சத்ரபதி சாம்பாஜி : 10

சத்ரபதி சாம்பாஜி : 10

ஔரங்கசீப் தன் மிகப்பெரிய படையுடன் தக்காணம் வந்தான் என்பதும் அதுவரை இருந்த அமைதி ஒழிந்துபோனது. எல்லா இடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

பிஜப்பூர் சுல்தானியம், கோல் கொண்டா சுல்தானியம், மைசூர் உடையார்கள், தமிழக நாயக்கர்கள் என எழுந்த பதற்றம் மலையாள மன்னர்கள் வரை எட்டிற்று, அதுவரை மலையாள இந்து அரசர்கள் ஆப்கானியர் அட்டகாசங்களைச் சந்தித்ததில்லை. பாமினி காலம், மாலிக்காபூர் காலத்தில் கூட அவர்களின் அரணான மலை அவர்களுக்குக் காவல் இருந்தது.

ஆனால் ஔரங்கசீப் சாதாரணம் அன்று. அவன் மாலிக்காபூரை விட ஆயிரம் மடங்கு பலமானவன், காஷ்மீரிய மலைகள் உள்ளிட்ட இமாலய மலைகளிலே படை நடத்தி வெற்றிகளைக் குவித்தவன் அவன், இந்தியா முழுக்க ஒரே மதம், ஒரே சுல்தான் எனும் வெறியோடு வந்திருப்பதால் பதற்றம் அவர்களுக்கும் எட்டிற்று.

இவ்வளவு பதற்றமிக்க மன்னர்கள் ஒருசேர இணைந்தார்களா என்றால் இல்லை, அதுதான் இந்திய சாபம் அல்லது ஆளாளுக்கு அரசியல் கணக்குகள்.

இப்படியான நிலையில் ஔரங்கபாத் வந்த ஔரங்கசீப் அமைதியாக நிலை கொண்டான், அவனின் பெரும் சேனை கொஞ்சம் இளைப்பாறிற்று. அது பின்னர் நடக்கப்போகும் மாபெரும் யுத்தத்துக்கான தயாரிப்பாகவும் இருந்தது.

யுத்தம் என்பது படை கிடைத்தால் போதும் என்பதல்ல, அதற்குப் பெரிய நிதி வேண்டும், தடையில்லாமல் உணவும் ஆயுதமும் வழங்கும் முறை நெறிப்படுத்தவேண்டும், காயமடைந்தோர்க்கு முதலுதவி செய்ய மருத்துவ முகாம்கள் வேண்டும்.

இவை அனைத்துக்கும் பெரும் தயாரிப்பு வேண்டும், நிறைய ஆட்கள் சமையலுக்கு வேண்டும். காளை வண்டிகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் சமையல் பொருட்களைச் சுமக்க வேண்டும், கொல்லர்கள் வேண்டும், முக்கியமாக வெடிப்பொருட்களை அதிகளவில் ஐரோப்பியரிடம் இருந்து வாங்க வேண்டும், ஆயுதம் சுமக்கவும் பீரங்கிகளை இழுக்கவும் பெரும் கூட்டம் வேண்டும்.

இவை எல்லாம் ஔரங்கசீப்புக்குப் பழக்கபட்டவை என்பதால் அவன் அந்தத் தயாரிப்புக்ளைத் தன் படைகளுக்குச் செய்யும்படி உத்தரவிட்டவன் அப்படியே பெரும் மிரட்டல் ஒன்றைச் செய்தான்.

“இந்த மாபெரும் மொகலாயத்துக்கு எதிராக தன்னை சுல்தான் என அறிவித்து கொண்ட முகமது அக்பரும் அவனைச் சார்ந்தவர் அனைவரும் உடனே ஆலம்கீர் எனும் உலக சக்கரவர்த்தியான ஔரங்கசீப் பின்னால் வந்துவிட வேண்டும், தவறினால் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இந்துஸ்தானில் மட்டுமல்ல எங்குச் சென்றாலும் அவர்களை விடமாட்டோம்.

