சத்ரபதி சாம்பாஜி : 09

சத்ரபதி சாம்பாஜி : 09

சாம்பாஜிக்கு இரண்டாம் முறை விஷம் வைக்கப்பட்டது மாபெரும் பரபரப்புக்கும் பெரிய பெரிய குழப்பங்களுக்கும் வழிசெய்தது. முழுக் குற்றசாட்டும் சோயுர்பாய் மேல் விழுந்தது, அவளோ அதிர்ந்து கலங்கினாள், தான் அதைச் செய்யவில்லை, செய்ய அவசியமில்லை என மிகவும் ஒடிந்துபோனாள்.

சாம்பாஜி உளவியல் ரீதியாக குழம்பிப்போனான். ஒரு அரசனுக்கு எப்போதும் ஆபத்து உண்டு, அவன் தன் நிழலையும் நம்பக்கூடாது என்பது ராஜவிதி, அதே நேரம் ஒரு விஷயத்தைப் பலமுறை யோசித்துச் செய்யவேண்டும் என்பதும் அரசனுக்கான நியதி.

அப்படியானவன் இப்போது யார் இதைச் செய்திருப்பார்கள் எனப் பலமுனையில் யோசித்தான்.

மொகலாயர் எதிரிநாட்டு மன்னர்களுக்கு விஷம் இடுவது ஒன்றும் ரகசியமல்ல, அது அவர்கள் பாணி. எப்படியாவது எதிரி அரண்மனைக்குள் உளவாளிகளை அனுப்பி யாருக்கும் சந்தேகமில்லா வகையில் விஷம் இடுதல் அவர்களுக்கு இயல்பான ஒன்று.

இந்துக்களின் கைகூலிகள் முதல் ஐரோப்பிய கிறிஸ்தவ மருத்துவர்கள் வரை யாரையாவது பெரும் காசுக்கோ இல்லை இதர உரிமங்கள் சலுகைளைக் காட்டி வளைப்பது அவர்கள் வழமை, இதனால் இதைச் செய்தது மொகலாயர்களாக இருக்கலாம்.

அதே நேரம் ஐரோப்பிய கும்பலும் ஆபத்தானது. ஆப்ரிக்க சித்திகள், பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர், பிஜப்பூர் சுல்தானியம் என எல்லாப் பக்கமும் எதிர்ப்பு அவனுக்கு உண்டு என்பதால் யாரைச் சாடுவது எனத் தெரியாமல் குழம்பினான்.

ஆனால், கவி கலாஷ் இது முழுக்க முழுக்க சோயுர்பாயின் திட்டம் என வாதாடினான், இருவருக்குமான வாதத்தில் சாம்பாஜியால் அவனிடம் வாதாடி வெல்லமுடியவில்லை, குழம்பினான்.

“கலாஷ் இது அரச விவகாரம், ஒரு அரசன் இவர்தான் குற்றவாளி என முடிவெடுத்துவிட முடியாது. சோயுர்பாய்க்கும் எனக்கும் ஆகாதுதான், ஆனால் இதனை யார் செய்தாலும் சந்தேகம் அவர்மேல் விழும் என்பதால் வேறு யாராவது இதைச் செய்திருக்கலாம் அல்லவா?

கலாஷ் ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழவேண்டும் என்பது ஈசன் கையிலேதான் உண்டு, அது அவனின் முடிவு. அந்த நொடி வரும் வரை யாரும் யாரையும் கொல்லமுடியாது, அவனே விரும்பினாலும் சாகமுடியாது.

இது சிவனுக்கான அரசு, சிவசேனை எனச் சிவனின் குலத்துக்காக எம் தந்தை உருவாக்கிய பேரரசு, இங்கு எல்லாமே ஈசன் விதித்தபடிதான் நடக்கும், அதனால் இப்போதும் நமக்கு ஆபத்து இல்லை என்பதால் விட்டுவிடலாம், இதைப் பெரிதாக்கினால் இங்குப் பெரிய குழப்பம் வரும்.

நாம் சோயுர்பாயினை வேறு அரண்மனைக்குக் கடத்திவிடலாம், இங்கு நமது நம்பிக்கைகுரிய ஆட்களை வைத்துக் கொள்ளலாம். அது மட்டும்தான் இங்கு இப்போது சரியான விஷயமாக இருக்க முடியும்.

மாறாக, நீ சோயுர்பாயினைத் தண்டிக்கக் கிளம்பினால் அது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும், யோசித்துச் செய்” என்றான்.

கலாஷோ கடுமையாக மறுத்துச் சொன்னான். “சாம்பாஜி, நீ ஒரு அரசன், ஒரு அரசன் தன்னையும் தன் நாட்டையும் காக்க எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும், அவன் ஒரு காலமும் சொந்த பந்தம் என மயங்குதல் கூடாது, அரசப் பதவி என்பது முள்கிரீடம் அதுவும் ஆயிரம் படமெடுத்த நாகங்கள் மேல் அமர்ந்து சுமக்கும் கிரீடம் என்பதை அறியாதவனா நீ?

அரசன் தன் எதிரிகளை விட சொந்தபந்தங்களிடமும் அருகிருப்பவருமிடமே அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதுமா புரியவில்லை.

இங்கு உன்னை ஒழிக்க ஒரு கூட்டமே உண்டு சாம்பாஜி, உன்னை அழித்துப்போட்டுவிட்டு ராஜாராமை மன்னராக்கும் முயற்சி இன்னும் முடிவடையவில்லை. அதனைக் கைவிடவும் மாட்டார்கள், இங்குப் பெரிய கூட்டம் உன்னை ஒழிக்கத் தேடுகின்றது, அதனை முறியடிக்க வேண்டியது என் கடமையாகின்றது.

இங்கு நான் சில நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் இல்லையென்றால்…” என நிறுத்தினான்.

அவனை உற்று நோக்கி “என்ன?” என்பது போல் புருவம் சுருக்கிப் பார்த்தான் சாம்பாஜி.

“இங்கு இதற்கு ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்றால் நான் கிளம்புகின்றேன், இன்று இல்லையேல் இன்னும் ஒரு நாள் நிச்சயம் அவர்கள் உன்னைக் கொல்வார்கள், அதை என்னால் நிச்சயம் காணமுடியாது, என் நண்பனை என் கண்முன்னே இழந்தப் பாவியாகிவிடுவேன்.

