சத்ரபதி சாம்பாஜி : 04

சத்ரபதி சாம்பாஜி : 04

ஹம்பிராவ் காதில் அந்தச் சிப்பாய் தகவலைக் கூறியதும் முன் சென்று கொண்டிருந்த சாம்பாஜியினை வேகமாகப் பின்னுக்கு அழைத்த ஹம்பிராவ் ராஜாராமை திரும்பப் போகச் சொன்னார், சாம்பாஜி உள்ளே இழுக்கப்பட்டு சேனைகளின் கடும் காவலில் வைக்கப்பட்டான்.

சட்டென சில உத்தரவுகளைப் பிறப்பித்தான் ஹம்பிராவ். யாருக்கும் எதுவும் முதலில் புரியவில்லை, சாம்பாஜிக்கும் குழப்பமே மிஞ்சிற்று.

எல்லாம் உறுதி செய்தவன் சாம்பாஜியிடம் ரகசியமாய்ச் சொன்னான், “என் தங்கை மொகலாயருக்குத் தூது அனுப்பியிருக்கின்றாள், சென்றவனைப் பிடித்துவிட்டோம் என்றாலும் நிலைமை இனி ஆபத்து. நாம் போரைத் தொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் மொகலாயர் வருவார்கள் போல் தெரிகின்றது.

இப்போதைக்கு நீங்கள் எதுவும் பேசவேண்டாம், கொஞ்சம் பொறுங்கள்” என்றவன் முன்னோக்கிச் சென்றான்.

சாம்பாஜி ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தான், ஹம்பிராவ் எதிர்தரப்பு சோயுர்பாய்க்குத் தனியே ஒரு செய்தி அனுப்பினான். “நீ செய்த அனைத்தும் வெளித்தெரிந்துவிட்டது, மொகலாயருக்குத் தூது அனுப்புமளவு சென்றிருக்கின்றாய், உடனே படைகளைக் கலைத்துவிட்டு கோட்டையினை சாம்பாஜியிடம் ஒப்படைத்துவிடவும்”

சோயுர்பாய் அதனைப் படித்து வெலவெலத்துப்போனாள். ஆனாலும், மொகலாயர் ஏதோ ஒரு வகையில் வருவார்கள் அதுவரை யுத்தத்தை நீட்டிக்கலாம் அல்லது பேச்சுவார்த்தையினை நீட்டிக்கலாம் என்றவள், “மொகலாயத்துக்கு நான் தூது அனுப்பவில்லை, அவர்கள் எப்படியும் இங்குத் தலையிடுவார்கள் என்பது நீ அறியாதது அல்ல, இதனால் எல்லாச் சூழலுக்கும் நாங்களும் தயார்” எனப் பதில் செய்தி அனுப்பினாள்.

இனிப் போரை தவிர தீர்வு இல்லை எனும் நிலை வந்தது, இனிக் கடைசிக்கட்டம் என முடிவு செய்த ஹம்பிராவ் சங்கெடுத்து மும்முறை ஊதினான், அது வித்தியாசமான ஒலியாக இருந்தது.

அந்தக் ஒலி கேட்டதும் சோயுர்பாய் தரப்பில் பல வீரர்கள் முன் வந்தனர், வந்தவர்கள் மொரோபந்தையும் அஞ்சய் தத்தோவினையும் சோயுர்பாயினையும் தனித் தனியே வளைத்துக் கொண்டார்கள், ஒரு வளையம் போல் சுற்றி ஈட்டியினை அவர்கள் கழுத்தில் வைத்து வளைத்துக் கொண்டார்கள், அதே நேரம் சோயுர்பாயினைச் சுற்றியும் அதே வளையம் வீழ்ந்தது.

அவர்களைச் சுற்றி சோயுர்பாயின் ஆட்கள் வளைத்துக் கொண்டார்கள்.

அதாவது, உள்ளே இருந்த ஹம்பிராவின் ஆட்கள் சரியான நேரம் மொரோபந்த், அஞ்சய் தத்தோ, சோயுர்பாயுடன் ராஜாராம் என எல்லோரையும் வளைத்துப் பிடிக்க பின்னே அவர்கள் ஆட்கள் வட்டமாய் வளைத்திருந்தார்கள்.

தான் மிக மோசமாக ஏமாற்றபட்டதாக சோயுர்பாய் அரண்டே போனாள். மொரோபந்தும், அஞ்சய் தத்தோவும் செய்வதறியாது திகைத்தார்கள், மிகச் சாதுர்யமாக செயல்பட்ட ஹம்பிராவின் தந்திரம் கண்டு சாம்பாஜி அசந்துபோனான்.

இனி அடுத்தக்கட்டம் என்ன செய்வது எனச் சோயுர்பாய் தரப்பு மிகக் குழம்பிய நிலையில் தொலைவில் பெரும் சேனை வரும் அறிகுறி தென்பட்டது, அது மொகலாயராக இருக்கலாம் எனச் சோயுர்பாய் புன்னகைத்த நேரம், அது சிவாஜியின் முக்கிய தளபதி நிம்பாஜி பெரும் படை எனத் தெரிந்தது.

அவன் சிவாஜிக்கு நெருக்கமானவன், பல வெற்றிகளைக் கொடுத்தவன், அவன் மக்களைத் திரட்டி இன்னும் பெரும் படை திரட்டி வந்து நின்றான். அந்த இடத்தில் சூழல் மக்கள் புரட்சி என்றாயிற்று.

இனி மோதினாலும் வெற்றி இல்லை என்ற இடத்தில் சோயுர்பாய் தரப்பு பணிந்தது, முழுக்கச் சரணடைந்தார்கள். ஒரு துளி ரத்தம் சிந்தாமல் சாம்பாஜிக்கு வெற்றி தேடித்தந்தான் ஹம்பிராவ்.

யானைமேல் ஏறி அமர்ந்தவன் சூழலைக் கண்டான். எல்லாம் கட்டுக்குள் இருந்தது. அதன்பின் யானையில் இருந்து இறங்கியவன் சாம்பாஜியிடம் சென்று, “எல்லாம் சரியாகிவிட்டது. இனி நீங்கள் செய்யவேண்டியதை செய்யலாம்” எனச் சொல்லிவிட்டுப் பணிந்தான்.