இப்போதே அவர்கள் வந்தால் மன்னிப்புக் கொடுக்கப்படும் இல்லையேல் ஆலம்கீரிடம் கருணை என்பது ஒரு காலமுமில்லை”

ஏற்கனவே ஆஜ்மீரில் முடிசூடியபின்னும் நிலைக்க முடியாமல் ஓடிய முகமது அக்பரும் அவன் சேனையும் இதனால் கலங்கிற்று, முக்கியமாக திலியர்கான் மிகுந்த குழப்பத்துக்குள்ளானான்.

அக்பர் மிகத் தீவிரமாக யோசித்தான், ஔரங்கசீப்பின் குணம் முழுக்க அவன் அறிவான். நிச்சயம் சந்தேகம் என ஒன்று வந்துவிட்டால் மற்றவர்களைக் கையாள்வதை விட சொந்த குடும்பத்தை அதுவும் அரசுக்குச் சவால் விடுபவர்களை அவன் மிகக் கொடுமையாக கையாள்வான், அப்படியே கொன்றும் போடுவான்.

தான் சரணடைந்தால் தன்னை வைத்தே இதர சகோதரர்களை அவன் அச்சுறுத்தும்படி மிகுந்த தண்டனை தருவான் என்பதை உணர்ந்தான், அவன் கண்முன் ஔரங்க்சீப் தன் பெரியப்பா தாரா ஷிக்கோவுக்கு செய்தது, தாத்தா ஷாஜகானுக்குச் செய்தது, தன் அண்ணன் முகமது சல்மானுக்குச் செய்தது என எல்லாக் கொடுமையும் வந்துபோனது.

இதனால் ஒரே வழி மிகப் பாதுகாப்பான இடம் ஒன்றில் சேர்வது என முடிவெடுத்தான். அப்போது உலகிலே அவனுக்குப் பாதுகாப்பான இடம் இரண்டே இரண்டு.

ஒன்று அவன் அம்மாவழி உறவான பாரசீக அரசு, இன்னொன்று சாம்பாஜியின் இந்துப் பேரரசு.

அவன் பாரசீகம் தப்பிச் செல்ல பல சிக்கல் இருந்தது, தொலைவு அதிகம் ஆபத்தும் மிக அதிகம் என்பதால் இனி சாம்பாஜியே அடைக்கலம் என முடிவெடுத்தான். அதைத்தனக்கு விருப்பமான திலியர்கானிடம் சொன்னான்.

ஆனால், திலியர்கான் அதைக் கேட்டு நொந்துபோனான். காரணம், சிவாஜியுடன் கடுமையாக மோதியவன் அவன், சாம்பாஜி முன்பு திலியர்கானிடமே அடைக்கலமாகி சென்று தப்பி வந்தான், அப்படியான சாம்பாஜியுடன் தான் அடைக்கலமாகச் செல்வதை அவன் விரும்பவில்லை இதனால் கனத்த மௌனத்தில் ஆழ்ந்தான்.

அவனிடம் சொன்னான் முகமது அக்பர் “திலியர்கான், என் தகப்பன் என்னைத்தான் குறிவைப்பான் மற்றபடி தளபதிகளை அல்ல, இங்குத் தளபதிகள் அணிமாறுவது ஒன்றும் புதிதல்ல. அதனால் நீர் அங்குச் செல்லலாம், நான் சாம்பாஜியுடன் இணைவேன். நேரம் வரும்போது நாம் இணையலாம், தங்கள் விசுவாசத்துக்கு நன்றி” என்றான்.

திலியர்கான் இதைக் கேட்டபடி மௌனமாக தலையாட்டி ஔரங்கசீப்பை நோக்கிச் சென்றான், திலியர்கான் சிவாஜியுடன் சுமார் 30 ஆண்டுகள் யுத்தம் நடத்தியவன் எனும் வகையில் இங்குப் போரினால் தீர்வு வராது, ஒரு காலமும் வராது இங்கு முகமது அக்பர் செய்வதே சரி என உணர்ந்திருந்தான். ஆனால், ஔரங்கசீப்பின் பிடிவாதம் முன் அவனால் ஏதும் செய்யமுடியவில்லை.

அவன் தன் படைப்பிரிவுடன் ஔரங்கசீப்புக்குக் கட்டுப்பட்டுச் சென்றான், அக்பரின் படை மிகச் சிறியதாகக் குறுகிற்று.