அதனால் நான் கேட்கின்றேன். இங்குச் சில நடவடிக்கை அவசியம், அதைச் செய்ய எனக்கு அனுமதி கொடு, இல்லை என்னை விட்டுவிடு”

சாம்பாஜி பதறிப்போனான், ஆனால் கலாஷின் பிடிவாதம் உக்கிரமாய் இருந்தது, சாம்பாஜி திணறினான்.

ஒரு பக்கம் தன் மேல் பாய காத்திருக்கும் சொந்த ரத்தங்கள், என்னதான் அவை கொடியவை என்றாலும் விட்டுவிட முடியாது. அவர்களை முழுக்கப் பகைத்தால் ராஜ்ஜியம் ஆடிப்போகும், அதே நேரம் எங்கிருந்தோ வந்து தனக்காக தன் நட்புக்காக இப்படிக் காவல் இருப்பவனையும் கைவிட முடியாது.

இருதலை கொள்ளி எறும்பான அவன் தவித்தான், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

“நீ எனக்கொரு சத்தியம் செய்துகொடு” எனக் கலாஷின் கரங்களைப் பற்றிக் கொண்டான், “உனக்கு என் உயிரையும் தருவேன், ஆனால் உன் உயிரை எவர் பறிக்க வந்தாலும் விடமாட்டேன். அதற்குள் மட்டும் வராதே” என்றான் கலாஷ்.

சாம்பாஜி சொன்னான், “ராஜாராமுக்கோ அவன் மனைவியருக்கோ எந்த ஆபத்தும் உன்னால் வந்துவிடக் கூடாது, என்ன இருந்தாலும் அவன் என் தம்பி, எனக்கு இன்னும் வாரிசு இல்லை, எந்நொடியும் நான் வீழலாம், அதன்பின் இந்த நாட்டை வழிநடத்த அவன் அவசியம்.

அவன் மேல் சிறு துரும்பும் விழக் கூடாது, உன் விசாரணையோ எதுவோ அவனைப் பாதிக்கக் கூடாது , அப்படியே சோயுர்பாய் மேல் ஒரு சிறு கீறலும் விழக் கூடாது, பெண்களைக் கடுமையாக தண்டிப்பது நம் தர்மம் அல்ல, அதுவுமன்றி அவர் எங்கள் வீட்டு தாய், அவரின் சகோதரன் ஹம்பிராவினால் இந்தச் சேனை நிற்கின்றது, இதையெல்லாம் யோசித்து விசாரணை செய், ஆனால் மறைமுகமாகச் செய், வெளியே எதுவும் வரக்கூடாது” என்றான்.

கலாஷ் பெரிய காரியம் எதையும் செய்யமாட்டான் என நம்பினான் சாம்பாஜி, அத்தோடு அவன் இதை விட்டுவிட்டு அடுத்தடுத்த காரியங்களுக்குத் தயாரானான், ஒரு அரசன் அதுவும் இந்து அரசன் உயிருக்கு ஒரு காலமும் பயந்து முடங்கக் கூடாது, இந்த உடல் வேறு ஆத்மா வேறு , உடல் அழிந்தாலும் மறுபடி ஆத்மா பிறக்கும் என்றும், கர்மத்தை செய்தபின் யாராயினும் கிளம்ப வேண்டும் எனும் போதனையில் வீரமாக அவன் வளர்க்கப்பட்டதால் இந்த விஷயம் அவனைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

களத்தில் எதிரியின் அம்புக்கும் ஈட்டிக்கும் தப்பி நிற்பது போல் இதையும் அவன் கடந்தே சென்றான்.

ஆனால், கலாஷ் விடவில்லை, சாம்பாஜி சில தினங்களில் வேறு கோட்டைக்கு ஆய்வுக்குச் சென்றிருந்த நேரம் பெரும் அழிவினை நிகழ்த்தினான், சோயுர்பாயினை சார்ந்தோரில் பலரைக் காணாமல் செய்தான், அதாவது அவர்களை ரகசியமாக கடத்தி நடுகாட்டுக்குக் கொண்டு சென்று கடுமையாக விசாரித்துக் கொன்று போட்டான்.

அவனின் வெறியாட்டம் கடுமையாக இருந்தது, ஏகப்பட்டோரை விசாரணை என வதைத்தான், கொஞ்சம் சந்தேகம் இருப்போரையும் கொன்று போட்டான், சோயுர்பாயினைச் சிறைவைத்தான்.

முன்பே சாம்பாஜி கேட்டுக்கொண்டதால் ராஜாராமை அவன் மனைவியரை அவன் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் அவனின் சந்தேகம் ராஜாராமின் இன்னொரு மனைவியான ஜானகிபாயின் உறவினர் மேலும் விழுந்தது.

சிவாஜியின் பிரதான தளபதியாக இருந்தவன் பிரதாப்ராவ் குஜார், அவன் பெரும் வெற்றிகளைச் சிவாஜிக்குப் பெற்றுக் கொடுத்தவன், ஆனால் அவன் சுயமாக எடுத்த முடிவு ஒன்றால் சிவாஜிக்கும் அவனுக்கும் உரசல்கள் வந்து, தன் முடிவினை சரியாக்கும் போரில் குஜார் உயிரிழந்தான்.

சிவாஜி அவன் இழப்பில் தவித்துப்போனான், தன் உற்ற தளபதிக்குச் செய்யும் கைமாறாக அவன் மகள் ஜானகிபாயினைத் தன் மகன் ராஜாராமுக்கு மணமுடித்தான், ராஜாராமின் முதல் மனைவியும் பட்டத்துகுரியவளும் அவளே.

இதனால் அவள் மேலும் அவர்கள் உறவினர்கள் மேலும் கலாஷின் சந்தேகம் விழுந்தது, அவன் அவர்களில் பலரைக் கொன்றுபோட்டான், சிலரை சிறையில் அடைத்துப் பெரும் சித்திரவதை செய்தான்.

இதைக் கண்டு பலர் கொதித்தார்கள். ராய்காட் அரண்மனை இரு பிரிவாக எழுந்தது, கலாஷை தொலைத்துவிடுவது என்றும் எங்கிருந்தோ வந்தவன் இங்கு நம்மையே கொல்வதா என்றும் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன, அவனைத் தொலைத்துவிடும் நோக்கில் எழுந்தவர்கள் யேசுபாயின் சகோதரனான கன்னோஜ் ஷிர்ங்கே என்பவனிடம் சென்றார்கள்.

கன்னோஜிக்கும் கலாஷுக்கும் ஏற்கனவே விரோதம் இருந்தது. தன் அக்கா குடும்பத்தில் கலாஷ் எங்கிருந்தோ வந்து பெரும்குழப்பம் செய்வதாகவும் அவனாலே பல சிக்கல்கள் இங்கு வருவதாகவும் ஏற்கனவே கன்னோஜி பொறுமிக்கொண்டிருந்தான்.