கோட்டை முழுக்க அவன் கட்டுப்பாட்டில் வந்தது.

சாம்பாஜி யேசுபாயினை அம்பாரியில் விட்டுவிட்டு யானையில் இருந்து இறங்கினான், எல்லோரும் அவனை விசித்திரமாகக் கண்டார்கள். காரணம், ஒரு மன்னன் யானையில் செல்வதே மரபு எனும் நிலையில் அவன் இறங்கி நடந்து சென்றான்.

அவன் செல்வதைக் கண்ட கைலாஷ் மெய்காப்பாளர்களுடன் சென்றான், எல்லோர் கண்களும் என்ன நடக்கப்போகின்றதோ என்ற பதற்றத்தில் இருந்தார்கள். ஹம்பிராவ் நிலைமையினை அவதானித்துக் கொண்டிருந்தான்.

இப்போது மொரோபந்தின் தலை, அஞ்சய் தத்தோவின் தலை எல்லாம் வெட்டப்படும் என எல்லோரும் அஞ்சிய நிலையில், சோயுர்பாய் இனி அவ்வளவுதான் என எல்லோரும் கண்ணை மூடிய நிலையில் சாம்பாஜி வெகு நிதானமாக, வெகு இயல்பாக சொன்னான்.

“நான் இங்கு நமக்குள் சண்டையிட வரவில்லை, நாமெல்லாம் சேர்ந்து மன்னர் விட்டுச்சென்ற பெரும் போரைத் தொடர்ந்து மொகலாயரை முறியடித்து நாட்டை மீட்கும் அந்தப் பெரும்பணியினைத் தொடர வந்துள்ளேன்.

இங்கு நான் அரசனல்ல. நான் இந்துராஜ்ஜிய வீரன். மன்னர் கனவுப்படி காசியினை மீட்க கிளம்பியிருக்கும் வீரன், எனக்கு உங்களோடு சண்டையிட நேரமுமில்லை, விருப்பமுமில்லை. உங்களால் முடிந்தால் என்னோடு நில்லுங்கள், இல்லை அகன்றுச் செல்லலாம்.

என் வாள் ஒருகாலமும் இந்துக்களுக்கு எதிராகத் திரும்பாது, என் தந்தை என்னை அப்படி வளர்க்கவில்லை. அதனால் அஞ்ச வேண்டா.

நான் இங்கு என் தகப்பனுக்குச் செய்யும் கடமைகளை முதலில் செய்யவேண்டும், அதன்பின் அடுத்தக்கட்டம் பற்றி யோசிக்கலாம்.

மொரோபந்த் நீங்கள் இந்த ராஜ்ஜியத்தின் மூத்த தளபதி. மன்னரோடு நின்று நீங்கள் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் இது, உங்கள் ரத்தம் இங்குச் சிந்தக் கூடாது, அஞ்சய் தத்தோ உங்கள் மனவலி நான் அறிவேன். ஆனால், நீங்களும் உண்மை அறியாதவர் எனினும் நீங்கள் இனி இங்கு இருப்பது எனக்கு ஆபத்தல்ல, உங்களுக்கு ஆபத்து.

அதனால் கைது எனும் பெயரில் உங்கள் இருவரையும் நான் பன்ஹாலா கோட்டைக்கு அனுப்புகின்றேன், உலகுக்கு அது கைது. ஆனால், அங்கு வழக்கம்போல் கோட்டையில் நீங்கள் எல்லா வசதியுடனும் வாழலாம், நிலைமை சரியானதும் அழைக்கப்படுவீர்கள்” என்றான்.

இருவரும் கண்களில் நீர் வழிய அவனைக் கண்டார்கள். புன்னகைத்தவன், அவர்களுக்கு விடை கொடுத்தான். அடுத்துச் சோயுர்பாயிடம் சென்றான் சாம்பாஜி. அவள் நிலம் நோக்கி நின்றாள், அருகில் ராஜாராம் நின்றுகொண்டிருந்தான், அவன் முகத்தில் அச்சம் இருந்தது.

“அம்மா, உங்கள்மேல் எனக்கு எந்தக் கோபமுமில்லை, என் கர்மப்படி எது நடக்கவேண்டுமோ அது நடக்கின்றது, இந்த இந்துராஜ்ஜிய பதவி என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிவீர்கள், நாம் இந்துக்கள் இங்குப் போராடித்தான் வாழவேண்டும் எனும் நிலைக்குத் தாழ்த்தபட்டிருக்கின்றோம், எதிரிகள் நமக்கு ஏராளம்.

எல்லா அந்நியருக்கு இடையிலும் ஒரே ஒரு வலுவான இந்து அரசாக நாம் போராடுகின்றோம், இங்கு இனிச் சவால் எடுக்கவேண்டியது நான், எந்தத் தைரியத்தில் மோதுவேன் சொல்லுங்கள். எனக்கு என்ன ஆனாலும் எனக்குப் பின் என் தம்பி உண்டு என்றுதானே தைரியமாக செல்வேன், இவன் என் தம்பி எனக்கு ஏதும் நடந்தால், இந்த ராஜ்ஜியத்தை ஆள்வது அவனே, அது இல்லாவிட்டாலும் பகை அகன்றபின் அவனுக்கானதை நான் செய்வேன்.

தாயினை விரட்டினான் மகன் எனும் அவப்பெயர் எனக்கும் நம் குடும்பத்துக்கும் வேண்டாம், நீங்கள் இதே கோட்டையில் தங்கலாம், நான் உங்களை நம்புகின்றேன்” என்றான்.

அவள் தலைகுனிந்து நின்றாள், அவனின் கூரிய வார்த்தைகளுக்கு அவளிடம் பதில் இல்லை, அவனை உற்றுப் பார்த்தவள் பதில் ஏதும் பேசாமல் ராஜாராமை இழுத்துக் கொண்டு சென்றாள், தன் அறைக்குள் புகுந்து கதவினை அடைத்துக் கொண்டாள், பணிப்பெண்களை அழைத்து அவளை நன்கு கவனித்துக் கொள்ளும்படி சொன்ன சாம்பாஜி திரும்பி யேசுபாயினையும், ஹம்பிராவினையும் அழைத்தான்.

