சத்ரபதி சாம்பாஜி : 06
சத்ரபதி சாம்பாஜி : 06
சாம்பாஜி மொகலாயர்க்கு எதிரான தன் முதல் அடியினைச் சொல்ல சொல்ல எல்லோரும் கவனமாகக் கேட்டார்கள், அவனின் தாக்குதல் பர்கான்பூரைக் கொள்ளை அடிப்பதாக இருந்தது.
அந்த நகரம் புவியியல் அமைப்பில் மிக முக்கியமானதாக இருந்ததால் இராணுவம் மற்றும் பொருளாதார அடிப்படையில் மிக மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் தப்தி நதி ஓரமாக அமைந்த அந்த இடமே வடக்குத் தெற்கின் இணைப்புப் புள்ளியாகவும் இருந்தது.
இங்கு நீர்வளம் நிலவளம் முறையான பாதை என எல்லாமும் இருந்ததால் அன்றே அது மிகச் சிறந்த இடத்தில் இருந்தது. பர்கான்பூர் என இந்துக்களின் நகரமாக அது இருந்தது, அதன் அருகிலுள்ள இச்சாதேவி ஆலயம் மிகப் பிரசித்தியானதாக இருந்தது.
இந்த இச்சாதேவிதான் அதாவது கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி என மூன்று சக்தியில் முக்கியமான இச்சா சக்தி எனும் விருப்ப சக்தியின் ஆலயம் இன்னும் ஆழமாகச் சொன்னால் காமாட்சி வடிவமாக அது விசேஷமானது.
இந்த இந்துக்களின் நகரம் 14 ஆம் நூற்றாண்டு வாக்கில் துருக்கி சுல்தானால் பர்கான் உத் தின் எனும் சூபி ஞானியின் நினைவாக பர்கான்பூர் என்றாயிற்று, அடையாள ஒழிப்பு என்பது ஒரு மண்ணை ஆக்கிரமித்து அடிமைத்தனத்தைக் காட்டும் வழமை என்பதால் அந்தச் சுல்தான் அதைச் செய்தான். சுல்தான்கள் ஆட்சியில் அது நிலைத்துவிட்டது.
அக்பர் ஜலாலுதீன் 1601 ல் இதைக் கைப்பற்றிய பின் மொகலாயத்திடம் இது சிக்கியது, அதிலிருந்து மொகலாயரின் முக்கியத் தளம் எனப் பலவகையிலாயிற்று, தக்காணத்தின் நுழைவாயிலாக இதை வைத்திருந்தார்கள்.
இதுதான் அவர்களின் பொருளாதார மையமாகவும் இருந்தது, தப்தி நதியின் போக்கு வரத்து பருத்தி விளைச்சலில் துணி உற்பத்தி இன்னும் தெற்கே மற்றும் மேற்கே ராஜஸ்தான் குஜராத் பகுதிகளைக் கட்டுபடுத்தும் இராணுவ கேந்திரம் என இதன் முக்கியத்துவம் பெரிது என்பதாலும், தப்தி ஆறு மேற்கு நோக்கி ஓடி சூரத் எனும் துறைமுகத்துடன் கடலில் கலப்பதால் இதன் நீர்வழி போக்குவரத்து மிக முக்கியமானதாயிற்று.
குறிப்பாக மெக்கா செல்லும் பயணிகள், இதர வியாபாரிகள் இங்கிருந்துதான் சூரத் சென்று கப்பல் ஏறுவார்கள், இந்த நீர்வழித் தடம் இதனாலும் முக்கியமாயிற்று, பெரும் பணம் கொட்டியது.
மொகலாயரின் இந்தத் தளத்தில் இருந்துதான் ராஜபுத்திரர்கள் மேலான போருக்கு நிதி மற்றும் இதர வளங்கள் மொகலாயரால் வழங்கப்பட்டுகொண்டிருந்தன, மொகலாய அரண்மனை, வசூல் மையம், பெரிய பெரிய வியாபாரிகள் என இது செல்வம் கொழிக்கும் இடமாக இருந்தது, எல்லா நிதியும் இங்கும் குவிந்திருந்தது.
இதனைக் குறிவைத்துத்தான் சொன்னான் சாம்பாஜி.
“நமது இந்துக்கள் ஜிஸியா வரிகட்டி மிகப்பெரிய சிக்கலுக்குள் வேதனைக்குள் சிக்கியிருகின்றார்கள். வெளியே இது வரி எனத் தெரிந்தாலும் உள்ளே இந்துக்களை வதைத்து மதம்மாற்றும் செயல்.
வரிகட்ட முடியவில்லை என்றால் தங்கம் பறிமுதல், கால்நடை பறிமுதல் எனத் தொடங்கியிருக்கும் இந்த மொகலாயக் கொடுமை மெல்ல மெல்ல இந்துக்களை ஒன்றுமில்லாதவராக்கி கடைசியில் இஸ்லாமுக்குத் திருப்புவதில்தான் முடியும், இந்தக் கொடுமையினைச் சகிக்க முடியாது.
நம்மக்களிடமே ஜிசியா வரிவாங்கி இஸ்லாமியரை மெக்காவுக்கு அனுப்புகின்றான் ஔரங்கசீப், அப்படியே நமது மக்களின் பணமே நம்மேலும் இப்போது ராஜபுத்திரர்மேலும் யுத்தமாகப் பிரயோகிக்கப்படுகின்றது.
நமக்குத் தேவை பணம். அது நமக்காக அல்ல, ராஜபுத்திரர்க்கு நாம் உதவியதில் நிறைய இழந்திருக்கின்றோம். கடந்த ஒருவருடமாக பெரிய போரை நாம் செய்யவில்லை, புதிய வருமானங்களை உருவாக்கவுமில்லை, நிறைய இழந்திருக்கின்றோம், அதைவிட நம் இந்துக்களின் வரி அவர்களால் உறிஞ்சப்படுகின்றது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு பர்ஹான்பூரை நாம் கொள்ளையிடுவது. இது நமக்கு முக்கியம் என்பதைவிட இங்கு அடித்தால் ராஜபுத்திரருக்கான நிதிமூலம் முடக்கப்படும், நமக்கும் லாபமாகும். முக்கியமாக இது கொள்ளை அல்ல, ஜிசியா வரி இன்னும் பல வரிகளில் நம்மை முடக்கி நம் பணத்தைக் கொள்ளை அடித்திருக்கும் மொகலாயரிடமிருந்து நம் பணத்தை மீட்கும் முயற்சி.
இது நம் பணம், நம் மக்களின் பணம் அது நமக்கும் நம் சகோதரர்களுக்கும் எதிராக செல்வதை தடுக்க எதிரியின் பலத்தை குறைக்க இதை நாம் செய்தாக வேண்டும் என்றான்”
அங்கே பெரிய அமைதி நிலவியது. நிச்சயம் அருமையான திட்டம் என்றாலும் சவால்கள் அதிகம், காரணம் அது ராய்காட்டில் இருந்து சுமார் 330 கல் தொலைவில் உள்ள இடம் , தவிரவும் பெரும் காவல் அதிகம்.
அதன் முக்கியத்துவம் கருதி ஒளரங்கசீப் தன் தலைமை தளபதியும் கொடியவனுமான கான் ஜஹான் எனும் பட்டம் வாங்கிய பகதூர் கான் என்பவனிடம் ஒப்படைத்திருந்தான், அவனே ஔரங்கசீப் படையில் தலையாயவன், எந்தப் போரிலும் தோற்காதவன் சிவாஜியிடம் தவிர.