அவன் இம்முறை நேரடியாக கலாஷை எதிர்க்கத் துணிந்தான், இனியும் விட்டால் கலாஷ் விசாரணை எனும் பெயரில் எல்லோரையும் கொன்றுவிடுவான், தனக்கும் ஆபத்து என உணர்ந்தவன் தன் ஆட்களை அழைத்துக் கொண்டு கலாஷை எதிர்க்க முயன்றான்.

பெரும் கலவரம் ராய்காட் கோட்டையில் நடக்க இருப்பதை அறிந்து ஓடோடி வந்தான் ஹம்பிராவ், அவனைக் கண்டதும் இரு தரப்பும் பின்வாங்கிற்று. கோட்டையின் ஒரு பக்கம் அவர்களையும், இன்னொரு பக்கம் இவர்களையும் பிரித்து வைத்தவன் அவசர கால நடவடிக்கைப்படி கோட்டையினைக் கட்டுக்குள் கொண்டுவந்து சாம்பாஜிக்குச் செய்தி அனுப்பினான்.

சாம்பாஜி விஷயம் அறிந்து பதறியபடி வந்தான், வந்தவன் பதற்றத்தை வெளிக்காட்டாது அவையினைக் கூட்டினான்.

முக்கியஸ்தர்கள் மீண்டும் கூடினார்கள், ஒரு பக்கம் கலாஷும், இன்னொரு பக்கம் கன்னோஜியும் நின்று கொண்டிருந்தார்கள், கன்னோஜி மனதில் எழுந்த உக்கிரம் கண்களில் தெரிந்தது.

சாம்பாஜி கன்னோஜி நோக்கிக் கைகளை உயர்த்தினான். அவன் சொன்னான், “ஷிர்கே குலமான நாங்கள் மாமன்னர் சிவாஜியால் இங்கு மணவுறவுடன் வந்தவர்கள், இந்து ராஜ்ஜிய பெரும் கனவுடன் வந்தவர்கள். எங்கள் வீரமும் விசுவாசமும் கண்டே சிவாஜி மன்னர் தங்கள் குடும்பத்தில் எங்களை ஒருவராக்கினார்.

இங்கு 40 ஆண்டு காலத்துக்கும் மேல் எங்களுக்கு உறவு உண்டு, ஒரு காலமும் இங்கு எந்தச் சச்சரவும் வந்ததில்லை, இந்து ராஜ்ஜியத்தை கண்போல் காத்துவருபவர்கள் நாங்கள்.

இங்கு விஷமிடும் கலாச்சாரம் மொகலாயரைப் போல் ஒரு காலமும் இருந்ததில்லை, நமக்குள் சர்ச்சைகள் வரலாம் அதற்காக மன்னரைக் குறிவைக்கும் முட்டாள்கள் அல்ல நாங்கள், இங்கு யாரின் வரவுக்குப் பின் இதெல்லாம் நடக்கின்றது என்பதை மன்னர் யோசித்துப் பார்க்க வேண்டும்”

அவன் முடிப்பதற்குள் கலாஷ் சீறினான் “எனக்கும் இந்த அரசகுடும்பத்துக்கும் என்ன வந்தது? இவர் முடிசூடக் கூடாது என மல்லுகட்டியது யார்? முதல்முறையே விஷம் மூலம் கொல்லப்பார்த்தது யார்?

அவருக்கென இங்குப் பெரிதாக யாருமில்லை, நீங்களோ ஒரு கூட்டமாக கூடி நின்று அவரை அகற்றப்பார்க்கின்றீர்கள், மாமன்னரை கொல்ல விஷம் வைத்தவர்கள் யார் என்பதைக் கூட கண்டறிய கூடாதா? அதில் சில களைகளைப் பறிக்கக் கூடாதா?

மன்னர் உயிரை விட எது முக்கியம்? அப்படியானால் நான் இனி இங்கு இருக்கப்போவதில்லை” என அவன் கிளம்ப முயன்றான்.

“கலாஷ் மன்னரின் உத்தரவுப்படி நீ செல்லக் கூடாது” எனக் குரலை உயர்த்தினான் சாம்பாஜி.

“நான் மன்னரின் மைத்துனன், நான் எப்படி மன்னரைக் கொல்லத் துணிவேன், இங்கு இவ்வளவு பெரிய அழிவு அவசியமில்லை. விசாரணை எனும் பெயரில் இத்தனைபேர் கொல்லப்பட வேண்டியதுமில்லை, சில விசாரணைகளை ரகசியமாகச் செய்யலாம்.

ஏன் நாங்கள் செய்யமாட்டோமா? செய்யவில்லை எனத் தெரியுமா? இந்துமரபில் சகோதரியின் கணவனைக் காப்பதை விட அவள் உடன் பிறந்தவனுக்கு என்ன பெரிய கடமை உண்டு? என்னை விடவா இவருக்குப் பொறுப்பு வந்துவிடப் போகின்றது.

விஷமிட்டது யார் என எல்லோர் மேலுமா பாய்வார்கள்? இங்கு எதிரிகள் அதிகம், சதிகாரர்களும் அதிகம் என்பதால் ஆழ அமரத்தான் விசாரிக்க முடியும், இங்கு ஒவ்வொரு உறவும் இந்துராஜ்ஜிய தூண்கள் எளிதில் அவைகளை இடிக்க முடியாது, இடித்தால் ராஜ்ஜியம் நிலைக்காது”

அவன் பேசிக்கொண்டிருக்க கலாஷ் குறுக்கே பேச பெரும் அமளியானது, ஆத்திரத்தின் உச்சியில் “விஷமிட்டது சோயுர்பாய் அதற்குத் துணை சென்றது பலர், அனைவரும் கொல்லப்பட வேண்டும்” என்றான் கலாஷ்.

“எல்லோரையும் கொன்றுவிட்டு மன்னரையும் கொன்றுவிட்டு நீ ஆட்சியினைப் பிடிக்கப் பார்க்கின்றாயா?” எனச் சீறினான் கன்னோஜி.

ஹம்பிராவ் நடப்பதைக் கண்டு பதில் சொல்லத் தெரியாமல் அமர்ந்திருந்தான், மாடத்தில் இருந்து இதை எல்லாம் மகனுடனும், மருமகள் தாராபாயுடனும் கண்டு கொண்டிருந்த சோயுர்பாய், மாடத்தில் இருந்து வெளியேறினாள். இனி என்ன நடக்கும் என்பதை அவள் ஊகித்தாள், தன் அணிகலனில் இருந்த வைரத்தை இடித்துப் பொடியாக்கினாள்.