“மாமா, நான் என் மனைவியோடு உள்ளே நுழைகின்றேன், நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள், பின்னர் உங்களைச் சந்திக்கின்றேன்” என்றான்.

அதே நேரம் கைலாஷ் சொன்னான், “மன்னா, கோட்டைக்குள் ஆபத்து ஏதுமில்லை என உறுதிசெய்துவிட்டோம், நீங்கள் செல்லலாம்” என்றான்.

சிவாஜியின் எஞ்சிய இரு மனைவியர் வந்து அவனுக்கு ஆரத்தி எடுத்தனர், அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையினைக் கொட்டி தீர்த்து அழுதான் சாம்பாஜி, அவர்களை அணைத்து அழுதான்.

பின் மனைவியோடு உள்ளே சென்றான். சென்றவன் விதவையின் நெற்றிபோல் தெய்வமில்லாத் தேர்போல் இருந்த சிவாஜியின் அரியணையினை உற்று நோக்கினான். நெஞ்சம் இன்னும் விம்மிற்று, அதன் அருகில் சென்று பார்த்தான், அந்தப் பவானிவாள் தங்க தட்டில் பட்டு துணியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்துக்களுக்காக பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொடுத்த வாளை தொட்டு வணங்கிக் கொண்டான், அரியணையில் மெல்ல கைவைத்தான். அது சிவாஜியின் கரங்களைத் தொடுவதுபோல் ஒரு பரவசத்தை அவனுக்குக் கொடுத்தது.

உணர்வால் அவன் தடுமாறினான், யேசுபாய் அவனைத் தாங்கிக் கொண்டாள், மெல்ல சிவாஜி அறைக்குள் சென்றான்.

அங்கே சிவாஜி உயிர்நீத்த கட்டிலைக் கண்டான், அதன் மேல் சிவாஜி கடைசியாக தன் கையில் வைத்திருந்த ஜீஜாபாயின் சேலை கிடந்தது, அருகில் சென்றவன் அந்தச் சேலையினைத் தொட்டான், அது பிறந்தது முதல் அவன் அறிந்த தாயான ஜீஜாபாயின் ஸ்பரிசத்தைக் கொடுத்தது.

“ஆஜி (பாட்டி)….” என அவன் அலறிய அழுகை மாளிகை முழுக்க எதிரொலித்தது, அப்படியே அமர்ந்தவன் சிவாஜியின் கட்டிலில் சாய்ந்து கிடந்தான், நெடுநேரம் அப்படியே கிடந்தான்.

சிவாஜியின் அஸ்தியினைத் தேடினான், அதனை ராஜாராமை கொண்டு கரைத்துவிட்ட செய்தி சொல்லப்பட்டதும் இன்னும் மனமுடைந்து போனான், யேசுபாய் அவனைத் தேற்றிக்கொண்டிருந்தாள்.

அரண்மனை முழுக்க ஹம்பிராவும் காவி கைலாஷ் எனும் சாம்பாஜியின் நண்பனும் முழுக்கக் காவல் செய்தார்கள். மன்னரின் உணவு முதல் படுக்கை விரிப்பு வரை எல்லாமே கவனமாக கண்காணிக்கப்பட்டது, எதுவும் சதி இருக்கலாம் என்பதால் அரண்மனை காவலர்கள் முதல் பணியாளர்கள் வரை எல்லோரின் பின்னணியும் அலசப்பட்டு அடியோடு மாற்றப்பட்டார்கள். எல்லா வகை கண்காணிப்பும் வலுவாக்கப்பட்டது.

ஜூன் 12, 1680 ல் சாம்பாஜி ராய்காட் கோட்டையினைக் கைப்பற்றினான், சாம்பாஜி மெல்ல மெல்ல சிவாஜியின் இழப்பு மற்றும் நடந்த சதிகளைத் தாண்டி எழுந்தான், சிவாஜிக்கான பூஜைகளை, பரிகாரங்களை எல்லாமும் முறைப்படி மகனாக செய்தான், எல்லா வகை சாஸ்திரங்களின்படி ஒரு குறையின்றி செய்து முடித்தான்.

இனி அவன் மன்னராக முடிசூடவேண்டிய விழா நடக்கவேண்டும், அவை கூடி அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்து மன்னரை அழைத்தது, ஆழ்ந்த யோசனையில் இருந்தவனிடம் துர்க்காதாஸிடம் இருந்து செய்தி வந்திருந்தது.

காரணம் ராஜஸ்தானம் அப்படிப் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

சிவாஜி மரிக்கும் போதே ராஜபுத்திரர் மேல் குறிப்பாக ஜோத்பூர் சமஸ்தானம் மேல் கொடும் தாக்குதலை தொடுத்திருந்தான் ஔரங்கசீப், ஜோத்பூர் சமஸ்தானத்தை தன் பிடியில் வைக்கும் எல்லாத் திட்டத்தையும் துர்க்காதாஸ் ரத்தோர் தவிடுபொடியாக்கி தன் காவலில் இருந்த ராணியினையும் அவள் குழந்தையினையும் டெல்லியில் இருந்து மீட்டுச் சென்று பெரும் அடி கொடுத்ததில் அவன் பெரும் அவமானத்துக்குள்ளானான்.

சிவாஜிக்குப் பின் அவன் கண்ட பெரும் நெருப்பும் எதிர்ப்பும் துர்க்காதாஸாக இருந்தது, அப்போது 43 வயதான துர்க்காதாஸ் ரத்தோர் பிரிவினைச் சார்ந்த மாவீரன், அவனே தனிப்பெரும் தளபதியாக நின்று போரை நடத்தினான்.

பகதூர்கான், முபாரக்கான் எனப் பல மொகலாய தளபதிகள் அங்குத் தோல்வியினைத் தழுவ தாஜ்கான் எனும் கொடியவனை அனுப்பியிருந்தான் ஔரங்கசீப், தாஜ்கானின் தாக்குதல் மிக மிக மோசமாயிருந்தது.