300 மெய்காப்பாளர்கள் சில குதிரைகள் என மிகச் சிறிய சேனைக்கு அவன் மாறினான். காரணம், தகப்பன் கொலைவெறியுடன் தேடும்போது பெரிய சேனையுடன் அலைவது ஆபத்து என்பதால் இந்தக் கோலத்துக்கு மாறினான். அப்படியே துர்க்காதாஸ் ரத்தோரிடம் தான் சாம்பாஜியினைச் சந்திக்கவேண்டும் எனும் செய்தியினைத் தெரிவிக்கச் சொன்னான்.

செய்தி ராய்காட் கோட்டையில் சாம்பாஜியினை எட்டிற்று.

சாம்பாஜியின் அவை கூடி விவாதித்தது, அக்பருக்கு அடைக்கலம் கொடுக்க ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது, சிவாஜிக்கு கிடைத்தது போல முழு ஆதரவு அவையில் சாம்பாஜிக்குக் கிடைத்ததே இல்லை. சில எதிர்ப்புகள் எல்லாவற்றிலும் இருந்தன‌.

இதனால் அதைப்பற்றி எல்லாம். கவலை கொள்ளாமல் முகமது அக்பரைச் சந்தித்து அடைக்கலம் கொடுப்பது என முடிவு செய்தான் சாம்பாஜி.

துர்க்காதாஸின் ஏற்பாட்டில் அவனைப் பலி அல்லது பாலிக்கு வரச் செய்தான், அது இந்து ராஜ்ஜியத்தின் தென் பகுதியில் சாரஸ்காட் கோட்டை பக்கம் பாதுகாப்பானதாக இருந்தது. இந்து ராஜ்ஜியத்தின் வடபகுதிக்கு அப்பால் ஔரங்கசீப்பின் ஆட்சி இருப்பதால் கிழக்குப் பக்கமும் அதே ஆபத்து இருப்பதால் அவனைத் தெற்கு பக்கம் வைத்துக் காவல் செய்ய முடிவு செய்தான் சாம்பாஜி.

1681 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வாக்கில் சாம்பாஜியும் முகமது அக்பரும் பாலியில் சந்தித்தார்கள், இருவருமே சமவயதானவர்கள், 24 வயதை எட்டியவர்கள். இருவரும் முன்பு ஆக்ரா கோட்டையில் 10 வயதாக இருக்கும் போது அதாவது ஜெய்சிங் வாக்குறுதிப்படி சிவாஜி சாம்பாஜியுடன் ஆக்ரா சென்று சிறைப்பட்ட காலங்களில் இருவரும் விளையாடிய காலங்களும் உண்டு.

அதன் பின் 24 வயதில் காலம் அவர்களைச் சந்திக்க வைத்தது. இப்போது சாம்பாஜி இந்துப்பேரரசின் மன்னர், அக்பரோ ஔரங்க்சீப் கொல்லத்தேடும் இளவரசன்.

சாம்பாஜி அவனைக் கட்டித் தழுவி வரவேற்றுச் சொன்னான், “இளவரசரே, இங்கு உமக்கு எந்தச் சௌகர்ய குறைவும் வராது, எங்களிடம் அடைக்கலம் தேடி வந்தவர்களை உயிரைக் கொடுத்து காப்பதே எம் தர்மம்.

என் தாத்தா ஷாஹாஜி உங்கள் தாத்தா ஷாஜகானுக்கு இப்படி அடைக்கலம் கொடுத்துக் காத்தார், என் தந்தையிடம் யார் உதவிக் கேட்டு வந்தாலும் அவரும் செய்திருப்பார், அவர் எத்தனையோ மொகலாய தளபதிகளை வென்றாரே அன்றி எவரையும் கொன்றவர் அல்ல, வாய்ப்பு கிடைத்தும் உங்கள் தாத்தா ஷாயிஸ்ட்கானையே அவர் காயத்தோடு தப்பவிட்டார்.

இப்படியான தர்மத்தைக் காப்பவர் நாங்கள், நீர் மொகலாய இளவரசனாக இல்லாவிட்டாலும் இங்கு அடைக்கலம் உண்டு எனும்போது வருங்கால மொகலாய அரசனாகப் போகும் நிலையில் நீர் இங்கு அரச விருந்தினர்” என்றான்.