இனி எப்படியும் தனக்கு முடிவு நெருங்கிவிட்டது என உணர்ந்தவள், நேரடியாகச் சபைக்கு வந்தாள், கத்தி சொன்னாள்.

“என்மேல்தானே எல்லாப் பழியும், எல்லோரின் சந்தேகமும் என்மேல்தானே, இதோ நானே முடிவினைச் சொல்கின்றேன்.

நான் இந்நாட்டின் மன்னராக சாம்பாஜி வந்தால் நாடு பாழாகும் என்றே என்மகனை அரசனாக்க முயன்றேன், ஆனால் சில மாதங்களாக மன்னர் நல்லாட்சி தருகின்றார், பர்ஹான்பூரை அடித்துவந்து மொகலாயருக்கு மரண பயம் தருகின்றார், சிவாஜியின் சாயலில் மன்னர் எழுவதை ஒரு தாயாக கண்டே நான் மகிழ்ந்தேன்.

என்மேல் பெரும் பழி என்பது என்னால் தாங்கமுடியா ஒன்று, இந்த வானம் பூமி சாட்சியாக சிவன் சாட்சியாக சொல்கின்றேன், ஈசன் சாட்சியாக மன்னர் சிவாஜி ஆணையாக சொல்கின்றேன். நான் இருமுறையும் விஷம் இடவில்லை, தாய்பசு இன்னொரு கன்றைக் கொல்லாது, இந்து ராணி அதைச் செய்யமாட்டாள்.

இப்போது என்மேல் சந்தேகம் வலுக்கின்றதல்லவா? என்னை எப்படியும் முடக்கவேண்டும் ஒழிக்கவேண்டும், நான் இருக்கும் வரை இங்கு மன்னருக்கு ஆபத்து என நினைத்துவிட்டீர்கள் அல்லவா?

இனி நான் இருக்கமாட்டேன், என்னை இருக்க விடமாட்டார்கள்” என அவள் சொல்ல சொல்ல எல்லோர் முகத்திலும் பதற்றம் எழுந்தது, ஹம்பிராவ் பதற்றமானான், சாம்பாஜி திகைத்தான்.

ஆனால், கலாஷ் அமைதியாக நின்றான், சோயுர்பாய் சொன்னாள், “மன்னர் என்பதைத் தாண்டி மகனாக கேட்கின்றேன், இங்கு எல்லாக் குழப்பத்துக்கும் இவனே காரணம், எல்லோரும் என்மேல் சந்தேகம் கொள்கின்றீர்களே தவிர இவன் வந்தபின்பே இதெல்லாம் நடக்கின்றது என்பதை அறிய மறுக்கின்றீர்கள்.

என்மேல் காட்டும் விசாரணையினை மன்னர் இவன் மேல் காட்டாதது ஏன்? நம்மக்களை இவன் கொன்றுகுவிக்க இவனுக்கென்ன அதிகாரம்? மன்னர் கொல்லட்டும் அவர் உரிமையுள்ளவர், ஆனால் எங்கிருந்தோ வந்தவனைக் கொல்ல அனுமதிப்பதெப்படி?

இங்கு இனி இருவரில் ஒருவரே இருக்கமுடியும்”

அந்தப் பதற்றமான நேரத்தில்தான் கலாஷின் வார்த்தை வெளிவந்து அது பெரும் அழிவுக்கு விதையானது.

“கண்ணீர்விட்டு கதறுவதால் குற்றம் செய்தது இல்லை என்றாகிவிடாது, தண்டனையினைத் திசை திருப்ப பொய்காரணங்களைத் தேடுதல் பெண்களுக்கு இயல்பான ஒன்று, ராமனுக்குத் துரோகம் இழைத்தவளே ஒரு பெண் என்பது இதிகாசம், மன்னர் இவரைச் சிறையில் இடவேண்டும்”

சாம்பாஜி அப்போதும் அமைதி காத்தான், அது அவன் விதியின் முடிவாக இருந்தது.

“சாம்பாஜி, இதுவா உன் முடிவு” என அவள் கேட்க அவனிடம் பதில் இல்லை. அது அம்முடிவினை அவன் ஆமோதிப்பது போல் இருந்தது.

சட்டென வெடித்தாள் சோயுர்பாய் “நான் ஈசன் ஆணையாக சொல்கின்றேன், பத்தினியாக சொல்கின்றேன், இந்தப் பழியினை என்மேல் சுமத்தியவர்கள் முடிவு கொடுமையாய் இருக்கும், பெண் என்றும் பாராமல் என்னை இப்படிக் கொலைக்கார பட்டம் அதுவும் ராஜதுரோக குற்றம் சூட்டியவர்கள் வாழ்வினை அந்த ஈசனே முடித்துவைப்பார்.

எனக்காக என் அன்னை துர்கா இறங்குவாள், அவள் உங்களைப் பழிதீர்ப்பாள், இந்த மண்ணுக்கும் அரசுக்குமாய் என்னைக் கொல்ல துடிப்பவர்களே அதே மண்ணும் அரசும் உங்களை அழிக்கும், சிவாஜி மன்னர் இந்துக்களுக்காய் உருவாக்கிய நாட்டை தன் சுயநலனுக்காய் கைப்பற்ற துடிப்பவரெல்லாம் அழியட்டும்”

சொன்னவள் சட்டென அந்த வைரப்பொடியினை விழுங்கினாள், ஹம்பிராவ் உள்ளிட்டோர் எழுந்து அவளைக் காக்க ஒடினர், சட்டென தன் குறுவாளை இடுப்பில் இருந்து உருவியவள் பெண் புலியாய் சொன்னாள்.

நானும் யுத்தக்கலை அத்தனையும் பயின்றவள், இப்போது உங்கள் அனைவரையும் வெட்டிப்போட என்னால் முடியும், அருகில் வந்தவன் நிச்சயம் சாவான், எல்லோரும் தள்ளி நில்லுங்கள்.

சாம்பாஜியினைக் கொல்லவேண்டும் என முடிவெடுத்தால் எப்போதோ கொன்றிருப்பேன், நான் ஒருகாலமும் அப்படி நினைக்கவில்லை, இப்போதும் அவனால் பெருமை கொண்டேன்.

என்மேல் இப்பெரும்பழி வந்தபின்பும் எல்லோரும் அமைதிகாத்து என்னைச் சிறையில் வைத்து கொல்லமுடிவெடுத்தபின் நான் ஏன் வாழவேண்டும், இதோ சாகின்றேன்.