வீரசிவாஜியிடம் ஒளரங்கசீப்பின் எல்லாத் தளபதிகளும் தோற்றிருந்தனர், 27 முக்கிய தளபதிகளை அவன் தோற்கடித்து விரட்டியிருந்தான், ஒளரங்கசீப்பும் சிவாஜியும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை என்பதால் ஒளரங்கசீப் மட்டும் தப்பியிருந்தான்
இப்படியான கான் ஜஹான் காவலில் பர்கான்பூர் இருந்தது பெரிய சவால். அவனின் பெரிய சேனை கடும் பயிற்சி பெற்ற சேனை தாண்டிக் கொள்ளையிடுவது எளிதல்ல. அதைத் தாண்டி இவ்வளவு பெரிய தொலைவுக்குப் படைநடத்திச் சென்று கொள்ளையிட்டு திரும்புவதும் சாதாரணம் அல்ல, எளிதில் வெளியே தெரிந்துவிடும்.
இப்படிச் பல சவால்கள் இருந்தன, எனினும் மன்னனின் வாக்கு என்பதால் இதை இனி செயல்படுத்த வேண்டும், அதில் உள்ள சவால்களை ஹம்பிராவ் சொன்னான்.
“கஜினி, கோரி தொடங்கி மொகலாயர் வரை நம்மிடமே கொள்ளையிட்டுச் சென்றனர், முதன் முதலில் கொள்ளை என்றால் என்ன என்று அவர்களுக்குத் திருப்பி அடித்துக் காட்டியவர் நம் மன்னர் சிவாஜி, அதுவும் அது கொள்ளை அல்ல, நம் நாட்டு செல்வத்தை நாமே எடுத்துக் கொண்ட உரிமை.
சூரத்தில் அவர் இருமுறை தாக்கிக் கொள்ளையிட்டபோது மொகலாயமே அதிர்ந்துபோனது, அதிலிருந்து அவர்களின் முக்கிய இடங்களில் கடும் காவலும் கண்காணிப்பிலும் வைத்திருக்கின்றார்கள்.
தவிரவும் கான் ஜஹான் பெரும் படையோடு வருவான், அவனை எதிர்க்குமளவு நாம் பெரிய படையுடன் செல்லமுடியாது. அந்தப் பர்கான்பூர் கோட்டையும் காவல் மிக்கது, ஒருவேளை அவர்கள் அடைத்துக் கொண்டால் நீண்ட நாள் முற்றுகையும் செய்யமுடியாது.
இது அறுவை சிகிச்சை, அடிதடி ஓரிரு நாளில் முடிக்கவேண்டிய விஷயம். இதனால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு மன்னர் உரைத்தால் நானும் தயாராவேன், சூரத்தில் கொள்ளையிட்ட அனுபவம் நமக்கு உண்டு” என்றான்.
வியூகத்தை சாம்பாஜி சொன்னான், “நாம் வழக்கம்போல் சிறு சிறு அணியாக பிரிந்து மாறுவேடத்தில் செல்ல வேண்டும், பல அணிகள் காசி திருப்பயணம், மதுரா திருப்பயணம் போல் கிளம்பட்டும், வியாபாரிகள் வேடத்தில் கிளம்பட்டும்.
நாமும் சிலரும் சூரத்தை நோக்கிச் செல்வது போல் செல்வோம். நிச்சயம் நம்மை உளவாளிகள் தொடரலாம், அரண்மனையில் விஷம் வைக்கும் அளவு நம்மை நோட்டமிடுகின்றார்கள் என்றால் அங்கும் பின் தொடர்வார்கள், நாம் சூரத் செல்வது போல் சென்று சட்டென இப்பக்கம் திரும்பிவிடலாம், அவர்களைக் குழப்பிவிடலாம்.
எல்லோரும் மின்னல் வேகத்தில் ஒன்றாகித் தாக்குதலை தொடங்கலாம், அங்கே எங்கெங்கு முக்கிய இடம் உண்டு, எங்கே நிதிக் குவியல் உண்டு என்பதெல்லாம் நம் உளவுப்படை தந்திருக்கின்றது” என்றான் சாம்பாஜி.
ஆம் எனத் தலையாட்டினார் பகர்ஜி நாயக்.
“அப்படியானால் சில மாதங்களில் தொடங்கலாம், நான் தயாராகின்றேன் மன்னர் உரிய நேரத்தை சொல்லலாம்” என்றான் ஹம்பிராவ்.
“இன்னும் 7 நாட்களில்” என்றான் சாம்பாஜி.
“ஏழு நாட்களிலா? இது சாத்தியமா?” எனக் குழம்பி அவனை நோக்கினான் ஹம்பிராவ், அப்போது கவி கலாஷ் சொன்னான், “சேனாதிபதி அவர்களே, இதுதான் அவர்களை அடிக்க சரியான நேரம், அந்த கான் ஜஹான் சுமார் எட்டாயிரம் வீரர்களுடன் தன் குடும்ப திருமணத்துக்காக ஓளரங்கபாத் பக்கம் வருகின்றான், அவனுக்கும் கோல்கொண்டா குதுப்ஷாகி குடும்பத்தில் ஒருவர்க்கும் திருமண சம்பந்தம் நடக்கின்றது.
இது எதிர்காலத்தில் கொல்கொண்டாவில் மொகலாயம் தலையிடும் முயற்சி என்றாலும் ஆளும் இஸ்லாமியருக்குள் இது வழமை.
இந்தத் திருமணத்தால் கான் ஜகான் அங்கிருந்து அகன்றுவிடுவான், அப்போது அதன் காவல் கார்கர் கான் என்பவனிடமே இருக்கும். அதுவும் சிறிய சேனையோடுதான் இருக்கும், இதைவிட அருமையான நேரம் கிடைக்காது” என்றான்.
ஹம்பிராவ் யோசித்தான், “நம் படைகள் எப்போதும் எதற்கும் தயார், ஆனால் கான் ஜஹான் ஒளரங்கபாத் பக்கம் வந்தால் நாம் கொள்ளையிடும் செய்தி கேட்டு போரைத் தொடங்கினால் என்னாகும்? திலியர்கான் வேறு இப்பக்கம் உண்டே” என்றான்.
“நாம் கொள்ளையிட்டு திரும்புகின்றோம் என்றால் நம்மை நோக்கித்தான் வருவார்களே தவிர இங்கே அவர்கள் தாக்கமாட்டார்கள், நாமும் கொள்ளைப் பணமுமே அவர்களுக்கு முக்கியம் அதனால் நம்மை நோக்கி வருவார்கள், நாம் அப்போதுதான் அவர்கள் கவனத்தினைத் திருப்பிவிட்டு இங்குத் திரும்பவேண்டும், அதுதான் முக்கிய கட்டம்” என்றான்.
“நாளையே இதுபற்றி உரிய திட்டத்தோடு வருகின்றேன்” எனச் சென்ற ஹம்பிராவ் ஆலோசனையில் அமர்ந்தான், உள்ளே அவனுக்குள் வியப்பே வந்தது.
