர், “அவரே இறங்கி வருகின்றார், பேசலாம் ” என்றார்கள். சோயுர்பாய் மறுத்தாள்.

“என்ன ஆனாலும் சரி, அவனை அனுமதிக்கவே முடியாது, கடைசி வீரன் இருக்கும்வரை மோதிப் பார்ப்போம், மாமன்னர் நமக்குத் தந்த இந்த இந்து அரசினை இவன் அழித்துவிடுவான், இவனை அகற்றுவதே இனி நம் இலக்கு. எப்படியும் இவனால் அழிக்கப்பட போகும் இந்து அரசினைக் காக்க இந்தப்போர் அவசியம்” என்றாள்.

அவளின் அழைப்பினைக் கேட்டு அவளின் சேனை ஆர்ப்பரித்தது, எதிர்தரப்பு அதைவிட பலமாக ஆர்ப்பரித்தது.

சாம்பாஜி புன்னகைத்தான், “என்னை அனுமதியுங்கள் நான் பேசவேண்டும்” என்றான், முதியவர்கள் பெரியவர்கள் வந்து பேசினார்கள், கடைசி வாய்ப்பாக பேசலாம் என்றார்கள்.

“பேசுங்கள் ஆனால் முடிவு ராஜாராம் அரசனாக இருக்க வேண்டும்” என்றாகட்டும் என்றாள், சாம்பாஜி தனியாக செல்ல முனைந்தான், அப்போது சொன்னான் ஹம்பிராவ்.

“சாம்பாஜி அங்குச் செல்லும் போது ராஜாராம் இங்கு இருக்கவேண்டும், அப்போதுதான் அனுப்புவோம்”

அரண்டுபோனாள் சோயுர்பாய், அதே நேர ஹம்பிராவின் காதில் ஒருவன் தகவலைச் சொன்னான், அவர் முகம் பெரும் சிந்தனையில் ஆழ்ந்தது. யோசிக்கத் தொடங்கினார்.

இருவரில் யார் அடுத்தமன்னர் என்பதை ரத்தம் சிந்தாதபடி தேர்ந்தெடுக்க காவிக்கொடி கம்பீரமாய்க் கோட்டை வாசலில் பறந்து கொண்டிருந்தது.

(தொடரும்..)