ஆனால், என் சாபம் பலிக்கும், நிச்சயம் பலிக்கும். எப்படி நான் துடிதுடித்துச் சாகின்றேனோ இதைவிடக் கொடுமையாக ஆயிரம் மடங்கு கொடுமையாக சம்பந்தபட்டவர்கள் சாகட்டும், எதிர்காலம் என் மேல் பழியில்லை என்பதைச் சொல்லட்டும்” எனச் சொல்லிவிட்டு சரிந்தாள்.

வைரப்பொடி உள்ளே உறுப்புக்களை அறுத்துப்போட்டதால் ரத்தபெருக்கு மிகுந்து அவள் சரிந்தாள், மருத்துவர்களால் அவளைக் காக்கமுடியவில்லை.

சாம்பாஜி அதிர்ந்தே போனான். கலாஷை பன்ஹாலா கோட்டைக்குப் போகச் சொன்னவன் ஹம்பிராவ் முகத்தை நோக்கினான், ஹம்பிராவ் எனும் மாவீரன் தன் தங்கைக்காய்க் கண்ணீவிட்டுக் கொண்டிருந்தான், தன் விதியினை நினைந்து அழுதுக் கொண்டிருந்தான்.

அவன் அருகே வந்து நின்றாள் தாராபாய், அவளைக் கட்டிப்பிடித்து ‘ஓ’ என அழுதான் ஹம்பிராவ், சாம்பாஜி மிக மனம் உடைந்தவனாய் மண்டியிட்டு அமர்ந்தான், அவனைத் தேற்றுவார் யாருமில்லை.

சாம்பாஜி தலையில் சோயுர்பாயின் பெரும் சாபம் வந்து அமர்ந்து கொண்டதை விதியினைத் தவிர யாரும் அறியவில்லை.

பெரும் நிசப்தம் புயலுக்கு முந்தைய அமைதியாக ராய்காட் கோட்டையில் நிலவிற்று, அவளுக்குரிய எல்லாப் பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்யப்பட்டன, பெரும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

ராஜாராம் மனமுடைந்து போனான், அவனுக்குரிய காவலை ஹம்பிராவ் ஏற்றுக்கொண்டான், தனிக் கோட்டையில் தன் பராமரிப்பில் அவனையும் ஜானகிபாயினையும், தாராபாயினையும் அவன் வைத்துக் காவல் இருந்தான்.

எக்காரணம் கொண்டும் கலாஷை விடக்கூடாது , அவனைக் கொன்றே தீரவேண்டும் எனக் கன்னோஜி தலைமையில் ஒரு கும்பல் உருவானது, தீரா வன்மம் அவர்களுக்குள் குடிகொண்டது, இந்த வன்மம் கவி கலாஷுடன் சாம்பாஜிக்கும் எமனாகும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

இங்கு இப்படி பெரும் குழப்பம் ஏற்பட்ட நேரம் ராஜபுத்திரரோடு சேர்ந்து திடீரென தன்னை மொகலாய மன்னன் என அறிவித்துக் கொண்டான் முகமது அக்பர், அப்படி அறிவித்ததோடு அல்லாமல் தன் படையோடு ஆஜ்மீரைக் கைப்பற்றி அமர்ந்து கொண்டான், அடுத்து அவன் சேனை டெல்லி நோக்கிச் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இது ராஜபுத்திரரும் அவனும் சேர்ந்து அவசரமாக எடுத்த முடிவாக இருந்தது, சாம்பாஜி இதில் தொடர்புபடவில்லை.

தன் மகன் தன்னை மொகலாய சக்கரவர்த்தியாக அறிவித்தான், மேலும் டெல்லி நோக்கி வருகின்றான் என்றதும் அதிர்ந்தான் ஔரங்கசீப், ராஜபுத்திரரும் முகமது அக்பரும் சேர்ந்த சேனை பலமானது என்பதால் அதனை முறியடிக்க தன் பலமிக்க சேனையினைக் காந்தகார் கோட்டையில் இருந்து அழைத்தான்.

பெரும் முரடன் அமீர்கான் தலைமையில் பெரிய சேனை ஆஜ்மீருக்கு வந்தது. அமீர்கானுக்கும், முகமது அக்பருக்கும் பெரும் போர் மூண்டது, அந்தப் போரில் தானும் கலந்து கொள்ள செல்ல இருந்தபோதுதான் அந்தத் துயர செய்தி ஔரங்கசீப்பை எட்டிற்று.

அவனின் சகோதரி ஜகனாரா பேகம் சுகவீனம் காரணமாக மரணமடைந்த செய்தி அவனை உலுக்கிப் போட்டது.

ஒரு பக்கம் ரமலான் காலம் என்றும் பாராமல் தன் மேல் படை எடுத்த மகன் மேலும் அவனைத் தூண்டிவிட்ட ராஜபுத்திரர் மேலும் கடும் வேகத்துடன் அவன் கிளம்பியபோது இந்தப் பெரும் துக்கம் அவனுக்கு அணையிட்டது.

அவன் மிக உடைந்துபோனான், அவனுக்கு எல்லாக் காலத்திலும் தாய்போல் துணையிருந்த பெரும் உறவு ஒரே உறவு மரித்துப்போனதில் கலங்கிப் போனான், அவளுக்காய் அவன் பெரும் துக்கம் கொண்டான்.

பெரும் மரியாதையுடன் அவளை டெல்லி சாந்தினி சவுக் பக்கம் அடக்கம் செய்தான், அந்தப் பகுதி அவளே ஷாஜகானுடன் சேர்ந்து ரசித்து உருவாக்கிய பகுதி என்பதால் அப்போது அவளுக்கு மிகப் பிடித்த கலையழகு கொண்ட சதுக்கம் என்பதால் அங்கே அவள் உடல் புதைக்கப்பட்டது, இன்றும் அது அங்கு உண்டு.

அமீர்கானின் பலத்தின் முன் முகமது அக்பர் நிற்கமுடியாமல் ஆஜ்மீரை விட்டு பின் வாங்கினாலும் எப்போதும் திருப்பித் தாக்கும் வலிமையுடனே இருந்தான், ஆங்காங்கே மோதல் தொடர்ந்தபடி இருந்தது.

தன் சகோதரிக்காக பெரும் துக்கம் அனுசரித்த ஔரங்கசீப் மனமுடைந்து கிடந்தான், ஒரு பக்கம் அக்காவின் இழப்பு இன்னொரு பக்கம் மகன்களின் யுத்தம், சிவாஜிக்குப் பின் எளிதாக அடக்கலாம் என எதிர்பார்த்த இந்துராஜ்ஜியம் பர்ஹான்பூர் வரை வந்து அடித்திருந்தது.