அக்பர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான், பின் சொன்னான்.

“சம்பாஜி, இந்த மண் இந்துக்களின் மண், இங்கு எக்காலமும் உணர்ச்சியுள்ள இந்துக்கள் போராடிக் கொண்டே இருப்பார்கள். அதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன், எங்களில் பலர் உணர்ந்து கொண்டார்கள்.

இதுவரை நாங்கள் ஆப்கனில் வென்றது இதர இடங்களில் வென்றதெல்லாம் எங்கள் மதமான இஸ்லாமியர்கள், அங்கு நாடு பிடிக்கும் வேகம் இருக்கும் ஆட்சி பிடிக்கும் அவசரம் இருக்குமே தவிர மதம் காக்கும் பொறுப்பு இருந்ததில்லை.

ஆனால், இந்துக்களுடனான போர் அதைத் தலைகீழாக மாற்றுகின்றது, இந்துக்கள் ஆட்சியினைக் கேட்டால் கொடுத்துவிடுகின்றார்கள், செல்வத்தைக் கேட்டால் தந்துவிடுகின்றார்கள், அதை அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை.

அதே நேரம் மதத்தைத் தொட்டால் மட்டும் சீறி எழுகின்றார்கள், அவர்கள் போராட்டம் அவர்களுக்கோ அவர்கள் ஆட்சிக்கோ அல்ல. அது அவர்கள் மதத்தை காப்பதற்காக, அந்த மதத்தை உயிரணைய காக்கின்றார்கள்.

நானும் சிந்தித்தேன் சாம்பாஜி, எங்கள் மதம் வந்து 1300 வருடம் இருக்கலாம். நாங்களும் 900 வருடம் அல்லது 800 வருடம் இஸ்லாமியராக இருக்கலாம்.

எங்களுக்கே எங்கள் மதம் முக்கியம் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களாக இருந்து நாடி, நரம்பு, சிந்தை, குலம், மரபு என வழி வழி காத்துவரும் இந்துக்களுக்கு எப்படி இருக்கும்? அவர்கள் அப்படித்தான் போராடுவார்கள். இதில் ஆச்சரியமில்லை.

இது பலருக்குப் புரிந்தது, இங்கு ஒரு காலமும் இஸ்லாமிய ஆட்சி சாத்தியமில்லை என்பதை உணர்ந்துவிட்டோம். ஒரு காலமும் இதைப் பூரண இஸ்லாமிய தேசமாக மாற்றவும் முடியாது, அதை முயன்றுபார்த்தால் அழிவுதான் மிஞ்சும்.

ஆனால், என் தந்தை அதை முயற்சிக்கின்றார், இங்கு எல்லோரும் தோற்ற இடத்தில் அவரும் தோற்றுவிடுவார், அது உறுதி. ஆனால், அவர் முயன்று பார்க்கின்றார், அது பெரும் தோல்வியில் முடிந்தாலும் கொடுக்கப்போகும் அழிவுகள் அதிகம், மிக அதிகம்.

நான் இந்துக்களுக்கு எதிரான ஜிசியா வரியினை நீக்கச் சொன்னேன், இந்துக்களைப் பகைத்துவிட்டு இங்கு வாழமுடியாது ஆளமுடியாது என்பதை அனுபவமாகச் சொன்னேன், அவர் கேட்கவில்லை, ஆட்சியினைக் கையில் எடுக்க முயன்றேன், முடியவில்லை.

இன்றைக்கு அவர் என்னை விரட்டலாம், ஆனால் ஒருநாள் என் முடிவு சரி என்பதை உணர்வார், இம்மதமும் மண்ணும் ஒருநாளும் தோற்காது, உலகின் ஆச்சரியமான தர்மமும் சூட்சும அதிசயமும் நிறைந்த இந்தப் பூமி தன்னைக் காத்துக் கொள்ளும்” என்றான்.