23 வயதில் எவ்வளவு தைரியம் எவ்வளவு தந்திரமான ஆனால் ஆபத்தான திட்டம்? இவன் நிச்சயம் சிவாஜிக்குச் சரியான வாரிசு என்பதில் சந்தேகமே இல்லை, நாமெல்லாம் இவன் ஆட்சி நிலைக்குமா? எப்படி முடிசூடப்போகின்றான் என யோசித்துக் கொண்டிருந்தால் அவன் எவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கின்றான்?
நிச்சயமாய் இவன் இந்த ராய்காட் கோட்டையினை விட்டு இப்போது நீங்குவது சரியில்லைதான். வேறு எந்த மன்னனும் இந்தச் சவாலை எடுக்கமாட்டான், சோயுர்பாய் எப்போது இவனைக் கவிழ்ப்பது எனத் துடித்துக் கொண்டிருக்கின்றாள். அதுவும் பதவி ஏற்றுச் சில நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் கோட்டையினை விட்டு நகர்வது மணிமுடிக்கு ஆபத்து, ஆனாலும் எவ்வளவு தைரியமாய்த் திட்டமிடுகின்றான்? எப்படியான மனம் இவனுக்கு? ஜீஜாபாய் இவனை அவ்வளவு தைரியமாக வளர்த்திருக்கின்றாள்.
இது ஒரே நாளில் வந்த திட்டமாய் இராது. மெல்ல மெல்ல மனதுக்குள்ளே திட்டமிட்டு யாரிடமும் வெளிக்காட்டாமல் உரிய நேரமும் தேர்ந்துகொண்ட பெரிய ராஜதந்திரம். நிச்சயம் இவன் இந்துராஜ்ஜியத்தின் சரியான மன்னன் எனப் பெருமையும் ஆச்சரியமும் கொண்டான்.
மறுநாள் வரை காத்திருக்க முடியாதவன் அன்றிரவே சாம்பாஜியினைச் சந்தித்து வியூகங்களை விளக்கினான், சாம்பாஜி அதில் சில திருத்தங்களைச் சொன்னான், கலாஷின் ஆலோசனையும் அற்புதமாக இருந்தது.
1681 ஜனவரி 20 ஆம் தேதி எல்லாம் தயாரானது.
கோட்டையில் தனக்கு விசுவாசமானவரும் மூத்தவருமான நட்டாஜி பால்கரிடம் அதிகாரத்தைக் கொடுத்தான் சாம்பாஜி, தான் இல்லாக் காலங்களில் யாரேனும் அரியணையினைக் கைப்பற்ற முனைந்தால் தயவு தாட்சண்யமின்றி வெட்டித் தள்ள அதிகாரம் கொடுத்திருந்தான்.
இது மிக மிக ரகசியமான நடவடிக்கை என்பதால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மன்னர் அடிக்கடி பல கோட்டைகளுக்குச் செல்வது வழமை என்பதால் தங்கள் கோட்டைக்குச் செல்வதாக நினைத்துக் கொண்டார்கள், அவனும் அப்படித்தான் வடக்கே இருக்கும் பலமான கோட்டையான ஷெல்கர் கோட்டைக்குச் சோதனைக்குச் செல்வது போல் சென்றான்.
“பகுலா வார் லக் மொலிச்சா” என ஒரு ஸ்லோகம் உண்டு, அதாவது “முதல் அடி பத்துலட்சம் அடிக்கு சமம்” என்பது, சிம்மம் எப்போதுமே முதல் அடியினைத்தான் ஓங்கி அடிக்கும்.
அப்படி முதல் அடியினை ஓங்கி அடிக்க ஷெல்கரில் இருந்தே கிளம்பினான் சாம்பாஜி, அவன் அணிகள் பல வகை சிறிய அணிகளாக பிரிக்கப்பட்டன, பக்தர்கள் வேடம், வியாபாரிகள் வேடம், வியாபாரிகளுக்கான காவலர்கள் வேடம், இன்னும் குதிரை வியாபாரிகள் எனப் பல வகையாகப் பிரிந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்றார்கள். ஆனால், வண்டிக்குள் வைக்கோலுக்குள் இன்னும் பல மறைவிடங்களில் ஆயுதங்கள் இருந்தன.
ஒரு பிரிவு பர்கான்பூர் நோக்கிச் சென்றது, அதில் ஹம்பிராவ் மாறுவேடத்தில் இருந்தான், இன்னொரு குழுவில் சூரத் நோக்கி சாம்பாஜி இருந்தான், இன்னொரு குழுவில் கவி கலாஷ் இருந்தான், எல்லோரும் சேர்ந்து செல்லாமல் தனித் தனியே சென்றனர்.
மொகலாயர் முதலில் இதுபற்றி அறியவில்லை அல்லது அவர்கள் விழிப்பான நிலையில் இல்லை. அவர்கள் நோக்கமெல்லாம் ராஜபுத்திரருடனான போரில் இருந்தது, சம்பாஜி முடிசூடிய நேரம் என்பதால் அங்கு விழாக்களும் கொண்டாட்டமும் உண்டு என வெறுப்புடன் நோக்கிவிட்டு வேறு பணிகளில் இருந்தார்கள், யாரும் எதிர்பார்க்கவில்லை.
எதிர்பாரா நேரம் அடிப்பது என்பது ராஜதந்திரம் அதைச் சரியாகச் செய்தான் சாம்பாஜி.
அதே நேரம் மொகலாய உளவாளிகளுக்குத் தெரியும்படி ஒரு விஷயம் சாம்பாஜி தரப்பால் கசியவிடப்பட்டது. அது ராஜபுத்திரருடன் இணைந்த சாம்பாஜி படை சூரத்தை தாக்கப் போகின்றது என்பது, இப்படி மிகச் சிறந்த தந்திரத்தை முன்னெடுத்தான் சாம்பாஜி.
இதனால் மொகலாயத் தரப்பு குழம்பியது. காரணம், சிவாஜி இருமுறை கொள்ளையிட்ட இடம் சூரத் என்பதால் விஷயம் உண்மையாக இருக்கலாம் என நினைத்தவர்கள் காவலை பலப்டுத்தினார்கள், இதனால் பர்கான்பூரில் இருந்து சில ஆயிரம் வீரர்கள் சூரத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
இதனால் கார்க்கர் கான் கூட இருந்த வீரர்கள் எண்ணிகை இரண்டாயிரத்துக்குக் குறைவாக இருந்தது, அவ்வளவு தொலைவுக்கு சாம்பாஜி வருவான் என அவர்கள் கற்பனை கூடச் செய்யவில்லை.
இப்படிச் சூரத்தை நோக்கிச் சென்ற சாம்பாஜி சட்டென பின்வாங்கி பர்கான்பூர்க்குத் திரும்பினான், இதனை மொகலாயத் தரப்பு எதிர்பார்க்கவில்லை, அவன் திரும்பிச் சென்றதாக கருதினார்கள், பர்கான்பூர் நோக்கிச் சென்ற குழு மாறுவேடத்தில் சிறு சிறு குழுக்களாக இருந்ததால் எளிதில் சந்தேகம் கொள்ள வாய்ப்பில்லை.
1681 ஜனவரி கடைசியில் அவர்கள் பர்கான்பூரின் எல்லையில் ஆற்றின் தென் பக்கம் நின்றனர், இனி வடப்பக்கம் செல்ல வேண்டும்.
அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள், சுமார் ஐந்தாயிரம் வீர்கள் அதுவும் மிகச் சிறந்த குதிரை வீரர்கள் குவிந்தார்கள், முன்பே பகர்ஜி நாயக் சரியான ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.
அதன்படி இரவில் ஊடுருவி இரு பக்கமும் பெரிய தூண்களில் படகுகளைக் கட்டி நதியில் பாலம் போல் செய்தார்கள், இந்தப் பயிற்சி அவர்களுக்கு உண்டு. அந்தப் பாலத்தின் வழி வேகமாக அப்பக்கம் வந்தார்கள், வீரர்கள் பலர் இப்பக்கமே நின்றும் கொண்டார்கள், முழு வீரர்களும் உள்ளே செல்லவில்லை. சென்ற எண்ணிக்கை வெகு குறைவு.
காரணம், இது படையெடுப்பு அன்று. அடித்துவிட்டு பொருளுடன் தப்பும் முயற்சி என்பதால் மிகச் சிறந்த வீரர்களுடன் சிறிய குழுவாக சென்றார்கள்,அவர்களில் சாம்பாஜியே தலைவனாக இருந்தான்.
மின்னல் வேகத்தில் தாக்குதல் நடந்தன. ஆயிரம் சிறந்த வீரர்களுடன் குதிரைகளில் புகுந்தான் சாம்பாஜி, முதல் இலக்காக காக்கர் கான் வளைக்கப்பட்டான், அவன் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டதால் மொகலாயச் சேனை கதிகலங்கிற்று, யாருக்கும் எதுவும் செய்ய முடியவில்லை.
கோட்டைவாசலில் காக்கர் கானை சிறைவைத்தபடி 200 வீரர்கள் நிற்க மீதி வீரர்களுடன் உள்ளே சென்ற சாம்பாஜி கடும் வேகத்தில் காரியத்தைத் தொடங்கினான், அங்குப் பகதூர் கானுடன் சென்ற சேனை சூரத்துக்குச் சென்ற சேனை தவிர கொஞ்ச சேனையே எஞ்சியிருந்தது. அவர்களும் தயாரிப்பின்றி அஜாக்கிரதையாக இருந்தார்கள்.
அப்படி ஒரு மிரட்டலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால் போரில் இறங்கிப்பார்த்தார்கள். ஆனால், சாம்பாஜிபடையின் வெகு துல்லியமான தாக்குதலிலே அவர்கள் அடங்கிப்போனார்கள், கான் ஜஹான் இல்லாதது சாம்பாஜிக்குப் பெரிய வாய்ப்பாயிற்று.
வாள்முனையில் அங்கிருந்த மொகலாய கஜானா, தங்கம் என எல்லாமும் அள்ளத் தொடங்கினார்கள், மின்னல் வேகத்தில் அதை மூட்டையாக கட்டி ஒரு குழு ஆற்றுக்கு அப்பக்கம் கடத்திக் கொண்டே இருந்தது. அவை அப்படியே வண்டிகளில் ஏற்றபட்டுக கொண்டே இருந்தன.
மொகலாய கஜானா தாண்டிச் சுமார் 16 இடங்களில் அவர்களின் நிதி இருந்தது, வசூல் மையம் இருந்தது. அதனையெல்லாம் அள்ளினான் சாம்பாஜி. அப்படியே அங்கிருந்த மொகலாய வணிகர்களின் நிதி இன்னும் மெக்கா செல்லும் பயணிகளுக்கான பெரிய அரசநிதி என எல்லாமும் வாரிச் சுருட்டினான்.
முக்கியமாக ஜிசியா வரிப்பணம் அங்கு நிறைய இருந்தது. அள்ளிக் கொண்டான்.
மூன்று நாட்கள் அடைமழை போல் அங்குப் பொழிந்து மலையினை அள்ளிவரும் நதிபோல் அள்ளி எடுத்தான், அங்கே எந்த எதிர்ப்புமில்லை.
மூன்று நாட்களில் பெரும் செல்வம், தங்கம், நவமணிகள், உயர்தர ஆடைகள் (அக்காலத்தில் மெல்லிய அங்கிகளுக்கு தங்க ஜரிகை அங்கிகளுக்கு பெரும் மதிப்பு இருந்தது), மொகலாயக் குதிரைகள், வெடிமருந்துகள் என எல்லாமும் அள்ளி எடுத்துக் கொண்டான்.
அப்படியே மூன்றாம் நாள் மொகலாய கஜானாவில் “இது எங்கள் இந்துக்களின் ஜிசியா பணம், இந்த எங்கள் பணம் நாங்கள் எடுத்துக் கொண்டோம்” என எழுதி வைத்தான், காக்கர் கான் உள்ளிட்டோரைப் பெரிய அறையில் போட்டு பூட்டியவன் அங்கிருந்து திரும்பினான்.
அதே நேரம் மொகலாயர்கள் தங்கள் வழமையான தகவல் தொடர்புப் படி புறாக்களையும் பருந்துகளையும் களத்தில் இறக்கினார்கள்.
மொகலாயரிடம் இப்படிப்பட்ட தகவல் தொடர்பும் இருந்தன, பழக்கிய புறாக்களும் சில பருந்துகளும் இதற்குப் பயன்பட்டன. அதுவும் பருந்துகளை அராபிய வழியில் பழக்கி வைத்திருந்தார்கள், இதனால் விஷயம் கான் ஜஹான் எனும் பகதூர் ஷாவுக்குத் தெரிந்தது, அப்படியே அப்போது ஆஜ்மீரில் இருந்த ஔரங்கசீப்பின் மகன் முகமது அக்பருக்கும் தெரிந்தது.
பெரிய நிதிமூலம் களவாடப்பட்டதில் அதிர்ந்துபோனான் அக்பர். ஆனால், ஔரங்கபாத் பக்கம் இருந்த பகதூர் கான் தீவிரமாகத் தயாரானான், நிச்சயம் கொள்ளையிட்ட சாம்பாஜி வடக்கே செல்லமாட்டான் நிச்சயம் ராய்காட் நோக்கியே வருவான், அவனை இடையில் மறித்து மொத்தமாக அவனை முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டான். இதனால் அவன் பர்கான்பூரில் இருந்து எப்படித் திரும்பி வரமுடியும் என ஆராய்ந்தான்.
பர்கான்பூரில் இருந்து ராய்காட் திரும்ப எளிய வழி படகேறி கடலுக்கு வந்து கப்பலேறி இந்துராஜ்ஜிய கடலோர கோட்டையினை அடைவது, ஆனால் அது இங்கு வாய்ப்பில்லை. இத்தனை ஆயிரம் வீரர்களுடன் அதுவும் கொள்ளை பொருட்களுடன் தப்புவது கடினம். முடியா விஷயம்.
கொள்ளை அடிப்பது எளிது அசந்த நேரம் அடித்துவிடலாம் ஆனால் அதனோடு திரும்ப வருதல் என்பது பெரிய சவால் என்பதால் சாம்பாஜி திரும்பும் வழியினை ஆராய்ந்தான்.
இந்தக் கடல்பாதை தவிர இரு வழிதான் உண்டு. ஒன்று தாரங்கன் சோப்டா வழியான பாதை, இன்னொன்று எரோந்தல் வழியாக வரும் பாதை. இதைத் தவிர வேறு பாதை அப்போது எளிதாக இல்லை அல்லது பயணத்துக்கு மாட்டு வண்டி சகிதம் விலங்குகள் சகிதம் வர ஏதுவானதே இல்லை.