இதை எல்லாம் எண்ணியெண்ணி அடுத்து என்ன செய்வது எனக் கடுமையாக சிந்தித்தான். தன் அக்கா இல்லாத அரண்மனையில் அவன் வசிக்க விரும்பவில்லை, அவன் சில காலம் ஆக்ராவுக்குச் செல்ல தீர்மானித்து அங்குச் சென்று அமர்ந்து கொண்டான்.

கோஹினூர் பதித்த மயிலாசனமும், டெல்லி செங்கோட்டையும் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி தரவில்லை. மாறாக, ஒருவித வெறுப்பையே கொடுத்தது. டெல்லி அவனுக்கு ஏனோ பிடித்தமான இடமாக இருக்கவில்லை, மொகலாயரின் தலைநகராக ஆக்ராதான் இருந்தது, டெல்லியில் ஷாஜகானே பெரிய கோட்டை கட்டிக் குடிபுகுந்தான். அவன் சரிவு அத்தோடு தொடங்கிற்று.

அதே துரதிருஷ்டம் தனக்கும் வந்ததாக கருதியவன் டெல்லி செங்கோட்டையினை ஒரு காவல் மிக்க கோட்டையாக மட்டும் வைத்துவிட்டு ஆக்ராவில் இருந்து ராஜ்ஜியம் நடத்த முடிவெடுத்து அங்குச் சென்றான், தன் பெரும் பரிவாரங்களுடன் சென்றான்.

அவனைப் பொறுத்தவரை வட மேற்கு எல்லை அமைதியானதால் அங்குப் பெரிய சிக்கல் இல்லை, அவனின் பெரிய தலைவலியாக ராஜபுத்திரரும், சாம்பாஜியும் உருவானார்கள். இதனால் அவன் தெற்குப் பக்கம் பற்றி அதிகம் கவலை கொண்டான்.

அவனின் அச்சம் அதிகரிக்கும்படி நிலைமைகள் அமைந்தன. ராஜபுத்திரர் மிரட்டலும் அக்பர் மிரட்டலும் அதிகமாய் இருந்தன. முகமது அக்பர் ஔரங்கபாத்தை பிடிக்கும் ஆபத்தும் இருந்தது.

ஔரங்கபாத் மொகலாயரின் தக்காண தலைநகராக இருந்தது. அதனை 16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கியவன் அன்றைய அகமதுநகர் சுல்தானியத்தின் ஆப்ரிக்கன் மாலிக் ஆம்பர், அவன் காக்டி எனும் அந்தக் கோட்டையினைப் பலமிக்கதாக மாற்றினான், பின்னர் ஜஹாங்கீர் அதைக் கைப்பற்றிக்கொண்டான்.

1653ல் அன்றைய இளவரசனான ஔரங்கசீப் இங்கிருந்து படை நடத்தினான். பின் அவன் பேரரசனாக டெல்லிக்குச் சென்றாலும் இந்த இடம் அவனின் விருப்பத்துகுரிய ஒன்றாயிற்று, அவனின் முதல் மனைவி அங்குதான் மரித்தாள், அவளுக்கு தாஜ்மஹால் போன்ற ஒன்றை அவன் கட்டிவைத்தது அங்குதான்.

அப்படியே அவனின் காதலி ஹிராவின் சமாதியும் அங்குதான் இருந்தது, அவன் வாழ்வில் மிக முக்கிய இடம் அது, அவன் அங்குதான் தன் கடைசி காலங்களைக் கழிக்க விரும்பினான்.

ஆனால், இப்போது அல்ல. அவன் மெக்கா பயணமெல்லாம் முடிந்து தன் மகன்களில் சிறந்தோரிடம் ஆட்சியினைக் கொடுத்துவிட்டு முதிர்ந்த வயதில் அங்குவரவே முடிவு செய்திருந்தான். இதனால் மிகுந்த காவலும் படைகளும் அங்கு எப்போதும் உண்டு, சிவாஜி தரப்பு அதைக் கைப்பற்றிவிடக் கூடாது எனப் பெரும் காவல் செய்திருந்தான்.

இப்போது தன் மகன் அதனைக் கைப்பற்றிவிடுவானோ எனும் அச்சம் அவனுக்கு இருந்தது, அப்படிக் கைப்பற்றினால் தக்காணத்தில் தனக்கு இருக்கும் பெரும் பிடி அகலும் என உணர்ந்தவன் அடுத்தடுத்தத் திட்டங்களுக்குத் தயாரானான்.

ஆக்ரா கோட்டையில் நின்றபடி மிகுந்த வலியுடன் சிவாஜி இருந்த அறையினை அவன் ஆத்திரத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான், சிவாஜியினை அவன் சிறைவைத்த காட்சியும், அவனும் சாம்பாஜியும் தப்பிச் சென்ற காட்சியும் மறுபடி மறுபடி நினைவுக்கு வந்தது.

சிவாஜியினை நான் இங்கே வெட்டிக் கொன்றிருப்பேன், ஆனால் ஜெய்சிங் போன்றோரால் அதைச் செய்யமுடியாமல் போனது, இன்றும் அதே ராஜபுத்திரர்கள் என் மகனுக்குக் கொம்பு சீவிக் கொண்டிருக்கின்றார்கள்.

இங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிவாஜி பெரும் ராஜ்ஜியம் அமைத்து மகனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான், அந்தக் குட்டி நாகம் வளர்ந்து இப்போது என்னைக் கடிக்க வருகின்றது.

அன்றே இவர்களை இங்கே நசுக்கிப்போட்டிருந்தால் இந்தப் பெரிய துன்பம் எனக்கு வந்திருக்காது, இப்போது ராஜபுத்திரர்களை எளிதாக அடக்கியிருக்கலாம். ஆனால், இப்போது எதைச் செய்தாலும் சாம்பாஜி என்ன செய்வானோ எனும் ஒருவிஷயத்தை கணித்தே செய்யவேண்டியிருக்கின்றது.

இப்போது தன் மகன் அந்த ரங்கபாத்தைக் கைப்பற்றிவிடுவானோ எனும் அச்சம் அவனுக்கு இருந்தது, அப்படிக் கைப்பற்றினால் தக்காணத்தில் தனக்கு இருக்கும் பெரும் பிடி அகலும் என உணர்ந்தவன் அடுத்தடுத்தத் திட்டங்களுக்குத் தயாரானான்.