ராஜபுத்திரர்களின் தனிப்பெரும் வீரம் போலவே அவர்களின் கோவில்கள் மிகச் சிறந்தவையாக இருந்தன, அவை வெண்பளிங்கு எனும் ராஜஸ்தான் பளிங்கு கற்களால் அமைந்தவை, அங்கு ஆலயங்களும் சிலைகளும் வெள்ளை வெளேர் என அழகாக மின்னின‌.

அவை சூரிய ஒளியில் வெண்மை, மாலையில் செந்நிறம் நிலவொளியில் தங்கம் என மின்னின, அதிகாலை அவற்றைக் காணும் அழகே அற்புதமாக இருந்தது, இவை நூற்றுக்கணக்கில் ராஜஸ்தானம் எங்கும் இருந்தது.

மதுராவில் இருந்த கண்ணன் ஆலயம் அப்படி வெண்பளிங்கினால் கட்டப்பட்டிருந்தது, பலராமன் கண்ணனின் சிலைகளெல்லாம் அப்படி மின்னின‌.

இந்த அற்புதமான கலைநயமிக்க ஆலயமும் சிலைகளும் ஒவ்வொரு சுல்தான் காலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டன. குத்புதீன் ஐபெக் காலம் தொடங்கி கில்ஜி துக்ளக் எனத் தொடங்கி லோடி காலத்தில் அது தீவிரமானபோதுதான் ராஜபுத்திரர்கள் பாபரை அழைத்து வந்தார்கள்.

600 வருட காலம் இவை அழிக்கப்பட்டே வந்தன. ராஜபுத்திரர்கள் முடிந்தவரை மீளக் கட்டினார்கள். அப்படித்தான் மான்சிங் எனும் ராஜபுத்திர மன்னன் மீள மதுரா கோவிலை பளிங்கினால் கட்டிவைத்தான்.

இந்தக் கோவில்களுக்குக் காவல் பெறத்தான் அக்பர் ஜலாலுதீனுக்கு ஜோத்பூர் இளவரசி ஜோதாபாயினைத் திருமணம் செய்துவைத்தார்கள், அவன் அவளை மதம்மாற்றுவான், தங்கள் வீட்டுப்பெண் இஸ்லாமாக மாறுவாள் எனத் தெரிந்தும் கோவில்களைக் காக்க அந்தத் தியாகத்தைச் செய்தார்கள்.

அதை இன்னும் இன்னும் நிறைய திருமணமாக தன் குடும்பத்தில் செய்து ராஜபுத்திரர்களை வளைத்துப்போட்டுக் கொண்டான் அக்பர் ஜலாலுதீன். அதே நேரம் அதனால் தங்கள் கோவில் காக்கப்படுவதாலும், மதுரா போன்ற ஆலயங்கள் மீள வந்ததாலும் ராஜபுத்திரர்கள் நிம்மதிக் கொண்டனர்.

அந்த அமைதியில் மொகலாயம் வளர்ந்தது, இந்த வெள்ளை நிற ஆலயங்களின் அழகில் மனதைப் பறிகொடுத்த ஷாஜகான் அதே போல் பிரமாண்டமாக தாஜ்மஹாலை கட்டிக்கொண்டான், அதன் மூலம் இந்தச் சலவைக்கல் ராஜபுத்திர ஆலயங்களாய் இருந்தது.

(தாஜ்மஹாலுக்கு முன் அங்கு ஒரு ஆலயம் இருந்தது. அது சலவைக்கல் சிவாலயமாக இருந்தது என்பதையும் முழுக்க மறுக்க முடியாது)

இப்படி ராஜபுத்திரர் தங்கள் செல்வம், தங்கள் வீட்டுப்பெண்கள், மொகலாயருக்குக் காவல் என எல்லாம் செய்து கண்போல் காத்த ஆலயங்களைத் தாக்கத் தொடங்கினான் தாஜ்கான்.

மொகலாயர் என்றல்ல எல்லா அந்நியருக்கும் இருந்த கணக்கு இந்து மன்னர்கள் எதைத் தாக்கினாலும் பணியமாட்டார்கள், ஆனால் இந்து ஆலயங்களைத் தொட்டால் உடனே விழுவார்கள் என்பது.

அது கோரிகாலம், கில்ஜி காலம் தொடங்கி தமிழ்பேசும் ராமநாத்புர பக்கம் மருதுபாண்டியரைக் காளையார் கோவிலை இடிப்போம் என மிரட்டி பிடித்த பிரிட்டிஷார் வரை எல்லோரின் தந்திரமாய் இருந்தது.

அதைத்தான் இங்கு மொகலாயர் செய்தார்கள். ஏற்கனவே காசியினை ஔரங்கசீப் இடித்துப்போட்டு பள்ளிவாசல் கட்டிய நிலையில் மதுராவிலும் அழகான பளிங்கு கண்ணன் கோவிலை இடித்துக் கண்ணன் பிறந்த இடத்தின் கோவிலை இடித்து “இத்கா” பள்ளிவாசலை கட்டினான், அந்த மதுரா கோவிலின் கண்ணன் சிலை உள்ளிட்டவை ஆக்ராகோட்டை வாசலில் புதைக்கப்பட்டது, அதை மிதித்து மொகலாயரும் எல்லோரும் கோட்டைக்குள் செல்வதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

இதெல்லாம் இந்துக்கள் மனதைக் கடுமையாகப் பாதித்தாலும் ஒரு விஷயத்தில் மனதைத் தைரியபடுத்தியிருந்தார்கள். காரணம், 600 ஆண்டுகளாக இந்துக்களின் புனிதத்தலம் இடிக்கப்படுவதும் பள்ளிவாசல்கள் வருவதும் பின் இந்துக்கள் போராடி அதை அகற்றி ஆலயம் கட்டுவதும் திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருந்தது.

மொகலாயரை ஒழித்து இவை எல்லாம் அகற்றி கோவில்களை மீளக் கட்டினாலும் துருக்கியர், பாரசீகர் யாராவது வந்து மீண்டும் கோவிலை இடிப்பார்கள் என்பதால் உரிய காலம் வரை ராஜபுத்திரர்களும் இந்துக்களும் சகித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது ஜிசியா வரி எனக் கடும் வரியில் ஔரங்கசீப் இறங்கி ராஜபுத்திர அதிகாரங்களிலும் கைவைத்த நேரம் நிலைமை மோசமாயிற்று. வழக்கம்போல் இந்துமக்களை, மன்னர்களை விரட்ட ஆலயங்களை இடிக்கத் தொடங்கினான் தாஜ்கான்.