சாம்பாஜி ஒரு மன்னன் அவன் காட்டுக் கொள்ளையன் அல்ல, இதனால் கொள்ளையிட்ட பொருளுடன் அவன் எங்கும் பதுங்க முடியாது, திசைமாறி செல்ல முடியாது, வேறு நாட்டுக்கும் தப்பமுடியாது, கானகத்தில் மறையவும் முடியாது.
அவன் கொள்ளைப் பொருளுடன் நிச்சயம் ராய்காட்டுக்கு வரவேண்டும் என்பதால் அவன் வரும் வழி எல்லாம் ஆராய்ந்தவன் மூட்டை மூட்டையான பொருட்களுடன் அவன் தப்பிவர இந்த இரு வழிகளுமேதான் உண்டு என உறுதிப்படுத்தினான்.
இதில் தாரங்கன் சோப்டா வழி குறுகிய பாதை கொண்டது, எரோந்தல் வழியாக வரும் வழி கொஞ்சம் நீளமானது.
தன் நீண்ட அனுபவத்தால் கணக்கிட்டான் பகதூர் கான், நிச்சயம் சாம்பாஜி குறைவான தூரத்தைத்தான் தேர்ந்தெடுப்பான். காரணம் அவனுக்கு விரைவாக ராய்காட்டுக்கு வரும் அவசியம் உண்டு என்பதால் அவன் அந்தத் தாரங்கன் சோப்டா பாதைக்குப் படைகளை அனுப்பினான்.
தப்தி நதிகரையில் இருந்து கிளம்பிய சாம்பாஜி வரும் வழியில் தன் சேனைகளுடன் ஆலோசனை செய்தான், அவன் மிகக் கூர்மதி உடையவனாக இருந்ததால் தன் குழுவினருடன் அதாவது ஹம்பிராவ் மோதி, கலாஷ் உடன் மிகுந்த ஆலோசனை நடத்தினான்.
“மாமா, நமக்கு அதிக நேரமில்லை நிச்சயம் மொகலாயர் இந்நேரம் நம்மைத் தேடி வருவர். நாம் அவர்களைத் திசை திருப்ப வேண்டும், இந்நேரம் நாம் மொகலாயரைப் போலவே யோசிக்க வேண்டும்” என்றான்.
கலாஷ் சொன்னான், “நாம் செல்ஹர் கோட்டைக்குச் செல்வோம் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் கோட்டை வாசலில் நிற்கமாட்டார்கள். காரணம், நமது சேனை நொறுக்கிவிடும், ஆனால் நாம் கோட்டைக்குச் செல்லும் வழியில் நம்மை எதிர்கொள்வார்கள், அது என்ன வழியாக இருக்கலாம்?” எனக் கேட்டான்.
சாம்பாஜி தன் கூரிய அறிவில் சொன்னான், “நிச்சயம் நாம் விரைந்து வரும் வழியினில்தான் வருவார்கள், நாம் வேகமாக செல்லும் வழி எது எனக் கணக்கிட்டு வருவார்கள். நான் பகதூர்கானாக இருந்தால் அதைத்தான் செய்வேன், அதனால் நாம் அந்த வழியினைத் தவிர்த்து வேறு பாதைக்குச் செல்லவேண்டும்.
ஆனால் நாம் அங்கு இல்லை என்றால் நிச்சயம் அடுத்த பாதைக்கும் வருவார்கள், இதனால் அவர்களைத் திசை திருப்பி எங்காவது வீணாக சுற்றவிட வேண்டும், அவர்கள் அங்கே சிக்கிக் கிடக்கும் போது ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்து நம்மைத் தேடும்போது நாம் அவர்கள் தொடமுடியாத தொலைவுக்குச் சென்றிருக்க வேண்டும்” என்றான்.
ஹம்பிராவ் யோசித்து தலையாட்டியபடி சொன்னான், “அப்படியானால் நம் சேனைகளில் ஒரு பகுதியினை அப்படி அவர்களைத் திசைதிருப்ப தாரங்கன் சோப்டா வழியாக அனுப்ப வேண்டும், அதுவும் அந்த அணியில்தான் கொள்ளைப் பொருள் இருப்பது போல் காவலெல்லாம் செய்து பெரிய பாவனை காட்டவேண்டும், அப்போது மொகலாயரின் முழுக் கவனமும் அங்கே வந்து பெரும் போர் செய்வார்கள், அங்கே சிக்கிக் கொள்வார்கள், நாம் அந்த அவகாசத்தில் இன்னொரு பாதை வழியாக தப்பிவிடலாம்” என்றான்.
மிகச் சரியான தந்திரம் இது. ஒரு குறுகிய தூர வழி. இன்னொன்று கொஞ்சம் தூரம் அதிகமான வழி, நிச்சயம் தூரம் குறைந்த வழியில்தான் எதிரிகள் வருவார்கள், அங்கு அவர்களுடன் போர் எனச் செய்து நேரத்தை கடத்தி அவர்களை மொத்தமாக அங்குக் குவித்துவிட்டால் இன்னொரு வழி எதிரி இல்லா வழியாகிவிடும். அங்கே காலதாமதமானாலும் ஆபத்தின்றி சென்றுவிடலாம்.
இப்படித் திட்டமிட்டார்களே தவிர வெற்றித் தருவது சிவனே எனச் சொல்லியும் கொண்டார்கள், காரணம் மொகலாயர்கள் கணிக்க முடியாதவர்கள் பெரிய பெரிய கில்லாடிகள்.
மொகலாயம் அமைதியாக இருந்திருந்தால் இந்தச் சவாலை சாம்பாஜி எடுத்திருக்கமாட்டான். அவர்கள் முழுக்க ராஜபுத்திரரிடம் போரிட்ட நேரம் முழுப்பலமும் அங்கே பிரயோகிக்கப்படும் நேரம் அதுவும் கான் ஜஹான் தன் சொந்த விஷயமாக பர்கான்பூரை விட்டு சென்றிருந்த இடைவெளியில் காக்கர்கானுக்கு சூரத்துக்குப் போக்குகாட்டிவிட்டு மிகத் துல்லியமாக இதை நிகழ்த்தினான்.
இனி தப்பிச் செல்லும்போது மொகலாயர் வெறிபிடித்த வேங்கையாக வருவார்கள் என்பதை அவன் அறிவான், இதனால் எல்லோருமே பரபரப்பாக சவால் எடுத்தார்கள்.
மொகலாயருக்கு எதிரான இந்துராஜ்ஜிய போராட்டத்தில் சவால்கள் எப்போதும் உண்டு, சவால் எடுக்காமல் இந்து ராஜ்ஜியம் நிலைக்காது என்பதால் சவாலைக் கடுமையாக முன்னெடுத்தார்கள்.
திட்டமிட்டபடி ஒரு படைப்பிரிவினை அவசரமாக உருவாக்கினான் ஹம்பிராவ், அதன்படி போலி கொள்ளைப் பொருட்கள் உருவாயின. பெரிய பெரிய பொதிகளில் கல்லும்மண்ணும் வைக்கோலும் கொண்டு கட்டப்பட்ட பொதிகள் வண்டியில் ஏற்றப்பட்டன, அதைப் பெரிய படை காவல் காத்துச் செல்வது போல் அணி உருவாக்கப்பட்டது.