ஆக்ரா கோட்டையில் நின்றபடி மிகுந்த வலியுடன் சிவாஜி இருந்த அறையினை அவன் ஆத்திரத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான், சிவாஜியினை அவன் சிறைவைத்த காட்சியும், அவனும் சாம்பாஜியும் தப்பிச் சென்ற காட்சியும் மறுபடி மறுபடி நினைவுக்கு வந்தது.

சிவாஜியினை நான் இங்கே வெட்டிக் கொன்றிருப்பேன், ஆனால் ஜெய்சிங் போன்றோரால் அதைச் செய்யமுடியாமல் போனது, இன்றும் அதே ராஜபுத்திரர்கள் என் மகனுக்குக் கொம்பு சீவிக் கொண்டிருக்கின்றார்கள்.

இங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிவாஜி பெரும் ராஜ்ஜியம் அமைத்து மகனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான், அந்தக் குட்டி நாகம் வளர்ந்து இப்போது என்னைக் கடிக்க வருகின்றது.

அன்றே இவர்களை இங்கே நசுக்கிப்போட்டிருந்தால் இந்தப் பெரிய துன்பம் எனக்கு வந்திருக்காது, இப்போது ராஜபுத்திரர்களை எளிதாக அடக்கியிருக்கலாம். ஆனால், இப்போது எதைச் செய்தாலும் சாம்பாஜி என்ன செய்வானோ எனும் ஒருவிஷயத்தை கணித்தே செய்யவேண்டியிருக்கின்றது.

என்ன செய்யலாம் என நிறைய யோசித்தவன் தன் மெக்கா பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டு தெற்கே ஒரு சுற்றுச் சென்றுவரலாம் என யோசித்தான், அவன் சுமார் 20 ஆண்டுகளாக அப்பக்கம் செல்லவில்லை.

அவனின் போராட்டமெல்லாம் வடமேற்கு எல்லையில் இருந்ததால் சிவாஜியினை அடக்க சில தளபதிகளை அனுப்பமுடிந்ததே தவிர அவனால் நேரடியாக வரமுடியவில்லை.

இதனால் தப்பித்தது சிவாஜியா ஔரங்கசீப்பா என்றால் அது இருவருக்குமே நல்ல நேரம். மிக ஆபத்தான சிவாஜி, ஔரங்கசீப் இப்படிச் சிக்கியதாலே தெற்கே தன்னை நிலை நிறுத்திக் கொண்டான், காலம் அவனுக்குக் கை கொடுத்தது.

அதே நேரம் ஒருவேளை சிவாஜி உச்சத்தில் இருக்கும் போது ஔரங்கசீப் தெற்கே வந்து ஔரங்கபாத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் சிவாஜி முடக்கியிருப்பான், ஔரங்கசீப் தப்புவது கடினமானதாய் இருந்திருக்கும்.

சிவாஜிக்குக் காலம் அப்படி ஒத்துழைத்தது, இப்போது அவன் இல்லாக் காலத்தில் ஔரங்கசீப் தெற்கே செல்ல முனைந்தான், பெரும் படை திரட்ட உத்தரவிட்டவன் சில காலம் ஔரங்கபாத்தில் தங்கி பெரும் போர்களை நடத்தி ஒரு அமைதி ஏற்படுத்திவிட்டு ஆக்ரா வரலாம் என முடிவெடுத்தான், அது அவனுக்கு வழமையானது.

எப்போதும் ஏதோ ஒரு இடத்தில் பெரும் போர் செய்து கொண்டிருக்கும் அவன் விதி லாகூர்,காந்தகார், டாக்கா போல அவனை ஔரங்காபாத் நோக்கி அழைத்தது.

முதலில் ஆஜ்மீர் சென்று அங்கு அமீர்கானுடன் விவாதித்துப் பெரும் காவல்களைச் செய்ய வேண்டும் என விரும்பியவன் அது குறித்துச் செய்திகளை அனுப்பினான்.

அப்போது உலகின் பெரும் வல்லரசின் தலைவனாக இருந்த ஔரங்கசீப், மிகப் பெரிய சேனையுடன் தக்காணத்துக்குள் நுழைய திட்டமிட்டான்.

அவனின் பிரசித்தியான தளபதிகளான சார்ஷா கான், பகதூர் கான், மகபத்கான், சின் கிட்டிச் கான், ஹாசன் அலிகான், குராம் கான் என எல்லாத் தளபதிகளுடனும் அணி வகுக்க திட்டமிட்டதால் அவர்களும் வந்தார்கள்.

சுமார் 6 முதல் 7 லட்சம் வீரர்களைக் கொண்ட பெரும்படை அது. அங்கே உயர்சாதி குதிரைப்படை, யானைப்படை, ஒட்டகப்படை பீரங்கிப்படை, துப்பாக்கிப்படை என எல்லாமும் மிக வலுவானதாக இருந்தது, உலகின் மிகப் பணக்கார ராஜ்ஜியம் மொகலாயம் என்பதால் அன்றைய உலகின் எல்லா நவீன ஆயுதங்களும் பெரும் வீரர்களும் எல்லா யுத்த வளமும் அவனிடம் இருந்தது, அவன் ஐரோப்பியரை பின்புலமாகக் கொண்ட வெடிபொருள் படையும் வைத்திருந்தான்.

ரமலான் முடிந்து தன் பல கடமை எல்லாம் முடித்தவன் டெல்லி ஆக்ரா என எல்லா இடமும் தன் நிர்வாகத்தை நிலை நிறுத்தியவன், ஆக்ராவில் இருந்து கிளம்ப எல்லா ஏற்பாட்டையும் செய்தவன், தன் தொழுகையினைச் செய்தான்.

“இறைவா, இந்துஸ்தானத்தை என்னிடம் நீ ஒப்படைத்தாய், அதனை முழு இஸ்லாமிய பூமியாக மாற்ற எனக்கு உதவுவாய், நான் செய்வது உனக்கான பணி. இந்தப் பெரும் பணியில் என் தகப்பன், என் மகன் எனச் சொந்த உறவுகளையே எதிர்த்துக் கொண்டிருக்கின்றேன்.

வட இந்துஸ்தானை என் பிடியில் வைத்திருக்கும் நான் தெற்கு இந்துஸ்தானில் கால்வைக்கின்றேன், எனக்கு அங்குப் பெரும் வெற்றித் தருவாயாக, சிவாஜியிடம் தோற்ற நான் அவன் மகனிடம் தோற்காதபடி எனக்கு அருள்புரியாவாக‌.