அவன் சேனையினை எப்படி எதிர்கொள்வது எனச் சிந்தித்துப் போராடிக் கொண்டிருந்த துர்க்காதாஸுக்கு அப்போது ஆதரவாக வந்தான் மேவார் மன்னன் ராஜா ராணா சிங், அவனோடு நின்றிருந்தான் ஜெய்சிங் மகன் முதலாம் ஜெய்சிங்.

அவர்கள் எல்லோரும் ஆரவல்லி மலை அடிவாரத்தில் கூடியிருந்தார்கள், அப்போதைய ஜெய்ப்பூர் மன்னனுமான இரண்டாம் ஜெய்சிங்கும் நின்றிருந்தான்.

அவர்கள் எல்லோரும் மிகுந்த ஆவேசத்திலும் கோபத்திலும் ஔரங்கசீப் மேல் சொல்ல முடியாத வார்த்தைகளைத் தாக்கி வலிகளுடன் விவாதிக்கத் தொடங்கினார்கள்.

“நாம் ஏமாந்துவிட்டோம், மிகவும் ஏமாந்துவிட்டோம். எல்லோரையும் மிகச் சரியாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்த நாம் அக்பரின் தந்திரத்தில் ஏமாந்து போனோம்.

எப்படிப்பட்ட பெரும் வாழ்க்கை வாழ்ந்தவர்கள் நாம், ராஜபுத்திரர் என்றால் எவ்வளவு பெரிய சக்தியாக நாம் அன்றைய கலீபாக்களுக்கே சவால்விட்டோம், நாம் செய்த முதல் தவறு எக்காலமும் ஆப்கானியர் நம்மை வெல்லமுடியாது என இறுமாந்திருந்தோம், கஜினி போல இவர்கள் கொள்ளைமட்டும்தான் இடமுடியும் இங்கு ஆளமுடியாது என நாம் கணக்கிட்டதுதான் தவறு.

கோரி அதில்தான் புகுந்து வஞ்சகமாக நம் மன்னன் பிருத்விராஜனைக் கொன்றுபோட்டு டெல்லியில் அதன் ஆட்சியினை நிறுவினான்.
அதுவும் அவனும் இங்கு ஆள அஞ்சினான், தன் அடிமையினை வைத்தே நாடி பார்த்தான், நாமும் அந்த அடிமையினைக் கொண்டே மேற்கொண்டு ஆப்கானிய கும்பல் வராதவாறு சில ஒப்பந்தங்களைச் செய்தோம். அதில் ராஜதந்திரம் இருந்தது.

இது அவர்களுக்குச் சிறிய சலுகைகளைக் கொடுக்கச் சொன்னது, இங்கு இந்துக்களுக்குக் காவல் இருக்கின்றோம் அதனால் சிறிய கோட்டை கட்டுவோம் பள்ளிவாசல் கட்டுவோம் எனக் கேட்டதற்கு அனுமதித்தோம், அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தபோதும் நாம் சுதாரிக்கவில்லை.

அவர்கள் அவர்களாக இருந்தார்கள், நாம்தான் தவறாக அவர்களை நம்பி ஏமாந்து கொண்டே இருந்தோம், இக்கும்பல் நம்மைக் காக்கும் என வைத்தால் அவர்கள் நம்மை அழிக்க நினைப்பதும் நாம் அவர்களை ஒடுக்கி இன்னொருவனைக் காவலுக்கு வைப்பதும் காலம் காலமாக நடந்தன, ஒவ்வொருவனும் வரும்போது சரியாகத்தான் வந்தான், இங்கு வந்தபின்பே மாறிப்போனான்.

நாம் நம் காவலாக அவர்களை வைக்க அவர்களோ நமக்கு விசுவாசமில்லாமல் துருக்கி சுல்தானுக்கும், பாரசீகனுக்கும் விசுவாசமாகிபோனார்கள். என்ன செய்வது?

தைமூர் முதல் பல மிரட்டல்களைகக் கண்டதால் இன்னும் பெரிய சுல்தான்களின் அட்டகாசம் கொள்ளை இருப்பதால் நம்மையும் நம் கோவில்களையும் காக்க இக்கூட்டத்தை வைத்தோம், அங்கே அந்த லோடி என்பவனும் பெரிய வரிகேட்டு கோவில்களை இடித்தபோதுதான் பாபரை அழைத்துவந்தோம்.

அவனும் முதலில் ஒழுங்காக இருப்பதுபோல் நடித்தான். ஆனால், அவனின் நடவடிக்கைகள் குறிப்பாக அயோத்தியில் அவன் ஏதோ செய்ய முயன்றபோதே நம் மன்னர் ராணா அவனை எதிர்த்தார். அவரைச் சாட்சியின்றி கொன்றுபோட்டவன் அயோத்தியில் பள்ளிவாசலை கட்டினான்.

நாம் அத்தோடு பாபரையும் அடித்துவிரட்டினோம். ஆனால், பாரசீக சுல்தான் தன் பிரதிநிதியாக அக்பர் ஜலாலுதீன் எனப் பாபர் பேரனை மிகச் சாதுர்யமாக அனுப்பினான், அக்பர் பாரசீக வஞ்சகத்தில் தேர்ந்தவனாய் இருந்தான், சிரிப்பும் நடிப்பும் வெளியே, வஞ்சகம் உள்ளே எனும் பாரசீக பயிற்சி அவனிடம் நிரம்ப.இருந்தது.

அதில்தான் நாம் ஏமாந்துபோனோம், அவனும் முதலில் அடித்துப் பார்த்தான், நம் பெண்களை மிகக் கொடிய வகையில் அபகரிக்க பார்த்தான். ஆனால், நாம் அடித்த அடியில் அடங்கி இனி ஒழித்துவிடுவார்கள் என அஞ்சி நம் காலில் விழுந்தான்.

அவனைக் கொண்டே ஆப்கானியரை, பாரசீகர்களை அடக்க நாம் செய்த தவறு இன்று இமாலய தவறாகிவிட்டது, நாம் அவனிடம் என்ன கேட்டோம்?