இதன் தலைவனாக சிவாஜி படையில் இருந்த இஸ்லாமியன் முல்லா குவாசி ஹைதர் நியமிக்காப்ட்டான், ஆபத்தான காரியம் என்பதால் அவனை நியமித்தல் இஸ்லாமியரான ஆப்கானியருடன் சில வகையான புரிந்துணர்வு அடைப்படையில் போர் நீளும் அல்லது பேச்சு நடக்கும். எப்படியோ மொகலாயர் நாட்களை இழுப்பார்கள் அதுபோதும் நமக்கு என்ற வியூகத்தில் செய்தான்.
இன்னொரு அணிக்கு சாம்பாஜி தலைவனானான். அதே நேரம் அப்பக்கம் வியாபாரிகளின் பஞ்சு பொதி வண்டி தானிய வண்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளைப் பொருள் பதுக்கப்பட்டு இந்து ராஜ்ஜியத்துக்குள் அனுப்பப்பட்டது. இதனைப் பகர்ஜி நாயக்கின் ஆட்கள் பார்த்துக் கொண்டார்கள், எஞ்சிய பொருட்களுடன் சாம்பாஜி தரப்பு எராந்தல் வழியாகச் செல்லத் தயாரானது.
சாம்பாஜி கணித்தப்படியே பகதூர்கான் பெரிய படையுடன் சோப்டா பக்கம் அந்த முதலாவது அணியினை எதிர்கொண்டான். சிக்கிவிட்டான் சாம்பாஜி எனப் பெரிய ஆரவாரம் செய்தவன் சாம்பாஜியினை உயிரோடு பிடித்துவருபவர்க்குப் பெரிய சன்மானம் ஔரங்கசீப்பால் வழங்கப்படும் என அறிவித்தான், இனி சாம்பாஜி தப்பமுடியாது எனக் கொக்கரித்தான்.
சில தினங்களுக்கு முன் முடிசூடிய சாம்பாஜி இவ்வளவு எளிதில் தன்னால் பிடிக்கப்படுவான் என்பதை நம்பமுடியா அவன் பெரும் மகிழ்ச்சியில் அதே நேரம் சாம்பாஜியினை விடவே கூடாது என விரைந்தான். இவனுக்குத் துணையாக திலியார்கான் வந்தான். இன்னும் சில தளபதிகள் வந்தார்கள்.
இங்கேதான் அதுவரை இறக்கப்படாத மொகலாயரின் தனிப்படை பிரிவான, மொகலாய சேனை தளபதிக்கும் அடங்காமல் ஔரங்கசீப்புக்குக் கீழ் மட்டும் போரிடும் மிகக் கடும் பயிற்சி பெற்ற ஆசாதி படைப்பிரிவு களமிறக்கப்பட்டது.
இவர்கள் வாட்போர், வில்போர், ஈட்டி எறிதல் என எல்லாவற்றிலும் மிகப் பெரிய தேர்ச்சிப்பெற்றவர்கள், வைத்த குறி தப்பாத அளவு கடுமையான வீரர்கள். நாள் முழுக்க சொட்டு நீர் இல்லாமல் கடும் யுத்தம் புரியும் படி பழக்கப்பட்டவர்கள், மிக உயர்ந்த ஜாதி குதிரையில் போரிடுபவர்கள், மகா ஆபத்தானவர்கள்.
அராபியா, துருக்கி, உஸ்பெக், மங்கோலியா என எங்கெல்லாமோ இருந்து வந்தவர்களைத் தேர்ந்தெடுத்துக் கடும் பயிற்சி கொடுத்து அதிரடி நடவடிக்கைக்காக மொகலாயர் உருவாக்கியப் படைகள் இவர்கள் , ஒவ்வொரு வீரனும் 200 சிப்பாய்க்குச் சமம்.
இப்படியான மகா முக்கிய படையுடன் சென்றான் கான் ஜஹான். ஆனால், அவர்களைக் களமிறக்கவில்லை. அவர்கள் சில சிறப்பு நடவடிக்கானவர்கள் என்பதால் முதலில் தயார் நிலையில் மட்டும் நிறுத்தப்பட்டார்கள்.
தாரங்கன் சோப்டா பக்கம் அந்த இந்துராஜ்ஜிய தளபதி குவாசி முல்லாவுக்கும் பகதூர்கான் படைக்கும் மோதல் நிகழ்ந்தது. இந்துராஜ்ஜியப் படை பெரும் சாகசம் காட்டியது, இதனால் சாம்பாஜி இங்கேதான் இருக்கின்றான், இந்த யுத்தம் எளிதில் முடியாது என மொகலாயப்படை அங்கே முழுக் கவனமும் செலுத்திற்று.
தளபதி ஒரு இஸ்லாமியன் என்றதும் பகதூர்கான் பேசிபார்த்தான், “ஏ குவாசி, நீ ஒரு இஸ்லாமியன், இவர்களோ காபீர்கள், நீ இந்தப் பாவிகளுடன் நிற்பது மதவிரோதம், இன்னும் இனதுரோகம், நீ எங்களோடு வா, பொருட்களை ஒப்படைத்துவிடு, ஔரங்சீப் படையில் பெரிய வேலை உனக்கு வரும், அப்படி நீ செய்தால் நான் உன்னைக் கொல்லமாட்டேன், மாறாக வாழவைப்பேன்.
ஆனால், நீ அதைச் செய்யாமல் மோதத் துணிந்தால் இங்கே ஒரு மாடு கூட மிஞ்சாது. எல்லாவற்றையும் அழித்துப்போட்டு பொருட்களை எடுத்துக்கொள்வேன், வீணாக சாகப் போகின்றாயா? இல்லை எங்களோடு சேர்ந்து வாழப்போகின்றாயா”என மிரட்டினான்.
குவாசி தந்திரமான காரியம் செய்தான், அவனுக்கு அப்போதைய அவசியம் நேரத்தைக் கடத்துவது என்பதால் முதலிலே யுத்தம் துவங்கவில்லை. மொகலாயரை அங்கே இருக்க வைக்கும் விதமாக பேச்சுவார்த்தை என முதலில் காலத்தை இழுத்தான்.
“பகதூர் கான், நீ சொல்வது சரி. நான் கூலிக்கே சண்டையிடுகின்றேன், ஆனால் என்ன உத்திரவாதத்தில் நான் உன்னிடம் வரமுடியும், நான் உன் கையில் கிடைத்தபின் நீ என்னைக் கொல்லலாம், சித்திரவதை செய்யலாம், எதுவும் நடக்கலாம். ஆனால், பெரிய உத்திரவாதமில்லாமல் நான் எப்படி வரமுடியும்?” என இழுத்தான்.
பகதூர் கான் சொன்னான், “முகமது அக்பரிடம் நான் உன்னை அழைத்துச் செல்வேன், என்னை நம்பு. நான் உனக்குப் பெரிய பதவியும் சலுகை யாவும் பெற்றுத்தருவேன்” எனச் சத்தியம் செய்தான்.