சாம்பாஜி அவனைக் கட்டித் தழுவிச் சொன்னான், “நல்ல இந்து எல்லோரையும் அரவணைப்பான், அதுவும் தன்னைப் புரிந்து கொண்டவனை முழுக்க காத்துக் கொள்வான், நீர் எம்முடைய நண்பரானீர், இனி உமக்கு வேண்டியன அத்தனையும் தருவோம், உமது தகப்பனாருக்கு எதிராக படை திரட்டித் தரவேண்டுமா இல்லை உம்மைப் பத்திரமாக பாரசீக மாமன் வீட்டுக்கு அனுப்பவேண்டுமா எதைக் கேட்டாலும் செய்வோம்” என்றான்.

சாம்பாஜியிடம் அக்பரை வைத்து ஔரங்கசீப்பை எதிர்க்கும் திட்டம் ஏதுமில்லை. அக்பர் விரும்பினால் அவனுக்குப் படை உதவி செய்து ஆட்சியினை மீட்டுக் கொடுக்கலாம் எனக் கருதினானே தவிர அவனை வைத்து விளையாடும் திட்டம் ஏதுமில்லை.

அக்பருக்கும் அப்போது அடுத்து என்ன செய்வது எனும் பெரும் குழப்பம் இருந்தது, அதனால் சில காலம் அவகாசம் வேண்டினான்.

துர்க்காதாஸுக்கு வேறுவகையான போர் திட்டம் இருந்தது. முகமது அக்பருக்குத் துணையாக பாரசீக சுல்தானைப் போர் தொடுக்க செய்து ஔரங்கசீப்பை வடக்கே நகர்த்திவிட்டு அவனை இருமுனையில் இருந்தும் தாக்கும் பெரும் திட்டம் இருந்தது.

வியூகங்களைப் பின்னால் வகுக்கலாம், இப்போது அக்பரின் பாதுகாப்பே முக்கியம் என உணர்ந்த சாம்பாஜி அவனுக்கு உரிய காவலை செய்து சிங்ககாட் கோட்டைக்கு அனுப்பினான், அவனின் காவலுக்காக அனுபவம் வாய்ந்த நட்டாஜி பால்கரை நியமித்தான்.

அரசனுக்குரிய எல்லாச் சௌகரியங்களையும் அவன் செய்து கொடுத்திருந்தான், முகமதியனாக ஒரு இந்துவின் கோட்டைக்குள் வாழ அக்பருக்குத் தயக்கம் ஏதுமில்லை, அப்படியே இந்துப் பேரரசில் முகமதிய மன்னன் தன் கடமைப்படி வாழவும் சாம்பாஜிக்குத் தயக்கமில்லை, சிவாஜியின் இந்து அரசின் சேனையில் இஸ்லாமியர் பலர் இருந்தார்கள் என்பதால் இது அங்கு வழமை.

அதேநேரம் இந்து மக்களின் உணர்வுக்குக் கட்டுப்பட்டு மாட்டுக்கறி முதலானவற்றை அக்பரும் விலக்கியிருந்தான், ஒருவரை ஒருவர் புரிந்த நட்பு அங்கே பாரதப் பண்பாடாக மிளிர்ந்து நின்றது.

அக்பர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததை அறிந்த துர்க்காதாஸ் அடுத்தடுத்த சிந்தனைகளில் இறங்கினான். அதே நேரம் இனி ஔரங்கசீப் புலியென நிச்சயம் பாய்வான், வெறிகொண்ட வேங்கையாக பாய்வான் என்பதை உணர்ந்த இந்துப் பேரரசும் காவல்களைப் பலப்படுத்தியது.

எப்படி நோக்கினாலும் ஔரங்கசீப் சமரசத்துக்கு வருபவன் அன்று, நிச்சயம் அவன் போரின் மூலமே வருவான் என்றபின் அவன் மகனுக்கு அடைக்கலம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நிலைமை ஒன்றுதான் என்பதால் இந்த முடிவினை எடுத்தான் சாம்பாஜி, ஒருவேளை ஔரங்கசீப் குடும்பத்தில் குழப்பம் வருமென்றால் அப்போது அக்பரின் துணை தனக்குக் கைகொடுக்கும் என்பதும் இன்னொரு சிந்தனையாய் இருந்தது.

இந்துஸ்தான அரசர்களில் ஒரு நாட்டின் வாரிசுகள் தங்கள் குடும்பச் சண்டையில் இப்படி ஓடுவது ஒன்றும் புதிதல்ல என்பதால் இது வழமையான விஷயமாக இருந்தது.