உனக்குச் செல்வம், பொன், பொருள் எல்லாம் தருகின்றோம். எங்கள் பெண்ணை இளவரசியினை ராணியாக தருகின்றோம், எங்களை இந்துக்களாய் வாழவிடு, எங்கள் கோவில்களைத் தொடாதே எனும் ஒப்பந்தத்தில்தானே அமர்த்தினோம், மொகலாயருக்கும் நமக்கும் உள்ள ஒப்பந்தமே அதுதானே.

ஆனால் என்ன நடந்தது?

அவர்கள் எக்காலமும் இஸ்லாமியராக இருந்திருக்கின்றார்கள். இன்னும் இருக்கின்றார்கள். நம் பெண்களைக் கட்டி மதமாற்றி அவர்களை இஸ்லாமியராக வளர்த்திருக்கின்றார்கள், அவர்கள் முழு இஸ்லாமியராக வளர வளர நாம் அவர்களிடம் அடிமைகளாக நம்மை அறியாமல் சிக்கிவிட்டிருக்கின்றோம்.

நம் மன்னர்களான ராஜபுத்திரர்கள் அந்தக் காவல்காரர்களுக்கே அடிமையானார்கள், நாம் வைத்த காவல்காரர்களே நம்மை அடிமையாக்கி அராபியரைக் காட்டி இன்னும் பலரைக் காட்டி நம்மை ஏமாற்றி கையில் வைத்துக் கொண்டார்கள்.

நம் மன்னர்கள் ஜெய்சிங், ஜஸ்வந்த்சிங் என எல்லோரும் மொகலாயருக்காக போரிட்டார்கள், நாமும் ஆப்கன் எல்லையில் அந்த முரட்டுக் கூட்டத்தை எதிர்த்து நின்றோம். அப்படியான நிலையில் நமக்கு ஜிஸியா வரி, அவர்களுக்குச் சலுகை என்பது என்ன?

ஔரங்கசீப் என்ன சொல்ல வருகின்றான்? அவன் அராபியருக்கும் துருக்கியருக்கும் என்ன சொல்கின்றான்? நான் இங்கு இந்துக்களை வாள்முனையில் மதமாற்றுகின்றேன், இந்த இறைபணியில் என்னைத் தொல்லை செய்யாதீர்கள் என்கின்றான், அவர்களும் ஒப்புக்கொள்கின்றார்கள்.

அதை நிரூபிக்க நமக்கு ஜிசியா வரி என்கின்றான். எந்த ராஜபுத்திரர் மொகலாயரை நம்பினார்களோ அவர்கள் அரசே இனி எங்களது அதுவும் இஸ்லாமிய அரசு என்கின்றான். நாம் நம் மன்னர்களை பலிகொடுத்தோம், ராம்சிங் போன்ற மன்னர்கள் அவனிடம் சிறையில் உள்ளார்கள். இப்போது நம் மதத்தை மண்ணை அழித்துப்போட நம் நாடுவரை அவன் படைகள் வந்துவிட்டன‌.

நமக்கு இனி உதவுவார் யார்? சிவனின் கருணையால் நாம் நாதியற்று போகவில்லை. நமக்குச் சிவன் சிவாஜி வடிவில் வந்து தெற்கே பெரும் அரசைக் கொடுத்தார், அந்த அரசு மொகலாயருக்குச் சவால்விடும் வகையில் சரியான இந்து அரசாக எல்லாப் படைகளையும் வைத்திருக்கின்றது.

இனி நமக்கு உதவ சிவாஜியின் அரசால் அன்றி யாரால் முடியும்? ஆனால் அங்குச் சிவாஜி இல்லாமல் வாரிசு குழப்பம் என்கின்றார்கள், எல்லா நாட்டின் அரசும் பெரிய அரசன் இல்லா நிலையில் இப்படிக் குழம்பி பின் தெளியும். இந்து ராஜ்ஜியத்திலும் அப்படித் தெளிகின்றது. இனி நாம் அவர்களிடம் உதவிக் கேட்கலாம். இனி சிவசேனை அன்றி நமக்கு உதவ யாருமில்லை” என்றான் ஜெய்சிங்.

அவன் ஆம்பர் மன்னன் மிர்சா ராஜா ஜெய்சிங்கின் பேரன், முன்பு சிவாஜியினை அடக்க வந்த அந்த ஜெய்சிங்கின் மகன் ராம்சிங்கின் மகன், சிறிய வயது என்றாலும் உணர்ச்சியாய் நின்றான்.

ஔரங்கசீப்பின் படைகள் அவ்வளவு உக்கிரமாய் ஜெய்ப்பூரை தாக்கின. ஆனால் மேவார் மன்னன் ராணா, ஜெய்ப்பூர் மன்னன் ஜெய்சிங் போன்றோரெல்லாம் இணைந்து தாஜ்கானை சமாளித்தனர், தாஜ்கான் மக்களின் ஊரைக் கொளுத்தினான், வயல்களை நாசம் செய்து, இந்துப் பெண்களைக் கைப்பற்றி அடிமை சந்தையில் விற்க முனைந்தான். இன்னும் பெரும் கொள்ளையிட்டான்.

இந்த ராஜபுத்திர மன்னர்கள் முடிந்தளவு அவனைச் சமாளித்தார்கள், கோவில்கள் இடிபட்டால் மீளக் கட்டலாம். ஆனால், பெண்களை இழந்தால் மக்களை இழந்தால் எங்கே திரும்ப எடுப்பது என மக்களை ஆரவல்லி மலைக்குள் கொண்டு சென்று காவல் இருந்தார்கள்.

ஒரு காலத்தில் தங்கள் பெண்ணை அக்பருக்கு மணமுடித்து கொடுத்து மதத்தை மண்ணைக் காக்க முனைந்த கூட்டம் இப்போது வஞ்சகத்தால் வீழ்ந்து தங்கள் வீட்டுப் பெண்களைக காக்க வீரப்போர் நடத்தியது.