இன்னும் பேச்சுவார்த்தையினை இழுக்கும் விதமாக சொன்னான் குவாசி, “சரி, நான் வருகின்றேன். ஆனால் இப்போது சாம்பாஜியினை விட்டுவிடலாம், நான் அவர்களுக்கு அவ்வுதவி செய்தால் எனக்கான ஆபத்தும் நீங்கும், அவர்கள் என்னைக் கொல்லத் தேடமாட்டார்கள்.
கான் ஜஹான், இங்கு லஞ்சமும் ஊழலும் பெரிய விஷயமல்ல என்பதை நீயும் அறிவாய் நானும் அறிவேன். இருவரும் கூலிக்காக யுத்தம் நடத்துபவர்கள், பணமே நமக்குப் பிரதானம். இங்கு மொகலாயர் ஆண்டால் என்ன இந்துக்கள் ஆண்டால் என்ன? பணயம் வைக்கப்படுவது நம் உயிர், இதனால் நமக்குப் போகத்தான் எல்லாமே மிச்சம்.
இதனால் நான் உனக்கொரு யோசனை சொல்கின்றேன். சாம்பாஜியினை வெறும் கையோடு தப்பவிடலாம், ஔரங்கசீப்பிடம் அவன் தப்பி சென்றுவிட்டான் எனச் சொல்லிவிடலாம். இதனால் நான் காப்பாற்றப்படுவேன், பின் கொள்ளைப் பொருளில் ஒரு பகுதியினை நானும் நீனும் பங்கிட்டுக் கொள்ளலாம், விசாரணை வந்தால் அது சாம்பாஜியால் கொண்டு செல்லப்பட்டது எனத் திசை திருப்பிவிடலாம்.
இதனால் நம் எல்லோர்க்கு வாழ்வு, என்ன சொல்கின்றாய்” என அவனைக் குழப்பினான்.
மொகலாயத் தளபதிகள் வீரர்கள்தான் சந்தேகமில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் லஞ்சம், கையூட்டு கிடைத்ததைத் தங்களாக்கு எடுத்துக் கொள்வது என எல்லாக் குணங்களும் கொண்டிருந்தார்கள், இதனால் கான் ஜஹான் பொருளுக்கு ஒப்புக்கொண்டான். ஆனால் உள்மனதில் சாம்பாஜியினைப் பிடித்துக் கொடுத்து அல்லது கொன்றுபோட்டு ஔரங்கசீப்பிடமும் பெரும் பணம் அள்ளும் திட்டம் இருந்தது. அதுதான் மொகலாயத் தளபதிகளின் குணம்.
இதனால் மெல்லக் குவாசியின் கோரிக்கைக்குப் பணிவது போல் இழுத்தான். நேரத்தை கடத்துவதே முக்கியம் எனச் செயல்பட்ட குவாசி நான் சாம்பாஜியிடம் பேசுகின்றேன், அவர் பின்னால் இருக்கின்றார் என்றபடியெல்லாம் குழப்பி அடித்தான்.
பெரிய வண்டிகளையும் பொதிகளையும் காவலர்களையும் குதிரைகளையும் கண்ட பகதூர்கான் அதுவே உண்மையான கொள்ளைப்பொருள் என நம்பி நிலைகொண்டான், அவனைப் பொறுத்தவரை கொள்ளைப் பொருள் சாம்பாஜியுடன் பிடிபட்டாயிற்று, இனி தனக்கு ஏதாவது பெற்றுக்கொண்டு முடித்துவிடலாம் என நினைத்திருந்தான்.
இதற்குள் சுற்றுப்பாதையில் பெரும் பகுதியினைச் சத்தமின்றி கடந்திருந்தான் சாம்பாஜி, பெரிய எதிர்ப்பெல்லாம் இல்லை.
இங்கே குவாசியினை முழுக்க நம்பாமலும் அதே நேரம் இரையினை ஆடவிடும் புலிபோல் வளைத்துவைத்து பார்த்துக் கொண்டிருந்தான் கான் ஜஹான்.
இப்படி மிகத் தந்திரமான நாடகத்தில் மொகலாயச் சேனைகளை அங்கே வைத்திருந்தவன் பெரும் தாமதம் ஏற்படுத்தினான். இதற்கு மேல் தாங்காது என்பதால் கடைசி முயற்சியில் இறங்கினான்.
சாம்பாஜியினை முதலில் தப்பவிடுங்கள் அப்போதுதான் பொருட்களை ஒப்படைத்து தானும் வருவேன் என்றான் குவாசி, அதெல்லாம் முடியாது, பொருட்களை ஒப்படைத்துவிட்டு நீயும் வா, பின் அவர்களைத் தப்பி செல்ல அனுமதிக்காலம் என்றான் கான்.
அப்படிச் சாம்பாஜி சம்மதிக்கமாட்டார், அவர் வெறும் கையோடுதான் செல்வார். அவரை விட்டுவிட்டபின்புதான் பேச்சு என்றான் குவாசி, அதெல்லாம் முடியாது இந்துராஜ்ஜிய மன்னர்கள் தந்திரசாலிகள் எனச் சொன்னான் கான்.
பேச்சுவார்த்தை இழுபட்டது, கடைசியில் கான் ஜஹான் சொன்னான். “குவாசி நீ ஒரு இஸ்லாமியன் என்பதால் சலுகை காட்டினேன், இனி உன்னை வீழ்த்தி சாம்பாஜியினைப் பிடித்துவிட்டு முழுப் பொருளையும் அபகரிக்க எனக்கு நேரமாகாது, என்ன சேதம் ஏற்பட்டாலும் இனி பொறுக்கமாட்டேன்” என்றான் கான் பகதூர்.
பேச்சுவார்த்தை இழுபட்டு இரவுமானது, அந்த இரவில் குவாசி படையின் ஒரு பிரிவினர் மொகலாய முற்றுகையினை உடைப்பது போல் பாவனை செய்தனர், சாம்பாஜி தப்ப முயல்கின்றான் என எல்லோரும் பரபரப்பானார்கள்.
அதே நேரம் ஒரு பிரிவு வேறு எங்கோ ஓடுவது தெரிந்தது, தீப்பந்தம் ஏந்தி ஓடுவது சாம்பாஜியாக இருக்கலாம் என்பதைக் கண்ட மொகலாயப் படை தாக்கத் தொடங்கிற்று.
பெரும் களேபரம் நடந்தது. திலியர்கானை நோக்கி நீ சாம்பாஜியினைப் பிடி, நான் கொள்ளைப் பொருட்களை மீட்கின்றேன் என்றவன் முன்னேறினான், “மன்னரைக் காப்பாற்றுங்கள், மன்னரைக் காப்பாற்றுங்கள், வடக்கே செல்லுங்கள் வடகிழக்கே செல்லுங்கள்” என்றபடி ஓடினான் குவாசி.
தான் ஏமாற்றபட்டதை அறிந்து கொதித்த பகதூர்கான் அவனைத் திலியர்கான் பார்த்துக் கொள்வான், நாம் கொள்ளைப் பொருட்களை கைப்பற்றலாம் எனச் சென்று, மூட்டைகளைப் பிரித்தான்.