இங்கே இப்படி நிலைமை இருக்க ஔரங்கபாத் கோட்டையில் பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ஔரங்கசீப், அவன் வெறும் முரடன் அல்ல, ஆப்கானின் மூர்க்கன் மட்டுமல்ல அவனுக்குள் பெரும் ராஜதந்திரம் இருந்தது, கூர்மதி இருந்தது, எந்தப் பெரும் படை என்றாலும் எதிரி என்றாலும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் எனும் வியூகமெல்லாம் இயல்பாய் இருந்தது.

அவன் அப்படியே ஐந்து வயதில் இருந்து வளர்ந்தான், 10 வயதிலே போர்க்களம் சென்றான், 15 வயதிலே தனியாக போரிடப் பயின்றான், அவன் வாழ்நாளில் ரமலான் காலம் தவிர எல்லா நாளும் ஏதோ ஒரு போரைச் சிறிதும் பெரிதுமாக நடத்திக் கொண்டே இருந்தான். எதிரிகள் இல்லாவிட்டால் உள்வீட்டில் அண்ணன் தம்பி தகப்பன் என யாருடனாவது மோதிக் கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்தில் போர்தான் அவனுக்கு எல்லாமுமாயிற்று, குரான் படிப்பதும் ஓதுவதும் அதைப் பரப்ப போர் ஒரு ஆயுதமாகவும் அவனுக்கு வந்தது, மற்றபடி ராஜ்யபரிபாலனமெல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்சம். ஆனால், அவன் நிர்வாகமும் மிகத் துல்லியமாக இருந்தது, ஒரு குழப்பமில்லாமல் ராஜ்ஜியத்தை நடத்தினான், அவனின் பலவீனம் பரிபூரண இஸ்லாமிய இந்துஸ்தான் எனும் கனவாக இருந்தது.

இப்படியான ஔரங்கசீப் ஔரங்கபாத் கோட்டையில் சில நாள் தன் பழைய நினைவுகளில் மூழ்கினான். அவனின் இளம் வயது காலமெல்லாம் இப்பக்கம் அகமதுநகர் சுல்தானியம், பிஜப்பூர் சுல்தானியத்துடனான போரில் கழிந்தது, அவன் முதல் மனைவியுடனான வாழ்க்கை அவனின் இதயம் கவர்ந்த ஹிரா எனும் நடனக்காரியுடனான காதல் அதைத் தொடர்ந்து எழுந்த சிக்கல்கள் என எல்லாமும் அசைபோட்டான்.

தன் அன்புகுரிய பெண்களெல்லாம் தன்னைவிட்டு விரைவில் பறிக்கப்படுகின்றார்கள் அது ஹிரா, தன் மனைவி, தன் சகோதரி என எல்லோரும் தன்மேல் அன்புகொண்ட பாவத்துக்காய்ப் பறிக்கபடுகின்றார்கள் என மெல்ல வருத்தமும் கொண்டான்.

தொலைவில் அவன் மனைவிக்காய் எழுந்திருந்த சிறிய தாஜ்மகால் தெரிந்தது, வாழ்வில் அவன் கண்ட எல்லா மாற்றமும் புரிந்தது.

மெக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த தனக்கு அவ்வாய்ப்பு கிடைக்காமல் 62 வயதில் இப்படித் தெற்கே போர் நடத்தும் அவசியம் இருப்பதை அறிந்து அலுத்துக் கொண்டான். ஆனாலும், இந்துஸ்தானை முழு இஸ்லாமிய நாடாக்கிவிட்டு யாரும் செய்யாத சாதனையுடன் மெக்கா செல்ல இறைவன் தனக்கு அனுக்கிரஹம் செய்திருப்பதாக கருதிக்கொண்டான்.

அப்படிச் சிந்தித்தவன் வழக்கமான தொழுகை முடிந்து கிம்கிஸ் எனும் தலைப்பாகை அணிந்தபடி போர் வியூகம் காட்டும் வரைபடம் முன் தன் வழக்கமான தயாரிப்புப்படி அமர்ந்தான்.