ராஜபுத்திரர்கள் துர்க்கா தாஸ் தலைமையில் பெரும் அடி கொடுத்தார்கள், துர்க்காதாஸின் போர்க்கலை குரு வீரசிவாஜி, அதுவரை இருந்த மரபுவழிப்போரை உடைத்து சிவாஜி பாணியில் மறைந்திருந்து தாக்கும் போரை அவன் தொடுத்தான், அதில் மொகலாய சேனைகள் சரிந்தன‌.

அவன் அடித்த அடியில் கலங்கிப்போன தாஜ்கான் மிக ஆவேசமாக இந்துக் கோவில் அழிப்பினை பிரளயம் போல் செய்தான். இனி மேலதிக ஆயுதம், பணம், வெடிபொருள் இல்லாமல் யுத்தம் தொடரமுடியாது எனும் நிலை வந்தது.

அவர்கள் அவசரமாக ராய்காட் கோட்டைக்கு ஓலை அனுப்பினார்கள்.

அந்த 1680 ஜூன் ஜூலை காலங்கள் மராட்டியம் கொங்கன் பக்கம் பெரும் மழைக்காலங்கள். இதனால் சாம்பாஜி எங்கும் நகரமுடியா நிலை இருந்தது. எனினும், ராஜபுத்திரர் அனுப்பிய செய்தி ராய்காட் கோட்டையில் அனலை எழுப்பியது.

அதே நேரம் மொகலாயர் தரப்பில் இருந்து ஒரு ஓலை வந்தது.

“சிவாஜி அரசருக்கு அடுத்து உங்கள் அரசர் யார் என்பதினைத் தெரிந்து கொள்ள மொகலாயம் மிகுந்த ஆர்வமாக உள்ளது. இந்துஸ்தானின் எல்லா மன்னர்களும் மொகலாயத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், சிவாஜி மன்னர் அந்த உறவை சரியாகப் பேணவில்லை. இந்த ராஜ்ஜியத்தின் அடுத்த அரசர் உரிய கப்பம் கட்டி நல்ல உறவைப் பேணுவார் என மொகலாயம் எதிர்பார்க்கின்றது” எனச் செய்தி இருந்தது.

இதையெல்லாம் விவாதிக்க அவை கூடிற்று. சாம்பாஜி, கைலாஷ், ஹம்பிராவ் என எல்லோரும் கூடினார்கள. முதலில் சாம்பாஜி மன்னராக முடிசூட வேண்டும் என்றார்கள், காரணம் அரியணை காலியாக இருந்தது. இதனால் அவன் ராஜ்ஜிய பரிபாலனத்தை முறைப்படி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்கள்.

அவன் மிக நிதானமாகச் சொன்னான். எழுந்து அவையினை வ‌ணங்கிச் சொன்னான், “இது நான் முடிசூடுவதற்கு உரிய நேரமல்ல, இங்கு நான் அரசனாக தகுதி இல்லாதவன் என அபிப்ராய பேதம் இருக்கும் நிலையில் அது நமக்குள் மோதல் வரை இட்டுச் சென்ற நிலையில் நான் இப்போது முடிசூடுவது சரியாக இராது.

சில காரணங்களால் நான் அதனை நிராகரிக்கின்றேன். தன் தந்தை இறந்து ஆறுமாத காலமாவது செல்லவேண்டும், அவர் இல்லாநிலையில் நான் உடனடியாக முடிசூடுவது என் மனதுக்குப் பிடிக்கவில்லை. நான் பதவிக்கு அலைந்தவன் என்பதுபோல் ஆகிவிடும்.

இரண்டாவது, ராஜபுத்திரர்கள் பெரும் அழிவில் சிக்கியிருக்கும் நேரம் அம்மக்கள் காடுகளிலும் மலைகளிலும் பாலை நிலங்களிலும் உயிருக்கு அஞ்சி ஒடுங்கியிருக்கும் நேரம், காணகிடைக்காக் கலைநயமிக்க வெள்ளைக்கல் ஆலயங்கள் அதுவும் இடித்தாலும் பல மாதமாக இடிக்கவேண்டிய அளவு உறுதியான ஆலயங்கள் மொகலாய கயவர்கள் இடிக்கின்றார்கள்.

நம் அரசு நமக்காக நம் மக்களுக்காக நம் மொழி நம் பிராந்தியம் என உருவானது அல்ல, இது இந்துக்களுக்கான அரசு, இந்து மக்களை, இந்துப் பெண்களை, இந்து மண்ணை, ஆலயத்தை காக்கும் அரசு என்பதுதான் நம் அரசின் ஒரே கொள்கை. அதற்கே இது உருவானது. நம் கோவில் நம் பெண்கள் நம் கால்நடைகள் மேல் கைவைப்பவன் எவனாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டும்.

இதனால் நாம் அவர்களுக்கு எல்லா உதவியும் செய்யவேண்டும். அம்மக்கள் ஆபத்து நீங்கவேண்டும், நிலம் வழி, கடல் வழி என எல்லா வழியிலும் அவர்களுக்குத் தேவையான எல்லாமும் அனுப்பிவைக்க வேண்டும். அவர்கள் கடும் மோசமானநிலை நீங்கி ஆபத்து நீங்கி அவர்கள் மீண்டபின்னே அடுத்ததை யோசிக்க வேண்டும்.

மூன்றாம் காரணம், சிவாஜி மன்னரோடு நின்று இந்த சாம்ராஜ்ஜியம் அமைத்த மொரோபந்த், அஞ்சய் தத்தோ போன்றோர் சிறையிலிருக்க அவர்கள் மனம்நோகும்படி இப்போதே இது அவசியமல்ல. உரிய காலம் வந்து அவர்கள் விடுவிக்கப்படட்டும், என் சித்திக்கும் என்மேலான கொடிய எண்ணம் மாறட்டும்.

நான் யாருக்கும் எதிரி அல்ல, ஆபத்து அல்ல என்பதையும் நான் இந்த நாட்டை ஆளத் தகுதிகொண்டவன் என்பதையும் நிரூபித்த பின்பே பதவியில் அமர்வேன். அதுவரை எனக்கு ஓய்வில்லை.