உள்ளே மண்ணும் கல்லும் வைக்கோலும் இன்னும் என்னவெல்லாமோ இருந்தது, “நான் ஏமாந்தேன், நாம் முட்டாளானோம், இங்கே சாம்பாஜி இல்லை, அவன் வேறுவழியில் சுற்றுகின்றான்” என்றவன் அந்த ஆகாதி படைகளோடு இன்னொரு வழி அதாவது ஏராந்தல் வரும் வழியாக சாம்பாஜியினைத் தேடிச் சென்றான். அங்கே ஷெல்ஹர் கோட்டையினை நெருங்கிக் கொண்டிருந்தான் சாம்பாஜி, கொள்ளைப் பொருட்களெல்லாம். முன்னால் செல்ல அவன் நடுவில் இருந்தான் பின்னால் படைகள் காவலுக்கு வந்தன.
“அதோ சாம்பாஜி, பிடித்து வாருங்கள்” என ஆகாதி வீரர்களுக்குக் கட்டளை இட்ட கான் பகதூர் மின்னலென பாய்ந்தான், பெரும் யுத்தம் நடந்தது.
கலாஷூம், ஹம்பிராவும் பெரும் யுத்தம் தொடுத்தபடி முன்னால் விரைந்தார்கள். காரணம், தொட்டுவிடும் தொலைவில் செல்ஹர் கோட்டை இருந்தது. முன்னால் சென்ற வீரர்கள் அவசர உதவிக் கேட்டு கோட்டைக்குத் தூதனை அனுப்பினார்கள்.
அவர்களை விடக்கூடாது எனக் கடும் யுத்தம் செய்தான் கான்பகதூர். குறிப்பாக அவனின் ஆகாதி வீரர்களின் தாக்குதல் பயங்கரமாக இருந்தது, அவர்கள் இலக்கு சாம்பாஜியானான்.
அவனை நெருங்கவிடாதபடி ஹம்பிராவும் கலாஷும் பெரும் யுத்தம் செய்தார்கள், கான் ஜஹானின் வியூகங்களையெல்லாம் தன் அபார அனுபவத்தால் முறியடித்து முன்னேறிச் சென்றான் ஹம்பிராவ்.
மொகலாயரின் குதிரைகள் களைத்தன. அதே நேரம் கொள்ளைப் பொருட்கள் இருந்ததால் சாம்பாஜி படையால் வேகமாக நகரவும் முடியவில்லை, எருதுகள் கஷ்டப்பட்டன.
முழுப் பலமும் திரட்டிப் போராடினான் பகதூர் கான், என்ன ஆனாலும் விடமாட்டோம் என ஹம்பிராவும் முழுப் பலம் காட்டினான், அதற்குள் ஷெல்ஹர் கோட்டையில் இருந்து சிவாஜி படைகள் வரத்தொடங்கின.
அப்போது கடைசி உத்தரவை கொடுத்தான் பகதூர்கான், சாம்பாஜி மேல் கடும் அம்புமழை பொழிந்தது ஆகாதிபடை.
அதாவது சாம்பாஜியினை அம்போ ஈட்டியோ தாக்காத் தொலைவில் வைத்தான் ஹம்பிராவ். ஆனால் இந்த ஆகாதிபடை வழக்கமான தொலைவினை விட அம்பினை ஈட்டியினை அதிக தூரம் பாய்ச்சும் என்பதால் ஹம்பிராவ் கணிப்பைத் தாண்டி சில அம்புகள் சாம்பாஜியினைத் தாக்கின, ஐந்து அம்புகள் அவன் மேல் பட்டன அவற்றில் ஒன்று கையில் பட்டது.
அதோடு சீறீனான் சாம்பாஜி அம்பை பிடிங்கிப் போட்டு சிம்மமாய்த் தாக்கினான், ஆகாதிபடை கடும் உக்கிரம் காட்டியது. ஆனால். சுதாரித்துக் கொண்ட சாம்பாஜியினை அவர்களால் கொல்லமுடியவில்லை.
குதிரையினைத் திருப்பியவன் ஈட்டியினைத் துல்லியமாக கான் ஜஹான் மேல் எறிந்தான். அது அவன் காலை தாக்கிற்று, சாம்பாஜியின் உக்கிரப் போரில் ஆகாதிபடையில் 10 பேர் தலை துண்டாகிக் கிடந்தார்கள். இனி தனக்கு ஆபத்து என உணர்ந்த ஜஹான் பின்வாங்கினான். ஆனால். வேறுவழியில் சாம்பாஜியினை வளைக்க வழிதேடும்போது அந்தச் செய்திவந்தது.
அது சூர்யாஜிராவ் தலைமையில் ஔரங்கபாத்தை இந்துராஜ்ஜிய படையினர் தாக்குகின்றார்கள் என்பது. இதனால் கோட்டையினைக் காக்க அவன் செல்லவேண்டித் தலை தெறிக்க ஓடினான்.
ஷெல்ஹர் கோட்டை படைகள் வந்ததால் சாம்பாஜிக்கு ஆபத்து நீங்கிற்று, அங்கே கான் ஜஹான் வெறும் கையோடு “நான் முட்டாளானேன், இனி ஔரங்கசீப் என்னைத் தொலைத்துவிடுவானே” எனக் கலங்கியபடிச் சென்றான், ஔரங்கபாத் கோட்டையினைக் காக்க வேண்டியது இனி அவனின் பெரும்பாடு.
பர்கான்பூரில் இருந்து இப்படிப் பெரு வெற்றியுடன் பெரிய சேதாரமின்றி திரும்பினான் சாம்பாஜி. குவாசி. திலியர்கானைத் திசைதிருப்பி தப்பிவந்திருந்தான், இழப்புகள் ஏதுமின்றி பர்கான்பூரின் பெரும் செல்வத்தோடு வந்தான் சாம்பாஜி.
அதன் மொத்த மதிப்பு 5 கோடிக்கு மேல் அன்றே இருந்தது, தங்கம் நவமணிகளெல்லாம் தனிக்கணக்கு. தனக்குப் பெரு வெற்றி தந்த சிவனை வழிபட அருகிருந்த சப்தகிரீஸ்வரர் மலைக்குச் சென்று சிவனைப் பணிந்து பெரும் பூஜை செய்தான் சாம்பாஜி.
நடந்த சம்பவம் மொகலாயத்தில் பெரும் அதிர்ச்சி கொடுத்தது, முகமது அக்பர் நம்பமுடியாப் பெரும் அதிர்ச்சியில் இருந்தான். பகதூர் கானும், கான் ஜஹானும் சிவாஜியிடம் அடைந்த தோல்வியினை சாம்பாஜியிடமும் அடைந்த அவமானத்தில் இருந்தார்கள்.
ஔரங்கசீப் முன்னால் நின்றான் அந்தச் செய்தியாளன், அவன் முகம் குனிந்து கலக்கத்தில் இருந்தது. இச்செய்தியினைச் சொன்னால் தனக்குத் தலை இருக்காது என உணர்ந்தவனாய் அவன் ஔரங்கசீப் முன்னால் நின்றான்.
ம்ம்ம்… என்ன என்பதுபோல் ஔரங்கசீப் சொல்ல, அவன் நடந்ததைச் சொல்ல காலை எதிரில் இருந்த மேஜையில் ஓங்கி மிதித்து உடைத்துவிட்டு தன் ஆசனத்தை தூர எறிந்துவிட்டு கத்தினான் ஔரங்கசீப். “என் எதிரில் இனி யாரும் வரக்கூடாது, யார் வந்தாலும் வெட்டுவேன்” என அவன் அலறிய அலறலில் செங்கோட்டையே அதிர்ந்தது.
(தொடரும்)