அவன் முன் வரைபடமும் அதைக் குறிக்கும்படி கோட்டைகள் படைநிலைகள் காட்டும் பொம்மைகளும் இருந்தன, கிடைத்த உளவுத்தகவல்கள் இதரத் தகவல்கள் குறிப்பாக கையில் இருந்தன‌.

அவன் அந்த வரைபடத்தை உரிய கோட்டை நிலைகளுடன் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான். சிவாஜி அமைத்த இந்துப் பேரரசு, பீமா நதி தாண்டி வடக்கே இருந்து தமிழ்பேசும் தஞ்சாவூர் வரை நீண்டிருந்ததை கவனித்துத் தலையசைத்துக் கொண்டான்.

அன்றே ஆக்ராவில் அந்தச் சிவாஜியினை அவன் மகனோடு கொன்று போட்டிருந்தால் இன்று இப்படி இந்து ராஜ்ஜியம் அமைந்திருக்காது ,போராடும் அவசியமும் இருக்காது என்பதை அறிந்தவன் இன்னும் ஆழமாக அதையே பார்த்துக் கொண்டிருந்தபோது மெலிதாக புன்னகைத்தான்.

அவன் புன்னகை என்பது எதையோ அவன் கண்டுபிடித்துவிட்டான், ஒரு பிடி அவனுக்குக் கிடைத்துவிட்டது என்பதைச் சொன்னது.

ஆம், சிவாஜியின் இந்துப் பேரரசு பரந்து கிடந்தாலும் அங்கு இந்த மண்ணின் மைந்தர்கள் அரசுகள் தாண்டி அயலவர்கள் இருந்த இடமும் இருந்தது.

பிஜப்பூர் சுல்தானியம், கோல்கொண்டா சுல்தானியம் என அவனுக்குக் கப்பம் கட்டும் சுல்தானியங்கள் இருந்தன. அப்படியே போர்ச்சுகீசியர் , பிரிட்டிஷார், பிரான்ஸ்காரர், டச்சுக்காரர், ஆப்ரிக்க சித்திகள் என ஏகப்பட்ட அயலவர்கள் இருந்தார்கள்.

இவர்கள் எல்லோரையும் ஒருசேர அடக்கியே சிவாஜி எழுந்தான். இப்போது சிவாஜி இல்லை என்றாலும் அவை இந்து அரசுக்கு அடங்கி இருந்தன. ஆனால், உள்ளூர என்ன எண்ணம் இருந்தது என்பது தெரியாது.

ஒரு அரசனாக அவன் அதை யோசித்தான், சிவாஜி எனும் பெரும் சக்திக்குக் கட்டுப்பட்டோம் இனி இந்தச் சாம்பாஜி எனும் 24 வயது அரசனுக்குமா கட்டுப்படவேண்டும்? காலம் பார்த்து பணிவதும் எழுவதும் கப்பம் கட்டி தப்புவதும் உரிய நேரம் கப்பம் தராமல் மறுப்பதும் அரச தந்திரங்களில் ஒன்று என்பதால் அவைகளை சாம்பாஜிக்கு எதிராக தூண்டிவிடுவது எளிது எனக் கணக்கிட்டான்.

சிவாஜி தன்னைச் சுற்றிய அயலக சக்திகள் அனைத்தையும் எப்படி அடக்கினானோ அதை எல்லாம் தூண்டிவிட்டாலே சாம்பாஜி அடங்கிவிடுவான், அதை முதலில் செய்து தான் பின்னால் நிற்க வேண்டும். பின் அப்படி இழுக்கப்படும் சாம்பாஜியினைப் பலவீனபடுத்தித் தாக்க வேண்டும் எனத் திட்டமிட்டான்.

அதாவது, சாம்பாஜி மேல் கடல், தரை என எல்லா இடமும் இருந்தும் பன்முக தாக்குதலைச் செய்து அந்த வாய்ப்பில் தான் ஊடுருவ வேண்டும் எனச் சிந்தித்து அதற்கேற்ற நகர்வுகளைச் செய்யும் சிந்தனையில் இருந்தான்.

இதுபோக சிவாஜியின் இந்துப் பேரரசு தமிழகத்தோடு இணையும்படி மைசூரில்தான் வழி இருந்தது, அதைத் துண்டித்தால் தென்னகம் துண்டிக்கப்படும் என்பதையும் கண்டான்.