முக்கியமாக மொகலாயர் நம்மை விடமாட்டார்கள். சிவாஜி மன்னருக்குப் பிந்தைய நமது இந்து அரசின் தாக்குதல் பலம் எப்படி, வியூகம் எப்படி என்பதைக் காண நிச்சயம் வருவார்கள். பெரும் போர் ஒன்று வராமல் ஓயாது. அதையும் எதிர்பார்க்க வேண்டும்.

இதனால் நான் சிவாஜியின் மகனாக, ஜீஜாபாயின் பேரனாக சொல்கின்றேன். அந்த இந்துமக்கள் ஆபத்தில் தவிக்கும் போது நாம் இங்கு விழா எடுப்பது சரியல்ல. நமது முதல் வேலை ராஜபுத்திரர்களையும், அவர்கள் மக்களையும் ஆலயத்தையும் காப்பது அதற்கே நாம் வாளேந்தினோம்.

ஔரங்கசீப் நம்மை அடக்க ஜஸ்வந்த்சிங்கையும் ஜெய்சிங்கையும் அனுப்பும்போது அவர்கள் நம்மிடம் பரிவுடனே நடந்துகொண்டார்கள், ஆக்ராவில் சிவாஜி மன்னரையும், என்னையும் ஔரங்கசீப் கொல்லாமல் விட அந்த ஜெய்சிங்தான் ஒரே காரணம், அவரே தன்னை நம்பிவந்த சிவாஜிக்கு ஆபத்து நேரக்கூடாது என ஔரங்கசீப்பினை எச்சரித்தார்.

அவர்கள் வம்சத்துக்கு நாம் நன்றிக்கடன் காட்டவேண்டும். இதனால் உணவு, பணம், ஆயுதம் வெடிபொருள், குதிரைகள் என எல்லாமும் அங்குச் செல்லட்டும். நம்மில் சிறந்த வீரர்களும் செல்லட்டும். நிலம் வழி கடல்வழியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செல்லட்டும், நிலம்வழி சோதனைகள் அதிகம் என்பதால் கடல் வழியில் செல்லட்டும் என அறிவித்தான்.

அவன் உத்தரவுக்குச் சபை கட்டுப்பட்டது, அவன் முடிசூடும் நிகழ்வினை ஒத்திவைத்து ஒரு பக்கம் நாட்டின் நிர்வாகம், காவல், கடல்பலம் எல்லாம் கவனமாக ஆராயத் தொடங்கினான். இன்னொரு பக்கம் எதிரிகளை அவதானித்தான். மொகலாயத்துக்கு அவன் எந்தப் பதிலும் அனுப்பவில்லை.

சாம்பாஜி தனக்கு எளிதில் பணிவான் எனக் கணக்கிட்டிருந்த ஔரங்கசீப் அவனின் அமைதிகண்டு நெற்றி சுருக்கினான். ஆனால், எளிதில் சாம்பாஜியினை வசப்படுத்திவிடலாம், இல்லை மிரட்டி வழிக்குக் கொண்டுவரலாம் என யோசித்துக் கொண்டிருந்தான்.

சாம்பாஜியின் உதவியால் ராஜபுத்திர படை பெரும் சாகசம் செய்தது. ராணா சிங், ஜெய்சிங், துர்க்காதாஸ் இணைந்த படை பெரும் பாய்ச்சல் காட்டி தாஜ்கானை ஓட விரட்டியது.

சுமார் 1 லட்சம் வீரர்கள் சகிதம் சென்றவன் படை சிதறி தோற்று ஆக்ராவுக்கு ஓடினான், மீதி படைகள் லாகூர் நோக்கிச் சென்றனர்.

மொகலாயப் படைகள் கூலியால் நிறைந்தது. அங்கு ஆப்கன், பாரசீகம், துருக்கி, ஆப்ரிக்கர், ஐரோப்பியர் என எல்லா நாட்டு வீரர்களும் நல்ல சம்பளத்துக்கு வந்து போரிட்டார்கள். செல்வம் நிறைந்த மொகலாயத்தில் நல்ல சம்பளம் என்பதால் உலகெல்லாம் இருந்து வீரர்கள் வந்திருந்தார்கள், இவர்கள் கூலிக்குப் போரிடுபவர்கள் என்பதால் விசுவாசம் பெரிதாக இராது, உயிர் ஆபத்து என்றால் ஓடிவிடுவார்கள்.

அப்படித் தன் பெரும்படை சிதறிய செய்தி கேட்டு ஔரங்கசீப் கடும் கோபம் அடைந்தான். ஆனாலும், தன் மாபெரும் சேனையினை வீழ்த்தும் வலிமை எப்படி ராஜபுத்திரர்க்கு வந்தது? எப்படி ஆயுதமும் பணமும் வந்தது எனக் குழம்பினான்.

ஒரு யுத்தத்துக்கு முதல் தேவை பணம், அது இல்லாமல் யுத்தமே இல்லை. எல்லாவகையிலும் ராஜபுத்திரருக்கான நிதியின் வழியினை அடைத்தபின்னும் அவர்கள் எப்படி தாக்குப்பிடித்தார்கள் என்பதில் தீவிர விசாரணையில் இறங்கிய ஔரங்கசீப்புக்குப் பின்னணியில் இருந்தது சாம்பாஜி எனும் செய்தி கிடைத்தது.

“சாம்பாஜி…” எனப் பெரிதாக அலறி தன் காலால் தரையினை மிதித்தவன் வங்காளம், லாகூர், காந்தகார் எனப் பல இடங்களில் இருந்த தன் சேனைகளுக்கும் அவற்றைக் கட்டுப்படுத்தி நின்ற தன் மகன்கள் மூவருக்கு அவசரமாக செய்தி அனுப்பினான். ராஜபுத்திரரை இனி விடவே கூடாது, சாம்பாஜியினை முதலிலே அடக்க வேண்டும் எனும் பெரிய கொதிப்பு அவனிடம் நெருப்பாக எழுந்தது.

ஜெய்சிங் வம்சம், ஜஸ்வத்சிங் வம்சம், ராணா வசம்போல் சிவாஜி வசமும் இருக்கக் கூடாது. இனி இவர்கள் யாருமே இருக்கக் கூடாது எனத் தன் பெரிய அபாயமான திட்டத்தை வரையத் தொடங்கினான்.

(தொடரும்)