தென் இந்துஸ்தானம் முழுக்கப் பிடித்து எங்கும் குரான் வழி ஆட்சியினை நான் நிறுவியபின் உன் புண்ணிய பூமிக்குப் பெரும் மகிழ்வுடன் நான் வர அருள் செய்வாயாக”

மிக உருக்கமாக வேண்டியவன் எல்லாம் தயார் என்றதும் வேகமாக விரைந்தான், அவன் ஆக்ரா கோட்டையின் கதவினைத் தாண்டி படிகளில் கால் வைக்கும் போது அவனை அறியாமல் தடுமாறி விழுந்தான்.

விழுந்தவனை அவன் ஆட்கள் வந்து தாங்கி எழுப்பினார்கள், ஔரங்கசீப் அதை ஒரு பெரும் எச்சரிக்கையாகக் கருதினான், காரணம் அங்குதான் அவன் மதுராவின் கிருஷ்ணன் கோவிலின் விக்ரகங்களை எடுத்து வந்து குறிப்பாக பகவான் கண்ணனின் சிலையினை எடுத்து வந்து புதைத்திருந்தான்.

அதனால் அந்த இடத்தில் விழுந்தவன் சற்று திகைத்துப் போனான், பெரும் எச்சரிக்கை ஒன்று அவனுக்குள் குடி கொண்டது, பெருமூச்சு விட்டபடி அவன் கையசைத்தான், அவன் பவனி தொடங்கிற்று.

சற்றுத் தள்ளிவந்து கடைசியாக ஆக்ரா கோட்டையினைத் திரும்பிப் பார்த்தான், அவன் மனம் ஏதோ சொல்லியது. இனம்புரியாக் குழப்பத்துடன் அவன் இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க அவனின் பெரும் ஊர்வலம் தொடங்கிற்று.

நீண்ட காலத்துக்குப் பின் ஔரங்கசீப் தெற்கு நோக்கி வருகின்றான் அதுவும் மாபெரும் சேனையுடன் அன்றைய உலகில் மிகப்பெரிய மிக வல்லமையான சேனையுடன் வருகின்றான் என்றதும் எல்லாத் தேசங்களும் கலங்கின‌.

ராஜபுத்திரர் மிக எச்சரிக்கையானார்கள், முகமது அக்பர் கடும் பதற்றமானான். அப்படியே தெற்கில் இருந்த பிஜப்பூர், கோல்கொண்டா சுல்தானியங்கள் ஆடிப்போயின.

அந்நேரம் ஔரங்கசீப்பை நேருக்கு நேர் எதிர்க்கும் பலம் சாம்பாஜியினைத் தவிர யாருக்குமில்லை. பலமிழந்த ராஜபுத்திரர்கள், சிறிய தேசமாக சுருங்கியிருந்த கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தானியங்கள் என எல்லோரும் அஞ்சினார்கள்.

அந்நேரம் உலகின் அந்த மாபெரும் சேனைக்கு சவால் கொடுக்கும் ஒரே பலம் பரப்பளவு, பணம், ராணுவம், சேனை, யுத்தப் பயிற்சி, பெரும் கப்பல்கள் எனச் சாம்பாஜியின் இந்து ராஜ்ஜியத்துக்கு மட்டுமே இருந்தது.

ஔரங்கசீப்பும் சாம்பாஜியும் நேருக்கு நேர் மோதும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது, அக்னியே மேகமானது போல் பெரும் பதற்றம் தெற்கே பற்றிக் கொண்டது.

1681 ஆம் வருட அக்டோபர் மாதத்தில் பெரும் அழிவினை ஏற்படுத்தும் கடல் போன்ற சேனையுடன், அதன் தொடக்கமும் முடிவுமே பல நூறு மைல்களுக்கு இருப்பது போன்ற மகா பிரம்மாண்டத் தோற்றத்துடன் அவன் வந்து கொண்டிருந்தபோது தென்னகம் அஞ்சிற்று.

அந்த பரபரப்பு ராய்காட் கோட்டையிலும் பற்றிக் கொண்டது.

“சிவாஜிக்கு நான் எதைக் கொடுக்க மறுத்தேனோ அதை அவனே எடுத்துக் கொள்ளும்படி காலம் அவனுக்கு உதவிற்று. ஆனால், காலம் சிவாஜியினை எடுத்து எனக்கு மறுபடியும் உதவிற்று, என்னை மீறி சிவாஜி எடுத்துக் கொண்ட பூமி சாம்பாஜியிடம் தொடர நான் அனுமதிக்கமாட்டேன்.

இது என் காலம், எனக்கான காலம், இறைவன் என்மேல் பெரும் கருணையும் வாய்ப்பும் கொட்டும் காலம், இனி எல்லாமே என்னுடையது” எனக் கர்வமாக சொன்னபடி வந்து கொண்டிருந்தான் ஔரங்கசீப்.

வரலாற்றில் பெரும்படை நடத்தியவன் அலெக்சாண்டர் அன்று, சீசரும் அன்று, நெப்போலியனும் அன்று, செங்கிஸ்கானோ, துருக்கிய சுல்தானோ அல்ல‌.

இன்றுவரை வரலாற்றில் பெரும் படையினை நடத்தியவன் ஔரங்கசீப், 1681 அக்டோபர் வாக்கில் அதனைத் தக்காணம் நோக்கி நடத்தினான், அந்தப் பெரும் இஸ்லாமிய சேனைக்குச் சரிக்குச் சமமாக நின்றது சாம்பாஜியின் இந்துராஜ்ஜிய படை, அவனை எதிர்க்கும் சக்தி அப்போது இந்துராஜ்ஜியத்துக்கு மட்டுமே இருந்தது, வீரசிவாஜி கொடுத்த பெரும் பலம் அது, அந்தப் பெரும் பலம் ஔரங்கசீப்பின் கடல்போன்ற படைக்கு அணை கட்டி நின்றது.

ஆனால், பின்னோக்கிச் செல்லும் கடல் சுனாமியாய் பாய்வதுபோல் பெரும் பாய்ச்சல் காட்டும் திட்டத்தோடு வந்து கொண்டிருந்தான் ஔரங்கசீப்

(தொடரும்…)

(டெல்லியுள்ள ஜஹனாரா சமாதி, பெரும் படை நடத்திய ஔரங்கசீப், மதுரா கிருஷ்ணர் பிறந்த இடத்தின் ஆலயத்தை ஔரங்கசீப் இடித்தபோது அங்கிருந்த பாலகிருஷ்ண சிலையினைப் புதைத்துகட்டிய வாயிலுடன் கூடிய ஆக்ரா கோட்டை)