ஒரு பக்கம் சாம்பாஜி மேல் பன்முனை தாக்குதல், இன்னொரு பக்கம் அவன் அரசின் பகுதிகள் ஒவ்வொன்றாய்க் கழற்றுவது என வியூகம் வகுத்துக் கொண்டிருந்தவன் முன் அந்த பணியாளன் வந்து நின்றான்.

என்ன என்பது போல் அவனைக் கண்டான் ஔரங்கசீப்.

தலைகுனிந்தபடியே சொன்னான் தூதன், “நமது சேனைகள் பெருவாரி நம்மிடம் வந்துவிட்டன, திலியர்கான் உள்ளிட்ட தளபதிகளும் வந்துவிட்டார்கள் ஆனால் நம் இளவரசர் அக்பர்…..” என இழுத்தான் சேவகன்.

“அவன் வரமறுத்தால் நம் சேனைகளை ராஜபுத்திர பகுதிக்குள் அனுப்பி அவனை இழுத்துவரவேண்டியதானே” என இயல்பாக கேட்டான் ஔரங்கசீப்.

“அவர் ராஜபுத்திரர் பகுதியில் இருந்தால் வளைத்துவிடலாம், ஆனால் அவர் சாம்பாஜியுடன் சேர்ந்துவிட்டார், அங்குச் செல்வது கடினம், இனி அவரும் சாம்பாஜியும் இணைந்தே நம்மை எதிர்ப்பார்களாம்” என்றான்.

ஆஆ… என அலறியபடியே தன் தலையில் இருந்த தலைப்பாகையினைக் கழற்றினான் ஔரங்கசீப், “எனக்கு எல்லா வகையிலும் சவால்விட்ட அந்தக் காபீர் என் மகனையே கடத்திச் சென்றுவிட்டானா? இனி அவனை அழிக்கும் வரை தலைப்பாகை அணியமாட்டேன்” என உரக்கச் சொன்னபடியே அதனைத் தரையில் வீசி எறிந்தான்.

அவன் வாழ்வில் எத்தனையோ எதிரிகளைச் சந்தித்தான், எவ்வளவோ மன்னர்களை வீழ்த்தினான், ஆனால் எப்போதும் இவ்வளவுக்கு அவன் ஆத்திரப்பட்டதில்லை.

சிவாஜியிடம் பெற்ற பெரும் தோல்வி அவன் மனதில் பெரிய நெருப்பாய் இருந்தது. ஆறாக் காயமாய் வடுவாய் இருந்தது. அதையாவது சிவாஜி இனி இல்லை எனும்படி ஆற்ற தொடங்கியிருக்கும் நேரம், 62 வயது அனுபவசாலியும் உலகின் முதல் சக்கரவர்த்தியுமான தனக்கு 24 வயது இந்து இளைஞன் சவால்விடுவதையும், தன் மகனுடனே சேர்ந்து தன் ஆட்சிக்கே குறிவைப்பதையும் அவனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

தன் எதிரிகளிலெல்லாம் முக்கியமானவனாக முதன்மையானவனாக அவனை அப்போது குறித்துக் கொண்டான். சிவாஜி மேல் இருந்த கோபம் அந்த இயலாமை எல்லாம் இன்னும் இந்துக்கள் மேல் அவன் கொண்ட எல்லா வெறுப்பும் மொத்தமாக சாம்பாஜி மேல் விழுந்தது.

“சாம்பாஜி, உன் தகப்பனுக்குச் செய்யமுடியாத அத்தனையும் உனக்கு ஒருநாள் செய்வேன், நிச்சயம் செய்வேன், அதைச் செய்யாமல் சாகமாட்டேன்” எனத் தன் தலைப்பாகை கிடந்த தரையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான் ஔரங்கசீப்.

அத்தனை ஆவேசமாக அவனைக் காணாத அவனின் சேவகர்கள் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொள்ளத் துவங்கினார்கள், கட்டப்படாத ஔரங்கசீப்பின் தலை வெறிகொண்ட சிம்மம் ரத்தவேட்டைக்குக் கிளம்பியதைக் குறிப்பால் காட்டிற்று.

(தொடரும்)